Advertisement

தீண்டல் – 19 
                ஒரு வருடம் ஆகிவிட்டது சந்நிதி சென்னையிலிருந்து வந்து. அதன் பின்னர் அங்கு செல்வதையே தவிர்த்துவிட்டாள். ராதா எத்தனை சொல்லியும், அழைத்தும் ஏதாவது காரணங்களை சொல்லி மறுத்துவிடுவாள்.  
அங்கு ரேவதியின் குழந்தை பிறப்பு முடிந்து மூன்று மாதங்கள் வரை மட்டுமே இருந்தாள். ரேவதியை பாண்டிச்சேரிக்கு அழைத்து சென்ற பின் கையோடு காஞ்சிபுரம் கிளம்பிவிட்டாள் சந்நிதி வசீகரனை கொண்டு.
சென்னையில் இருக்கும் பொழுது இரண்டுமுறை அவனை சந்தித்திருந்தாள். ரேவதியின் குழந்தையை பார்க்க ஹாஸ்பிட்டல் வந்திருந்தவனை கண்டு மிரண்டவள் அவனின் கண்ணிலிருந்து தப்பிக்கும் வகைதெரியாது தவிக்க அதனால் அவனும் அவளிடம் பேச முயலவில்லை. 
பார்வை அவ்வப்போது அவளை தீண்டி தீண்டி விலகியது. அதுவே அத்தனை பதைபதைப்பிற்குள்ளாக்கியது அவளை. 
அவனின் பார்வையை யாரேனும் கண்டுகொண்டால்? இப்படி பார்க்கிறான் என்று பேசிவிட்டால்? அது தன் தந்தையின் காதிற்கு சென்றுவிட்டால்? இப்படியான எண்ணங்கள் அவளை தடுமாற செய்தது.
இரண்டாம் முறை ரேவதியை அழைத்து செல்ல அவளின் மாமியார் குடும்பம் வந்திருக்க அந்த அழைப்பு அம்பிகாவிற்கும் என்பதனால் அவரை கொண்டுவந்து விட ராதாவின் வீட்டிற்கு வந்திருந்த பொழுது பார்த்தாள். இவனை பார்த்ததும் உள்ளே சென்றவள் வெளியே வருவதை போல இல்லை. 
மேலும் ஐந்துநிமிடங்கள் இருந்தவன் தான் இருக்கும் வரை வரமாட்டாள் என்பதனால் கிளம்பிவிட்டான் ஒருவித வலியுடன். 
இதோ இத்தனை நாட்கள் ஆகிவிட்டது. ஏதோ ஒரு விதத்தில் தினமும் ஒருமுறையேனும் வசீகரன் சந்நிதியின் எண்ணத்தில் வராமல் இருந்ததே இல்லை. அப்படி ஒருவன் தன்னிடம் விருப்பம் சொன்னான் என்பது அத்தனை தொந்தரவு செய்தது அவளை. 
சந்தியாவிடம் சொல்லவேண்டும் என்று நினைத்தவள் அவள் வந்தபொழுது அதை பற்றி வாயே திறக்கவில்லை. அவள் சொல்வாள் என்று சந்தியா எதிர்பார்த்திருக்க ஏமாற்றமே அவளுக்கும்.
சென்னைக்கு மீண்டும் சென்றாள் எங்கே அவன் கண்ணில் தென்பட்டுவிடுவோமோ என்பதை தாண்டி அவன் தன் கண்ணில் பட்டுவிட்டால் என்று நினைத்து வீட்டிற்குள்ளேயே இருந்துகொண்டாள். பார்கவி மட்டுமே உலகமெனும் தோற்றத்தை உருவாக்கிக்கொண்டாள்.
————————————————————————–
அன்று தறிச்செட்டில் இருந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார் முனீஸ்வரன். வரும் வழியிலேயே அண்ணனிடமிருந்து அவசரமாக அழைப்பு வர நேராக நீதிமாணிக்கத்தின் வீட்டிற்கு சென்றார்.
“என்னண்ணே அவசரமா வர சொன்னீங்க?…” என கேட்டுக்கொண்டே உள்ளே வர அங்கே மொத்த குடும்பமும் குழுமி இருந்தது.
“நீ வந்து உட்கார்…” என தம்பியை தன்னருகே அமர்த்திக்கொண்டவர் கோமதியை பார்க்க அவர் அபிராமியிடம் கண்ணை காண்பிக்க அவள் காபியுடன் வந்தாள்.
“எடுத்துக்கங்க மாமா…” என்று நீட்டியதும் வழக்கமாக அவளை பார்க்கும் போது எழும்பும் எண்ணம் இன்றும் வந்தது.
“இந்த பெண்ணை முன்னிட்டு தானே தன் வீட்டிற்கு வந்தவர்களை அவமதித்து விரட்டி அடித்தேன். இப்பொழுது இந்த உறவு எத்தனை சுமூகமாக இருக்கிறது” என்று தானாக அவரிடத்தில் ஒட்டிக்கொள்ளும் அந்த நினைவுகள்.
ஏனோ வசீகரனையும் அவனின் குடும்பத்தையும் அவரால் தன் நினைவிலிருந்து அகற்றவே முடியவில்லை. அதிலும் அம்பிகா தன்னிடம் கம்பன் வீட்டில் வைத்து பேசிய விதம் வெகுவாய் குத்தி சென்றது.
எந்தவித கோபமோ, துவேஷமோ இல்லாது நலன் விசாரித்தவரை எப்படியெல்லாம் பேசினோம் என்று தோன்றிக்கொண்டே இருந்தது.
அவரின் இயல்பு இது இல்லை. தவறே செய்தாலும் அப்படித்தான், அதற்கென்ன என்று திமிர் காட்டி கடுமையாகுவது அவரின் குண இயல்பு. இங்கே அப்படி வம்படியாக காட்ட நினைத்தாலும் என்னவோ தடுத்தது.
வசீகரன் தன்னை பேசியது இன்றும் கோபத்தையும் ஆத்திரத்தையும் உண்டு பண்ணினாலும் தன்னிடம் உள்ள தவறும் அவரை உறுத்தத்தான் செய்தது. ஒப்புக்கொள்ள தான் மனமில்லை.
“தானாக அவன் வந்து வம்பு பேசவில்லையே. பெற்றோரை பேசியதால் வந்து அவனும் பேசிவிட்டு சென்றான்” என கூட நினைத்துப்பார்த்தவர் என்ன இது இப்படி ஒரு நினைப்பு என அதற்கும் எரிச்சல்ப்பட்டார்.
“மாமா…” அபிராமி மீண்டும் அழைக்க,
“ஹான் இல்ல வேண்டாம்மா. குடிக்க தண்ணி கொண்டுவா…” என்று அனுப்பியவர் தன் அண்ணனை பார்க்க,
“ஒரு முக்கியமான விஷயமா பேசத்தான் வரவழைச்சேன். புகழ் கல்யாணம் விஷயமா பேசனும்…” என்றவர் தன் பெரிய மகனை புவனேஷ்வரனை பார்க்க,
“இந்தாங்க சித்தப்பா…” என்று ஒரு கவரை நீட்டினான்.
“என்னடா இது?…” என கேட்டபடி வாங்கி பார்க்க அதனுள் நிறைய பெண்களின் புகைப்படங்கள்.
“எதுக்குடா இத்தனை போட்டோ?…” என அவனிடம் கேட்க அவன் தன் தம்பியை பார்த்தான். புகழ் முறைப்புடன் அமர்ந்திருக்க முனீஸ்வரனுக்கு புரிந்துபோனது.
“ஓஹ் பொண்ணு பார்க்கறீங்களா?…” என்று ஒவ்வொரு போட்டோவாக பார்வையிட,
“விஷயம் இது இல்லை தம்பி…” என்ற நீதிமாணிக்கத்தை பார்த்தவர்,
“ஏற்கனவே பார்த்தாச்சா?…” 
“ப்ச், நீ வேற, அவன் கல்யாணம் வேண்டாம்னு சொல்றான். தங்கச்சிக்கு முடிச்சுட்டு பார்த்துக்கலாம்னு சொல்றான். அதுக்காக தான் உன்னை வர சொன்னேன்…” 
நீதிமாணிக்கம் சொல்லியது ஒரு நிமிடம் முனீஸ்வரனுக்கு புரியவே இல்லை. புரிந்ததும் புகழை நெகிழ்வுடன் பார்த்தவர்,
“ஏன் புகழு அப்படியா சொன்ன?…” என்றார் பாசத்துடன். புவனேஷ்வரனுக்கு கூட அதில் கொஞ்சம் பொறாமை. 
“இவரை என்ன சொல்லி மயக்கிருக்கான்? இவனை என்னன்னு இவருக்கு இத்தனை பிடித்தது?” என்று சுவாரஸ்யத்துடன் பார்த்தான்.
“இல்லை சித்தப்பா, நிதிக்கு ஒரு வரன் பார்த்து முடிச்சுட்டு நான் பண்ணிக்கலாம்னு நினைச்சிட்டிருந்தேன். திடீர்ன்னு அப்பா பொண்ணு பார்க்கவும் விஷயத்தை சொல்லிட்டேன். நீங்களே நிதிக்கு பேச ஆரம்பிப்பீங்கன்னு நினைச்சேன்…”
“இப்ப என்ன அவசரம்னு தான் ஒன்னும் பேசலை புகழு. உனக்கு தெரியாதா? பெரிசு கல்யாணம் முடிஞ்சு ஒன்றரை வருஷம் தான் ஆகுது. அதுக்குள்ளே சின்னதையும் அனுப்பவான்னு தான் பார்க்காமலே இருந்தேன்…”
“என்னடா இது? தியாக்கும் நிதிக்கும் ரொம்ப வயசு வித்யாசம் இல்லையே. இப்ப பார்க்க ஆரம்பிச்சா தான் கூடிய சீக்கிரமே நல்ல இடமா அமையும். இவனும் பிடிவாதமா இருக்கான். நீயே சொல்லு என்ன பண்ணலாம்னு…” அண்ணனும் சொல்ல முனீஸ்வரனுக்கு கூட சில நாட்களாக அந்த எண்ணம் தான்.
சந்நிதியை மேலே படிக்கவும் அனுமதிக்கவில்லை. வீட்டிலேயே அடைந்துகிடப்பதை போல தான் இருந்து வருகிறாள். புரிந்திருந்தாலும் வேறெதுவும் செய்ய தோன்றவில்லை முனீஸ்வரனுக்கு. 
“திடீர்ன்னு கேட்டா என்ன சொல்ல? நானும் இதைப்பத்தி நினைச்சுட்டு தான் இருந்தேன். இந்த சிறுசு இன்னும் எத்தனை நாள் நம்மோட இருக்குமோன்னு? பொண்ண பெத்தா கட்டிக்குடுத்து அனுப்பத்தான வேணும்…”
அவர் பிரியவேண்டுமே என்ற கவலையுடன் சொன்னாரா? முடிக்கவேண்டுமே என்ற கடமையுடன் சொன்னாரா? என்பது அவருக்கே வெளிச்சம். ஆனால் சொல்லும் பொழுது குரலில் மெல்லிய தடுமாற்றம்.
“சித்தப்பா ஒன்னும் அவசரமில்லை. பொறுமையா பார்ப்போம். இப்போ என்ன? எனக்காகன்னு ஒன்னும் பார்க்க வேண்டாம்…”
“அதில்லைப்பா, அண்ணே சொல்றது சரிதான். கல்யாண பேச்சு எடுத்தாச்சு. பார்க்க ஆரம்பிப்போம். எப்படியும் இன்னும் ரெண்டு மூணு மாசத்துல நானே இதை பேசியிருப்பேன் தான். இப்ப நீங்க சொல்லியிருக்கீங்க…” என்றவர்,
“அண்ணே ஒரு நல்ல நாளா பார்த்து நம்ம தரகரை வர சொல்லுவோம். நீங்களே பேசுங்க…” என்று சொல்ல அனைவருக்கும் அத்தனை சந்தோஷம்.
“முதல்ல வீட்ல பார்கவிக்கிட்ட இந்த விஷயத்தை பத்தி சொல்லு. நானும் நாள் பார்த்துட்டு சொல்றேன்…” 
“ஹ்ம்ம், நான் கிளம்பறேன்…” என்றவர் நேராக வீட்டுக்கு சென்றார். அதற்கு முன் கோமதி போனில் அழைத்து விஷயத்தை சொல்லியிருக்க கேட்டுக்கொண்ட பார்கவிக்கு பரபரப்பாக இருந்தது.
இப்பொழுது தான் பெரியமகளை அனுப்பிவைத்தது போல இருந்தது. அதற்குள் நாட்கள் இத்தனை வேகமாக நகர்கிறதே என்று தோன்றியது. 
வீட்டிற்குள் நுழைந்ததுமே அவருக்கு தண்ணீர் கொண்டு சென்று கொடுத்தார் பார்கவி. வாங்கி குடித்தவர்,
“எங்க சிறுசை?…” என,
“மாடிக்கு போயிருக்கா…” 
“ஹ்ம்ம், வயசு வேற ஏறிட்டே போகுது. வயசு பொண்ண வீட்டில பூட்டிவச்சு இருக்கறது சரியா படல. அதான் சிறுசுக்கு ஒரு கல்யாணத்த பண்ணிடலாம்னு முடிவு செஞ்சிருக்கேன்…” 
“ஹ்ம்ம் சரிங்க…” என்றார் பார்கவி.
“அண்ணன் தரகர்ட்ட பேசிட்டு வீட்டுக்கு வர சொல்லுவாரு. போறப்ப கூட வா. சின்னதுட்ட ஒன்னும் இப்ப சொல்ல வேணா. இடம் முடிவானதும் சொன்னா போதும். புரியுதா?…” என உத்தரவு போல சொல்ல தலையசைப்பு மட்டுமே பார்கவியிடம்.
ஒரு வார்த்தை கூட நீ என்ன நினைக்கிற என்றோ, செய்யலாம்னு நினைக்கேன் பார்ப்போமா என்றோ அவர் கேட்கவே இல்லை. முடிவெடுத்துவிட்டேன், பொம்மை போல உடன் வா என்று தகவலாக சொல்லிவிட்டு செல்ல பார்கவிக்கு சரி என்பதை தவிர வேறு வழியில்லாது போனது.
அவருக்கு இத்தனை சீக்கிரம் சந்நிதிக்கு திருமணம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு மனம் வேண்டாம் என்றது, இன்னொரு மனமோ சந்தியா போல சந்நிதியும் நிம்மதியாக சந்தோஷமாக வாழட்டும் என்றும் எண்ணம்.
முனீஸ்வரன் முன்பை போல அதிகமாக தேளாய் கொட்டுவதில்லை என்றாலும் திட்டுவதை கொஞ்சம் குறைத்திருந்தார்.
சமீபமாக சந்தியா திருமணத்திற்கு பின் அதிலும் சென்னை சென்றுவந்ததிலிருந்து வீட்டிற்குள் நுழைந்ததும் மகள் என்ன செய்கிறாள்? சாப்பிட்டாளா? இப்படி கேட்க ஆரம்பித்திருந்தார்.  அதுவே பார்கவிக்கு மிகுந்த மகிழ்ச்சியை உண்டுபண்ணியது. அதிகபட்ச சாதனையாகவே அந்த அப்பாவி பெண்மணி அதனை பாவித்தார்.
“ம்மா…” என்று மாடியிலிருந்து இறங்கிய சந்நிதி தந்தையை பார்த்ததும் மெதுவாய் இறங்கி வர அவளை, அவள் கையில் இருந்த பிளாஸ்டிக் பக்கெட்டை  பார்த்துவிட்டு,
“வேலைக்கு வரவ என்ன சாப்பிட்டு தூங்கறாளா? மாடில இந்த வெயில்ல காய போட அனுப்பியிருக்க? அறிவிருக்கா உனக்கு? வேலைக்காரியை வேலை வாங்க கூட துப்பில்லை…” என்று மனைவியிடம் எரிந்துவிழ தலையை குனிந்துகொண்டார் பார்கவி.
“எங்க அவ? முதல்ல வேலைய விட்டு தூக்கனும். வீட்டு வேலைக்கு சம்பளம் குடுத்து வச்சா என் பொண்ணையே வேலை செய்யவிடுவாளா?…” என்று அன்றைய ஆட்டத்தை ஆரம்பிக்க,
“ஐய்யா…” என்று நடுங்கியபடி விந்தி விந்தி வந்து நின்ற பெண்ணை முறைக்க,
“கால்ல அடிபட்டு கட்டு போட்டிருக்கு. அதான் சின்ன பாப்பா போய் போட்டுச்சுங்க…” என்றதும் அவளின் காலை பார்த்தவர்,
“சூதானமா இருக்கறதில்லாம எங்கியாச்சும் வாரிவிட்டுட்டு இங்க வந்து கழுத்தறுக்கறது….” என்று உறுமிவிட்டு மேலே சென்றுவிட்டார்.
“நீ போம்மா…” என்ற பார்கவியை பரிதாபமாக அந்த பெண் பார்க்க,
“அதெல்லாம் நிப்பாட்ட மாட்டார். நான் சமாளிச்சுக்கறேன்…” என்று தைரியம் சொல்லி உள்ளே அனுப்பி வைத்தார்.

Advertisement