Advertisement

இதோ அவள் சொன்னவை எல்லாம் இவை தாம்.
மென்னிலாவை வருத்தம் தோய பார்த்தவளாக, “இன்னும் ஏன் ஒரு கட்டத்துல அவர் மேல எனக்கு காதலும் வந்தது.. தப்பு செய்றவங்க மத்தியில்.. செஞ்ச தப்புக்காக பிராயச்சித்தம் தேடுற உண்மையான ஜென்டில்மேன் பரிதி.. என் ஆசையை மனசு விட்டு கேட்டும் இருக்கேன்..”என்று சொல்ல,
அந்நொடி மீண்டும் பிறந்திருந்த பழைய காதல் மென்னிலாவுக்கு, வசுந்தராவின் காதல் சின்ன ‘பொஸஸிவ்னஸ்’ஸைக் கொடுக்கத் தான் செய்தது.
‘அடுத்தவள் புருஷன் மீது ஆசை வைக்க வெட்கமாயில்லை’ என்ற கேள்வியும் நுனிநாவு வரை வந்து போக.. கைவிரல்ககை அழுந்தப் பற்றிக் கொண்டு, தன் அவசரத்ததை மறைத்து நின்றாள் அவள்.
வசுந்தரா மென்னிலாவின் உணர்ச்சிகளைப் படித்தாலும், எதையும் ஒழிக்காமல், மறைக்காமலேயே அனைத்தையும் சொல்ல எத்தனித்து,
“ ‘உங்கள விட்டு போன ஆண்டாளு.. இதுக்கப்புறமும் திரும்ப வருவாள்னு நீங்க எதிர்பார்க்குறீங்களா? நிச்சயமாக அவங்க திரும்ப வரப்போறதில்லை… உங்க ஆண்டாளா.. நான் மாறக்கூடாதா?..’ன்னு மனசு விட்டு கேட்டும் இருக்கேன்.. அதுக்கு பரிதி சார் என்ன சொன்னாரு தெரியுமா? ‘என்னைக்குமே என் ஆண்டாளு.. என் ஆண்டாளு தான்..அவ ஏத்துக்கிட்டாலும், ஏத்துக்கலைன்னாலும் இந்த ஜென்மத்துல அவ ஒருத்திக்கு தான் இந்த பரிதி… என் மேல அவ வைச்சிருக்க காதல்.. அவளை திரும்ப என்கிட்ட கொண்டு வந்து சேர்க்கும்.. உன் மனசை கலைக்குற மாதிரி நடந்துக்கிட்டிருந்தா என்னய மன்னிச்சிடு’ன்னு சொன்னவரு.. அதுக்கப்புறம் அவர் இங்கே வர்றதையே நிறுத்திட்டாரு..”என்று கூற,
பரிதியின் அந்த சொற்கள், “..அவ ஏத்துக்கிட்டாலும், ஏத்துக்கலைன்னாலும் இந்த ஜென்மத்துல அவ ஒருத்திக்கு தான் இந்த பரிதி”என்ற அவனுடைய சொற்கள்.. காலம் கடந்த பின்.. அவள் காதில் திரும்பத் திரும்ப ரீங்காரமிடத் தொடங்கியது.
இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே… அவளுக்காக.. அவள் வருகைக்காக காத்திருந்திருக்கிறான் அவளது தலைவன்!!
அதிலும் அவள் வருவாள் என்று ஆணித்தரமாக நம்பியிருக்கிறான் என்றால்.. பரிதியின் காதல் எத்தகையது?
வசுந்தராப் பெண்ணோ.. ஒரு பெண்ணுக்குள் தோற்ற காதல் உணர்வுகள் இழையோட மெல்லிய குரலில், “ அவரோட மறுப்பை தாங்க முடியாம.. ‘உங்க ஆண்டாளு.. அங்கேயே ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக்கிட்டிருந்தா என்ன பண்ணுவீங்க? அவளை நினைச்சு உங்க வாழ்க்கையை பாழாக்கிக்கப் போறீங்களா?’ன்னும் நான் கேட்டேன்.. அப்போ அவர் என்ன சொன்னாரு தெரியுமா?..
‘அவளால நிச்சயமா அப்படி முடியாது.. என்னை நேசிச்ச இதயத்துல.. எனக்கான வெறுப்புக்கு வேணா இடமிருக்கும்.. ஆனா இன்னொருத்தருக்கு இடம் இருக்காது…. அவ திரும்பி வருவா.. அப்படி அவ திரும்பி வரும்போது.. என் தப்ப உணர்ந்துட்டேன்னு நிரூபிக்கத் தான் இது எல்லாமே..’ன்னு சொன்னாரு..” என்று பகர,
அப்போதே அவள் மனதை கணித்திருக்கும் கணவன்.. அவளை எந்தளவுக்கு புரிந்து வைத்திருக்கிறான் என்றெண்ணி விழி விரித்துத் தான் நின்றாள்.
‘என்னை நேசிச்ச இதயத்துல.. எனக்கான வெறுப்புக்கு வேணா இடமிருக்கும்.. ஆனா இன்னொருத்தருக்கு இடம் இருக்காது’ என்று சரியாக கூறியிருப்பவன்… அவளுள் ‘வெறுப்புக்கு இடமுண்டு.. இன்னொருத்தனுக்கு இடமில்லை’ என்பதை அறிந்திருந்தானாயின்,
அந்தக் காத்திருப்பு.. அவள் எப்போது வருவாள் என்று தெரியாமலேயே காத்திருந்த அவனுடைய காத்திருப்பு.. அது பரிசுத்தமானது அல்லவா??
அன்று அவள் ‘கடலுக்குள் மீனா இல்ல’ என்ற போது ஆத்திரம் கொண்டு அடித்தது கூட.. அவனுள் மீதூறிய உரிமைக் கோபத்தினாலா?
அவனது அன்பு எல்லாம் சிறுகச் சிறுகப் புரிந்தது அவளுக்கு.
அவள் முகத்தில் புன்னகை காண வேண்டும் என்பதற்காக, காக்கையிடம் கொத்து வாங்கி.. பூனைக்குட்டியைக் காப்பாற்றிய அவனது நிராதரவான குழந்தை முகம் வந்து போனது.
அன்று அவள் பால்கனியில் வைத்து ‘இளவரசனும், நிலாவும்’ கதை சொன்ன போது கூட,
‘நிலாவை விட்டுப் பிரிய மனமில்லாமல், ‘நான் அந்த இடத்தில் இளவரசனா இருந்திருந்தா.. அந்த குகையோட சின்ன இடைவெளி கூட தெரியாதளவுக்கு அதை அடைச்சிருப்பேன்.. அப்போ நிலாவும் என் கூடவே இருந்திருப்பா” என்று காதல் தவிப்பு மீதூற சொன்னவனின் முகம் வந்து போனது.
கொடுத்த கடனை திருப்பித் தர வேண்டிய கடன்காரனிடம், கறாராக நடந்து கொண்ட பரிதி.. அவளது வேண்டுதலுக்காக, அந்தக் கூலித் தொழிலாளியை ஏதும் செய்யாமல் விட்ட அந்த நாளும் நினைவில் உதித்து போனது.
இத்தனை ஞாபகங்களின் முடிவிலும் அவளுள் தீவிரமாக தோன்றியது எல்லாம், ‘எல்லாம் அவளுக்காக’ என்பதே!
மென்னிலாவின் மன ஓட்டங்களை அறியாத, வசுந்தரா தொடர்ந்து சொன்னாள்.
“நிச்சயம் என் ஆண்டாளு திரும்ப வருவான்னு சொன்னாரு.. அவர் நம்பிக்கை பழிச்சிருச்சு.. அவர் சொன்ன மாதிரி நீங்க வந்தீங்க.. ஆனால் அவர் நிருபிக்க தேவையே இல்லாமல் அவரை நீங்க மனமார ஏத்துக்கீட்டிங்க..அவர் அன்பை விட.. அவரை ஏத்துக்கிட்ட உங்க அன்பு தான் என்னை மெய்சிலிர்க்க வைக்குது..”என்று அவள் சொல்லி முடித்த கணம், கண்மணிகள் இரண்டும் உவர்நீரில் கலங்கி.. விம்பங்கள் எல்லாம் இரண்டிரண்டாகத் தெரிய.. அமைதியாக நின்றிருந்தாள் மென்னிலா.
அவன் நிரூபிக்கத் தேவையே இன்றி.. அவனை மனமார ஏற்றுக் கொண்டாளா அவள்?
இல்லவே இல்லை.. நிச்சயமாக இல்லை. மனமார ஏற்றுக் கொண்டது போல.. பழிவெறி மீதூற.. நடிக்கத் தானே செய்தாள் அவள்??
இங்கே அவள் காலடி பட்டுக் கொண்டிருக்கும் பூமியும்.. அந்த பூமியில் இருக்கும் ஒவ்வொரு துகள் மண்ணும்..
இன்னும் ஏன்.. அந்த தொழிற்சாலை கட்டிடமும், கட்டிடத்தை தாங்கியிருக்கும் ஒவ்வொரு கல்லும்.. பரிதிவேல் வீரன்.. தன் தவற்றை உணர்ந்து திருந்தியவன் என்பதற்கு ஓர் பெரும் சான்று!!
ஆனால் அவள்?? அவன் தன்னோடு இழைவது போலியான நடிப்பு என்று எண்ணி.. இத்தனை காலம் அவனோடு இழைந்து தாம்பத்தியம் நடத்தி.. கருவில் ஒரு குழந்தையையும் வாங்கியிருப்பதற்கு பேர் என்னவாம்??
அவன் செய்தது துரோகம் என்றால்.. இவள் செய்ததற்கு பெயர் ‘பரத்தைத்தனம்’ அல்லவா??
அவன்.. தப்புக்கு வருந்தியிருக்கிறான்!! அவள் நிலை எத்தகையது என்று அறியாமல் ஏங்கியிருக்கிறான்!!
இன்னும் ஏன்.. இத்தனை நாளும் அவனது காதல் நடிப்பல்ல..அது உண்மையான காதல் என்றறிந்தும் இளகிப் போயிற்று அவள் உள்ளம்.
பழிவெறிக்காக.. கணவனோடு மஞ்சம் பகிர்ந்தது ஒழுக்கமுள்ள நன்மாதர் செய்யும் அறமா??
அவள் உள்ளம் அவளைக் காறித் துப்புவது போல ஒரு தோற்றப்பாடு எழுந்து அவளை இன்னும் அலைக்கழிப்புள்ளாக்கியது.
அவள் விழிகள் நிமிர்ந்தது… கணவனைக் கண்டு விடும் ஆவல்.. அவள் செய்த கேவலமான செயலுக்கு.. அவனது பாதங்கள் வருடி.. மன்னிப்புக் கேட்டு விடும் வெறி முகிழ்க்க.. கண்களாலேயே கணவனைத் துலாவினாள் பெண்.
வசுந்தரா.. மென்னிலாவின் கண்ணீர் கண்டு பதறி நின்ற நேரம்.. அவ்விடத்துக்கு சமயாசந்தர்ப்பம் பார்த்து வந்தார் வாசு மாமா.
மெய்யாலுமே.. மென்னிலாவை இங்கே வரவழைத்து, வசுந்தராவுடன்.. அவளை உரையாட விட்டது எல்லாமே சாக்ஷாத் வாசு மாமாவின் திட்டமே!!
மருமகனோ.. மனைவியை சுறா மீனிடம் இருந்து காப்பாற்றியதில் இருந்து, மென்னிலாவுக்கு தன் உத்தமத்தனத்தை நிரூபிக்கத் தேவையேயின்றி.. மனமார ஏற்றுக் கொண்டு விட்டாள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறான்.
ஆனால் இந்த பழிவெறிப் பெண்ணோ… மருமகனால் குழந்தை ஏற்ற பின்பும் கூட.. தாய்மைக்கு மதிப்பளித்து.. பழியுணர்வை தூக்கிப் போட்டு விட்டு.. பரிதியின் உண்மை அன்பை உணராது பழிவாங்க காத்திருக்கிறாள்.
என்ன செய்வது என்று கையாலாகாத தனத்துடன் நின்றவர் முடிவெடுத்தது தான் இது.
வசுந்தராவும் வாசு மாமாவைக் கண்டதும் சின்ன புன்னகையுடன், ‘விஷயத்தை சொல்லியாயிற்று’ என்பது போல தலையசைத்து விட்டு நகர்ந்ததையோ, வாசு மாமாவும் அதற்கு மறுபதிலாக தலையாட்டியதையும் அறியாது.. தன் உணர்ச்சிப் பிடியில் சிக்கிக் கொண்டிருந்தாள் மென்னிலா.
அவளை நோக்கி நடந்து வந்த வாசு மாமா, மென்னிலாவின் விழிகள் ஏக்கத்துடன் பரிதியைத் தேடுவதை அப்பட்டமாக கண்டு கொள்ள,
“வாம்மா.. என்ன தேட்ற? .. பரிதிவேல் வீரன் எங்கேன்னா? முதல்ல என்னய மன்னிச்சிடுமா.. பரிதி இங்கன இல்ல.. பரிதி வீட்டுல போன வைச்சிட்டுப் போனது கூட எனக்கு தெரியாது..”என்று ஒரு பெரும் இரகசியத்தைச் சொல்ல, தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு வாசு மாமாவைப் பார்த்தாள் மென்னிலா.
“என்ன?”
தன் கை விரல்களை கோர்த்துக் கொண்டே, மெல்லிய குரலில், “ஆமாம்மா.. நான் போன் பண்ணது பரிதிக்குத் தான்.. ஆனால் உன் குரல் கேக்கவும்.. பரிதி வீட்டுல இல்லன்னு ஊகிச்சுக்கிட்டேன்.. அதான் உன்னைய.. இங்கே வரவழைக்கணும்ன்றதுக்காக.. உன்னைய.. ஃபோன நீயே கொணர்ந்து தர்றீயான்னு கேட்டு  வரவழைச்சேன்…. கர்ப்பமா இருக்குற உன்னய அலைய வைச்சதுக்கு இந்த சித்தப்பன மன்னிச்சிடுமா.. நீ உண்மைய அறியணும்னா வேற வழி தெரியலமா..”என்று சொல்ல,
‘இது எல்லாமே வாசு மாமா வேலை தான்’ என்று புரிந்து விட.. அவரையே உணர்ச்சியற்ற பார்வை பார்த்துக் கொண்டே நின்றவளுள் ஓடிய கேள்வி எல்லாம்,
‘பரிதி இங்கே இல்லாட்டி.. அப்புறம் எங்கே?’ என்பது தான்.
அவரோ தொடர்ந்து சொல்ல எத்தனித்தவராக, “நான் ஒண்ணு விடாம எல்லாத்தையும் பரிதிக்கிட்ட போட்டுக் குடுத்துட்டேன்னு நினைச்சிட்டிருக்கீயா…? இப்ப வரைக்கும் உன் மனசு மாறும்னு நம்பிக்கையில நான் அதை பண்ணல.. இனிமேலும் அமைதியா இருக்க என்னால முடியாது.. சுறா மீன் தாக்குதலில் இருந்து உன்னய காப்பாத்துனல இருந்து.. நீ அவன மனசார ஏத்துக்கிட்டதா  நினைச்சிட்டிருக்கான் அவன்..”என்றவருக்கு அடுத்து பேசும் போது ஏகத்துக்கும் கண்கள் கலங்கத் தொடங்கியது.
நாவு தழுதழுக்க, “அவன் காதலி.. ச்ச.. ஆண்டா.. ளு நீ இல்.. ல… நீ வேற மென்னிலா.. அவன ஏமாத்திட்டிருக்க.. மென்.. னிலான்னு தெரிஞ்சது.. அவன் செத்துடுவான்.. மாஆ”என்று சொல்ல,
வயிற்றில் புளியைக் கரைத்தது போல ‘பகீர்’ என்றது மென்னிலாவுக்கு.
சட்டென தன் கண்களை துடைத்து விட்டுக் கொண்ட வாசு மாமா, அவளை இறுகிய முகத்துடன் நோக்கி,
“அவன் நெனச்சிருந்தான்னா.. நீ இல்லாத இந்த இரண்டு வருஷத்துல.. நாளுக்கு ஒருத்தியோட குடும்பம் நடத்தியிருக்க முடியும்.. ஆனால் என் மாப்ள அப்படி பண்ணலை.. தெனம் தெனம் உன்னய நெனச்சுட்டு வாழ்ந்தான்மா.. அவனோட அம்மாவை அந்த நெலமைக்கு ஆளாக்கினவங்க பழிவாங்கணும்ன்ற வெறியில.. தப்பான போதனையில அவன் உனக்கு துரோகம் பண்ணியிருக்கலாம்.. ஆனால் அவன் உன்னைய  உண்மையா உசுருக்குசுரா நேசிச்சான்… உன் நெனப்புல பைத்தியக்காரன் மாதிரி திரிஞ்சான்மா அவன்..
அவன் எனக்கு கிடைக்காம போயிருவானோன்ற பயத்துல, ‘அவ திரும்பி வரும்போது நல்லவனா மாறி இருக்கப் போறியா..இல்லை இதே குத்தவாளியா நிக்கப் போறியா..?’ ன்னு கேட்ட கேள்விக்கு பதில் தான் இந்த புனர்வாழ்வு மையமும், பேக்டரியும்..” என்று சொல்ல, அவளுக்கோ சர்வமும் ஆட்டம் கண்டு போனது.
வாசு மாமாவோ.. இத்தனை நாளாக மென்னிலாவின் மனம் காயப்படும் என்று எந்த உண்மையை பரிதி மறைத்து வைத்தானோ அதை சொல்லத் துணிந்தவராக,
“உன்னோட அம்மா முகத்தை இறுதியா பார்க்க விடலைன்னு தானே அவன் மேல இத்தனை பழிவெறி வச்சிட்டு திரியுற..??நீ சிவகாமியம்மாளுக்குப் பிறந்த மகளே இல்ல.. அது தெரியுமா உனக்கு??”என்று விடயத்தை போட்டு உடைக்க,
பட்டென்று விழிகள் நிமிர்த்தி வாசு மாமாவை திகைப்பூண்டை மிதித்தாற் போன்று பார்த்தாள் மென்னிலா.
அவரும் சற்றே உச்சஸ்தாயியில், “ சிவகாமியம்மாளுக்கு.. குழந்த சுமக்குற பாக்கியமேஏஏஏ கிடையாதூஊஊ.. தன்னோட புருஷனோட.. அதாவது உன் அப்பாவோட இரண்டாவது தாரத்துக்கு பொறந்த பொண்ணு தான் நீயீஈஈ..”என்று சொல்ல, நெஞ்சமெல்லாம் நெருஞ்சி முள் குத்தினாற் போன்ற வலியுடன் நிமிர்ந்தாள் மென்னிலா.
உணர்ச்சி மிகுதியில் சட்டென்று வாசுவின் கைகளைப் பற்றிக் கொண்டவள், கண்களில் அவை பாட்டுக்கு நீர் வழிய, திணறிய குரலில்,
“எ.. என்ன சொல்றீங்க சித்தப்பாஆஆ.. நீங்க சொல்றது உண்மையா? ”என்று கேட்டாள் அவள்.
அவரும் சற்றே உணர்ச்சி வசப்பட்ட குரலில், “ஆமாஆஆ உண்மை தான்.. எந்த உண்மை தெரிஞ்சா உன் மனசு கஷ்டப்படும்னு எல்லாத்தையும் என் மாப்ள மறைச்சானோ.. அதை சொல்றேன்.. நீ உன் அப்பாவோட இரண்டாவது தாரத்துக்கு பொறந்த பொண்ணு தான் நீஈஈ… பிரசவத்துலயே உன் அம்மா இறந்துட.. உன்னய தன் மகள் போல பார்த்துக்கிட்டா சிவகாமியம்மாள்.. ராஜமாணிக்கம் ஏன்.. உன்னய ஒரு மனுஷியா கூட மதிக்கலைன்னு இப்ப புரியுதாஆஆ??.. ஏன்னா நீ அவர் மகள் வயித்து பேத்தியில்லைன்ற ஒரு காரணத்துக்காகத் தான்..” என்று நவில,
அப்போது தான் அன்றொரு நாள் அவள் கணவன், ‘இந்த உலகத்துல நீ அறியாத பல மர்மங்கள் இருக்கு.. அதை அறியாத வரை உனக்கு நல்லது.. உன் நிம்மதிக்கு நல்லது’ என்று கணவன் பூடகமாக உரைத்தது ஞாபகம் வந்தது.
இதையா கணவன் சாடை மாடையாக சொல்ல வந்தான்??
அவரோ, தன் சட்டைப்பையில் இருந்த செல்லை எடுத்து, அவள் கையில் திணித்தவராக, “உன் அம்மா சாவுக்கு காரணம் பரிதி அவங்களுக்கு கொடுத்த மனவலின்னு நினைச்சிட்டிருக்கேல்ல?அது தான் இல்ல!! உங்க அம்மா சாவுக்கு காரணம் ராஜமாணிக்கமும்.. சரவணனும் தான் .. அதுவொரு கௌரவக் கொலை… தன்னோட எதிரி..அதாவது உன் புருஷன் பரிதி வீட்டுப்படியேறி வந்ததுக்காக.. அடிச்சு கொன்னாங்க அந்த படுபாவிங்க.. அதுக்கான ஆதாரம் தான் இதுல இருக்கு… இது மஞ்சுவோட அம்மா எடுத்த வீடியோ.. நீயே பாரு.. உண்ம புரியும்”என்றுரைக்க,
வீடியோவை நடுக்கம் எய்தும் கையுடன் ஓடவிட்டவளுக்கு, ஆரம்பத்திலேயே.. ராஜமாணிக்கம், தன் மகளுக்கு அடித்த அடியில்.. தாயின் நெற்றி போய்.. சோபாவில் பட்டு.. இரத்தம் வருவதைப் பார்த்ததும்.. அதற்கு மேலும் கண்ணுறப் பிடிக்காமல்..
வீடியோவை நிறுத்தி விட்டு.. மூச்செடுக்க சிரமப்பட்டு நின்றாள் மென்னிலா. நெற்றியெல்லாம் முத்து முத்தாக வியர்வை அரும்ப ஆரம்பித்திருந்தது.
அவளது தாய்.. அங்கணம்.. அந்த ராட்சதர்களின் கையில்.. சுகவீனமுற்ற பலவீனமான மேனியுடன்.. என்ன பாடுபட்டிருக்கக் கூடும்? என்று எண்ணுகையில் நெஞ்சமெல்லாம் பதைபதைக்கத் தொடங்கியது அவளுக்கு.
சட்டென கண்களும், இதயமும் ஒருங்கே கலங்க, “இந்த வீடியோவையே உன்னால பார்க்க முடியலீய்யே.. அடிவாங்கியே செத்துப் போன உன் தாய் முகம் பார்த்தேன்னா.. உன்னால தாங்க முடியாதுன்னு தான் உன்னய அவன்.. அவங்க இறுதி முகத்தைப் பார்க்க விடலை.. புரிஞ்சுக்க..” என்ற அவர் குரலில் இருந்த மன்றாட்டம் அவளை என்னமோ செய்தது.
“இரண்டு வருஷம் கழிச்சு அவன் பக்கத்துல வந்திருக்குற உன்னய பூப் போல கவனிச்சுக்க ஆசைப்பட்டான்.. ஆனா அதுக்கு விடாம நீ முரண்டுபிடிச்ச.. அந்த பிடிவாதம்.. அவனோட முரட்டுத்தனத்த கூட்டிச்சு.. அதான் அவன் உன்கிட்ட முரடனா நடந்துக்கிட்டான்.. இந்த நெலமையில் உங்க அம்மா வந்து.. உன்னய அவங்க கூட அனுப்பிருன்னு கேட்டுக்கிட்டாங்க.. அவன் திரும்பவும் உன்னய அந்த நரகத்துல தள்ள விருப்பப்படலை.. அதனால தான் அவன் உன்னய அவங்க கூட அனுப்ப மறுத்தான்.. இது தெரியாம நீ.. அவங்க சாவுக்கு காரணம்.. அவன் தான்னு நெனச்சிட்டிருந்திருக்கேல்ல? இந்த உலகத்துல நீ தான் அவனோட உயிர்.. சுவாசம்..!! அத நீ எப்ப புரிஞ்சுக்க போற.. ”என்று கேட்க, அவளிடம் கண்ணீர் ஒன்றைத் தவிர வேறு பதிலே இல்லை.
ஆனால் இறுதியாக வாசு மாமா உரைத்த வார்த்தைகள் எல்லாம் சத்திய வார்த்தைகள். எப்பேர்ப்பட்ட சூறாவளியையும் கட்டிப்போடும் காதலுக்குள்ள வலிமையை பறைசாற்றும் வார்த்தைகள்.
அவளை தீவிரமான விழிகளுடன் பார்த்தவர், “உன்னோட போலியான காதலே… ஒரு முரடனை.. இந்தளவுக்கு மாத்துதுன்னாஆஆ.. உன் உண்மையாட காதல்.. அவனுக்கு முழுமையா கெடைச்சுதுன்னா அவனை எந்தளவுக்கு மாத்தும்??.. அதுல தான் உன் வெற்றி இருக்கே ஒழிய.. உன்னையும் வருத்தி, அவனையும் வருத்தி.. குழந்த எதிர்காலத்தையும் பாழாக்குற இந்தப் பழிவெறியில உன் வெற்றி இல்ல.. அத முதல்ல புரிஞ்சுக்க.” என்று அவர் உரைத்த,
‘குழந்தை எதிர்காலம்’ என்ற சொற்றொடரில்.. காத்தாடியாகச் சிக்கிக் கொண்டது மடந்தையின் மனம்.
‘குழந்தையின் எதிர்காலம்’-அதைப்பற்றி அவள் அவ்வளவாக சிந்தித்தாளா என்ன?
சரி.. ஏதோ அவள் திட்டப்படி பழிவாங்கி விட்டாளும் கூட.. அவனை ஒவ்வொரு செக்கனும் நினைவுறுத்தாட்டும், அவனால் வந்த.. அந்த குழந்தையை அவளால் வளர்க்கவும் கூடுமோ?
பழிவெறி அதிகமாகி.. ஒரு பாவமும் அறியாத அந்தக் குழந்தையை கொல்லும் எண்ணமும் இவளுக்குள் முகிழ்த்தால்?
அந்த எண்ணம் வந்ததும் பகீரென்றானது இதயம்.
இதுகாறும் கண்ணீரும், கம்பலையுமாக நின்ற பெண் மனதுக்குள் அவள் காதோரம் ஒலித்தது கணவன் வீட்டை விட்டு செல்லும் முன்னம்,
காதல் இழையோடும் குரலில், ‘காதல் தானடிஹ் என் மீதுனக்குஹ்?’ என்று கேட்டு விட்டுச் சென்றது ஞாபகம் வர, இதயமெல்லாம் ஒரு பொல்லாத வலி எழுந்து பரவியது அவளுக்குள்.
ஏதோ ஒரு தீர்மானம் தோன்ற,  நிதானமே அற்ற வெடவெடக்கும் குரலில், “இப்போ பரிதி எங்கேஏஏ..?”என்று கேட்க, அவரது அவசரம் அறியாத வாசு மாமா அமைதியாகவே நின்றிருந்தார்.
அவரது முன்னங்கைப் பற்றி ஆட்டியவள், “ஐய்யோஓஓ.. இப்ப பரிதி எங்கே சித்தப்பாஆஆ… நான் அவர் கிட்ட உடனே போய் ஆஆகணும்… என்னய அவர்கிட்ட கூட்டிப் போங்க ப்ளீஈஈஸ்ஸ்…”என்றுரைக்க,
மென்னிலாவின் பதற்றம், ஏனோ அவரையும் அலைக்கழிப்புக்கு உள்ளாக்கியது.
காதல் தானடி என் மீதுனக்கு?
(பதில் விரைவில் நவில்வாள்.)

Advertisement