Advertisement

“இன்னும் கொஞ்சம் கொண்டுவரட்டுமா அத்தான்?…” என்ற ராதாவிடம் மறுத்துவிட்டார்.
“சரி நான் கிளம்பறேன். இப்ப போனா தான் வேலையாகும்…” என்று எழுந்துகொள்ள,
“ஒருநிமிஷம் அத்தான்…” என உள்ளே ஓடிய ராதா பெரிய டிபன்கேரியரில் பார்கவிக்கு சாப்பாட்டை கட்டி தர அவரை முறைத்தார் முனீஸ்வரன்.
“அவங்க ஒத்தையில தானா சமைச்சு என்னத்தை சாப்பிட போறாங்க அத்தான். இது எல்லாமே நானும் நிதியும் சேர்ந்து செஞ்சது தான். அக்காக்கிட்ட சொல்லுங்க…” என்று அவர் மறுக்கமுடியாத விதமாக பேசி தர ஒரு தலையசைப்புடன் வாங்கிக்கொண்டார் முனீஸ்வரன்.
“சிறுசுக்கிட்ட சொல்லிடு. வரேன்…” என்று கிளம்பியவர் பின் நின்று,
“அவளை கூப்பிடு…” என்று நிற்க ராதா கீழிருந்தே அழைத்தார். இரண்டுமூன்று அழைப்பிற்கு பின்னரே உறக்கம் களைந்து எழுந்து வந்தவள் தந்தையை பார்த்ததும் வேகமாய் இறங்கமுயன்ற கால்களை இழுத்துபிடித்து நிதானமாக இறங்கிவந்தாள்.
“உன்னைய ஒத்தாசைக்கு இங்க இருன்னா சொகுசா மத்தியான உறக்கமா கேட்குது உனக்கு?…” என்று பழைய முனீஸ்வரனாக நெற்றிக்கண்ணை திறந்துவிட மற்றவர்களுக்கு அய்யோவென்றானது.
“இந்த மனுஷன் சரியான பேய் புடிச்ச வேதாளம். பொசுக்குன்னு மரத்துல ஏறி ஜிங்கு ஜிங்குன்னு ஆட ஆரம்பிக்கறது.” ராதா புலம்பலுடன் சந்நிதியை பார்க்க,
“ரேவதி இனி கீழே தான் இருப்பா. கூட இரு. சொன்னது ஞாபகம் இருக்குல…”
“ஹ்ம்ம் இருக்குப்பா….” சந்நிதி மெதுவாக சொல்ல,
“ஒத்த வார்த்தைக்கு மேல வராதோ? என்ன வளர்த்திருகாளோ உன் அம்மா…” 
“நீங்க சொன்னது எல்லாமே ஞாபகம் இருக்குப்பா…” நீட்ட வாக்கியமாக பேசிவிட,
“வாய் கூடிப்போச்சு. நக்கலா பன்ற. இதெல்லாம் இங்க இருக்க வரைக்கும் தான். வீட்டுக்கு வரனும்ல…” என பல்லை கடிக்க,
“அத்தான் போற வழியில குடிக்க மோர் ஊத்தி தரட்டுமா. வெயில் வேற மண்டையை பொளக்குது. சூடாகிடும்ல….” ராதா பேச்சை மாற்ற,
“இவள உன் கண்ட்ரோல்ல வச்சுக்க. என்ன பன்றான்னு பாரு. சும்மா இல்லாம நல்லா சமைக்க கத்துகுடு. கவனமா பார்த்துக்க…” என ஏக அறிவுரைகளை ஏவிவிட்டு அவர் சென்றுவிட கார் கிளம்பும் சத்தம் கேட்கும் வரை அவரவர் நின்ற இடத்திலேயே நின்றனர். கம்பன் தன் அண்ணனுடன் சென்று  கார் ஏற்றிவிட்டு மீண்டும் உள்ளே வந்ததும் ராதாவை கட்டிகொண்டாள் சந்நிதி.
“ஏன் சித்தி இப்படி? இதுக்கு நான் வீட்டுக்கே போய்டறேன். அம்மாவும் பாவம். கொஞ்சம் நேரம் தெரியாம தூங்கிட்டேன். அங்க அம்மாவை போய் திட்டுவாங்க. என்னை கொண்டுபோய் விட்டுடுங்க சித்தி…” என்று விசும்ப, 
“சரியான லூசுடி நீ. எடுத்ததுக்கெல்லாம் பயம். தியா இருந்தவரை நீ கொஞ்சமாவது தைரியமா இருந்த. இங்க வந்தப்ப கூட பரவாயில்லை. ஆனா ஏன் இந்த நாலு நாளா எடுத்ததுக்கெல்லாம் பயப்படற?…” ராதா கேட்கவும் திடுக்கிட்டு பார்த்தாள் சந்நிதி.
“ஒண்ணுமில்லை சித்தி, சும்மா தான். சும்மா தான்…” என்றவள் மீண்டும் மாடிக்கு வேகமாய் சென்றுவிட ரேவதியை பார்த்த ராதா,
“இதுக்குதான் சொன்னேன் அவசரப்பட வேண்டாம்னு. யார் என் பேச்சை கேட்கா. அவ நினைச்சு நினைச்சு பயந்துட்டு இருக்கா. இந்த கல்யாணம் நல்லவிதமா நடக்கனும்னு நானும் தான் ஆசைப்படறேன். ஆனா அதுக்குன்னு இப்படியா? நேத்து மொளைச்சதுங்க எல்லாம் எனக்கு புத்தி சொல்லி வாயை அடைச்சு விட்டுடுதுங்க…”
ராதா சொல்வது தன்னையும், புகழையும், சந்தியாவையும் தான் என்று ரேவதிக்கு நன்றாகவே புரிந்தது. அவரால் தன் கணவரையோ, விஷ்வேஷ்வரனையோ எதுவும் சொல்லிவிடமுடியாது. 
“ஏற்கனவே கால் இப்ப பரவாயில்லைன்னு சொல்லி திரும்ப காலேஜ்க்கு அனுப்பலாம்னு சொன்னதுக்கு அந்த ஆட்டம் ஆடினார். படிச்சது போதும். புடிச்சது போதுன்னு. இந்த வீட்டுல அவளை இருத்தி வைக்க என்ன பாடுபடறோம்னு பார்த்துட்டு தான இருக்கீங்க?…”
“இதென்ன சின்ன விஷயமா? கல்யாணம் எவ்வளவோ பெரிய விஷயம் இது? சும்மா விளையாட்டு போக்குல நடந்துக்கறீங்க? சின்னவங்க சின்னவங்களா சில விஷயத்துல இருங்க. பெரியவங்களை சரியா முடிவெடுக்க விடுங்க. எங்களுக்கெல்லாம் இல்லாத அனுபவமா?…”
“இன்னைக்கு இல்லைனாலும் என்னைக்காச்சும் இங்க நடந்ததும் நாம நினைச்சதும் ஒருநாள் தெரிஞ்சா அவ்வளோ தான். சும்மாவே நாக்குல நரம்பில்லாத மாதிரி பேசுவாரு. இது தெரியவந்தா கொன்னேபோடுவார். உறவுன்னு ஒன்னு இல்லாமலே போய்டும்…” ராதா வருத்தம் நிறைய பேச,
“ம்மா, பாஸிட்டிவா நினைங்கம்மா. எதுவும் ஆகாது. நானும் வசீ அத்தான் சொல்லுவார்ன்னு நினைக்கலை. சும்மா பார்த்து பேசலாம்னு தான் இருந்தது. ஆனா சொல்லிட்டார். நமக்கு தெரியும்னு காட்டிக்காம இருப்போம். இல்லைனா நிதி இங்க இருந்தும் கிளம்பிடுவா…” ரேவதி மெதுவாய் பேச சொல்ல கடுப்பாய் பார்த்த ராதா,
“இந்த கல்யாணம் நல்லவிதமா பெரியவங்க ஏற்பாடு செஞ்சு நடத்தினா தான் மரியாதை. அதுவும் உன் பெரியப்பா விஷயத்துல ரொம்பவே கவனமா இருக்கனும். இல்லைன்னா…” என்றதுடன் அங்கிருந்து உள்ளே சென்றுவிட்டார்.
“என்னப்பா நீங்க அப்படி நிக்கறீங்க?…” கம்பனிடம் கேட்க,
“இன்னைக்கு எங்கண்ணன் நடந்துக்கிட்டது அத்தனை ஆச்சர்யமா இருக்கு. அண்ணிக்கு சாப்பாடு எல்லாம் வாங்கிட்டு போறார்…”
“ரொம்ப பெருமை தான். நம்ம நிதியை வாங்கு வாங்குன்னு வாங்கிட்டு போறார். அட போங்கப்பா….” என அலுத்துக்கொள்ள இதை எதையும் அறியாத சந்நிதி கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்தாள். 
எத்தனை சோதனை வந்தாலும் தன்னுடைய திருமணம் வசீகரனுடன் வேண்டாமென. 
பிரச்சனையில் ஆரம்பித்த ஒன்று எப்படி சரியாக போகும்? வாழ்க்கை முழுவதும் அந்த மோதலின் கசப்புணர்வு இருந்துகொண்டே தானே இருக்கும்.
ஆவேசத்திலும் கண்மண் தெரியாத ஆத்திரத்திலும் தடித்த வார்த்தைகள் வருடங்கள் கரைந்தாலும் வண்டுகளாய் குடைந்தவண்ணம் தானே இருக்கும். அதன் வலி என்றேனும் மீண்டும் வரம்பு மீறி வார்த்தையாடல்களை பிறப்பித்துவிட்டால்?
தந்தையின் குணத்திற்கு சற்றும் சளைத்ததல்ல வசீகரனின் குணம். இது ஒன்றே அவனை மறுக்க காரணமாக முன்னின்றது. 
இப்படியான பய உணர்வுகள் மனதை கவ்வ கண்களை மூடிக்கொண்டு இதை எதிர்நோக்க விருப்பமின்றி இந்த உறவே வேண்டாமென நினைத்தாள். இவள் இங்கே இப்படி இருக்க அங்கே அம்பிகாவிடம் சண்டைக்கு நின்றான் வசீகரன்.
இரவு உணவிற்கு வீட்டிற்கு வந்தவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அம்பிகா வாயே திறக்கவில்லை. அவ்வப்பொழுது கணவனை பார்வையால் எச்சரித்துக்கொண்டே இருக்க கண்டும் காணாமல் சாப்பிட்டு முடித்தவன் பாலை காய்ச்ச செல்ல,
“இன்னைக்கு நான் எடுத்துட்டு வரேன். நீ உட்கார்…” என்று சொல்லிவிட்டு குகன் கழன்றுகொள்ள ஹாலில் அமர்ந்திருந்த தாயிடம் வந்தான்.
“என்ன பண்ணிவச்சிருக்கீங்க இன்னைக்கு? காரணமில்லாம நீங்க இத்தனை அமைதி கிடையாதேம்மா?…” என்று எதிரில் அமர,
“இன்னைக்கு எங்க போனான்னு கேளு…” என்று கிட்சனில் இருந்து குகன் எடுத்துகொடுக்க,
“சொல்லுங்க, இன்னைக்கு எங்க போனீங்க? என்ன பண்ணுனீங்க?…” என்று வசீகரனும் விளையாட்டாய் ஆரம்பிக்க அம்பிகா கடுப்பாகிவிட்டார்.
“இங்க என்ன கொலையா பண்ணிட்டு வந்திருக்கேன். அப்பாவும், பிள்ளையும் திடீர்ன்னு ஜட்ஜ் மோடுக்கு போறீங்க?…” என வேகமாய் கேட்க,
“பார்ரா கோவத்தை. சரி சொல்லுங்க, இத்தனை வருஷத்துல இன்னைக்கு நான் சாப்பிடறப்ப நீங்க பேசவே இல்லை. இது நீங்க இல்லையே…” தாயின் அருகில் அமர்ந்துகொண்டு அவரின் தோளை அணைத்தபடி கேட்க,
“உன் அப்பா கோவமா இருக்கார் என் மேல…” வாடிய முகத்துடன் அம்பிகா சொல்ல,
“சான்ஸே இல்லை. பொய் சொன்னா நைட் நிம்மதியா தூக்கம் வராதுன்னு சொல்லியிருக்கீங்கம்மா…”
“நிஜமா வசீ…” மீண்டும் அம்பிகா சொல்லியவிதம் அவனை வியப்படைய செய்தது. 
“ஐ கான்ட் பிலீவ்…”
“இன்னைக்கு ராதா வீட்டுக்கு போய்ருந்தோம் நானும் பிரபு அம்மாவும் ரேவதியை பார்க்க…”
“உங்களை யார் அங்க போக சொன்னா? நிதி ஏற்கனவே நான் பேசினதுல ரொம்ப டிஸ்ட்ரப்ல இருக்கான்னு ரேவதி போன் பண்ணியிருந்தா நேத்து. இன்னைக்கு நீங்க வேற போய்ருக்கீங்க. பயந்துருப்பா…”
“அவ எங்க என்கிட்டே பேசினா? நான் தான் அவ அப்பாக்கிட்ட பேசினேன்…” என்றவர் கடகடவென ஒப்பிப்பதை போல சொல்ல குகனும் வந்துவிட்டார் பாலுடன். 
“உங்களை யார் அந்த மனுஷன்கிட்ட பேச சொன்னது? அதுவும் ஆளுக்கு முன்ன பேசியிருக்கீங்க. யோசிக்க வேண்டாமா நீங்க?…” என மகன் எழுந்து எகிற,
“நான் பேசனும்னு நினைக்கலைடா. எனக்கு அதுவே மறந்து நாம லாஸ்ட்ல ஹாஸ்பிட்டல்ல பார்த்தோமே அதான் ஞாபகம் வந்துச்சு. பேசக்கூடாது பேசக்கூடாதுன்னு நினைச்சு முடிக்கிறதுக்குள்ள நானே பேசிட்டேன். இது கூட விபத்து மாதிரி தான். எதிர்பாராமல் நடந்தது…”
“நீங்க என்ன ரீசன் சொன்னாலும் என்னால ஏத்துக்க முடியாதும்மா. அவர் உங்ககிட்ட வந்து வாங்கன்னு கூப்பிட்ட பின்னால பேசியிருந்தா கூட பரவாயில்லை. ஆனா நீங்க முதல்ல போய். ச்சே…” என தலையில் அடித்துக்கொள்ள,
“எப்டி எப்டி? நீயும் தான் அந்த பொண்ணுக்கிட்ட இப்ப பேசவேண்டாம்னு நினைச்ச, பேசின தானே? என்னை மட்டும் சொல்ற?…” என்ற அம்பிகா,
“பாருங்களேன் இவன் பேச்சை? இதுக்குத்தான் இவன்கிட்ட சொல்லவேண்டாம்னு சொன்னேன். யார் கேட்டா? நீங்கதான் சொல்லிடுன்னு சொன்னீங்க…”
“நானா? இல்லையே…”
“என்ன இல்லையே? கிட்சன்ல இருந்து நான் எங்க போனேன்னு கேட்க சொன்னீங்களே, அதுக்கு பேர் என்னவாம்?…” குகனை மனைவி மடக்க,
“அது எங்க போனான்னு  தான் கேட்க சொன்னேன்…”
“அத தான் நானும் சொல்றேன். நீங்க கேட்க சொன்னதால அவன் கேட்டான் நான் சொல்லிட்டேன். நீங்க கேட்டதால தானே?…” என்றவர் பாலை எடுத்து வேகமாய் குடிக்க ஆரம்பித்தார்.
தந்தையும் மகனும் அம்பிகாவை முறைத்து பார்க்க அதை கண்டுகொள்ளாத பாவனையுடன் குடித்து முடித்தவர்,
“அந்த ஆட்டம் ஆடற மனுஷன் என் பேச்சுக்கு ஒரு வார்த்தை எதிர்த்து பேசலை. இங்க என்னடான்னா என்னையே சொல்லுங்க. இதை கூட புரிஞ்சுக்க முடியலை உங்க ரெண்டு பேரால. என்ன புருஷனோ? என்ன புள்ளையோ? குட்நைட்…” என சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.
ஒருநிமிடம் ஒன்றும் புரியாமல் குகனும், வசீகரனும் திகைப்பாய் பார்த்துவிட்டு ஒருவரை ஒருவர் கண்டு புன்னகைத்தனர்.
“அபி ஒரு தனி பீஸ்….” குகன் சொல்ல,
“ம்ஹூம் மாஸ்டர் பீஸ்…” மகன் மெச்சினான்.
காஞ்சிபுரத்தில் முனீஸ்வரன் அம்பிகாவின் பேச்சில் யோசனையுடன் அமர்ந்திருந்தார்.

Advertisement