Advertisement

தீண்டல்  – 9
          முனீஸ்வரனின் குடும்பம் கிளம்பி சென்று அரைமணி நேரம் கழித்தே வசீகரனின் குடும்பம் மிக சாவாகாசமாக கிளம்பினார்கள்.
களைப்புடன் அனைவரும் உறங்கிக்கொண்டே வர வேன் செல்லும் வேகம் குறைய அதில் கண்விழித்தார் குகன்.
“என்னாச்சுப்பா?…” என ட்ரைவரை கேட்க,
“ஏதோ ஆக்சிடென்ட் ஸார். அதான் வண்டியேல்லாம் மெதுவா போகுது…” 
“சரி பார்த்து போங்க….”
“யாரோ கோவிலுக்கு வந்தவங்க தான் போல…” என சொல்லவும் ஜன்னல் ஓரமாய் தலை சாய்ந்திருந்த வசீகரன் கண்விழித்து பார்த்தான். 
விபத்து நடந்த பகுதியை நெருங்கி தாண்டி செல்லும் வரை பாவப்பட்டு பார்த்திருந்தவனின் மனது பதைபதைத்து போனது.
முதலில் அந்த காரை கண்டதும் லேசாய் தோன்றிய சந்தேகம் காரின் வெளியே கண்ணாடி சிதறல்களுக்கு நடுவே சிக்கிக்கொண்டு காற்றில் பறந்துகொண்டிருந்த அந்த சிவப்புநிறத்தினாலான சிறு துண்டுதுணியையும், துப்பட்டாவையும் பார்த்ததும் உறுதியானது.
“ஸ்டாப்…” என கத்தியவன் வேகமாய் வேனில் இருந்து முன்னால் சென்று வேனை நிறுத்தும் கதவை திறக்க மற்றவர்கள் அவனின் செய்கையில் அதிர்ந்துபோனார்கள்.
“வசீ…” என்ற எவரின் குரலும் அவனை அடையவே இல்லை. கதவை திறந்துகொண்டு கார் கிடந்த இடத்தை நோக்கி ஓட மற்றவர்களும் அவனின் பின்னே ஓடினார்கள்.
அந்த காரை பார்த்ததுமே புரிந்துபோனது அது முனீஸ்வரனின் கார் என்று. அதில் சந்நிதியின் உடையின் சிறு பகுதி கிழிந்து தொங்க இவனிதயம் அதிகப்படியாக துடிக்க முயன்று தன்னை தைரியமாக்கிக்கொண்டவன் அருகில் நின்றவர்களிடம்,
“இங்க இந்த கார்ல வந்தவங்க…” குரல் கமற கேட்டான்.
“உங்களுக்கு வேண்டப்பட்டவங்களா தம்பி?…”
“ஆமா, ரிலேடிவ்…” என்றான் வசீகரன். அதற்குள் இவனை குகனும் சூர்யாவும் சமீபித்துவிட,
“வண்டில வந்த ஒருத்தரும் நினைப்புலையே இல்லைங்க. ஆனா உசுரு இருக்கு. ஜி.ஹெச் கொண்டு போய்ருக்காங்க….” என்று சொல்லி செல்ல காருக்குள் அங்காங்கே ரத்த சிதறல்கள். 
பார்த்தவனின் நெஞ்சம் தவிக்க அன்றைய தினம் அந்த நொடி தன் மகனை வேறொரு பரிமாணத்தில் பார்த்தார் குகன்.
“இன்னும் என்ன வசீ? வா போகலாம். சூர்யா ஜி.ஹெச் போலாம்…” என அம்பிகா வேகமாய் மகனோடு செல்ல அதையும் பார்த்தபடி நடந்தார் குகன்.
மகனின் மனதை பற்றியும், அவனின் இந்த உணர்வுக்கான தவிப்பை பற்றியும் அவருக்கு இன்னும் தெரியவேண்டியது இருந்தது. இப்போதைக்கு எதுவும் பேசவேண்டாம் என அமைதியாக இருந்தார்.
அவரை பொறுத்தவரை இதை ஒரு மனிதாபிமான செயலாக பார்க்க மகனோ இதை எதை பற்றியும் சிந்தனை இல்லாமல் சந்நிதியின் குடும்பம் என்னாகிற்றென நினைத்துக்கொண்டிருந்தான்.
“வசீ…” சூர்யா மெதுவாய் அழைக்க,
“ஐ ஆம் ஆல்ரைட். ப்ளீஸ்…” இதற்கு மேல் பேசாதே என்பதை போல அவனின் பாவம் இருக்க யாரும் எதுவும் பேசவில்லை.  அதற்குள் ஜி.ஹெச் வந்துவிட அவர்கள் தூத்துக்குடிக்கு அனுப்பிவிட்டதாக சொல்ல மனதளவில் துவண்டு போனான்.
“வசீ இப்ப எதுக்கு இப்படி உட்கார்ந்திருக்க? இங்க முடியலைன்னு அங்க கொண்டு போய்ருக்காங்க. அவ்வளவு தானே?…” அம்பிகா அதட்டலாய் சொன்னாலும் அவரும் சஞ்சலத்துடன் தான் இருந்தார்.
அப்பொழுது தான் வசீகரனின் கையில் இருந்த அந்த துணியை பார்த்தார். சந்நிதியின் துப்பட்டா அவனின் கைகளுக்குள் சுருண்டு அடங்கி இருந்தது.
“என்ன வசீ?…” தாளமாட்டாமல் தாய் கேட்க,
“அம்மா, நான் ஒன்னும் உடைஞ்சு போய்டலை. ப்ளீஸ்…” மீண்டும் அழுத்தமாய் சொல்லியவன் கண்களை மூடிக்கொள்ள தன் உணர்வுகளை அடக்கிகொண்டிருக்கிறான் என பார்ப்பவர்களுக்கு புரிந்துபோனது.
தூத்துக்குடி ஜி.ஹெச் செல்லும் வரையிலும் ஒருவரை ஒருவர் பார்க்கவோ பேசவோ இல்லை. அம்பிகாவின் மனதில் வேண்டுதல்கள் இடைவிடாது ஒழிக்க, இதழ்கள் ஏதோ ஒரு மந்திரத்தை முனுமுனுத்துக்கொண்டிருந்தது.
ஹாஸ்பிட்டல் சென்றதும் நேராக கேட்டுவிட்டு உள்ளே நுழைய அதற்குள் சூர்யா சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவரை பற்றிய விவரங்களையும் சேகரிக்க ஆரம்பித்தான்.
குகனுக்குமே யாருக்கும் எதுவும் ஆகிவிடக்கூடாதென்னும் எண்ணம். ஆனாலும் காட்டிக்கொள்ளாமல் ஒரு பார்வையாளராக இருந்தார்.
அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை ஆரம்பித்திருக்க சிலநிமிடங்களில் வெளியே வந்த டாக்டரை பார்க்க வந்தவர் இவர்களை அமைதியாக சொல்லிவிட்டு விஷயத்தை தெரிவித்தார்.
முனீஸ்வரன், ட்ரைவருக்கு பலமான அடி என்றும் இரவை கடந்தால் தான் எதுவும் சொல்லமுடியும் என்றும், பார்கவிக்கு வயிற்றில் கம்பி  குத்தியதால் கர்பப்பையை எடுக்கவேண்டும் என்றம் சொல்ல இவர்கள் நிலைகுலைந்து போயினர்.
“டாக்டர் அந்த பொண்ணுங்க…” அனுபமா கேட்க எதுவாகவும் இருக்கட்டும், அவள் இருந்தால் போதும் என்ற நிலைக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டு அவரை பார்த்தான்.
சந்தியாவிற்கு தலையில் அடி, கை, காலில் கீறல்கள் என அந்தளவிற்கு வேறு பெரிதாக காயம் எதுவும் இல்லை. ஆனால் சந்நிதிக்கு ஒரு காலிலும், கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக சொல்ல உணர்வின்றி கேட்டுக்கொண்டிருந்தவன் மனம் ஏதோ ஒரு வகையில் சமன்பட்டது.
“வேற எதுவும் இல்லையே? நல்லா செக் பண்ணுணீங்களா?…” 
அவன் கேட்டதை பார்த்த மற்றவர்களுக்கு இவனுக்கு ஒன்றுமே இல்லையா? சாதாரணமாக கேட்கிறானே என தோன்றியது.
“இப்போதைக்கு வேற எதுவும் இல்லை…” 
“நாங்க ப்ரைவேட் ஹாஸ்பிட்டல் பார்க்கலாம்னு…” வசீகரன் முடிப்பதற்குள்,
“பர்ஸ்ட் எய்ட் முடிச்சுட்டோம். அது உங்க ரிஸ்க். பட் இங்கையுமே பெஸ்ட் ட்ரீட்மென்ட் தான் குடுத்திட்டிருக்கோம்…” என்றவர் பார்கவிக்கு உடனடியாக ஆபரேஷன் செய்யவேண்டும் என சொல்ல அதற்கும் ஏற்பாடாகியது.
“வா போய் அந்த பொண்ணுங்கள பார்த்துட்டு வருவோம்…” அம்பிகா சொல்ல,
“ஒரு போன் பண்ணிட்டு வரேன்ம்மா…” என்றவன் புகழுக்கு அழைத்தான்.
“இப்பதான் உங்களுக்கு நானே கூப்பிடனும்னு நினைச்சேன். நீங்களே கூப்பிட்டாச்சு…” 
“புகழ் உங்க வீட்ல யாரெல்லாம் இருக்கீங்க?…” அவனின் குரலில் தெரிந்த தீவிரத்தில்,
“என்னாச்சு? எதுவும் பிரச்சனையா?…” 
“நீங்களும் உங்க அப்பாவும் இங்க வர முடியுமா? முடிஞ்சா உங்கம்மாவோட…”
“எங்க வரனும்? புரியுற மாதிரி சொல்லுங்களேன்…”
“ஓஹ் ஷிட், ஸாரி, ஸாரி. கொஞ்சம் பதட்டபடாம கேளுங்க. தூத்துக்குடி ஜி.ஹெச் வரனும். அதுவும் உடனே. உங்க சித்தப்பா வந்த கார் ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு…”
“வாட்? யாருக்கு என்னாச்சு?…” புகளின் பதட்டம் அங்கே வீட்டில் இருந்தவர்களையும் தோற்ற தங்களுடைய கடைக்கு கிளம்பிக்கொண்டிருந்த நீதிமாணிக்கம் என்னவோ என பதறி மகனிடம் வந்தார்.
“புகழ், டென்ஷன் ஆகி அங்க இருக்கிறவங்களையும் டென்ஷன் படுத்தாதீங்க. அன்டர்ஸ்டேன்ட்…” என அதட்டியவன்,
“அவங்கக்கிட்ட சின்ன ஆக்ஸிடென்ட்ன்னு மட்டும் சொல்லுங்க. சொல்லி இப்போ நீங்க உடனே கிளம்புங்க. ஆனா இங்க சின்னது இல்லை. புரியுதா? இதை அவங்கட்ட சொல்ல வேண்டாம். கிளம்பவும் சொல்லுங்க. நான் திரும்ப உங்களுக்கு பேசறேன்…” என்று சொல்லி வைத்துவிட,
“ஏன் வசீ அவங்களை கலவரப்படுத்தனுமா? என்னவோன்னு பதறிட்டே வருவாங்கள்ள…” அம்பிகா சொல்ல,
“ம்மா, இப்போதைக்கு லேசான விஷயம்னு சொன்னா தான் கொஞ்சம் அமைதியா வருவாங்க. இங்க உள்ள சுட்சுவேஷன் சொன்னோம்னா கஷ்டமில்லையா? அவங்களும் வயசானவங்க தானே? வரவும் சொல்லிப்போம். அதுக்குள்ளே இங்க நிலைமை கொஞ்சம் சரியாகிடும்…”
“வசீ வா போய் பாப்போம்…” என அனு அவனை அழைக்க,
“நீங்க போய்ட்டு வாங்க. நான் வரேன்…” என்று அங்கே சேரில் அமர்ந்துகொண்டான்.
“நான் இருக்கேன்ம்மா. நீங்க எல்லாரும் போய்ட்டு வாங்க…”
“டேய் நான் என்ன சின்னப்பிள்ளையா? தொலைஞ்சிட மாட்டேன். நீ போய் பார்த்துட்டு வா…” என முறைப்பாய் சொல்ல,
“இவன் அடங்கமாட்டான்…” என்ற ரவி மற்றவர்களை அழைத்து செல்ல வசீகரனுக்கு அந்த தனிமை தேவைப்பட்டது.
சென்றுவிட்டு சிறிது நேரம் சென்று வர அவர்களை என்னவென்று பார்வையாலே கேட்க,
“சந்தியாவையும், சந்நிதியையும் ஒரே ரூம்ல தான் அட்மிட் பண்ணியிருக்காங்க. சந்நிதிக்கு காலுக்கும் கைக்கும் கட்டு போட்டிருக்காங்க. அங்க அவங்க ரெண்டு பேர் மட்டும் தான். அவங்க அம்மாக்கு ஆபரேஷன் இன்னும் முடியலை.  அப்பா, ட்ரைவர் ரெண்டு பேரையும் ஐஸியுல வச்சிருக்காங்க…” ரவி சொல்ல,
“சந்தியாவும், சந்நிதியும் மயக்கத்துல தான் இருக்காங்க. இங்க நல்லா தான் பார்த்துக்கறாங்க வசீ…” என சூர்யா சொல்ல,
“ரவி நீ அப்பாம்மாவை கூட்டிட்டு போய் இங்க பக்கத்துல எல்லாருக்கும் ரூம் எடுத்திரு. ட்ராவல்ஸ்க்கு போன் பண்ணி இன்னும் ஒரு நாள் ட்ரிப் சேர்த்துக்க சொல்லு. நாளைக்கு நாம கிளம்பினா போதும். ட்ரைவருக்கும் ஒரு ரூம் புக் பண்ணிடு. இப்ப நீங்க கிளம்புங்க. நான் இங்க இருக்கேன்…”
வேகமாய் அவன் திட்டங்களை பிறப்பிக்க குகனுக்கு இருக்கவும் மனதில்லை, கிளம்புவதற்கு அவரின் இரக்கசுபாவம் இடமளிக்கவும் இல்லை. இருதலைகொள்ளி எறும்பென பரிதவிப்பாய் மனைவியை பார்க்க கணவனை புரிந்து,
“நாம ரூம்ல போய் பேசிப்போம்…” என்றவர்,
“வசீ, நான் இங்க ஹெல்ப்க்கு…”
“ம்மா, வேணும்னா நானே உங்களை கூப்பிடறேன். இப்ப போய் லக்கேஜ் எல்லாம் ரூம்ல வச்சிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க…”  என்று விரட்டாத குறையாய் விரட்டியடிக்கத்தான் செய்தான்.
கவலையுடன் மனதே இல்லாமல் அம்பிகா இவனை திரும்பி பார்த்துக்கொண்டே செல்ல,
“ம்மா, நான் உங்களை ரூம்ல விட்டுட்டு திரும்ப வந்து இங்க இருக்கேன். ஏன் பீல் பன்றீங்க? வாங்க…” என சொல்ல அவரின் பின்னர் ஓடிவந்தான் வசீகரன்.
“ம்மா…” என வேகமாய் அவனது அவரின் முன்னால் நிற்கவும் பதறிப்போனவர்,
“என்னாச்சு? என்னாச்சு?…” என்று அவனின் கையை பிடிக்க,
“உங்ககிட்ட கோவில்ல குடுத்த பிரசாதம் ஏதாவது இருக்கா?…” என்றதும் வந்ததே கோபம் அம்பிகாவுக்கு.
“உன்னை என்னதான் செய்ய வசீ? ஒரு நிமிஷம் என்னவோன்னு ஆகிடுச்சு. பிரசாதமாம் பிரசாதம். ஆக்ஸிடென்ட் ஆகும்போது அவங்கக்கிட்ட இல்லாமலா இருந்திருக்கும். போடா…” என ஏதோ வேகத்தில் அம்பிகா சொல்லிவிட,
“ம்மா…” என்று சூர்யா சத்தமாய் பேச,
“பின்ன என்னடா, இவன் எப்ப இருந்து இப்படி ஆனான்? இது வசீயே இல்லை. இப்ப நாம இங்க இருந்து கிளம்பற வரைக்கும் கூட நல்லா தான இருந்தான்? ஒரு நிமிஷம் கூட ஆகலை நாம இங்க இருந்து நகர்ந்து. இதுல இவன் மட்டுமே பார்த்துப்பானாம்…” என்று சத்தம் போட,
“ப்ச் அபி, பேசாம இரு…” என்ற குகன் தன் சட்டை பையில் இருக்கிறதா என பார்க்க அவரிடம் இருந்தது.
“இந்தா வசீ. வச்சுக்க…” என கொடுத்தவர் அவனின் கையில் ஒரு அழுத்தம் கொடுத்துவிட்டு மனைவியை அழைத்துக்கொண்டு நடக்க,
“ஒழுங்கா இருந்து பார்த்துக்க. அந்த பொண்ணு முன்னால கண்ண கசக்கிட்டு நின்னுடாத…” என போகிற போக்கில் சொல்லிவிட்டு சென்றார் அம்பிகா.
அத்தனை இறுக்கத்திலும் தாயின் பேச்சில் முறுவல் மலர்ந்தது வசீகரனுக்கு. அந்த நிமிடம் அது தேவையாக இருந்தது அவனின் மனநிலைக்கு.
மீண்டும் வந்த ஒரு பத்துநிமிடம் போல வெளியே அமர்ந்திருந்தவன் எழுந்து சந்தியா சந்நிதி அறையில் நுழைந்தான்.
இரண்டு படுக்கைகளுக்கும் நடுவே ஒரு திரை போடப்பட்டிருக்க சந்தியாவை பார்த்துவிட்டு குகன் கொடுத்த பிரசாத பாக்கெட்டில் இருந்த விபூதியை இட்டுவிட்டான். 
சில நொடிகள் மட்டுமே அங்கே நின்றவன் திரையை விலக்கிவிட்டு சந்நிதியை பார்க்க ஒரு நொடி கண்களை மூடி தன்னுடன் பேசிய சந்நிதியை நிறுத்தினான். அவளா இவள் என்னும் அளவிற்கு முகமும் உடலும் துவண்டுபோய் இருந்தது சந்நிதிக்கு.
சில மணி நேரத்தில் இப்படி ஒரு கோரமான மாற்றத்தை அவன் எதிர்பார்க்கவே இல்லை. அங்கே இருந்த ஸ்டூலை இழுத்து போட்டு அவளருகே அமர்ந்தவன் கையில் இருந்த பிரசாத பக்கெட்டில் கை நுழைக்க விரலோடு வந்த விபூதியை பார்த்துவிட்டு ஒரு நொடி நுழைத்த கையை எடுத்துவிட்டு இன்னொரு பாக்கெட்டில் இருந்து குங்குமத்தை எடுத்தான்.

Advertisement