Advertisement

தீண்டல் – 24
             சண்டைக்கு வரிந்துகட்டி நிற்பதை போல தஸ்ஸு புஸ்ஸுவென மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டு சந்நிதி நின்ற விதம் கவலையாகவும் சிரிப்பாகவும் இருந்தது. பதில் சொல்ல முடியாமல் அசதியாக இருக்க அவள் பேசிய தோரணை கடுப்பையும் உண்டாக்க,
“நைட் ஆனா உன்னை எந்த பேய் பிடிச்சு ஆட்டுதுன்னே தெரியலை நிதி. பகல்ல நல்ல இருக்க. நைட் ஆக ஆக மூட் மாறிடற. உன்னை ரொம்ப சாஃப்ட் நேச்சர்ன்னு நினைச்சேன். பார்த்தா நீ உங்கப்பாவை பார்த்து பார்த்து ரொம்ப மோசமா கர்ரப்ட் ஆகியிருக்க…” என்று வேறு சொல்லிவிட,
“ஓஹ், அப்போ முன்னாடியே தெரிஞ்சிருந்தா என்னை கல்யாணம் செஞ்சிருக்க மாட்டீங்க அப்படித்தானே?…” 
அவனை விட வேகமாய் அம்பெய்யும் மனைவியை அள்ளிக்கொள்ளவேண்டிய நேரத்தில் தள்ளி நின்று பார்க்கும் தன்னிலையை நினைத்து நொந்தவனாக,
“இப்ப என்ன பிரச்சனை? உன்னை காதலிச்சதா? இல்லை கல்யாணம் செஞ்சதா? என்னன்னு சொல்லிடு…” சலிப்பாய் சொல்ல,
“இதை சொல்லாதீங்க, உங்களை பார்த்தா லவ் பண்ற்றவர் மாதிரியே தெரியலை…” என்றவளை பார்த்துக்கொண்டே சோபாவில் சென்று கால் நீட்டி கைகளை நெட்டிமுறித்து தலைக்கு பின்னால் கட்டியவாறு அமர்ந்தவனின் தோரணை வழக்கம் போல அவளை அவனிடம் லயிக்க செய்தது. 
“இதென்னடா வம்பா போச்சு. லவ் பண்ணினா இருபத்திநாலு மணிநேரமும் தூக்கி மடியில வச்சு லவ்யூன்னு கொஞ்சிட்டேவா இருப்பாங்க? இல்லை உன் பின்னாடியே ஒரு பூவை பிடிச்சுட்டு போற வார இடமெல்லாம் சுத்தனுமா?…” என்றவன் அவளை ஆழ்ந்து பார்த்துக்கொண்டே,
“அது ஒரு ஃபீல், நாம சொன்னாலும் சொல்லாவிட்டாலும் உணரப்படவேண்டிய ஒரு விஷயம். உன்னை பிடிக்கும் தான், ஆனா இப்படி சுத்தவெல்லாம் வராது. அது நான் இல்லை…”
“பின்ன எதுக்காக நாங்க போன இடமெல்லாம் வந்தீங்க? அதுக்கு பேர் என்னவாம்?…” என்று பட்டென கேட்க புன்னகை பிறந்தது அவனின் முகத்தில்.
“பின்னால வந்ததுக்கும் திட்டுற, ஆனா லவ் பன்ற மாதிரி இல்லைன்னு சொல்ற. என்ன பண்ண? எஸ், உன்னை எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும். இந்த நெஞ்சு நிறைய உன்னை நிரப்பி கொண்டாடிட்டு இருக்கேன். என் காதலை ஏகபோகமா நான் ரசிச்சு அனுபவிச்சு வாழ்ந்துட்டு இருக்கேன். அதை உனக்கு காண்பிக்கணும்னு என்ன?. தெரிஞ்சுக்கனும்னா சொல்லு, தெரியவைக்க நான் வெய்ட்டிங் மை ஸ்பைசி…”
அமர்த்தலான புன்னகையோடு ஆழ்ந்த குரலில் அனுபவித்து அவன் சொல்லிய விதம் அவளையும் சேர்ந்து ரசிக்க வைக்க பார்த்தது. தன்னுடன் சேர்ந்து இதை வாழ்ந்துபாரேன் என்னும் அழைப்பு அவனின் பேச்சில் அப்பட்டமாய் தெரிய,
“என்ன நிதி பன்ற? அவன் செஞ்சதுக்கு இப்படி மெய்மறந்து பார்த்திட்டு இருக்க?” என அவளின் மனசாட்சி குத்த,
“டைவர்ட் பண்ணாதீங்க, செய்யுறதையும் செஞ்சிட்டு…”
“செய்வேன்னு சொன்னா செஞ்சிடுவேன். செஞ்சிட்டேன். இதுல என்ன இருக்கு?…” 
“பெரிய செய்கை புலி, செஞ்சிட்டேன்னு மார்த்தட்டிக்கறீங்க, அப்படி என்ன செஞ்சுட்டீங்க? எங்க சந்தோஷத்தை உடைச்சீங்க…” 
“அப்போ நான் உன் லைப்ல வர முன்ன ரொம்ப சந்தோஷமா இருந்தீங்க போல உங்க குடும்பத்துல?…” கூர்மையாக பேசிக்கொண்டே அவனும் பதிலுக்கு வாளை வீச ஒரு நொடி ஸ்தம்பித்து பின் சளைக்காது அவனை எதிர்கொண்டாள்.
“ஆமாம், உண்மையில் ஒரு நிம்மதி எங்களுக்கே எங்களுக்கான அந்த குட்டி உலகத்துல சின்னதா நிம்மதி இருந்தது. எப்போ நீங்க வந்துட்டு போய் எங்கப்பா ஜாதகம்ன்னு ஆரம்பிச்சாரோ அன்னைக்கு போச்சு. எங்க தியா…”
“இப்ப அவ சந்தோஷமா இருக்கா…” அவன் இடைபுக,
“அது இப்போ. விஷ்வா அத்தான் வர முன்னாடி? பரிகாரம் பரிகாரம்ன்னு எத்தனை கஷ்டம். குற்றவுணர்ச்சியில நான் செத்து செத்து பிழைச்சேன். நானும் சுயநலவாதி தான். சொல்லாம மறைச்சது. அதுக்கு எனக்கான தண்டனையா தான் என் மனசை கல்லாக்கிக்கிட்டு தியா இத்தனை கஷ்டப்படறதுக்கு உங்களையே கல்யாணம் செஞ்சுக்க சொல்லி தியாட்ட நானே பேசினேன்…” 
கண்ணீர் வழிய அவள் சொல்லிய விஷயம் வசீகரனுக்கே அதிர்ச்சி தான். கூடவே கோபமும் வர,
“நான்சென்ஸ், அறிவுகெட்டதனமா பேசியிருக்க…” என அவன் வெடித்தான். 
கோபத்தில் அவள் விட்ட வார்த்தையை அவனும் கவனிக்கவில்லை, அவளும் கவனிக்கவில்லை. அனால் இதற்கு அவனின் கோபம் அவளுக்கு இனித்தது.
“சென்ஸ் உங்களுக்கு இருந்ததாமா? முன்னபின்ன தெரியாத ஒரு பொண்ணோட லைப்ல நுழைஞ்சதும் இல்லாம எங்கப்பாவோட கோபத்துக்கு உங்களோட பிடிவாதம் எங்க நிம்மதியை பலி(ழி) வாங்கிருச்சு. அப்படி என்ன ஆத்திரம் கண்ணை மறைக்க?…”
“என்ன ஆத்திரமா?. உங்கப்பா பேசினது மட்டும் சரியா?…”
“அம்மா, அப்பா அவமானம்னு ஆரம்பிக்காதீங்க. தியாவுக்கு பெத்தவங்க இல்லையா? அவ வாழ்க்கையை முடிவு செய்ய நீங்க யாரு? உங்களுக்கு நான் கிடைக்கனும்ன்ற ஆசையில அவ எதிர்காலத்துக்கான முடிவை நீங்க ஏன் எடுத்தீங்க? ஏன் அப்பா இல்லையா எங்களுக்கு?…”
“அப்பா, அப்பா அப்பா அந்த அப்பா தான் உங்களை இத்தனை கஷ்டப்படுத்தினது…” கோபத்தில் எழுந்து நின்றுவிட்டான்.
“எங்கப்பா எங்கமேல நம்பிக்கை இல்லாம இல்லை. ஆனாலும் இந்த சமூகத்து மேலான பயம். யாரு எதுவும் சொல்லிடுவாங்களோன்ற கவலை, இப்படி செய்யவச்சது அவரோட அறியாமை. நாங்க அதை ஏத்துக்கிட்டு பொறுமையா போனது நாங்க அவருக்கு குடுக்கிற மரியாதை. ஒரு அப்பாவா அவரோட இடத்துல இருந்து பாருங்க…”
“வாவ், செம்ம போ. உங்கப்பா மேல உனக்கு இப்படி கண்ணாபின்னான்னு பாசமிருக்கும்னு எனக்கு தெரியாமலே போய்டுச்சு பாரு…” என கிண்டலாக அவன் சொல்ல முகம் சிவந்தவள்,
“உங்களுக்கு பிடிச்சது கேட்டீங்க. அப்பா செஞ்சது தப்புன்னு நான் ஏற்கனவே உங்ககிட்ட சொல்லி மன்னிப்பும் கேட்டுட்டேன். எங்களுக்கே தெரியாம நீங்க நிறைய நல்லது செஞ்சிருக்கீங்க. அது ஒரு வேளை பரிதாபமா கூட இருக்கலாமே?…”
“டேமிட் பரிதாபம்…” என பற்களை நறநறவென கடித்தான்.
“சொல்லிக்கோங்க, ஆக்ஸிடென்ட் ஆனப்ப கூட இருந்தது, பெரியப்பா பேமிலி எங்களோட சேர காரணமா இருந்தது இப்படி சில நல்ல விஷயங்கள். ஆனா ஏன் தியா லைப்ல தலையிட்டீங்க?…”
“என்ன பன்றது லவ் பண்ணிட்டேன். உனக்காக உன் அக்காவையும் சேர்த்து கப்பாத்தனுமே?…”
“இப்ப நான் டேமிட் சொல்லவா?. சப்போஸ் தியா மனசுல வேற யாராவது இருந்திருந்தா? நீங்க ஏற்பாடு பண்ணினது அவளுக்கு தண்டனையா போய்ருக்குமே. இதெல்லாம் யோசிச்சீங்களா?…”
“குட் ஜோக் மை ஹாட் வொய்ப், உங்கப்பா மாதிரி ஒரு ஆள்க்கிட்ட வளர ஒரு பொண்ணு லவ்வா? சான்சே இல்லை…” 
“இதுதான் இதத்தான் எங்கப்பா மாதிரி பன்றீங்கன்னு சொல்றேன். எல்லாமே உங்க யூகம், அது என்ன முடிவு சொல்லுதோ அதுதான் உங்களோட பைனல் டிஸிஷன். நீங்களா இது இப்படித்தான் இருக்கும்னு முடிவு பண்ணி அதை நடத்தவும் செய்யறீங்க. இதே தான் எங்கப்பாவும்…”
“விஷ்வா ரொம்ப நல்லவன், உங்கக்காவுக்கு கரெக்ட்டான ப்பேர் அவன் தான்…”
“நல்லவரா இருந்ததனால சரியா போச்சு. இல்லைனா? அப்பாவுக்கும் அவருக்கும் ஒத்துபோகாம இருந்திருந்தா? இதுல புகழ் அண்ணா உங்களுக்கு சப்போர்ட்…”
“எதையுமே கரெக்ட் வே ல யோசிக்கவே மாட்டியா? அதுக்கு வாய்ப்பில்லைன்னு தான் விஷ்வாவை முடிவு பண்ணினோம். அன்ட் ஒன் திங் உங்க எல்லாருக்கும் வேணும்னா இது அரேஞ்ச்ட் மேரேஜ், விஷ்வாவை பொறுத்தவரை இது லவ் மேரேஜ். மேரேஜ்க்கு பின்னால தியாவுக்கும் இது தெரியும்…”
“வாட்…” என்று சந்நிதி வாயை பிளக்க அதை சிந்தாமல் சிதறாமல் தனக்குள் பதுக்கியவன் அவளின் தாடையை பிடித்து வாயை மூடி,
“இப்பவும் உன்னோட வாட் எனக்குள்ள பல வாட்ஸ் பவரை உண்டுபண்ணுது நிதி…” என கரைய பேச்சற்று போன நிதியின் கண்கள் அவனின் விழிகளுடன் கலந்தது.
“நிதி…” மீண்டும் அவன் அழைத்த பின்னர் தான் தன்னிலை உணர்ந்து விழி தாழ்த்தி முகம் குனிந்தாள். அவளின் செயலில் உண்டான புன்னகையோடு,
“விஷ்வா சந்தியாவை அவளோட செகென்ட் இயர்ல பார்த்திருக்கான். காலேஜ்க்கு வேற ஒரு விஷயமா வந்தவன் பிடிச்சுப்போய் யார் என்னன்னு விசாரிச்சுட்டு படிப்பு முடியவும் வீட்ல சொல்லிருக்கான். உனக்கு தான் தெரியுமே, அவங்க வீட்ல ஜாதகம் ஜோசியம்னு பெரிய நம்பிக்கை…”
“அவன் ஜாதகத்தில உள்ள தோஷத்தால அதுக்கு பொருத்தமான பெண்ணை பார்த்துதான் கல்யாணம் செய்து வைக்கனும்னு வீட்ல சொல்லியிருக்காங்க. அவங்க வீட்ல அதை வச்சு சில விஷயங்கள் நடந்ததால இவனால உன் அக்காவுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு ஒதுங்கிட்டான்….”
“ஆனா தெய்வ சங்கல்பம் ரெண்டு பேரையும் சேர்த்து வச்சிடுச்சு அதே ஜாதக பிரச்சனையால. வசதி வாய்ப்புகள்ன்னு பார்த்தலும் அவங்க எந்த குறையும் சொல்லிடறது மாதிரி எதுவும் இல்லை. ஊர்ல எல்லா நிலபுலன்களையும் வச்சிருக்காங்க. கௌரவத்துக்கும் அவனோட ஆசைக்கும் அவன் அதிகாரியா வேலை பார்க்கறான்…”
“சந்தியாவுக்கு எந்தவித குறைவான வாழ்க்கையும் அமைஞ்சிடலை. சொல்ல போனா இப்போதான் ஒரு நிறைவான உண்மையான சந்தோஷம்னா என்னன்னு ஒவ்வோர் நாளும் வாழ்ந்துட்டிருக்கா. உங்க வீட்டோட முடிவுகளை நான் எடுத்தேன்னு சொல்ற. எஸ், உன் குடும்பம் என் குடும்பம்னு நினைச்சேன். அதனால நான் இந்த முடிவுகளை எடுத்தேன். இப்பவும் சொல்லுவேன், நான் தப்பு பண்ணலை…”
“இது எல்லாமே உனக்கு மனசு மாறனும்னு நான் சொல்லலை. நீயும் என் மனைவின்னதுக்கு பின்னால இதை தெரிஞ்சுக்கனும்னு தான் சொல்றேன்…” என்றவன் அவளின் அமைதியில் அவளருகே நெருங்கி நின்று அவளின் முகம் பற்றி நிமிர்த்தினான்.
“உன்னை பார்த்தது பிடிச்சதுல வேற எதையும் யோசிக்க தோணலை. உங்க வீட்டில இருந்து வந்த பிரச்சனையால உன்னை எப்படியாவது கல்யாணம் பண்ணிக்கனும்னு யோசிச்சேனே தவிர காதலிச்சேனான்னு கேட்டா கண்டிப்பா தெரியலை. ஆனா உன்னை நினைக்காத நேரமும் நாளும் இல்லை. ஒருவழியா எல்லாம் முடிஞ்சு இதோ இப்ப நீ என் மனைவி. ஆனா லவ்? இப்பவும் முடியலை. இன்னும் உன் மனசுல நீ என்னை வச்சிருக்கன்னும் தெரியலை…” அத்தனை வலியோடு வந்து விழுந்தன அவனிடமிருந்து வார்த்தைகள்.
“இல்லை, அப்படியில்லை. நான் சொல்ல வரது உங்களுக்கு புரியலை. ஆனா நான்…”அவளின் வார்த்தைகள் தடுமாற,
“பட், ஸ்டில் ஐ லவ் யூ. இதுக்கு மேல என்னை எப்படி புரியவைக்க?..” என்றவன் வேகமாய் அந்த அறையிலிருந்து வெளியேறிவிட்டான் வசீகரன்.
 அவள் சென்றதிலிருந்து அப்படியே சோபாவில் சென்று அமர்ந்தவள் அவன் பேசிய ஒவ்வொன்றையும் நினைத்தவளுக்கு அப்படி ஒரு அழுகை. 
“ஸ்டில் ஐ லவ் யூ. ஆமாம், நானும் தான். ஆனால்” என மனதிற்குள் சொல்லிக்கொண்டவளுக்கும் யாருமறியாத ஒரு பக்கம் இருந்தது. இருக்கிறது. 
ஆம், வசீகரன் பார்த்தேன், பார்க்க வைத்தேன், பிடித்தது என்று சொல்லி சொல்லி பேசினாலும் அவனுக்கு முன்பே அன்று அவனை சந்நிதி பார்த்திருந்தாள். 
அவனை பார்த்த முதல் பார்வையிலேயே வசீகரன் சந்நிதியின் மனதில் நிகழ்த்தியிருந்தது ஒரு காதல் பயங்கரவாதம். 
ரேவதியின் திருமணம் கோவிலில் வைத்து திருமாங்கல்ய சடங்கு நடைபெறுவதால் காலை அனைவருமே அங்கு கிளம்ப அப்போது தான் அம்பிகாவும் வசீகரனும் உள்ளே வந்துகொண்டிருந்தனர்.
அப்பொழுது அவளை அவன் பார்க்கவில்லை. ஆனால் உள்ளே தன் தாயை அணைத்தபடி முகம்கொள்ளா புன்னகையுடன் வசீகரிக்கும் தோற்றத்தில் அவன் வர பாவையவள் கண்ட நொடியில் அவள் பார்வையில் மையல் படர்ந்தது.
வயது பெண்ணுக்கே உரிய எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி தன் தாயிடமும், தமைக்கையிடமும் மட்டுமே கலகலப்புடன் இருப்பவள் வெளியில் இறுகிய தோற்றம் மட்டுமே. 
தங்கள் எதிர்காலத்தை பற்றிய எந்த முடிவானாலும் முனீஸ்வரன் கையில் என்பதால் வாழ்க்கையை எந்த எதிர்பார்ப்பும் இன்றி கழித்துக்கொண்டிருந்தவளின் மனதில் முதல் பார்வையிலேயே சத்தமின்றி அவளின் இதைய அறைக்குள் சிம்மாசனமிட்டு அமர்ந்துகொண்டான் அவன்.
மீண்டும் அவனை பார்க்க கூடாதென்று அவள் இருக்க அவனே அவளை பார்த்ததும் உண்மையில் பயந்துதான் போனாள். 
அவளையும் மீறிய நிகழ்வுகள் அவையெல்லாம். அவளின் பெண்மை அவனின்மேல் விருப்பம் கொள்ள அதை யாருக்கும் அறியாமல் இவள் பூட்டிக்கொள்ள அந்த பயங்கரவாதி ஒற்றை பார்வையில் அவளின் அத்தனை செல்களையும் உயிர்பெற செய்திருந்தான். 
முனீஸ்வரனின் பெண்ணான அவளுக்கு ஏற்கனவே திருமணத்தில் நம்பிக்கையற்று இருக்க இதில் காதல் எந்தவிதத்திலும் நிறைவேறாத ஒன்று என்பதால் மனதிற்குள்ளேயே அதை புதைத்துக்கொண்டவள் இந்த ஜென்மத்திற்கும் அவன் பார்வை ஒன்றே போதுமென்று இருந்திருந்தாள்.
ஆனால் அவனின் பெற்றோரின் வருகையும் அதை தொடர்ந்த கலவரங்களும் வசீகரனின் வரவும், சவாலும் அது சந்தியாவை கேட்டு என்பதாக நினைத்துக்கொண்டவள் மறந்தும் தன் எண்ணத்தை ஒருவருக்கும் தெரியாமல் கொன்று புதைத்தாள்.
சந்தியாவை பார்த்ததை தன்னை பார்த்ததாக நினைத்து வருந்தியவளின் இரவுகளில் அவனின் நினைவுகள் மட்டுமே. ஆனால் உண்மையில் தன்னுடைய அதிர்ச்சியை கொண்டே தன் மனதை படித்தவனின் காதலை இப்பொழுது முழுதாய் அனுபவிக்கவிடாது தடுத்தது அவனின் ஆளுமை. 

Advertisement