Advertisement

தீண்டல் – 20 
         இன்னமும் புகழ் சொல்லியதை வசீகரனால் நம்பமுடியவில்லை. எப்படி அதற்குள் சம்மதித்தார் என்று ஒருபுறம் ஆச்சர்யமாக இருந்தாலும் ஒரு நிம்மதி எழுந்தது அவனுள்.
புகழ் அதற்கு மேலும் தாமதிக்காமல் நீதிமாணிக்கத்தை வைத்தே அனைத்தையும் நடத்தினான். முனீஸ்வரனுக்கு நேரடியாக மீண்டும் குகன், அம்பிகாவிடம் சென்று பேச தயக்கமாக இருக்க அவரின் அண்ணனின் பொறுப்பில் விட்டுவிட்டார்.
தரகரை வைத்தே பெண் கொடுப்பதை பற்றி பேசி குகனிடம் நீதிமாணிக்கம் போனில் பேச வசீகரன் ஒரு வாரம் கழித்து தகவல் சொல்வதாக சொல்லிவிட அதை பற்றி அறிந்த முனீஸ்வரன் தாம்தூம் என்று குதித்தார்.
“என்ன நினைச்சு பேசறாங்க? திரும்ப நாமா போய் நின்னா எகத்தாளமா போச்சா?…” என்று ஆட,
“நீ ஏன்பா இத்தனை கோபப்படற? ஒரு வேளை நல்ல நாள் பார்த்தி பேசலாம்னு கூட நினைச்சிருக்கலாம். இப்ப என்ன ஒரு வாரம் கழிச்சு அவங்களே கூப்பிடட்டும். இல்லைனா இதை இப்படியே விட்டுடுவோம். வேற பார்ப்போம். சரிதானே?…” என அமைதிப்படுத்த புகழுக்கு தான் அத்தனை கோபம்.
“என்னதான் நினைச்சிட்டு இருக்க நீ? அப்போ இது நிதிக்காக இல்லையா? என் சித்தப்பாவை மடக்கத்தானா?. அப்படி மட்டும் இருந்தது நான் சும்மா விடமாட்டேன் பார்த்துக்க…” என்று எரிமலையென வெடிக்க வசீகரனின் முகத்தில் புன்னகை.
“பார்ரா இப்பவே அண்ணன்னு முறுக்கரத?…” என கிண்டல் பேச,
“வேண்டாம் வசீ…” என்று இன்னும் கடுப்பாகினான்.
“ஹ்ம்ம் உன் கோபம் புரியுது. சந்தோஷமாவும் இருக்கு. ஆனா என்னையும் நீ புரிஞ்சுக்கனும். இது இத்தனை வேகமா நடக்கும்னு நினைக்கலை. ஆனா நடந்தது சந்தோஷம். அதே நேரம் என்னால ஆஹா பொண்ணை குடுக்காங்கன்னு உடனே ரியாக்ட் பண்ண முடியாது புகழ்…” அழுத்தமான குரலில் சொல்ல புகழ் அமைதியானான் இப்பொழுது.
“என்னோட ஆசைக்காக என் அம்மாப்பா அங்க வந்து நின்னாங்க. இதுவரை பார்க்காத ஒரு அவமதிப்பை பார்த்தாங்க. இதையும் தாண்டி அந்த வீட்டு பொண்ணை எடுக்க சம்மதிச்சு எனக்காக வெய்ட் பன்றாங்க. அவங்களுக்கான மரியாதை அவங்க தொலைச்ச இடத்திலையே நான் தேடி தரனும்…”
“அதுக்கு இப்போ என்ன செய்யனும்? என் சித்தப்பாவை சம்மதிக்க வைக்க எத்தனை கஷ்டப்பட்டோம் தெரியுமா?…” 
“புரியுது புகழ். உன் இடத்துல வேற யாராவது இருந்திருந்தா உன்னை போல ஹெல்ப் செஞ்சிருப்பாங்களான்னா நிச்சயம் இல்லை. ஆனா எனக்காக நீ செஞ்ச. அதுக்கு நான் எப்பவும் கடமைப்பட்டிருப்பேன்…”
“ஹேய் என்ன இது உன் வாய்ஸ் இவ்வளோ எமோஷனல்? நான் ஏதோ கோபத்தில பேசிட்டேன். ஸாரி…”
“இப்ப உன் வாய்ஸ் தான் எமோஷனல் மோட்ல இருக்கு…” என்று சிரித்தவன்,
“ஒன் வீக் டைம் நான் சொல்லித்தான் அப்பா கேட்டாங்க. உனக்கு தெரியுமே. கண்டிப்பா ஒன் வீக் கழிச்சு நாங்க பொண்ணு கேட்டு முறைப்படி வரோம்…”
“என்னமோ பண்ணு…” என்று புகழ் சலிப்பாய் சொல்லிவிட அதன் பின் அந்த வார இறுதியில் பெண் பார்க்க வருவதாக தரகர் மூலம் தகவல் சொல்லிவிட்டனர். அனைத்தும் தரகர் மூலமே நடப்பதாக வைத்துக்கொண்டனர்.
அதன் பின் சந்தியா, விஷ்வாவிற்கு, கம்பனின் குடும்பத்திற்கு என்று சொல்லிய பின்பு தான் சந்நிதியிடம் சொல்லவேண்டும் என்பதே முனீஸ்வரனுக்கு நியாபகம் வந்தது. அதுவும் புகழ் சொல்லி.
“சித்தப்பா நீங்க சொல்லும் முன்ன நாங்க சொல்லிட கூடாதேன்னு தான் சைலன்ட்டா இருக்கோம். நீங்க எப்ப சொல்லுவீங்க? இன்னும் நாலே நாள் தான் இருக்கு…” 
“முத்த நாள் சொன்னா கூட தப்பில்ல. இப்பவே சொல்லி என்ன பண்ண போறா உன் தங்கச்சி?…”
“தப்பு சித்தப்பா, கல்யாணம் அவளுக்கு. அவளுக்கே சொல்லாம எப்படி? அவளும் தெரிஞ்சுக்கனும்ல…” என்று சொல்லிய பொழுது,
“உங்க பொண்ணையும் பார்க்க வச்சேன்” என்ற வசீகரனின் குரல் காதில் கேட்க யோசனையானவர்,
“வா வீட்டுல போய் பேசுவோம்…” என அவனையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார். 
அங்கே பார்கவி சந்நிதிக்கு ஊட்டி விட்டுக்கொண்டிருக்க சந்நிதி இரு கைகளையும் டேபிள் பேனின் முன்னால் நீட்டியிருந்தாள். அவளின் கைகளில் மருதாணி வைக்கப்பட்டிருந்தது.
திடீரென அவர் வந்து நிற்பார் என எதிர்பாராதவர்கள் சட்டென எழுந்து நிற்க சந்நிதி தன் கைகளை பின்னால் வைத்துக்கொண்டாள். ஏதாவது திட்டிவிடுவாரோ என்ற பயத்துடன். 
டைனிங் டேபிளில் காய்கறிகளை வைத்து நறுக்கினால் கூட அத்தனை கோபம் வரும் முனீஸ்வரனுக்கு. எதற்கு அடுப்படி இருக்கிறது? என்று கேட்பார். டைனிங் டேபிள் சாப்பிடுவதற்கு மட்டும் என்று அத்தனை பேசி காயப்படுத்துவார். 
இன்று அங்கு அமர்ந்து மருதாணி வைத்திருக்க மீதம் இருந்த மருதாணி பாத்திரம் அங்கேயே வேறு இருந்தது. இதோ பேச போகிறார் என்று இருவரும் பதைபதைத்து நிற்க,
“என்ன இந்நேரம் மருதாணி வச்சிட்டிருக்க?…” என கேட்டுக்கொண்டே சோபாவில் அமர்ந்தவர் சந்நிதியை வாவென கைகளால் அழைத்தார்.
“இல்லைங்க வேலைக்கார பொண்ணு பறிச்சுட்டு வந்தா. நைட்லனா பெட் எல்லாம் ஆகிடும். அதான் இப்பவே வச்சுடலாம்னு…” 
மகளை எதுவும் சொல்லிவிடுவாரோ என்று அதிசயமாக பார்கவி பேசிவிட அதற்கு தலையை ஆட்டிய முனீஸ்வரனை பார்த்து மயக்கம் வராத குறைதான் அம்மாவுக்கும் மகளுக்கும்.
“சிறுசுக்கு வரன் வந்திருக்குன்னு சொன்னேன்லையா. அவங்க வர புதன் கிழமை பொண்ணு பார்க்க வரதா சொல்லியிருக்காங்க…” என்றதும் சந்நிதிக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவளின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவர்,
“என்ன?…” என்று கேட்க,
“ஒன்னுமில்லைப்பா…” 
“ஹ்ம்ம் பையன் வீடு நமக்கு தெரிஞ்ச இடம் தான். ஏற்கனவே இங்க வந்திருக்காங்க. பேர் வசீகரன்…”  என்றவர் புகழிடம் இருந்து மொபைலில் இருந்த வேசீகரனின் குடும்ப புகைப்படத்தை பார்கவியிடம் காண்பித்து மகளிடம் நீட்ட அதை வாங்காமல் பார்த்தவளுக்கு இன்னமும் பேரதிர்ச்சி.
“புதன்கிழமை காலையில வந்திடறாங்க. கோவில்ல வச்சு பார்த்துக்கலாம்னு பேசியிருக்காங்க. பேசி முடிக்கவும் அன்னைக்கே நாள் குறிச்சிடலாம்னு அண்ணன் சொல்லியிருக்கார்…”
முனீஸ்வரன் பேச பேச தலை சுற்றுவதை போல இருந்தது சந்நிதிக்கு. இது எப்படி சாத்தியமாகிற்று என்று குழம்பியவள் அண்ணனை பார்க்க,
“என்னாச்சு நிதி? உனக்கு ஓகே தானே?…” அவள் சரி என்று சொல்லவேண்டுமே என்று கேட்க மெதுவாக மறுப்பாய் தலையசைத்தாள். அதை கவனிக்காத முனீஸ்வரன்,
“அவக்கிட்ட என்னடா கேட்டுக்கிட்டு? நான் முடிவு பண்ணிட்டேன். பொண்ணா லட்சணமா வந்து தளி வாங்க உட்கார்ந்தா போதும். புதுசா இருக்கு பொம்பளை புள்ளைக்கிட்ட போய் சம்மதம் கேட்கிறது…” என்று பேச,
“வேண்டாம்ப்பா…” என்று தைரியத்தை கூட்டி மெதுவாய் சொல்ல,
“என்ன?…” என்று பட்டென்று திரும்பி பார்த்தவர்,
“என்ன சொன்ன? என்ன வேண்டாம்?. சொல்லு. என்ன வேண்டாம்?…” அவரின் மிரட்டலில் நடுங்கியவள்,
“இப்ப இப்ப கல்யானம வேண்டாம்னு, அதான்…”
“ஓஹ் எதிர்த்து பேசி எனக்கே யோசனை சொல்ற அளவுக்கு பெரியாளாகிட்டையோ? சொல்லு. எண்ணவேண்டாம் சொன்ன?…” என்றவர்,
“பொண்ணா வளர்த்து வச்சிருக்க?…” என பார்கவியின் பக்கம் வர,
“அப்பா ப்ளீஸ், நான் கேட்கறேன். வேண்டாம்னு சொல்லமாட்டேன். கண்டிப்பா கேட்கறேன். சம்மதம்…” என்று பதறி நின்றவள் கண்ணீருடன் சொல்ல,
“ஆளாளுக்கு சாம்பிராணியா போடறீங்க? தொலைச்சிடுவேன் பார்த்துக்க. உன் அக்கா எப்படி சத்தம் காட்டாம கல்யாணம் பண்ணி என் மானத்தை காப்பாத்தினாளோ அது மாதிரி இருக்கனும். புரியுதா?…” என்று சொல்லி செல்ல புகழுக்கு சந்நிதியின் மறுப்பு வருத்தமாய் இருந்தது.
முனீஸ்வரன் கோபத்துடன் மாடிக்கு சென்றுவிட சந்நிதியை அழைத்துக்கொண்டு அவளின் அறைக்கு வந்தான்.
“என்ன நிதி? என்ன வேண்டாம்? விஷயம் சொல்லு…” தன்மையாக கேட்க கண்ணை கரித்துக்கொண்டு வந்தது சந்நிதிக்கு.
“நீயும் சேர்ந்து தான பார்த்திருக்க? என்கிட்டே இத்தனை நாள் ஏன் சொல்லலை? நீயாச்சும் சொல்ல வேண்டியது தான?…” அவனிடம் சண்டையிடுவதை போல பேச,
“சித்தப்பா சொல்லாம நான் எப்படி சொல்ல முடியும்? தெரிஞ்சா அதுக்கும் சத்தம் போடுவார்…”
“இ….து… இந்த மாப்பிள்ளை, ப்ளீஸ் அண்ணா, வேண்டாமே…”
“ஏன் உனக்கு பிடிக்கலையா?…” 
“ப்ச், பிடிக்குது பிடிக்கலைன்றதை விட இப்ப கல்யாணம் வேண்டாம்னு தோணுது. யோசிக்கவும் இல்லை அதை பத்தி. இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும். அதுவும் இல்லாம இவங்க யார்ன்னு தெரியும் தானே?…”
“பழசை நினைக்காத நிதி. இவர் ரொம்ப நல்ல டைப். நீ ஏன் உன்னை கன்ப்யூஸ் பண்ணிக்கற?…”
“இல்லை எனக்கு எந்த குழப்பமும் இல்லை. அப்பா எப்படி இவங்களை பேசினாங்கன்னு எனக்கு தெரியலை. ஆனா வேண்டாம்னு மட்டும் தோணுது. நீயாவது பெரியப்பாக்கிட்ட சொல்லி சொல்லு ப்ளீஸ்…”
“அங்கே ஒருவன் இவளின் நினைப்பிலேயே வாடி கிடக்க இவளேன்றால் அவனின் நினைவே வேண்டாம் என்கிறாளே” என ஆயாசமாக போனது புகழிற்கு. அவனுக்கு தெரியவேண்டியது இருந்தது நிதியிடம்.
“நிதி இங்க பார், உனக்கு இப்போ கல்யாணம் வேண்டாமா? இல்லை இந்த மாப்பிள்ளை வேண்டாமா?…” என மீண்டும் கேட்க,
“எனக்கு கல்யாணமே வேண்டாம். போதுமா? கல்யாணம், கல்யாணம், கல்யாணம், எண்ணத்தை கண்டாங்க எங்கம்மா கல்யாணம் செஞ்சு? எங்க ரெண்டு பேரை பெத்து வளர்த்து இன்னைக்கு வரைக்கும் நினைச்சதை பேச முடியாம ஆசைப்பட்டதை வாங்க முடியாம, விரும்பினதை நடத்த முடியாமன்னு எத்தனை அனுபவிக்கிறாங்க. இதை பார்த்தும் நான் எப்படி?…”
கதறலுடன் அவள் சொல்ல சொல்ல பார்கவிக்கு மனதே விட்டுப்போனது. தன் மகளின் முடிவிற்கு தானே காரணமாகியிருக்கிறேனா? எத்தனை நாள் இப்படி ஒரு எண்ணம் இவளுக்கு? என்று தொய்வுடன் அமர்ந்துவிட்டார்.
“லூஸா உனக்கு? பாரு சித்தி அப்செட் ஆகிட்டாங்க. ஏன் தியா கல்யாணம் செஞ்சிட்டு சந்தோஷமா தானே இருக்கா. அதுல என்ன குறை கண்டுபிடிச்ச?…”
“ஹ்ம்ம் சந்தோஷமா இருக்கா. ஆனா இந்த மாப்பிள்ளை. இவர்…” அவள் சொல்லமுடியாமல் தடுமாறினாள்.
அவனின் இடத்தில் வைத்து அவன் பேசியவைகள் எல்லாம் நியாபகத்தில் வர கண்களை மூடி அன்னையின் அருகில் அமர்ந்துகொண்டாள்.
“நிதி…” பார்கவியின் குரல் கவலையுடன் அவளை தொட்டே,
“அம்மா, நான் சம்மதிக்கிறேன். நீங்க எதுவும் சொல்லிடாதீங்க, ப்ளீஸ்…” என்றவள் அதற்கு மேல் தன் மறுப்பை எங்கும் எதிலும் காண்பித்துக்கொள்ளவே இல்லை. 
முதல் சந்திப்பும் பேச்சும் ஒருவித கசப்பை தந்துவிட்டதால் இந்த முறை கோவிலில் வைத்து பெண் பார்த்துக்கொள்வது என்று நீதிமாணிக்கம் சொல்லிவிட்டார் வசீகரன் கேட்டுக்கொண்டதன் படி.
வசீகரன் குடும்பத்துடன் ரேவதியின் புகுந்த வீடும் வந்திருக்க புவனேஷ்வரனின் மனைவி அபிராமியின் பெற்றோர்களும் மாப்பிள்ளை வீட்டின் சார்பாக வந்திருந்தனர். 
கோவிலுக்கு வந்தவர்களிடம் சகஜமாக பேச முடியாமல் முனீஸ்வரன் ஓரிரு வார்த்தைகளுடன் நிறுத்திக்கொள்ள நீதிமாணிக்கம் தான் அனைத்தையும் முன்னின்று நடத்தினார்.
மூன்று மாதங்கள் கழித்து திருமணம் வைத்துக்கொள்வதாக முடிவு செய்யப்பட இருவீட்டார்களின் முழுமனதுடன் தாம்பூலம் மாற்றப்பட்டு திருமணம் உறுதிசெய்யப்பட்டது.
திருமணத்திற்கு முதல் நாள் இரவு நிச்சயதார்த்தம் வைத்துக்கொள்ளலாம் என்று பேசிக்கொண்டாலும் நடந்தது நிச்சயதார்த்தம் போல தான் இருந்தது. 
பேசி பூவைத்து செல்வதற்கே புடவை நகையுடன் தான் வந்திருந்தார் அம்பிகா. ஊரில் இன்னும் சில நெருங்கிய சொந்தங்கள் அழைத்து வந்திருக்க முனீஸ்வரனும் தங்கள் பக்க சொந்தங்கள் சிலரை அழைத்திருந்தார்.

Advertisement