Advertisement

தீண்டல் – 2
                 சாக்லேட் கிரியேஷன்ஸ். சென்னையில் வளர்ந்து வரும் விளம்பர நிறுவனம். அவனளவில் தன் நண்பர்கள் ரவி, சூர்யா இருவருடன் இணைந்து வசீகரன் தன் சொந்த முயற்சியில் ஆரம்பித்தது. 
தந்தை குகன் சென்னையில் அழைப்பிதழ்கள் அச்சடிக்கும் அலுவலகம் ஒன்றை பெரிதளவில் நடத்தி வருகிறார். GAV டிஸைன்ஸ். அவர்களே புது புது வடிவமைப்பில் உருவாக்கி தருகின்றனர். திருமணம், குடும்ப நிகழ்ச்சிகள், இன்ன பிற விழாக்கள் என அவர்கள் தயாரிப்புக்கு தனி வரவேற்பு. அவ்வப்போது வசீகரனும் பார்த்துகொள்வான்.
தங்களின் தொழிலை மட்டும் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற எந்த நிர்பந்தத்தையும் அவன் மீது திணிக்கவில்லை. அவனாக விரும்பும் போது பார்த்துக்கொள்ளட்டும். இல்லை இரண்டையுமே பார்க்கவேண்டுமேன்றாலும் சந்தோஷமே என்று நினைத்தார்.
தாய் அம்பிகா குடும்ப தலைவி. ஒரே மகன். சுதந்திரமும் கண்டிப்பும் சரிவிகிதம் இருந்தாலும் கண்டிக்கும் அளவிற்கு வசீகரனின் நடத்தை இருக்காது. 
ஆனால் ஈகோ மற்றவர்களை விட கொஞ்சம் அதிகமே. உன்னால் முடியாதென்றால் முடித்துவிட்டுதான் அடுத்த வேலை. பார் முடித்துகாட்டினேன் என்னும் இறுமாப்பு காட்டிவிடமாட்டான். அந்த பெருமைகளை அவனின் அடுத்த வளர்ச்சிக்கு அடித்தளமாக்கிகொள்வான்.
பெயர் மட்டுமல்லாது பார்க்கவும் வசீகரன். யாரிடமும் இலகுவாக பழகும் குணமுடையவன். ஆனால் அவனின் இலகுத்தன்மைக்கான எல்லை அவன் நிர்ணயித்ததாக இருக்கும்.
“அம்பிகா இவன் சொல்ல சொல்ல கேட்காம கோவமா கிளம்பறான்…” மனைவியிடம் முறையிட,
“விடுங்க பார்த்துக்கலாம். போய்ட்டு வந்து சொல்லுவான். கிளம்பும் போது சொன்னா இன்னும் வேகமாவான். தெரியும் தானே? வளர்க்கும் போதே பொறுமையை சொல்லிக்குடுக்கனும். அதை விட்டுட்டு ஆர்மிக்கு ஆள் அனுப்பறதை போல சொல்லிக்குடுத்து வளர்த்தா விரைப்பா தான் இருப்பான்…”
மகனை சொல்லும் சாக்கில் மனைவி தன்னை குற்றம் சொல்வதை கண்டவர் அம்பிகாவை முறைக்க அதற்கு சளைக்காத பார்வையை கணவருக்கு திரும்பி தந்தார்.
“என்னவோ பண்ணுங்க. இவனுக்கு பொண்ணு தேடினா நழுவிட்டே இருக்கான். மனசுல ஒட்டனும். வசீகரிக்கனும்னு கதை பேசறான்…” என்ற புலம்பலுடன் தானும் தன் இன்விடேஷன் ஷோரூமிற்கு சென்றார்.
“வசீ எங்க இருக்க? டைம் ஆச்சுடா…” சூர்யா மொபைலில் கூப்பிட,
“பார்க்கிங்ல தான் இருக்கேன். எந்த ப்ளோர்?…” பைக்கை நிறுத்திவிட்டு அந்த அலுவலக கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்தான். புகழ்பெற்ற AK பில்டர்ஸ் அலுவலகம். பார்வையில் ஒருவித எச்சரிக்கை தன்மையை கொண்டுவந்தவன் அதை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
சீரான நடை ஆனால் பார்வை சுற்றிலும் அவ்விடத்தை ஆராய்ந்துகொண்டு சென்றது. ஒவ்வொன்றையும் கவனமாய் தன் மூளைக்குள் படம் பிடித்துக்கொண்டான்.
உள்ளே நுழைந்ததுமே சூர்யாவுடன் இணைந்து அதே வேக நடையுடன் எம்டி அறைக்குள் நுழைந்தான்.
“ஹலோ முன்னா பாஸ்…” என்று அழைக்க,
“வெல்கம் வசீகரன்…” என்று முன்னாவும் எழுந்து கரம் கொடுக்க நட்புடன் இருவரும் கை குலுக்கிகொண்டனர்.
“சொல்லுங்க வசீ, என்ன டிஸைட் பண்ணியிருக்கீங்க?…” என சிரிப்புடன் கேட்க,
“எஸ் முன்னா, இந்த ப்ராஜெக்ட் நாங்க பன்றோம்…” ஸ்திரமாய் அவன் சொல்ல,
“நீங்க கால் பண்ணவுமே நான் இதை எதிர்பார்த்தேன். எனிவே தனிப்பட்ட முறையில் எனக்கு ரொம்பவும் ஹேப்பி…” என்றதும் தலையசைபுடன் வசீகரன் புன்னகைக்க,
“உங்க ஆட்ஸ் எல்லாம் பார்த்தேன். இன்பேக்ட் என் கசின் தான் உங்களை பத்தி சொல்லிருந்தார். அதை வச்சு தான் எங்களுக்கு பிடிச்சது. உங்க தீம், உங்க ஐடியாஸ் எல்லாமே ரொம்ப யூனிக். இம்ப்ரெஸ் ஆகிட்டோம்…”
“டேய் ஏதாவது பேசேன்டா வசீ. எல்லாத்துக்கும் சிரிப்பு தானா உனக்கு? அவன் எவ்வளவு பேசறான்…” சூர்யா காதை கடிக்க ஒற்றை பார்வையில் அடக்கியவன் முன்னாவை பார்க்க,
“ஓகே மத்த டீட்டெய்ல்ஸ் எல்லாம் இன்னும் ஒன்ஹார்ல முடிச்சிடலாம். அக்ரிமென்ட் சேர்மன் வரவும் சைன் பண்ணிடுவோம்…” என்று சொல்லவும் விடைபெற்றுவிட்டு எழுந்து வெளியில் வந்து அமர்ந்தனர்.
“ஆனாலும் உனக்கு அழுத்தம்டா. பதிலுக்கு அந்தாளு மனசு குளிர மாதிரி ஹோப் குடுத்து பேச என்னடா பிரச்சனை உனக்கு?…” எரிச்சலாய் சூர்யா சொல்ல,
“பேசிட்டா? ஆட் ஒழுங்கா வந்து அதுல அவங்க இம்ப்ரெஸ் ஆனாலே தானா குளிர்ந்திருவாங்க. இன்னைக்கு அவனை ஐஸ் வைக்க பேசி ஆட் சொதப்பினா வெறும் வாய் தானான்னு அவன் நினைக்க மாட்டானா? நாம பேசறதை விட நம்ம திறமை பேசனும். அதுதான் முக்கியம்…”
“உன் கொள்கையில தீயை வைக்க…” என சூர்யா பொருமிவிட்டு வாசலை பார்க்க அங்கே ரிசப்ஷனிலிருந்து உள்ளே வந்துகொண்டிருந்தான் ரக்ஷன். வரும் பொழுதே இவர்களை பார்த்து ஒரு பதட்டமான பார்வையுடன் தான் வந்தான்.
“வசீ ரக்ஷன்…” சூர்யா சொல்ல,
“அவனை பார்த்து நீ என்ன செய்ய போற? வேலையை பாரு…” என சொல்லி வருபவனை கண்டுகொள்ளாமல் மொபைலில் தனக்கு தோன்றியதை குறிப்பாக பதிவுசெய்துகொண்டிருந்தான்.
அவனின் பழக்கம், எந்த ஒரு யோசனை வந்தாலும் எந்த நேரமாக இருந்தாலும் உடனடியாக அதை பற்றி தனது மொபைலில் பதிந்துகொள்வான் வசீகரன். அது அவனுக்கு பெரும் பலம். நிறைய நேரங்களில் கைகொடுக்க கூடிய ஒன்று.
வசீகரனின் கவனியாத பார்வையும் அவன் அமர்ந்திருந்த தோரணையுமே ரக்ஷனின் மனதில் ஒரு பின்னடைவை உண்டாக்கியது. உள்ளூர தோன்றிய கலக்கத்துடன் உள்ளே சென்றவன் சிறிது நேரத்தில் வெளியே வந்து இவர்கள் முன்பு நின்றான்.
“கங்க்ராட்ஸ் வசீகரன்…” அத்தனை கடுப்புடன் வாழ்த்தை சொல்ல நிமிர்ந்து பார்த்தவன் எழுந்து நின்றான்.
“தேங்க் யூ ரக்ஷன்…” வசீகரனின் முகம் எந்தவித மாறுதலையும் காண்பிக்காமல் வெகு சாதாரணமாக இருந்தது. அதில் இன்னமும் வெறி ஏறியது ரக்ஷனுக்கு.
“எப்படியோ சாதிச்சுட்டீங்க. நீங்களே இந்த ப்ராஜெக்டை வாங்கிட்டீங்க…” நக்கலான குரலில் வசீகரனை பேச,
“நான் இவங்க ப்ராஜக்ட்க்கு எப்பவோ ஆன்ஸர் ஆகிட்டேன். நீ இப்பவும் ஜஸ்ட் ஆப்ஷனா தான் இருந்திருக்க ரக்ஷன். என்னால ஒரு விஷயம் முடியுமா முடியாதான்னு நான் தான் முடிவு செய்யனும். நீ இல்லை. என்னை அண்டரெஸ்டிமெட் பண்ணாம, நீ என்னை பத்தி இங்க பேச்சை எடுக்காமலே இருந்திருந்தா உனக்கே கிடைச்சிருக்கலாம். இப்ப நீ செஞ்சதன் விளைவு தான் இது. இந்த ப்ராஜெக்ட் நான் சக்ஸஸ்ஃபுல்லா முடிச்சு காட்டுவேன்…”
இறுக்கமான முகத்துடன் வசீகரன் சொல்ல சூர்யாவிற்கு படபடப்பானது. என்றுமில்லாமல் இத்தனை பொறுமை வசீகரனிடத்தில். கிளைன்ட் ஆபீஸ் என்பதனால். அதை ரக்ஷன் சோதிக்கிறானே?
“வசீ காம் டவுன். நீங்க கிளம்புங்க ரக்ஷன். இந்த மாதிரி பேச்சை முதல்ல அவாய்ட் பண்ணுங்க. உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்…” சூர்யா சொல்ல,
“அதை நீ ஏன் சொல்றீ?. உங்க வேலையை பார்த்துட்டு போடா…” ரக்ஷன் மரியாதை இல்லாமல் பேச,
“அவன் அப்படித்தான்டா சொல்லுவான். உன்னை யார் என்கிட்டே வந்து பேச சொன்னா. நீ பேசாம போயிருந்தா அவனும் உனக்கு அட்வைஸ் பண்ணியிருக்க மாட்டான் தான். நீ என்ன இதுக்குடா வந்து பேசற?…”
அத்தனை நெருக்கமாய் நின்று பல்லை கடித்துக்கொண்டு வசீகரன் பேச பேச ரக்ஷனின் முகம் பயங்கரமாய் மாறியது.
“இன்னும் ஒரு வார்த்தை இங்க நின்னு பேசின இங்க வச்சு ஒன்னும் பண்ண மாட்டேன். ஆனா இதுக்கு நீ கண்டிப்பா பீல் பண்ணுவடா…” 
“ஹலோ மரியாதை…”
“உனக்கென்னடா மரியாதை? நீ குடுத்தியா என் ப்ரெண்டுக்கு? என்னை ஏறி மிதிச்சு போய்தான் இந்த ப்ராஜெக்ட் உனக்கு வேணுமா? தானா தேடி வந்ததுடா எனக்கு. உன்னை மாதிரி ஒருத்தன் முதுகுல குத்தி தட்டி பறிக்க நினைக்கலைடா. என்கிட்டே சொல்லியிருந்தா பிச்சை போட்டிருப்பேன்டா. இப்ப சொல்லுடா…”
வசீகரனின் ஒவ்வொரு வார்த்தைக்கும் டா போட்டு அழுத்தமாய் வேண்டுமென்றே பேசினான். 
“இவனுக்கு தேவைதான். முதல்ல மரியாதையா பேசினப்பவே போய்ருக்கனும். அத விட்டுட்டு இவன்கிட்ட அதிகாரமா மரியாதை குடுன்னு வந்து நின்னா இப்படித்தான் அவனும் பேசுவான். குடுத்த மரியாதையை வாங்கிகட்டுடி.” என சூர்யா நினைத்துக்கொண்டே பார்த்தான்.
“இதுக்கெல்லாம் பார்த்துக்கறேன்…” என்று கருவிவிட்டு செல்லவும் வசீகரனின் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு.
“டேய், அவன் கோவமா போறான்டா…”
“போனா போகட்டும். பின்னாடியே போய் சமாதானம் செய்ய அவன் என்ன என் பொண்டாட்டியா? போண்டாட்டியாவே இருந்தாலும் இந்த வேலையை நான் பார்க்க மாட்டேன். இவன் யாரோ எனக்கு. எப்படியும் போகட்டும்…”
“வார்த்தையை அவசரப்பட்டு ரிலீஸ் பண்ணாதடா. நாளைப்பின்ன நீ சொன்னது நிஜமாகலாம். அப்ப நான் வந்து கலாய்ச்சிட போறேன்…”
“அட போடா…” என்று இறுமாந்து அமர்ந்தான். சில மணித்துளிகளில் அந்த ஒப்பந்தம் கையெழுத்தாக இனிதான் தனக்கு பொறுப்புகள் அதிகம் என்பதை உணர்ந்தவன் அடுத்து இதற்கு செய்யவேண்டியவைகளை பட்டியலிட்டு தன் அலுவலகத்தில் வைத்து திட்டமிட்டான்.
நேரம் காலம் உணராது அந்த விளம்பரத்தை பற்றி பேசிக்கொண்டே இருக்க இரவு எட்டு மணியை கடக்கவும் அம்பிகாவிடமிருந்து அழைப்பு வந்துவிட்டது.
“ஓகே டா. நாங்க கிளம்பறோம். இதுக்கு மேல எங்களாலையும் முடியாதுடா. தெய்வம் மாதிரி அம்மா காப்பாத்திட்டாங்க…” என சூர்யா சொல்ல ரவி அதை ஆமோதித்தான்.
“ஓகே நானும் கிளம்பறேன்…” என்று வசீகரனும் கிளம்பி விட வீட்டிற்கு வரும் பொழுது ஒன்பதரையை தாண்டிவிட்டது.
“ம்மா ரெண்டே தோசை. தேங்காய் சட்னி மட்டும் போதும்…” என்று அம்பிகாவை பேசவிடாமல் சொல்லிவிட்டு வேகமாய் தன்னுடைய அறைக்குள் ஓடிவிட்டான்.
“இவனை நீ இன்னைக்காவது கேட்டே ஆகனும் அபி…” குகன் வந்து நிற்க,
“இப்ப இதை பத்தி ஒன்னும் பேச வேண்டாம். நான் பேசவேண்டியதே வேற. இப்ப இந்த டாப்பிக் எடுத்து நான் நினைச்சது நடக்காம போய்ட்டா. அதான்…” 
“என்ன பேசப்போற?…” என்றதற்கு டீப்பாயில் இருந்த இன்விடேஷனை காண்பித்தார் அம்பிகா.
“நல்லது நடந்தா சரி…” என்று குகன் கிட்சனுக்குள் ச்நேற்று மூவருக்குமாக பாலை காய்ச்ச ஆரம்பித்தார்.
“என்கிட்ட குட்டு அபி. நான் தேங்காயை எடுத்து தரேன்…” என வாங்க அம்பிகா சட்னிக்கு தேவையான மற்றதை எடுத்து மிக்ஸியில் போட்டார்.
“அவனுக்கு பிடிக்குமேன்னு எள்ளு துவையல் செஞ்ச. இப்ப பாரு இவன் பன்றதை. இதுக்கு தான் செய்யும் முன்னால அவன்கிட்ட கேட்டு செய்ன்றது…”
“ப்ச், விடுங்க. அவனுக்கு தோணிருக்கு. கேட்ருக்கான். சாப்பிடறது ரெண்டு தோசை தான். இதுல விரும்பின சட்னி கூட இல்லைனா எப்படி?…”
“ஹ்ம்ம் திருந்தமாட்ட நீயும் உன் பிள்ளையும்…” குகன் தேங்காயை நீட்ட,
“எதுக்கு இவ்வளவு? ஒரு ஆளுக்கு தானே?…” 
“யாரு கண்டா உன் பையன் சாப்பிட ஆரம்பிச்சு கூட ரெண்டு தோசை கேட்டா திரும்பவும் அரைப்பியா? சேர்த்து செய். பசிச்சா சாப்பிடட்டும். மிச்சம் இருந்தா நாம ஆளுக்கொண்ணு தோசை வார்த்துப்போம்…”
“உங்களுக்கு சேர்த்து வேணும்னா சொல்லிட்டு போங்க. அதுக்கேன் இத்தனை சாக்கு?…” எல்லாம் பேசிக்கொண்டே இருந்தாலும் வேலை நடந்தது. 
சட்னியை தாளித்து தோசை கல்லை சூடேற்றி, எதற்கும் இருக்கட்டும் என்று சாப்பரில் வெங்காயத்தை போட்டு கட் செய்து வைத்துக்கொண்டார்.
“ஏழுமணிக்கே சாப்பிட்டோம். இப்ப இன்னொன்னு சாப்பிட்டா ஒன்னும் ஆகாது. அவன் வரான். நீ மாவை ஊத்து. நான் இதையெல்லாம் எடுத்து வைக்கிறேன்…” என்ற குகன் தேங்காய் சட்னியோடு அவனுக்காக வைத்திருந்த எள்ளு துவையலையும் சேர்த்து எடுத்து சென்றார்.
பார்த்த அம்பிகாவிற்கு சிரிப்பு தான். வசீகரனும் இப்படித்தான் எகனைக்கு மொகனையாக செய்துவைப்பான். அவன் வந்து அமர்ந்ததுமே தோசையுடன் வந்துவிட்டார்.
“ஓஹ் எள்ளு துவையலும் இருக்கா? ம்மா ஒரு ஆனியன் தோசை…” என்று சப்தம் கொடுக்க குகன் முறைத்தார்.
“பின்ன எதுக்குடா தேங்காய் சட்னி கேட்ட?…” 
“ஏன்? உங்களுக்கு வேணும்னா நீங்களும் கேளுங்களேன்…” சாப்பிட்டுக்கொண்டே தந்தையை வம்பு பேச,
“குடுத்துட்டாலும்…” என முனகினார் குகன். அதை பார்த்த வசீகரன் அட்டகாசமாய் சிரிக்க,
“அடேய் மாட்டிவிட்டுடாத. எதுக்கு இவ்வளவு பெருசா சிரிக்கிற?…” என பதற,
“ஓகே ஓகே…” என்றவன் அன்று அவர்கள் கடை விபரங்களை பற்றி தந்தையிடம் கேட்டுக்கொண்டே உண்டு முடிக்க அம்பிகா தனக்கும் குகனுக்கும் தோசை எடுத்துவந்து அவர்களும் சாப்பிட்டு முடித்தனர்.
அதற்குள் கிட்சனிற்குள் சென்ற வசீகரன் மூவருக்கும் பாலை ஆற்றி எடுத்துவந்து ஹாலில் அமர்ந்தான். 
“இதை பாரு வசீ…” என்று இன்விடேஷனை அவனிடம் கொடுத்துவிட்டு தனக்கொரு க்ளாஸ் எடுத்துக்கொண்டு குடிக்க ஆரம்பித்தார் அம்பிகா.
“ம்மா, பாண்டிச்சேரில கல்யாணம். நீங்களும் அப்பாவும் போய்ட்டு வந்திருங்க…” என்று சாதாரமாக சொல்ல,
“என்ன விளையாடறியா வசீ? என் சின்ன பாட்டியோட முதல் பேரன் இவன். நாம போகலைன்னா அவ்வளவு தான். உறவுகளுக்குள்ள கசப்பு வந்திரும் வசீ. அப்பாவால அன்னைக்கு வரமுடியாது. நான் மட்டும் போனா நல்ல இருக்காது…”
அம்பிகா என்றாவது ஒரு நாள் தான் இப்படி வருத்தத்துடன் கோபம் கலந்து பேசுவார். இன்று அப்படி பேசவும் வசீகரனின் முகம் மாறிவிட்டது.
“சோ வாட் ம்மா? ரிசப்ஷன்க்கு நாம பேமிலியா போவோமே…” 
“இதென்ன பேமிலி ப்ரெண்ட்ஸ் வெடிங்கா? நம்ம தோதை பார்த்து போய்ட்டு வர. சொந்தங்கள்ன்னு எதுக்கு இருக்கு? ஒரு கல்யாணத்துக்கு கூட போக வராம அப்படி என்ன வாழ்க்கை?…” அம்பிகாவிற்கு உண்மையில் கோபம் வந்துவிட்டது.
மாப்பிள்ளை பிரபு வசீகரனை விட ஒரு வயது இளையவன். அவனுக்கே திருமணம் என்று நிற்க உறவுகளின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமலும் மகனின் பிடிவாதத்தாலும் உள்ளுக்குள் தவித்துகொண்டிருந்தார்.
“ம்மா இப்ப எதுக்கு எமோஷனல் ஆகறீங்க? நான் என் சூழ்நிலையை சொன்னேன். இன்னைக்கு தான் ஒரு பெரிய ப்ராஜெக்ட் ஓகே ஆகியிருக்கு. இப்ப நான் அங்க இங்கன்னு வந்தா…”
“ப்ச், விடு வசீ, நீ இல்லாம நான் மட்டும் போனாலும் அவங்க பேசத்தான் செய்வாங்க. அதுக்கு நானும் போகாமலே இருந்துக்கறேன். நீ உன் ப்ராஜெக்டை பாரு…” என சொல்லி எழுந்து சென்றுவிட,
“ம்மா, என் மேல கோபமா…” அவரின் அறைக்கு பின்னாலேயே வந்து மகன் கேட்க அவனின் கவலையான முகம் பொறுக்காமல்,
“ச்சே ச்சே. அதெல்லாம் இல்லை வசீ. பார்த்துக்கலாம். எனக்கு நீ தான் முக்கியம். நீ வருத்தபடாத…” என சொல்லவும் அவரை கட்டிக்கொண்டவன்,
“தேங்க்ஸ் ம்மா…” என்று அவரின் கன்னத்தில் முத்தமிட்டு உறங்க சென்றுவிட்டான். செல்லும் முன் அந்த பத்திரிக்கையையும் கைய்யுடன் எடுத்து செல்ல,
“நீ இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருந்திருக்கலாம் அபி. பாரு இப்ப அவன் போய்ட்டான்…”
“இல்லைங்க, கண்டிப்பா அவன் கல்யாணத்துக்கு வருவான் பாருங்க…”
“வந்தா சந்தோஷம். அங்கயே ஒரு பொன்னை பார்த்து பேசி முடிச்சுட்டு வா. இன்னும் பரம சந்தோஷம்…”
“ஹ்ம்ம், பின்ன இவனை இழுத்துபிடிச்சு கூட்டிட்டு போறதுக்கு காரணமே இதுதானே. இங்க இருக்கற வரைக்கும் வெளிய வேலைன்னு எதையும் கவனிக்க மாட்டான். அங்க வந்தா வேலை இல்லாம என்னோட அரட்டைல இருப்பான். அப்ப கண்ணு சுத்தி முத்தி பார்க்கும்ல…” 
“மாஸ்டர் ப்ளான்…” என குகன் மனைவியை பாராட்ட இருவரின் புன்னகையும் இணைந்தது.
சொன்னது போலவே தன் வேலைகளை எல்லாம் மாற்றி அமைத்துக்கொண்டு அம்பிகாவுடன் கிளம்பிவிட்டான் வசீகரன் பாண்டிச்சேரியை நோக்கி.
அந்த திருமண மண்டபத்தில் ஒரு ஓரத்தில் கையில் ஐப்பேடுடன் ஓரமாய் அமர்ந்துகொண்டான். சிறிது நேரத்தில் அவனின் தோளில் படாரென அடி விழ பதறாமல் திரும்பி பார்த்தான்.
“கொஞ்சம் கூட யாரோ எவரோன்னு அச்சமே இல்ல உனக்கு…” என்ற திட்டுடன் அவனுக்கருகில் அமர்ந்தார் அம்பிகா.
“இந்த வேலையை உங்களை தவிர வேற யார் செஞ்சிட முடியும்?…”
“பேச்சுக்கொன்னும் குறைச்சல் இல்லை. கோவிலுக்கு வந்திருக்கலாம்லடா. கல்யாணத்துக்கு வந்துட்டு மண்டபத்திலையே இருந்தா என்ன அர்த்தம் வசீ?…”
“ப்ச், ம்மா. மண்டபத்துல வச்சா எங்கனாலும் நின்னு கல்யாணத்தை பார்க்கலாம். கோவில்ல வச்சு தாலி கட்டியிருக்காங்க. எத்தனை பேரால பார்க்க முடிஞ்சிருக்கும். நான் வந்திருந்தாலும் வெளில தான் நின்றுப்பேன். இதுல வரலைன்னு குறை வேற? என்னை சொல்றீங்க நீங்க பார்த்தீங்களா?…” 
மகன் கேட்கவும் அசடுவழிந்தார் அம்பிகா. அவரின் முகத்தை பார்த்தவனுக்கு கேலி புன்னகை.
“பேச்சு வேற. போங்கம்மா…” 
“அதைவிடு. இங்க எல்லாமே சொந்தக்காரங்க தான். யாராவது உன்கிட்ட வந்து பேசினாங்களா? இல்லை நீயாவது யார்ட்டையாச்சும் பேசினியா?…”
“நான் யாரையும் பார்க்கலை. என்னையும் யாரும் பார்க்கலை. இப்ப என்ன வேணும் உங்களுக்கு?. நான் எந்த பொண்ணையும் பார்க்கலை. போதுமா? பார்க்கற மாதிரி யார் இருக்கா?…”
“திமிர்டா. ஒரு மனுஷனுக்கு இத்தனை திமிர், அகம்பாவம் இருக்க கூடாது. உனக்கு பேர்ல தான் வசியம் இருக்கே தவிர வேற எந்த பிரயோஜனமும் இல்லை…” சலிப்பாய் அம்பிகா சொல்ல,
“இப்போ என்ன? இங்க யாரையாச்சும் வசியம் செய்யனுமா சொல்லுங்க செஞ்சிருவோம்…” குறும்பாய் பேசினான் மகன். அவன் வசீகரன்.
“செஞ்சிட்டாலும். ஏழு கழுதை வயசாகுது. கல்யாணம் பன்ற மாதிரி தெரியலை. உனக்கு என்னைக்கு கல்யாணம் செஞ்சு பேரன் பேத்தி வந்து நாங்க அறுவதாம் கல்யாணம் செய்யறது?…” என்றவரின் அலுப்பில் அட்டகாசமாய் சிரித்தான்.
“என்ன பன்றது எந்த பொண்ணும் என்னை வசீகரிக்கலை. அப்படி ஒரு பொண்ணு இருந்தா சொல்லுங்க உடனே பொண்டாட்டி போஸ்ட் குடுத்திடலாம். உங்க செகெண்ட் மேரேஜ்க்காக நான் மேரேஜ் பண்ணிக்கனும்னு நினைக்கிறது பேராசை…”
தாயிடம் சத்தமின்றி வாதம் புரிந்துகொண்டிருந்தவன் அந்த திருமண மண்டபத்தை பார்வையால் அளந்துகொண்டிருந்தான். 
சுற்றி வந்துகொண்டிருந்தவனின் பார்வை ஓரிடத்தில் நிற்க பச்சை பட்டுடுத்திய பெண் அவனின் கண்களை கவர்ந்தாள். பார்வையை சுவாரசியமாக்கியவன் அவளையே பார்வையால் தொடர அவள் மணமேடை பக்கத்தில்  குடும்பத்துடன் சென்று நின்றாள்.
ஏனோ அவளை விட்டு விழிகளை அகற்ற அவன் விரும்பவில்லை. அவள் என்ன செய்கிறாள் என்று பார்த்தபடி இருந்தான். அவளின் முகத்தில் லேசான கவலையும் அவள் அருகில் நிற்பவரை ஓரப்பார்வை பார்த்து முகம் வாடுவதுமாய் இருக்க ஏனோ இவனுக்கு பொறுக்கவில்லை.
“அப்பாவா இருக்கும் போல. என்னவோ திட்டிருக்கார்…” வாய்விட்டே இவன் சொல்ல,
“யாரடா? என்ன சொல்ற?…” அம்பிகா கேட்க,
“ம்மா அந்த பச்சைகலர் தாவணி போட்டிருக்கற பொண்ணை எனக்கு பிடிச்சிருக்கு. யார் என்னனு விசாரிங்க…” என தடாலடியாய் தாயிடம் காண்பிக்க அம்பிகாவிற்கு புரையேறிவிட்டது.
“டேய் என்னடா வசீ?…”
“நீங்க கேட்டீங்க. நானும் சொன்னேன். எனக்கு இப்ப இந்த பொண்ணை பிடிச்சிருக்கு. என்னவோ இவக்கிட்ட ஒரு வசியம் இருக்குன்னு தோணுது. இம்ப்ரெஸ் பன்றா…”
“பார்த்தா சின்ன பொண்ணாட்டம் இருக்காளே வசீ?…”
“என்னை பார்த்தா கிழவன் மாதிரி தெரியுதா உங்களுக்கு? கட்டிக்க போற பொண்ணு சின்ன பொண்ணா பார்க்காம உங்க வயசுலையா பார்ப்பாங்க…” 
“ஹ்ம்ம் பார்க்கலாம்டா. ஆனா இவங்க யார் என்னன்னு தெரியலை. நானும் கோவில்ல வச்சு பார்த்தேன்…” யோசனையுடன் சொல்ல,
“இவ்வளவு யோசிச்சு இந்த பொண்ணை கட்டி வைக்க வேண்டாம் ம்மா. ஈஸி. அடுத்து எப்ப என்னை வசியம் செய்யற மாதிரி ஒரு பொண்ணு என் கண்ணுல படறாளோ அப்ப என் கல்யாணத்தை பத்தி முடிவு பண்ணிக்கலாம்…” என்று சொல்லிவிட்டு தோளை குளிக்கியவன்,
“நான் வாஷ் ரூம் வரை போய்ட்டு வரேன். நீங்க இதை வச்சிருங்க. சூர்யா மெசேஜ் பண்ணுவான்…” என்றவன் எழுந்து செல்ல அம்பிகா மேடையில் சென்று நின்ற முனீஸ்வரனின் குடும்பத்தை தன் மொபைலில் படம்பிடித்துக்கொண்டார் குகனிடம் காண்பிக்க.

Advertisement