Advertisement

வந்திருந்தவர்கள் அனைவருக்கும் இரவு உணவும் கோவிலிலேயே மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கிளம்பும் வரை சந்நிதி வசீகரனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. அலங்கரிக்கப்பட்ட பொம்மையென வந்து சபையில் நின்றவள் அவர்கள் சொல்லியதை செய்து சென்றாள்.
புகழ் கூட வசீகரனிடம் தனியாக பேசுகிறாயா என்றதற்கு மறுத்துவிட்டான் வசீகரன். ஆனால் அவனின் பார்வை மட்டும் மௌனமாக அவளை தொட்டுக்கொண்டே இருந்தது.
“ரொம்பத்தான் பீல் பன்றடா வசீ. வேணும்னா போய் பேசிட்டு வா…” என்ற அம்பிகா அதன் பின் கண்டுகொள்ளாமல் அவர் அனைவரிடமும் கலகலத்து இருந்தார்.
அவரின் இயல்பான குணத்திலும் முகத்தில் குறையாத புன்னகையிலும் முனீஸ்வரனின் உறுத்தல் குற்றவுணர்வாய் மாறியது. அம்பிகாவிடம் எதையோ எதிர்பார்த்தார் முனீஸ்வரன்.
ஆம், அண்ணன் என்று எந்தவித வெளிபூச்சும் இன்றி தன் வீட்டிற்கு வந்த அன்று உரிமையோடு அழைத்தாரே அம்பிகா. அது தவறியும் இன்று அவரிடமிருந்து வெளிப்படவில்லை. 
அது முனீஸ்வரனை என்னவோ செய்ய தானாக அண்ணன் என்று கூப்பிடு என்றும் சொல்லமுடியாமல் இருதலைகொல்லி எறும்பென நடமாடினார்.
வாங்க என்று சொல்லிய முனீஸ்வரனிடம் ஆமாம் என்று பேசியதோடு சம்பிரதாய பேச்சுக்கள் மட்டுமே  மட்டுமே குகனிடம். மற்றபடி அதிகப்படியான பேச்சுக்கள் எதுவும் இல்லை. 
சிறப்பாய் அன்றய விசேஷம் நடைந்தேற திருமணம் எப்படி என்ன செய்வதென்று எல்லாம் பொதுவாய் பேசி முடிவுகள் எடுக்கப்பட்டது. 
மூன்று மாதங்கள் இடையில் இருக்க முனீஸ்வரனிடம் நீதிமாணிக்கத்தை பத்திரிக்கை ப்ரூப் பார்க்கும் விஷயமாக பார்க்க செல்ல அவரின் முகத்தில் அத்தனை யோசனை.
“என்னண்ணே உடம்புக்கு முடியலையா என்ன?…” அக்கறை கூட முரட்டு குரலில் தான் வெளிப்பட்டது. ஒரு நொடி பக்கென்று ஆனது நீதிமாணிக்கத்திற்கு.
“ஏன்பா முன்னால வந்து கேட்க கூடாதா? சத்தமில்லாம பின்னாடி நின்னு அதட்டல் குரல்ல கேட்கிற?…” என்று நெஞ்சை தடவிக்கொள்ள முனீஸ்வரன் வாய்விட்டு சிரிக்க வீடே ஆவென்று பார்த்தது.
“பயந்துட்டீங்களா?…” என்று வேறு சின்னப்பிள்ளை போல கேட்க நீதிமாணிக்கத்திற்கும் சிரிப்பு தான்.
“விளையாடற வயசாப்பா?…” என்று சேர்ந்து சிரித்தார்.
“ப்ரூப் பார்க்கனும்னு தான் வந்தேன்…”
“ஹ்ம்ம், பார்ப்போம். உன்கிட்ட ஒன்னு கேட்கனும். பேசறதுக்கு நானே சாயங்காலம் வீட்டுக்கு வரலாம்னு தான் இருந்தேன்…”
“சொல்லுங்கண்ணே…”
“நம்ம வீடு பூட்டியே கிடக்கே, எப்ப அதை திறக்கலாம்? என்னவோ மனசுக்கு ரெண்டு மூணு நாளா சங்கடமாவே இருக்கு. சொப்பனமும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. பூட்டின பரம்பரை வீடு கண்ணு முன்னால வந்து நிக்குது. தூக்கமே இல்ல…” என்று கவலையாக சொல்ல,
“சொல்லுங்கண்ணே திறந்திடுவோம். அதான் உங்ககிட்டையும் வீட்டு சாவி ஒண்ணு இருக்கே. ஆளை விட்டு சுத்தம் பண்ணிடுவோம். இதுக்கா இத்தனை கவலையா இருந்தீங்க?…” 
எங்கே பழைய கசடுகளும், மனஸ்தாபங்களும் ஞாபகம் வந்து மீண்டும் முனீஸ்வரன் முருங்கைமரம் ஏறிவிடுவாரோ என்று பயந்துகொண்டே தான் நீதிமாணிக்கம் ஒருவாரகாலமாக இதை பேசாமல் தள்ளிப்போட்டது. இப்படி ஒரே வார்த்தையில் சரி என்று சொல்வாரென எதிர்பார்க்காத நீதிமாணிக்கம் முனீஸ்வரனின் மாற்றத்தில் வாயடைத்து போனார்.
“நிஜமா தான் சொல்றியாப்பா?…” மீண்டும் கேட்க,
“எண்ணே நம்பிக்கை இல்லையா நான் சொல்றதுல?…” 
“அப்படி இல்லைப்ப்பா, ரொம்ப நாளா பூட்டி கிடந்த வீடு. ஒரு நல்ல விசேஷம் நடந்தா நல்லா இருக்குமே. அதான்…”
“பூஜைக்கு ஏதாவது ஏற்பாடு செய்யனும்னா பசங்கட்ட சொல்லுங்க. சிறப்பா செஞ்சிடலாம்…”
அதில்லைப்பா எனக்கொரு யோசனை தோணுது. நம்ம நிதி கல்யாணத்தை அங்க வச்சு ஏன் நடத்த கூடாது? நம்ம அம்மாப்பா ஆசீர்வாதம் கிடைச்சா மாதிரியும் இருக்கும். நம்மவீட்டு பொண்ணு கல்யாணம் நம்ம பூர்வீக வீட்டில நடந்த ஒரு திருப்தியும் இருக்கும். அங்க தெய்வமா இருக்கற நம்ம பெரியவங்களுக்கு சாந்தியாவும் இருக்கும்…”
நீதிமாணிக்கம் சொல்லிவிட்டு முனீஸ்வரனை பார்க்க அவர் முகம் தீவிர யோசனையில் ஆழ்ந்தது. முகமே மாறிவிட,
“ஏண்ணே சம்பந்தி வீட்டுல ஏதாவது சொன்னாங்களா?…” என்று கேட்கவும் நீதிமாணிக்கம் முகம் மாறிவிட்டது.
“என்னது? ஏன்ப்பா? ஏன் இப்டி கேட்கிற? அவங்க என்ன சொல்லுவாங்க?…”
“இல்லை கல்யாணத்துக்கு மறுவீடு அதுக்கு இதுக்குன்னு நம்ம வீட்டுக்கு வந்து போகனும்னு பழசை நினைச்சு எதுவும் சங்கடப்பட்டாங்களா? இதுக்குத்தான் நான் யோசிச்சேன் இது சரிவராதுன்னு…” என்றுவிட,
“இவன் எவன்டா சுத்த கூறுகெட்டவனா இருக்கான். ஏன்டா நான் எனக்கு தோணினதை சொன்னா நீ கல்யாணத்தை ஏற்பாடு செஞ்சதே தப்புன்னு பேசற. நான் ஒன்னும் கேட்கலைப்பா. நீ உன் விருப்பம் போல நடத்து. செஞ்சுக்கோ. தப்பு தான், என் தம்பி நான் சொல்றதை புரிஞ்சு ஏத்துப்பான்னு நினைச்சேன் பாரு…”
“அண்ணே…”
“அட போப்பா, நீ இப்படி நினைப்ப, இப்படி யோசிப்பன்னு நான் நினைக்கவே இல்லை. சரி விடு. இப்ப என்ன புகழ் கல்யாணத்தை அங்க நடத்திக்கிட வேண்டியது தான். நாளைப்பின்ன நம்ம பொண்ணுல ஒரு பொண்ணு கல்யாணத்தையாச்சும் அங்க நடத்திருக்கலாமேன்னு நீ வருத்தப்பட கூடாதுன்னு நினைச்சேன் பாரேன்…”
“அய்யோ அண்ணே அப்படிலாம்…”
“சரிப்பா, விடு. இப்ப வீட்டை திறக்க வேண்டாம். புகழ் கல்யாணம் பேசறப்ப திறந்துக்கலாம். அப்பவும் உனக்கு சம்மதம்ன்னா மட்டும். இல்லைன்னா இருக்கட்டும். அதுக்கு மாப்பிள்ளை வீட்டை ஏன் இழுக்க? கல்யாணத்துக்கு பின்னால உன் வீட்டுல கை நனைக்காம இருந்துருவாங்களா? இல்ல போக்குவரத்து இல்லாம போய்டுமா?…” என்று படபடவென பேசி முடிக்க கோமதிக்கும், அபிராமிக்கும் பயம் பிடித்துக்கொண்டது. 
“சும்மாவே இந்த மனுஷன் ஆடுவாரு. இப்ப கோபப்பட்டுட்டார்ன்னு திரும்ப சண்டை போட்டு குடும்பம் ரெண்டாக போகுது” என்று அச்சத்துடன் கோமதி பார்க்க,
“அட இப்ப என்னண்ணே, அங்க தான் நடத்துன்னா நடத்திட்டு போறேன். இதுக்கு ஏன் இத்தனை கோவம் வருது? விடுங்கண்ணே. என்பொண்ணுக்காக நீங்க இத்தனை பார்க்கறீங்க, அத புரிஞ்சுக்காம நான் ஒருத்தன் யோசிக்காம பேசிட்டு, ப்ச்…” என்றவர் அபிராமியை பார்த்து,
“இங்க என்ன வேடிக்கை உனக்கு, போ போய் குடிக்க அண்ணனுக்கு தண்ணி கொண்டா. வந்து இம்புட்டு நேரமாச்சு இதுதான் நீ வீட்டை பார்த்துக்கற லட்சணமா? போம்மா…” என்று அவளை விரட்டி வேலை வாங்கியவர் அதன் பின்னர் நீதிமாணிக்கத்தோடு சேர்ந்து கல்யாண வேலைகளை திட்டமிட்டார்.
உண்மையில் நீதிமாணிக்கம் பேசியதற்கும் வசீகரனுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஆனால் இந்த யோசனைக்கு காரணம் புகழ் மட்டுமே. 
திருமணம் நல்லவிதமாக நிறைந்த மனதுடன் நடக்கவேண்டும் என்றால் இது ஒன்றுதான் வழி. இல்லையென்றாலும் நடக்கும் தான். ஆனால் முள்ளாய் பழைய நிகழ்வுகள் குத்திக்கொண்டு தான் இருக்கும் என்று நீதிமாணிக்கத்திடம் பேச அவரும் அது சரி என்றுதான் நினைத்தார்.
ஆனால் முனீஸ்வரனை சம்மதிக்கவைக்க கஷ்டப்படவேண்டும் என்று நினைத்திருக்க அவரோ இலகுவாக இதை ஏற்றுக்கொண்டுவிட்டார் என்று மகிழ்ந்துபோயினர்.
இரும்பு இளகினாலும் இரும்புதான் என்பதை மறந்து போயினர். முனீஸ்வரனின் இந்த இளக்கம் எல்லா நேரங்களிலும் இருக்காது என்பதை உணராது போயினர்.
காஞ்சிபுரத்தில் திருமணமும் மூன்றாம் நாள் சென்னையில் வைத்து வரவேற்பும் என்று ஏற்கனவே முடிவான ஒன்று.
திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு பூர்வீக வீடு திறக்கப்பட்டு ஒரு கணபதிஹோமம் செய்தனர் இரு குடும்பங்களும் சேர்ந்து. திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பே அனைவரும் குடும்பத்துடன் பூர்வீக வீட்டிற்கு சென்றுவிட்டனர். 
இரண்டடுக்கு கொண்ட பழமை மாறாத மிக பெரிய வீடு அவர்களுடையது. அத்தனை நாள் இல்லாத உணர்வொன்று அந்த வீட்டில் உறங்கிய போது நீதிமாணிக்கத்திற்கும்,முனீஸ்வரனுக்கும் கிட்டியது. 
வாரம் ஒரு நாள் இங்கு தங்கிக்கொள்ள வேண்டும் என்று இருவருமாக பேசி முடிவு செய்துகொண்டனர்.
திட்டமிட்டபடி திருமணம் நன்றாக மிக சிறப்பாகவே நடந்தது. நிகழ்வுகள் அனைத்திலும் மாமனார், மருமகன் இடையில் பேச்சுவார்த்தைகள் என்று எதுவுமே இல்லை. 
முனீஸ்வரன் வா என்று தலையசைத்தால் அவனும் தலையசைப்பான். அப்படியே அனைத்து விஷயங்களிலும். புகழ் கூட வசீகரனிடம் பேச சொல்லி சொல்லி சித்தப்பனிடம் வாங்கிக்கட்டிக்கொண்டான்.
திருமாங்கல்யம் முடிக்கும் பொழுது கூட சந்நிதி வசீகரனை ஏறிட்டும் பார்க்கவில்லை. கண்கள் கலங்கி கண்ணீர் கரைகட்டி இருக்க இமை தாண்டி துளியளவு நீர் கூட வெளியேறவில்லை.
வசீகரனின் மனம் துணுக்குற்றது. புகழிடம் சந்நிதி சம்மதம் சொல்லிவிட்டாளா என்று கேட்ட பொழுது அவன் அவளின் மறுப்பு பற்றி எதுவும் தெரிவித்திருக்கவில்லை.
பெண் பார்க்கும் வைபவத்தில் கூட முனீஸ்வரன் மேல் பயத்திலும், தன்னிடம் பேசினால் எதுவும் சொல்லிவிடுவாரோ என்றும் இருப்பதாக இவன் கேட்காமலே புகழ் சொல்லியிருக்க அன்றே அவனுக்கு தெரிந்திருந்தது சந்நிதிக்கு விருப்பமில்லை என்று. 
காதல் கொண்ட மனம் இப்பொழுது தவித்தது. எத்தனை காத்திருப்பு, எத்தனை வேலைகள் இதற்காய். இவளானால் முகம் நிமிர்த்தி முகம் காண மறுக்கிறாளே என்று சஞ்சலம் கொண்டது. 
மணமேடையில் மந்திரங்கள் சொல்ல ஓரிரு வார்த்தைகள் இவன் பேச ஆமாம், இல்லை என்கிற தலையசைப்பு மட்டுமே. சாப்பிடும் இடத்திலும் இதை சாப்பிட்டு, அதை எடுத்துக்கொள் இப்படி அவனும் பலவாறாய் பேசி பார்க்க பலனில்லை. 
தன் குரல் கேட்டாலே அவள் கண்களில் கண்ணீர் நிறைந்துவிட அதிகம் சோதிக்காது அமைதியானான்.
அவளின் அருகாமையை, தனக்கு மனைவியாக போகும் தருணத்தை, தன்னின் சரிபாதியாகிவிட்ட நொடியை, அவனின் திருமணத்தை அவனால் முழுமனதாக அனுபவிக்க கூட முடியவில்லை. 
ஆனால் சொந்தங்கள் முன்னால் எதுவும் பேச முடியாது மௌனம் காத்தவன் தங்களின் தனிமைக்காக காத்திருந்தான்.
அன்று அங்கேயே பூர்வீக வீட்டில் சடங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க குடும்பத்தினரை தவிர்த்து அனைவருமே கிளம்பிவிட்டனர்.
மாடியில் நின்று அம்பிகாவிடம் பேசிக்கொண்டிருந்தான் வசீகரன். அவனை தேடி வந்த விஷ்வா பேசி முடிக்கும் வரை அங்கேயே நின்றான்.
“அம்மா தான்…” என்றபடி போனை வைக்க,
“ஊருக்கு போயாச்சா?…”
“ஹ்ம்ம் வீட்டுக்கே போயாச்சாம். அதான் கால் பண்ணி பேசினாங்க…”
“என்ன சொன்னாங்க?…”
“ஹ்ம்ம் அவங்க மருமக மனசு கோணாம பார்த்து பதவிசா பக்குவமா நடந்துக்கனுமாம்…” அம்பிகாவை போலவே சொல்லி காண்பிக்க அடக்கமாட்டாமல் சிரித்த விஷ்வா,
“மருமகளுக்கேத்த மாமியார்…” என அதற்கு தலையசைத்தான் வசீகரன்.
“கீழே உன்னை தேடிட்டு இருக்காங்க. அதான் கூப்பிட வந்தேன்…”
“சந்நிதி எங்க?…”
“அந்த ரூம்க்கு அனுப்பிட்டாங்க. இப்ப அம்மா சொன்ன மாதிரி நீ தான் உள்ள போக போற. பதவிசா….” விஷ்வா கேலி பேச,
“அனுபவம் பேசுது போல…” என்று திருப்பி வசீகரன் பேச புகழ் வந்துவிட்டான் இவர்களை தேடி.
“கூப்பிட வந்த மாப்பிள்ளையும் சேர்ந்து அரட்டையா? காலையில வச்சுக்கங்க…”  என சொல்ல,
“உன் கல்யாணத்துக்கும் வச்சுக்கலாம்…” வசீகரன் சொல்ல,
“கண்டிப்பா, கல்யாணம் தான் கன்பார்ம் ஆகிடுச்சே. நடந்துடும். வச்சிக்கலாம். வச்சிக்கலாம்…” என்றவனை கண்டு அந்த வீட்டு மாப்பிள்ளைகள் புன்னகைக்க,
“போதும், இன்னும் கொஞ்சம் நேரம் போனா என் அண்ணன் தேடி வந்துடுவான். இப்படி ஒருத்தர் ஒருத்தரா வந்து நின்னா மாடியில நிற்க இடம் இருக்காது…” என்றபடி இருவரையும் அழைத்துக்கொண்டு கீழே சென்றான்.
“நிதி அந்த ரூம்ல இருக்கா. உங்க திங்க்ஸ் கூட அங்க தான் இருக்கு…” என சந்தியா சொல்ல,
“தேங்க்ஸ் தியா…” என்றுவிட்டு சென்றான் வசீகரன்.
“என்ன இது? யே பெருசு இங்க வா…” என முனீஸ்வரன் அவளை அழைக்க,
“சொல்லுங்கப்பா…” என நின்றாள் மகள்.
“என்ன அவரு உன்னை தியான்னு கூப்பிட்டு போறாரு? இதெல்லாம் மரியாதை இல்லை. அவருக்கு தெரியாட்டி நீ சொல்லனும் அப்படி கூப்பிட கூடாதுன்னு. அண்ணின்னு முறையா கூப்பிட சொல்லு. உன் வீட்டுக்காரரை அண்ணன்னு கூப்பிட சொல்லு…” என்று மிரட்டலாய் கண்ணை உருட்டிக்கொண்டிருக்க,
“தியா…” என்று சென்ற வேகத்தில் வந்த வசீகரன் அவளின் கைகளில் சார்ஜரை திணித்து,
“விஷ்வா கேட்டான். அவனோடதை எங்க வச்சான்னு மறந்துட்டான் போல. நீ குடுத்திடு. குட்நைட்…” என்றுவிட்டு முனீஸ்வரனை கவனிக்காமல் சென்றுவிட அதற்கும் சேர்த்து கோபத்துடன் முனீஸ்வரன் மகளிடம் பேச ஆரம்பிக்க,
“இன்னும் இங்க நின்னு என்ன பன்ற?…” விஷ்வா வரவும்,
“வசீகரன், சாரி நிதி ஹஸ்பன்ட் குடுத்தார். உங்கட்ட குடுக்க சொல்லி…” தந்தைக்கு பயந்து பேச,
“ஓகே, இங்க என்ன பன்ற? வா ஸ்டார்ஸ் கவுன்ட் பண்ணலாம்…” என்று அவளை அழைத்து சென்றுவிட முனீஸ்வரனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பல்லை கடித்துக்கொண்டு அண்ணனை தேடி சென்றார்.
அறைக்குள் நுழைந்த வசீகரன் இன்று அழுகையுடன் கூடிய சந்நிதியை எப்படி சமாளிக்க போகிறோம் என்று யோசனையுடனே உள்ளே வந்தவன் ஜன்னல் புறமாக நின்றிருந்த அவளை நெருங்கினா.
காலையில் இருந்து கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டு நின்றவள் இங்கே தனிமை கிடைத்ததும் அழுகிறாளோ என்று அருகே நெருங்கி அவளின் தோளில் கை வைத்தவன்,
“நிதி…” என்றழைக்க வேகமாய் திரும்பி பார்த்தவள் கண்களில் துளி கண்ணீர் இல்லை. 
முகம் முழுவதும் ஆக்ரோஷமும், கோபமும் போட்டிபோட அவனை பார்த்த பார்வை வசீகரனுக்கு அம்மாடியோ என்று இருந்தது.
இந்த சந்நிதியை அவன் எதிர்பார்க்கவில்லை. அந்தளவிற்கு பார்வையில் அவனை இரண்டு அடி பின்னடைய செய்திருந்தாள் நிதி.
வசீகரனின் சந்நிதி.

Advertisement