Advertisement

தீண்டல் – 7
         “ம்மா கிளம்பியாச்சா? இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படியே கிளம்பிட்டு இருப்பீங்க?…” வசீ கீழே வந்து தாயின் அறை வாசலில் நின்று கத்தினான்.
“உங்கம்மா கிட்சன்ல இருக்கா. இங்க வந்து எதுக்கு சத்தம் போடற?…” சட்டையின் பட்டன்களை போட்டுக்கொண்டே குகன் வெளியே வர,
“இந்நேரம் கிட்சன்ல என்ன பன்றாங்க? சூர்யா வேற போன் மேல போன் பன்றான். அங்க அனுவும், அவனும் கூட ரெடி…” என திட்டிக்கொண்டே அங்கே வந்து பார்க்க இதை எதையும் கவனியாமல் அம்பிகா மிக்ஸியில் சட்னியை ஓடவிட்டுக்கொண்டிருந்தார்.
“ம்மா…” என்ற கத்தலில் மிக்ஸியில் இருந்து கையை படக்கென பதறி எடுத்துவிட மொத்தமும் சுற்றி மூடி தெறித்து சுவரெல்லாம் சட்னி பச்சைவண்ணத்தில் ஓவியம் வரைந்திருந்தது.
வசீகரனின் வெளிர் நீல நிற டிஷர்டிலும் தன் தடத்தை பதித்திருக்க ஐயோவென்று பரிதாபமாய் பார்த்தார் அம்பிகா.
“என்ன பண்ணி வச்சிருக்கீங்க?…” என்ற மகனின் கோபத்தை கண்டுகொள்ளாமல் ஜாரில் சட்னி மீதமிருகிறதா என கவனித்தவர் கொஞ்சம் திருப்தி புன்னகையோடு,
“உனக்குத்தான் புளி, மல்லி துவையல் செஞ்சேன் வசீ…” என சொல்லி அவனின் டிஷர்ட்டில் சிதறியிருந்த சட்னியை தொட்டு நாக்கில் வைத்து,
“இன்னும் கொஞ்சம் உப்பு மட்டும் கலக்கனும். நீ போய் வேற ட்ரெஸ் மாத்திட்டு வா. நான் அதுக்குள்ளே இதை பேக் பண்ணிட்டு சுவரை எல்லாம் துடைச்சுட்டு வரேன். என்னோட புடவையில கூட ஆகிடுச்சு. நானும் வேற மாத்தனும்…”
சர்வசாதாரணமாக சொல்லிவிட்டு உப்பு ஜாரை எடுத்து வந்தார் அம்பிகா. 
“அம்மா….” என பல்லை கடித்துக்கொண்டு அவன் கத்த,
“என்னடா நீயும் டேஸ்ட் பார்க்கறியா?…” என்று வேறு கேட்டுவைக்க சுத்தமாய் பொறுமை பறந்தது அவனுக்கு.
“இப்ப நான் துவையல் கேட்டேனா? ஏன் கிளம்பறப்ப இத்தனை வேலை பார்த்து பத்துவேலை ஆக்கி வைக்கறீங்க?…” என திட்ட,
“திட்டினா எல்லாமே நீ போடற சத்தத்துல ரிவர்ஸ்ல போய் எல்லாமே சரியாகிடுமா? போடா போய் ட்ராவல்ஸ்ல இருந்து வண்டி வந்திருச்சான்னு பாரு. லக்கேஜ் எடுத்து வை…” 
அம்பிகா மகனுக்காக செய்வதை உனக்காக தான் என்று அவனிடம் சொல்லிக்கொள்ளவும் இல்லை. மகனும் கேட்டுக்கொள்ளவில்லை. ஆனாலும் பேசிக்கொண்டனர் கோபமாயும் அலட்சியமாயும்.
கோபத்துடன் கிட்சனை விட்டு தலையை தடவிக்கொண்டே வெளியே வந்தான் வசீ.
“தலையில கையை வச்சிருக்கறதை பார்த்தா உனக்கு தலைவலின்னு போகற போக்குள்ள சுக்கு தட்டி டீ போட்டு ப்ளாஸ்க்ல எடுத்துக்கனும்னு ஆரம்பிப்பா…” 
குகன் மகனிடம் நினைவுப்படுத்திய நொடியில் வேகமாய் கையை எடுத்துவிட்டு ஆயாசமாக சோபாவில் அமர வேகமாய் சிரிக்க ஆரம்பித்தார் குகன்.
“ப்பா…”
“சொல்லுப்பா…”
“சும்மாவே அனு பேசுவா. நான் தான் லேட் பன்றேன்னு. இதை சொன்னா அதுக்கும் என்னைத்தான் திட்டுவா…” 
“நீயும் பயந்து அய்யோன்னு ஒளிஞ்சிடுவ….” என்று மகனை கிண்டல் பேச அவரையும் முறைத்தவன் வாசலில் ஹாரன் சத்தம் கேட்கவும் வெளியே போனான்.
“நம்ம காரையே எடுத்துட்டு போகலாம்னா கேட்டா தானே? ஆயிரத்தெட்டு இடைஞ்சல்…” என போகிற போக்கில் சொல்லிக்கொண்டு வேறு செல்ல குகன் புன்னகைத்தார்.
“ஹ்ம்ம் எல்லாம் ரெடிங்க. இதை எடுத்து பேக்கிங்ல வச்சிடுங்க. நானும் போய் சேரி மாத்திட்டு வரேன்…” என சிறுபிள்ளையென குடுகுடுவென்று ஓடினார் அம்பிகா. 
மனைவியின் செயலை பார்த்து புன்னகைத்தவர் டைனிங் டேபிளின் மேல் இருந்த குட்டி குட்டி டப்பர்வேர் டப்பாக்களை பார்த்தார்.
ஒன்றில் மல்லி – புளி துவையல், இன்னொன்றில் வரமிளகாய் புளி துவையல், இன்னொன்றில் தக்காளி பூண்டு தொக்கு, பருப்பு பொடி என்று நான்காக இருக்க புன்னகை மாறாமல் அதை எடுத்து அடுக்கினார்.
“வெளியில் உணவை ஆயிரத்தெட்டு நொட்டை சொல்லும் மகனை பெற்றுவைத்துவிட்டு இவளுக்கு பெருமை மட்டும் குறையாது…” என கேலி பேசிக்கொண்டே எடுத்துவைக்க,
“ப்பா, எடுத்துவைக்கலாம்…”
“ஹ்ம்ம் உன்னோட திங்க்ஸ் ரெடி வசீ…” என்று அதை காண்பிக்க அத்தனை டென்ஷனிலும் முகத்தில் ஒரு திருப்தி. 
“போய் ட்ரெஸ் மாத்திட்டு வா. அபி போயாச்சு…” எனவும் வேகமாய் மாடியேறினான்.
நிமிடத்தில் அந்த உடையை களைந்துவிட்டு வேறு ஒரு வெளிர் நிற ஜீன்ஸும், அதற்கேற்றது போல டார்க் ப்ளூ ஜீன்ஸ் க்ளாத் ஷர்ட்டும் போட்டுக்கொண்டு வர,
“இதுக்காக தான் உன் அம்மா உன் ட்ரெஸ்ல சட்னி தெளிச்சிருக்கா. இது எவ்வளவு நல்லா இருக்கு….” என்று மெச்ச,
“அம்மா செஞ்சதுக்கு நீங்க நியாயப்பத்திரம் வாசிக்கிறீங்களா? மேட் பார் ஈச் அதர் ப்பா…” என்று சில்லாகிக்க,
“கண்ணுபோடாத. உனக்குமே அமையும்…” என சொல்லிவிட்டு குகன் அந்த பேக்கை தூக்கிக்கொண்டு வாசலுக்கு செல்ல சந்நிதியின் முகம் அவனின் அகத்தினுள் ஒளிர்ந்தது.
“அவக்கிட்ட என்ன புடிச்சிருக்குன்னே தெரியலை. அவளை பத்தி எதுவும் தெரியலை. ஆனாலும் அவ வேணும்னு என்னவெல்லாம் ப்ளான் பண்ண வேண்டியதிருக்கு?” என நினைத்துக்கொண்டே நடு ஹாலில் அப்படியே நிற்க இரண்டுமுறை மகனை அழைத்த அம்பிகா அருகில் வந்து அவனை கிள்ளியவர், 
“வீட்டை பத்திரமா பார்த்துக்கோ. காலையில உனக்கு மட்டும் தேவையான பாலை வாங்கிக்கோ. நிறைய வாங்கி வேஸ்ட் ஆகிடும்…” என சொல்லிக்கொண்டே திரும்பியும் பார்க்காமல் செல்ல அவரின் அலம்பலில் இவனின் டென்ஷன் எகிறியது.
“போறதே எனக்காக. இதுல என்னை விட்டுட்டு போறாங்களாம்…” என நொந்துகொண்டவன்,
“என்னை வச்சு செய்ய அம்மாவே போதும்…” என்ற புலம்பலுடன் கதவை பூட்டிவிட்டு வாசல் கூர்க்காவிடம் ஆயிரம் பத்திரங்கள் சொல்லிவிட்டு வேனில் ஏறிக்கொண்டான்.
வழியில் ரவியையும், சூர்யா, அனுவையும் ஏற்றிகொண்டவர்கள் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே செல்ல வசீகரனுக்கு தான் பற்றிக்கொண்டு வந்தது. என்னவோ போர் அடிப்பதை போல தோன்ற அதற்குள் அம்பிகா,
“இது எவ்வளவு சூப்பரா இருக்கு. இதை போய் வேண்டாம்னு சொல்லிட்டானே?…” என சில்லாகிக்க,
“உண்டக்கட்டி வாங்கி சாப்பிட போற மாதிரி இருக்கு…” கடுப்பாய் மொழிந்தான் மகன்.
“உண்டக்கட்டி என்ன குறையா? ஈஸியா கிடைக்குமாடா? புண்ணியம் செஞ்சிருக்கனும்…” என்றவர்,
“ஆளுக்கொரு கார்ல வரதுன்னா எதுக்கு ஒண்ணா போகனும்? ட்ரைவ் பண்ணிட்டு அது வேற டயர்டா இருக்கனும். நீ ரோட்டை பார்த்தே ஓட்ட நாங்க ஒருத்தர் மூஞ்சியை ஒருத்தர் எவ்வளவு நேரம் பார்க்கவாம்?…” 
“ப்ச், ட்ரெயின்ல இல்லைனா ப்ளைட்ல போய்ருக்கலாம்ல. அங்க போய் ட்ராவல்ஸ் புக் பண்ணியிருக்கலாம்…”
“இப்ப என்னவாம் உனக்கு? வருஷமெல்லாவா ட்ராவல் பண்ண போற? ஒரு ரெண்டு நாள். பெரிய ப்ராஜெக்ட் அக்ரிமெண்ட் சைன் ஆகிருக்கு. அதுக்கு கடவுள்ட்ட நன்றி சொல்ல வேண்டாமா?…”
“நானா வேண்டிக்க சொன்னேன்?…”
“நான் தான் வேண்டிக்கிட்டேன். உன்னையும் கூட்டிட்டு வரதா. அன்னைக்கு இந்த ப்ராஜெக்ட் சைன் ஆகனும்னு எனக்காக வேண்டிக்கோங்கன்னு கேட்க தெரிஞ்சதுல. அதான் வேண்டினேன்…”
அம்பிகாவும் வசீகரனும் வாக்குவாதத்தில் இருக்க மற்றவர்கள் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக்கொண்டே அதனை வேடிக்கை பார்த்தபடி வந்தனர்.
“அதுக்குன்னு அவ்வளவு தூரமான சாமிக்கிட்ட வேண்டனுமா?…” வசீகரனால் அம்பிகாவிடம் பதில் பேசமுடியவில்லை.
“எனக்கு புடிச்ச கடவுள்க்கிட்ட நான் வேண்டிக்கிட்டேன். அதனால தான் உனக்கு இந்த ப்ராஜெக்ட் கூட கிடைச்சிருக்கு. ஞாபகம் இருக்கட்டும். இப்படி ஒரு ரெண்டு நாள் எல்லாரோடையும் ஜாலியா போனா எவ்வளோ ரிலாக்ஸா இருக்கு…”
முகத்தை உர்ரென வைத்து சொல்லிய அம்பிகாவின் முகபாவனையில் வசீகரன் சிரித்துவிட அம்பிகா முறைத்தார்.
“அட போடா…” என முறுக்கிக்கொள்ள அவரை அணைத்துக்கொண்டான் வசீ.
“ஓகே, ஓகே ம்மா. உங்களுக்காக எவ்வளவு தூரம் வேணும்னாலும் வரேன். போதுமா?. ட்ராவல் டைம் வேஸ்டாகுதேன்னு சொன்னேன்…”
“இதுவும் ஒரு அனுபவமா எடுத்துக்கோ. போற வழில நமக்கு பிடிச்ச இடம் எதாவது வந்தா நிறுத்தி நிதானமா பார்த்து ரசிச்சுட்டு போகலாம். ஏன் உனக்கே ஏதாவது ஆட்க்கு லொகேஷன்க்கு  யூஸ் ஆகுமில்ல. கொஞ்சம் பிஸ்னஸ் மைன்ட்லயும் யோசி…”
“நேரம் ம்மா…” என்று சிரிக்க கலகலப்பும் ஆர்ப்பரிப்புமாய் அவர்களின் பயணம் திருச்செந்தூர் முருகக்கடவுளின் இருப்பிடம் நோக்கி சென்றது.
இரவு நேரம் அங்கே சென்றுவிட ஏற்கனவே புக் பண்ணியிருந்த அறைக்குள் சென்று குளித்து தயாராகி இரவு உணவிற்கு வந்தனர். 
சாப்பிட்டுவிட்டு அனைவருமாக சேர்ந்து காலார கோவில் கடற்கரையில் பேசிக்கொண்டே நடந்தனர். சிறிது நேரம் அங்கிருந்துவிட்டு கிளம்பினார்கள்.
மறுநாள் காலை பூஜை நல்லவிதமாக சிறப்பாய் நடந்தது. சாமிகும்பிட்டு முடிந்த பின்பு அன்று அன்னதானத்திற்கு இவர்கள் ஏற்பாடு செய்திருந்ததால் அதை கவனிக்க வசீ, சூர்யா தவிர்த்து மற்றவர்கள் சென்றுவிட்டனர். 
சூர்யாவும் வசீகரனும் அங்கே போட்டோஸ் எடுத்துக்கொண்டிருக்க சூர்யாவின் போகஸில் சந்தியாவும் சந்நிதியும் தெரிந்தனர்.
“வசீ அங்க பார்…” என காண்பிக்க அவன் காட்டிய திசையில் பார்த்த வசீகரனின் கண்கள் ஆச்சர்யமுற்றது.
“வாடா…” என சூர்யாவையும் இழுத்துக்கொண்டு செல்ல இவர்களை கவனியாமல் பேசிக்கொண்டே வந்தவர்களை மோதுவது போல வந்து அதிர்ந்து பின்னால் நகர்ந்தான் வசீகரன். 
யாரென நிமிர்ந்து பார்த்த பெண்கள் இருவருக்கும் படபடப்பு கூடியது. பயத்தில் வியர்க்க அங்கிருந்து விலகி செல்ல பார்த்தனர்.
“வாட் எ கோ இன்சிடேன்ஸ்?…” வசீ சொல்ல சந்தியா முகம் திருப்ப சந்நிதி முறைப்பாய் பார்த்தாள்.
“என்ன இந்த பக்கம்?….” 
“கோவிலுக்கு சாமி கும்பிட வந்தோம்…” பதில் சொல்லக்கூடாது என நினைத்தலும் சந்நிதியின் வாய் அவளுக்கு எதிராக செயல்பட்டது.
“கோவிலுக்கு சாமிகும்பிடத்தான் வருவாங்க. இல்லைன்னு யார் சொல்லுவா?…” 
“பின்ன ஏன் கேட்டீங்க? பரிகாரம் செய்ய வந்தோம் போதுமா? உங்களால எங்கக்காவை கோவில் கோவிலா கூட்டிட்டு பரிகாரம் செய்யறார் எங்கப்பா…” சந்நிதி சொல்லிவிட சலனமின்றி பார்த்தான் வசீகரன்.
“வசீ வா போகலாம்…” சூர்யா அழைக்க அசையாமல் நின்றவன் இரு பெண்களையும் துளைக்கும் பார்வை பார்த்தான். அவனுக்கு தான் தெரியுமே ஏன் இதை முனீஸ்வரன் செய்கிறார் என்று. 
தன்னை கொண்டு அவர் அவரின் பெண்களை துன்பப்படுத்துவது தெரிந்தாலும் அமைதியாக இருந்தவன் இன்று சந்நிதி தன்னை குற்றம் சாட்டவும் கோபம் வந்துவிட்டது.

Advertisement