Advertisement

தீண்டல் – 29
                 புகழுடன் கடைக்கு சென்றவன் சிறிது நேரம் இருந்துவிட்டு கிளம்ப அவன் வீட்டில் வந்து ஏதாவது சாப்பிட்டு செல்ல அழைக்க இன்னொருமுறை வருவதாக சொல்லிவிட்டு சூர்யாவை ட்ரைவ் பண்ண சொல்லி இவன் அமர்ந்துகொண்டான். புகழுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. யாருக்கென்று பேசுவான்?                 
“வசீ எதுக்கு இவ்வளோ அப்செட் ஆகற? ஒருவேளை நிதிக்கு வீட்ல வேலை இருக்கோ என்னவோ?…”
“எத்தனை வேலை இருந்தாலும் எனக்காக அவ வந்திருக்கனுமில்லையா?…”
“இத்தனை கோபம் வருதே? அப்போ நிதிக்கும் கபம் வராதா என்ன? எத்தனை தடவை உனக்கு மெசேஜ் பண்ணுச்சு? அத்தனை திமிராடா உனக்கு?…”
“எனக்கு திமிரா?…”
“இல்லைன்னா இதுக்கு வேறென்ன அர்த்தம்?…” வசீகரன் அமைதியாக இருக்க,
“உன்னை பார்க்க வரலைன்னா உனக்கு இத்தனை கோபம் வருது. ஆனா நீ மட்டும் என்ன வேணாலும் பண்ணலாமோ?. ஏன் நீ போய் பார்த்திருக்க வேண்டியது தானே?…” என்று வறுத்தெடுக்க வசீகரனுக்கு அத்தனை ஆற்றாமையாக இருந்தது. ஒருவரும் தன்னை புரிந்துகொள்ளவில்லையே என. 
கண்ணை மூடிக்கொண்டான். இன்னும் சிறிது நேரத்தில் சந்நிதியுடன் தான் சந்திக்கும் அந்த இடம் வந்துவிடும். பார்க்க பிடிக்கவில்லை. 
இரண்டு முறை வந்துவிட்டு இந்த வழியே திரும்பும் பொழுது அதை பார்க்க பார்க்க மனதினுள் ஒருவித சந்தோஷம் குமிழியிடும். இன்று அதை பார்க்க விரும்பாமல் கண்ணை மூடிவிட கார் நின்றுவிட்டது. 
“என்னாச்சுடா?…” என கண்ணை திறக்காமல் கேட்க, 
“நீயே கண்ணை திறந்து அங்க பாரு…” என்றதும் என்னவோ என்று தான் பார்த்தான். பார்த்தவனுக்கு தன் கண்களையே நம்பமுடியவில்லை. சூர்யா சிரிப்புடன்,
“டேய் உனக்காக தான்னு நினைக்கேன். நீ இப்படி ஸ்டன் ஆகிட்ட? போடா…” என தள்ளவும் வசீகரனுக்கு அத்தனை கோபம்.
“இங்க எப்படி தனியா நிக்கிறா பாரு? இவள…” என கோபத்துடன் இவன் இறங்கி வேகமாய் அவளை நோக்கி நடந்தவன்,
“அறிவிருக்கா நிதி? இப்படியா இந்த வெயில்ல தனியா அத்துவான காட்டுக்குள்ள நிப்ப? கொஞ்சமும் யோசிக்கமட்டியா?…” என திட்டிக்கொண்டே அவளிடம் வர அவன் நெருங்கும் முன் அவனை கட்டிக்கொண்டிருந்தாள் சந்நிதி.
இதை வசீகரன் சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை. அவளின் இந்த அணைப்பே சொல்லியது அவனுக்காக எத்தனை தூரம் அவள் காத்திருந்திருக்கிறாள் என்று. நொடிக்கு நொடி அவளின் அணைப்பு இறுகிக்கொண்டே செல்ல கண்ணீர் அவனின் இதயத்தை நனைத்தது.
“நிதி அழறியா?…” அவளை நிமிர்த்த பார்த்தவன் முடியாமல் போக அழுகை தீருமட்டும் அமைதியாய் இருந்தான் அவளின் தலையை வருடியபடி.
சட்டென அவனிடமிருந்து விலகி வேகமாய் நடக்க ஆரம்பிக்க அவளின் கையை பிடித்து நிறுத்தியவன் தன் நெஞ்சினுள் புதைக்க சுகமாய் ஒப்புக்கொடுத்தாள் தன்னை.
“படுத்தற நிதி. ஐ மிஸ் யூ சோ மச்…” என சொல்லிக்கொண்டே பார்த்தவன் தூரத்தில் புவன் பைக்குடன் நிற்பது தெரிந்தது.
“உன் அண்ணன் கூடத்தான் வந்தியா?…” என்றதற்கு தலையசைப்பு மட்டுமே அவளிடம்.
“சரி வா இப்படியே ஊருக்கு போகலாம்…” என்றதும் வேகமாய் அவள் நிமிர்ந்து பார்க்க அவளின் கண்களில் என்ன கண்டானோ,
“நிதி ஸ்பீக் அவுட்…” என்றான்.
“இன்னும் ஐந்து நாள் தான் இருக்கு. அப்பாவே கூட்டிட்டு வருவாங்க. எனக்கு உங்கள பார்க்கனும்னு இருந்தது. பார்த்துட்டேன். கிளம்பறேன்…” இன்னமும் அந்த கண்கள் கலங்கியே இருந்தது.
“ப்ச், நிதி…” அவனுக்கு ஆற்றாமையாக இருந்தது இப்படி ஆளுக்கொரு பக்கமாக இருப்பது.
“நான் கிளம்பறேன்…” அவனிடமிருந்து விலகி நடக்க,
“வா நான் ட்ராப் பன்றேன்…” என தடுத்தான்.
“தேவையில்லை. இதை நீங்க எங்க வீட்டு வாசல்ல இருந்து உள்ள வராம கூப்பிட்டிருந்தா கூட எனக்காக வந்திருப்பீங்கன்னு நானும் கிளம்பி உங்களோட வந்திருப்பேன். இப்ப…” என மறுப்பாய் தலையசைத்து சொன்ன சந்நிதி அவனுக்கு புதிதாய் தெரிந்தாள்.
“அண்ணா வெய்ட் பன்றாங்க…” என புவனை காண்பிக்கவும் அவளோடு வசீகரனும் வர,
“பேசியாச்சா?…” என மொபைலை வைத்துவிட்டு பார்த்தான்.
“தேங்க்ஸ் புவன்…”
“அட இதுல என்ன இருக்கு? இதுக்கெல்லாமா தேங்க்ஸ் சொல்லுவாங்க? ஒரு பக்கம் என் தங்கச்சி புருஷன், இன்னொரு பக்கம் பொண்டாட்டிக்கு அண்ணன். நான் செஞ்சுதான ஆகனும்…” என அவன் சொல்லியவிதம் சிரிப்பை விதைக்க அவனை அணைத்து விடுவித்தவன்,
“பார்த்து போய்ட்டு வாங்க…” என்றதும் தலையசைப்புடன் சந்நிதி அண்ணனுடன் பைக்கில் அமர்ந்துகொள்ள அவர்கள் செல்லும் திசையை பார்த்துக்கொண்டே நின்றான் வசீகரன்.
“என்ன ஸார் ஊருக்கு வரீங்களா? இல்லை இப்படியே திரும்பவும் காஞ்சிபுரமா?…” காரை அவனருகே கொண்டுவந்த சூர்யா கேட்க புன்னகையுடன் காரில் ஏறி அமர்ந்தான் வசீகரன்.
அரைமணி நேரம் கடந்தும் வசீகரனின் முகம் சந்தோஷத்தில் ஜொலிக்க, 
“பார்ரா முகத்துல சிரிப்ப? ஒட்டியே இருக்கு. கண்ணுல கனவு மிதக்குதே. ஒரே மீட்டிங்க்ல லவ்வர் பாயா மாறிட்டு வர…” சூர்யா கேலி பேச,
“இப்ப பேட் பாயா மாற போறேன். ஒழுங்கா பாதையை பார்த்து காரை ஓட்டுடா…” என வசீகரன் முறைக்க,
“நேரம்டா எனக்கு…” என நொந்துகொண்டான்.
அதன் பின்னால் வசீகரன் எத்தனை செய்திகள் அனுப்பினாலும் இன்னும் ஐந்து நாள், நான்கு நாள், மூன்று நாள் என்று இப்படி நாள் கணக்கையும் நேர கணக்கையுமே பதிலாய் அவள் தந்துகொண்டிருந்தாள். கால் செய்தாலும் அட்டன் செய்வதில்லை.
“ரிவெஞ்சா நிதி?…” என கேட்டதற்கும்,
“இன்னும் ஒரே நாள்…” என்ற பதில் தான். புன்னகையோடு அவள் வருவதற்காக காத்திருக்க ஆரம்பித்தான். காதலித்து கைபிடிக்க காத்திருந்த காலமெல்லாம் இப்பொழுது வெறும் தூசாக தெரிந்தது.
ஆனால் இந்த ஒரு நாள் காத்திருப்பு பல யுகம் போல மெதுவாய் கடப்பதே எரிச்சல்ப்பட்டான். 
மறுநாள் காலை எழுந்தவன் சந்நிதிக்கு மெசேஜ் அனுப்ப அவளுக்கு அது சென்றதாக காண்பிக்க இல்லை. போன் செய்து பார்க்க சுவிட்ச் ஆஃப் என்று வந்தது. யோசனையுடன் கீழே வந்தவன், 
“ம்மா, நிதி வீட்ல எப்போ வராங்க? ஹோட்டல்ல லஞ்ச்க்கு சொல்லியிருந்தீங்க, திரும்ப ரிமைன்ட் பண்ணியாச்சா?…” என கேட்டுகொண்டே சாப்பிட அமர,
“முதல்ல சாப்பிடுடா சும்மா தொனத்தொனன்னு…” என அவனுக்கு பரிமாரியவரின் முகத்தில் எதுவோ கவலை படர்ந்திருக்க,
“என்னம்மா உடம்புக்கு எதுவும் முடியலையா? டல்லா இருக்கீங்க?…” கேட்டுகொண்டே சாப்பிட,
“ப்ச், அதெல்லாம் ஒண்ணுமில்லை. சரியா நைட் தூக்கம் வரலை…”
“வாட்!!!  உங்களுக்கா?…”   என பெரிய ஜோக் கேட்டவன் போல சிரிக்க அவனை முறைத்தவர்,
“பார்த்து நீ சிரிக்கிறதுல இட்லி பயந்து திரும்ப குண்டாக்குள்ள போய் உட்கார்ந்துடாம…” என வழக்கமான கிண்டலை பேச,
“இது இது அம்மா…” என்று அவரின் கன்னம் கிள்ளியவன்,
“அப்பா எங்க? சாப்பிட காணோம்? ப்ரெஸ்க்கு போய்ட்டாங்களா? இன்னைக்கு தான் நிதி வீட்ல வராங்கள்ள, பின்ன ஏன் போனாங்க?…” 
மகனின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியில் அம்பிகாவின் தாயுள்ளம் தவித்தது. அவனின் எதிர்பார்ப்பில் கண்கள் லேசாய் கலங்கிவிட அவனுக்கு காண்பிக்காமல் எழுந்துகொண்டவர்,
“இரு பொடி கொண்டுவரேன். நேத்து தான் ப்ரெஷா அரைச்சு வச்சேன்…” என்று உள்ளே செல்ல,
“ம்மா, நிறைய அரைச்சிருந்தா புகழ் வீட்டுக்கும், நிதி வீட்டுக்கும் குடுத்துவிடுங்க. முடிஞ்சா பார்கவி அத்தையை இங்க ரெண்டு நாள் இருக்க சொல்லுங்க. நிம்மதியா இருந்துட்டு போவாங்க…” 
“ஹ்ம்ம் சொல்லலாம்…” குரல் என்ன முயன்றும் அவனுக்கு காட்டிகொடுத்துவிட,
“ம்மா…” அழுத்தமாய் அழைத்தான் மகன்.
“என்னடா சும்மா அம்மா அம்மான்னு, சாப்பிட்டு பேசு…” அம்பிகா நிமிரவே இல்லை. வேகமாய் எழுந்து கையை கழுவிவிட்டு வந்தவன் அவரை எழுப்பி,
“இப்ப சொல்ல போறீங்களா இல்லையா?…” என்றான் அவரின் முகம் பார்த்து.
“இல்ல, நாம போய் ஏன் நிதியை கூட்டிட்டு வர கூடாது? என்ன சொல்ற? நீ சொல்ற மாதிரி பேசாம நிதி அம்மாவையும் கூட்டிட்டு வருவோமே. நாம ரெண்டு பேர் மட்டும் போய்ட்டு வருவோம். அப்பாவுக்கு இங்க வேலை இருக்குல. சரியா?…” இதை சொலும் போதே மகன் கோபப்பட போகிறான் என பார்த்திருந்தவர் அவனின் முகம் இறுக்கமாவதை உணர்ந்து,
“உங்களுக்கு இது எப்போ தெரியும்?…”
“நேத்து நைட்ல நீ தூங்க போன பின்னால சம்பந்தி அதான் நிதி அப்பா கால் பண்ணிருந்தார் அப்பாவுக்கு. வந்து கூட்டிட்டு போங்கன்னு…”
“அப்பா என்ன சொன்னாங்க?…”
“நம்மளை போய்ட்டு வர சொன்னாங்க…” திக்கி திணறி இதை சொல்ல இப்பொழுது கண்ணில் கண்ணீர் பொங்கிவிட்டது அம்பிகாவிற்கு.
“ம்மா…” என அணைத்துக்கொண்டவன் மனதே நொறுங்கிவிட்டது. அவர் என்ன பேசினார் எப்படி பேசினார் என்றெல்லாம் வசீகரன் கேட்கவில்லை. கேட்டு மேலும் அவர்களை வருத்தம்கொள்ள வைக்க விருப்பமில்லை.
“வசீ, அம்மாக்கு ஒண்ணுமில்லை. பாரு பொடி கொண்டுவந்து அப்படியே கண்ணுல வச்சுட்டேன். அதான். நீ ஏன் என்னவோன்னு நினைக்க?…” வரவழைத்துக்கொண்ட புன்னகையோடு அவனிடம் சொல்ல,
“சாப்ட்டீங்களாம்மா?…” என்றதற்கு இல்லை என மறுப்பாய் அவர் தலையசைக்க போன் செய்து தந்தையை வீட்டுக்கு அழைத்தவன் ஒரு ப்ளேட்டில் டிபனை வைத்து அவனே ஊட்டினான்.
“வசீ, நீ ரொம்ப ரியாக்ட் பன்றடா…” என சிரிப்புடன் வாங்கிகொண்டார்.
“நிதி பாவம்டா, போய் கூட்டிட்டு வந்திடுவோம். அவ என்ன பண்ணுவா…” என ஊடே ஊடே பேச எதற்கும் பதில் சொல்லவில்லை வசீகரன். 
வாழ்கையில் இரண்டாம் முறையாக அவர்கள் கலங்கிப்போய் உள்ளனர் அதுவும் இரண்டுமுறையுமே தன்னால் என்பதை தானகவே முடியவில்லை. அம்பிகாவின் கண்களில் கண்ணீர். மனதை வாள்கொண்டு அறுத்தது அவனுக்கு.
குகன் விரைவிலேயே வீடு திரும்ப அவர் பார்த்தது இந்த காட்சியை தான். மனதில் அழுத்திக்கொண்டிருந்த பாரம் குறைய லேசான புன்னகையுடன் உள்ளே வந்தவர்,
“என்ன என்னை விட்டுட்டு இங்க ஒரு கச்சேரி நடக்குது? ஹ்ம்ம்?…” என அமர்ந்தவர்,
“கிளம்பும் போது சாப்பிடுங்கன்னு ஒரு வார்த்தை சொல்லலை உன் அம்மா. நீ அவளுக்கு ஊட்டிட்டு இருக்க?…” என தானும் ஒரு தட்டை எடுத்துவைக்க அவருக்கும் ஒரு வாய் தர மகனுக்கே இயல்பாய் இருப்பதை போல பேசிக்கொண்டிருந்தவர் வெகுவாய் சிதறிவிட்டார்.
“வசீ…” என அவனை அணைத்துக்கொண்டவர்,
“டேய் நீ ஏதும் கில்டியா பீல் பண்ணாத. ப்ச், இப்ப என்ன ஆகிடுச்சு? அவங்க வந்து கூட்டிட்டு போங்கன்னு சொன்னாங்க. அதையும் நேத்து நைட்ல. இந்த முறை நம்ம வழக்கத்துல இல்லையேன்னு தான் கொஞ்சம் யோசனை. வேற எதுவும் இல்லை…” என சொன்னாலும் இது மட்டுமில்லை என்று வசீகரனின் மனம் அடித்து சொன்னது.
இதற்கெல்லாம் தன் பெற்றோர் கலங்கிப்போகிறவர்கள் அல்லவே. இன்னும் எதுவோ இருக்கிறது.
“ஸாரிப்பா. இதை தவிர வேற என்ன கேட்கன்னு எனக்கு தெரியலை…”
“நீ ஸாரி சொல்லி நிதியோடான உன் வாழ்க்கையை அர்த்தமில்லாம ஆக்கிடாதே…”குணா கண்டிப்பு குரலில் சொல்ல,
“ஆமாம் வசீ, நீ சொல்ற ஸாரி நிதிக்கு பெரும் வலியை தரும். அவளை நீ விரும்பி கல்யானம செய்துட்ட. அதுக்கு எதுக்கு மன்னிப்பு? அப்ப அந்த கல்யாணமும் உன் காதலும் தவறுன்னு நீயே ஒத்துக்கற மாதிரியான அர்த்தத்தை தானே தரும். உன்னோட முடிவும், தேர்வும் தவறானதுன்னு நீயே சொன்னா இப்ப அது உன்னை மட்டுமில்லை நிதியையும் பாதிக்கும்…”
“ரியலி க்ரேட்ப்பா நீங்க…” 
“அதெல்லாம் இருக்கட்டும், நீ என்ன முடிவு பண்ணியிருக்க?…”

Advertisement