Advertisement

தீண்டல் – 27
        அம்பிகா கோபமாக இருந்தார். அதை அறிந்தாலும் வசீகரன் வாய் திறக்கவில்லை. அவன் கிளம்புவதிலேயே குறியாய் இருக்க சந்நிதி அவனின் பின்னே ஓடிக்கொண்டே இருந்தாள்.
“இப்ப எதுக்கு அவன் கைக்குள்ளையும் கால்க்குள்ளையுமா சுத்திட்டு இருக்க? பேசாம உட்கார். உன் புருஷன் என்னவோ இப்பத்தான் இந்த வீட்டு வாசப்படியை தாண்டற மாதிரி இந்த பயம் பயப்படற?…” அம்பிகா கிண்டலாய் சொல்ல சந்நிதிக்கு அவரிடம் சொல்லவும் முடியவில்லை. வசீகரனை சமாளிக்கவும் முடியவில்லை.
“நிதி…” மாடியிலிருந்து சத்தமாய் அவன் அழைத்ததும் அம்பிகாவிடமிருந்து தன் கையை பிரித்துக்கொண்டு ஓடினாள் அவனை தேடி.
“இந்த பையன் என்ன பண்ணி வச்சான்னே தெரியலை. இந்த பொண்ண படுத்துறான்…” குகனிடம் சொல்ல அவர் பதில் ஒன்றும் பேசவில்லை. நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.
அறைக்குள் நுழைந்தவள் அவனின் பின்னால் சென்று நிற்க துணிகளை எடுத்து பெட்டிக்குள் திணித்துக்கொண்டிருந்தவன் இவளின் வருகை உணர்ந்து,
“பேசியாச்சா உன் அப்பாக்கிட்ட?…” என்றான் திரும்பாமலே.
“இல்லை இன்னும் இல்லை. இனிமே தான்…” என்றவள் சொல்லி முடிக்கும் முன்னர் நாக்கு வறண்டுபோனது. 
“ஓஹ்…” என்றதோடு அவன் முடித்துக்கொள்ள,
“ப்ச், எனக்காக, நீங்க சொல்லுங்களேன். நான் எப்படி?…”   
“இதுக்கான பதில் நான் ஏற்கனவே சொல்லிட்டேன் நிதி…” அனைத்தையும் வைத்துவிட்டு பெட்டியை மூடியவன் எழுந்து நிற்க,
“நான் வேணும்னா உங்க கூட வந்திடட்டுமா?…” வேகமாய் கேட்டாள்.
“இதுக்கு மேல என் மனசை என்னன்னு உன்கிட்ட சொல்ல?” என்னும் ஆதங்கம் அதில்  வெளிப்பட புரிந்தவனுக்கு அத்தனை இதமாய் இருந்தது. 
“இப்ப நான் போற இடத்துல சீசன் ரொம்ப மோசமா இருக்கு. அதுவும் டீமோட போறோம். நான் மட்டும் உன்னை அழைச்சிட்டு போனா உன் மேல தான் என் கவனம் முழுக்க இருக்கும். இதுல ஷூட்ல என்னால கான்சன்ட்ரெட் பண்ண முடியாது நிதி. இல்லைன்னா நானே உன்னை அழைச்சிட்டு போயிருப்பேனே…” 
கனிந்த முகத்துடன் அவன் சொல்ல கேட்டவளுக்கு தான் அவனின் பேச்சில் பிடித்தமில்லாமல் போனது.
“வேண்டுமென்றே செய்கிறான் கிராதகன், அப்பாக்கிட்ட கோர்த்துவிட்டு தப்பிக்கிறான்” என மனதிற்கு அவனை தாளிக்க முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடித்தது. அதை பார்த்தவனின் முகம் குறும்பில் மின்ன,
“என்ன ஸ்பைசி வொய்ப், ப்யூஸ் போன பல்ப் மாதிரி முகத்தை வச்சுக்கிட்டீங்க?…” என்றதற்கு பதில் பேசாமல் கட்டிலில் சென்று அமர்ந்துகொள்ள அவனும் அவளருகில் அமர்ந்தான்.
“நிதி, இங்க பார், சொல்றேன்ல…” அவனின் அழைப்பிற்கு செவிமடுத்தவள் பார்வை அவனின் முகத்தில் நிலைக்க வசீகரன் தான் திணறிப்போனான் இது என்ன பார்வை என.
திருமணம் முடிந்து முழுதாய் ஐம்பது நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. எத்தனை சண்டைகள் இருந்தாலும் ஒருவரின் அருகாமையை மற்றொருவர் எதிர்பார்க்க தான் செய்தனர். 
ஒவ்வொரு நாள் விடியலும், அஸ்தமனமும் மற்றவரின் வாசமின்றி உதித்ததில்லை. ஆனால் இன்று?
திருமணம் முடிந்து முதல் முதலில் அவன் வெளியூர் செல்கிறான். ஷூட்டிங் முடிந்து வர ஒரு வாரம் ஆகும். ஏனோ நினைத்து பார்க்கவே முடியவில்லை சந்நிதிக்கு. 
ஆனால் வாய்விட்டு இத்தனை நாள் சொல்லாமல் இருந்தவள் அவன் முனீஸ்வரனிடம் பேச சொல்ல அதை சாக்காய் வைத்து என்னையும் அழைத்துக்கொள்ளேன் உன்னுடன் என மறைமுகமாக சொல்ல அதை புரிந்தும் புரியாதது போல அவன் பேசியது கடுப்பையும், கவலையையும் கிளப்பியது நிதிக்குள்.
“நிதி…” மீண்டும் அவளின் கன்னம் தட்டி அழைக்க உறக்கத்திலிருந்து எழுபவள் போல திகைத்து பார்த்தவளின் கண்கள் கலங்க அவனுக்கு காட்டாமல் அவனின் தோளில் சாய்ந்துகொண்டவள் அவனின் இடுப்போடு கை கோர்த்துக்கொண்டாள்.
வசீகரன் தான் இப்பொழுது ஸ்தம்பித்து போனான். இத்தனை நாள் அவளாக அவனை நெருங்கியதிலை. முதன் முதலில் அவளின் அணைப்பு உயிர்வரை தித்தித்தது.
அவனின் கைகள் தானாக சென்று அவளை இன்னும் நெருக்கமாய் அணைக்க அவனோடு ஒண்டிக்கொண்டாள் சந்நிதி. 
இத்தனை இணக்கமும், நெருக்கமும் இதுவரை இருந்ததில்லை அவர்களிடையே. அவளை அதிகம் சஞ்சலப்படுத்தாத வகையில் தான் அவனின் அணைப்பு இருக்கும். ஆனால் இன்று?
சந்நிதிக்கோ அவனின் பிரிவு ஒருபுறமும், தன்னை விட்டு சென்றால் தந்தையிடம் பேசவேண்டுமே என்னும் பயம் மறுபுறமும் அவளை அலைகழிக்க அவனை அணைத்துக்கொண்டவள் இப்பொழுது அவனின் தொடுகையில் சிலிர்த்துபோனாள்.
மனைவியின் அருகாமையும் அணைப்பும் ஒரு நூதனமான உணர்வை உயிர்ப்பிக்க சிறிது சிறிதாய் இதமான கொதிப்பேறியது அவனுள்.
“நிதி…” அவளின் நெற்றியில் இதழ் ஒற்றியவன் கன்னத்தில் தன் இதழை பதித்தவன் அவளின் நடுக்கத்தில் தவித்துபோனான்.
“ஓஹ் நோ…” என பதறி விலகியவன் எழுத்து நின்று ஊஃப் என்று மூச்சை இழுத்துவிட்டு தலையை அழுத்தமாய் கோதிக்கொண்டான்.
சந்நிதியை திரும்பி பார்க்க அவளோ அதுவரை இவனையே பார்த்திருந்தவள் சட்டென தலை கவிழ்ந்துகொண்டாள். அதில் அவனின் முகம் புன்னகையை பூச,
“நிதி, இன்னும் அரைமணி நேரத்துக்குள்ள நான் கிளம்பனும். ப்ளைட்க்கு டைம் ஆச்சு…” என்றதும் அதுவரை இருந்த உணர்வுகள் கலைந்துபோக அவளின் வார்த்தைக்காக காத்திருப்பதை கண்டு தலையசைத்தாள்.
“எழுந்து வா கீழே போகலாம்…” என கை நீட்டியவன் அவள் அதனை பற்றிக்கொள்ளவும் வேகமாய் இழுத்து அணைத்தவன் அந்த நொடியில் மீண்டும் விலகி திரும்பிக்கொண்டான்.
“நீ போ நிதி. கீழே இரு. நான் ஒரு பைவ் மினிட்ஸ்ல வரேன்…”
“இல்ல நானும் அதுவரை…” என மீண்டும் அவனுக்கே வர,
“ப்ச், தள்ளிப்போ நிதி, நான்… இல்லை…. சரியில்லை. இப்ப நான் கிளம்பியே ஆகனும். வேற எந்த ஆப்ஷனும் இல்லை…” என்றதும் பதில் பேசாமல் சென்றுவிட்டாள்.
ஐந்து நிமிடங்கள் கழித்து அவன் லக்கேஜோடு கீழே வர அவனுக்கு டிபன் எடுத்துவைத்தவர் சந்நிதியையும் அவனோடே சாப்பிட சொல்ல அவளும் அமர்ந்துகொண்டாள்.
“எத்தனை மணிக்கு ப்ளைட்? அங்க இருந்து எப்படி போவ?…” அம்பிகா கேட்க,
“எட்டரைக்கு ப்ளைட்ம்மா. நேரா பெங்களூர். அங்க இருந்து இன்னும் ரெண்டு பேர் வராங்க. அவங்களே வண்டி அரேஞ்ச் பன்றாங்க. அதுல கூர்க். முடிஞ்சளவுக்கு நாலு நாள்ல முடிக்க பார்க்கறேன்…”
“இவளை கூட்டிட்டு போனா மாட்டென்ற…”
“ம்மா, அங்க சீசன் சரியில்லைன்னு சொல்றேன்ல. திரும்பவும் அதையே கேட்கறீங்க, எனக்கென்ன ஆசையா இவளை விட்டுட்டு போகனும்னு…”
“சீசன் சரியில்லாத இடத்துல உனக்கென்னடா வேலை? கொட்டற மழைல என்ன ஷூட்டிங் வேண்டிக்கிடக்குது?…” அம்பிகாவும் பதிலுக்கு பேச,
“ம்மா, அவங்க ரிசார்ட் அட்வேர்டைசமென்ட் இந்த சீசன்ல எப்படி இருக்குன்னு ஷூட் பண்ணி குடுக்கனும். ஏற்கனவே அவங்களுக்கு நாம எடுத்து குடுத்திருக்கோம். பெஸ்ட்டா இருந்ததால திரும்பவும் நம்மக்கிட்ட கேட்டிருக்காங்க…” என்று சொல்லியும் அம்பிகா முறைப்புடனே இருக்க,
“ஒன்னு பன்றேன், இந்த ஷூட் முடியவும் நானேவந்து திரும்ப நிதியை அழைச்சிட்டு போறேன். போதுமா? இப்ப என்னால முடியாது. இதை சொல்லாம நெக்ஸ்ட் வீக் சப்ரைஸ் குடுக்கலாம்னு பார்த்தேன். விடறீங்களா?…”
“நல்லா குடுத்த சப்ரைஸ்? இப்ப நீ சொன்னதால அடுத்த வாரம் போறதுக்கு ஷாப்பிங் பண்ணலாம். திடீர்ன்னு சொன்னா  எப்படி? சுத்த விவரங்கெட்ட ஆளா வளர்ந்திருக்க. போடா…” என சலித்துக்கொண்டவர் வழக்கம் போல அவனுக்கு தேவையான பொடி வகைகள், சட்னி வகைகள் என சின்ன சின்ன பாக்ஸில் போட்டு கொண்டு வந்து தர சிரிப்புடன் வாங்கிக்கொண்டான்.
வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கவும்  பெட்டியை உருட்டிக்கொண்டே வாசலுக்கு சென்றார் குகன். அவருடன் பேசிக்கொண்டே அம்பிகாவும் இருவருக்கும் தனிமை கொடுத்து செல்ல சந்நிதியின் விழிகளில் அலைப்புருதல்.
“வரவா நிதி?…” அவளின் முகத்தை தன் கைகளில் ஏந்திக்கொண்டு கேட்க,
“இதோ கிளம்பிவிட்டான்” அவனை பார்த்தவள் தலையை மட்டும் அசைக்க அழுத்தமாய் அவளின் கன்னத்தில் முத்தமிட்டவன்,
“நெக்ஸ்ட் வீக் ரெடியா இரு. உண்மையில் இப்போ வரைக்கும் அப்படி ஒரு தாட் இல்லை. இப்ப அம்மாக்கிட்ட பேசினதும் தோணினது தான். தள்ளிப்போட வேண்டாம் தானே? உனக்கு ஓகே வா?…” 
அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தொண்டையில் முள் சிக்கிய உணர்வு. அவள் பதில் சொல்ல திணற,
“இன்னும் ஒன் வீக் இருக்குல. பை. உன்னை பார்த்துக்கோ. தைரியமா இரு. எதையும் நினைச்சு கவலைப்படாம…” என சொல்லியவன்,
“ஸ்மைல் ப்ளீஸ்…” என்றதற்கு லேசாய் சிரிக்க அவளிடமிருந்து விடைபெற்றான் வசீகரன்.
ஒரு வாரம் சொல்லியதை போல அவன் திரும்பி வர வரவேற்க சந்நிதி வீட்டில் இல்லை. வந்தவனும் அவளை பற்றி அம்பிகாவிடம் கேட்கவும் இல்லை.
“வசீ, நீ இதுக்கு இத்தனை ரியாக்ட் பண்ணனும்னு இல்லை. இதெல்லாம் காலம் காலமா நடக்கற சம்பிரதாயம். பாவம்டா நிதி…” அவன் கேட்காவிட்டாலும் அம்பிகாவை மகனிடம் மருமகளுக்காக பேச,
“இப்ப நான் எதுவும் சொல்லலையேம்மா. எதுக்கு இத்தனை கஷ்டப்பட்டு பேசறீங்க. எனக்கொன்னுமில்லை. அவளா வரட்டும்…” என்றவனின் முகம் எப்பொழுதும் போல சாதாரணமாக தான் இருந்தது. 
அவனின் முகத்திலிருந்து  என்ன அர்த்தத்தில் இதை சொல்கிறான் என புரியாமல் பார்த்தவர் வசீகரன் கிளம்பவும் சூர்யாவுக்கு அழைத்து விஷயத்தை சொல்ல அவன் தான் பேசுவதாக சொல்லி போனை வைத்தான்.
வசீகரனுக்கு தாளவே முடியவில்லை. தான் அத்தனை தூரம் எடுத்து சொல்லியும் தந்தை அழைத்ததும் மறுப்பின்றி சென்றிருக்கிறாளே? என்னை பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாள்? என்னை விட அப்பா தான் முக்கியமாக போய்விட்டாரா அவளுக்கு? நான் யாருமில்லையா? என பொருமி பொருமி புகைந்து போனான். 
அதன்பொருட்டு அவள் செல்கிறேன் என்று சொன்னதும் போனை வைத்தவன் அவள் அடுத்து எத்தனை முறை அழைத்தும் எடுக்கவே இல்லை. பேசவும் இல்லை. 
வசீகரன் ஆபீஸ் வந்ததும் ஷூட் செய்த வீடியோக்களை எடிட் செய்யும் வேலையில் கவனம் செலுத்த மதியம் வரை எதுவும் அவனிடம் பேச முடியவில்லை அவனுக்கு.
“என்னடா சாப்பிட வரலை?…” என சூர்யா கேட்டதும் தான் கணினி திரையில் இருந்து பார்வையை நகர்த்தியவன்,
“ஓஹ், லஞ்ச் டைம் ஆகிடுச்சா?…” என வாட்சை பார்த்தவன் சட்டையின் மேல் பட்டன் ஒன்றை கழட்டியவன் காலை நீட்டி இலகுவாய் அமர்ந்து கையை சோம்பல் முறித்து தலையின் பின்னால் கட்டிக்கொண்டவன்,
“டயர்டா இருக்குடா. வீட்டுக்கு போகனுமான்னு தோணுது…” 

Advertisement