Advertisement

தீண்டல் – 18
            ரேவதியின் மாமியாரை மட்டும் எதிர்பார்த்திருக்க உடன் அம்பிகாவும் வந்ததும் முதலில் சந்தோஷித்தாலும் அப்போதுதான் முனீஸ்வரனின் வருகையும் ஞாபகத்திற்கு வந்தது.
ஐயோவென பரவிய உணர்வை அனைவருமே வெளிக்காட்டிக்கொள்ளாமல் அடக்கிகொண்டனர். 
சந்நிதிக்கு தான் இன்னமும் படபடப்பாக போனது. அம்பிகாவை பார்த்ததும் எங்கோ பார்த்த எண்ணம் தான். சட்டென புத்தியில் ஒட்டவில்லை அவரின் முகம். பார்த்து மாதங்களை கடந்துவிட்டதால் சட்டென பிடிபடவில்லை.
ரேவதியிடம் நலம் விசாரித்தவர் சந்நிதியை நிமிர்ந்து பார்த்து புன்னகைக்க அந்த புன்னகை வசீகரனை கொண்டிருக்க மூளையில் வெட்டிய மின்னலில் இவளிதயம் தாளம் தப்பி துடிக்க மறந்தது.
“என்னம்மா நல்லா இருக்கியா? இப்ப கால் பரவாயில்லையா?…” என கேட்டதற்கு தலையை மட்டும் ஆட்டியவள் வாயை திறந்தாள் இல்லை. 
அதன் பின்னர் மற்றவர்களுடன் பேசிக்கொண்டே உணவை முடித்தனர் அனைவரும். அம்பிகாவை தவிர அனைவருக்கும் எப்பொழுது முனீஸ்வரன் வருவாரோ என்னும் பயம் பிடித்துக்கொண்டது.
கொஞ்சம் நேரம் சென்று இவர்கள் கிளம்பிய பின் வந்தால் தேவலாம் என்னும் மனநிலை. 
ரேவதி தன் மாமியாரிடம் முனீஸ்வரனின் வருகையை சொல்லமுடியாது இருக்க அவர் சாவாகாசமாக அமர்ந்து ஊர்கதைகளையும் குடும்ப கதைகளையும் பேசிக்கொண்டிருந்தனர்.
நேரம் செல்ல செல்ல ராதாவிற்கு கவலை குறைந்து பேச்சு சுவாரசியத்தில் விருப்பத்துடன் அவர்களுடன் பேச ஆரம்பித்துவிட அவருக்கும் சேர்த்தான கவலையை கம்பன் சுமக்கவேண்டியதாகிவிட்டது.
“உள்ள ரூம்ல போய் பேசலாமே? ரேவதி உன் அத்தையை கூட்டிட்டு போம்மா…” என்று கம்பன் சொல்ல,
“இதோப்பா…” என ரேவதியும் எழுந்துகொள்ள பார்க்க,
“இங்க நல்லா தான இருக்கு. இங்கயே பேசுவோம்…” என்ற அம்பிகாவின் பார்வை அவ்வப்போது சந்நிதியை தொட்டு தொட்டு மீண்டது. அவளுமே அதை உணர்ந்தாலும் பேச்சில் கலந்துகொள்ளாமல் தன் சித்தப்பாவுடன் அமர்ந்துகொண்டாள்.
மேலும் ஒருமணிநேரம் கடந்திருக்கும். முனீஸ்வரன் வந்துவிட்டார். வேகமாக உள்ளே வந்தவர் ரேவதியின் மாமியாரை பார்த்ததும் அவரும் எழுந்து நின்று வணக்கம் வைக்க,
“வணக்கம் சம்பந்தியம்மா…” என்று முனீஸ்வரனும்  இரு கைகளையும் கூப்பி, 
“நல்லா இருக்கீங்களா?…” என்றுவேறு கேட்டார்.
“நல்ல இருக்கேன்…” என்றவர் மேலும் பேசும் முன்,
“நீங்க பேசிட்டு இருங்க இப்ப வந்திடறேன்…” என்ற முனீஸ்வரன் கீழே உள்ள ஒரு அறைக்குள் சென்றார் அவசரமாக.
அவர் சென்ற சிறிது நொடிகளிலேயே மாடி தோட்டத்தை பார்த்துவிட்டு கீழே இறங்கி வந்தார் அம்பிகா ராதாவுடன்.
“ராதா அண்ணன் வந்தாச்சு…” என கம்பன் சொல்லியதும் தான் ராதாவிற்கு சூழ்நிலை புரிய வேகமாய் அம்பிகாவை திரும்பி பார்க்க அவர் ரேவதியிடம் பேசிக்கொண்டிருந்தார்.
“என்ன பண்ண?…”
“என்ன பண்ணன்னா? சமாளிச்சு தான் ஆகனும். இவங்க நம்ம சம்பந்தியம்மாவுக்கு நெருங்கின உறவு. அவரு உங்க அண்ணன். எப்படி பார்த்தாலும் மகளோட புகுந்த வீடும் நமக்கு ரொம்ப முக்கியம். வந்தவங்களை கிளம்பி போங்கன்னா சொல்ல முடியும்?…” 
ராதாவுக்கு அத்தனை எரிச்சல் மண்டியது. இப்படி ஒவ்வொன்றுக்கும் பயந்து பயந்து சொந்தங்களிடம் உறவுகொண்டாட ஆயாசமாக இருந்தது.
“எனக்கும் புரியுது ராதா, ஆனா அண்ணன்…”
“என்ன அண்ணன்? எத்தனை நாள் பயந்துட்டே இருக்க. ஆண்டவனா பார்த்து இந்த சந்தர்பத்தை குடுத்தான்னு நினைச்சுக்கோங்க. அதுவும் நல்லதுக்குன்னு நினைங்க. பார்ப்போமே என்னதான் நடக்குதுன்னு?…” ராதா முடிவாய் சொல்லிவிட கம்பனுக்கு தான் உதறல்.
ஒரு புறம் அண்ணன், மறுபுறம் மகள் வாழ சென்றிருக்கும் குடும்பம். இரண்டுக்கும் இடையில் தவிப்பாய் இருந்தது அவருக்கு. 
சிறிது நேரத்தில் கழுவிய முகத்தை துடைத்துக்கொண்டே வெளியே வந்த முனீஸ்வரன் ஹாலில் கேட்ட சிரிப்பு சத்தத்தில் அங்கே பார்வை செல்ல அம்பிகாவை பார்த்ததும் கண்டுகொண்டார். மறக்க கூடிய முகங்களா அவர்களது முகங்கள். 
கண்டவரின் அடி பாதத்திலிருந்து உச்சந்தலை வரை பற்றிக்கொண்டு எரியும் உணர்வு பிறக்க வசீகரன் சொல்லி சென்றது வேறு சரியான நேரத்தில் மூளையில் பளிச்சிட சந்நிதியை தான் சட்டென பார்த்தார். ஒரு பக்கமாக நின்றுகொண்டிருந்தாள் அவள்.
கட்டுகடங்காத கோபத்துடன் வேகமாய் அங்கே வந்து நின்றவரை பார்த்ததும் சந்நிதிக்கு மூச்சு நின்றது. கம்பன் வேகமாக அண்ணன் மகளின் கையை பிடித்துக்கொள்ள முனீஸ்வரன் வாயை திறக்கும் முன்னர் யாருமே எதிர்பாராத விதமாக அம்பிகா ஆரம்பித்தார்.
“வாங்க, வாங்க. நல்லா இருக்கீங்களா? நீங்க வந்திருக்கிறதா யாருமே சொல்லலை பாருங்க. நான் மாடிக்கு போயிருந்தேன். இப்ப கிளம்பலாம்னு இருந்தேன். நல்லவேளை பார்த்துட்டேன். இப்ப உங்களுக்கும், மிசஸ்க்கும் உடம்புக்கு பரவாயில்லையா?…” என படபடவென அம்பிகாவே மொத்தத்தையும் பேச முனீஸ்வரன் உட்பட அனைவருக்குமே திகைப்பு. 
பேசிய பின்னர் தான் அம்பிகாவுக்குமே தோன்றியது “இவரிடம் நமக்குதான் சண்டையில்லை. எதற்கு தான் முதலில் பேசினோம்” என்று. அதையும் தாண்டி ஆக்ஸிடென்ட் பற்றி வேறு கேட்டு உளறியது உரைக்க ராதாவிற்கு பக்கென்றானது.
அம்பிகாவிற்கு எப்படி தெரியும்? என முனீஸ்வரன் கேட்டால் என்ன செய்ய என்று பதறி பார்க்க அப்படித்தான் என்பதை போல முனீஸ்வரன் புருவம் சுருக்கினார். அம்பிகாவிற்கே புரிந்துபோனது. 
“இப்ப கொஞ்சம் முன்ன தான் ரேவதி சொன்னா, நாங்க கோவிலுக்கு போய்ருந்தப்ப தான் நீங்களும் அங்க வந்திருந்ததா. அப்போதான் விபத்து நடந்ததுன்னு. ரொம்ப வருத்தமா போச்சு. அதான் உங்க பொண்ணை கூட ரொம்ப நேரம் நிக்காதம்மா, உட்காருன்னு சொன்னேன். பேசவே மாட்டேன்னு இருக்கா. நல்ல பொண்ணு. ரொம்ப அமைதியான பொண்ணும் கூட. நல்லவிதமா வளர்த்திருக்கீங்க…”
மீண்டும் மீண்டும் அவரை வாயை திறக்கவிடாது சிரித்த முகமாக அம்பிகா பேச பேச முனீஸ்வரனுக்கு எப்படி பதிலுக்கு பேசுவது என்றானது. அதுவும் ரேவதியின் மாமியார் வேறு இருக்க இப்பொழுது ஒரு பெண்ணை கரையேற்றிய தகப்பனாய் அந்த சூழ்நிலையை பார்க்க முனைந்தார்.
சற்றுமுன்னர் தான் சந்தியாவின் குழந்தையை பற்றிய கற்பனையில் இருந்தவருக்கு ரேவதியின் நிறைமாத நேரத்தில் இங்கே எந்தவித பிரச்சனையும் வேண்டாம் என்று அதி அதிசயமாக நினைத்து எதற்கும் பதிலளிக்காமல் மீண்டும் அறைக்குள் சென்றவர் அங்கிருந்தே சந்நிதியை அழைத்தார்.
“ப்பா…” என பயந்துகொண்டே வந்த மகளிடம்,
“அந்தம்மா இங்க அடிக்கடி இப்படித்தான் வருதா?…” என எரிச்சலுடன் கேட்க அம்பிகாவிடம் காண்பிக்கமுடியாத கோபத்தை மகளிடம் கொட்ட பார்த்தார்.
“இல்லப்பா, இன்னைக்கு தான் நானே பார்த்தேன். அத்தை கூட வந்திருக்காங்க போல…”
“கேட்டா கேட்டதுக்கு மட்டும் பதிலா சொல்லு, தேவையில்லாத பேச்சு பேசற நீ. தொலைச்சிடுவேன் பார்த்துக்க…” என்றதும் வாயை மூடியவள் அமைதியாக நிற்க,
“நீ மேல ரேவதி ரூம்க்கு போ. அவங்க கிளம்பற வரைக்கும் கீழே வர வேண்டாம். புரியுதா?…” என்றதும் தலையாட்டி கிளம்ப,
“சிறிசு நில்லு, நாளைப்பின்ன இங்க அவங்க வந்தா கூட எந்த பேச்சுவார்த்தையும் வச்சுக்க கூடாது. ஒத்த வார்த்த பேசினன்னு தெரிந்தது. சொல்றது வெளங்குதா?…” என்று மிரட்டி அனுப்ப வேகமாக மாடிக்கு சென்றவளுக்கு ஒன்று மட்டுமே விளங்கியது.
அது தான் தன் தந்தையுடன் ஊருக்கு செல்ல போவதில்லை என்பது. அது ஒன்றே ஒருவித ஆறுதலை தர அப்படியே படுத்தவள் உறங்கிப்போனாள்.
ரேவதியின் மாமியார் கிளம்ப அம்பிகாவும் கூடவே கிளம்பி விட அதன் பின்னர் தான் கம்பனுக்கு உயிரே வந்தது. 
“அண்ணாவை போய் சாப்பிட கூப்படறேன். இன்னும் ஒன்னும் சாப்பிடலை…” கம்பன் சொல்ல,
“அவரே வருவாரு பாருங்க. உங்கண்ணனுக்கு உடம்பெல்லாம் கண்ணு மட்டுமில்லை, காது கூட தான். சத்தம் இல்லாம இருக்கும் போதே தானா வருவார். இந்த பொண்ணை என்ன சொல்லிவச்சார்ன்னு தெரியலை. ஒண்ணுமே பேசாம மேல போய்டுச்சு….” கவலையுடன் மாடியை பார்க்க,
“ம்மா, நான் போய் பார்த்துக்கறேன்…” ரேவதி சொல்ல,
“மாடிப்படில கால வச்ச நான் மனுஷியா இருக்க மாட்டேன்…” பயங்கர கடுப்புடன் ராதா சொல்ல,
“என்னவாம்?…” என முனீஸ்வரன் வர கம்பனிடம் அத்தனை பவ்யம். 
“தலையெழுத்து” என முணங்கிய ராதா,
“ரேவதிக்கு மாடிக்கு போகனுமாம். அதான் வேண்டாம்னு சொல்லிட்டிருக்கேன். கேட்க மாட்டேன்றா…”  
“ஏன் கேட்காம? நீ கேட்கிற மாதிரி சொல்லு…” என்றவர் ரேவதியிடம் திரும்ப,
“நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் பெரியப்பா. சும்மா அம்மாவோட ஜாலிக்கு…” அப்படியே அந்தர்பல்டி அடித்த ரேவதியை ராதா முறைக்க,
“ஹ்ம்ம், புள்ளைங்க விளையாட்டுக்கு சொல்லுதுகளா, நிஜமா சொல்லுதுகளான்னு கூட தெரியாம புள்ளைய வளர்த்து கட்டிக்குடுத்து பேரன்பேத்தி எடுக்க போறீங்க. நேரங்காலம்…” என்று குற்றஞ்சாட்டிகொண்டே டைனிங் டேபிளில் அமர பின்னோடே சென்ற ராதா அவருக்கு இலை போட்டார்.
“இந்தா, ரசம் தான சாப்பிட போறேன். போய் தட்டு கொண்டா…” என்று போட்ட இலையை மடித்து ஓரமாக வைத்துவிட ஒரு பெருமூச்சுடன் அவர் கேட்டதை கொண்டுவந்து வைத்து சாதத்தின் மேல் சாம்பாரை ஊற்ற போக,
“உனக்கு ஒருக்கா சொன்னா…” என்று முடிக்கும் முன்னர் சாம்பாரை ஓரமாக வைத்துவிட்டு ரசத்தை ஊற்றியவர் ஓரத்தில் துவையலையும் வைத்துவிட்டு தள்ளி நின்றார்.
“ஒரு ரசத்த ஊத்த தெரியுதா உனக்கு? நல்லா முங்க முங்க ஊத்தி கரைச்சு சாப்பிட்டா தான ரசம் சாப்பிட்ட மாதிரி இருக்கும்…” என்று வேறு நொட்டை பேசிக்கொண்டு சாப்பிட முனீஸ்வரனுக்கு ஈடுகொடுத்து இத்தனை வருடம் அவருடன் வாழ்ந்த பார்கவிக்கு கோவில் கட்டலாம் போல தோன்றியது ராதாவிற்கு.
“அத்தான் இன்னும் கொஞ்சம் சாதம்…” ராதா கேட்க,
“அதெல்லாம் வேண்டாம். இதுவே போதும். இத்தனை வருஷமா சமைக்கிற. ஒரு ரசம், துவையல் உருப்படி இல்லை…” என்றபடி எழுந்து கையை கழுவ போக இது எதிர்பார்த்தது தான் என்றாலும் ராதாவிற்கு தாங்க முடியவில்லை.
ஒன்றும் சொல்லமுடியாது கம்பனின் இறைஞ்சும் பார்வை அவரை தடுக்க அமைதியாக அத்தனையையும் எடுத்து வைத்துவிட்டு டேபிளை சுத்தம் செய்துவிட்டு வந்தார்.
“ராதா அண்ணனுக்கு பாயாசம் கொண்டு வா…” கம்பன் சொல்ல,
“இப்பத்தான சாப்பிட்டிருக்கேன். அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்…”
“பெரியப்பா, நம்ம நிதி தான் செஞ்சா. நல்லா இருக்கு…” ரேவதியும் சொல்ல,
“சிறுசா? ஹ்ம்ம், சரி கொஞ்சமா கொண்டுவா…” என சொல்லவும் ராதா எடுத்துவர வாங்கி குடித்தவருக்கு ஆச்சர்யத்தில் புருவங்கள் விரிந்தது.
“சிறுசு இதெல்லாம் செய்யுதா? பரவாயில்ல. இன்னும் கொஞ்சம் அவ அம்மா பக்குவம் வரனும். ஹ்ம்ம்…” அதையும் அரைகுறையாக சொல்லிவிட்டாலும் மனதிற்குள் மகள் செய்ததை முழுமையாக பாராட்டவே நினைத்தார்.

Advertisement