Advertisement

தீண்டல் – 13
நாகர்கோவில் சிறைச்சாலை
            “ஸார் ஸார் இனிமே இந்த தப்பை பண்ணமாட்டேன் ஸார். சத்தியமா பண்ணமாட்டேன். விட்டுடுங்க. ஐயோ….. வலிக்குதே,,, ஸார் ஸார்..” என அவன் அலற அலற கொஞ்சமும் இரக்கமின்றி அவனை நீண்ட மர கம்பால் வெளுத்துக்கொண்டிருந்தான் விஷ்வேஷ்வரன்.
“வலி வலி உனக்கு மட்டும் தானாடா வலி? தேர்ட் ரேட் நாயே, செஞ்சுட்டு வந்தது பொறுக்கித்தனம். இதுல இங்க இருக்கறதுக்கு உனக்கு மேலு வலிக்குதோ? அடிச்சு கொன்னுட்டு கூட்டாளியோட சண்டையில அடிச்சு கொன்னுட்டானுங்கன்னு கேஸ முடிச்சுட்டு போய்க்கிட்டே இருப்பேன்….”
அவனின் முகத்தில் விரவியிருந்த கொலைவெறியில் குற்றவாளி அவன் மிரண்டுபோய் இருந்தான். 
“ஸார், போதும் ஸார். செத்துற போறான். நமக்கு தான் தலைவலி…” உடன் இருந்த காவலர் ஒருவர் அவனிடம் பணிவாய் பேச,
“இவன மாதிரி எத்தன பெற பாத்திருப்பேன். இவன் என்ன பெரிய டேஷா?…” என்று நாக்கை மடித்து அவனை விரல் நீட்டி எச்சரித்தவன்,
“எவ்வளவு துணிச்சல் இருந்தா ஜெயில்ல இருந்து தப்பிக்க பாத்திருப்பான். அதும் என்னை பத்தி தெரிஞ்சே. இவனை சும்மா விட்டா மத்த கைதிங்களுக்கும் துளிர்விட்டு போய்டாது?…” மூச்சுவாங்க மீசையை முறுக்கிக்கொண்டு அவன் பேசியதை பார்த்தால் யாராயிருந்தாலும் பயத்தில் வியர்த்துதான் போவார்கள்.
“ஜெயிலர் ஈஷ்வரன்னா நெஞ்சுல பயம் என்னைக்கும் இருக்கனும். புரியுதா?…” என உறுமியவன்,
“ரத்தினம் இவனுக்கு இன்னைக்கு முழுக்க சோறுதண்ணி குடுக்க கூடாது. தனி செல்லுல போடுங்க. இவன பாக்கற மத்த கைதிகளுக்கும் அப்பத்தான் புத்தி வரும்…” என சொல்லிவிட்டு அங்கிருந்து தன்னுடைய இருப்பிடம் சென்றான்.
“தேவையாடா உனக்கு? அந்தாளு தான் ராட்சசன்னு பேசிக்கறாங்க. பேசாம கம்முன்னு இருக்கறத விட்டுட்டு தப்பிக்கனும்னு இத்தனை அடி வாங்கனுமா என்ன?…” சக கைதி ஒருவன் கம்பிகளுக்கு பின் நின்றபடி பேச இவனுக்கு பதில் சொல்லமுடியவில்லை. 
எழுந்து நடமாட முடியாமல் அடியின் வலியை கூட தாங்கமுடியாமல் அந்த இருபத்தேழு வயது இளைஞன் கண்ணீர்விட்டு அழுதுகொண்டிருந்தன.
“நீ தப்பிச்சு போகாபோறன்னு தெரிஞ்சும் தப்பிக்க விட்டு உன்னை புடிச்சுட்டு வந்திருக்காரு அந்த ஈஸ்வரன். இப்ப புரியுதா இங்க நாங்க ஏன் வால சுருட்டிட்டு இருக்கோமின்னு. நான்லாம் எப்பேர்ப்பட்டவன் வெளில…” என்றவன் உடனே பேச்சை நிறுத்திவிட்டு வேறு எவரும் கேட்டுவிட்டாரோ என பார்த்தவன்,
“டேய் இனியாச்சும் ஒழுங்கா இரு…” என்றதோடு நிறுத்திக்கொண்டான் சக கைதி.
“என்ன ரத்தினம் பய சுருண்டுட்டானா?…” என்று மேசை மீது காலை வைத்து ஆட்டிக்கொண்டே கேட்க,
“நாலு நாளைக்கு எந்திக்க முடியாது ஸார்…”
“எந்திச்சு என்ன பண்ண போறாராம் ஐயா? நாய் நாய். அவனை என் கையாள கொன்னு போட்டிருக்கனும். கேவலம் ரெண்டுபவுனு சங்கிலிக்காக போய் அந்த சின்ன பொண்ணை…” என்று பல்லை நறநறவென்று கடிக்க,
“விடுங்க ஸார், என்ன பன்றது? இவனை அடிச்சு ஒண்ணுகிடக்க ஒன்னாச்சுன்னா நம்ம தலைதான் உருளும்…” 
“அதுக்காக தான ரத்தினம் அவன் தப்பிக்க பார்த்ததும் வெய்ட் பண்ணி வெளில வச்சு புடிச்சு கொண்டுவந்து உரிச்சேன். இல்லைனா ஏன் அடிச்சீங்கன்றதுக்கு ரீசன் மண்ணாங்கட்டி கேட்டுட்டு பைலை தூக்கிட்டு ரிப்போர்ட்க்கு வந்துடுவானுங்க…” என்றவனின் உதடுகள்  கோபத்தில் துடித்துக்கொண்டிருந்தது.
தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்தவன் மொபைல் அடிக்க எடுத்து பார்த்தவனின் முகம் மென்மையை தத்தெடுத்தது.
“சொல்லுங்கம்மா…” என்று உற்சாகமாக அழைத்தவனின் குரலில் சற்றுமுன் இருந்த கோபமும் வெறியும் துளியும் இல்லை.
“விஷ்வா பொண்ணு வீட்ல இருந்து கால் பண்ணினாங்க. வர வெள்ளிகிழமை பொண்ணு பார்க்க வர சொல்லியிருக்காங்க. உன்கிட்ட பேசிட்டு சொல்றேன்னு அப்பா சொல்லிட்டாங்க. நீ சொல்றதை வச்சுதான் உன் அக்காவுக்கும், பெரியம்மாவுக்கும் சொல்லிவிடனும்…” அவனின் தாய் லலிதா பேச நெற்றியை தேய்த்தவன்,
“ஹ்ம்ம், இந்த பொண்ணு பார்க்கிறது, மாப்பிள்ளை வீடு பொண்ணு வீடு மாத்தி மாத்தி போய் கை நனைக்கிறது, நிச்ச்சயதார்த்தம், கல்யாணம் ரிசப்ஷன்  இதெல்லாம் எதுக்குமா தனிதனியா இழுத்தடிச்சுட்டு? ஸ்ட்ரெய்ட்டா மேரேஜ் வச்சிடலாமே?…”
“விஷ்வா…” லலிதாவின் குரலில்,
“தூரம் அதிகமேன்னு பார்த்தேன். எனக்கு தான் பொண்ணை புடிச்சிருக்கே. பொண்ணு பார்க்க மட்டும் நான் வரேன். மேரேஜ் எல்லாம் சும்மா இங்கைக்கும் அங்கைக்குமா அலையாம வைக்க பேசுங்க…” என சொல்ல,
“ஹ்ம்ம் சரி வைக்கிறேன்…” என வைத்துவிட மொபைலில் இருந்த சந்தியாவின் போட்டோவை பார்த்தான் விஷ்வேஷ்வரன்.
“என்ன ஸார் கல்யாணமா?…” என ரத்தினம் கேட்க அவனின் முகத்தில் சிறு வெட்கமும், இளம் முறுவலும் மலர,
“ஹ்ம்ம், ஆமாம் ரத்தினம். பொண்ணு காஞ்சிபுரம். பேர் சந்தியா. இப்போதான் பேசியிருக்காங்க. இனிதான் பார்க்க போகனும்…”
“ஆனா ஸாருக்கு பொண்ணை ரொம்ப புடிச்சிடுச்சுன்னு தோணுது…” என கேலி குரலில் பேச,
“முப்பத்தி நாலாவது செல்லுல இருக்கற கைதிக்கு அடுத்த வாரம் தானே ரிலீஸ்?…” என்று பேச்சை மாற்றியவன் அடுத்து தனது அலுவல்களை பற்றி மட்டுமே பேசினான்.
————————————————————-
“இப்போ எதுக்கு எனக்கு இத்தனை வேகமா கல்யாணம் செய்ய முடிவு செஞ்சிருக்கீங்க? அதுவும் போலீஸ், டெய்லி ஜெயிலுக்கு போறவர்…” சந்தியா அழுகும் குரலில் கவலையுடன் கேட்க புகழும், சந்நிதியும் வாய்விட்டு சிரித்தனர்.
“உங்களுக்கு எல்லாம் கிண்டலா போச்சுல…” என்று கோபித்தவளை ராதாவும் கோமதியும் தான் சமாதானம் செய்தனர்.
“நல்ல வரன் அமையும் போது மறுத்து தடங்கலா பேசக்கூடாதுடா தியா…” ராதா சொல்ல,
“இங்க பாரு தியா, அப்பாவுக்கேத்த சரியான மாப்பிள்ளை அத்தான் தான். தப்பிச்சோம் பிழைச்சோம்னு ஒரே ஓட்டமா ஓடிடு. இனி உனக்கு அப்பாவோட லேசர் பார்வையில் இருந்து விடுதலை விடுதலை விடுதலை…”
“ஆமா கரெக்ட்டா சொன்னதா நிதி. இதுதான் சான்ஸ் தியா…” என்று புகழும் கிண்டல் பேச,
“உதை  வாங்க போறீங்க ரெண்டு பேரும். அவளை ரொம்ப கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க…” என புவனேஷ்வரன் அதட்ட மற்றவர்கள் வாயை மூடிக்கொண்டனர்.
“இன்னொரு முனீஸ்வரன் நம்ம வீட்ல உருவாகிட்டு வரார். அப்பப்ப தலையை நீட்டி பூச்சாண்டி காமிச்சுட்டு…” என சந்நிதி புகழிடம் கிசுகிசுப்பாய் சொல்ல,
“அங்க என்ன ரகசியம்?…” என்றவன், 
“சித்தி, நீங்க அம்மாவை கூட்டிட்டு போய் ஆகவேண்டிய வேலையை பாருங்க. தியாக்கிட்ட நான் பேசறேன்…” என்று பார்கவியையும் கோமதியையும் அனுப்பியவன் ராதாவிடம் கண்ணை காண்பிக்க,
“தியா உன் நல்லதுக்கு தான் நாங்க முடிவெடுப்போம். மாப்பிள்ளை உன் அப்பா பார்த்தாருன்னு தான கவலை. அவரை பத்தி நல்லா விசாரிச்சுட்டோம். நல்ல பையன். உனக்கு பொருத்தமான பையனும்…” ராதா சொல்ல,
“இங்க பாரு தியா, நீ படிச்ச பொண்ணு. நான் சொல்றது உனக்கு புரியும். இப்பவே உனக்கு கல்யாண வயசு வந்திருச்சு. நீ தள்ளி போட்டுட்டே இருந்தா உனக்கு அடுத்து நிதி இருக்கா. உன் அப்பாவுக்கு உங்களை எப்படியாவது கரை சேர்த்திடனும்ன்ற  எண்ணம் வலுவா இருக்கு. இந்த ஆக்சிடென்ட் ஆனதுல இருந்தே அவருக்குள்ள ஒரு பயம்…”
“அண்ணா…” 
“நான் பேசிடறேன் தியா. வெளில காண்பிக்காம இருந்தாலும் அதுதான் உண்மை. அவர் நல்லா இருக்கும் போதே உங்களுக்கு ஒரு நல்லது பண்ணிடனும்னு நினைக்கார்..” 
புவனேஷ்வரன் சொல்ல சந்நிதியின் முகத்தில் கேலி புன்னகை. அதை பார்த்து அவளை முறைத்தவன் பார்வையால் அடக்கினான்.
“சரி கல்யாணம் வேண்டாம்ன்னா எப்படி ஏதாவது ஜாப்க்கு போக ஐடியா வச்சிருக்கியா? இல்ல மேல படிக்கலாம்னு நினைக்கறியா?…”
“அப்பா ரெண்டுமே வேண்டாம்னு சொல்லிட்டாங்க. நான் வீட்ல தான் இருப்பேன்…”
“வீட்ல இருந்து? எப்படினாலும் உனக்கு கல்யானம செஞ்சு வைக்க தான் போறாங்க. சப்போஸ் உனக்கு ஏதாவது ஆம்பிஷன் இருந்து சித்தப்பா அதுக்கு ஓகே சொல்லியிருந்தா நீ மேரேஜ் வேண்டாம்னு சொல்லலாம். ரெண்டுக்கும் வழி இல்லை. இது மட்டுமே வாழ்க்கை இல்லை தியா. மேரேஜ்க்கு பின்னால தான் உண்மையான வாழ்க்கையே ஆரம்பிக்குது…” 
“இப்பவே ஏன் அவசரமா என்னை அனுப்பனும்னு…”
“உனக்கு இப்போன்னு வரன் தேடலை சித்தப்பா. நீ பைனல் இயர் ஜாயின் பண்ணினதுல இருந்தே உனக்கேத்த மாப்பிள்ளை தேடிட்டு தான் இருந்தார். உங்களுக்கு தெரியாது. லாஸ்ட் ஒரு பையன் வந்து பிரச்சனை செஞ்சிட்டு போனானே, அதுல இருந்து உள்ளுக்குள்ள ரொம்ப பயந்து போய் இருக்கார்…”
சந்தியாவும், சந்நிதியும் ஒரே சேர நிமிர்ந்து பார்க்க புகழுக்கு தன் அண்ணன் வசீகரனை தான் சொல்கிறான் என்று புரிந்தது.
“எனக்கு தெரியும் அவன் தான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணான்னு. நம்ம கடைக்கு விளம்பரம் கூட அவன் தான் செஞ்சு தரான். அவனால பிரச்சனை வரும்னு நீ நினைச்சு பயப்படாத. அவன் ரொம்ப நல்ல பையன்…”
புவனேஷ்வரன் என்னவோ வசீகரனை தான் பார்த்துகொள்வதாக சொல்ல சந்தியாவும், புகழும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக்கொள்ள சந்நிதியோ தான் வசீகரனிடம் பேசி அவனை தங்கள் குடும்பத்திலிருந்து அப்புறப்படுத்திவிட்டதாக நினைத்திருக்க உண்மை தெரிந்தவர்கள் அர்த்தம் பொதிந்த பார்வையை பரிமாறிக்கொண்டனர்.
“இப்போ சொல்லு உனக்கு ஓகே தானே?…” அண்ணனாய் அக்கறையுடன் கேட்க சரி என்பதை போல தலையசைத்தாள் சந்தியா.
“குட், இனி கல்யாணப்பொண்ணா சந்தோஷமா இரு. வெள்ளிகிழமை பார்க்க வராங்க. உனக்கு என்ன வேணும்னு சொல்லு உன் அண்ணி வாங்கிட்டு வந்து தருவா…”
“இந்த விஷயம் அண்ணிக்கு தெரியுமா? இதை நீ அண்ணிக்கிட்ட சொல்லிட்டியா?…” புகழ் அண்ணனை மடக்க அவனை முறைத்தவன்,
“நான் சொல்லிட்டேன்ல, போதும்…” என கடுப்புடன் எழுந்து செல்ல,
“ஏன்டா அவனே எப்போவாச்சும் தான் அண்ணன்னு நடந்துப்பான். அப்பவும் வந்து அவனை வம்பு பேசிட்டு கிண்டல் பன்றீங்க?…” ராதா புகழின் முதுகில் ஒரு அடியை வைக்க சந்தியாவும், சந்நிதியும் கலகலவென்று சிரித்தனர்.
வெகு நாட்களுக்கு பின்னர் சந்நிதியின் மலர்ந்த புன்னகை. அழகாய் அந்த நிமிடங்களை புகைப்படங்களாக எடுத்துக்கொண்ட புகழ் மறவாமல் வசீகரனுக்கு அனுப்பிவைத்தான்.
வசீகரனின் வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் வந்ததற்கான ஒலி ஒலியெழுப்ப எடுத்து கொண்டுவந்து சூர்யா தந்தான்.
“இந்த பேக்ரவுன்ட்க்கு இந்த தீம் செட் ஆகாது சூர்யா. வேற யோசிக்கனும். இந்த மாடலுக்கான ட்ரெஸ் கூட வேற இருக்கலாம்…” பேனாவை நெற்றி பொட்டில் தட்டியபடி யோசனையுடன் மானிட்டரை பார்த்தபடி அவன் இருக்க,
“நீ தான் டிஸைன் பண்ணின. ட்ரெஸ் சூஸ் அனு. நீ சொல்றதை விஷுவல்ல நான் கொண்டுவர போறேன். இதுல என்ன மாத்தனும்னு என்னை கேட்டா?…” என கையை விரித்தவன் வசீகரனிடம் மொபைலை கொடுத்துவிட்டு மானிட்டரை உற்று பார்க்க ஆரம்பித்தான்.
புகழிடமிருந்து போட்டோஸ் வந்திருக்கிறது என தெரிந்தவன் சந்நிதியின் புகைப்படமாக தான் இருக்கும் என்ற நிச்சயத்துடன் திறந்து பார்த்தான்.
அங்கே விரிந்த கூந்தலும் வொய்ன் கலர் டாப்பும், வொய்ட் கலர் ஸ்கர்ட்டும் அணிந்து கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவளின் முகத்தில் அந்த புன்னகை நிறைந்திருந்தது.
விரிந்த இதழ்களுடன் கண்களும் சேர்ந்து புன்னகைக்க அப்புன்னகை இவனை எதுவோ செய்ய அவளின் கண்களை மட்டும் இன்னும் பெரிதாக்கி பார்த்தான். இன்றுவரை அதில் இருப்பது என்னவென்று தெரியவில்லை அவனுக்கு.
ஆனால் அந்த கண்களும் அவளின் முகமும் அவனை இன்னும் முழுதாய் உறங்கவிடாமல் பேரவஸ்தையை கொடுத்துக்கொண்டிருந்தது.
மீண்டும் முழு முகத்தையும் கொண்டுவந்தவனின் விரல்கள் அவளின் கண்களையும் இதழ்களையும் விட்டு நகராமல் வருடிக்கொண்டே இருக்க அந்த அறையும் அதன் நடுவே அழகென இவளும் மனதினுள் எதுவோ பளிச்சிட,
“சூர்யா பேக்ரவுண்டை பீச் வியூக்கு மாத்து. சைட் ஸ்லைட்ஸ் ரெட்டாங்கில் வேண்டாம் ட்ரையாங்கிள் வை…” என்றவன் அவனையும் நகர்த்திவிட்டு தானே தனக்கு தோன்றியவற்றை மாற்றி அமைத்தான்.
இப்பொழுது தான் முழுமையான திருப்தி அவனின் முகத்தில். சிரிப்புடன் அவனின் செய்கையை பார்த்தபடி சூர்யா இருக்க,
“பொண்ணோட ட்ரெஸ் சேரியா மாத்து. வொய்ன் கலர் சர்ட்டின் கிளாத்ல டிஸைனர் சேரியா இருந்தா பெட்டர்…” என்று சொல்ல,
“ஒரு போட்டோவுல இத்தனை மாத்திட்டியேடா. உனக்கு லவ் பண்ண அந்த மனுஷன் போட்டோ அனுப்பினா நீ பிஸ்னஸ் மூளை. பாவம் அந்த அப்பாவி புள்ள. உன்கிட்ட சிக்கிட்டு சீரழியுது…” என புகழை நினைத்து உச்சுக்கொட்ட அவனை முறைத்தவன்,
“ஒழுங்கா சொல்றதை செய். எல்லா ஏற்பாட்டையும் முடி. ஒரு ரிகர்ஸல் பார்த்திடலாம்…” என்று அவனை அனுப்பிவிட்டு மீண்டும் அவளின் போட்டோவை எடுத்து பார்த்தவன் ஒரு புன்னகையுடன் அம்பிகாவிற்கு அனுப்பிவிட்டு அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

Advertisement