Advertisement

“இப்ப சந்தோஷமா உங்களுக்கு? போங்க…”  சந்நிதி பேச,
“உங்கப்பனுக்கு கொஞ்சமாவது அறிவிருந்தா இப்படி வயசுப்பொண்ண பரிகாரம் பண்ணவைக்கிறேன்னு ஊர் ஊரா கூட்டிட்டு சுத்துவாரா? இடியட்…” என்ற வசீகரனின் கத்தலில் முணுக்கென்று கண்ணீர் வந்துவிட்டது சந்தியாவின் விழிகளில் இருந்து. 
“எங்கப்பாவை மரியாதை இல்லாம பேசாதீங்க. இது எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான். நீங்க மட்டும் பிரச்சனை பண்ணாம இருந்திருந்தா எங்கக்காவுக்கு இந்த நிலைமை வந்திருக்குமா?…” அவனிடம் மெல்லிய குரலில் சண்டைக்கு பாய்பவள் போல பேசினாள் சந்நிதி. 
அவளின் விழிகளிலுமே நீர்ப்படலம் தான். ஆனாலும் வசீகரனை அப்படியே விட மனமில்லை. அவளின் கேள்வியில் உதட்டை கடித்தபடி இருவரையும் பார்த்தான்.
சந்தியா அத்தனை அழகு வாய்த்த பெண். இப்படி ஒரு தகப்பனின் மகளாக பிறந்து இத்தனை துன்பங்களை சுமக்கிறாள்.
“இங்க பாரு சந்தியா மனசுக்கு பிடிச்சவனை கல்யாணம் செஞ்சுக்கறது தப்பில்லை. அதை ஏன் உங்கப்பா கொலை குற்றமா பார்க்கறார்? அப்போ உன் மேல நம்பிக்கை இல்லைன்னு தானே அர்த்தம்?…” கவலையுடன் அவளிடம் பேச,
“போற இடமெல்லாம் கூட கூட எங்க பின்னால நீங்க வராம இருந்தாலே போதும். ப்ளீஸ் விட்ருங்க எங்க குடும்பத்தை…” 
“ப்ச், நிதி வாடா போகலாம்…” வார்த்தைக்கு வலிக்குமோ என்பதை போல அவள் பேசிவிட்டு வசீகரனை ஒரு பார்வை பார்த்துவிட்டு கடந்துவிட அவனுக்கு தான் ஆயாசமாக இருந்தது.
எங்கே மீண்டும் அவர்களை நிறுத்திவிடுவானோ என்ற சூர்யா வசீகரனை அவர்கள் பின்னால் செல்ல விடாமல் இழுத்துவர மூச்சுவாங்க ஓடி வந்து அவனை உரசி நின்றாள் சந்நிதி.
ஒரு நிமிடம் உறைந்துபோனான் வசீகரன் அவள் தீண்டலில். ஸ்தம்பித்தவன் போல நின்றுவிட,
“உங்ககிட்ட பேசனும். முடிஞ்சா இங்கயே இருங்க. நான் கொஞ்சம் நேரத்துல அப்பாக்கிட்ட ஏதாவது சொல்லிட்டு வரேன். ஆனா அப்பா கண்ல மட்டும் படாம நில்லுங்க ப்ளீஸ்…” இறைஞ்சிய விழிகளையும் மொழிந்து சென்ற இதழ்களும் அவனை சிலையாக்கி இருக்க அப்படியே நின்றான்.
“டேய் வசீ?…” என்ற நண்பனின் உலுக்கலில் மீண்டவன் பேந்த பேந்த விழிக்க,
“உன்கிட்ட பேசனும்னு சொல்லிட்டு போறாங்கடா தங்கச்சி….” என சொல்ல இன்னமும் பிரம்மையில் இருப்பதை போல அவன் நிற்க,
“சரிதான். ஒரு டச்-க்கே பிளாட் நீ. இதுல பொண்டாட்டி பின்னால போகமாட்டாராம் இந்த புலிகேசி…” என கேலி பேச அவனை முறைக்காமல் புன்னகைத்து வேறு வைக்க தலைசுற்றி போனான் சூர்யா.
“நீயாடா இது?…” என கேட்டு அவனையும் கிள்ளி தன்னையும் கிள்ளி பார்த்தவன்,
“என்னமோ போடா வசீகரா. அந்த புள்ள வசியப்படும்னு பார்த்தா நீ தான் மந்திரிச்சு விட்ட மாதிரி நிக்கிற. போ போ போய் அப்படி உட்காரு…” என சொல்ல வள்ளி குகைக்கு அருகில் உள்ள ஓரிடத்தில் சென்று நின்றான்.
சொன்னதை போல பத்து நிமிடத்திற்குள் சந்நிதி வந்து நின்றாள். அதற்குள் வசீகரன் மீண்டிருந்தான். எந்தவிதமான உணர்வையும் வெளிப்படுத்தியிறாத முகபாவனையை கொண்டு வந்திருந்தான்.
ஆனாலும் அவளை பார்வையால் கவர்ந்துகொண்டிருந்தான். இளஞ்சிவப்பு நிற குர்தியும் அதில் சந்தன நிற இறகை போன்ற அச்சுக்கள் தெளித்திருக்க அதே சந்தன நிற பட்டியாலா போட்டு அந்த நிறத்தில் நெட்டட் துப்பட்டா போட்டிருந்தாள். 
தலை முடியை டைட்டாக பின்னல் போட்டு முல்லை பூ வைத்திருக்க நெற்றியில் வைத்திருந்த குங்குமம் அவளின் நெற்றி பொட்டிற்கு கொஞ்சம் பக்கவாட்டில் கலைந்து இருந்தது. 
பார்த்தவனுக்கு பார்வையை அகற்றவே முடியவில்லை. உள்ளுக்குள் ரசித்து ரசித்து உருகிக்கொண்டிருந்தான் அவனறியாமல்.
“இவ எப்பவுமே இவ கலர்க்கு கான்ட்ராஸ்ட் கலர்ல தான் ட்ரெஸ் போடுவா போல.” என நினைத்துக்கொண்டிருக்க,
“நான் தனியா பேசனும் உங்ககிட்ட…” என தயங்கி சொல்ல,
“நீங்க பேசுங்க. உங்கப்பா தலை தெரிஞ்சா நான் போன் பண்ணிடறேன்…” என தூரமாய் சென்று நின்றுகொண்டான் சூர்யா.
பேச வந்துவிட்டாள் தான். ஒரு குருட்டு தைரியம் தான். நேரமும் இல்லை. ஆனாலும் வார்த்தை வராமல் திணற அவளின் மனதிற்குள் பய அலைகள் அடித்து புரட்டியது. 
அவளின் அலைப்புருதலை சொல்வது போல கடலலை பெரும் ஓசையுடன் கரையை தொட்டு தொட்டு சென்றது.
“இன்னும் இப்படியே பேசாம நின்னா உங்கப்பா வந்து நம்மளை பார்ப்பாரு. அப்பறம் நீயும் கோவில் கோவிலா போய் பரிகாரம் செய்ய வேண்டியது தான்….” கிண்டலாய் சொல்லி அவளின் அமைதியை குலைக்க,
“நீங்க ஏன் இப்படி பன்றீங்க?…” என பார்வையை இங்குமங்கும் சுழற்றிக்கொண்டே கேட்க,
“நான் என்ன பண்ணினேன்?…” என்றான் அவளை மட்டும் பார்த்துகொண்டு.  
“நீங்க என்னை பார்த்தது தெரியாம அப்பா தியாவை ரொம்ப கஷ்டப்படுத்தறார். என்னால அவ கஷ்டப்படறான்றப்ப தாங்க முடியலை.  என்னால் இதை சொல்லவும் முடியலை…” 
“ஏன் சொல்ல வேண்டியது தானே?…”
“எனக்கு தியான்னா உயிர். அம்மாவை விட அவளை பிடிக்கும்ன்னா பார்த்துக்கோங்க. ஆனா இன்னைக்கு அவ என்னால கஷ்டப்படறா. நான் மறைச்ச ஒரு விஷயத்தால இன்னைக்கு அவ வேதனை அனுபவிக்கிறா. இது எல்லாம் நான் உங்களை பார்த்தினால தான். இன்னைக்கு வரைக்கும் அவ அனுபவிக்கிற வேதனையை பார்த்து நான் அதைவிட அதிகமா அனுபவிக்கிறேன்…”
“சொல்லு சொல்லுன்னா எப்படி சொல்ல முடியும்? இப்ப அக்காக்கிட்ட நான் சொன்னா அன்னைக்கே ஏன் சொல்லலைன்னு கேட்பா. அதுக்கு அப்றமும் முதல்லையே சொல்லாம இத்தனை நாள் மறைச்சு வச்ச குற்றவுணர்ச்சி. அவ வெளிப்படையா எல்லாம் பேசறப்ப முடிவா இதை அவளுக்கு மட்டுமில்லை யாருக்குமே சொல்லகூடாதுன்ற எண்ணம். எங்க இதை சொல்லி உன்னால தான் எல்லாம்னு அவ சொல்லிட்டா அதை தாங்கிக்க முடியாது. அவளோட அந்த பார்வையை என்னால தாங்க முடியாது…” 
“அன்னைக்கும் அக்கா உங்க குடும்பத்தை பார்த்ததா அப்பாக்கிட்ட சொல்லவும் தப்பிச்சேன்ற எண்ணமெல்லாம் இல்லை. ஆனா எதுவோ சொல்லவிடலை. ஏன்னு சத்தியமா பதில் இல்லை. பயந்து தான் நான் பேசாம இருந்தேன். அதுவும் அப்பாக்கிட்ட ஒரு வேளை நான் நீங்க என்னைத்தான் பார்க்க வச்சீங்கன்னு சொல்லிட்டா அவர் என்னை ஏதாவது அக்கா இருக்கும் போது உனக்கென்னன்னு தப்பா பேசிட்டா சத்தியமா உயிரோட இருந்திருக்க மாட்டேன்…”
“இப்ப வரைக்கும் அவகிட்ட நான் சொல்லலை. அவ இப்பவும் நீங்க சாதாரணமா பார்த்ததா நினைச்சுட்டு இருக்கா. இதை நான் ஏதாவது சொல்லி தேவையில்லாத குழப்பம் வேண்டாமேன்னு தான் சொல்லலை…” 
“இவ்வளவு நாள் மறைச்சு இப்ப நான் சொன்னா அதுவும் தவறாகிட்டா? அக்கா புரிஞ்சுப்பா தான். ஆனா எதுவும் எப்ப எப்படி நடக்கும்னு தெரியாதப்போ. ப்ச் எனக்கு இதெல்லாம பயமா இருக்கு. அதான் சொல்ல வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். இனி சொல்லவும் மாட்டேன்…”
நிதி கண்ணீருடன் உணர்ச்சி மிகுந்த குரலில் சொல்ல சொல்ல முகம் இறுக கேட்டுக்கொண்டிருந்தான் வசீகரன். சில நொடிகள் தான் அந்த அழுகை குரல். மீண்டும் தெளிந்து முகம் நிமிர்ந்தவள்,
“நீங்க நீங்க அன்னைக்கு என்னை பார்த்தீங்க தானே?…” என கேட்கவும் புன்னகை மீண்டது இவனின் முகத்தில். அடர்ந்த மீசைக்கடியில் பூத்த மெல்லிய சிரிப்போடு,
“ஆமாம் பார்த்தேன்…” என்றான்.
“ஏன் எதுக்கு என்னை பார்த்தீங்க?…”
“எனக்கு க்ரீன் கலர் ரொம்ப பிடிக்கும். அன்னைக்கு நீ போட்ருந்த ட்ரெஸ் ரொம்ப அழகா இருந்தது. சோ பார்த்தேன்….” பளிச்சென அவன் சொல்ல இதை எதிர்பார்த்திராத நிதி என்ன பேசுவதென தெரியாமல் விழிக்க இதழ்கடையில் உதித்த புன்னகையை அடக்கியவன்,
“நீயும் கூட தான் என்னை பார்த்து ஒளிஞ்ச. நான் எதுவும் கேட்கலையே….”
“அது அது நீங்க என்னை பார்த்தது, அதான் பயந்து…”
“சும்மா பார்க்க தானே செஞ்சேன். பக்கத்துல வந்தேனா? பேசினேனா? எதாச்சும் பண்ணினேனா?…”
“ஆங்…” என விழியை அகற்றியவளின் பார்வையில் இவன் தான் விலகிக்கொள்ளவேண்டியதாக இருந்தது.
அத்தனை கொள்ளைகொண்டது அவளின் இந்த பாவனை. வேறெங்கோ பார்த்துவிட்டு இவளை பார்த்தவன்,
“நீ என்னை பார்த்து பயந்த அதான் நானும் என்னவோன்னு பார்த்தேன். இதுல  என்ன தப்பு?…” அவன் நியாயம் பேச தான் பெசவந்ததையே மறந்துவிடுவோமோ என கவலைகொண்டாள்.
“பின்ன ஏன் பார்த்தேன், பார்க்க வச்சேன்னு அப்பாக்கிட்ட அன்னைக்கு பேசினீங்க?…” 
“நான் சும்மா பார்த்தேன். சும்மா பார்த்ததால நீயும் என்னை பார்த்த. அதைத்தான் பார்க்க வச்சேன்னு சொன்னேன். உங்கப்பாவை வெறுப்பேத்த ஆயிரம் சொல்லுவேன். உனக்கென்ன இப்போ?. அதை சொல்லு…” 
“எங்கக்காவுக்கு உங்கமேல எந்த விருப்பமும் இல்லை. வரவும் வராது. நீங்க எங்க பின்னால வராதீங்க…”  படபடவென அவள் சொல்ல இவனுக்கு கடகடவென சிரிக்கவேண்டும் போல வந்தது.
“எனக்கும் கூடத்தான் உங்கக்கா மேல எந்த விருப்பமும் இல்லை. நான் என்னோட ஆட் காக அந்த ஊர்ல சுத்திட்டு இருக்கேன். இல்லைன்னா எனக்கென்ன அங்க வேலை?…” 
அவனும் பட்டும் படாததை போல பேசிவைக்க நிதி சுத்தமாய் குழம்பிபோனாள். இதுதானே அவனுக்கும் வேண்டும்.
“அப்போ நிஜமாவே நீங்க…. தியாவை …. உங்களுக்கு…” என உளற,
“இங்க பார் நிதி, கோவில்ல வச்சு சொல்றேன். உங்கக்கா மேல எனக்கு எந்தவிதமான எண்ணமும் இல்லை. உங்களை பார்க்கறப்போ எல்லாம் பேசறது கூட உங்கமேல உள்ள ஒரு சாப்ட்கார்னர் தான். புரியுதா?. போ…” 
“இனிமே இப்படி நீங்க எங்களை எங்க பின்னால வரமாட்டீங்க தானே?…”
“மாட்டேன்…”
“எதேர்ச்சையா பார்த்தாலும் பேசமாட்டீங்க தானே?…”
“ஹ்ம்ம், பேசமாட்டேன்…”
“நம்பறேன். ஆனா…”
“இனி நானா வரமாட்டேன், பேசமாட்டேன். இதுதானே உனக்கு வேணும். சொன்னா செய்வேன். இப்ப நீ போ…” என்றதும் மெல்ல தலையாட்டிவிட்டு நகர அவளின் கை பிடித்து நிறுத்தினான் வசீகரன்.
திடுக்கிட்டு திரும்பி பார்த்தவள் அவனை முறைக்க அவளின் கோபத்தில் புன்னகையோடு கையை விட்டான்.
“இந்த கோபத்தை உங்கப்பாவோட அராஜகத்துக்கு எதிராகவும் காட்டலாம். எல்லாமே பொறுத்துட்டு பொறுமை பூஷணமா இருக்கனும்னு அவசியமில்லை நிதி…” அவளுக்கு எடுத்து சொல்ல,
“உங்க சைட் விளக்கத்தை சொன்னதுக்கு தேங்க்ஸ். இது எங்க குடும்ப பிரச்சனை. நாங்க பார்த்துப்போம். உங்க வேலையை பாருங்க…” என்றுவிட்டு அவள் சென்றுவிட வசீகரனின் இதழ்களில் புன்னகை நெளிந்தது.
“ஹ்ம்ம் நம்மாளுக்கு கொஞ்சம் கோபம் கூட வருதே?…” என புன்னகையுடன் அவளை பற்றிய தன் கரத்தை இன்னொரு கையால் வருடிக்கொடுத்தான் வசீகரன். நிதியால் வசீகரிக்கப்பட்ட வசீகரன்.

Advertisement