Advertisement

தீண்டல் – 11
         புகழ் நீதிமாணிக்கத்துடன் அமர்ந்திருந்தது எத்தனை நேரமென்றே தெரியவில்லை. ஆனால் அவரிடம் அவனோ, அவனிடம் அவரோ எதுவும் பேசவில்லை. 
வேறு ஒருவராக இருந்தால் எப்படியோ போ என்று வெறுத்து சென்றுவிடலாம். ஆனால் இத்தனை பேசியும் சந்நிதியின் தவிப்பு நீதிமாணிக்கத்தை கட்டிப்போட்டது.
பெற்றவர்கள் இருந்து எங்களை அநாதையாக விட்டுவிட்டீர்களே என்கிற அந்த வார்த்தை அவரை அங்கிருந்து செல்லவிடவில்லை. அதையும் தாண்டி தன் தம்பியின் மீதான அன்பு கொஞ்சமே கொஞ்சம் ஒட்டிக்கிடந்தது அவரின் அடிமனதினுள். 
ஒரு மணி நேரம் கடந்த பின் புகழின் செல்போன் அழைப்பொலியில் மீண்ட நீதிமாணிக்கம்,
“எடுத்து பேசு, நான் உள்ள போய் புள்ளைங்க எப்படி இருக்காங்கன்னு பார்த்துட்டு வரேன்…” என சொல்லி எழுந்து செல்ல புகழ் அழைப்பை ஏற்றான். வசீ தான் அழைத்திருந்தது. எடுத்த எடுப்பிலேயே காய ஆரம்பித்தான் அவன்.
“நானா போன் பண்ணினாதான் என்ன விஷயம்னு சொல்லுவியோ? நீயா போன் பண்ண மாட்ட அப்படித்தானே? நீங்க எல்லாரையும் பார்த்தீங்களா என்ன ரியாக்ஷன் என்னன்னு நானா தான் கேட்கனுமா?…” என படபடவென பொரிய திகைத்துபோனான் புகழ்.
வசீகரன் இத்தனை கோபிப்பான் என்று தெரியவில்லை அவனுக்கு. இங்கே தந்தை, தாயை ஆறுதல் படுத்த நினைத்திருக்க அங்கு ஒருவன் காத்திருப்பான் என்கிற நினைவே இல்லாமல் போயிற்று.
“ஓஹ் காட், ஸாரி ஸாரி வசீகரன். நான் இங்க…” என தடுமாற,
“ப்ச், அதை விடு. உன் சித்தப்பாவை பார்த்தேங்களா? என்ன பேசினார்?…” என இலகுவான குரலில் நேரடியாக விஷயத்திற்கு வர நடந்ததை பகிர்ந்தான் புகழ்.
“அவர் பேச பேச நீங்க பார்த்துட்டு கொஞ்சிட்டு வந்தீங்களாக்கும்? வெளில வந்து ஒரு அழுகாச்சி படம் வேற? உன் அப்பா  மூத்தவர் தானே? பளார்ன்னு ஒன்னு விட்டு அடக்க முடியாதா?…”
“வசீ?…” என அலறினான் புகழ்.
“உங்ககிட்ட பேசி ஒரு யூஸும் இல்லை. நீ போனை வை. நான் திரும்ப கூப்பிடறேன்…” என்று கட் செய்தவன் உடனடியாக டாக்டருக்கு அழைத்துவிட்டான்.
இப்படி ஏதாவது நடக்கும் என்பதால் இரண்டு நேர ட்யூட்டி டாக்டர்ஸ் நம்பர், நர்ஸ் நம்பர் என அனைத்தையும் சேகரித்ததோடு அவர்களிடம் நட்பையும் ஏற்படுத்திகொண்டான்.
“டாக்டர் நான் வசீகரன் ப்ரம் சென்னை…” என்றதுமே அவருக்கும் தெரிந்துவிட்டது யாரென்று.
“எஸ், சொல்லுங்க வசீகரன். உங்க பேமிலி பர்பெக்ட்லி ஆல்ரைட்…” 
அவன் கேட்பதற்கு முன்பாகவே அவர் சொல்லிவிட இவனுக்கு இதழினில் புன்னகை அவர் சொல்லிய உங்கள் குடும்பம் என்னும் விளிப்பில்.
“தேங்க் யூ டாக்டர். நீங்க எனக்கு பெரிய ஹெல்ப் செஞ்சிருக்கீங்க…”
“இதை போய் பெரிய விஷயம்னு சொல்றீங்க? இது எங்களால முடிய கூடிய உதவி தான். எனிவே யூ ஆர் வெல்கம்…” 
“அப்படியே இன்னொரு உதவியும் செய்யனும். இதுவும் எங்க பேமிலிக்காக…”
“எங்களால முடியும்னா கண்டிப்பா செய்வோம்…”
“முடியும் தான். என்னோட மாமனார் ஹெல்த் கண்டிஷன் இப்போ எப்படி இருக்கு?…”
“ரொம்பவே நல்லா இருக்கார். கால்ல, தலையில நல்ல அடி. உங்களுக்கு தான் தெரியுமே. அதிர்ச்சியில் அவர் ஆழ்ந்த மயக்கத்துக்கு போனதால தான் சிரமமா இருந்தது.  நினைவு திரும்பாம கோமாவுக்கு போக கூடிய அபாயாம் இருந்தது. இப்போ நத்திங் டூ வொர்ரி. ஒருத்தர் உதவி இல்லாம எழுந்து நடக்க முடியாது இப்போதைக்கு. அவ்வளோ தான்…”
“அப்போ அவர் டென்ஷன் ஆனா பரவாயில்லைன்னு சொல்றீங்க அப்படித்தானே?…”
“வாட்?….” என அதிர்ந்தார் டாக்டர்.
அவரின் அதிர்ச்சியை குறைத்தவன் தனக்கான உதவியை கேட்டு அதற்கு ஆவன பேசிவிட்டு மீண்டும் புகழை அழைத்தான்.
“கோவம் குறைஞ்சிடுச்சா?…” எடுத்ததும் புகழ் கேட்க,
“உன் சொத்தப்பா இன்னும் ஒரு மணி நேரத்துல கண்ணு முழிச்சிடுவாராம். முழிச்சதும் அவர் யாரையாச்சும் கூப்பிடுவாரு. உடனே போய் நின்னுடாத. உங்கப்பாவையும் சேர்த்துதான்…”
“நாங்க எங்க போக? எங்களை தான் வர கூடாதுன்னு சொல்லிட்டாரே. வார்ட்பாய், நர்ஸ் யாரையாவது கூப்பிடுவார்…” பல்லை கடித்துக்கொண்டு புகழ் பேச,
“முழுசா சொல்ல விடு முதல்ல…” என வசீயும் கடுப்பாக புகழ் அடுத்த வார்த்தை பேசவில்லை.
“நான் டாக்டர்கிட்ட பேசிட்டேன். மாம்ஸ் அவசரத்துக்கு யாரும் வரமாட்டாங்க. ஒரு கால்மணி நேரம் பொறுத்து நீங்க உள்ள போய் பாருங்க…”
“இது பாவமில்லையா வசீ?…” புகழ் பதரிவிட்டான் அவ்சீகரன் செய்துவைத்திருக்கும் வேலையில்.
“உங்க சித்தப்பு மாதிரி ஆளுங்களை இப்படித்தான் டீல் பண்ணனும். படுத்த படுக்கையில் அவசரத்துக்கு ஆளில்லாம அவஸ்தை படும் போதுதான் உறவுகளோட அருமை புரியும். அனுபவிக்கட்டும் கொஞ்சம் நேரம் கஷ்டப்பட்டா தப்பே இல்லை…”
“வசீ மனசு கேட்கலை…”
“இதை விட்டா எப்பவும் முனீஸ் சனீஸ் தான் உன் சித்திக்கும், அவங்க பெத்த பொண்ணுங்களுக்கும். எனக்கு ஏழரை சனீ தான். அப்பறம் நான் ரொம்ப வில்லத்தனமா யோசிச்சு தான் மேரேஜ் பண்ணிக்கனும். இதெல்லாம் தேவையா மேன்?….” என சீரியஸாக பேச,
“இப்ப பன்றது மட்டும் ஹீரோ தனமாவா இருக்கு? சரியான ஆன்டி ஹீரோ வேலை…” என முணுமுணுக்க,
“பரவாயில்லை. உன்னோட காம்ப்ப்ளிமென்ட் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஓகே நாங்க ஊருக்கு கிளம்பனும். ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்ததும் குளிச்சுட்டு படுத்தவன் முழிச்சு பார்த்தா நீ கால் பண்ணவே இல்லை. அதான் நானே கூப்பிட்டு கத்திட்டேன்…”
“இட்ஸ் ஓகே, எப்போ கிளம்பறீங்க?….”
“இப்போ இப்பவே கிளம்பறோம். எல்லாருமே ரெடி. உங்க சித்தி வந்தாச்சா? நான் போன் செய்யவே இல்லை…” 
“இல்லை இன்னும் அரைமணி நேரம் மேல ஆகும்னு சொன்னாங்க. நீங்க பேசிட்டு வைக்கவும் தான் நான் அவங்களுக்கு கூப்பிட்டேன்…”
“ஓகே, வரவும் எனக்கு மெசேஜ் பண்ணிடுங்க…” என்றவன்,
“நிதியை பார்த்துகோங்க. நீங்க காஞ்சிபுரம் வரதுக்குள்ள அவளுக்கு வீட்டுக்கே ட்ரீட்மென்ட் பண்ண பெஸ்டா ஒருத்தரை நான் பார்த்திடறேன்…” என்று சொல்லிவிட்டு கிளம்ப ஆரம்பித்தான் வசீகரன்.
காலையிலேயே குளித்துவிட்டு வந்து படுத்ததால் இப்பொழுது முகம் மட்டுமே கழுவி வேறுடை மாற்றிக்கொண்டு தன்னுடைய பேகை எடுத்துக்கொண்டு வெளியேறினான்.
மற்றவர்கள் ரிசப்ஷனில் இருக்க இவனும் சேர்ந்து கிளம்பியவன் ரூம் கீயை பேலன்ஸை செட்டில் செய்துவிட்டு அவர்களை பார்க்க ஏற்கனவே குகன் இவன் வரவுமே கிளம்பி வேனில் ஏறியிருந்தார்.
அம்பிகா முறைப்புடன் இருக்க அனுவும், ரவியும் சூர்யாவுடன் மற்ற லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு முன்னே சென்றனர்.
“ம்மா…” என அம்பிகாவை பார்க்க,
“உங்கப்பா கோவமா இருக்கார். நீதான் பேசனும்…” 
“நீங்க பார்த்துக்கறதா சொன்னீங்க. இப்ப என்னை பேச சொன்னா?…”
“என்னை விட நீ நல்லா சமாளிப்பன்னு நான் தான் கண்ணால பார்த்துட்டேனே. உனக்கு ஓகே சொன்னதே இப்ப பெரிய விஷயம். இப்ப உன் அப்பாவை நீ ஓகே பண்ணு. இதை விட என்ன வேலை உனக்கு?…” 
அசால்ட்டாய் அவன் தலையில் குகனை சரிக்கட்டும் பொறுப்பை ஏற்றிவிட்டு வேனை நோக்கி செல்ல அவரின் பின்னாலேயே வந்தவன்,
“இது அநியாயம்…”
“சொல்லிக்கோ. என்ன ப்ளான் நீ செஞ்சது எல்லாம் சூர்யா சொன்னான். ஆனா நீ பெரியாளு, அந்த மனுஷனை நீ தான் காப்பாத்தினன்னு சொல்லிட்டு முன்னாடி போய் நிக்காம இருந்தது…” என்று சிரிக்க,
“ம்மா…” என என்று வசீகரன் எரிச்சலாக,
“போடா…” என்று வேனில் ஏறிக்கொண்டார். 
பெரும் தலையாட்டலுடன் தானும் ஏறியவன் முன்னிருக்கையில் குகன் அமர்ந்திருக்க ரவியின் பக்கத்தில் அமர்ந்திருந்த அம்பிகா அவரருகே அவனை அமர சொல்லி கண் காண்பிக்க அதற்கும் முறைத்துவிட்டு கடைசி இருக்கையில் வந்து கால் நீட்டி வசதியாக அமர்ந்துகொண்டான்.
புகழிடம் இருந்து போன் வரும் என்பதால் பின்னால் இருந்தே பேசிக்கொள்ளலாம் வீட்டிற்கு சென்று குகனிடம் பேசலாம் என்று விட்டுவிட்டான். கண்களை மூடி பின்னால் தலையை சாய்த்துக்கொண்டவன் புகளின் போன் காலுக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.
“இன்னும் கொஞ்சம் சாப்பிடும்மா. மாத்திரை போடனும்ல…” சந்தியாவிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார் கோமதி.
“போதும் பெரிம்மா, வாமிட் வர மாதிரி இருக்கு. என்னால முடியலை…” 
சந்தியா அதற்கு மேல் அவரிடம் கெஞ்சிக்கொண்டிருக்க சந்நிதி இதை மெல்லிய சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“போதும் பெரிம்மா, ஒரே நாள்ல மொத்த பாசத்தையும் காமிச்சு ஈக்வல் பண்ணிட பார்க்கறீங்களா?…” என்று கிண்டல் பேச,
“அவ பயந்துபோய் இருக்கா உன் அப்பா பண்ணினதுல. அதான் சாப்பாடு இறங்கலை. நீ இரு, இவளுக்கு முடிச்சுட்டு வரேன்…” என்று அதட்டிவிட்டு சந்தியாவின் புறம் திரும்ப நீதிமாணிக்கம் இவற்றை பார்த்துக்கொண்டிருந்தார்.
“கொஞ்சம் சாப்பிடுங்க புள்ளைங்களா. அவ உங்கம்மாவை வேற பார்க்க போகனும்…” அவர் சொல்ல,
“நானும் அம்மாவை பார்க்கனுமே…” சந்நிதி கேட்க,
“இன்னைக்கு ஒரு நாள், நாளைக்கே இந்த ரூம்ல அம்மாவை ஷிப்ட் பண்ணிடலாம் நிதி. நர்ஸ் சொல்லிட்டு போச்சு…” கோமதி சொல்ல,
“நம்ம ஊருக்கு எப்ப போவோம் பெரியப்பா?. எனக்கு இங்க வேண்டாம். ஊருக்கு போகனும்…” சந்தியா சொல்ல,
“டாக்டர்கிட்ட பேசிட்டு போவோம்…” என்றதோடு புகழை தேடி சென்றுவிட்டார் நீதிமாணிக்கம்.
“என்னப்பா கண்ணு முழிச்சுட்டானா? யாராச்சும் வந்து பார்த்தாங்களா?…” என கேட்கும் பொழுதே உள்ளே இருந்து முனீஸ்வரனின் குரல் கேட்டது.
“என்னடா அவன் கத்திட்டு இருக்கான்? எப்ப இருந்து கூப்பிடறான்?…” என்று பதற,
“அப்பா இப்பதான் டாக்டர் வந்து பார்த்துட்டு போனார்…” என சொல்ல நர்ஸ் உள்ளே சென்றான். அவனின் பின்னையே நீதிமாணிக்கம் செல்ல,
“அப்பா இருங்கப்பா, ஒரு நிமிஷம்…” என பின்னால ஓடினான் புகழ்.
“என்னத்துக்கு சார் கத்திட்டே இருக்கீங்க? இப்ப தான வந்து பாத்துட்டு போனாரு டாக்டர்…” என நர்ஸ் சத்தம் போட,
“எனக்கு பாத்ரூம் போகனும். ஆம்பளை யாரையாச்சும் வர சொல்லும்மா…” அவஸ்தையான முகத்துடன் முனீஸ்வரன் கத்தினார்.
“இவ்வளோ தானா? இருங்க பெட்பேன் வைக்கறேன்…” என சொல்லி அதை எடுக்க,
“இல்ல இல்ல, எனக்கு இது வேணா. நான் பாத்ரூம் போகறேன்…”
“என்ன இம்சையா போச்சு உங்களோட. இருங்க, வார்ட் பாய் யாரையாச்சும் வர சொல்லுறேன்…” என்று அலட்சியமாக சொல்ல,
“ஆடி அசஞ்சு போகாம வேகமா போய் வர சொல்லும்மா…” கோபமாக முனீஸ்வரன் வழக்கமான தன் சாட்டை நாக்கை சுழற்ற,
“என்ன என்ன சொன்ன? யோவ் பெருசு, பார்த்து பேசு. நான் என்ன நீ வச்ச ஆளா? இதை எல்லாம வேற எங்கியாச்சும் வச்சுக்க. ஆடி அசஞ்சாமில்ல. இதென்ன உன் அப்பன் கட்டின ஆஸ்பத்திரியா? இது கவர்மென்ட் ஆஸ்பத்திரி. இப்படித்தான் இருக்கும். உன் அதிகாரத்த இங்க கட்டாத…”
“என்ன மேடம் இது? முடியலைன்னு சொல்ற பேஷன்ட்கிட்ட  இப்படித்தான் பேசுவீங்களா?…” என நீதிமாணிக்கம் கோபமாய் கேட்க அதுவரை அவர்களை கவனியாத முனீஸ்வரனின் முகம் மாறிவிட்டது.
கோபத்தை காட்ட கூட முடியாத அசாதாரண னியாளியில் இயற்கை அவரை வஞ்சிக்க படுக்கை அசௌகரியமாய் உணர அவரின் முகம் ரத்த நிறம் கொண்டது. 
“பின்ன என்ன ஸார்? அவர் சொன்னாரேன்னு கூப்பிட தானே போனேன். இப்படியா பேசுவார்? அவர் என்னை பேசாம இருந்தா நான் ஏன் திட்ட போறேன்…” நர்ஸ் பேசியதில் இருந்த நியாயமும் தெரிய 
“நீங்க போங்க, போய் வர சொல்லுங்க…” என்ற புகழ் முனீஸ்வரன் எதுவும் திட்ட போகிறாரா என்று பார்க்க அவரோ முகத்தை வேறு புறம் திருப்பி இருந்தார்.
அவன் அருகில் நெருங்க அவரின் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தது. அவனின் மூக்கை துளைக்கும் அந்த வாடையை நுகர்ந்தவன்,
“சித்தப்பா வாங்க நான் வாஷ்ரூம் தூக்கிட்டு போறேன்…” என்று அவரின் கையை பிடிக்க அவமானத்தில் குறுகிபோனார் முனீஸ்வரன்.
“வெளில போங்க. யாரும் தூக்க வேண்டாம். போங்கன்னு சொல்றேன்ல…” என்று சொல்லியவரின் குரலும் என்னவோ போல் இருக்க,
“டேய் ஈஸ்வரா, ஏன்டா சங்கட்டபடர? என் கிட்ட என்னடா உனக்கு கூச்சம்? இவன் உன் மவன்டா…” நீதிமாணிக்கத்திற்கு தன் தம்பியை அந்த நிலையில் பார்க்கமுடியவில்லை.
முனீஸ்வரனின் முகம் மீண்டும் மாற உடலில் ஒருவித இறுக்கம் படர கண்கள் கலங்கி துளி நீர் வெளியேறிவிட்டது.
நீதிமாணிக்கத்தின் முகத்தை கூட பார்க்காமல் அவரை தாண்டி அறைகதவில் யாராவது வருகின்றனரா என்று பார்த்தார். யாரும் வரவதை போல தெரியவில்லை.
“போங்க, போய்டுங்க. உங்க உதவி தேவையில்லை. போய்டுங்க…” முன்பை போல குரலில் கோபமோ வேகமோ இல்லை. 
தன் நிலையை எண்ணி வெட்கியபடி அழுகும் குரலில் அவர்களை வெளியேற சொன்னாலும் உடல் உபாதை நிற்பதை போல தெரியவில்லை.
“ஏன்டா என் கையாள எத்தனைவாட்டி உன்னை குளிப்பாட்டி விட்டிருக்கேன். இப்ப என்னடா வேணும்னா நல்லாகிட்டு வந்து என்னை இன்னும் நாலுவாட்டி கூட அடிச்சுக்கோ. போக சொன்ன பார்த்துக்கோ…” என்ற நீதிமாணிக்கம்,
“புகழ் தூக்குடா இவனை…” என்று ஒரு கை பிடிக்க புகழ் முனீஸ்வரனின் கையில் ஏற்றிகொண்டிருந்த செளைனை நிறுத்திவிட்டு லாக் செய்து,
“நீங்க தள்ளுங்கப்பா, பாத்ரூம் டோர் ஓபன் பண்ணுங்க. நான் தூக்கிட்டு வரேன்…” என்று அலேக்காய் முனீஸ்வரன் திமிற திமிற தூக்கிவிட்டான். 
“விடுடா, விடுடா…” என்று அவமானத்தில் குறுகி போக,
“பேசாம இருக்க மாட்டீங்க? சும்மா…” என்ற அதட்டலில் அதிசயமாய் அவரின் வாய் மூடிக்கொண்டது.
“அப்பா நான் இவரை கழுவிடறேன். ஸாரி, குளிச்சு விட்டுடறேன். நீங்க போய் உங்க வேஷ்டி எடுத்துட்டு வாங்க…”
“ஹாஸ்பிட்டல் ட்ரெஸ்….” என முனீஸ்வரன் முணக,
“அப்பா நீங்க போய் எடுத்துட்டு வாங்க. அப்டியே அங்க இருக்கற ஸ்டூலை கொண்டுவந்து இங்க போட்டுட்டு போங்க…” என அனுப்பியவன் ஸ்டூல் தரவும் தன் மேல் சாய்ந்தபடி முனீஸ்வரனை அமர்த்தினான்.
அங்கே சுடுநீர் எந்த குழாயில் வருகிறது என்று சரிபார்த்து அளவான சூட்டில் நீரை கலந்தவன் அவரின் உடை அனைத்தையும் களைந்துவிட முகம் குனிந்துகொண்டார் முனீஸ்வரன்.
ஒரு கலவையான மனநிலை அவரது. இந்த நிமிடம் உதவ வேறு யாரும் இல்லை என்கிற நிதர்சனம் உணர்த்திய தான் விளைந்த சுயநலமே விஞ்சி இருந்தாலும் கொஞ்சம் நீதிமாணிக்கத்தின் கேன்சல் வேறு.
அந்த நிலையிலும் தான் அவரை தேடி போகவில்லையே என்கிற லேசான கர்வம் வேறு இருந்ததென்னவோ உண்மை. 
இப்போதைக்கு வேறு யாரும் தங்களை பார்க்க போவதில்லை என்பதும் உண்மை. அதையும் தாண்டி அவர்களின் அனுசரணை மிக லேசாக மனதை தொட்டிருந்ததும் அப்பட்டமான உண்மை. ஆனால் அதனை காட்டிகொண்டால் அவர் முனீஸ்வரன் அல்லவே.
புகழ் இதை எதையும் கவனிதாயவனாய் அவரின் மேல் தண்ணீரை ஊற்றி கழுவிவிட்டான்.
அவன் ஊற்றிய நீரில் கசிந்த விழிகளும் கலந்துகொண்டன. ஆம் கலங்கித்தான் போனார் முனீஸ்வரன் இப்படி ஒரு நிலை தனக்கு வரும் என்று என்றுமே நினைத்ததில்லை. 
அதிலும் தான் உதாசீனம் செய்த தன் அண்ணன் மகனே தாய் போல தனக்கு பணி செய்வதில் அவரின் இரும்பு மனது கொஞ்சமேனும் இளக தான் செய்தது.
“புகழ்…” வெளியில் நீதிமாணிக்கம் அழைக்க,
“அப்பா அந்த டவலை என்கிட்டே குடுங்க. பவுடர் கொண்டுவந்தீங்களா?…” என கேட்டு வாங்கிக்கொண்டான்.
அவருக்கு துடைத்துவிட்டு வேறு வேஷ்டி மாற்றி உடலுக்கு பவுடர் போட்டு பூசிவிட்டு தலையை நன்றாய் துடைத்துவிட்டான் புகழ்.
அதற்குள் அறையில் இருந்த பெட் மாற்றப்பட்டிருந்தது. அவருக்கு வேறு உடையும் வழங்கப்பட புகழ் இதுவே இருக்கட்டும் என்றுவிட்டான். 
முனீஸ்வரன் ஒரு வார்த்தையும் பேசவில்லை. யாரையும் பார்க்கவும் இல்லை. டாக்டர் வந்து செக் செய்து போன பின்னால் அவரை மீண்டும் படுக்க வைத்த புகழ்,
“நாங்க இங்க தான் இருப்போம் சித்தப்பா, உங்களுக்கு பிடிச்சாலும் பிடிக்காட்டிலும். உங்களுக்காக மட்டும் இல்லை, சித்தி, தங்கச்சிங்களுக்காக. நான் போய் சித்தியை பார்த்துட்டு வரேன்….” என்றவன்,
“அப்பா இங்கயே இருங்க. எதாச்சும் திரும்ப பேசினார்ன்னா கண்டுக்காதீங்க. இல்லைனா அண்ணனா நாலு அரட்டு போடுங்க…” என நீதிமாணிக்கத்திற்கும் சொல்லிவிட்டு அவன் வெளியேற தம்பியை பார்த்தார் அண்ணன்.
அண்ணனின் முகம் பார்க்க விரும்பாமல் கண்களை மூட்டி தூங்குவது போல பாவனை செய்துகொண்டார் முனீஸ்வரன். 
இப்பொழுது அவர்களை வெளியேற்ற சொல்ல ஏனோ வாய் வரவில்லை. மனமும் இல்லை. இந்த சூழ்நிலையை இப்படியே விட்டுவிட்டு பிறகு பார்த்துகொள்வோம் என்ற நினைத்தவரின் மனதில் புகழ் ஏனோ சிறிதாய் இடம் பிடித்திருந்தான்.
வெளியே வந்த புகழ் முதலில் வசீகரனுக்கு அழைத்து நடந்ததை சொல்ல வசீகரனுக்குமே சந்தோஷம்.
“இதை நான் பெசிருந்தேன். இப்ப தானாவே நடந்திருக்கு. இதுல உன் சித்தப்பா நமக்கு வேலையே வைக்காம நர்ஸை சீண்டிட்டார். ஹ்ம்ம் இந்த மனுஷன் கோவத்தால ஒரு நல்லதும் நடந்திருக்கே…” என சிரிக்க,
“இப்போதைக்கு எதுவும் பேசலை அவர்…”
“பேச மாட்டார். ஒரு நாள் படுக்கையில் வாழ்க்கை புரியுதோ என்னவோ அவர் கஷ்டம் அவரையே கஷ்டப்படுத்திருக்கும். இருந்தாலும் கேர்ஃபுல். எப்ப கடிப்பார்ன்னே தெரியாது இல்லையா?…”
“பார்த்துக்கலாம். நெக்ஸ்ட்…” 
“நெக்ஸ்ட் இப்ப எனக்கு ரெஸ்ட். அங்க எல்லாரையும் காஞ்சிபுரம் எப்போ கூட்டி வரலாம்னு பாருங்க. வந்து பேமிலி நார்மல் ஆகவும் சந்தியாவுக்கு ஒரு வழி பண்ணனும்…” என்றவன் வார்த்தையில் ஈசியாக சொல்லிவிட்டாலும் புகழுக்கு அது அத்தனை சுலபமாய் தெரியவில்லை.

Advertisement