Advertisement

“என்னம்மா இந்த நேரம் வந்திருக்காங்க அப்பா? தறிக்கு போனா நேரா கடைக்கு தான போவாங்க?…” சந்நிதி மெதுவாய் கேட்க,
“சும்மா, கொஞ்சம் அலுப்பா இருக்குன்னு வந்தாங்களாம்…” சமாளிப்பாக சொல்ல,
“உங்ககிட்ட விளக்கமா சொல்லிட்டாங்களாக்கும்? நம்பிட்டேன்ம்மா…” என்று கேலி பேச,
“அப்படித்தான் இருக்கும். நான் சொல்றேன்ல…” என்று பார்கவியும் புன்னகைத்தார்.
மனதிற்குள் பார்க்கும் இடம் நல்ல இடமாக சந்நிதியை நல்லவிதமாக பார்த்துக்கொள்பவனாக அமைய வேண்டுமே என்று இப்பொழுதிருந்தே வேண்டுதலை ஆரம்பித்தார்.
வேகமாக பூஜையறைக்கு சென்று வேண்டிக்கொண்டு மஞ்சள் துணியில் நாணயத்தை முடிந்து சாமிபடத்தின் அடியில் வைத்துவிட்டு வந்தார்.
அடுத்த பத்தாம் நாள் நீதிமாணிக்கத்தின் வீட்டில் சந்நிதியை தவிர இரு குடும்பமும் சேர்ந்து இருந்தது.  
வருகிறேன் என்று சொன்னவளை பார்கவி எப்படி வேண்டாமென சொல்ல என்று யோசிக்க முனீஸ்வரன் முறைத்த முறைப்பில் வீட்டை தாண்டவில்லை சந்நிதி. 
சொன்ன நேரத்திற்கு தரகர் வந்து சேர ஆரம்ப பேச்சுக்கள் முடிந்து தான் கொண்டுவந்திருந்த பேக்கில் இருந்து சில போட்டோக்களை எடுத்து பார்வைக்கு வைத்தார்.
“நம்ம பொண்ணு ஜாதகத்துக்கு ஏத்த மாப்பிள்ளைங்க ஜாதகமும் போட்டோவும். இது எல்லாமே நல்ல இடம் தான். உங்க வசதிக்கும் ஏற்ற இடம். நீங்க பார்த்து எதுவும் கேட்கனும்னா கேளுங்க…” என்றதும் நீதிமாணிக்கம் போட்டோக்களை எடுத்து முனீஸ்வரனிடம் தர அவர் வாங்கி பார்க்க ஆரம்பித்தார்.
“நீங்களும் பாருங்கண்ணே…” என்று அண்ணனையும் இழுத்துக்கொள்ள அவர்களின் பின்னே நின்றிருந்த கோமதியும் பார்கவியும் கூட பார்த்தனர்.
ஒவ்வொன்றாய் பார்த்துவிட்டு திருப்தியில்லாமல் புவனேஷ்வரனிடம் தர அவன் புகழிடம் தள்ளினான். நான்கு போட்டோக்களுக்கு அடுத்து ஐந்தாவதாக அதில் இருந்தது வசீகரனின் புகைப்படம். 
புகழின் இதயம் பலமடங்கு துடிக்க ஆரம்பித்தது இப்பொழுது. இதோ கோபமாக பேச போகிறார் என்று நினைத்து முடிக்கும் முன்னர் அவனின் புகைப்படத்தை முறைப்புடன் அவர் பார்க்க வார்த்தைகளை கொட்ட ஆரம்பிக்கும் முன்,
“அடடே இந்த தம்பி நமக்கு நல்லா தெரியுமே? நமக்கு விளம்பரம் எடுத்துக்குடுத்த தம்பில. நம்ம ரேவதி மாமியார் வழி சொந்தமும் கூட. இந்த தம்பி தான?…” என்று நீதிமாணிக்கம் முனீஸ்வரனுக்கு எதுவோ சொல்ல வர,
“அய்யா யாரு?காமிங்க, நான் விவரம் சொல்றேன்…” என்று போட்டோவை வாங்கி பார்த்துவிட்டு,
“அடடா இத நான் இந்த போட்டோக்களோட வச்சுட்டேனா? மன்னிக்கனும். இந்த பையனுக்கு வேற இடத்துல பேசலாம்னு இருக்கேன். எப்படியோ தவறுதலா இங்க வந்திருச்சு…”
“என்ன தரகரே சொல்லுதீரு?…” நீதிமாணிக்கம் முறைக்க,
“ஆமாங்க, இவங்க பொண்ணு தேட சொல்லி குடுத்து வருஷமாச்சு. ஆனா காட்டுற பொண்ணுங்க எதுவும் அவங்களுக்கு திருப்தி இல்லைன்னு சொல்லுறாங்க. நான் கூட நம்ம பொண்ணு பத்தி முந்தாநாள் அவங்கக்கிட்ட நீங்க வரன் பார்க்கிறதா சொன்னேன்…”
அவர் நிறுத்திய இடத்தில் முனீஸ்வரனின் நெஞ்சம் அவர்கள் என்ன பதில் சொல்லியிருப்பார்கள் என்று நினைக்க ஆரம்பித்தது.
“ஏற்கனவே வந்து பேசினாங்களாம், நம்ம ஐய்யா இப்ப முடிக்கிறதா இல்லைன்னு, ஒத்துவராதுன்னு சொல்லிட்டாங்க போல. அதனால வேற பாருங்கன்னு சொல்லிட்டாங்க. பையனுக்கு அத்தனை மவுசு. என்ன ஒண்ணு, எந்த பொண்ணையும் புடிக்கிறதில்லை போல. நானும் காமிச்சுட்டே தான் இருக்கேன்…”
“உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா, இப்ப உங்களுக்கு அந்த பையனுக்கு குடுக்கலாம்னு நினைப்பிருந்தா பேசலாம்ங்க. ஏனா மத்த ஜாதக பொருத்தத்தை விட இந்த பையனுக்கும் நம்ம பொண்ணுக்கும் பொருத்தம் அமோகமா இருக்கு. நல்ல இடம். பிக்கள் பிடுங்கல் இல்லாத குடும்பம்…”
“யோவ், எந்திய்யா, எந்திச்சு கிளம்புய்யா…” என்று ஆத்திரத்துடன்  எழுந்தேவிட்டார் முனீஸ்வரன். 
“முதல்ல வெளில போயா. வந்துட்டான் போட்டோவை தூக்கிட்டு…” என்று தரகரை விரட்ட,
“வேண்டாம்னா சொல்லிட்டு போங்க. அதுக்கெதுக்குங்க கோவம் வருது? உங்க பொண்ணு நல்லதுக்கு தான சொன்னேன்….” என தரகரும் பேச,
“அண்ணே நீங்க கிளம்புங்க. நாங்க போன் பன்றோம்…” என்று புகழ் அவரை கண்ணை காண்பித்து அனுப்பிவிட்டு,
“எதுக்கு சித்தப்பா இத்தனை கோபம் உங்களுக்கு. அந்தாளு என்னவோ ஏதோன்னு நினைக்கிறதுக்கா? வேண்டாம்னா அமைதியா சொல்லனும். இல்லையா அடுத்த போட்டோவை பார்க்கனும். அதை விட்டுட்டு சண்டைக்கு நிக்கறீங்க?…” என்று புவனேஷ்வரன் சொல்ல,
“என்னடா தம்பி இது?…” நீதிமாணிக்கம் பேச,
“உங்களுக்கு ஒன்னும் புரியாதண்ணே, அந்த பய நம்ம வீடேறி சவால் விட்டுட்டு போனான். உங்க பொண்ணை கட்டி காட்டறேன்னு. இன்னைக்கு நானே பொண்ணை கட்டிக்குடுத்து சவால்ல செயிக்க வைக்கனுமா?…”
“எல்லாம் தெரியும்ப்பா. அந்த தம்பி வேணும்னே ஒன்னும் சவால் விடலையே தம்பி, யோசிச்சு பாரு. நம்ம அப்பம்மாவை யாராச்சும் அவமதிப்பா பேசினா நாம சும்மா இருப்போமா? அந்த கோபம் தான் அந்த தம்பியை அப்படி பேச வச்சிருக்கு. அப்படி பார்த்தா ஒரு மகனா அவர் அப்படி நடந்ததுக்கிட்டது தப்பில்லையே?…” 
நீதிமாணிக்கம் பொறுமையாக சொல்ல இன்னமும் கோபம் குறையாமல் இருந்த முனீஸ்வரனுக்கு அண்ணன் சொல்லியது உறைத்தது.
“அந்த தம்பி சவாலா பேசினாலும் நம்ம பொண்ணுட்ட எந்தவிதத்திலும் உறுத்தலா நடந்துக்கலையே. சொல்லு சவாலை நிறைவேத்தனும்னு இருந்தா திரும்ப திரும்ப வந்து பேசியிருக்கனும் தானே? பேசலையே…”
“ஆனா என் கண்ணுமுன்னாடி வேணும்னே நடமாடினான். வெறுப்பேத்தற மாதிரி அப்படி பேசினான்…” சிறுபிள்ளை போல புகார் வாசிக்க,
“உன் கிட்ட சின்னப்பிள்ளை மாதிரி சீண்டி விளையாடிருக்கார். உன் கிட்ட தானே பேசினாரு?…”
“ஹ்ம்ம்…”
“கோவப்பட்டு பிரயோஜனமில்லை. என்னை கேட்டா தாராளமா குடுக்கலாம்னு தான் சொல்லுவேன். இந்த காலத்துல இப்படி அப்பாம்மாவை பேசினதுக்கு தேடி வந்து பேசி சண்டைபோட்டு எந்த பையன் இருப்பான்? இருக்கறது சென்னையில. உன்னை திட்டனும்னா ஒரு போன் பண்ணி பேசி, போன்னு விட்டிருக்கலாம். ஆனா தேடிவந்து நியாயம் கேட்டுட்டு போயிருக்கார். எத்தனை பந்தபாசம் உள்ளவரா இருக்கனும்?. பிடிக்கலைன்னா குறையை மட்டும் பார்க்க கூடாது. நிறையையும் பார்க்கனும். முக்கியமா அந்த சூழ்நிலையில அந்த இடத்துல நம்மளை வச்சு பார்க்கனும்…”
“நீதிக்கு வந்தனங்கள்” என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டான் புகழ். தரகரிடம் பேசி போட்டோவை ஊடே வைத்து பேச சொல்லியவரை புகழ் ஏற்பாடு தான் என்றாலும் உண்மையில் வசீகரன், சந்நிதிக்கு ஏக பொருத்தங்கள் தான். 
என்ன ஒன்று தான் மட்டுமே இதை பேச வேண்டுமோ என்று நிறைய யோசித்து வைத்திருந்தவனுக்கு வேலையே வைக்காமல் நீதிமாணிக்கம் பேச ஹப்பாடா என்றிருந்தது.
“யோசிச்சு பாருங்க சித்தப்பா? நாமளா தேடி போகலை. தானா தேடி வந்த வரன். விரும்பி கேட்டிருக்காங்க நம்ம பொண்ணை. அந்நியத்துல பார்த்தா கூட நமக்கு ஒரு படபடப்பு இருந்துட்டே இருக்கும். ஆனா இங்க நம்ம ரெண்டு வழியும் சொந்தம். ரேவதிக்கு நெருங்கின சொந்தம், சந்தியா மாப்பிள்ளைக்கு தோஸ்த். இது போதாதா?…”
பேசி பேசியே முனீஸ்வரனை அதிகமாக யோசிக்க வைத்தனர். எத்தனை பேசியும், அவர் பிடிகொடுக்கவே இல்லை. அதன் பின்னர் எத்தனை வரன்கள் வந்தாலும் ஏதோ மனதிற்கு ஒப்பவே இல்லை. 
தனக்குள்ளே பிடித்தும், பிடிக்காமலும் என இருவேறு மனநிலையில் சுழன்றுகொண்டிருந்தார் முனீஸ்வரன். 
கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடக்க முனீஸ்வரனுக்கே தெரிந்துபோனது வசீகரனை விட ஒருவனை தன்னால் தேட முடியாதென்று. ஏனோ வரும் மாப்பிள்ளைகளிடம் அவனை தேட ஆரம்பித்துவிட்டார். அவனை என்பதை விட அவனை விட மேலாக.
அப்படி தேடி கிடைத்தும் எடுக்க மனமில்லை. ஏன் இப்படி? என்று புரியாமல் குழம்பி போனார். அந்தளவிற்கு வீட்டில் உள்ளவர்கள் வசீகரனை விட்டுவிட்டோமே என்று பேசி பேசி அப்படித்தானோ என்ற எண்ணத்தை முனீஸ்வரனுக்குள் ஆழமாய் விதைத்துவிட்டனர். 
அம்பிகாவின் தன்மை, அன்று தான் அத்தனை அதிகமாக பேசியும் தன்னை திரும்பி பேசாமல் அங்கிருந்து குகன் கிளம்பி சென்ற விதம், அவர்கள் மேல் அளவற்ற அன்பு கொண்ட வசீகரனின் கோபம் என்று நேர்மறையாக யோசிக்க ஆரம்பித்தார். புகழிடம் தனியாய் பேசியவர்,
“இது சரியா வருமாப்பா? அவங்கள அத்தனை பேசி அனுப்பிட்டேன்.  அதை மனசுல வச்சுக்கிட்டு நாளைப்பின்ன நம்ம பொண்ணை…”
“அட இதுக்கா சித்தப்பா இத்தனை யோசிக்கனும்? அவங்க கண்டிப்பா அப்படி இருக்க மாட்டாங்க. நானும் அவரோட பழகி இருக்கேன்னே நம்ம கடைக்கு வந்தப்போ. நல்ல மாதிரி தான்…”
“அப்படின்னா சொல்ற?…”
“ஆமா சித்தப்பா, நீங்களே யோசிங்க. இப்படி ஒரு மாப்பிள்ளையை யாராச்சும் வேண்டாம்னு சொல்லுவாங்களா? ஆனா இவரு யாரையும் ஏன் இன்னும் கல்யாணம் செஞ்சுக்கல. ஏதோ நம்ம பொண்ணை பிடிச்சு போய் தானே?…”
“என்ன சொன்னாலும் என்னவோ எனக்கு…”
“அப்ப வேற பையனை பார்ப்போம்னா அதுக்கும் நீங்க வரதில்லை. ஹ்ம்ம்….” என்று பெருமூச்சை விட,
“திரும்ப நாம போய் நிக்க முடியாது புகழு. என்னால வந்து பொண்ணு கேளுங்கன்னு சொல்ல முடியாது. வேணும்னா அவங்களா திரும்ப கேட்கிற மாதிரி இருந்தா பார்ப்போம்…” மறைமுகமாக அவரின் சம்மதத்தை தெரிவிக்க மலையை புரட்டிய சந்தோஷம் புகழிடம். அதை காண்பித்துக்கொள்ளாமல்,
“நாம ஏன் போகனும். தரகரை வச்சே பேச வைப்போம்…” என சொல்ல இன்னும் இருமனதுடன் தான் தலையாட்டினார் முனீஸ்வரன்.
அவர் செய்தது சரியா தவறா என்று அவராலேயே பிரித்தறிய முடியவில்லை. ஆனால் எதுவோ ஓன்று அவரை உந்தித்தள்ளியது இந்த முடிவிற்கு.
இத்தனை பேச்சுக்கள் நடந்திருக்க சந்நிதிக்கு இவை எதுவும் தெரிந்திருக்கவில்லை. அவள் அறியாமலேயே வாழ்க்கையின் முக்கிய பகுதிக்கு வந்து நின்றாள்.

Advertisement