Advertisement

தந்தைக்கும் அவனுக்குமான ஒற்றுமைகள் அவளை கூறுபோட்டுக்கொண்டு இருந்தது. இன்னொரு பார்கவியாக தன்னால் வாழ முடியுமா? இல்லை அவனின் இந்த காதல் எத்தனை நாள்? 
முனீஸ்வரனின் குணம் கொண்ட ஒருவன். ஆம் சந்நிதியின் மனம் முழுவதும் இந்த எண்ணம் தான் அவளை ஆட்டிப்படைத்தது. 
அதனால் தான் அப்படியாப்பட்ட ஒருவனுடன் தன் வாழ்வு ஒத்துவராது, அது அவனுக்குமே சுகிக்காது என இவளாக முடிவெடுத்து அவனிடம் ஆயிரம் காரணங்கள் சொல்லி அவனை பிடிக்காதது போல நடந்தாள்.
வசீகரனின் இந்த அடாவடித்தனத்திற்கும், ஆளுமைக்கும் காரணம் முனீஸ்வரன் என்பதை அவள் உணர மறுத்தாள். இல்லை என்றால் வசீகரன் இந்தளவிற்கு பிடிவாதமாக செயல்பட அவசியமே இல்லை என்பதை நினைக்க மறந்தாள்.
அதிலும் வசீகரன் தன் குடும்பத்தில் நிகழ்த்திய விஷயங்கள் என்றாவது தந்தைக்கு தெரிந்தால்? இதுவே அவளின் மொத்த புத்தியையும் ஆக்கிரமித்து இருந்தது. அவளின் உலகம் இன்னமும் தந்தையை சுற்றி இருப்பதாகவே நினைத்துக்கொண்டிருந்தாள்.
இப்படியான குழப்பங்களும் கவலைக்களுமாக அவளை அலைகழித்துக்கொண்டிருந்தாலும்  வசீகரனை அவள் அளவிற்கதிகமாய் விரும்புவது அவள் மட்டுமே அறிந்த உண்மை. 
அழுது அப்படியே அவள் உறங்கியிருக்க மீண்டும் அறைக்கு வந்தவனுக்கு அப்படி ஒரு கோபம் வந்தது அவள் சோபாவில் படுத்திருந்தது.
வேகமாய் வந்து அவளை ஆவேசமாய் அவன் தூக்கி நிறுத்த பயத்தில் படபடப்பாய் எழுந்தவள் அவளின் கோபமான பார்வையில் அரை தூக்கத்தில் விழிக்க,
“ஏன் நிதி இப்படி பன்ற?…” என்று அவளை தன் தோளில் சாய்த்தவன்,
“இன்னொரு முறை நீ இங்க தூங்கறதை பார்த்தேன். அவ்வளோ தான்…” என கண்டிப்புடன் சொல்ல அவனின் தோளிலேயே உறக்கத்தை தொடர்ந்தாள் நிதி.
“ஒரு மனுஷன் பேசிட்டிருக்கேன் தூக்கத்தை பாரு…”  என்று அவளை தூக்கி கட்டிலில் படுக்கவைத்துவிட்டு அவளின் கன்னத்தில் அழுத்தமாக வன்மையாக ஒரு முத்தத்தை பதிக்க அவனின் மீசை முடி முள்ளென கன்னத்தை பதம் பார்க்கவும் கண்விழித்து அவனை பார்க்க நிதானமாக அவளின் கன்னத்திலிருந்து தன் இதழ்களை பிரித்தவன்,
“இன்னொருக்க அங்க தூங்கின இதான் பணிஷ்மென்ட்…”
“கிஸ்ஸிங் எல்லாம் பனிஷ்மென்ட் லிஸ்ட்ல வராது…” என்றவள் மறுபுறம் திரும்பி தூங்கிவிட்டாள்.
“என்ன இவ கொஞ்சம் கூட கோபமே படலை. ஒருவேளை இன்னமும் தூக்கம் தானோ? கனவுன்னு நினைச்சுட்டா போல…” என வாய்விட்டு புலம்பிக்கொண்டே இவனும் உறங்க ஆரம்பித்தாலும் அனைத்தும் பேசிவிட்ட நிம்மதியில் தூங்கிப்போனான்.
மறுநாள் அவள் எதுவும் நடவாதது போல தன் வேலைகளை பார்க்க கொஞ்சமும் கண்டுகொள்ளாத அவளின் தன்மையில் இவனும் முறுக்கிக்கொண்டான்.
வேகவேகமாய் அவன் கிளம்பி சென்றுவிட நான் பேசலைனா நீங்களும் பேச மாட்டீங்களோ? என்று இவளும் வீம்பாய் நிற்க கீழே காலை உணவிற்கு வரும் பொழுதே இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி தான் வந்தனர்.
அவர்களின் முகத்திலிருந்தே நிலைமை சரியில்லை என்று புரிந்த அம்பிகா கண்டுகொள்ளாத பாவனையுடன் குகனுக்கு பரிமாறியவர்,
“கொஞ்ச நேரம் இந்த பொங்கலை வாய்ல திணிச்சு வார்த்தைக்கு கேட் போடுங்க…” என்று உத்தரவிட,
“என்ன அபி?…” என ஒன்றும் அவர் திகைக்க மகனையும் மருமகளையும் காட்டியவர் கண்ணை சிமிட்ட,
“நீ கண்ணெல்லாம் அடிப்பியா?…” குகன் உல்லாசமாய் கேட்க,
“அப்ப அடிச்ச கண்ணெல்லாம் நீங்க பார்க்கலைன்னு சொல்லுங்க. போய்ட்டு வாங்க பேசிக்கறேன்…” என அம்பிகா போர் கொடி உயர்த்த பொங்கலை எடுத்து வாய்க்குள் திணித்தார் குகன்.
வசீகரன் கையை கழுவிவிட்டு சாப்பிட அமர்ந்தவன் அம்பிகா எடுத்து வைக்காமல் இருப்பதை பார்த்துவிட்டு,
“ம்மா, என்னாச்சு இன்னும் ஒன்னும் வைக்கலை?…” என கேட்க சந்நிதி அவனுக்கு தான் வைப்போமா என்று யோசிக்க,
“சாப்பிடறியா? எனக்கென்னவோ கோவமா இருக்க, சாப்பிட மாட்டன்னு நினைச்சேன்…” என்றதும் தாயை நிமிர்ந்து பார்த்தவன் சந்நிதியை பார்க்க அவளோ குழம்பி போனாள்.
“நானா? கோவமா?…” 
“பின்ன உங்க ரெண்டு பேர் மூஞ்சியும் சரியில்லை. சண்டையா?…” என சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்துக்கு வர சந்நிதிக்கு சங்கடமாய் போனது.
“இல்லை அத்தை…” 
“அப்படித்தான் இருக்கனும், சண்டை போடறதெல்லாம் தப்பே இல்லை. என்ன இவன் வெளில எங்கயும் போக முடியாதுன்னு சொல்லிட்டானா? ஷூட் இருக்குன்னு கேமராவை கட்டிட்டு இருப்பானே?…” என்ற பொழுதே வசீகரனுக்கு புரிந்துவிட்டது அம்பிகா வேண்டுமென்றே செய்கிறார் என்று.
“ஆமாமா, சண்டை தான். நான் ஆபீஸ் கிளம்பறேன்…” என அவனும் எழுந்துகொள்ள,
“சண்டைன்னா சாப்பிடாம போவியோ?…” என மகனை முறைத்தவர்,
“ஆனா சண்டைன்னா வீட்ல சாப்பிட மாட்டாங்க நிதி. உன் மாமாவும் அப்படித்தான்…” என குகனை காட்ட சந்நிதிக்கு அங்கு நடப்பவை ஒன்றும் விளங்கவில்லை. மாற்றி மாற்றி மூவரையும் பார்க்க குகனிற்கு சந்நிதியை பார்க்க பாவமாக இருந்தது.
“அதான் நானும் சொல்றேன். நான் கிளம்பறேன்…” என சொல்லிவிட்டு வசீகரன் அம்பிகா கண்ணை காண்பித்ததும் கிளம்பிவிட சந்நிதிக்கு மனதில் அத்தனை வருத்தம் புகுந்தது.
“சாப்பிடாம போறாங்க அத்தை…” தவிப்புடன் சொல்ல,
“விடு வரட்டும், நாம சாப்பிடுவோம்….” என்றவர் குகனை பார்க்க அவர் சாப்பிட்டு முடித்து கிளம்பிவிட்டார். அதிலும் மருமகள் அறியாமல் மகனுக்கு டிபனை பேக் செய்து எடுத்து சென்றுவிட அவன் உண்ணவில்லையே என்ற நினைப்பிலேயே இவளுக்கு சாப்பாடு இறங்கவில்லை.
“சாப்பிடும்மா…” அம்பிகா சொல்ல,
“அவங்க சாப்பிட உட்கார்ந்தாங்க அத்தை, நீங்க பேசாம வச்சிருக்கலாம்…” எங்கே தான் பேசுவதை தவறாக எடுத்துகொள்வாரோ என்று மெல்லிய குரலில் அவள் சொல்ல அவளை பார்த்து புன்னகைத்த அம்பிகா,
“உனக்கு அத்தனை கவலையா இருக்கா என்ன?. இவ்வளோ அவனுக்கு பார்க்கிற உனக்கு ஏன் இந்த கல்யாணத்துல விருப்பமில்லாம போச்சு நிதி? வேண்டாம்னு சொன்னியாம்…” 
“அத்தை…” 
“புகழ் எல்லாம் சொன்னான். என் மகனோட ஆசைக்காக தான் காத்திருந்து உன்னை நாங்க இந்த வீட்டு மருமகளா ஆக்கினோம் தான். உனக்கும் கொஞ்சமேனும் விருப்பம் இருக்கும்னு நினைச்சோம். இன்னொரு விஷயம் நீ புரிஞ்சுக்கனும்…”
“….”
“இந்த சமூகத்துல புடிச்ச வாழ்க்கையை அடையிறவங்க ரொம்ப கம்மி. அமையுற வாழ்க்கையை புரிஞ்சுகிட்டு அதுக்கு புடிச்ச மாதிரி நாம மாறி, நமக்கு புடிச்ச மாதிரி வாழ்க்கையை மாத்திக்கறதுல தான் நம்ம புத்திசாலித்தனமே இருக்கு. அப்படித்தான் மாத்திக்கனும். அதுதான் நிதர்சனம்…”
“…….”
“புடிச்சு வாழ்க்கையை ஆரம்பிக்கறதை விட புரிஞ்சுட்டு வாழ்க்கையை ஆரம்பி, அது இன்னும் சுபிட்சமா இருக்கும்…”
“ஐயோ அத்தை எனக்கு அவங்களை ரொம்ப புடிக்கும். நான் எப்ப பிடிக்கலைன்னு சொன்னேன்?. அவங்க தான் முறைச்சுட்டே இருக்காங்க…”
“அப்படி சொல்லு மருமகளே. இத சொல்ல உனக்கு இம்புட்டு நேரமா? முறைக்கிரானா? ஓவர் சூடா இருக்கும்டா. அதான். உன்கிட்ட இதை வரவழைக்க நான் டயர்டாகிட்டேன் போ. மாமியாருக்கு ஒரு கப் டீ கொண்டுவரியா?…” அத்தனை நேரமும் முகத்தை மிகவும் தீவிரமாக வைத்துக்கொண்டு பேசிய அத்தையா இது சடுதியில் குழந்தையாய் மாறியது என்று வியந்து பார்க்க,
“ரொம்ப டவுட்டா பார்க்கிறயே? நானே டீ போட்டுக்கறேன்…” என்று அவர் வேகமாய் எழுந்துவிட அவரின் பின்னேயே நான் போடுறேன் என்று அழுந்து ஓடினாள் சந்நிதி.
அதன் பின்னான நேரங்கள் அத்தனை கலகலப்பாகவும் அர்த்தமுள்ளதாகவும் முக்கியமாக சந்நிதிக்கு இலகுவானதாகவும் நகர்ந்தது.
மதிய உணவு முடிந்து சந்நிதி அறைக்கு உறங்க அனுப்பியவர் வசீகரனை போன் செய்து வீட்டிற்கு அழைத்தார். முடியாது என்றவனை நீ வருகிறாயா? நான் வரவா? என மிரட்டி அழைத்திருந்தார்.
“எங்கம்மா?…” என அவளை தேடிக்கொண்டே அமர்ந்தவன்,
“இப்போவாச்சும் சாப்பாடு போடுங்க…” என,
“அவ சாப்பிட்டாளான்னு கேட்கவே இல்லையே?…”
“ம்மா, நீங்க இருக்கீங்க, சாப்பிடாமலா விட்டிருப்பீங்க…” 
“தப்பு வசீ, என்னதான் இருந்தாலும் இந்த மாதிரி சின்ன சின்ன அனுசரணைகள் தான் புருஷன் பொண்டாட்டிக்குள்ள புரிதலை, அன்பை வலுப்படுத்தும். இந்த அலட்சியம் நீயா நினைக்கிறது குடும்ப வாழ்க்கைக்கு ஒத்துவராது. இப்பவே சொல்றேன் கப்புன்னு புடிச்சுக்க…”
“ம்மா, அவ மேல எனக்கு எப்பவும் லவ் உண்டும்மா. உங்களுக்கு தெரியாதா?…”
“உங்களுக்கு எல்லாம் ஆசைப்பட்டது கிடைக்கிற வரைக்கும் ஆடி ஒடி படாத பாடுபட்டு அதை அடையறது. அதுவே கைக்கு கிடைச்சுட்டா நம்ம கைக்குள்ள தானே இருக்கு, எங்க போய்ட போகுதேன்ற அலட்சியத்துல கண்டுக்காம இருக்கறது. அதோட உன்னை அடைந்ஜிட்டேன் பாரன்ற ஆளுமையை காட்டுறது. இங்க தான் தப்பு பன்றீங்க எல்லாரும்…”
“ம்மா, இது அலட்சியமா? என்ன நீங்க?. அவ தான் புரியாம கோபப்படறா…”  
“நீ புரியவச்சியா வசீ?…”
“ம்மா…”
“அவ மேல நீ வச்சிருந்த, வச்சிருக்கற அன்பை இப்போ தான் நீ அவக்கிட்ட காண்பிக்க முடியும். சும்மா நான் உன்னை எப்படியெல்லாம் காதலிச்சேன்னு சொன்னா உன் லைப்ல ரிவேர்ஸ்ல போயா அவ பார்க்க முடியும்? நீ தான் உன்னோட சின்ன சின்ன நடவடிக்கையினால அவளுக்கு உணர்த்த முடியும்…”
“சூப்பர்ம்மா…”
“இந்த அம்மா சூப்பரா இருக்க போய்தான் உன் லவ்வ அக்ஸப்ட் பண்ணினேன். புரியுதா?…”
“தெய்வமே…” அவனும் சிரிப்புடன் சொல்ல,
“இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை. அவளுக்கு உன்னை பிடிக்குதுடா. ஆனாலும் உள்ளுக்குள்ள ஏதோ ஒரு பயம் ஓட்டிட்டு இருக்கு. அதை சரி பண்ணாம நீயும் முறுக்கிட்டு நின்னா முறிஞ்சே போய்டும். இதுக்காகவா இத்தனை கஷ்டப்பட்டு வெய்ட் பண்ணி கல்யாணம் செஞ்ச?…”
“புரியுதும்மா…”
“புரிஞ்சா மட்டும் போதாது. அவளுக்கும் உன் அன்பை புரியவச்சு ரெண்டு பேரும் சந்தோஷமா வாழறதுல தான் எங்களோட சந்தோஷமே இருக்கு. கல்யாணம் முடிஞ்சு ஒருவாரம் ஆகலை. இப்படி இருந்தீங்கன்னா எங்களுக்கு எவ்வளவு வருத்தமா இருக்கும்…” 
அம்பிகாவின் குரல் இறங்கிபோய் விட எழுந்து வந்து தாயை அணைத்துக்கொண்டான் வசீகரன். மகனும் கலங்கி விடுவானோ என்று நினைத்த அம்பிகா சுதாரித்துக்கொண்டு,
“உன்னோட அதட்டல், உருட்டல், மிரட்டலை எல்லாம் மூட்டை கட்டிடு. அதை தான் பிறந்ததில இருந்து பார்த்து வளர்ந்திருக்கா உன் பொண்டாட்டி. அங்க பார்க்காத அதட்டலையா உன்கிட்ட பார்த்திட போறா?…” என்று கிண்டல் பேச அவரின் தலையில் முட்டியவன்,
“எஸ், இப்ப இன்னும் கிளியர் ஆகிடுச்சு. பார்த்துக்கலாம்….” என கண்சிமிட்ட,
“அதுக்குன்னு ஒரே நாள்ல மொத்த அன்பையும் கொட்டிடாதடா. நாளைப்பின்ன பற்றாக்குறையான எங்கயும் போய் நிக்க முடியாது…”  என்றவரின் கன்னத்தை பிடித்து கிள்ளியவன் வேக எட்டுக்களுடன் மாடிக்கு சென்றான்.

Advertisement