Advertisement

“நீ வரலைனாலும் நான் போய் என் பொண்ணை பாத்துட்டு தான் வருவேன்” என்றார் பீவி, ஸனாவின் அம்மா.

“என்ன பேசுறீங்க…? அவ எவனோ தாலிக் கட்டிட்டானு போலிஸ் ஸ்டேசனில் பஞ்சாயத்து வச்சு அவன் வீட்டுக்குள் போய் இருக்கா, அங்க போய் நம்மளும் அசிங்கப்படுனுமா, நீங்க போக கூடாது..” என்றான் அவன் அண்ணன் ஸமர்.

“அவ வாழ்க்கைக்காக தானே போராடினா, அதுக்கு என்ன ஸமர்….? எப்படியோ வாழ்க்கை கிடைச்சுட்டுல” என்றார் தாய்.

“என்ன வாழ்க்கை கிடைச்சு இருக்கு, இது ஒரு வாழ்க்கையா, எல்லாரையும் போலிஸ் ஸ்டேசன் வர வச்சு மிரட்டி வீட்டுக்குள்ள போறது. அவளை மதிப்பாங்களா…? ரெண்டு தடவை போன மாதிரி விட வேண்டியது தானே, அப்படி என்ன இவன் மன்மதன்” என்றாள் நஸ்ரின்.

“நீயும் ஒரு பொண்ணு தானே, அவ வாழ்க்கை நல்லப்படியா அமைஞ்சுதுனு நிம்மதியா இருக்கேன் ஆனா உனக்கு அது கூட பொறுக்கலையா..?” என சீறினார் பீவி.

“உங்க பொண்ணு மாதிரி இவரை நான் மூனாவதா கட்டிக்கலை” என்றாள் நஸ்ரின் நக்கலாக.

“உன் புருசன் ஆம்பளையா சம்பாரிச்சு இருந்தா ஏன் என் பொண்ணு அந்த நரகத்துக்குள் போய் தொலைஞ்சா. அவ சம்பாரிச்சதை தான் இவன் வாங்கி அங்கங்க உங்க பேரில் எழுதி பத்திரப்படுத்துறீங்கள, அப்ப மட்டும் அவ ஒன்னு, இரண்டு, மூன்னு போறது கசக்கலையா….?”

“அம்மா! நீங்க ஏன் தேவை இல்லாம பேசுறீங்க. ஸனா இப்ப போய் இருக்க வீட்டிற்கு எல்லாம் நம்ம போனா நல்லா இருக்காது, அவர்களை போலிஸ் ஸ்டேசன் வரை கூப்புட்டு அசிங்கப்படுத்தி இருக்கா, நம்ம போனா வரவேற்பாங்கானு நினைக்குறீங்களா..?” என்றான் ஸமர்.

“அதுக்காக போகாம இருக்க முடியுமா…? நம்ம தான் அவளுக்கு குடும்பம்..”

“வெயிட் பண்ணுங்க போகலாம்..” என்றான் அவன்.

“நீ வர வேண்டாம், நான் போறேன். டிக்கெட் போடு” என்றார் தாய்.

நஸ்ரின்”ஏன் உங்க பொண்ணு டிக்கெட் போட்டு அனுப்புவா, போய் பாத்துட்டு வாங்க…”

“ஏன் போட மாட்டா, நான் சொன்னா உடனே போட்டு அனுப்புவா, உன்னைய நம்பி நான் இல்லை நான் அப்பவே அவ கிட்ட சொன்னேன், இது எல்லாம் பணம் திண்ணிக் கூட்டம் ஆபத்துக்கு வராதுனு அதே மாதிரி தானே இப்ப உங்க முகத்தை காமிச்சுட்டீங்க. அவ மூலமா வருமானம் இனி வராதுனு ஒதுக்கப் பாக்குறீங்க அதானே…?” என கத்தினார் பீவி கோபமாக..

“ஏங்க உங்க அம்மா பேசுறது அதிகமா இருக்கு, உங்க தங்கச்சியை பாக்கப் போனா அங்கயே இருக்க சொல்லுங்க இனி இங்க வரக்கூடாது..”

“நீ யாரு சொல்றதுக்கு, இது என் வீடு, என் பொண்ணு வீடு அவ சம்பாரிச்சது. நீங்க தான் வெளியில் போகனும்..”

“இது என் புருசன் பேரில் இருக்கும் வீடு, எனக்கும், என் பிள்ளைக்கும் மட்டும் தான் உரிமை.. வேற யாருக்கும் பங்கு இல்லை”

பீவி ஸமரின் சட்டையைப் பிடித்துக் கேட்டார்”டேய்! இது அநியாயம் அவ உன் தங்கச்சிடா, அவ வாழ்க்கையை இழந்து சம்பாரிச்சது. உன் பொண்டாட்டி பேசுறா அமைதியா நிக்குற…”

“அம்மா! அவ சொல்றது உண்மை தான் இந்த வீடு என் பேரில் இருப்பது ஸனாக்கும் தெரியும். அவ தான் என் பேரில் மாத்தினது, உங்களுக்கு தெரிய வேண்டாமுனு சொன்னா, அவளை ஒன்னும் நான் ஏமாத்தலை அவளே கொடுத்தது தான். அதுக்காக நான் அவளை விட்டுட மாட்டேன். நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க, அவளுக்காக ஒரு இடத்தை பேசிட்டு இருக்கேன் பணம் டிரான்ஸ்பெர் பண்ணியதும் அவ பேருக்கு மாத்திடலாம். நீங்க அஜி கிட்ட சொல்லி நான் சொல்லும் பணத்தை அனுப்ப சொல்லுங்க…”

“ஏன் அதையும் உன் பொண்டாட்டிப் பேருக்கு மாத்தவா. ஒன்னும் தேவையில்லை அவ வாழ்க்கை அங்க தான் அவ பாத்துப்பா நானும் போறேன்” என்று கிளம்பினார் பீவி..

அஜி கிட்ட  டிக்கெட் போட சொல்லி சென்னைக்கு புறப்பட்டார்.

***

விறலி விண்மீனாய் திரிந்தவள் இன்று விதியின் வழியில் நின்றாள்..

காலையில் அவள் வீட்டில் சாப்பிட்டது, மதியம் முதல் எதுவும் சாப்பிடவில்லை.

மாலை ஆனது, அதியனும் வீட்டில் இல்லை.

அறைக்குள்ளே இருந்தாள் ஸனா. அதியனிற்காக அங்கு வைக்கப்பட்டு இருந்த தண்ணீரை மட்டுமே குடித்தாள்.

இரவு உணவிற்கு அனைவரும் டேபிளுக்கு வந்தனர்.

அதியன் வந்ததும் தன் அறைக்குள் செல்ல அங்கு ஸனா பெட்டில் அமர்ந்து போன் பேசிக்கொண்டு இருந்தாள்.

அவனோ உடைமாற்றி விட்டு இரவு உணவு மேடைக்குச் சென்றான்.

“ஸனா! இது தான் நடந்திருக்கு, அம்மா வராங்க காலையில், என் கிட்ட பேசிட்டு ஃபிளைட் ஏறிட்டாங்க, உன்னை காலையில் வந்துப் பாக்குறதா சொன்னாங்க”

“அஜி! அம்மா எதுக்கு அண்ணன், அண்ணி கிட்ட சண்டைப் போட்டு வராங்க…?”

“ஸனா! அவங்க பேசினது அப்படி, நீ அவங்களை நம்பினது போதும் கண்ணை முழிச்சுப் பாரு”

“அஜி! நான் கண்ணை முழிச்சு என்ன ஆகப் போது, என்னோட வாழ்க்கை அப்படி! அண்ணி பேசுறதில் உண்மை தானே இருக்கு, என் அண்ணன் வந்து ஏன் அசிங்கப்படனும். யாரும் இங்க வர வேணாம். அம்மாவை அழைச்சுட்டு வந்து வீட்டில் தங்க வை, நீயும், ராணியும் ஹெல்ப் பண்ணுங்க. நான் வரேன் பார்க்க..” என்றாள் ஸனா.

“ம்ம்ம்! ஏன்டி..?”

“உனக்கே தெரியும் இங்க நிலை. அம்மா பாவம். அவங்களுக்கு இங்க நடப்பது தெரிய வேண்டாம்..”

“ஓகே! நான் பாத்துக்குறேன். அப்புறம் நீ சைன் பண்ண மூவிஸ் ஸூட்டிங் இருக்கே..?”

“ம்ம்ம்! கண்டிப்பா, அது என் வேலை. நாளைக்கு காலையில் ஷெடியுல் அனுப்பு..” என்று போனை வைத்தாள்.

***

அனைவரும் உணவு மேடையில் அமர்ந்து இரவு சாப்பாட்டை ஆரம்பித்தனர்.

ஸனா அதியனின் அறையில் இருந்தாள்.

அங்கு பாரி, இளம் பெண்களுக்கு மட்டுமே ஸனாவின் நினைவு இருந்தது.

அதியனுக்கு மனதில் இது அவளாக ஏற்படுத்திக் கொண்டது என்ற கோபம் மட்டுமே இருந்தது.

பாரி மெதுவாக”அண்ணா! அண்ணி மதியத்தில் இருந்து சாப்பிடவே இல்லை, பாவம் நீயாச்சு தாத்தா கிட்டப் பேசு” என்றான்.

“உனக்கு கஷ்டமா இருந்தா நீயே பேசு…”

“நீ தானே தாலிக் கட்டின..?”

“அதை நான் கட்டலை..”

“ஆமா! நம்பிட்டேன், இப்ப அண்ணி இருப்பது  இந்த வீட்டில். உனக்கு புடிக்குதோ இல்லை புடிக்கலையோ மனிதாபமான அடிப்படையில் நடந்துக்கோ அண்ணா” என்றான் பாரி.

“தாத்தா மீறி நான் ஒன்னும் செய்ய முடியாது” என்று சாப்பாட்டைத் தொடர்ந்தான், அவனுக்குமே சாப்பாடு இறங்கலை.

போதும் என்று எழப்போக, “அதியா! ஏன் ஒழுங்கா சாப்பிடலை…?” என்று கேட்டார் நவநீதம்.

“இல்ல தாத்தா! நைட் தானே இது போதும்..”

“ம்ம்ம்!”

***

ஸனாவிற்கு பசித் தாங்கவில்லை, அவளுக்கு சமையல் என்பது தெரியாத ஒன்று.

பதினேழு வயது முதல் நடிக்க சென்றவள்.

இப்ப போய் சமைப்பது முடியாத ஒன்று, இனி வேணா முயற்சிக்கலாம்.

இந்த நைட் என்ன செய்வது…? என்று யோசித்தாள்.

அதியன் அறைக்குள் வந்தான்.

“ஹலோ!” என்றாள் ஸனா.

அதியன் திரும்பவில்லை, அவள் ஏதோ போனில் பேசுகிறாள் என்றண்ணி.

“மிஸ்டர் அதியன் நவநீத ராகவன், உங்களை தான் கூப்புடுறேன்…”

திரும்பியவன்”ஹலோனா எனக்கு எப்படி தெரியும்…? என்ன சொல்லு…”

“ஐ வான்ட் ஃபுட்.. வெரி ஹங்கிரி..”

“அதான் தாத்தா சமைச்சு சாப்பிட பர்மிசன் கொடுத்துட்டாரே. போய் சமைச்சு சாப்பிடு…”

“எனக்கு சமைக்கத் தெரியாது..”

“அதுக்கு நான் என்ன செய்ய முடியும்..”

“உங்களை நான் சமைச்சு தர சொல்லலை, அப்படி கொடுத்து சாப்பிட்டா அது பாவம்.. எனக்கு போய் ஹோட்டலில் வாங்கிட்டு வாங்க..”

“வாட்! ஏன் நான் வாங்கிட்டு வந்துக் கொடுத்தா பாவம் இல்லையா…?”

“நோ! என் பணத்தில் வாங்கப்போற ஜஸ்ட் டெலிவெரி பாய் தானே நீங்க…” என்றாள் தெனாவட்டாக.

அவளை முறைத்தவன்”இப்ப எல்லாம் போக முடியாது, தாத்தா அங்க இருக்கார்..” என்று சென்று பால்கனியில் அமர்ந்தான்.

“ஏன்..? என் வீட்டுக்கு அன்னைக்கு மிட் நைட்ல வந்தப்ப தாத்தா வீட்டீல் இல்லையா, இல்லை தெரியாத…?”

“ஸனா!” என்றான் வேகமாக.

“எஸ்! இன்னைக்கு தெரிஞ்சுப் போங்க எனக்காக வாங்கனு சொல்லிட்டு.”

“நோ வே”

“ஓகே! நான் போறேன். அது கூட நல்லது தான். நான் நேரா ஷெரடான் ஹோட்டல் போவேன். இப்ப இருக்க மூடில் ரெட் வையின் வாங்கி ரிலாக்ஸா குடிப்பேன், அப்புறம் தேவையானதை வாங்கி சாப்பிட்டு பொறுமையா விடியற் காலையில் வரேன்…” என்றாள் அசால்டாக.

“ஸனா! இந்த வீட்டில் அப்படி எல்லாம் செய்யாத…”

“ஏன் நீங்க செய்ய மாட்டீங்களா…? ஆம்பளை செய்யலாம். அப்படி தானே…?”

“இப்ப என்ன உனக்கு சாப்பாடு தானே, வாங்கிட்டு வரேன்..” என்று எழுந்து சென்றான் வெளியில்.

ஸனா உதட்டு ஓரத்தில் நக்கலாக சிரித்தாள்.

***

அதியன் கிளம்பி கீழ வந்தான். அங்கு  ஹாலில் அமர்ந்திருந்த தாத்தாவைப் பார்க்க.. என்ன சொல்வதுனு யோசித்தான்..

அவனை கண்ட பாண்டி சித்தப்பா”என்ன

அதியா எங்க கிளம்பிட்ட..?” எனக் கேட்டார்.

“ஒரு ப்ரண்டை பாக்கப் போறேன் சித்தப்பா”

“ம்ம்ம்! சரி”

“இந்த நேரத்தில் எந்த ப்ரண்ட்…?” என்றார் தாத்தா..

சிறிது தடுமாறியவன்..

“பாரி! நீயும் வரேனு சொன்ன, இன்னும் ரெடியாகலையா…?” என்றான்.

அவனோ முழித்து பிறகு’ஏதோ பிளான் போடுறான்’ என எழுந்து, “இதோ வரேன், இந்த வாண்டுங்க தொல்லை தாங்கலை” என்று கிளம்ப சென்றான்.

நவநீ தான் கேட்டதையே மறந்து பரணியோடு பேச ஆரம்பித்தார்.

பொதுவாக பரணி ஒன்பது மணி வரை அந்த வீட்டில் தான் இருப்பார்.

அவரோட வீடும் பக்கத்தில் தான், நடக்கும் தூரம்.

***

“அண்ணா! இது என்ன புது பிளான், நான் எப்ப வரேனு சொன்னேன்” என்று கேட்டுக் கொண்டே காரில் ஏறினான்.

“எனக்கே தெரியாது அது, தாத்தா கேள்விக் கேட்டதும் உன்னை தான் பார்த்தேன் சட்டுனு சொல்லிட்டேன்..”

“ஓ! சரி எங்கப் போறீங்க…?”

“ம்ம்ம்! ஸனா மேடமுக்கு சாப்பாடு வாங்க.”

“ஓ! ஓஹோ! சரி சரி”

“டேய்! ரொம்ப ஓ ஓஹோ போடாத, அவ

மிரட்டுறா என்னை..” என்று ஸனா பேசியதைக் கூறினான்.

பயங்கரமாக சிரித்த பாரி”பின்ன, நீ சும்மா போய் வாங்கிட்டு வானு சொன்னா வாங்கிட்டு வருவீயா..?”

அவனை நாலு போட்ட அதியன், ஹோட்டல் முன் வண்டியை நிறுத்தி..

“இதுக்கு தான் உன்னைய அழைச்சுட்டு வந்தேன், இந்தா அவ நம்பர் போன் பண்ணி என்ன வேணுமுனு கேட்டு, போய் வாங்கிட்டு வா, மேடம் பே பண்ணுவாங்க” என்று ஸனாவின் போன் நம்பரை நீட்டினான்.

“டெலிவெரி பாய்க்கு ஒரு அசிட்டென்ட் இது கொடுமைல..” என்று கூறி எஸ்கேப் ஆனான் பாரி.

***

வீட்டிற்கு திரும்பிய போது பரணி சரியாக வெளியில் வந்தார் தன் வீட்டிற்கு போக.

அதியனும் பாரியும் வர”என்ன தம்பி ப்ரண்டை பாத்தாச்சா.?”

“ஓ! வாங்கியாச்சே” என்றான் பாரி.

“என்ன வாங்கியாச்சு….?”

அதியன் பாரியை முறைக்க..

“அங்கிள்! தாத்தா எங்க இருக்கார்..?”

“மணி ஒன்பது ஆச்சுல அவர் ரூமூக்கு போயிட்டார்.. ஏன்..?”

“ஹப்பாட! ஸனா அண்ணிக்கு சாப்பாடு வாங்கப் போனோம்.. அதான்”

“ஓ! நல்லது அதியன்  தம்பி, நான் கூட நினைச்சேன் பாவம் அந்த பொண்ணு சாப்பிடாம இருக்குனு. சீக்கிரம் போங்க.”

“அங்கிள்! நான் ஒன்னும் பாசத்தில் வாங்கப் போகலை. நேரம் எல்லாம்.” என்று பாரியின் கையில் இருந்த கவரை பிடுங்கிட்டு  வேகமாக சென்றான் அதியன்.

பாரி சிரிக்க.. பரணி”பாவம் தம்பி இவர். தாத்தா, ஸனா பொண்ணு ரெண்டுப் பேருக்கும் நடுவில் மாட்டி கிட்டார்.”

என்றார்.

“அதுக்கு தாலி கட்டாம இருந்திருக்கனும்..”

“அதியன் தம்பிக்கு அத்தனை தைரியம் இல்லை பாரி தம்பி, ஆனா ஏதோ சிக்கிட்டார் போல ஸனா கிட்ட. அந்த பொண்ணு நல்ல குணம். இவரு விளையாட்டா செய்தது வினையா ஆகிட்டு, பாப்போம் இது எங்க போய் முடியுதுனு. நீங்க போய் தூங்குங்க. நீங்களும் கவனமா இருங்க இப்படி போய் எங்கையும் மாட்டிடமா…” என்று அவர் நடந்தார்.

பாரி மனதில்’ஆமா! நான் தாலி கட்டப் போறேன்.. அது கனவில் தான் நடக்கும் போல. அப்படி மட்டும் நடந்தா குழந்தையோடு தான் அழைச்சுட்டு வருவேன் அப்ப தான் தாத்தா ஆறுமாச அக்ரீமென்ட் போட முடியாது.. ஹிஹிஹிஹஹ’ என்று ஓடினான் உள்ளே..

***

ஸனா சாப்பிட்டு முடித்து படுக்க தயார் ஆனாள்..

அதியனும் தூங்க பெட்டுக்கு வந்தான்..

“ஒரு நிமிஷம்! நமக்கு என்னா இன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட்டா, என்னமோ ஹாய வரீங்க பெட்டுக்கு தூங்க, போங்க போய் கீழப் படுங்க…”

“வாட்! நான் கீழப் படுக்கனுமா..?”

“பின்ன உங்க தாத்தா என்னைய கிச்சன் , ஹாலில் படுக்க சொன்னார். அதுக்கு ஃபனிஷ்மென்ட் உங்களுக்கு தானே தர சொன்னீங்க. சோ கீழப்படுங்க, உங்களை வெளியில் படுக்க சொல்லலாம் தான். ஆனா அது சரிவராது ஏனா புருசன் பொண்டாட்டினு நான் வெளியில் காட்டனும் சோ இங்கயே தூங்குங்க..” என்று ஒரு தலையணையை தூக்கிப் போட்டாள்.

பெட்டில் குறுக்காகப் படுத்து தூங்க ஆரம்பித்தாள்.

அதியனிற்கு கோபம் வந்தது, ஆனால் அதை வெளிப்படுத்த முடியாமல் பெட்டில் கிடந்த ஒரு கில்டை வேகமாக உருவினான், ஸனா அப்படியே உருண்டாள் அதில்,

“ஹேய்!”என்றபடி.

கில்டு கையில் வர”நன்றிங்க மேடம்” என்று கீழேப் போட்டு படுத்தான்.

ஸனா கடுப்பாகி தலையணைகளை இருப் பக்கமும் அடுக்கி வசதியாகப் படுத்தாள்.

சட்டென்று எழுந்தவள்”நாளைக்கு என் அம்மா என் வீட்டிற்கு வராங்க. நம்ம போறோம் பாக்க ரெடியா இருங்க..”

“இங்க பாரு இப்படி எல்லாம் உன் இஷ்டத்திற்கு வர முடியாது. நீ போய் பாத்துக்க உன் அம்மாவை. நான் ஒன்னும் உனக்கு தாலிக் கட்டலை. மறுவீட்டுக்குப் போக” என்று திரும்பி கண்களை மூடினான்..

ஸனா மனதில்’ஓ! பாப்போம் நாளைக்கு..’ என்று தன் தூக்கத்தைத் தொடர்ந்தாள்.

அதியனவள் அடுத்து..

Advertisement