வில் – 9

ஏற்றியவர்கள் மாண்டுபோனார்கள் ஆயினும் 

எரிந்துக் கொண்டே இருக்கிறது ஜாதீய தீ. 

குழந்தைகளுக்கு குழந்தையாய் மாறி கதை சொல்லிக் கொண்டிருந்தவர், கதை முடியும் தருவாயில் தான் வள்ளி குழந்தைகள் கூட்டத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டு, கதையை நிறுத்திவிட்டு அவளிடம் பேச தொடங்கினார். 

“அடடே எப்பமா மாடிக்கு வந்தீக. உங்களை நான் கவனிக்கவே இல்ல. ரெண்டு பேரும்  சாப்டீங்களா…. வீடு நீங்க தங்க வசதியா இருந்ததுங்களா..?’’ அவர் தொடர்ந்து விசாரிக்கவும், 

கதையின் குறுக்கே வந்த வள்ளியை அங்கிருந்த குழந்தைகள், “யார் இந்தப் புதியவள்…?’’ என்பதைப் போல பார்க்க, அந்தக் குழந்தைகளைப் பார்த்து சிநேகமாய் புன்னகைத்தவள்,

“உங்க நட்சத்திரம் வழி மாறி பூமிக்கு வரும் போதே நானும் வந்துட்டேன் ஐயா. ரொம்ப திருப்தியா சாப்டோம். எங்களுக்கு உங்க வீடு ரொம்ப வசதியா இருக்கு. நீங்க கதைய முடிச்சிட்டு வாங்க. நாம பொறுமையா பேசலாம்.’’ என்றவள் அங்கிருந்து எழுந்துக் கொண்டாள். 

சிறு தலை அசைப்பில் அவளுக்கு விடை கொடுத்தவர் மீண்டும் குழந்தைகளோடான தன் உலகில் தொலைந்து போக, வள்ளி ஜேம்சை நோக்கி நடத்தாள். 

ஜேம்ஸ் தன் புகைப்படக் கருவியின் மூலம் அங்கிருந்த பால்கனியில் நின்ற படி எதையோ படம் பிடித்துக் கொண்டிருந்தான். 

அவனை நெருங்கியவள், “ஜேம்ஸ் என்ன போகஸ் பண்ணிட்டு இருக்கீங்க..?’’ எனக் கேட்க, 

தன் அருகில் திடுமென ஒலித்த குரலில் சற்றே திகைத்துப் போய் நிமிர்ந்தவன், பின்பு அவளை நோக்கி ஒரு புன்னகையை செலுத்திவிட்டு,  

“கீழ இருக்க ஒரு மரத்துல சிட்டுக் குருவி கூடு ஒன்னு தெரியுது மேடம். கூட்ல முட்டையோட பாக்கவே ரொம்ப அழகா இருக்கு…அதான் சும்மா போகஸ் பண்ணி பாத்துட்டு இருந்தேன்..’’ அவன் சொல்லியதும் எட்டிப் பார்த்தவள் முகம் பெரிதாய் மலர்ந்தது. 

ஆம் அது சிட்டுக் குருவியின் கூடு தான். ‘இப்பொழுதெல்லாம் அந்தப் பறவை பார்வைக்கே கிடைப்பதில்லை’ என மனதிற்குள் அவள் வருத்தமாய் எண்ணிக் கொண்டிருக்கும் போதே, “தாய் தமிழ் வணக்கம்..’’ என்று தங்களின் பின்னால் கேட்ட உற்சாக குரலால் இருவரும் ஒரு சேர முன்னால் திரும்பினர். 

அங்கே தன்னம்பிக்கை மின்னும் முகத்தோடு, கண்களில் உற்சாக மின்னல் தெறிக்க இளைஞன் ஒருவன் நின்றுக் கொண்டிருந்தான். 

இவர்கள் அவன் புறம் திரும்பியதும், மீண்டும் ஒரு முறை கைகளை முறையாய் கூப்பி, “தாய் தமிழ் வணக்கம் தோழர்.’’ என்று சொல்லவும், ஜேம்ஸ் அடக்க மாட்டாமல் வெடித்து சிரித்துவிட்டான். 

வள்ளிக்கு சிரிக்க வேண்டும் போல தோன்றினாலும் முயன்று அடக்கிக் கொண்டு, “வணக்கம் தோழர். நீங்க..?’’ என கேள்வியாய் நிறுத்தவும், 

“எங்க இணைந்த கரம் குழுவோட செயலாளர். என்னோட பெயர் மதியழகன். நண்பர்களுக்கு மதி. நீங்க அழகன்னு கூப்பிட்டா கூட எனக்கு மகிழ்ச்சி தோழர்.’’ என்று கண்களில் குறும்பு கூத்ததாட சொன்னான். 

ஜேம்ஸின் உடலில் உடனே ஒரு இறுக்கம் வந்தது. ஏன் எனில் அந்த மதி அத்தனை அழகாய் தான் இருந்தான். கட்டுக் கோப்பான உடலோடும் திருத்தமான முகத்தோடும். அதோடு சதா உதட்டில் தேங்கி இருந்த புன்னகை அவனுக்கு தனி சோபையை வாரி வழங்கிக் கொண்டிருந்தது.

ஜேம்ஸ் உடனே, “மதிங்கிற பேர் தான் கூப்பிட வசதியா இருக்கும்..’’ என்று சொல்ல, மதி, “உங்கள் விருப்பம் தோழர்..’’ என்ற ஒரே வார்த்தையில் தன் சம்மதத்தை தெரிவித்தவன், 

“உங்கள் சுய அறிமுகம்.’’ என்று வள்ளியை நோக்கி கேட்க, அப்பொழுது தான் தங்களை அறிமுகம் செய்துக் கொள்ளாததே வள்ளிக்கு உறைத்தது. 

“சாரி…. நீங்க பேசின தமிழ்ல கொஞ்சம் ஸ்டன் ஆயிட்டேன்..’’ என்று மெலிதாய் புன்னகைத்தவள், 

“நான் வள்ளி… முழுப் பேர் தில்லையாடி வள்ளியம்மை. எங்க தாத்தா வச்ச பேர். கனல் மேகஸின் ரிப்போட்டர்…. இவர் ஜேம்ஸ் எங்க பத்திரிக்கையோட பேமஸ் போட்டோகிராபர்.’’ என தங்களை அவனுக்கு அறிமுகம் செய்விக்க, ஜேம்ஸ் ஒரு அடி முன்னால் வந்து மதியின் கரம் பற்றி குலுக்கினான். 

அறிமுகப் படலம் முடிந்ததும், “எங்க கிராமத்தை பற்றி உங்க பத்திரிக்கையில எழுதப் போவதற்கு மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் தோழர். ஆனி ஐயா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் உங்க வருகையை அலைபேசியில தெரிவிச்சார். எங்க பள்ளிககளை செம்மை செய்த விதம் பற்றின தகவல்களை உங்களுக்கு தர சொல்லி எனக்கு உத்தரவு. நீங்கள் புசித்திருந்தால் நாம பள்ளியை நோக்கி நடந்துக் கொண்டே பேசலாமா தோழர்.’’   

மதியழகன் அப்படி தெரிவித்தும், ஜேம்ஸின் முகம், மறுபடி நடக்கணுமா என்று வெய்யிலில் போட்ட வற்றலாய் சுருங்கி விட, வள்ளி அவன் இனிமையான தமிழை ரசித்துக் கொண்டே, “ஓ நாங்க சாப்பிட்டாச்சு தோழர்.’’ என்றபடி, அவனோடு நடக்க தொடங்க, ஜேம்சும் வேறு வழியின்றி அவர்களை தொடர்ந்தான். 

“எங்க ஊர்ல பதினாறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மொத்தம் மூவாயிரத்து எழுநூற்றி மூணு பேர் இருக்காங்க. இதுக்கு முன்னாடி இங்க  அரசோட இரண்டு ஆரம்பப் பள்ளிகள், இரண்டு மேல் நிலை, ஒரே ஒரு உயர் நிலைப் பள்ளி மட்டும் செயல்பாட்டுல இருந்துச்சி. 

தனியார் பள்ளிகள் எப்படியும் ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு ஆரம்பப் பள்ளியும், இரண்டு உயர்நிலைப் பள்ளிகளுக்கும் செயல் பாட்டுல இருந்துச்சி. 

எங்க அமைப்பு ஐந்து வருடங்களுக்கு முன்னாடி உருவானப்ப, நாங்க கையில எடுத்த முதல் விசயமே  தனியார் கல்வி மோகத்தை ஒழிக்கணும் அப்படிங்கிறது தான்.

முதல்ல எங்க அமைப்புல இருந்த படித்த இளைஞர்கள் எல்லாம் அரசு பள்ளிகள்ல சுழற்சி முறையில பாடம் நடத்த தொடங்கினோம். முதல்ல பள்ளிகள் எங்கள் இலவச சேவையை ஏத்துக்க மறுத்தாங்க. 

அப்புறம் ஊர்த் தலைவர் ஆனி ஐயா மூலமா, ஆட்சியர்கிட்ட மனுக் கொடுத்து சம்மதம் வாங்கி நாங்க அந்த சேவையை தொடங்கினோம். கற்பித்தல் அப்படினா வெறும் கரும் பலகையில சுண்ணாம்பு கட்டிகளை கோட்டோவியமாக்கி குழந்தைகளை கொட்டாவி விட வைக்குற கற்றல் முறையா இல்லாம, 

எங்கள் கற்பித்தல் முறையை செயல் வழிக் கற்பித்தல் முறையா மாத்தினோம். எங்க அமைப்புல அறிவியல் ஆர்வம் இருந்தவங்க… அது  தொடர்பாவும், கணினியில ஆர்வம் இருந்தவங்க அது தொடர்பாகவும், மொழியியல் ஆர்வம் இருந்தவங்க அது தொடர்பாவும் அவங்க கற்பித்தலை தொடர்ந்தாங்க. 

அப்போ நம்ம கலாம் ஐயா உயிரோட இருந்த சமயம். அந்த சமயத்துல நடந்த தேசிய மாணவர் அறிவியல் கண்காட்சியில ஏற்கனவே மாநில அளவுல முதல் பரிசு வாங்கி இருந்த எங்க மாணவர் ஒருவர் தேசிய அளவுலயும் வெற்றிக் கோப்பையை… அதுவும் அப்துல்கலாம் ஐயா கையால சுமந்துட்டு வந்தார்.   

அதுக்கு அப்புறம் தான் எங்க கிராம மக்களே எங்களை திரும்பி பாக்க ஆரம்பிச்சாங்க. எங்க அமைப்பு ஆரம்பித்த ஒரு வருஷம் எங்களுக்கு எந்தவிதமான ஒத்துழைப்பும் எங்க கிராம மக்கள் கிட்டயிருந்து கிடைக்கவேயில்ல. 

அதுக்கு அப்புறம் வீட்ல பட்ட படிப்பை முடிச்சிட்டு பொழுது போகாம இருந்த சகோதரிகள் எல்லாம் எங்க பள்ளி சேவையில வந்து இணைஞ்சாங்க. அப்படியே படிப்படியா படிப்போட விளையாட்டுலையும் எங்க பங்களிப்பைக் கொடுத்தோம் 

அங்கயும் எங்க குழந்தைகள் மாநில, தேசிய அளவுல அவங்க திறமையை நிரூபிச்சிட்டு வந்தாங்க. மக்களும் அரசுப் பள்ளி வாசல்ல வந்து நின்னாங்க. 

ஆனா இப்போ இன்னொரு புதுப் பிரச்சனை உதயமாச்சு. எல்லாக் குழந்தைகளுக்கும் இருக்குற இரண்டுப் பள்ளிகள்ல சேக்க இடம் இல்லை. 

நாங்க முறையா அரசுக்கு மனு கொடுத்தோம். ஆனா உடனடியா பள்ளிகள் அமைச்சிக் கொடுக்குறது சிரமம்னு அவங்க எங்க கோரிக்கையை புறம் தள்ளிட்டாங்க. 

அப்போ எங்க அமைப்போட தலைவர், அரசின் உதவி பெறும் பள்ளிகளை அமைக்கலாம்னு சொல்லி, இதுவரை தனியார் பள்ளிகளுக்கு கட்டின பணத்தில் பாதியை நன்கொடையா வசூல் பண்ணி, 

அரசுகிட்ட மான்யம் வாங்கி புதுசா ரெண்டு ஆரம்பப் பள்ளிகளைக் கட்டி முடிச்சோம். செலவு கம்மியா ஆகணும்னு எங்க ஊர் மக்கள் எல்லாம் அவங்க சொந்த வேலைக்கு காலைல போனா இங்க கொத்தனார் வேலை பாக்க இரவு வந்துடுவாங்க. 

சுத்தி விளக்கு எரிய, பெருசுங்க எல்லாம் பகடி கதை சொல்ல நாங்க எல்லாம் சிரிச்சிகிட்டே வேலை செய்வோம். பொன்னாத்தா சில நேரம் தெம்மாங்கு பாட்டு பாடும். கலவை சாதம் ஊருக்கே ஒரே உலைல கொதிக்கும். 

இலையில சூடு பறக்க அந்த சாதம்… ஆஹா அப்படியே அமிர்தமா இருக்கும். கட்டிட வேலை நடந்த ரெண்டு மாசமும் எங்க ஊர்ல ஏதோ திருவிழா நடந்த உணர்வு தான் இருந்தது. எல்லாருமே இரவு ஏழு மணியில இருந்து பத்து மணி வரைக்கும் வேலை செய்வோம்.