Advertisement

தீயினுள் தெ(ன்)றல் நீ!

அத்தியாயம் – 11

 

சித்தியை திரும்பிப் பார்த்தவளின் கண்கள், இரத்தமென சிவந்திருந்தது. மார்பு ஏற இறங்க.. புருவங்கள் இரண்டும்.. நெற்றிக்கு இடம்பெயர.. அடித்தொண்டையில் இருந்து சீறிக் கேட்டாள் ஷேத்ரா,

“எங்கே உன் புருஷன்?… எங்கே உன் புருஷன்? சொல்லு!!!! எங்கே உன் புருஷன்..!!!?” என்று.

 

தான் பெறாத பெண்ணின்.. தற்போதைய விகாரமான முகத்தை ஒரு போதும் பார்த்தறிந்திராத.. அவளது பேதை தாயோ.. அந்த விழிகளைக் கண்டு..  அச்சத்தில் தானும் விழிகள் விரித்தார்.

 

தன்னை நோக்கி திரும்பியவளின் முன்னங்கையைப் பற்றியவர், சின்னவளின் விழிக்கு விழி நோக்கி, உரத்த குரலில்,

“என்ன ஆச்சு தைர்யாஆஆ?”என்று கத்திக் கேட்க.. அவர் பிடியில் தன் கை இருப்பதே தீது எனக் கொண்டு.. அவர் பிடியிலிருந்து தடுமாறி வெளியே வந்தாள் அவள்.

 

ஈரெட்டு பின்னே நகர்ந்து.. சித்தியையே வெறித்துப் பார்த்தவளின் ரௌத்திரம் அடங்கவேயில்லை. அவள் சித்தி கோகிலா ஓர் அப்பாவி என்று அவள் மனதுக்கும் நன்றாய் தெரியும்.

ஆனால் சித்தப்பா மேல் சீற்றம் கொண்டிருந்த அனைத்தும்.. தன் சித்தியைக் கண்டதும் சித்தி மேல் திரும்பியது.

 

வெடித்துச் சிதற துடிதுடித்துக் கொண்டிருக்கும் ஓர் எரிமலைக்கு.. தென்றலும், மழையும் அதன் சூட்டை தணிக்குமா?

இந்த எரிமலையும்.. சித்தியின் “தைர்யா”என்ற அழைப்பில் தணிந்து போகவேயில்லை.

அப்பாவி சித்தி.. ஏதும் புரியாமல் நின்றிருக்க.. “இனியும் என்ன ஆகணும் எனக்கு?”என்று கேட்டவளின் வெம்மையை தாங்காமல்.. கண்களில் நின்றும் கண்ணீர் கொட்டவாரம்பித்தது.

 

அவள் கண்களிலிருந்து வழியும் கண்ணீர்.. வாயிலிருந்து உதிரும் ஆழிப்பேரலையின் சீற்றம்?? எதனால் எதனால் என்று புரியாமல் திக்குமுக்காடிப் போனாள் சித்தி கோகிலா.

 

எது நடந்திருப்பினும்.. நடந்தது எதுவுமே சரியில்லை என்று மட்டும் தெள்ளத்தெளிவாக புரிந்தது அவருக்கு.

 

அவளை சாந்தப்படுத்தி.. நடந்ததை அறிவதே வழியென்று கொண்ட சித்தியும், அவளை நோக்கி,

சற்றே அதட்டும் குரலில், “தைர்யாஆ!!..”என்று கத்திய கணம்.. சின்னவள் பார்வையோ.. வாசற்பக்கம் நோக்கிக் கொண்டிருந்தது.

 

சித்தியின் புருவங்கள் நெளித்த.. குழம்பிய.. கலவரப் பார்வையும்.. சின்னவளைத் தொடர்ந்து.. வாசற்பக்கம் நோக்க.. அங்கே நின்று கொண்டிருந்ததோ அவளது சித்தப்பா குருலிங்கம்.

 

அப்போது தான் வீட்டிற்குள்.. தன் ஷூக்கால்கள் தடதடக்க.. உள்ளே அடியெடுத்து வைத்தவரின்.. தீர்க்கமான கண்கள்.. புயல் மையம் கொண்டு ஓய்ந்திருந்த.. அந்த ஹாலை மௌனமாக சுற்றி வர பார்வையிட்டது.

 

பொருட்களெல்லாம் சிதைந்து.. கண்ணாடி உடைந்து.. கலவரம் நடந்த இடம் போல இருந்த அவ்விடமும், குழப்பமான பார்வையுடன் நின்றிருக்கும் அவர் மனைவியும்.. கூடவே  களைந்து போன கூந்தலுடன்.. கண்ணீர் மல்க… சீற்றத்துடன் நிற்கும் ஷேத்ராவும்..

 

அவர் புருவமத்தியில் முடிச்சினை உருவாக்க.. மெல்ல நடந்து உள்ளே வந்தார் குருலிங்கம்.

 

சித்தியை விட்டு.. விட்டு.. தன்னை நோக்கி நடந்து வரும் சித்தப்ப்பாவை நோக்கி சென்றவள், இகழ்வு சிறப்பு தொனிக்கும் குரலில்,

நாசித் துவாரம் இரண்டும் விடைத்து அடங்க,நா தழுதழுத்து நெஞ்சை அடைக்க, “வாங்க சர்.. வாங்க.. உனக்காகத் தான் வெயிட் பண்ணிட்டிருக்கேன்!!” என்றாள் கொஞ்சம் கூட மரியாதையே இல்லாமல் ஒருமைக்குத் தாவி.

 

சித்தப்பாவின் கண்களின் தீவிரம் இன்னும் அதிகரிக்க.. மௌனமாய் அவர் நிற்க.. கணவனை அவமதித்து பேசும் ஷேத்ராவைக் கண்டு முதலில் கொந்தளித்தது கோகிலா தான்.

 

உடனே அவளை நாடி வந்தவர், அவளின் கைப்பற்றி.. தன்னை நோக்கி திருப்பி,

“தைர்யாஆ!.. அவரைப் பார்த்து என்ன பேச்சு பேசிட்டிருக்க.. இது தான் பெரிய மனுஷங்களுக்கு நீ  தர்ற மரியாதையா? என்ன பேசுறேன்னு தெரிஞ்சுதா பேசுறியா?”என்று ஆத்திரத்துடன் கேட்டார்.

 

அவள் எதிரே சித்தப்பா குருலிங்கம். பக்கத்தில் சித்தி. இருவரையும் ஒரு கணம் மாறி மாறி பார்த்தவள், இறுதியில் சித்தியை நோக்கி,

கண்களில் அவை பாட்டுக்கு நீர் வழிய, “யாரு சித்தி பெரிய மனுஷன்? … இதோ கல்லு மாதிரி நின்னுட்டிருக்காரே.. இவரா பெரிய மனுஷன்? ..”என்று இயலாமை மிகுந்த குரலில் கேட்டாள்.

 

அவள் பேச்சில் சித்தி முகம்  ‘என்ன தான் நடந்திருக்கும்?’என்று புரியாமல் குழம்பி நிற்க.. அவளோ சினத்துடன் தன் சித்தப்பாவை நோக்கி திரும்பினாள்.

 

அந்த கணம்.. அவள் சீற்றத்தை மட்டும் சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகள் மட்டும் நேருக்கு நேர் கண்டிருப்பின்.. கண்ணகியின் சீற்றத்தை.. ஒப்பிட்டு..இவள் சீற்றத்தையும் செய்யுள் வடித்திருப்பார்.

மூசு மூசு என்று பெரும் பெரும் மூச்சுக்களை எடுத்து விட்டுக் கொண்டே அவரைப் பார்த்தவள்,

“அதான் என்.. லைஃப்பை மொத்த்தமா.. பாழாக்கிட்டு.. இப்படி வேஷம் போட்டுட்டு.. ஒண்ணுந் தெரியாத அப்பாவி மாதிரி நிற்குறியே.. நீ… யெல்லாம் மனுஷ… ந்தானா..?நிறம் மாறுற பச்சோந்தியை விட மோசமான பிறவி நீ..!!”என்று குரல் தழுதழுக்க.. கண்ணீர் தொண்டையை அடைக்க பேசினாள் தைர்யா.

எந்த பெண்ணும்.. தன் கணவனை இன்னொருத்தி அவமதித்து பேச இடங்கொடாள். அதையே தான் அவள் சித்தியும் செய்தாள்.

அவர் கணவன் என்ன செய்திருக்கக் கூடும் என்று அவருக்குத் தெரியாது. இருப்பினும்  குருலிங்கத்தை, “பச்சோந்தி”என்று சுட்டியதை பிடிக்காமல் சட்டென முன்னே வந்து.. தைர்யாவை தடுக்க முனைந்தார் அவர்.

 

அவர் தன்னை பிடிக்க முதல், தானே திரும்பி.. வெட்டும் பார்வை பார்த்தவள்,  “நீ சும்மாயிரு சித்தி.. உன் புருஷன்.. எவ்வளவு பெரிய சுயநலவாதின்னு.. உனக்குத் தெரியாது” என்று ஒற்றை வார்த்தையில் அடக்கியவள்.. மீண்டும் குருலிங்கத்தை நோக்கினாள்.

 

தன் குரலுக்கு எப்போதும் அடங்கிப் போகும் அண்ணன் மகள்..

தன்னை நிமிர்ந்து பார்க்கக் கூட முடியாதளவுக்கு.. தன் மேல் மதிப்பும், மரியாதையும் அளவு கடந்து வைத்திருக்கும் அண்ணன் மகள்..

அன்று எரிமலையாக வெடிப்பதன் காரணம் அறிந்தும், அறியாதவர் போல அமைதியாக நின்றிருந்தார் அவள் முன்.

 

அன்றொரு கால்.. அந்த ஆனானப்பட்ட பீஷ்மரையே கேள்வி கேட்ட.. சிகண்டிக்கும், இவளுக்கும் என்ன பெரிய வித்தியாசம்?

சிகண்டியும்  நம்பி ஏமாற்றப்பட்டவள், இவளும் நம்பி ஏமாற்றப்பட்டவள். இருவருமே சீற்றம் கொண்டது  மானசீக தந்தைகள் மீது தான்.

கல்லாய் சமைந்து நின்ற சித்தப்பாவை நோக்கி, “இவரே ‘சித்தப்பாவுக்கு  தெரியாமல்.. மாலையும் கழுத்துமா வந்து நிற்கப் போறேன்னு எதிர்பார்த்தே’ன்னு சொல்லுவாராம்.. அதே இவரே, வி.. வி.. க்னேஷ் வீ.. டேறிப் போய்.. உன் தங்கச்சி கல்யாண செலவை.. நான் ஏத்துக்குறேன்.. என் பொண்ணை விட்டு.. டுன்னு க்கெஞ்சுவாராம்.. எல்லாம் வ்வேஷம்!! ..” என்று தான் ஏமாற்றப்பட்டதன் ஆற்றாமை தாங்க முடியாமல் சிதறி வெடித்தாள் அவள்.

 

அவள் என்ன தான் நிதானம் தவறி பேசிய போதும், குருலிங்கம் மட்டும் நிதானம் தவறேவேயில்லை.

காதலனால் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று எண்ணிக் கொண்டிருந்தவளுக்கு.. உண்மை நிலவரம் அறிந்ததும் தோன்றும்  வலி இயல்பு தானே?

வந்ததற்கே இப்போது தான் தன் அழுந்த மூடிய இதழ்களைத் திறந்தார் அவள் சித்தப்பா. கணீர் என்று காற்றில் கலந்து ஒலித்தது அவரின் குரல்.

 

ஆனால் அந்த கணீரில்.. இன்று அவள் இதயம் நடுக்குறவில்லை. மாறாக ‘கண்ணீர்’ தான் அதிகமாயிற்று.

 

உணர்ச்சி முற்றிலும் துடைக்கப்பட்ட முகத்துடன், “ஷேத்து.. நீ இப்போ நிதானம் தவறி பேசுற!! .. உன் ரூமுக்கு போ.. அப்புறம் பேசிக்கலாம்..” என்று அமைதியாக உரைத்தவர்,

மனைவியை நோக்கி,  “கோகி.. இவளை உள்ளே கூட்டிப் போ..” என்க..

 

சித்தியும் கணவன் சொல்லையே வேதவாக்காக கொண்டு.. ஷேத்துவை உள்ளே அழைத்துப் போக முன்வந்து.. அவள் கையை ஆதரவாக பற்றினார்.

 

அவரது பிடியிலிருந்து தீச்சுட்டாற் போல விலகி வெளியே வந்தவள், “என் கைய விடு சித்தி… என் கைய விடு.. இது எனக்கும், அந்தாளுக்கும் நடக்குற யுத்தம்.. இதுல நீ வராதே..!”என்று சுட்டுவிரல் காட்டி எச்சரிக்க.. அப்பாவி தாயோ மனம் நொந்து போனார்.

தான் வளர்த்த மகளை.. தன்னிடம் கை நீட்டி பேசுவது.. ரொம்ப ரொம்ப மென்மையான இதயம் கொண்ட கோகிலாவுக்கு.. கண்ணீர் பொள பொளவென்று கொட்டவாரம்பித்தது.

அந்த தாயின் உள்ளக் கொந்தளிப்பை எல்லாம் சட்டை செய்தவள் மீண்டும் குருலிங்கத்தை நாடி வந்தவள், ,

 

ஆவேசத்துடன், “ஏன் இப்படி பண்ணீங்க?.. ஏன்?.. என் கிட்ட நல்லவர் மாதிரி வேஷம் போட்டுட்டு.. ஏன்? என் காதலைப் பிரிச்சு வீட்டீங்க?

இதே உங்க மகளா இருந்தா.. என் சந்தோஷத்துக்கு எதிரா இப்படியெல்லாம் பண்ணியி… ருப்பீங்களா?..

நான் ஒரு அம்மா, அப்பா இல்லாத அநாதை’ன்றதனால் தானே.. இப்படியெல்லாம் பண்ணீங்க? ..

யார் கேட்க இருக்கா’ன்ற தைரியத்தில் தானே இப்படி எல்லாம் பண்ணீங்க?”என்று அழுது அழுது அவள் கேட்ட தினுசில்..

 

அங்கு நின்று.. நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பணியாட்களுக்கும் தான் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

 

அண்ணனை உயிராக கருதும்  குருலிங்கத்திற்கோ.. அண்ணன் பெண்ணின் வாயிலிருந்து வெளிவந்த சொற்களோ.. இதயத்தில் அம்பெய்தது போல வலியைக் கொடுத்தது.

 

இதுவரை கம்பீரமாக நின்று கொண்டிருந்த அந்த தேக்கு மரமும், அவளது கண்ணீர் எனும் சூறாவளியினால் சிறிதே ஆட்டம் கண்டது.

 

மனைவியிடம் கூட தன்னுணர்ச்சிகளை கொட்டிப் பேசாதவர், அந்நிமிடம் நிதானம் தவறினார். தான் அவள் மீதுள்ள அன்பை  வெளிக்காட்ட.. அவர் உதிர்த்த சொற்கள்.. அவருக்கே தான் வினையாக போவது அறியாமல் வாய் திறந்தார் குருலிங்கம்.

 

“ஷேத்ரா..   ஷேத்ரா நேஷன் கேம்பஸுடைய வருங்கால சேர்மன் நீ! .. இந்த சாம்ராஜ்ஜியத்தோட ராணி நீ! .. தங்க மெத்தையில படுக்க வேண்டியவளை.. கட்டாந்தரையில் படுக்க வைக்க நான் ஒண்ணும் மத்த சித்தப்பாக்கள் மாதிரி இல்லை..!!

 

ஷேத்து.. அவன் ஒண்ணும் நல்லவன் கிடையாது.. தங்கச்சி கல்யாணத்துக்காக  காதலை தூக்கியெறிஞ்சவன்.. நாளைக்கு உன்னையும் தூக்கியெறிய மாட்டான்னு என்ன நிச்சயம்..!!

 

ஆப்டரோல்… ஒரு மிடில் கிளாஸ் பையனுக்கு.. இந்த சாம்ராஜ்யத்தையும், அதன் ராணியான உன்னையும் தூக்கி.. கொடுக்க சொல்றியா?.. என்னைப் பொறுத்தவரை.. நான் உயிருக்கும் மேலாக மதித்த என் அண்ணன் பொண்ணு.. கடைசிவரை  சந்தோஷமா இருக்கணும்..! அதனால தான் இப்படியெல்லாம் பண்ணேன்”என்று தன்னிலை விளக்கத்தை ஒப்பித்துக் கொண்டே போனவரை ஈவிரக்கமற்ற பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

 

என்ன தான் விக்னேஷ் கெட்டவனேயானாலும்.. அதை அவளிடம் சொல்லிப் புரிய வைக்க முயலாமல்.. அவள் முன் காதலுக்கு பச்சைக் கொடி காட்டுவது போல ஆதரவாக பேசி.. பின்னாடி அவளுக்குத் தெரியாமல் உள்குத்து வேலை பார்த்தது தப்பு.. அது மா பெரும் தப்பு..

 

அவர் பேச பேச ‘சாத்தான் வேதம் ஓதுகிறது’ என்று எண்ணிக் கொண்டவள், அவரது உரையாடலின் இறுதியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

 

இத்தனை நாள் அவள் உள்ளக்கிடக்கையில் முடக்கி முடக்கி வைத்திருந்த நீர்.. தன் அணைக்கட்டை உடைத்துக் கொண்டு.. பெரும் வெள்ளத்தை உருவாக்க முனைந்தது.

 

ஆத்திரம் கமழ சித்தப்பாவை நோக்கியவள், ஈனஸ்வரத்தில், “என்ன சொன்னீங்க? நான் சந்தோஷமா இருக்கணும்னா சொன்னீங்க? அதுக்காகவா இதையெல்லாம் பண்ணீங்க?”என்று கேட்டவள்,

 

அதற்குப் பிறகு உரைத்தது எல்லாமே அவளது ஆற்றாமைகள் தான்.

 

வழமையாக உபயோகிக்கும் மரியாதைப் பன்மை தானாக வர, “சின்ன வயசுல இருந்து.. நான் யார் கூட பழகினாலும்.. ஸ்டேட்டஸ் பார்த்து ஓரங்கட்ட வைச்சீங்க..

பசங்களுக்கு பாடம் சொல்லித் தர்ற.. ஒரு சாதாரண ஸ்கூல் டீச்சராக ஆசைப்பட்ட என்னை.. என் கனவை களைச்சு…அட்மினிஸ்ட்ரேடிவ் எட்ஜூக்கேஷன்  படிக்க வைச்சீங்க..

நான் என்ன படிக்கணும்.. என்ன ட்ரஸ் போட்டுக்கணும்.. எப்படி பேசணும்.. எல்லாத்தையும் நீங்களே டிஸைட் பண்ணீங்க.. என் கூட ஃப்ரண்ட்ஷிப் வைச்சுக்கிட்டவங்க எல்லாரும்.. என் கிட்ட இருக்க.. பணத்துக்காகவும், பெருமைக்காகவும் தான் நட்பு வைச்சாங்க.. எனக்குன்னு தான்.. ஆத்மார்த்தமா ஒரு ஃப்ரண்ட் உண்டா??.. இப்படியிருக்கும்  போது.. நான் என்னைக்கு தான் இந்த வீட்டில்  சந்தோஷமா இருந்திருக்கேன்?”என்று காற்றில் கைகளை அகல நீட்டி.. அவ்வீட்டை சுட்டிக் காட்டி இரைந்த குரலில் கேட்டாள் தைர்யா.

 

அவள் பேச பேச.. வாயடைத்துப் போய் நின்றிருந்தார் சித்தப்பா.

தன் அண்ணன் மகளுக்கு.. ஒரு நல்ல வாழ்க்கையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தான்.. அவர் அவளின் சின்ன சின்ன விடயங்களைக் கூட பார்த்து பார்த்து செய்தார்.

அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று தான்.. அவள் விடயத்தில் அனைத்தையும் ஒன்றுக்கு பலதரம் யோசித்து முடிவெடுத்தார்.

இப்போது அவளே.. அதில் சந்தோஷமில்லை என்றதும்.. உள்ளம் வலிக்க.. அதை வெளிக்காட்டாமல்.. அதே பழைய உணர்ச்சி மறுத்த முகத்துடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தார் குருலிங்கம்.

 

ஆத்திரத்தின் எல்லை அளவுகடக்க.. அடுத்து அவள் உரைத்ததோ ரொம்பவும் அதிகப்படியான சொற்கள் தான்.

இவ்வளவு பேசியும் எதுவும் வாய் திறந்து பேசாமல்.. கல் மாதிரி நிற்கும் சித்தப்பா மேல் கோபம் பொங்க,

 

“நீ ஒரு குழந்தை பெத்து.. வளர்த்திருந்தால்.. அவள் உன் முன்னாடி இப்படி கண்ணீரோட நின்றிருந்தால்.. என்னுடைய கவலை புரியும்! ..

உனக்கு தான் குழந்தையே  இல்லையே?.. அண்ணன் பொண்ணு ஃபீலிங்க்ஸ் எங்கே உனக்கு புரியும்..!”என்று கல்லெறி போன்ற சொற்களை உதிர்த்த அடுத்த நொடி.. அவள் விக்கியிடம் அடி வாங்கிய அதே கன்னத்தில் அறைந்திருந்தார் அவள் சித்தி கோகிலா.

 

அதில் அவள் சித்தப்பாவும் சற்றே அதிர்ந்து நிற்க,

கன்னத்தைப் பிடித்துக் கொண்டு… கண்ணீர் மல்க சிறுகுழந்தை போல திரும்பி பார்த்தவளை எதிர்கொண்டது அந்த பதிவிரதையின் சினம் மேலோங்கிய கொந்தளிக்கும் முகம்.

“தைர்யாஆ.. யாரைப் பார்த்து என்ன வார்த்தை பேசிட்டே? அவரோட தியாகம் தெரியாமல்.. நீ தான் லூசு மாதிரி உளர்ற? அவர் என்ன பண்ணாலும்.. அதுல உன் நலம் தான் இருக்கும்.. மரியாதையா அவர் கிட்ட மன்னிப்புக் கேளு”என்று  தாய் ஸ்தானத்தில் உரிமையுடன் இயம்பினார் அவர்.

 

அவளிருந்த கவலையான மனநிலையில்.. சித்தி கை வைத்தது கூட தன் மேல் இருக்கும் உரிமை தான் என்பது புரியவில்லை அவளுக்கு. அனாதை என்பதால் தானே இந்த அவமானம் எல்லாம் என்று தோன்ற.. அழுகை அழுகையாய் வர.. விம்மியது நெஞ்சம்.

 

தவறு இழைப்பவர்கள் மற்றவர்கள். ஆனால் அடி வாங்குவது ஒரு தவறுமே இழைக்காத அப்பாவியா?

 

சித்தியை பரிதாபமாக பார்த்தவள், “நான் பேசினதுல என்ன தப்பு இருக்கு?? நான் சொன்னது அத்தனையும் நிஜம்..

அதனால் நான் ஸாரி கேட்க முடியாது.. இனியொரு நிமிஷம்.. கூட இந்த வீட்ல இருக்க நான் தயார் இல்லை..நான் கிளம்புறேன்” என்று தன் கன்னத்தை அழுந்த துடைத்துக் கொண்டு.. அவசர முடிவுக்கு வந்தவள், தன்னறையை நோக்கி விறுவிறுவென விரைந்தாள்.

 

அவள் பேசி அங்கிருந்து நகர்ந்த பின்பு தான், தான் இழைத்திருக்கும் பெரும் பிழை புரிய,  தன் கோபத்தை எல்லாம் அங்கேயே கை விட்டு விட்டு.. தைர்யா பின்னாடி ஓடினார் சித்தி கோகிலா.

 

அவள் தன் பெட்டியில் உடைகளை.. அவசர அவசரமாக எடுத்து வைக்க, பின்னோடு வந்த சித்தி, “தைர்யா.. சித்தி அறைஞ்சது தப்பு தான்மா.. உன்னை அறைஞ்சிருக்க கூடாது.. ப்ளீஸ் சித்தி கூடவே இருந்துடு.. தயவு செய்து என்னை விட்டு போகாதே…”என்று எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் அவள் மனம் மாறவேயில்லை.

 

வயதின் முதிர்ச்சி காரணமாக.. ரொம்பவும் இடைவெளிவிட்டு பின் தொடர்ந்த சித்தியை மதியாதவளாய்.. ஹாலுக்கு வந்தவள்.. சித்தப்பாவைக் கண்டும் காணாதவளாக கடந்தேற முற்பட்ட போது,

 

அவள் கையை மெல்லப் பற்றி தடுத்தது அவர் கரம்.

 

அவள் நின்றாளே ஒழிய.. திரும்பி தன் சித்தப்பாவை பார்க்கவேயில்லை. ஒருவேளை அவள் திரும்பிப் பார்த்திருந்தால், அவர் கண்களில் தெரிந்த அதீத பட்ச சோகத்தை கண்டு கொண்டிருந்திருப்பாள்.

 

அந்தோ பரிதாபம்! அவள் விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி தான் உரையாற்றினாள்.

“ஏழையா பொறந்தவனுக்கும்.. கடைசியில ஆறடி நிலம் தான்.. உங்களை மாதிரி பணக்காரத் திமிர் பிடிச்சு அலையுறவனுக்கும்.. கடைசியில் ஆறடி நிலம் தான்.. எந்த சாம்ராஜ்ஜியத்தை வைச்சு இப்படி.. பதை பதைக்குறீங்களோ.. அதை கட்டிக்கிட்டு நீங்களே அழுங்”.. என்று சரியாக வசனத்தை முடிக்கக் கூட விடாமல்.. நெஞ்சில் அடைத்த அழுகை தடுத்தது.

 

தன் குரலின் தளதளப்பை.. முயன்று மறைத்தவர், “ஷேத்து… இது தான் உன் முடிவா?” என்று ‘போகாதே’ என மறைபொருளில் உரைத்தார் குருலிங்கம்.

 

ஆனால் அவளுக்கோ.. ‘நீ வீட்டை விட்டு சென்றால்.. பலவித தடங்கல்களை சந்திக்க நேரிடும்.. இது தான் உன் முடிவா?” என்று மிரட்டுவது போல தோன்ற,

 

“இப்போ நான் மேஜர் பொண்ணு.. நான் எங்கே இருக்கணும்.. யார்கூட இருக்கணும்னு முடிவு பண்ண எனக்கு எல்லா ரைட்ஸூம் இருக்கு.. என்னைத் தடுக்குற அதிகாரம் உங்களுக்கு இல்லை” என்று பிடிவாதமான குரலில் உரைத்தவள்,

 

அவர் கையிலிருந்த தன் கையை விடுவித்துக் கொண்டு, விடுவிடுவென வெளியேறினாள்.

 

போகும் அவளையே.. கலங்கிய விழித்திரையுடன்.. இயலாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் சித்தி கோகிலா.

 

Advertisement