Advertisement

வெள்ளிகிழமை முனீஸ்வரனின் வீடே பரபரப்பாய் இருக்க நீதிமாணிக்கம் ஹாலில் அமர்ந்திருந்தார். உடன் புவனேஷ்வரன். புகழ் இங்குமங்கும் நடந்துகொண்டும் தங்கைகளுக்கு என்னவேண்டும் என்று பார்த்துக்கொண்டும் இருக்க பெண்கள் வருபவர்களுக்கு பலகாரம் தயார்செய்ததை எடுத்துவைத்துக்கொண்டிருந்தனர்.
முனீஸ்வரன் இன்று வரை நீதிமாணிக்கத்திடம் சகஜமாய் பேசுவதில்லை. எதுவாவது சொல்லவேண்டும் என்றால் சொல்வது அதையும் புகழை வைத்து சொல்வது இப்படித்தான் சென்றுகொண்டிருந்தது.
வீட்டிற்கு வந்தால் வாங்க என்பதோடு நிறுத்திக்கொண்டவர் சந்தியாவின் திருமண விஷயத்தில் தான் நேரடியாக பேசவே செய்தார்.
சண்டையிடும் பொழுது வீராப்பாய் சவடாலாய் பேசிவிட்டபோது இருந்த ஒரு துணிச்சல் இப்பொழுது இல்லை. நன்றாக தன்மையாக பேச விடாமல் உறுத்தியது அவரின் உள்மனம்.
“போன் பண்ணினாங்களா ஈஸ்வரா?. எங்க வந்துட்டு இருக்காங்களாம்?…”
“கோவிலுக்கு வந்துட்டாங்களாம். அங்க இருந்து இப்ப வீட்டுக்கு வந்துடுவாங்கன்னு சொன்னாங்கப்பா…” புகழ் முந்திக்கொண்டு வந்து பதில் சொல்ல,
“உன்னை யாருடா கேட்டா?…” என நீதிமாணிக்கம் அதட்ட,
“இப்ப தான் நான் பேசினேன். அதனால வந்து சொன்னேன். இனிமே பேசறவங்கட்ட கேட்டுக்கோங்க….” என்று வெடுக்கென்று உள்ளே செல்ல,
“இப்ப எதுக்கு புகழை வைய்யுறேங்க? திட்டாம கேட்கமாட்டீங்களா?…” என முனீஸ்வரன் முறுக்கி நிற்க பார்ரா என்று அதிசயித்து தான் பார்த்தனர் அண்ணனும், அண்ணனின் மகனும்.
“உனக்கு தெரியுமோன்னு உன்னை கேட்டேன். அவன் பதில் சொல்லவும்…” 
“விடுங்கண்ணே…” என்று சொல்லிவிட்டு வாசலுக்கு செல்ல தம்பியிடமிருந்து அண்ணன் என்கிற வார்த்தை வந்துவிட்ட சந்தோஷ பெருமிதத்தோடு மூத்த மகனை பார்க்க,
“இந்த சந்தோஷம் எத்தனை நாளுக்கோ?” என்று அவன் மனதினுள் நினைத்தான்.
சிறிது நேரத்தில் மாப்பிள்ளையின் குடும்பம் ஒரு வேனில் வந்து இறங்க முதலிலேயே அவர்கள் பெரிய குடும்பம், இத்தனை பேர் வருகிறோம் என்று சொல்லிவிட்டதால் மகிழ்ச்சியுடன் வந்தவர்களை வரவேற்றனர்.
முனீஸ்வரன் தன்னுடைய குடும்பம் என அண்ணன் குடும்பத்தையும்  சேர்த்து அறிமுகப்படுத்திவைக்க மாப்பிள்ளை வீட்டினரும் தங்களின் அறிமுகபடலத்தோடு சம்பிரதாயமான பேச்சுக்களை ஆரம்பித்துவைத்தனர்.
நடுநாயகமாக அமர்ந்திருந்த விஷ்வேஷ்வரன் நிமிர்வும், பார்வையும், அவனின் பேச்சும் என்று நிறைவாக பிடித்துப்போனது சந்தியாவின் வீட்டாருக்கு. அதிலும் முனீஸ்வரனுக்கு போட்டோவில் பார்த்ததை விட நேரில் இன்னுமே திருப்தி.
பேச்சுவார்த்தைகள் இரு குடும்பத்தாருக்கும் சுமூகமாகவே நடந்தது. நீதிமாணிக்கம் முனீஸ்வரனை வார்த்தைகளை விடாமல் பார்த்துக்கொண்டதோடு குடும்பத்தின் மூத்தவராக சிறப்பாக செய்தார்.
பேச்சுவார்த்தைகள் முடிந்து சம்பந்தமே உறுதியாகிவிட்ட நிலையில் விஷ்வேஷ்வரன் சந்தியாவிடம் தனியாய் பேசவேண்டும் என்று சொல்ல “என்ன இது?” என்பதை போல முகத்தில் விருப்பமின்மையை காண்பிக்க,
“சித்தப்பா இப்ப இதெல்லாம் சகஜம் ஆகிடுச்சு. சும்மா பொண்ணுக்கு சம்மதமான்னு நம்ம தியா வாயாலையே கேட்டு தெரிஞ்சுக்கனும்னு நினைக்கிறார். அதான்…” புகழ் சமாளித்து,
“பேசுங்க…” என விஷ்வாவை அழைத்து சென்றான் சந்தியாவின் அறைக்கு.
“ரூம்ல வேண்டாம்…” என்றவன் வீட்டை சுற்றி பார்த்து,
“மேல மாடி ஹால்ல வச்சு பேசறோம்…”  என்று சொல்லி மாடிக்கு செல்ல சந்தியாவை அழைத்து சென்றான் புகழ். செல்லும் முன்னால் மகளை பார்வையாலேயே ஒரு மிரட்டு மிரட்டித்தான் அனுப்பினார் முனீஸ்வரன்.
“இன்னும் எத்தனை நாளைக்கு மிரட்டி காரியம் சாதிப்பீங்க சித்தப்பு? இந்த மிரட்டலும் நல்லதுதான்” என நினைத்தவன்,
மாடி படிகளை கடந்து ஒரு அறையை தாண்டி ஹால் ஒன்று பெரிதாய் விரிந்திருக்க அங்கே இருக்கையில் ஏற்கனவே அமர்ந்திருந்தான் விஷ்வா. சந்தியாவை பார்த்ததும் புன்னகைத்தவன் சோபாவை காட்டி அமர சொல்லி கண்காண்பித்தான்.
சந்தியாவிற்கு தான் பயத்தில் வியர்த்து போனது. நெடுநெடுவென்ற உயரத்துடன் போலீஸ் என்னும் மிடுக்கு அவனின் ஒவ்வொரு அசைவுகளிலும் தெரிய கடினமானவனோ என்று அவளே முடிவு செய்துகொண்டாள்.
“ஹாய் நான் விஷ்வா. விஷ்வேஷ்வரன்…”  என்று கை நீட்ட அசையாமல் இவள் அமர்ந்திருக்க,
“பேசமாட்டீங்களா? எதுக்கு இத்தனை பயம்?…” புன்னகை மாறா முகத்துடன் கண்களில் கனிவுடன் அவன் கேட்க இன்னுமே இவளிடம் அமைதியும், படபடப்பும்.
“என்னை நிமிர்ந்து பார்த்தா தான் நான் யார் என்னன்னு உங்களுக்கு தெரியும். குனிஞ்சுட்டே இருந்தா உங்களை சரியா பார்க்காம நான் கல்யாணம் பண்ணிக்க முடியுமா?…” கிண்டலுடன் அவன் கேட்கும் மெதுவாய் முகம் நிமிர்த்தி பார்க்க,
“பிடிச்சிருக்கு…” அவள் பார்வை தன்னை தொட்டதும் அவன் உதிர்த்த அந்த சொற்களும் இவளின் முகத்திற்கு நேரே அவனின் முகமும், சிரிப்பும் சந்தியாவை கவரத்தான் செய்தது.
“உங்களுக்கு பிடிச்சிருக்கா? ஏனா வீட்ல நாம கீழ போறதுக்குள்ள முகூர்த்த தேதியை குறிச்சிடுவாங்க. எனக்கு இப்பவே தெரிஞ்சா பெட்டர்…” என கேட்க ஒரு நொடி தயங்கியவள் தலையை மட்டும் அசைத்து சம்மதம் சொல்ல யோசனையாய் அவளின் முகம் பார்த்தவன்,
“நீங்களா தானே சொல்றீங்க? இல்லை யாரும் சொல்ல சொல்லி…”
“என் பேரன்ட்ஸ் என்ன முடிவெடுத்தாலும் எனக்கு சம்மதம். அவங்க விருப்பம் தான் என்னோடது…”  கோர்வையாய் ஒரு வேகத்துடன் இவள் சொல்லிவிட,
“ம்ஹ்ம்ம், அப்போ என்னை பிடிச்சு ஓகே சொல்லலை. கரெக்ட்…” 
“இல்லை, அப்படியில்லை…” பதட்டமாய் அவள் மறுத்த வேகம் இவனின் மனதில் லேசாய் இதம் பரவ செய்ய,
“வெல், இப்போ உரிமையா நீன்னு சொல்லி பேசலாம். சரி சொல்லு, மேரேஜ்க்கு பின்னால உனக்கு ஏதாவது ஆசை ஐ மீன் ஜாப்க்கு போகனும், படிக்கனும் இந்த மாதிரி ஏதாவது இருக்கா?…” 
அவன் கேட்க என்ன பதில் சொல்வதென்றே சந்தியாவிற்கு தெரியவில்லை. முனீஸ்வரன் இதை படி என்றதும் படித்தாள். முடித்ததும் போதும் என்றார் இருந்துகொண்டாள். மேல்படிப்பு, வேலைக்கு செல்வது என்று ஆசை இல்லை என்பதை விட ஆசைப்பட கூட தோன்றவில்லை எனலாம்.
“எதுவும் யோசிக்கலையா?…” என மீண்டும் விஷ்வா கேட்க,
“எனக்கு தெரியலை…” என மெல்லிய குரலில் சொல்ல அவளை ஆச்சர்யமாய் பார்த்தவன்,
“தெரியலைன்னா? வாட் யூ மீன்?…” என கேட்க அவனின் மொபைல் இசைத்தது. லலிதா தான் அழைத்திருந்தார்.
“இன்னும் ரெண்டு மாசத்துல ஒரு முகூர்த்தம் வருதுப்பா. உனக்கு ஓகேவா? இதை விட்டா அடுத்து நல்ல முகூர்த்தம் இல்லை…” என சொல்ல,
“இன்னும் டூ மந்த்ஸ்ல ஹ்ம்ம் என்ன டேட்…” என கேட்டவன் சலனமின்றி அமர்ந்திருந்த சந்தியாவை பார்த்துக்கொண்டே பேசி முடித்தவன்,
“இன்னும் ரெண்டு மாசத்தில் நமக்கு கல்யாணம். அதுவரைக்கும் யோசி. டைம் இருக்கு. கல்யாணத்துக்கு பின்னால உனக்கு வேலைக்கு போகனும்னாலும் சரி, மேல படிக்கனும்னாலும் சரி. அதுவும் இல்லை முழு நேரமும் என் கூட என் நினைப்பில் இருக்கறதுனாலும் சரி எனக்கு ஓகே…” 
கடைசியில் சொல்லியவற்றை அவள் புரிந்துகொள்ளும் முன் அவளின் கன்னம் தட்டி விடைபெற்று சென்றான் விஷ்வேஷ்வரன். சந்தியா தன்னிலை திரும்பி கீழே செல்லும் முன் அனைத்து பேச்சுக்களும் முடிந்து அவர்கள் கிளம்பியிருந்தனர்.
சந்தியாவும் சந்நிதியும் உள்ளே சென்ற பின்னர் அபிராமியை சந்நிதிக்கு சாப்பிட எடுத்து செல்லுமாறு அவளை அனுப்பிய கோமதி,
“இப்ப எதுக்கு இத்தனை யோசனை? நல்லபடியா எல்லாம் முடிஞ்சதே?…” முனீஸ்வரனை பார்த்து கேட்க,
“மாப்பிள்ளை தம்பி கொஞ்சம் கறாரா இருப்பாரோ? இது சரிப்பட்டு வருமான்னு யோசனையா இருக்கு. என்னமோ கொஞ்சம் இடிக்குது….”
“இவரை” என பல்லைகடித்தான் புகழ்.
“இதுல இடிக்க என்ன இருக்கு?…” ராதா கேட்க,
“நிச்சயதார்த்தம் கல்யாணம் எல்லாம் ஒரே தடவையா செய்யனும்னு பிடிவாதமா இருக்கார். அது நல்லாவா இருக்கும்?…” 
“இதுதானா? அவங்க ஊர் என்ன பக்கத்துலையா இருக்கு? தூரமா இருக்கறதால அவங்க சொல்றதும் சரிதான? நம்ம வீட்ல பொண்ணு பக்கம் தான் கல்யாணம் செய்வோம். அவங்க வீட்ல தான் செய்யனும்னு சொல்லிட்டா நாம ஒன்னொண்ணுக்கும் போய் வந்துக்கிட்டு இருந்தா நமக்கு எவ்வளவு அலைச்சலா இருக்கும்? பக்கத்துல இருந்தா விசுக்குனு போய்ட்டு விருட்டுன்னு வந்துடுவோம்…” 
ராதா சொல்ல அதை தான் மற்றவர்களும் ஆமோதித்தனர். முனீஸ்வரனுக்கு புரிந்தாலும் மனதின் ஓரத்தில் ஒரு சலனம். வசீகரனை நினைத்து.
இப்படி ஒரு பிரச்சனை வந்ததும் வசீகரன் பேசி சென்றதையும் பற்றி அவர் மாப்பிள்ளை வீட்டினரிடம் சொல்லவே இல்லை. திருமணத்தன்று அவன் ஏதோ கோபத்தில் பிரச்சனை செய்யாதிருக்கவேண்டுமே என்று நினைத்தவர் இன்னொன்றும் நினைத்தார்.
அன்று கொஞ்சம் நிதானமாக பேசி அவர்களை அனுப்பியிருக்க வேண்டுமோ என்று. அவர் நினைக்க அபிராமியும் அங்கே வந்து நிற்க முனீஸ்வரனின் முகமே கறுத்துப்போனது.
இப்பெண்ணின் சொந்தம் என்றுதானே அவர்களை தூற்றி அனுப்பியது. இன்று இப்படி சூழ்நிலை மாறி இவர்களோடு இருக்கிறோம். அன்றைக்கே அப்படி பேசியவன் அவன், இப்பொழுது இன்னமும் பேசுவானே என நினைத்து தன் கவலையை தனக்குள்ளேயே மறைத்துக்கொண்டார்.
அடுத்து வந்த ஒவ்வொரு நிகழ்விலும் கடந்த நாட்களிலும்அவரின் மனதில் வசீகரன் நீக்கமற நிறைந்திருந்தான் என்பதே உண்மை.
———————————————————
“வசீ கிளம்பலையா?…” என கேட்டபடி உள்ளே வந்த அனுவை பார்த்து தலையசைத்தவன்,
“நீ போ அனு. நான் இன்னும் ஒரு டென் மினிட்ஸ்ல கிளம்பிடுவேன்…” என சொல்ல,
“அபிம்மா கால் பண்ணிட்டாங்க. நீ என்ன பன்றன்னு, கிளம்பு நீ…”
“ப்ச், போவேன்னு சொல்றேன்ல. போறேன்…” என்று அவளை அனுப்பியவன் கண்களை மூடி எத்தனை நேரம் இருந்தானோ இரவு எட்டு மணி ஆகிவிட்டதை கடிகார சத்தம் உணர்த்த விழி திறந்து பார்த்தவன் மேஜை மேல் இருந்த இன்விடேஷனை மீண்டும் எடுத்து பார்த்தான்.
மறுநாள் சந்தியா விஷ்வேஷ்வரன் திருமணம். இதோ இத்தனை நாட்கள் அவன் எதிர்பார்த்த தருணம்.
இனியும் அவனின் காதலை அவன் மட்டுமே சுமக்க முடியாதென்னும் அளவிற்கு அது கனமாய் அவனை அழுத்திக்கொண்டிருந்தது. 
தன் மனதை அவளிடம் சொல்லவும் முடியாமல் அவளை அணுகவும் முடியாமல் அவனின் தவிப்பு நொடிக்கு நொடி பயங்கரமாய் அவனை கொன்று தின்றுகொண்டிருந்தது.
காதல் சுகமான வலி, அழுத்தமென்று எவர் சொல்லியது? சொல்லியவர்களை சட்டையை பிடித்து கேள்வி கேட்க வேண்டும் என்கிற அளவிற்கு வெறியே பிறந்தது இவனுள்.
தான் ஒருவன் இங்கு அவளின் நினைப்பில் இருப்பதும், தவிப்பதும் அவளுக்கு தெரியவே தெரியாது. அதுவே அவனின் அழுத்தத்தை அதிகப்படுத்தியது.
சேரில் சாய்ந்து கால்களை நன்றாக நீட்டியவன் பின்பக்கமாய் சாய்ந்து தலையை இரு கையினாலும் அழுத்தமாய் கோத அம்பிகாவின் அழைப்பு வந்துவிட்டது. 
இனியும் தாமதிக்க முடியாதென எழுந்து அலுவலகம் விட்டு வெளியே செல்ல ரவி இவனுக்காக காத்திருந்தான்.
“நீ இன்னும் கிளம்பலையாடா?…” என கேட்க,
“உன் பைக் இங்க இருக்கட்டும். வா நானும் வீட்டுக்கு வரேன். நாளைக்கு சேர்ந்தே காஞ்சிபுரம் போவோம்…” என சொல்ல அவனை முறைத்த வசீகரன்,
“என்னை பார்த்தா எப்படி தெரியுதாம்?…” என,
“அப்படியே தான் தெரியுது. நீ முதல்ல கார்ல ஏறு…” என்று அவனை உள்ளே தள்ளி மறுபுறம் வந்து காரை கிளப்பினான். அவனின் செயலில் புன்னகைத்த வசீ,
“உங்க அக்கறைக்கு ஒரு அளவே இல்லைடா…” என்று சிரித்தபடி ஸீட்டில் நன்றாக சாய்ந்து விழிகளை மூடிக்கொண்டான்.
மூடியவிழிகளுள் சந்நிதியின் இன்றைய புகைப்படங்கள் வரிசையாய் அணிவகுக்க சுகமாய் அதற்குள் தொலைந்துபோனான். 

Advertisement