Advertisement

தீண்டல் – 6
          சிறிது நேரம் கோவிலிலேயே நின்று அங்குமிங்கும் சுற்றி வந்தான் வசீகரன். தன்னுடைய கேமராவினால் சில இடங்களை புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்க,
“ஏன்டா புதுசா பார்க்கிற மாதிரி ரசிச்சு ரசிச்சு எடுத்திட்டிருக்க? இங்க முன்னபின்ன வந்ததில்லையா நீ? ரொம்ப பன்றடா…” சூர்யா அலுத்துக்கொள்ள,
“எத்தனை முறை வந்தாலும் சில விஷயங்கள் புதுசா தான் தெரியும். போன தடவை கண்ணுல படாதது இந்த தடவை தெரியும். போன முறை பார்த்த ஒன்னு இந்த முறை வேறொரு கோணத்தில் தோணும். இதெல்லாம் உனக்கு புரியவா போகுது?…” என நண்பனை வார,
“சூப்பர், கரெக்ட்டா சொன்னீங்க…” என புகழும் வசீகரனுக்கு புகழாரம் சூட்ட,
“பெரிய சேவிங் செட்டு. ஒன்னு கூடிட்டாங்கலாம். போங்கடா அப்ரண்டீஸ்களா…” என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு திடுக்கிட்டவன்,
“சத்தியமா இவனை மட்டும் தானுங்க சொன்னேனுங்க மச்சான் ஸார்…” என புகழிடம் சரணடைய அவனுக்கு இன்னமும் சிரிப்பு தான்.
“ப்ரீயா விடுங்க. நானும் உங்க டைப் தான். ஐ லைக் இட்…”
“அவசரப்பட்டு அப்படி ஒரு முடிவுக்கு வந்துடாதீங்க. எங்களோட செட் எல்லாம் ஆகாதீங்க. ஆனாலும் எங்க டைப்புன்னு சொல்லும் போதே தெரியுது. உங்களுக்கு ஜோடி செட் ஆகிருக்காதே?…” 
“அட எப்படிங்க இப்படி சொல்றீங்க?…” சூர்யா அதிசயித்து சொல்ல,
“அதெல்லாம் கேட்கப்படாது…”
“உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சே…”
“அது தேடி போய் பண்ணின பர்ச்சேஸ் இல்லை. ஏற்கனவே ஆடர் பண்ணினது?…” 
“வாட்?…”
“அட என் மாமா பொண்ணுங்க என் பொண்டாட்டி. பொறந்ததுல இருந்து எனக்குன்னே பொறந்திருக்கா பொறந்திருக்கான்னு சொல்லி சொல்லி எனக்கு கட்டி வச்சாங்க. இதுல பொண்ணை தேடும் பாக்கியமோ பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிடற குடுப்பினையோ எனக்கு இல்லாமலே போச்சு…” என சோகம் போல சொல்லிக்கொண்டிருக்க கேட்ட புகழ் அடக்கமாட்டாமல் சிரித்தான்.
“இப்படித்தான் ப்ரெண்ட்ஸ்குள்ள என் பிழைப்பு சிரிப்பா சிரிக்கும்…” என்றவன் புகழிடம் கை நீட்டி,
“ப்ரெண்ட்ஸ்…” என,
“ப்ரெண்ட்ஸ்…” என்று புகழ் கையை பற்றி சூர்யாவை அணைத்துக்கொண்டான். அப்போது தான் பேச்சு சுவாரஸியத்தில் இருவரும் வசீகரனை விட்டுவிட்டு தூரமாய் வந்துவிட்டது தெரிய,
“இவன எங்க காணும்?…”  என்று திரும்பி பார்த்தவன்,
“ஐயோ சனி. ச்சீ முனி…” என அலற,
“சித்தப்பு…” என புகழ் பார்க்க,
“அட உங்க அப்புவையெல்லாம் தூக்கி ஓரமா வச்சிட்டு நில்லுங்க. நான் போய் இவனை பார்க்கறேன்…” என்ற சூர்யா வேகமாய் வசீகரனை தேடி வர அதற்குள் முனீஸ்வரனும் வசீகரனை பார்த்துவிட்டார்.
“டேய் நீ எங்கடா இங்க? உன்னை தான் இந்த ஊர் பக்கமே வரக்கூடாதுன்னு சொல்லிருக்கேனே?…” 
திடீரென முனீஸ்வரனை அங்கே எதிர்பார்க்காத வசீகரன் நொடியில் ஆச்சர்யத்தை அடக்கிக்கொண்டு உற்சாகமாகிவிட்டான்.
“ஹாய் மாமா, நீங்க என்ன இந்த பக்கம்?…” என அவன் அவருக்கு அதே கேள்வியை திருப்பி கேட்டுவைக்க,
“அண்ணே தம்பி சொந்தக்கார தம்பி போல. நீங்க என்னன்னா கோவமா பேசுறீங்க?…” முனீஸ்வரனின் பக்கத்தில் நின்ற ஒருவர் கேட்க,
“இவன் வேற நேரங்காலம் இல்லாம. இவன் கூட இருக்கறதா மறந்துட்டு இந்த பயகிட்ட பேச்சுக்குடுத்துட்டேன்” என நொந்துகொண்டு உச்சந்தலையை சொரிந்தவர்,
“ஆமாய்யா, நீ போ, நான் பேசிட்டு வாரேன்…” என்று அவரை வழியனுப்பிவிட்டு வசீகரனை பார்த்தார். 
அவனோ இவரின் தவிப்பை கண்டுகொண்டவன் போல கண்கள் மின்ன அடுத்து என்ன பேச போகிறார் என்று எதிர்பார்த்து நின்றான்.
“ஏய் என்ன என்கிட்டையே லந்தை காட்டுறியா? நீ எதுக்குடா இங்க வந்த…”
“பொண்ணு பார்க்க வந்தேன். என்ன இப்ப?…” வசீகரனும் வம்பாய் பேச,
“டேய்…” என்று பல்லை கடிக்க மட்டுமே முடிந்தது முனீஸ்வரனால். பொது இடம், என்ன ஏது என்று விசாரிக்க ஆரம்பித்து இவன் உளறி வைத்தால் என்னாவது என்றே கோபத்தை அடக்கினார்.
“அதுக்கு இங்க ஏன்டா வந்த?…” 
“இந்த வாடா போடா பேச்செல்லாம் வேண்டாம். பேசினா திரும்ப நானும் பேச யோசிக்க மாட்டேன்…” என எச்சரித்தவன், 
“இந்த கோவில் என்ன உங்க வீட்டுக்குள்ளையா இருக்குது? பேசும் போது யோசிச்சு பேசுங்க மாமனாரே. இல்லைன்னா இப்படித்தான் அடிக்கடி மீசையில மண்ணு ஓட்டும்…” என்றான் வசீகரன்.
“இது என்னோட ஊர். நான் ஒரு சத்தம் குடுத்தா என்ன நடக்கும்னு தெரிஞ்சுப்ப. மரியாதையா போய்டு…” 
எங்கே தன் மகளை பார்த்திருப்பானோ என்னும் பதட்டமும், வசீகரனின் தெனாவெட்டான பேச்சும் அவர மேலும் படபடக்க செய்ய,
“போக முடியாது. யாரை வேணும்னாலும் கூப்பிடுங்க. பேசுங்க. நானும் என் தரப்பு நியாயத்தை சொல்றேன்…”
“இங்க பாரு அன்னைக்கு பிரச்சனை அன்னையோட முடிஞ்சது. திரும்ப அதை எடுக்காதே…”
“எங்க முடிஞ்சது? நீங்க நினைச்சா ஆரம்பிப்பீங்க. நினைச்சா முடிப்பீங்க? நான் என்ன நீங்க வச்ச ஆளா?…” 
வசீகரன் அவரை விடாமல் பேச அதிர்ந்து பார்த்தார் முனீஸ்வரன்என்றுமே இப்படி அவர் யாரிடமும் பேசமுடியாமல் நின்றதில்லை. ஆனால் இன்று பேசினால் தேவையில்லாமல் பிரச்சனை பெரிதாகி குடும்ப விவகாரம் தெருவிற்கு வந்துவிடுமோ என பயந்துபார்த்தார்.
“உங்ககிட்ட பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொன்னப்பவே இப்ப கல்யாணம் பன்றதா இல்லைன்னு சொல்லியிருக்கலாம். இல்லயா எங்களுக்கு குடுக்க இஷ்டம் இல்லைன்னு கூட சொல்லியிருக்கலாம். ஆனா நீங்க என்ன பண்ணுனீங்க? எங்க குடும்பத்தை உங்க வீடு தேடி வரவச்சு அசிங்கப்படுத்தி அனுப்பிவச்சீங்க…”
“கழுத்துல கத்தி வச்சு பொண்ணு குடுத்தாலே ஆச்சுன்னு நாங்க ஒன்னும் மிரட்டலையே? எங்க அப்பாம்மாவை அசிங்கப்படுத்தினதும் இல்லாம என்கிட்டே என் பொண்ணு பின்னாடி அலைஞ்சன்னு பேசறீங்க? என்னை பத்தி என்ன தெரியும் உங்களுக்கு?…”
வசீகரன் பேச பேச அவன் மீதான கோபம் அதிகமானதோடு இவன் தன்னையே பேசி மடக்குகிறானே பெண்ணிடம் பேசிவிட்டால்? என அவரின் புத்தி குறுக்காக யோசிக்க ஆரம்பித்தது.
“இங்க பாரு, முடிஞ்சதை பேசி பிரயோஜனம் இல்லை. இனி இங்க வராத…”
“அப்படித்தான் வருவேன்னு நான் சொல்றேன். என்ன பண்ணுவீங்கன்னு இப்ப நீங்க சொல்லுங்க. வந்தா உங்களால என்ன பண்ண முடியும்? சொல்லுங்க. இப்ப சொல்லியே ஆகனும்…” என நெருக்க அவனை அவரால் எதிர்கொள்ளவே முடியவில்லை.
“இவன் என்ன இத்தனை பேசுகிறான்? இவனை சமாளிக்க முடியாதோ?” அவரின் கண்களில் இந்த எண்ணம் அப்பட்டமாய் தெரிய,
“என்ன பேசுங்க மாமனாரே, உப்பு பெறாத விஷயத்தை பிடிச்சுக்கிட்டு முருங்கைமர வேதாளம் மாதிரி தலைகீழா தொங்குனீங்கள்ள. இப்ப தொங்குங்க பார்ப்போம்…”
“என்ன?…” என இன்னும் திகைக்க,
“என்ன அண்ணே இன்னுமா பேசி முடிக்கல. பேசாம வீட்டுக்கு கூட்டிட்டு போயி பேசறது…” என முனீஸ்வரனுடன் பேசி சென்ற அந்த மனிதர் மீண்டும் வந்துவிட,
“இல்ல இதோ வா போவோம்…” என்று தப்பித்தோம் பிழைத்தோம் என்பதை போல வேஷ்டியை தூக்கி மடித்த படி வேகமாய் நடந்தார் முனீஸ்வரன்.
அவர் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த வசீகரனுக்கு அடக்கமாட்டாமல் அப்படி சிரிப்பு பொங்கியது. புன்னகையுடன் பார்த்தவனின் முகம் தாய் தந்தை நினைவில் இறுக ஒரு பெருமூச்சோடு சுற்றிலும் பார்க்க சூர்யா பெரிய கும்பிடாய் கும்பிட்டபடி இவனை பார்த்து தலை கவிழ்ந்து நின்றான்.
“டேய் என்னடா இது?…” அவனின் செய்கையில் மீண்டும் புன்னகை தொற்ற,
“ஏன்டா அந்த மனுஷனை என்ன பாடு படுத்துற நீ? நீ பேசின பேச்சுக்கு இன்னும் நாலு நாள் என்ன நாற்பது நாள் கூட தூங்க மாட்டார்டா மனுஷன். இந்த போடா போடுவ? ஆனாலும் உன்னை பத்தி தெரியாம  சிக்கிட்டு சீரழிய போராருன்றது கன்பார்ம்…”
“டேய் மரியாதை மரியாதை. மாமனார்…”
“அது ஆகறப்ப பார்த்துக்கலாம்…”  இவனும் வாய்விட்டுவிட வசீகரனின் பார்வையில் மீண்டும் சரண்டர் ஆனான் சூர்யா.
புகழ் வந்துவிடவும் அவனிடம் நடந்த விவரங்களை சொல்லி அங்கிருந்து கிளம்பினார்கள் சூர்யாவும் வசீகரனும்.
வீட்டிற்குள் நுழைந்த முனீஸ்வரனுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. கடைக்கு சென்றவர் கண்முன்னே வசீகரன் பேசியதே நினைவிலாட இருப்பு கொள்ளாமல் வீட்டிற்கு வந்துவிட்டார்.
என்றும் இந்த நேரம் அங்கே வந்தே இராத கணவன் வந்துவிட பார்கவி குழப்பம் ஆகினார். ஆனால் அருகில் சென்று கேட்க பயந்து தூரமாகவே நின்றுகொண்டார். 
மாடியில் துணிகளை உலர்த்திவிட்டு கீழே வந்த சந்தியாவும் அவரை எதிர்பார்க்கவில்லை. சத்தமின்றி கீழே இறங்கியவள் மெல்ல அவரின் பின்பக்கமாய் நடந்து தன் அறைக்குள் சென்றுவிட்டாள்.
“சந்தியா…” என சத்தமாய் அழைத்துவிட்டார்.  வேகமாய் மகள் அறைக்குள் சென்ற தாய்,
“தியா அப்பா கூப்பிடறாரு. வா…” சொல்ல பயத்துடன் எழுந்து வந்தாள் சந்தியா உடன் சந்நிதி.
“என்னன்னு சொன்னாங்களா?…” சந்நிதி கேட்க,   
“என்ன புதுசா கேட்க? என்னைக்கு அவர் விவரம் இன்னதுன்னு நம்மக்கிட்ட சொல்லிட்டு செஞ்சிருக்கார்?…” என்ற தாயை இயலாமையுடன் பார்த்தாள் சந்நிதி.
“படிப்பு முடியவும் ஒரு வேலையை தேடிட்டு உங்களை எங்கையாச்சும் கடத்திட்டு போய்டறேன்மா…” சந்நிதி சொல்ல,
“என்ன பேச்சு இது நிதி? அப்பா கண்டிப்பானவர் தான். அதுக்குன்னு அப்பா இல்லைன்னு ஆகிடுமா? இதுவும் நம்ம நல்லதுக்குன்னு நினைச்சுக்கோ…”
“இந்த சப்போர்ட் உன்னை எங்க நிறுத்துமோ தியா?…” சந்நிதியும் விடாமல் சொல்ல,
“கூப்பிட்ட உடனே வர தெரியாதா? ஆடி அசஞ்சு தேர் மாதிரி வந்து நிக்கிறீங்க? அறிவில்ல. ஞானசூநியங்களா…” என்ற முனீஸ்வரனின் கோபக்குரலில் மெல்ல நடந்து சென்றுகொண்டிருந்த மூவரும் வேகமாய் ஒரே நொடிக்குள் அவரின் முன்னால் சென்று நின்றனர்.
“உன்கிட்ட பேசனும் முன்னால வா…” என்றதும் தூக்கிவாரிப்போட நின்றவள் வேகமாய் அப்பாவின் அருகே சென்று நிற்க அவளின் முகத்தை ஆராய்வதை போல பார்த்தார் முனீஸ்வரன்.
அவரின் பார்வையில் பிறந்த நடுக்கத்தை மறைத்தபடி சாதாரணமாக நிற்பதை போல நின்றாள். ஆனாலும் நெற்றியில் வியர்வைபூக்கள். சந்நிதி பார்கவியின் பக்கம் சென்று நிற்க,
“மூணுபேரும் இன்னைக்கு கோவில்ல வச்சு யாரையாச்சும் பார்த்தீங்களா?…” நேரடியாக விஷயத்திற்கு வர சந்தியாவின் தொண்டை வறண்டுவிட்டது.
பார்கவியின் இதயத்துடிப்பு வேகமாய் ஆரம்பிக்க சந்தியா வாயை திறக்கும் முன்னால்,
“யாரைப்பா? நாங்க கோவில்ல யாரையும் பார்க்கலையே…” என துணிந்து சொல்லிவிட்டாள். 
அடுத்த அதிர்ச்சி சந்நிதி பொய் சொல்லியது. பார்கவி சந்தியாவிற்கு அவள் சொல்லியதை நினைத்து நிம்மதி எழாமல் இதை நம்பாமல் பொய்யென கண்டுபிடித்துவிட்டால் என்ன செய்வது என்கிற பயம் அதிகரித்தது.
ஆனால் அப்படி எந்த விபரீதமும் நடந்துவிடாமல் முனீஸ்வரனின் முகம் நிம்மதியை பிரதிபலிக்க மூவரும் இழுத்துபிடித்திருந்த மூச்சை விட்டனர். 
“ஹ்ம்ம் போங்க. இதே மாதிரி எங்கயுமே போனோமா வந்தோமான்னு இருக்கனும். யாராச்சும் வந்து பேசினாங்கன்னு நீங்களும் நின்னீங்க என்னை மனுஷனா பாக்க மாட்டீங்க…” என்று மிரட்டிவிட்டு எழுந்து சென்றார். 
“நிதி எப்படிடி?…” என சந்தியா தங்கையை பிடித்து கேட்க வாசல் வரை சென்ற முனீஸ்வரன் மீண்டும் உள்ளே வர திரும்பவும் நிசப்தம் அங்கே.
“என் தலை மறைஞ்சிட கூடாது. உடனே கூட்டம் கூடிடறது. இதுக்கும் சேர்த்து ஒரு முடிவு கட்டுறேன்…” என முறைப்புடன் சொன்னவர்,
“பார்கவி சந்தியா ஜாதகத்தை எடுத்துட்டு வா…” என்றதும் வேகமாய் எடுத்துகொண்டு வந்து கையில் தர வாங்கிக்கொண்டு சென்றார் முனீஸ்வரன். 
மாலை வந்த பின் நடந்ததெல்லாம் அதைவிட கொடுமை. ஜாதகத்தில் சந்தியாவின் கிரக நிலைக்கு முனீஸ்வரன் ஆசைப்பட்டது போல திருமணம் நடக்காதென்றும் சந்தியாவின் மனம் கவர்ந்தவன் தான் மாப்பிள்ளையாக வருவான் என்றும் சொல்லிவிட முனீஸ்வரனின் நடவடிக்கைகளை சொல்லவும் வேண்டுமா?
அதற்கான எங்கெங்கே என்னென்ன பரிகாரம்? எப்படி செய்யவேண்டும் என்னவென்று கேட்டு வந்தவர் அதன் பின் அதை கொண்டு குடும்பத்தினரை இன்னமும் சோதித்துவைத்தார்.
முனீஸ்வரனுக்கு ஏற்கனவே ஜோதிடத்தில் நம்பிக்கை அதிகம். இப்போது நடக்கும் நிகழ்வுகள் வேறு அவரை பயமுறுத்த செய்ய யோசிக்காமல் முடிவெடுத்தார். மூன்று மாதங்கள் இப்படியே செல்ல மாதம் இரு கோவில்களுக்காகவாவது சென்றுவருவார்.
முதல் முறையே தங்களின் குலதெய்வ கோவிலுக்கு சந்தியாவை அழைத்துசென்றவர் அங்கே சூடமேற்றி வசீகரனை பற்றி நினைக்கவே கூடாதென்று அவளிடம் சத்தியம் வாங்கியபோதே அரையுயிராகி போனாள் சந்தியா.
அங்கே பரிகாரமென்ற பேரில் கோவிலை நூற்றியெட்டு முறை அடிப்ரதட்சனம் செய்ய சொல்ல காரணம் புரியாமல் மூவருமே திகைத்து நின்றனர். விஷயத்தை விளக்கிவிட்டு வேகமாக செய்யுமாறு கட்டளை பிறப்பித்துவிட்டு பூஜைக்கு தேவையானதை பார்க்க சென்றுவிட்டார்.
“என்னம்மா இதெல்லாம்? என் மேல என்னைக்குமே அப்பாவுக்கு நம்பிக்கை வராதா? கடவுளை நம்பறவர் என்னை ஏன் நம்பலை. நானா யாரையுமே பார்க்கலை. என் கண் எதிர்க்க யாரும் கடந்து போனா கூட நான் நிமிர்ந்து பார்க்க கூடாதா?…” சந்தியாவின் அழுகை அந்த கோவிலின் பிரகாரத்தினுள்ளேயே பொதிந்துபோனது.
“என்னவோ சொன்ன நல்லதுக்கு பன்றாருன்னு நினைக்க சொல்லி. இதுவா நல்லது?…” சந்நிதி பேச,
“இதை உன்னால அப்பாக்கிட்ட சொல்ல முடியுமா நிதி?…” சந்தியாவின் கேள்வியில் தங்கையின் விழிகளில் கண்ணீர் துளிர்த்தது.
“தியா கிளம்புவோம். அடுத்த கோவிலுக்காம்மா?…” 
“உன்னை பெத்ததுக்கு என்னை மன்னிச்சிடும்மா. இத தவிர என்னால வேற என்ன முடியும்னு தெரியலை…” பார்கவி கைகூப்பிவிட மகள்கள் இருவரும் அவரை பதறி கட்டிக்கொண்டனர்.
வேறுவழியின்றி அதை செய்துவிட்டு வர இத்தோடு நின்றுவிட்டதென அவர்கள் நினைக்க அப்படி இல்லை என்று நிரூபித்தார் முனீஸ்வரன்.
வசீகரன் விளம்பரப்படம் எடுக்கிறேன் என்று அந்த ஊரை அடிக்கடி சுற்றிவர முனீஸ்வரனின் பயவுணர்வு அதிகமாகியது.
அவனிடம் நேராக சென்று இரண்டுமுறை சண்டையிட்டும் பார்த்துவிட்டார். ஆனால் அவனோ இவருக்கும் பலமடங்கு வீம்பு பிடித்தவனாக இருந்து இவரின் ரத்த அழுத்தத்தை கூட்டிவிட்டு தான் சென்றான்.
இதை யாரிடமும் சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அவஸ்தைபட்டார். பெண் விஷயமாகிற்றே பட்டென்று அவனின் மேல் கைவைக்கவும் யோசித்தார். 
அதை விட அவனும் சாதாரணப்பட்டவன் இல்லையே. தனக்கு மேல் ஏறி நிற்கிறானே? என அவனையும் லேசில் எடைபோடாமல் கவனமாய் இருக்க முற்பட்டார்.
அதைக்கொண்டு தன் பெண்ணை பார்த்துக்கொண்டால் போதும் அவன் என்ன முயன்றாலும் நடக்காது என்ற எண்ணத்தில் சந்தியாவை பாடாய் படுத்தினார்.
அன்றும் பழனிக்கு பரிகாரத்திற்கென வந்திருந்தனர். எடைக்கு எடை வாழை பழமும், வெள்ளமும் வழங்கினால் மனகஷ்டங்கள் நிவர்த்தியாகும் என்று ஜோசியர் சொல்லியிருக்க சந்நிதியின் கல்லூரி விடுமுறையன்று கிளம்பி வந்துவிட்டனர்.
வந்ததிலிருந்து எதையோ தொலைத்தது போன்ற அக்காவின் முகவாட்டத்தை பார்த்து நிதியே பொறுக்கமாட்டாமல்,
“நான் சொல்றதை கேளு தியா. பேசாம இப்படி கஷ்டப்படறதுக்கு அவர் வந்தார்ன்னா பேசி அவரையே மேரேஜ் பண்ணிக்கோ…” துடுக்காய் பேசிவிட்டாள்.
தங்கையின் பேச்சில் அதிர்ந்துபோன தியா விழிவிரித்து பேச்செழாமல் அவளை பார்க்க,
“நிஜமா தான் சொல்றேன். எங்க அப்பாவை மீறி சவால்ல அவர் ஜெயிச்சிடுவார்ன்னு தானே உன்னை பரிகாரம்ன்னு அலைகழிக்கார். நீயும் உண்மை இல்லை இல்லைன்னு சொல்லி பார்த்துட்ட. எனக்கே வெறுப்பாகிடுச்சு…”
“அதுக்கு இப்படி பேசுவியா நிதி?…”  
“வேற என்ன செய்ய சொல்ற?. இன்னும் எத்தனை நாள் இப்படி பரிகாரம்னு சுத்தி வருவ?. இதுக்கு உன்னை விரும்பறவரை மேரேஜ் பண்ணிட்டு சந்தோஷமா இரேன்…” 
“இங்கதான் நீ தப்பு பன்ற நிதி. அவர் என்னை விரும்பவே இல்லை. இதை நான் அடிச்சு சொல்லுவேன்…” சந்தியா குரலில் அத்தனை நிச்சயம்.
“என்ன சொல்ற தியா? பிடித்தம் இல்லாமலா அவர் நாம போற இடத்துக்கெல்லாம் சுத்தி சுத்தி வாரார்? வீட்டு பெரியவங்களை பேச அனுப்பியிருப்பார்?…”
“வீட்டு பெரியவங்க வந்தாங்க சரி. ஆனா அவர் தான் அனுப்பினார்ன்னு நமக்கு தெரியாதே. அவங்க அம்மாவுக்கு பிடிச்சு கூட அவங்க பேச வந்திருக்கலாம். பெத்தவங்களை அசிங்கப்படுத்திட்டாங்கன்ற கோவத்துல அவர் சவால் விட்டிருக்கலாம். இதுக்கெல்லாமா கல்யாணம் செய்வாங்க?…”
“அப்ப அவர் சொன்னது?…”
“அப்பாவை கோபப்படுத்த கூட சொல்லியிருக்கலாம். பயம்காட்ட கூட. இப்ப அதுதான் வெளிய செய்யுது. என்னை படுத்தறார் அவரோட பயத்துக்கு…” என வேதனையாய் புன்னகைக்க சந்நிதி இன்னமும் யோசனையிலேயே இருக்க,
“நிதி இத்தனை நாள்ல கிட்டத்தட்ட ஒரு பதினைஞ்சு தடவையாச்சும் அவரை பார்த்திருப்போம். என்னை பார்க்கும் போது அவர் பார்வையில் அந்த உணர்வை நான் பார்த்ததே இல்லையே. ஒரு ஆர்வமான பார்வை, ரசனை, விருப்பம், ஆசைன்னு எதுவுமே இல்லை…”
“பின்ன எதுக்காம் நம்ம ஊர்க்கு அடிக்கடி வரார்?…” 
“அவர் வேலைக்கு எதுக்காகவும்  இருக்கலாம். நம்மை பார்க்கும் போது பேசும் போது எல்லாம் அப்பா  மேல உள்ள கோவம் தான் வெளிப்படுத்தே தவிர வேற எதுவும் இல்லை. இத்தனை நாள்ல ஒரு தடவை கூட என்கிட்டே அந்த அர்த்தத்தில அவர் பேசலை. முயற்சி கூட பண்ணலை…”
“அப்ப உனக்கும் இஷ்டம் இல்லைன்னு சொல்றியா? அப்பாக்கிட்ட அவர் பார்த்ததா சொன்னியே…”
“ஹ்ம்ம், அவர் நம்ம குடும்பத்தை  பார்த்தார். அவங்கம்மா பார்த்தாங்க. ஆனா அவர் ஒரு தடவை தான் பார்த்தார் எல்லாரையும். மத்த நேரம் எல்லாம் பார்வை மேடையில தான் இருந்தது. அவங்கம்மா தான் அடிக்கடி பார்த்தாங்க. அதை தான் அப்பாக்கிட்ட சொன்னேன்…”
“இதை இத்தனை விளக்கமா அப்பாக்கிட்ட சொல்ல வேண்டியது தானே? அன்னைக்கு ஏன் அப்படி சொன்ன?…”
“அன்னைக்கு அவரை பார்த்திருந்தாலும் நான் சொல்லியிருக்க மாட்டேன். அப்பா விளக்கமும் கேட்க மாட்டார். பார்த்தேன்னு சொன்னாலும் விடமாட்டார். நான் சொன்னது அந்த அர்த்தத்தில். அவங்கம்மா பார்த்துட்டே இருந்தாங்கன்னு சொல்ல வந்தேன்…”
“அவரை பார்த்திருந்தாலும் நான் சொல்லியிருக்க மாட்டேன்” என்ற சந்தியாவின் வார்த்தையில் திடுக்கிட்டாள் சந்நிதி.
“நானும் சொல்லவில்லை தானே? பார்த்ததையும் பார்க்க வைத்ததையும். இதே பயம் தானே வாயடைக்க செய்தது.  பின் எதற்காக சந்தியாவை பெண் கேட்டு வந்தனர்? ஒரு வேளை?” என யோசித்து குழம்பியவள் அமைதியாக இருக்க,
“இங்க பாரு நிதி, இதையும் மீறி எனக்கு அவர் மேல எந்த அபிப்ராயமும் இல்லை. சண்டை போட்டவர் போனதோட இல்லாம பொண்ணை பார்த்தேன் பார்க்கவச்சேன்னு மாட்டிவிட்ட மாதிரி பேசிட்டு போய்ட்டாரு. இங்க கிடந்து அல்லல் படறது நான். இதுக்கு மேலையுமா அவரை நான் நினைப்பேன்னு நினைக்க? நிச்சயமா இல்லை…” 
சந்தியா தன் மனதை தங்கையிடம் அப்பட்டமாய் வெளிப்படுத்த குழப்பமான நிதி தியாவிடம் எதையும் அப்போதும் வாய் திறந்து கூறினாள் இல்லை.
முதலில் சொல்லாததற்கு காரணம் முனீஸ்வரன். இப்பொழுதும் சொல்லியிருக்கலாம் தான். ஆனால் இன்னொரு குழப்பம் வேண்டாம் என நினைத்து முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும் என நினைத்தாள்.
நான் பார்த்தேன். பார்த்தது என்னுடன் போகட்டும். என்னை பார்க்கிறானே என்றுதான் பார்த்தேன். ஆனால் அவன் சொல்லியது உண்மை. பார்க்க வைத்தான் தானே? பார்த்தது என் தவறு.
அதைவிட ஆழமான பயம் ஒன்றை உணர்த்தியது. இதை நான் சொல்லி ஏதோ ஒரு வகையில் தந்தைக்கு தெரிந்துவிட்டால் தன்னையும் பரிகாரம் என்கிற பெயரில் வதைக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்று அஞ்சியே வசீகரனின் பார்வைகளை அடிமனதினுள் புதைத்தாள்.
ஆனால் வசீகரன் அப்படி விட்டுவிடுவானா? அடுத்த காயை நகர்த்திவிட்டான்.
அதனை கொண்டு சந்நிதியும் அவனை நேரில் பார்த்து பேச வந்துவிட்டாள் கோபமாய்.

Advertisement