Advertisement

அதியனின் தூக்கம் களைந்தது போல் இருக்கவும், தலையில் இருந்த போர்வையை லேசாக விலக்கினான்.

அறையின் ஒரு பக்கத்தில் லேசான வெளிச்சம் தெரிந்தது.

‘ஏன் லைட்டை போட்டு வச்சு இருக்கா..?’ என்று மெல்ல தலையை மட்டும் திரும்பி பார்த்தான்.

ஸனா அதிகாலை நான்கு மணியின் தொழுகையில் இருந்தாள்.

‘ஓ! ப்ரேயர் எல்லாம் செய்வாள..?’ என்று

நினைத்து அவளையே நோக்கினான்.

தலையில் ஒரு வெள்ளை ஷாலைப் போட்டு கண்களை மூடியப்படி மண்டியிட்டுத் துவா கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவள் ஏதோ ப்ரேயர் பண்றாள் என்று மட்டுமே எண்ணி நோக்கினான்.

ஆனால் தேவதைப் பெண்ணாக ஜொலித்தாள்  அறையின் மங்கிய வெளிச்சத்தில். விழிகள் மூட மறந்து ரசித்தான் அந்த ஜாமத்திலும்.

கைகளை ஏந்தி துவாவில் இருந்தவள் இருபுறமும் திரும்பி தொழுகையை முடிக்கும் தருவாயிக்கு  வந்தாள்.

அதியன்’என்ன அழகுடி நீ! அலங்காரமே இல்லாம இந்தளவு ஜொலிக்க முடியுமா நோ வே. மஸ்து!’ என்று வாயினுள் முனகினான்.

விழிகளை சட்டென்று திறந்தவள், அவனை காணும் முன் அதியன் கண்களை மூடி இருந்தான்.

ஸனாக்கு’மஸ்து’ என்ற ஒலி கேட்டது, ஆனால் அதியன் நல்லத் தூக்கத்தில் தெரிந்தான்.

‘நம்ம பிரமை போல’ என்று எழுந்தவள், தலையில் இருந்த ஷாலை நீக்கிவிட்டு, தண்ணீர் அருந்தினாள்.

மறுபடியும் சென்று லைட்டை அணைத்துவிட்டு படுத்து கொண்டாள்.

அதியன் அனைத்தையும் உணர்ந்தப் படி கண்களை மூடி இருக்க, ஸனா உறங்கிய பிறகே நிம்மதியாக மூச்சு விட்டான்.

‘ஷ்ப்பா! தப்பிச்சடா, இல்லனா மாட்டி இருப்ப’

மனமோ’இந்த பொழப்புத் தேவையா உனக்கு…? அவளை லவ் பண்ணிட்டு தாத்தா, குடும்பமுனு டயலாக் பேசி விட்டுட்டு வந்த, அவளே பழிவாங்க வந்திருக்கா, இப்ப போய் சைட் அடிச்சுட்டு இருக்க..?’ என்றது.

‘நான் என்ன செய்ய…? இப்படி அழகா தெரிஞ்சா சைட் தானே அடிக்க முடியும். நீ போ, உயிரை எடுக்காம, என்னமோ நான் அவ வீட்டுக்குப் போய் சைட் அடிச்ச மாதிரி பேசுற, இது என் ரூம் அவ தான் இங்க இருக்கா…’ என்றான் அதனிடம்.

‘என்னமோ செய், அவ ஒரு முடிவோடு தான் இருக்கா, உன் பாடு திண்டாட்டம் தான், போனா போது இப்படி சைட் அடிச்சு சந்தோஷம் பட்டுக்கோ..’ என்று மறைந்தது.

****

காலையில் அதியன் எழுந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தான் போனில்.

ஸனா அப்போது தான் எழுந்து அமர்ந்தாள். அதியனை கண்டவள் பாத் ரூம் சென்று ரெப்பெரஷ் ஆகி வரவும், அதியனுக்கு டீ வரவும் சரியா இருந்தது.

“தம்பி! டீ இருக்கு” என்று வேலையாள் ராமாயி வைத்தாள்.

“ம்ம்ம்! வச்சுட்டுப் போங்க” என்றான்.

அதில் ஒரு டீ மட்டுமே இருந்தது.

ஸனா அதைப் பார்த்தப்படி டவலை எடுத்து துடைத்துக் கொண்டே பெட்டிற்கு வந்தவள், ‘ம்ம்ம்! பெட் காபி வருது அவனுக்கு.. நம்ம போய் எடுத்துக்கனும் சாரி போட்டுக்கனும் போல..’ என்று நொந்தாள்.

நினைவு வந்தவள்”ஹலோ அதியன்! பத்து மணிக்கு எனக்கு ஷூட்டிங் இருக்கு, ஒன்பது மணிக்கு எங்க அம்மாவைப் போய் பாக்கனும் ரெடி ஆகிடுங்க” என்றாள்.

“இதுக்கு நான் நைட்டே பதில் சொல்லிட்டேன், நான் மறுவீடு வரும் அளவுக்கு உனக்கு சொந்தமில்லை, உன் கழுத்தில் தாலி நான் கட்டலை” என்று டீயை எடுத்து வாயில் வைத்தான்.

“ஓ! ஐ ஸி, அப்ப வர மாட்டீங்க, ஓகே எப்படி வரீங்கனு பாருங்க..” என்றவள், அவன் முன்னே உடையை மாற்றினாள்.

அதுவரை நைட்டி அணிந்திருந்தவள் ஒரு த்ரீ பை ஃபோர் பேண்டை எடுத்து மாட்டினாள்.

அவன் எதிர்ப்பக்கம் திரும்பியவள் நைட்டியை நீக்கிவிட்டு ஒரு காட்டன் சர்ட்டை எடுத்து மாட்டிக் கொண்டாள்.

அது மெல்லிய துணி என்பது அவள் அணிந்திருந்த உள்ளாடை கருமை நிறம் என்பதை வைத்தே சொல்லலாம்.

சர்ட்டின் முதல் இரு பட்டன்களை நீக்கிருந்தாள்.

தலையை விரித்து விட்டு கோதியவளை, பார்த்துக் கொண்ட் டீயை அருந்தினான் அதியன்.

‘என்ன செய்றா…?’ என்று யோசித்தவாறு.

சட்டென்று திரும்பியவள், அறையை விட்டு வெளியில் போக  நடந்தாள்.

டீயை குடித்தவன் சட்டென்று மண்டையில் ஏற, அதை துப்பிவிட்டு

“ஸனா…” என்றழைத்து எழுந்து அவள் அருகில் சென்றான்.

“எங்க போற…?”

“ம்ம்ம்! உங்களுக்கு பெட் டீ வந்துட்டு, பட் எனக்கு நான் தானே போடனும் சோ பால் காய்ச்ச அடுப்படிக்குப் போறேன்…”

“இதோடையா…?”

“வாட்!”

“இல்ல, இந்த டிரஸோடவா.. முன்னாடி போட்டிருந்த நைட்டி பரவாயில்லையே…” என்று தடுமாறினான்.

“ஹஹஹ!” என்று சிரித்தவள், “இந்த டிரஸ் இன்னும் குறையுதானு பாத்துட்டு இருப்பாங்க என்னை ரசிப்பவர்கள் நீங்க என்னனா, இதை மாத்த சொல்றீங்க…? வாட் எ ஃபன்னி அதியன்…”

“அது சினிமா ஸனா.. பட் இது வீடு அதும் என் தாத்தா, அப்பா, பெரியப்பா, சித்தப்பானு இருக்க வீடு. உன்னைய இப்படி பாத்தா வருத்தப்படுவாங்க. ப்ளீஸ் வீட்டில் கொஞ்சம் மத்தவங்க மாதிரி இரு..”

“ஹலோ! நான் எப்படி இருக்கனுமுனு கிளாஸ் எடுக்காதீங்க. நீங்க தான் தாலிக் கட்டலைனு சொன்னீங்களே மிஸ்டர் அதியன்..”

“ஸனா! பிளாக்மெயிலா இது…?”

“அப்கோர்ஸ்.. என் அம்மாவை பாக்க நீங்க வராதபோது, நான் ஏன் உங்க வீட்டு ஆட்களை பற்றி கவலைப் படனும்..”

“ஸனா! நான் இப்பவும் சொல்றேன். தப்பு என் மீது தான் என் வீட்டு ஆட்கள் இல்லை… நீ தேவை இல்லாம அவங்க மனசை கஷ்டப்படுத்தாத…”

“நான் மிஸ்டர் அதியனை மட்டும் தான் பழி வாங்க வந்தேன். அதாவது என்னைய ஏமாத்தி என்னை காயப்படுத்திய அதியனை, கேவலம் நடிகை தானே என்ன பண்ணிட முடியுமுனு தானே நினைச்சீங்க.. ஆனா என்னால உங்களை என்ன வேணா செய்ய முடியுமுனு இப்ப தெரியுதா…?

தப்பு செய்தது நீங்க ஆனா உங்க தாத்தா என்னமோ பேரன் ஒழுக்கமானவன் மாதிரி அன்னைக்கு ஸ்டேசனில் பிள்ளை உண்டாகிட்டா, அப்படி இருந்தாலும் அதை..? டேக் இட் ஈஸி போல் பணத்திமிரில் பேசினாரே அவருக்கு பாடம் சொல்ல வேண்டாமா அதியன் சார்.

அப்புறம் உங்க அம்மா..? என்னமோ நான் உங்களை மயக்கிட்டேனு பேசினாங்களே. உண்மையை சொல்லுங்க நீங்களா ஆரம்பிச்ச பிரச்சனைனு சொல்லியும் உங்களை கண்டிக்கலை.

உங்க அப்பா, பெரியப்பா, சித்தப்பா எல்லாருமே என்னைய டிரஸை கொறைச்சு நடிக்கும் நடிகையா மட்டுமே பாக்குறாங்க.. இத்தனைக்கும் அடிப்படை காரணம் யாரு..? நீங்க தானே. உங்களுக்கு பணத்திமிரை கொடுத்த அவங்க தானே. அப்ப எல்லாரும் அனுபவிக்கட்டும், மனசு காயம் ஆனா எனக்கென்ன…?” என்று வெளியே நடக்கப் போனவளின் கையைப் பிடித்து தடுத்தான்.

“இப்ப என்ன, உன் அம்மாவைப் பாக்கனும் அவ்ளோதானே வரேன். போதுமா போய் ட்ரஸை மாத்திட்டு கீழ போ” என்றான் அதியன்.

ஸனா நக்கலாக சிரித்தாள்.

“வாவ்! சினிமாவே உங்க வீட்டில் பாக்க மாட்டாங்களோ..? என் வேலை முடிஞ்சுட்டு” என்று போட்ட ட்ரஸ் மேல் நைட்டியை மாட்டி வெளியே சென்றாள்.

அதியன்’உஷ்ஷ்ஷ்! முடியல சாமி, தாத்தா மட்டும் அவளை இந்த கோலத்தில் பாத்திருந்தா நான் தொலைஞ்சேன்..’

என்று நினைத்தான்.

பின்ன அந்த வீட்டில் புடவை தான் பெண்களுக்கு, இளம் பெண்களுக்கு சுடிதார் அதும் ஷால் போட்டிருக்க வேண்டும்.

நைட்டி அவரவர் அறையில் போட்டுக் கொள்ளலாம்.

ஸனா நைட்டியோடு கிச்சனுக்குள் நுழைந்தாள்.

அங்கிருந்த தேவி, மாலினி அவளை ஒரு மாதிரி பார்த்தனர்.

ஸனா நேராக சென்று பாலை தேடிக் கொண்டே அத்தனை சந்தேகம் கேட்டாள், கேட்டது வேலை செய்யும் அம்மா ராமாயிடம்.

அவரோ பயந்து பயந்து பதில் கூறினார்.

ஸனாவிற்கு அடுப்பில் இருந்த பாலை சூட்டோடு எடுத்து ஊத்த தெரியவில்லை.

ராமாயிடம் கேட்க, அவர் தன் முதலாளி அம்மாவை பார்த்து பயந்தார்.

“உங்களுக்கு சம்பளம் தரேன்மா நான், நீங்க எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க..” என்றாள் ஸனா.

அவரோ மீண்டும் தேவியைப் பார்க்க,

“கவலைப் படாதீங்க, நான் பேசிக்குறேன்” என்றாள் ஸனா.

“அவங்க எங்க வீட்டு வேலையாள், யாரும் வேலை சொல்ல கூடாது” என்று கூறிவிட்டு தேவி வெளியேறினார்.

மாலினியும் வெளியில் சென்று விட்டார்.

ராமாயி அவசரமாக பாலை காய்ச்சி கிளாஸில் ஊற்றிக் கொடுத்தார் அவளிடம்.

“உங்க படத்தை நிறைய பாத்திருக்கேன். ஒரு படத்தில் சமையல் போட்டியில் ஜெயிப்பீங்க. ஆனா பால் கூட காய்ச்ச தெரியலை…” என்றார் அவர்.

“அது வெறும் நடிப்பு  தான்……. உங்க பேரு என்ன…?”

“ராமாயி”

“ஆ! ராமாயி, அங்க எல்லாமே சமைச்சு தந்துடுவாங்க.. ஒன்லி ஆக்டிங்” என்று சிரித்தவள், “தேங்க்ஸ் ராமாயி” என தன் அறையை நோக்கிச் சென்றாள்.

நவநீதம் அவளை பார்த்து பார்க்காதது போல் சென்றார் ஹாலிற்கு.

***

காலை உணவு வேளை வந்தது.

ஸனா ப்ரட் நைட்டே பாரியிடம் சொல்லி வாங்கி இருந்ததால் அதை தன் அறையில் இருந்தே சாப்பிட்டாள்.

அதியன் வழக்கம் போல சாப்பிட  வந்தமர்ந்தான்.

ஸனா ரெடியாகி கீழ வந்தவள் ஹாலில் வந்தமர்ந்து கால் மேல் கால் போட்டு,

“அதியன்! நான் ரெடி டைம் ஆச்சு போகலாம…? பத்து மணிக்கு எனக்கு ஷூட்டிங் இருக்கு…” என்றாள்.

அனைவரும் அவளையே பார்க்க.

வாயில் இட்லியை வைத்த அதியனுக்கு புரையேறியது காலையில் இரண்டாவது முறை.

நவநீதம்”எங்க அதியா போற…?” என்று கேட்டார்.

“தாத்தா! அவங்க அம்மா வந்து இருக்காங்களாம் பாக்கனுமாம், நானும் கூட வரனுமுனு…” என்று இழுத்தான்.

“என்ன…? நீ தாலியே கட்டலை, இது முறைப்படி நடக்காத ஒரு உறவு. உறவே இல்லை அதுக்கு மறுவீடு அழைப்பா..? நீ  எங்கையும் போக கூடாது, அது மட்டுமில்லை ஆறு மாசம் இந்த வீட்டில் இருக்கும் போது நடிப்பு வேலைக்கு யாரும் போக கூடாது அது எங்களுக்கு அசிங்கம்” என்றார் நவநீதம்.

பாரி அதியனைப் பார்த்து நக்கலாக சிரித்தான்.

“நான் யார் கிட்டையும் பர்மிசன் கேக்கலை. என்னோட வேலை எனக்கு புடிக்கும் வரை போவேன்.. அதியன் டைம் ஆச்சு..” என்றாள் வேகமாக.

“தாத்தா! ஆறு மாசம் தானே, நான் செஞ்ச தப்பு நானே சரிப் பண்றேன். அவ ஜாப் ஏதோ செய்யட்டும் நமக்கு தேவையில்லை. இப்ப போயிட்டு நேரா கடைக்கு வரேன்” என்று கிளம்பினான்.

“அதியா! அவளுக்கு நீ ஏன் துணைப் போகனும் அவ இஷ்டத்துக்கு ஆடுறா.. நீயும் ஏதோ நாய்க்குட்டி மாதிரி பின்னாடியே போற..?” என்று கடுப்பானார் மல்லி.

“அம்மா! அமைதியா இருங்க, ப்ளீஸ்..” என்று எழுந்தவன், வேகமாக வெளியில் நடந்தான்.

ஸனா சிரித்தப்படி ஹை ஹீல்ஸில் நடந்தாள் அவன்பின்னே.

மல்லி தலையில் அடித்தார்”இது எல்லாம் பாக்கவே நல்லா இல்லை மாமா, நீங்களும் அமைதியா இருக்கீங்க.?” என்றார்.

“இந்த மாதிரி அழுது ஒப்பாரி வைக்காம போ உள்ள” என்றார் நவநீதம்.

அன்னம் பாட்டி ஸனாவின் செய்கைகளைப் பார்த்து சற்று ஆச்சிரியமானார்.

நவநீதத்தையே பேச்சில்லாமல் அமர வைத்து விட்டாளே என்ற ஆச்சிரியம்.

***

பீவி மகளின் வருகைக்காக காத்திருந்தார்.

“எப்ப அஜி, வரப் போறா..?”

“வந்துடுவாம்மா. மெசேஜ் பண்ணா..”

***

“ஸனா! நீ என் தாத்தா கிட்ட மரியாதை இல்லாம பேசுறதை நிறுத்து, ஒரு நேரம் போல் நான் இருக்க மாட்டேன்” என்றான் அதியன்.

“அதையும் தான் நானும் சொல்றேன் உங்க தாத்தா கிட்ட சொல்லுங்க நானும் ஒரு நேரம் போல் யோசிக்க மாட்டேன். என் வேலையில் தலையிட்டால்..”

“நீ ஏன் இப்படி மாறின ஸனா…? ஐ ஹேட் இட்..” என்று வெறுப்பாக கூறி அமைதியானான்.

ஸனா பதில் பேசவில்லை, அமைதியானாள்.

“அதியன்! என் அம்மா உங்க வீடு மாதிரி இல்லை உண்மையில் நல்லவங்க. எனக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சு இருக்குனு சந்தோஷமா இருக்காங்க. அதை நீங்க மெயின்டைன் பண்ணுங்க..”

“ஏன் நீ மட்டும் என் தாத்தா கிட்ட அப்படி மெயின்டைன் பண்ணியா…?” என்று அவளை ஆஃப் செய்தான்.

வீடு வர, பீவி எழுந்து வந்து வரவேற்றார்.

“ஸமா! வாடா நல்லா இருக்கியா…? வாங்க தம்பி” என்று அழகாக தமிழ் பேசினார்.

அதியனுக்கு ஆச்சிரியம். ஸனா அம்மாவும் நல்லா தமிழ் பேசுறாங்களே என.

இருவரும் உள்ளே செல்ல, பீவி அதியனிடம் நன்குப் பேசினார்.

அதியனுக்கு அவரை அவமானப்படுத்த மனம் வரவில்லை.

அவனும் சாதரணமாக பேசினான்.

ஸனா அவர்கள் இருவரையும் தனியாக விட்டு தன் அறைக்குள் சென்றாள்.

“தம்பி! எனக்கு இப்ப தான் நிம்மதியா இருக்கு அவ வாழ்க்கை பாலைவனமா போயிடுமோனு பயந்துட்டு இருந்தேன். நல்ல வேளை நீங்க வந்தீங்க.. அஜி சொன்னா உங்க வீட்டில் உள்ளவங்களுக்கு தான் விருப்பம் இல்லைனு. நீங்க ஸனாவை பத்திரமா பாத்துக்கோங்க. உங்களை பாத்ததும் எனக்கு நிம்மதியான சந்தோஷம் நல்ல பிள்ளையா தெரியுறீங்க” என்று புகழ்ந்தார்.

அதியனுக்கு புரிந்தது ஒன்று. பீவி, ஸனாவும்  நானும் ஆத்மார்த்த தம்பதி, என் வீட்டில் உள்ளவர்கள் தான் எதிரி என்று நினைக்கிறார். அப்படி நம்ப வச்சு இருக்காங்க அஜி, ஸனா என்று உணர்ந்தான்.

‘ஆக! ஸனா அவள் அம்மாவையும் ஏமாத்திட்டு இருக்காள், நான் தாலிக் கட்டாம….? இவங்களை போய் நம்ம எப்படி வருத்தமடைய செய்வது’ என பொறுமையாக பேசினான் அவரிடம்..

அவரோ ஸனா அப்பா இறந்தது, ஸனா சினிமாவிற்கு நடிக்க வந்தது, ஸமர், நஸ்ரின் என அனைத்தையும் கடகடவென்று ஒப்பித்தார்.

அதியனுக்குமே ஸனா கதை பாவமாக தான் இருந்தது.

ஆனால்…? இவன் விஷயத்தில் தப்பாக அல்லவா முடிவு எடுத்துட்டாள்.. என நினைத்தான்.

நேரமாகியது, அதியன்”சரி! நான் கிளம்புறேன். ஸனா கிட்ட சொல்லிட்டுப் போறேன்” என்று அவள் அறை நோக்கி நடந்தான்.

அங்கு அஜியும், ஸனாவும் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது நுழையும் போது.

“ஸனா! அதான் ரெஜிஸ்டர் மேரஜ் முடிஞ்சுட்டே அப்புறம் என்ன…? டோன்ட் வொரி” என்றாள் அஜி.

“அதான் எப்படினு எனக்கு தெரியலை அஜி…?” என்று வாயிலில் நின்றான் அதியன்.

அஜி அதிர்ச்சியாகவில்லை.. ஆனால் ஸனா அதிர்ச்சி ஆனாள்.

“வாங்க அதியன். அது என்ன பெரிய விஷயமா…? உங்க கையெழுத்து இருந்தா போததா..?” என்றாள் அலட்சியமாக அஜி.

ஸனா”அஜி!” என்றாள்.

“இரு ஸனா!  தெரியட்டும்..” என்றவள்,

“ஆமா அதியன்! ஒரு நாள் அச்சுவும் நீங்களும் ரெஜிஸ்டர் ஆபிஸ் வந்தீங்கள. யாரோ ஒருவருக்கு ரெஜிஸ்டர் சாட்சி கையெழுத்துப் போட. அது யாருக்கோ இல்லை உங்களுக்கும் தான்.”

அதிர்ச்சியாய் அதியன்”அப்ப அச்சுக்கு…?”

“தெரியும். நான் தான் அழைச்சுட்டு வர சொன்னேன், உங்க ப்ரண்ட் போனில் இருந்து தான் ஸனா நம்பர் எடுத்தீங்க..? அதான் அச்சுவை உங்களுக்கே தெரியாம செய்ய சொன்னேன்…”

“அச்சு!” என்று கோபமானவன்.. திரும்பி வேகமாக சென்றான் வெளியில்..

நல்ல வேளை பீவி இல்லை ஹாலில்..

அதியனவள் அடுத்து..

Advertisement