Advertisement

தீண்டல் – 10
              இரவு வரை முனீஸ்வரனின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. பாதி இரவுக்கு மேல் நினைவு திரும்பி மீண்டும் மயக்கநிலைக்கு சென்றுவிட்டார். ஆபத்துக்கட்டத்தை தாண்டிவிட்டார் என மருத்துவர் வந்து சொல்லியதும் தான் நிம்மதியானது வசீகரனுக்கு.
பார்கவி இரவில் கண்விழித்து கேட்கவும் சந்தியாவை மெதுவாய் அழைத்துக்கொண்டு சென்று காண்பிக்க வைத்தான் வசீகரன்.
ஆனால் அவர்கள் முன்னிலையில் அவன் தென்படவே இல்லை. சந்தியாவிடமும் முதலிலேயே சொல்லிவிட்டான் அவர்களை காப்பாற்றியது புகழ் தான் என்று யார் கேட்டாலும் சொல்லவேண்டும் என்று.
சந்நிதியும் நடுநிசியை தாண்டவும் தான் கண்விழித்தாள். விழித்தவளுக்கு வலி அதிகமாக தெரிய பல்லைகடித்துக்கொண்டு அடக்கியவள் சந்தியா பக்கத்து இருக்கையில் உறங்குவதை பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் கண்களை மூடிகொண்டாள்.
சந்தியா உறங்குவதையும் அவளின் முகத்தில் இருக்கும் நிம்மதியையும் அந்த இரவு விளக்கொளியிலும் கண்டவள் மனம் அதனை கொண்டே யாருக்கும் பெரிதாய் எதுவும் இல்லை என அனுமானித்தது. அதனால் மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள். 
யாரையும் பற்றி கேட்கவும், பேசவும் தோன்றவில்லை. பிழைத்துவிட்டோமே என்கிற ஆயாசம் தான் முதலில் தோன்றியது.
விடியலை தொடும் முன்னால் புகழ், நீதிமாணிக்கம், கோமதியுடன் வந்துவிட்டான். ஹாஸ்பிட்டல் வாசலில் இவர்களுக்காக வசீகரன் காத்திருக்க உடன் சூர்யாவும் ரவியும் கூட இருந்தனர்.
“என்னாச்சு தம்பி?…”என நீதிமாணிக்கம் அவனின் கையை பிடிக்க,
“ஒன்னும் பயப்படற மாதிரி இல்லைங்க. எல்லாருமே நார்மல் ஆகிட்டாங்க. இனி நீங்க பார்த்துக்கோங்க…” என்றவன் உள்ளே அழைத்து சென்றான் அவர்களை.
ட்யூட்டி டாக்டரை பார்த்து விவரம் சொல்லியவன் மீண்டும் முனீஸ்வரனின் குடும்பம் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றான்.
ஒவ்வொருவரையும் பார்த்துவிட்டு வெளியே வந்ததும் வசீகரனின் கையை பிடித்துக்கொண்டார் நீதிமாணிக்கம். 
“உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு எனக்கு தெரியலை தம்பி. அவன் பேசினதையும் கூட மனசுல வச்சுக்காம நீங்க உதவி செஞ்சது பெரிய விஷயம்…” என உணர்ச்சிபிளம்பாக அவர் சொல்லிகொண்டிருக்க கோமதி கையெடுத்து கும்பிட்டார் அவனை.
“இதுவரை நான் செஞ்சதுக்கு நீங்க நன்றி சொல்லிட்டீங்க. இப்ப நான் நன்றி சொல்றேன். நீங்க செய்ய போற உதவிக்கு…” என்றதும் அவர்கள் புரியாமல் பார்க்க,
“இந்த உதவியை நான் தான் செஞ்சேன்னு நீங்க அவங்க வீட்ல யாருக்கும் சொல்ல கூடாது…” என்றதும் திகைப்பாய் பார்க்க,
“இந்த ஒரு உதவியை நீங்க கண்டிப்பா செய்யனும்…” என சொல்லி புகழை பார்த்தான்.
“நீங்க என்ன சொல்ல வரீங்க?…”
“புகழ் நான் சொல்றதை கவனமா கேளுங்க. இந்த ஆக்ஸிடென்ட்ல இவங்களை நீங்க தான் காப்பாத்தினீங்க. உங்க சித்தப்பாக்கிட்ட இதை தான் சொல்லனும். தற்செயலா கோவிலுக்கு வந்த நீங்க இதை பார்த்துட்டு ஹாஸ்பிட்டல்ல சேர்த்து காப்பாத்தியிருக்கீங்க. புரியுதா?…” 
“ப்ச், இதென்ன முட்டாள்த்தனம்? நீங்க செஞ்சதை நான் செஞ்சதா எப்படி சொல்ல? நான் நான்தான்னு சொன்னாலும் டாக்டர்ஸ், நர்ஸ் இவங்கலாம் இருக்காங்க. அதுவும் இல்லாம இப்ப நீங்க தான் ஹெல்ப் செஞ்சீங்கன்னு சொன்னா சித்தப்பாவுக்கு உங்க மேல் உள்ள கோவம் குறைஞ்சு…”
“ஹ்ம்ம் குறைஞ்சு? சொல்லுங்க…” என கோவமாய் பேசியவன் நீதிமாணிக்கத்தின் அதிர்ந்த முகம் பார்த்து,
“ப்ச், புரிஞ்சுக்கோங்க. இப்ப இங்க நான் அவரோட நல்ல பேரை வாங்கறது முக்கியம் இல்லை. நான் எப்போ வேணா அவரை அப்ரோச் பண்ணிப்பேன். ஆனா நீங்க உங்க பேமிலி இப்போ விட்டா அவரை மலையிறக்க எப்பவும் முடியாது…”
“இங்க பாருங்க, டாக்டர்ஸ், நர்ஸ் இருக்கறது எனக்கு தெரியாதா? எல்லாம் நான் பேசி கரெக்ட் பண்ணிட்டேன். எல்லாரும் ஹெல்ப் பண்ணுவாங்க…” என அவன் சொல்ல,
“சரிங்க தம்பி நீங்க பேசிட்டு இருங்க. நாங்க உள்ள போறோம். பார்கவி கண்ணு முழிச்சிடுச்சு போல…” என கோமதியுடன் நீதிமாணிக்கம் சென்றுவிட,
“மாமனாரை தவிர எல்லாரும் கரெக்ட் பண்ண முடியுது உங்களால…” ஏனோ புகழின் வாயில் அந்த வார்த்தை வந்துவிட வசீகரனின் டென்ஷன் குறைந்து இதழ்களில் மெலிதான புன்னகை நெளிந்தது.
“ஹ்ம்ம் நாள் இருக்கே கரெக்ட் பண்ணிடலாம். அதுக்கு மச்சான் தயவு வேணுமே?…” என அவனும் லேசான மனதுடன் பேச,
“உங்களுக்கு இல்லாத சப்போர்ட்டா? கண்டிப்பா உங்க சைட் தான் நான்…” வசீகரனின் கையை பிடித்துக்கொள்ள,
“தேங்க்ஸ், அதுக்கு முன்னால அண்ணனா லட்சணமா சந்தியாவுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பாருங்க. முக்கியமா மாப்பிள்ளை உங்க சித்தப்பா மாதிரி இல்லாம…”
“ஏன் அதையும் நீங்களே செய்ங்க…”
“அப்ப அண்ணன்னு நீங்க எதுக்கு இருக்கீங்களாம்? என்னோட லைப்க்கு என்ன பண்ணனும்மோ அதை நான் பண்ணிப்பேன். சந்தியாவோட லைப்க்கு என்ன பண்ணணுமோ அண்ணனா நீங்க செய்ங்க. உங்களுக்கு ஹெல்ப் பண்ண நான் தயாரா இருக்கேன்…” 
வசீகரன் தன்னுடைய எல்லையையும் நிர்ணயித்து புகழுக்கான கடமையையும் நினைவுபடுத்தினான். புகழுக்கும் அது புரிந்தது. அதைவிட சொல்லிய விதம் பிடித்தது.
“நீங்க பேசறதை கேட்க நல்லா தான் இருக்கு. ஆனா சித்தப்பா அவ்வளவு சீக்கிரம் மனசு மாற மாட்டார்…” கவலையாக சொன்னவனை பார்த்த வசீகரன்,
“இத கூட உங்களால சமாளிக்க முடியாதா? இந்த ஜென்மத்துல நீங்க இஸ்திரி ஆக முடியாது…” என கேலி சொல்ல,
“என்ன?…” என புரியாமல் பார்த்தான் புகழ்.
“நீங்க உங்க சித்தப்பா பேமிலியோட சேரலைனா உங்களுக்கு கல்யாணமே ஆகாதுன்னு சொல்றான் இவன்…” சூர்யா எடுத்துகொடுக்க,
“அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?…”
“ஏன் இல்லை? அவரோட நீங்க சேர்ந்து என் ரூட் க்ளியர் ஆனா தான் உங்களுக்கு மேரேஜ் நடத்த நடக்க நான் விடுவேன். இல்லைன்னா எனக்கு துணையா காலம் முழுக்க உங்களுக்கு நீங்களே எனக்கு நானே…” என இரக்கமில்லாமல் புன்னகை மாறாமல் சொன்னவனை கண்டவன்,
“உங்களுக்குள்ள இப்படி ஒரு வில்லத்தனமா?…” என சிரித்தான் புகழ்.
“இந்த வாங்க போங்க பார்மாலிட்டீஸ் போர் அடிக்குது பாஸ். நீங்களும் ஐக்கியமாகிடுங்க ஜோதியில. எங்களுக்கும் அப்பப்ப ரெஸ்ட் கிடைக்கும்…” என ரவி சொல்ல,
“சரிதான்…” என்று மற்ற மூவரும் ஒன்றுபோல சொல்ல அங்கே அவர்கள் நட்பு குழுவில் புகழும் இணைந்தான்.
“உங்க ராதா சித்தி இன்னும் ஒருமணி நேரத்துல வந்திருவாங்க. அவங்களுக்கு விஷயத்தை சொல்லிடு புகழ். நான் ஊருக்கு கிளம்பறேன்…” என்றவன் சந்தியாவிடம் பேசியதை புகழிடம் சொல்ல,
“அவ பயத்துல ஏதாவது சொல்லிட்டா?…” புகழுக்கு பதட்டமானது,
“உங்க சொத்தப்பா என்ன புலியா? இந்த உதறு உதறுது உன் உடம்பு…” என கிண்டல் பேச,
“சொத்தப்பாவா?….” புகழ் அதற்கும் திகைக்க,
“அட ஆமாய்யா, அதை விடுங்க. தெரிஞ்சா நல்லதுன்னு நினைச்சுக்கோங்க. அதுக்கும் ஒரு ப்ரீப்ளான் பண்ணிக்கலாம்…” என அசால்ட்டாய் சொல்லியவன் சந்நிதியை பார்த்துக்கொள்ளுமாறு மீண்டும் சொல்லிவிட்டு கிளம்பினான்.
அவன் அங்கிருந்து செல்லவும் உள்ளே திரும்பிய புகழ் அங்கே நீதிமாணிக்கம் நிற்பதை அதிர்வுடன் கண்டான். 
“எங்க அவங்க எல்லாம்?…” என சாதாரணமாக கேட்கவும் அப்போதுதான் உயிரே வந்தது அவனுக்கு. 
எத்தனை தான் இருந்தாலும் நீதிமாணிக்கம் தங்களின் திட்டத்தை வரவேற்கமாட்டார். புரிந்துகொள்ளவும் மாட்டார். நிச்சயம் தன்னை உதவவிடவும் மாட்டார் என்பது நிச்சயம். அதனை கொண்டு அவருக்கு தெரியவேண்டாம் என்றே நினைத்தான் புகழ்.
“அந்த பசங்க எங்கன்னு கேட்டா ஏன் இப்படி நிக்கிற?…” என தந்தை அழுத்தமாக கேட்க,
“இல்ல கிளம்பிட்டாங்கப்பா. அவங்களுக்கு நேரம் ஆகிடுச்சாம்…” 
“ஹ்ம்ம் இருந்து அவன் கண்ணு முழிக்கவும் பார்த்துட்டு கூட போய்ருக்கலாம்…”
“இல்லைப்பா, வசீகரன் அதை விரும்பலை. ஒருவேளை அவர் தான் காப்பாத்தினதா தெரிஞ்சா சித்தப்பாவுக்கு இன்னும் கோபம் அதிகமானா?…”
“இவன் எவன்டா இவன் கிறுக்கன்? காப்பாத்தினா நன்றி தானே வரும். கோவம் ஏன் வரனும்?…”
“சாதாரண மனுஷன்னா நன்றி வரும். உங்க தம்பிக்கு கோவம் தான் வரும்ப்பா. வேணும்னா பாருங்க நாம தான் ஹெல்ப் செஞ்சோம்னு தெரிஞ்சா அதுக்கும் கூட கோவப்படதான் செய்வாரு…”
அடக்கமான குரலில் புகழ் சொல்லியதில் இருந்த உண்மை நீதிமாணிக்கத்திற்கும் புரிந்தது. முனீஸ்வரன் அப்படி செய்யகூடிய ஆள் தான் என நினைத்தார்.
“பாரு சித்தி பேசறாங்களாப்பா?…”
“ஹ்ம்ம், இன்னும் சரியா பேச முடியலை. எல்லாரும் நல்லா இருக்காங்களான்னு கேட்டா. அவ்வளோ தான். பயப்படறா நாம இருக்கறதை பார்த்து. அதுலயே பிபி அதிகமாகிடுச்சு…”
கவலையுடன் சொல்ல புகழுக்கு கஷ்டமாக போனது. இப்படி எத்தனை நாள் தான் பயந்து பயந்து ஒதுங்க? வசீகரன் சொல்லியது போல இனி முனீஸ்வரன் விலகினாலும் இழுத்துபிடித்துவிட வேண்டும் என முடிவெடுத்தான் புகழ்.
சந்தியா எழுந்து வந்து சந்நிதியின் அருகில் அமர மெதுவாய் கண்விழித்தவள் சோபையாய் புன்னகைத்தாள்.
“எப்படி இருக்க தியா?…” என கேட்கவும் சந்தியாவின் கண்களில் கண்ணீர்.
“உனக்கு வலிக்குதா நிதி?…” என அவளின் கையையும் காலையும் தடவி பார்க்க சலனமின்றி தன் அக்காவை பார்த்தாள் சந்நிதி.
“கேட்கறேன்ல…”
“அம்மா எங்க இருக்காங்க தியா? நான் பார்க்கனும்…” என சொல்லும் பொழுதே புகழ் வந்துவிட அவனின் பின்னால் நீதிமாணிக்கமும் கோமதியும்.
“என் கண்ணுங்களா?…” என்கிற கேவலுடன் அவர்களை வந்து அணைத்துக்கொண்டார் கோமதி.
சந்தியா அவருடன் இணைந்து அழ புகழும் நீதிமாணிக்கமும் பார்த்தபடி நின்றனர். புகழ் சந்நிதியையே தான் பார்த்தான்.
வாய்விட்டு அழவே இல்லை. கோமதி அணைத்த வேகத்தில் நிச்சயம் அவளுக்கு வலி எடுத்திருக்கும். ஆனால் முகம் சுருங்கவே இல்லை. கண்களை உயர்த்தி இவனையும், தன் பெரிய தந்தையையும் பார்த்தவள்,
“அப்பா வரதுக்குள்ள கிளம்புங்க…” என்றாள். சந்தியாவிற்குமே அப்பொழுது தான் உரைக்க கோமதியை விட்டு விலகி நிற்க அவரின் அழுகை அதிகமாகியது.
“என் பொண்ணுங்க என்னை போக சொல்லுந்துங்களே? இப்படி பார்க்கவும் பார்த்துட்டு விட்டுட்டு போகவும் தானா நான் வந்தேன்?…” என்று சந்நிதியின் கட்டிலின் கீழேயே அமர்ந்து அழ ஆரம்பித்துவிட்டார்.
“நாங்க போய்ட்டா இங்க உங்களுக்கு யார் துணையா இருப்பா? அவசரம்ன்னா யார் பார்த்துப்பா?…” புகழ் கேட்க,
“நீங்க பொறந்து வளர்ந்த ஊர்ல தான் நாங்களும் இத்தனை வருஷமா இருந்தோம். அப்பா எங்களை நாங்க தான பார்த்துக்கிட்டோம். இப்பவும் அதே மாதிரி இருந்துக்கறோம். இன்னைக்கு நீங்க பார்ப்பீங்க. அப்பா திட்டவும் போய்டுவீங்க. திரும்ப நாங்க தனியா தான் இருக்கனும். போங்க…”
சந்நிதி தன் கழுத்தை பிடித்துக்கொண்டு படபடவென பொரிய அவளின் கையை பிடித்துக்கொண்டு நின்ற சந்தியா,
“பேசாத நிதி, உனக்கு வலிக்குது தானே? ஏன் கழுத்தை பிடிக்கற? விடு…” என சொல்ல,
“உன் அப்பா திட்டினாலும் நாங்க போகமாட்டோம். இங்க உங்க கூட தான் இருப்போம். போதுமா?…” புகழ் தன் பங்குக்கு கத்த,
“அப்ப சாகக்கிடந்தா தான் சொந்தம்னு கூட இருப்போம்னு வந்து நிப்பீங்க. இத்தனை நாள் எங்க போச்சு இந்த உரிமை? உங்க கண்ணு முன்னால தான நடமாடிட்டு இருந்தோம். அப்பவே வந்து அப்பாக்கிட்ட சண்டை போட்டு விலகி போகமாட்டோம்னு பிடிவாதமா இருந்திருக்கலாம்ல…”
சந்நிதி மீண்டும் பேச நீதிமாணிக்கத்திற்கு அச்சிறு பெண்ணின் ஆதங்கமும் வேதனையும் புரிந்தது.
“அப்படி நீங்க இருந்திருந்தா அட்லீஸ்ட் உங்க எல்லோரோட நாங்க கொஞ்சம் நிம்மதியா இருந்திருப்போம்ல. அம்மாவும் நாங்களும் இத்தனை கஷ்டப்பட்டிருக்க மாட்டோம்ல. அப்பா தான் கோவப்பட்டாருன்னா அவரை நல்லா தெரிஞ்சும் எங்களை அநாதை மாதிரி விட்டுட்டு போய்ட்டு இன்னைக்கு மட்டும் என்னவாம்?…” 
அவளின் குரல் தழுதழுக்க கோமதியின் அழுகை அடங்கி வாய்திறக்கமுடியாமல் அமர்ந்துபோனார். அதற்கு மேலும் தள்ளி நிற்க முடியாத நீதிமாணிக்கம் சந்நிதியின் அருகில் அமர்ந்து,
“மன்னிச்சிடு ஆத்தா. நாங்க விட்டுட்டு போனாலும் உங்கள மறக்கலத்தா. இனி விட்டுட்டு போகமாட்டேன். அம்மால்ல. போமாட்டேன்த்தா உன் பெரியப்பன் போகமாட்டேன்…” என கண்கலங்கி போனார் பெரியமனிதர்.
சந்தியாவை ஒரு கையால் பிடித்துக்கொண்டவர் சந்நிதியிடம் மன்னிப்பை கேட்டு நிற்க அவரின் மேல் சாயமுடியாமல் உதட்டை கடித்துக்கொண்டு அழுகையை அடக்கினாள் சந்நிதி.
“நிதி?…” அவளருகே வந்த புகழ் அவளின் தோளில் கை வைக்க,
“எனக்கு பெரியப்பா தோள்ல சாய்ஞ்சிக்கனும். முடியலை…” தன் கையையும் காலையும் காண்பித்து குளம் கட்டிய கண்ணீருடன் தன் அண்ணனிடம் பாவமாய் சொல்ல அனைவரும் உடைந்துபோயினர்.
“ஆத்தி எம்புள்ள வெசனத்த என்னால தாங்கமுடியல எஞ்சாமி…” என கோமதியின் அழுகை இப்பொழுது அதிகமாக,
“ம்மா, சத்தம் கேட்டு டாக்டர் வந்தா வெளில அனுப்பிடுவாங்க. அழுகையை குறைங்க…” என்றவனின் கண்களும் கண்ணீரை உகுக்க நிமிர்ந்து பார்த்தவளின் நெற்றியில் புகழின் கண்ணீர் விழுந்தது.
நீதிமாணிக்கம் சந்நிதியின் இடதுபுறம் வந்து அமர்ந்து அவளை தோள் சாய்த்துக்கொள்ள,
“போகமாட்டீங்க தான பெரியப்பா? அம்மா பாவம். தியாவும். இப்ப நீங்க வந்த கோவம் அதிகமாகிடும். விட்டுட்டு போய்ட்டா இன்னும் அதிகமா வீட்ல படுத்துவாங்க அப்பா. நாங்க தான் உங்களை வரவழைச்சதா நினைச்சு அம்மாவை பேசியே கொன்னுடுவாங்க…”
தகப்பனின் அருகாமையை உணராத பெண் பெரியதகப்பனிடம் தன்னுடைய துயரங்களை ஒவ்வொன்றாய் ஒப்புவிப்பதும் அதற்கு நீங்களும் ஒரு காரணம் என்று அவர்களை குற்றம் சாட்டுவதுமாய் பேசிக்கொண்டே இருந்தாள்.
சந்நிதிக்கு இன்னும் தெரியவில்லை தாய்க்கும், தகப்பனுக்கும் என்னவானது என்று. அவர்களுக்கும் இதே போல ஏதோ அடிபட்டிருக்கும் என்று தான் எண்ணியிருந்தாள்.
இப்போது நீதிமாணிக்கத்தின் கையை இருக்கமாய் பற்றியபடி பேசி பேசியே உறங்கிபோக அவளை பார்த்துக்கொண்டே இருந்தவர்களின் மனது கனத்துபோனது.
நர்ஸ் வந்து சந்நிதியின் செலைனை மாற்றிவிட்டு செல்ல டாக்டர் வந்து சந்தியாவை பார்த்துவிட்டு சந்நிதியை ஆராய்ந்தார்.
“டாக்டர் என் பொண்ணு எப்ப நடப்பா? கையும் சேர்ந்து இப்படி ஆகியிருக்கே?…” நீதிமாணிக்கம் கேட்க,
“எலும்பு உடைஞ்சு உள்ளுக்குள்ள ரொம்ப சேதம். எலும்பு கூட நாள் ஆகும்.  இவங்க நடக்க ஆறு, ஏழு மாசமாவது ஆகும். அதுக்கேத்தது போல பிஸியோதெரபி பண்ணனும்…” என்றவர்,
“இவங்க அப்பா, அந்த ட்ரைவர் ரெண்டு பேருமே கண்ணு முழிச்சுட்டாங்க. இப்ப ரூம்க்கு ஷிப்ட் பண்ணவும் பார்க்கலாம் நீங்க…” என சொல்லி செல்ல,
“நான் போய் அப்பாவை பார்த்துட்டு வரேன்…” என்றவள் புகழை பார்க்க,
“கோமதி நீயும் புகழும் போய் பாருங்க. நான் நிதி கூட இருக்கேன்…” என அவர் சொல்ல,
“இல்லப்பா, நீங்களும் வாங்க. நீங்க இங்க பார்க்கமுடியலையேன்னு இங்க வருத்தப்பட்டுட்டு இருப்பீங்க…” என வரமாட்டேன் என்றவரை வலுக்கட்டாயமாய் அழைத்து சென்றான் புகழ்.
சந்தியா லேசாக தன் காலை தாங்கி தாங்கி தான் நடந்துவந்தாள். அறையின் வாசலில் சென்று நால்வருமே தயக்கமாய் நிற்க,
“நீ முதல்ல போய் பார்த்து பேசிட்டு இரு தியா. நாங்க ஒரு பத்துநிமிஷம் கழிச்சு வரோம்…” புகழ் சொல்ல, 
“அண்ணா…” என்றாள் சந்தியா கவலையாக. சிறுவயதில் அவனை அவள் அழைத்தது. இன்றுதான் மீண்டும் கேட்கிறான்.
“ஹ்ம்ம் பத்து நிமிஷம் வேண்டாமா? அதிகம்னு சொல்றியா? கம்மின்னு சொல்றியா?…” அவளை இலகுவாக்க இவன் கிண்டலாய் பேச பரிதாபமானது சந்தியாவின் முகம்.
“ஓகே, நீ போய் பேச ஆரம்பி. அஞ்சே நிமிஷத்துல வந்துடுவோம். போ…” என்றவன்,
“வசீகரன் வந்ததை மறந்தும் சொல்லிடாத. ஞாபகம் இருக்குல. இது உங்கப்பாவுக்கு பயந்து இல்லை. வசீகரனுக்கு பயந்து சொல்றேன்…” என அதையும் விளையாட்டாய் அவளுக்கு ஞாபகப்படுத்த சந்தியாவின் முகம் இலகுவதற்கு பதில் பீதியானது.
“அண்ணா…”
“அட போன்றேன்ல. இதுக்கே பயந்துட்டு இருந்தா?…” என்று ஒருவாரு பேசி உள்ளே அனுப்பியவன் தன் தாய், தந்தையை பார்க்க  அவர்களோ முனீஸ்வரன் தங்களை கண்டதும் எப்படி நடந்துகொள்வான் என்ற எண்ணத்திலேயே உழன்று கொண்டு இருந்தனர்.
“அப்பா, எதுவா இருந்தாலும் அவர் எப்படி நடந்துகிட்டாலும் நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்கப்பா…” புகழ் சொல்ல,
“அன்னைக்கே நான் பொறுமையா இருந்திருக்கனும் புகழ். அப்படி இருந்திருந்தா இந்த புள்ளைங்க இத்தனை கஷ்ட்டப்பட்டு இருக்க மாட்டாங்கல்ல. பெரிய தவறு செஞ்சது போல இருக்குதுப்பா…” என விட்டத்தை பார்த்தபடி பேசியவரின் முகத்தில் அத்தனை துக்கம்.
உள்ளே நுழைந்த சந்தியாவை பார்த்த முனீஸ்வரனின் முகம் பிரகாசமாக தன்னுடைய கையை கொண்டு அவளை வாவென்று அழைத்தார் அவர். பயந்துகொண்டே வந்தவள் அவரின் கோலத்தை பார்த்து அழுதுவிட்டாள்.
“அப்பா எப்படிப்பா இருக்கீங்க?…” என கேட்டவளிடம்,
“ப்ச், இப்ப எதுக்கு அழுகற? நல்லா தான இருக்கேன். கண்ணை துடை…” கனிவாய் பேச அவருக்கு வரவே இல்லை. அதட்டலாய் தான் சொன்னார் அதையும். ஆனாலும் கண்கள் கசிந்தது மகளுக்கு ஒன்றுமில்லை என்றுணர்ந்து.
“சின்னது எங்க? உன் அம்மாவ எங்க?…” என கேட்க தந்தையின் அதட்டலில் அடக்கிய அழுகை மீண்டும் வெடித்தது.
“அம்மாவுக்கு யூட்ராஸ் ரிமூவ் பண்ணிட்டாங்கப்பா. நிதிக்கு கால்லயும் கையிலயும் அடி. அவளால நடக்கமுடியாதுப்பா…” என சொல்லவும் முனீஸ்வரன் அதிர்ந்துபோனார்.
“என்னம்மா சொல்ற? எங்க? எங்க அவங்க?…” என படபடக்க அப்பொழுது தான் உள்ளே நுழைந்தனர் நீதிமாணிக்கம், கோமதி, புகழ். 
“புகழ் அண்ணா தான் நமக்கு ஹெல்ப் பண்ணினாங்கப்பா…” என சந்தியா சொல்லியதை கூட காதில் வாங்காத முனீஸ்வரன் தனது வலதுகை பக்கத்தில் இருந்த சிறிய டேபிளை பிடித்து ஒரே தள்ளாக தள்ளியவர்,
“இவங்கள யார் உள்ள விட்டது. நான் செத்துட்டா தூக்கி போட்டுட்டு போக வந்தானுங்களா? வெளில போக சொல்லு. இந்த இடத்துலயே இருக்க கூடாது. போ சொல்லு….” என்று உச்சஸ்தானியில் கத்திக்கொண்டு கைக்கு சிக்கிய பொருட்களை தூக்கி வீச சந்தியா வாயடைத்து கோழிக்குஞ்சாய் ஒடுங்கி ஓரமாய் நின்றாள்.
முனீஸ்வரனின் ரகளையில் பதறியடித்து வந்த மருத்துவர்கள் அவரை ஆசுவாசப்படுத்த முயல அவரே மயங்கிவிழ,
“நீங்க எல்லாரும் போங்க வெளில. போங்க…” என்ற நர்ஸ் அறைகதவை அரைத்துவிட்டு வர மருத்துவர்கள் அவரை பார்க்க ஆரம்பித்தனர்.
வெளியில் வந்ததும் கோமதி சந்தியாவின் கையை பிடிக்க அவளோ திடுக்கிட்டு அழுகையை அடக்கிக்கொண்டு வேகமாய் சந்நிதியின் அறைக்கு சென்றுவிட்டாள். அதில் இன்னமும் நொறுங்கிபோனார் நீதிமாணிக்கம்.
“அப்பா…” என புகழ் அவரின் கையை பிடிக்க,
“அன்னைக்கு அவன் ஊருக்கு மத்தியில அத்தனை பேர் முன்னால அறைஞ்சது கூட எனக்கு இப்ப பெருசா தெரியலை புகழ். ஆனா இன்னைக்கு என்ன வார்த்தை சொல்லிட்டான் பாரு. இந்த புள்ளையும் பயந்து ஓடுது…” என்று உடைந்துபோய் அமர்ந்துவிட்டார் நீதிமாணிக்கம்.
“ம்மா, நீங்க போய் தியாவை பாருங்க…” என்ற புகழ் தந்தையின் கையை பிடித்தபடி அவரருகிலேயே அமர்ந்துகொண்டான்.

Advertisement