Advertisement

தீண்டல் – 5
      வசீகரன் அங்கிருந்து சென்றதும் கதவை வேகமாய் அறைந்து சாத்தினார் முனீஸ்வரன். அவரின் பார்வை இரு பெண்களையும் ஆராயும் விதமாய் இல்லாமல் குற்றவாளியை பார்ப்பது போல இருந்தது.
“கல்யாண வீட்டுக்கு கூட்டிட்டு போனா என்ன இழவை இழுத்துட்டு வந்திருக்க? இதுக்குத்தான் உன்னை பெத்து வளர்த்து ஆளாக்கினேனா?…” அருகே நெருங்க நெருங்க பின்னால் ஒடுங்கினாள் சந்தியா.
“ஏய் சிறுசு, தள்ளி போய்டு…” என சந்நிதியை பார்க்க அவள் தாயிடம் சென்று நின்றாள்.
“ம்மா, நீங்க சொல்லுங்கம்மா ப்ளீஸ்…” என அக்காவிற்காக தாயிடம் பேச,
“என்ன்னங்க…” நடுக்கத்துடன் கணவரை அழைத்தார் பார்கவி.
“வாய மூடிட்டு நில்லு. இல்ல மூணுபேரையும் கொன்னுட்டு தான் மறுவேல…” என விரல் நீட்டி எச்சரித்து சந்தியாவிடம் திரும்ப,
“சொல்லு அவனை பார்த்தியா? சொல்லுன்றேன்ல…” அவரின் மிரட்டலில் வாய் வரை வந்துவிட்ட வார்த்ததைகளை சந்நிதி கடகடவென விழுங்கினாள். 
“சத்தியமா நான் அவர் சொன்ன அர்த்தத்தில் பார்க்கலைப்பா. அவங்க நம்ம குடும்பத்தையே அடிக்கடி பார்த்துட்டு இருந்தாங்க. ஒரு வேளை நம்மளை தெரிஞ்சவங்களோன்னு தான் பார்த்தேன். வேற ஒண்ணும் இல்ல. சத்தியமா இல்லை. நம்புங்கப்பா…” 
முனீஸ்வரனின் காலில் விழுந்து அழுதாள் சந்தியா. சந்நிதி பார்கவியின் கையை பிடித்துக்கொண்டு நடுங்கியபடி நின்றாள்.
“நான் கூட இருக்கும் போதே அவனை நீ பார்த்திருக்க. அதான் அவன் என்னை இளக்காரமா பேசிட்டு போறான். இத சொல்லித்தான் நான் உங்களை வளர்த்தேனா? சந்தி சிரிச்சு போச்சு. ஊரே வாசல்ல வேடிக்கை பார்த்திருச்சு. இனி நான் எப்படி வெளில தலைகாட்டுவேன்…”
முனீஸ்வரனின் தீ பார்வை இப்பொழுது பார்கவியை சுட அவருக்கு அந்த நொடியே மரித்துவிடமாட்டோமா என்னும் அச்சம் கண்களை நிரப்பியது.
“பொம்பளைப்புள்ளையா போய்ட்டீங்க. இல்ல உரிச்சு உப்பு தடவியிருப்பேன். இனி அவன் இந்த ஊர்ல தட்டுப்பட்டான் நடக்கறதே வேற…” என்று எச்சரித்துவிட்டு நகரவும் தாயை கட்டிக்கொண்டு அழுதனர் சந்தியாவும் சந்நிதியும்.
“போதும் பிள்ளைங்களா. வாங்க உள்ள போவோம்…” என மகள்களை சமாதானம் செய்து அறைக்குள் அழைத்துவந்தவர் குடிக்க நீரை தர சந்தியா அவரை கட்டிக்கொண்டு அழுதாள்.
“நான் அப்படி எந்த எண்ணத்திலையும் அவங்களை பார்க்கலைம்மா. சாதாரணமா தான் பார்த்தேன். அவங்களும் அப்படித்தான் சும்மா பார்த்தாங்கன்னு நினைச்சேன். இப்படி வருவாங்கன்னு நினைக்கலை. நம்புங்கம்மா. அப்பா ஏன் என்னை நம்பமாட்டேன்னு சொல்றாரு?…” 
சந்தியாவின் அழுகையில் சந்நிதியும் பார்கவியும் கலங்கி நின்றனர். அவளை தேற்றமுடியாமல் இருவரும் தவித்து போயினர்.
————————————————————–
காஞ்சிபுரத்திலிருந்து கிளம்பி நேராக வீட்டிற்கு வந்துவிட்டான் வசீகரன். சூர்யா நடந்ததை அனுபமாவிடம் சொல்ல அவள் குகனிடமும், அம்பிகாவிடமும் சொல்ல குகனுக்கு அத்தனை கோபம். ஆனால் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருந்தார்.
காரில் வரும் பொழுது ராதா நீதிமாணிக்கம், முனீஸ்வரன் குடும்பத்திற்கு இடையேயான பிரச்சனைகளை விளக்கமாக எடுத்து சொல்லி இன்றுவரை முனீஸ்வரன் குணத்தையும் சொல்ல அம்பிகாவினுள் கசந்த முறுவல்.
அதிலும் அந்த வீட்டு பெண்கள் மீது ரூ தாயாய், சக பெண்ணாய் மனிதாபிமானமுள்ள மனிதியாய் இரக்கம் இயல்பாகவே சுரந்தது. 
வழியிலேயே ராதாவை அம்பிகா சமாதானம் செய்து அவரின் வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தனர். அனுபமாவை கிளம்ப சொல்ல அவளோ சூர்யா வரவும் கிளம்புவதாக சொல்லி அவர்களிடம் சிறிது சிறிதாக பேச்சுகொடுத்து கொஞ்சம் சூழ்நிலையை மாற்ற முயன்றாள். 
வசீகரன் வந்ததுமே தாயின் முகத்தை ஆராய்ந்தவன் குகனின் அருகில் வந்து அவரை கட்டிக்கொண்டான்.
உணர்ச்சியின் பிடிக்குள் குடும்பம் நுழைய சூர்யா அனுபமாவை கூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டான் எவரிடமும் சொல்லிக்கொள்ளாமல். அவர்கள் கொஞ்சம் இதிலிருந்து வெளியே வரவும் பார்த்துக்கொள்ளலாம் என கிளம்பிவிட்டான்.
“ஸாரிப்பா, இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை. நான் எதிர்பார்க்கவே இல்லை….” என்றவனின் கண்கள் லேசாய் கலங்க அதை காண பொறுக்காமல்,
“அட ஏன்பா? வசீ கண்ணா, இதுக்கு போய் வருத்தப்பட்டுக்கிட்டு. ப்ச் விடு. இது ஒரு விஷயமே இல்லை. கொஞ்சம் கவலை தான். ஆனாலும் வருத்தமாவும் இருக்கு. இந்தளவுக்கு எங்கயும் அவமானப்பட்டதில்லை. அதுதான் அசிங்கமா போச்சு…”
“ப்பா…”
“விடு பரவாயில்லை. அந்த மாதிரி ஆளுங்கட்ட வேற என்ன எதிர்பார்க்க?…” என்று குகன் சொல்ல அம்பிகாவின் கையை பற்றி அழுத்தம் கொடுத்தான் வசீ.
தாயிடம் பேசமுடியவில்லை. அவமானத்தை தேடித்தந்துவிட்டோமே என்கிற மருகலில் முகம் சுண்டிப்போய் அவரின் தோளில் சாய்ந்துகொண்டான்.
“ப்ச், வசீ விடு. நமக்கு முதல்லையே தெரிஞ்சிருந்தா போயிருக்கவா போறோம். விடேன்…” என அம்பிகா சொல்ல அவரின் வாயை தன் விரல்களால் பொத்தியவன் மௌனமாய் கண் மூடிக்கொண்டான்.
பத்துநிமிடங்களுக்கும் மேலாய் அங்கே மௌனம் சூழ்ந்திருக்க அந்த நிலை பிடிக்காது அம்பிகா தான்,
“என்னடா தூங்கிட்டியா அப்படியே?. வேணும்னா ரூம்ல போய் ரெஸ்ட் எடு…” என முதுகில் தட்ட,
“ம்மா, நீங்க இருக்கீங்களே?…” என நிமிர்ந்தவனின் முகம் பழைய தெளிவை மீட்டெடுத்திருந்தது. அதை பார்த்து அம்பிகாவும் புன்னகைக்க,
“இதை விட்டுட்டு வசீ. நினைச்சு பீல் பன்ற அளவுக்கு வொர்த் இல்லை…” குகன் சொல்ல,
“பாவம் வசீ அந்த பொண்ணுங்களும், அந்தம்மாவும்…” என அம்பிகா சொல்ல அதை கேட்க பிடிக்காது குகன் எழுந்து சென்றுவிட்டார்.
“அவரை விடு, நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லு. நிஜமாவே வேண்டாமா உனக்கு. முடிவே பண்ணிட்டியா…” தவிப்பும் குழப்பமுமாய் தாய் கேட்க மகன் அவரின் முகத்தையே சலனமின்றி பார்த்துகொண்டிருந்தான்.
“கேட்டதுக்கு பதில் சொல்லாம என்னையே பார்த்திட்டிருக்க. இப்படியே பார்த்துட்டே இருந்தா போர் அடிச்சு தூக்கம் வந்திரும். பதில் சொல்லு…” என்றவரின் பேச்சில் வாய்விட்டு நகைத்தவன்,
“அந்தாளு அவ்வளவு பேசியும் அந்த வீட்டு பொண்ணுங்களை பத்தி இத்தனை கவலைப்படறீங்க? என்ன பீஸ் நீங்க?…”
“எல்லாம் மாஸ்டர் பீஸ் தான்…” என்றவர்,
“இங்க பாரு வசீ, என்னைக்கு உனக்கு அந்த பொண்ணை பிடிச்சதோ ஏனோ அவ மனசுக்கு நெருக்கமாகிட்டா. அவரோட குணமே இப்படித்தான்னு இருக்கும் போது யாரால மாத்த முடியும்? அதுக்குன்னு மன்னிக்கிற தியாகியெல்லாம் இல்லை நான். திருப்பி கேட்கிற நேரம் நானும் கேட்பேன். என்ன அவர் அளவுக்கு கேட்கமுடியாது…” 
சிரித்தபடி சொன்னாலும் அவமானப்பட்டதின் சுவடுகள் இன்னும் சாயம் கலையாமல் மிச்சம் இருந்தது அவரின் முகத்தில்.
“இனி எதுவும் பேசவும் வேண்டாம், நாம பார்க்கவும் வேண்டாம் இதோட இதை விடுங்க…” ஆச்சர்யமாய் அம்பிகா கேட்க,
“ம்மா அந்தாளோட என்னால குடும்பம் நடத்த முடியாது…” 
“என்னடா உளறுற?. அவரோட குடும்பம் நடத்தவா?…” அம்பிகா திகைக்க,
“அவர் பொண்ணை கட்டினா அந்த வீட்டுக்கு போய் குப்பை கொட்டி குடும்பம் நடத்தனும்ல. அந்த வீட்டுல அவரும் சேர்த்தி தானே?…” மகன் விளக்க,
“முடியலைடா உன்னோட. அதென்னடா குப்பை கொட்டுறது?…”
“போனா போனமாதிரியேவா இருப்பாங்க. அதெல்லாம் உங்களுக்கு புரியாது. வேற வேற ம்க்கும்…  ப்ச்…. வேற பொண்ணை பார்த்துப்போம்…” அவனின் குரலே சரியில்லாமல் இருக்க,
“வசீ நிஜமாவேவா சொல்ற?…” மகனுக்கே தாய் கலங்கினார்.
“ப்ச், பார்த்தேன், பிடிச்சிருந்துச்சு. பேசலாமேன்னு உங்கட்ட சொன்னேன். என்னமோ ரதியை பெத்து வச்சிருக்கறவராட்டம் சிலுப்பினா. எனக்கு அதுக்கு மேல தெரியும்…”
“பின்ன எதுக்குடா சவால் விட்ட?…”
“இந்த மாதிரி ஆளுங்களை ஒரு ரெண்டு மூணு நாலாவது தூங்கவிடாம செய்யனும்மா. நான் என்ன பண்ணுவேனோன்னு கிடந்து அல்லாடட்டும். விடுங்க…” என சொல்லிவிட்டு எழுந்து தனதறைக்கு சென்றுவிட அம்பிகாவின் மனதுதான் பாரமாகிவிட்டது.
அவருக்கு புரிந்தது மகன் உதட்டளவில் தான் இதை சொல்கிறான் என்று. ஆனால் வேறு வழியும் இதற்கில்லையே. 
ஆனால் அறைக்குள் சென்ற வசீகரனுக்கு இதை இப்படியே விட்டுவிடுவோம் என்பதில் நம்பிக்கை இல்லை. எதுவோ மனதடியில் கிடைந்து குடைந்தது. 
வேறு பெண்ணை பார்த்துக்கொள்ளலாம் என்ற வார்த்டஹியாயி இயம்பும் பொழுது அவனின் உயிரை எதுவோ பிசைந்தது. கண்களை மூடி கட்டிலில் சாய்ந்தான்.
மூடிய விழிகளுக்குள் மிரட்சியான அவளின் முகம் அவனை இம்சைக்குள் ஆக்கியது. மீண்டும் எழுந்து அமர்ந்தவனின் மனது சமன்பட மறுக்காமல் போக,
“இரண்டு நாட்களுக்கு முன் பார்த்த ஒரு பெண்ணுக்காய் தான் இந்தளவிற்கு தடுமாறுவதா?” என்கிற கோபம் அவனின் ஈகோவை பதம் பார்த்தது.
வலுக்கட்டாயமாக தன்னுடைய நினைவு பெட்டகத்திலிருந்து அவளை அவளின் நினைவை, பார்வையை அழிக்க முயன்றான். வலி. இந்த வலி. இதுநாள் வரை உணராத ஒரு வலி. இதோ இப்போது உணர்ந்துகொண்டானே.
“நோஓஓஓஓஒ…” என மனதிற்குள் கத்துவதாக எண்ணி வாய்விட்டு ஓலமிட அவனுக்கு சாப்பாட்டை எடுத்து வந்த அம்பிகா பதறி போனார்.
“வசீ…” என மகனை அழைத்து அவனருகே வர ஒரு நிமிடம் முகம் கன்றிபோனது வசீகரனுக்கு. 
வெளியில் வீராவேசமாக பேசிவிட்டு அறைக்குள் வந்து குமுறும் தன்னை எண்ணி வெட்கி தலை கவிழ்ந்தான்.
“வசீ…” அருகில் அமர்ந்த அம்பிகா அவனை மதி சாய்க்க,
“ஸாரிம்மா. என்னவோ பண்ணுது. இது நாள் வரை இப்படி ஒரு பீல் நான் பீல் பண்ணினதே இல்லை. இப்ப நான் என்ன செய்யன்னு தெரியலை…” தன்னுடைய மனக்குழப்பத்தை தாயிடம் மறையாமல் ஒப்புவிக்க அம்பிகாவிற்கு சிரிப்புதான் வந்தது.
“அட இதுக்கு போய் ஆய் ஊய்ன்னு கத்தி கலாட்டா பண்ணுவாங்களா? மனசுக்கு பிடிச்ச பொண்ணு தானா அமையிறது வரம்னு சொல்லுவாரு உங்கப்பா. நான் அப்படித்தான் அமைஞ்சேனாம். அப்படிப்பட்ட வாழ்க்கை சொர்கத்துக்கு சமம்னு சொல்லுவார்…”
“….”
“இப்ப சொல்லு என் பையனுக்கு அந்த மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சிருக்கா. இதுல நீ தான் முடிவெடுக்கனும். இன்னைக்கு நாங்க அனுபவிச்ச அவமானம் கொஞ்ச நாள் போனா சரியாகி மறைந்சும் கூட போய்டலாம். ஆனா விரும்பின பொண்ணை இழந்துட்டோன்ற வலி எதிர்காலத்துல அவளை இன்னொருத்தன் கூட பார்க்கும் போது உனக்கு தோன்றிட்டா அதுவரை நீ வாழ்ந்த வாழ்க்கைக்கே அர்த்தம் இல்லாம போயிடும்…”
“அதுக்கு நீ பிடிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிறது பெட்டர். எங்களுக்கும் பிள்ளையோட சந்தோசம் தான் முக்கியம்…”
“ம்மா…” என தாயை கட்டிக்கொள்ள,
“விட்ட சவாலை சவாலா பார்க்காத. உன்னோட, அந்த பொண்ணோட வாழ்க்கையா பாரு. உன் மாமனாரை சரிபண்ண உன்னால முடியாதா என்ன?…”
“அந்தாளு மனுஷனே இல்லம்மா…”  வசீகரன் இப்பொழுதும் சூடாக,
“ப்ச், இதென்ன அந்தாளு இந்தாளுன்னு?…” அம்பிகா அதட்ட,
“அட போங்கம்மா…” இவன் அலுக்க,
“உன்னால முடியாதுன்னு நினைக்கிறியா வசீ?…” மகனின் குணம் அறிந்து பற்றவைத்தார் தாய்.
“ஏன் முடியாம? பார்த்துட்டே இருங்க. தானா அவரே வந்து நம்மகிட்ட சம்பந்தம் பேசுவாரு. நீங்க அன்னைக்கு கெத்தா பேசறீங்க…”
“இது இதுதான் வசீ…” என மகனின் கன்னம் கிள்ளியவர் அவனுக்கு ஊட்ட ஆரம்பித்தார்.
“ப்ச் எதுக்கு ஹோட்டல்ல ஆடர் பண்ணுனீங்க? அதுவும் இந்த ஹோட்டல் எனக்கு பிடிக்கவே பிடிக்காது. இந்த அனு பண்ணின வேலை தானே இது? சாம்பார் வேண்டாம். நான் தாயின் ஊத்திக்கறேன். ஒரு ஆம்லேட் கொண்டுவாங்க…” என ப்ளேட்டை கையில் வாங்கியவன் அவரோடு சேர்ந்து கீழே வந்தான் பேசிக்கொண்டே.
இரண்டு நாட்களுக்கு பின்னர் ரவியிடம் சூர்யா பேசிக்கொண்டிருக்க வசீகரன் அப்பொழுதுதான் தங்கள் அலுவலகம் வந்தான்.
“வசீ ரவியும் நானும் காஞ்சிபுரம் போய்ட்டு வரோம். ஈவ்னிங் வந்திருவோம்…” என தகவலாக சொல்லி கேமரா வைத்திருக்கும் பேக்கை தூக்கிக்கொள்ள,
“எதுக்கு?…” என்றான் வசீகரன்.
“அங்க ஒரு பட்டு வேஷ்டி ஷர்ட் ஆட் பன்றோம்னு ஒத்துக்கிட்டோம்ல. அவங்களட்ட இன்னைக்கு வரதா சொல்லியிருந்தோம். அதுக்குதான்…” 
“என்ன நேம்?…”
“நீதிஉமையாள் பட்டு வேஷ்டிகள்…” என மெதுவாய் சொல்ல,
“இதுக்கேன்டா பம்மிட்டு சொல்ற? என் பெரியமாமனார் கடைக்குன்னு சொன்னா என்ன?…” என்றவன் ரவியின் கையில் இருந்த பேக்கை பிடுங்கி,
“இந்த ஆட்க்கு நான் வரேன் லொகேஷனும் அங்கயே பார்த்திடலாம். வா…” என முன்னாள் நடக்க,
“என்ன ஏழரையை இழுத்துவிட போறானோ? அந்தாளை பார்த்தா கூட பயமா இல்லைடா. இவன் அந்தாள பேசி பேசி பிபி ஏத்திவிடறான். கொலகேஸ்ல மாட்டிக்கிட்டா குடும்பம் நடுவீதி தான்…” என ரவியிடம் புலம்பிக்கொண்டே வாசலில் நின்ற காரில் ஏறிக்கொண்டான்.
“வசீ, ஏன்டா நேத்து ஏதோ முடிவெடுத்துட்டன்னு சொன்னியே அந்த பொண்ணு வேண்டாம் அது இதுன்னு….”
“நேத்து எங்க சொன்னேன்? ரெண்டு நாள் முன்னாடி தான சொன்னேன்…”
“ரொம்ப முக்கியம் போயே ஆகனுமா?…” என்றவனை அழுத்தமாய் வசீகரன் பார்த்துவைக்க,
“சிங்கம் களத்துல இறங்கிடுச்சு. வேட்டை உறுதி தான் போலையே…” சூர்யா கண்களை மூடிக்கொண்டு மனதினுள் புலம்பி தீர்த்தான். 
நேராக நீதிமாணிக்கம் கடைக்கு செல்லாமல் வரதராஜபெருமாள் கோவிலுக்கு சென்றனர்.
“இது எதுக்குடா?…” 
“காரணமா தான். வா…” என்றவன் காரை நிறுத்திவிட்டு கோவிலுக்குள் செல்ல அங்கே புகழ் காத்துக்கொண்டிருந்தான் அவர்களுக்காக.
“நான் கேட்டதும் இங்க வந்ததுக்கு தேங்க்ஸ்…” என்றான் வசீகரன். 
“நீங்க போய் தரிசனம் முடிச்சுட்டு வாங்க. நான் ஒரு போன் பண்ணிட்டு வரேன்…” என்று சொல்லி நகர்ந்துகொண்டான்.
“எப்படிடா இப்படி?…” சூர்யா வாயை பிளக்க,
“அம்மா, ராதா ஆன்ட்டி, புகழ்…” ரத்தினசுருக்கமாய் பெயர்களை மட்டும் சொல்ல,
“நீ கேடிடா…” என்றவன் எதிரே வந்துகொண்டிருந்தவர்களை பார்த்து அப்படியே அதிர்ந்து நின்றான். 
ஆனால் வசீகரனுக்கு அந்த அதிர்ச்சி எல்லாம் இல்லை. இதை எதிர்பார்த்ததை போல அழுத்தமான பார்வையுடன் அவர்களை நெருங்கினான். அங்கே சந்தியாவும் சந்நிதியும்.
சற்றும் வசீகரனை சகோதரிகள் எதிர்பார்க்கவே இல்லை அந்த கோவிலில். பயத்தில் தொண்டை அடைக்க உயிர் பறவை எங்கே இதை தன் தந்தை பார்த்துவிடுவாரோ என்று அஞ்சியது.
வேகமாய் அந்த இடம் விட்டு ஓடப்பார்த்தவர்களை கண்டு உள்ளம் கடுகடுக்க மறைத்து சென்று நின்றான்.
“என்ன பூச்சாண்டியை பார்க்கிற மாதிரி இந்த ஓட்டம் எடுக்கறீங்க அக்காவும் தங்கச்சியும்? எத்தனை பாரதி வந்தாலும் உங்களை திருத்த முடியாது…” ஏளனமாய் சொல்ல,
“அப்பாக்கு தெரிஞ்சா கொன்னே போடுவாங்க…” சந்தியா சொல்ல,
“நீ இவளை விட பெரிய பொண்ணு தானே? தைரியமா இருக்கவேண்டியது தானே சந்தியா?…” வசீகரன் ஒருமையில் அழைத்துவிட,
“முன்னப்பின்ன தெரியாதவங்க இப்படித்தான் பார்த்ததும் பேர் சொல்லி சிங்குலர்ல கூப்பிடுவாங்களா? தப்பு…” முறைப்பாய் நிதி சொல்ல,
“என் வயசுக்கு நீங்க ரெண்டு பேருமே சின்ன பொண்ணுங்க தான். தப்பில்லை. அதுவும் உறவாக போறோம். தப்பே இல்லை…” வியாக்யானம் பேசி அவர்களை கதிகலங்க வைத்தான்.
“தியா…” என வந்த பார்கவி வசீகரனை அங்கே எதிர்பார்க்கவில்லை. அய்யோ என பயந்தவர்,
“இங்க என்ன பேச்சு. வாங்க போகலாம்…” என்றவர் வசீகரனை இறைஞ்சும் பார்வை பார்த்துவிட்டு சென்றார்.
“ஆனாலும் நீயும் மனுஷனே இல்லைடா. இரக்கமே இல்லாம அந்த பொண்ணுங்க பயப்படறதை பார்த்து அசராம நிக்கிற?…”
“வலிக்காம ஆப்பரேஷன் பண்ண முடியாதுடா…”
“என்ன ஆப்பரேஷன்?…”
“ஆப்பரேஷன் முனீஸ்…” வசீகரன் புன்னகையோடு சொல்ல புகழ் அதற்குள் வந்துவிட்டான்.
“ராதா சித்தி தான் பேசினாங்க. உங்களுக்கு ஹெல்ப் பண்ண சொல்லி…” 
“தேங்க்ஸ் புகழ். நீங்களாவது என்னை புரிஞ்சதுக்கு…” வருங்கால மச்சானின் கையை பிடித்து குலுக்க,
“இதுவே வேற மாதிரி நீங்க கேட்டிருந்தா நானும் வேற மாதிரி நடந்திருப்பேன். ஏனா இது என் தங்கச்சிங்க சம்பந்தப்பட்டது. இந்த இடத்துல ஒரு அண்ணனா தான் நான் யோசிப்பேன். இப்பவும் அதுக்காக தான் ஹெல்ப் பன்றேன்…”
“உங்களை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்குது…” மேஜர் சுந்தர்ராஜன் போல சூர்யா ஒரு அடி நிமிர்ந்து சொல்ல,
“நீங்க என்னை கலாய்க்கிறீங்கன்னு தெளிவாவே புரியுது ப்ரோ. ஆனா என் சித்தப்பா விட்டா அவரை மாதிரியே ஒரு ஆளை பிடிச்சு பொண்ணுங்களுக்கு கட்டிவச்சாலும் வைப்பார்…” என்றவன்,
“சந்தியா ரொம்ப லக்கி…” என சில்லாகிக்க ஒரு நொடி புருவம் சுருக்கியவன்,
“உங்க சித்தி இன்னும் முழுவிபரமும் உங்ககிட்ட சொல்லலைன்னு நினைக்கேன். ஐ மீன் நான் நேத்து போன்ல பேசினதை பத்தி…” 
“இங்க உங்க வீட்டில இருந்து சித்தியோட வரப்ப சித்தப்பா பண்ணின கலவரத்தை சொல்லி வருத்தப்பட்டாங்க. அப்பறம்…” என்றவன் யோசனையாக நோக்க,
“ஹ்ம்ம் நான் மேரேஜ் பண்ணிக்க ஆசைப்பட்டது, ஆசைப்படறது சந்தியா இல்லை. சந்நிதியை…” அமர்த்தலாக வசீகரன் சொல்ல,
“வாட்? அது எப்படி?…” என்றது ராதாவிடம் பேசினதையும் முனீஸ்வரனை சமாளிக்க வகுத்து வைத்திருக்கும் வியூகத்தையும் புகழுக்கு விளக்க அனைத்தையும் கேட்டவன்,
“இது மட்டும் அந்த சனீஸ்வரனுக்கு தெரிஞ்சா என்னை என்ன கேள்விலாம் கேட்பார் தெரியுமா?…” புகழ் கேலியை சொல்ல,
“முதல்ல சந்தியாவை சேவ் பண்ணனும்…” வசீ சொல்ல,
“பொருத்தமான பேர் உங்க சித்தப்பாவுக்கு…” சூர்யா அவனுடன் சேர்ந்து சிரித்தவன்,
“வசீ இதுக்கு பேர் தான் சந்துல சிந்து பாடறதா?…” என நண்பனையும் சூர்யா விட்டுவைக்கவில்லை. ஆனால் வசீகரனின் முகம் தீவிரம் காட்டியது.

Advertisement