வில் – 6

குழி தோண்டி புதைக்க வேண்டிய பட்டியலில்….

விதைகளை அடுத்து ஜாதியை முன் வைக்கலாம்.  

வில்லன் வள்ளியை பார்த்திருக்க, வள்ளி வில்லனை பார்த்திருக்க. ஜேம்ஸ் இருவரையும் அதிர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்தான். 

இரு நொடிகளில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன், எழுந்து நின்றபடி, “நான் கிளம்புறேன் மேம். நீங்க சார்கிட்ட பேசிட்டு வாங்க..’’ என்று கிளம்ப முனைய வள்ளி வில்லாளன் மீதிருந்த தன் ஆழ்ந்த பார்வையை வள்ளி ஜேம்சை நோக்கி திருப்பினாள். 

“எங்க போறீங்க…? உக்காருங்க. நான் இன்னைக்கு உங்ககிட்ட பேசியே ஆகணும்..’’ என்றவள், அவன் தயங்கி தயங்கி அமர்ந்த பிறகே தன் பார்வையை மீண்டும் வில்லாளன் மீது திருப்பினாள். 

“உங்க பேர் என்ன சொன்னீங்க….? சாரி கேட்ச்சியா இல்ல…. அதான்  மறுபடி கேக்குறேன்…’’ என முன் விளக்கத்தோடு, புன்னகை முகமாய் கேட்க, 

அவளை விட அதிகமாய் புன்னகைத்தவனோ, “வில்லாளன்… நீங்க வேணா சுருக்கமா வில்லன் அப்படின்னு நியாபகம் வச்சிக்கலாம். ஏன்னா உங்க லைப்ல நான் இனி வில்லன் வேலை செய்ய வேண்டி வந்தாலும் வரலாம்..’’ என்று சொல்ல, இம்முறை வள்ளி பொங்கி பொங்கி சிரித்தாள். 

சிரித்துக் கொண்டே, அதிகம் தொடர்ந்து சிரித்தால், கண்களில் திரண்ட நீரை துடைத்துக் கொண்டவள், அந்த உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த அனைவரும் தங்களை பார்ப்பதை உணர்ந்து, 

“சாரி… வெரி சாரி…. என்னால டக்குன்னு சிரிப்பை அடக்க முடியல…. ஷப்பா… இப்படி சிரிச்சி ரொம்ப நாள் இருக்கும்… அண்ட் தேங்க்ஸ் மிஸ்டர் வில்லன்… உங்க டைமிங் காமெடிக்கு….’’ என்றவள் ஜேம்சை பார்த்து, 

“ஒரு டென் மினிட்ஸ் இவரை பேசி அனுப்பிடுறேன்… உங்க டைம் நிறைய எடுத்துக்குறேன். சாரி..’’ என்று அவனிடமும் மன்னிப்பை வேண்டி விட்டு முழுதாய் வில்லன் பக்கம் திரும்பி அமர்ந்தாள். 

இத்தனை நேரம் சிரிப்பில் மலர்ந்திருந்த அதரங்கள் இறுக்கத்தில் நேர் கோடாய் மாற, கண்களில் அசாத்திய கூர்மை. உடல் மொழியில் எதிரியிடம் பேசும் பாவனையை முழுதாய் கொண்டு வந்தவள், 

“மிஸ்டர் வில்லன்… உங்க சொந்தக்காரங்க கேட்ட டைவர்சை ஊரை விட்டுக் கிளம்பும் போதே உங்ககிட்ட கொடுதுட்டதா எனக்கு நியாபகம். நீங்க ஒன் இயர் கழிச்சி கோர்ட் அப்ரூவலுக்கு கூப்பிடுவீங்கன்னு எதிர்பார்த்தேன். 

ஆனா நீங்க கூப்பிடலை. சரி நான் போட்டுக் கொடுத்த கையெழுத்தை வச்சே இன்னொரு மேரேஜ் பண்ணிக்கிட்டு ஹாப்பிய இருப்பீங்கன்னு அதைப் பத்தி அதுக்கு அப்புறம் நான் யோசிக்கல.  

ஆனா நீங்க கூப்பிட மறந்து இருந்தாலும் நான் கூப்பிட்டு இருக்கணும் போல. இப்ப பாருங்க திடீர்ன்னு எனக்கு உரிமை இருக்கு, அப்படி இப்படின்னு சீரியஸா வந்து காமெடி பண்ணிட்டு இருக்கீங்க. 

என் மேல நீங்க எடுத்துக்கப் போற உரிமைய  சின்ன மஞ்சள் கயிறோ… இல்ல நம்ம ரிலேசன்ஷிப்போ தீர்மானிக்க முடியாது. அதை நான் மட்டும் தான் தீர்மானிக்கணும். உங்க கூட பொண்டாட்டியா சேந்து குடும்பம் நடத்தி இருந்தாலுமே நான் என்னைக்கும் ஒரு பொருள் இல்ல என்ன நீங்க உரிமை கொண்டாட. மனுஷி. புரிஞ்சதா வில்லன். 

என்னவோ சொல்லணும்னு ரொம்ப நாள ட்ரை பண்றதா சொன்னீங்க இல்ல. பட் எனக்கு உங்ககிட்ட ஒன்னும் கேக்க வேண்டாம். ஆனா எனக்கு சீக்கிரம் டிவோர்ஸ் லீகலா வேணும். இனி நீங்க கோர்ட்டுக்கு கூப்பிடலைனாலும் நான் உங்களை கூப்பிடுவேன். சோ பீ ரெடி வில்லன். இனி நீங்க கிளம்பலாம். நான் என் பாய் பிரண்ட்கிட்ட கொஞ்சம் பர்சனலா பேசணும். சோ…’’ 

முகத்தில் இருந்த இறுக்கத்தை தளர்த்தி அங்கே, அவள் ஒரு நக்கல் சிரிப்பை கொண்டு வர, வில்லன் உடனே எழுந்துக் கொண்டான். ஆனால் அவள் எதிர்பார்த்த கோபம், ஆத்திரம் எதுவும் அவன் முகத்தில் துளியும் இல்லை. 

மாறாக ஒன்றும் அறியாத குழந்தையை தாய் வாஞ்சையுடன் பார்ப்பதைப் போல அவளைப் பார்த்தவன், 

“ஓகே கேரி ஆன் மிசஸ் வள்ளி வில்லாளன். நான் கிளம்புறேன். ஆனா நீயே ஒரு நாள் என்கிட்ட பேசுங்க வில்லன் பேசுங்க வில்லன்னு என் பின்னாடியே சுத்தப் போற. என்னை லவ் பண்ணப் போற. எனக்காக உன்னோட எல்லா ரூலையும் ப்ரேக் பண்ணப் போற. அந்த நாள் ரொம்ப தூரத்துல எல்லாம் இல்ல. இன்னும் ரெண்டே வாரத்துல ஆரம்பிக்கப் போகுது. 

அப்புறம் டைவர்ஸ் கேட்டீங்க இல்ல மேடம். அதெல்லாம் மியூசுவல் டைவர்ஸ் கேசே கோர்ட்ல ஒன் இயர் இழுப்பான். நீ அடிச்சே கேட்டாலும் என் பொண்டாட்டிக்கிட்ட இருந்து என்னை பிரிச்சிடாதீங்க ஜட்ஜ் அம்மான்னு நான் கண்ல கிளிசரின் போட்டுட்டு வந்து கோர்ட்ல கதறி கதறி அழுவேன். 

இப்பலாம் பசங்க அழுதாலும் பாவம் பாக்குறாங்கமா. சோ நீ கேட்ட டைவர்சும் ஈசியா உனக்கு கிடைக்காது. ரொம்ப பேசுறேனோ… இனிமே ஒன்லி ஆக்சன்… அப்புறம் மாமா கிளம்புறேன் தில்லு… என்ன அப்படி ஆன்னு பாக்குற… உன்னோட பேர் சுருக்கம் நல்லா இருக்கா…. எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு… இனி உன்னை அப்படித் தான் கூப்பிட போறேன்..’’ என்றவன், எழுந்து நின்று ஜேம்ஸின் அருகில் சென்று கைக் குலுக்கினான்.  

ஜேம்ஸ் இவனை வியப்பாய் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, “ஆயிரம் சொல்லுங்க பாஸ்… எம் பொண்டாட்டி எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் அழகா தான் இருக்கா. இப்படி ஒரு கேர்ள் பிரண்ட் கிடைக்க நீங்க கொடுத்து வச்சி இருக்கணும். என்ஜாய்..’’ என்று கண்சிமிட்டியவன், அங்கிருந்து திரும்பி நடக்கத் தொடங்கினான்.

அப்படி உணவகத்தின் பாதி தூரம் வரை நடந்தவன், மீண்டும் திரும்பி வள்ளியின் அருகில் வந்தான். வள்ளி அவன் பேசிய பேச்சில் விழி விரித்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். 

அருகில் வந்தவன், “உன்னோட ஏதோ ஒரு கேள்விக்கான பதிலை மிஸ் பண்ண பீலிங். ஹா…! உரிமைன்னு சொன்னதுக்கு ஏதேதோ புரட்சி வசனம்லாம் பேசினல. தில்லு….! என் உயிர் என்னோட உரிமைனா… நீயும் என்னோட உரிமை… குட்டி பாப்பாக்கு புரியல.. விளக்கமா சொல்றேன் பொறு தில்லு.

அதாவது… நீ தான் நான்… நான் தான்…. நீ….ஐயோ அப்படிலாம் பாக்காத தில்லு… மாமன் போகன்லாம் இல்ல கூடு விட்டு கூடு பாய…. ஆனா உசிரை தாண்டி இன்னொன்னு நமக்கு இருக்கு… மனசு… அது மாறனும்… மாறினா நீ… தான்… நான்… நான் தான் நீ…. அதுக்கு பேர் காதல்… அது எனக்கு உன் மேல இருக்கு. உனக்கு எப்போ என் மேல வருதோ… அப்போ நீ என் உசிரு உரிமை எல்லாம்…. புரிஞ்சதா… 

ஒரு பொண்ணு தனக்கு கொடுக்குற உரிமையை வச்சி அவளை அடிமையாக்காம ராணியாக்குறான் பாரு அவன் ஆம்பளை… நான் ஆம்பளை…. உன்னை கண்டிப்பா ராணியா தான் வச்சி இருப்பேன் தில்லு….’’ 

இறுதி வரிகளை குரலில் ஒருவித உறுதியோடு சொல்லிமுடித்தவன், அவள் கன்னத்தில் லேசாய் தட்டி விட்டு அங்கிருந்து உடனே வேகமாய் வெளியேறி இருந்தான். 

ஜேம்ஸ்…. “என்னடா நடக்குது இங்க..’’ என்று திகைத்துப் போய் விழித்துக் கொண்டிருக்க, வள்ளியோ, “இப்ப இவன் என்ன தான் சொல்ல வரான்..’’ என்று குழப்பத்தில் திகைத்துப் போய் அமர்ந்திருந்தாள். 

அவள் சிந்தனையில் மூழ்கி இருக்க, ஜேம்ஸ், “ஆபீஸ்க்கு டைம் ஆச்சு. கிளம்பலாமா..மேம்?’’ என மென்மையாய் அவளிடம் கேட்க, “ஹும்.. போலாம்..’’ என்றபடி வள்ளி எழுந்துக் கொண்டாள். 

பயணம் முழுக்க மௌனம் மட்டுமே. வள்ளி வில்லனை எப்படி சமாளிப்பது என சிந்தையில் மூழ்கி இருக்க, ஜேம்ஸோ, “மேடத்துக்கு மேரேஜான விசயத்தை ஏன் யார்கிட்டையும் சொல்லாம மறைக்குறாங்க…?’’ என அவள் வாழ்வின் முடிச்சுகளைப் பற்றி சிந்தித்த வண்ணம் வந்தான். 

ஜேம்ஸ் அலுவகம் வந்தவுடன், மின் தூக்கியின் வாயிலை நோக்கி ஓட, வள்ளியோ பொறுமையாய் தன் வாகனத்தை நிறுத்திவிட்டு படிகளில் நடந்துக் கொண்டிருந்தாள். 

என்னவோ…. வெகு நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்த மூளை, “இதற்கு மேல் தாங்க முடியாது… முதலில் போய் உன் சிறுநீரை வெளியேற்று..’’ என அவளுக்கு கட்டளையிட, வள்ளி தன் அலுவலக தளத்தை அடைந்ததும் முதலில் கழிவறையை தேடி ஓடினாள். 

கழிவறையை வழக்கமாய் சுத்தம் செய்யும் பெண்மணி சுத்தம் செய்துக் கொண்டிருக்க, “என்ன அலமேலு… எப்படி இருக்க… உன்  பையனுக்கு காலர்ஷிப் அப்ளே பண்ணிக் கொடுத்தேனே கிடச்சதா…?’’ எனக் கேட்டுக் கொண்டே… ஒரு கழிவறையை திறக்க போனாள். 

அலமேலுவும், “கிடச்சதுமா… ஏதோ உங்க புண்ணியத்துல பையன் இப்போ காலேஜ் ரெண்டாம் வருஷம் போகப் போறான்..’’ 

அலமேலு அப்படி சொல்லியதும், “அலமேலு… என் புண்ணியத்தால இல்ல…. இதுக்கு முன்னாடி ஆட்சி செஞ்ச சில நல்லவங்க கொண்டு வந்த திட்டத்தோட பலன் தான் இன்னைக்கு உன் பையன் படிப்பு. உன் கஷ்டத்தை எல்லாம் எடுத்துச் சொல்லி நல்லா படிக்க சொல்லு..’’ என சொல்லிக் கொண்டே, கழிவறையை பயன்படுத்தி முடித்தவள்… கதவை திறந்துக் கொண்டு வெளியேறும் போது தான் அதை கவனித்தாள். 

யாரோ சிலர் சுகாதார அணையாடைகளை (தூய தமிழில்… அணையாடை… நமக்கு புரிய நாப்கின்) பயன்படுத்தி விட்டு அதை உரிய முறையில் அப்புறப்படுத்தாமல் அப்படியே ஜன்னல் மதில்களில் வைத்து இருந்தனர். 

வள்ளி கோபமாய் வெளியேறும் போதே அலமேலு, மற்றொரு கழிவறையில் இருந்த இதே போல் பயன்படுத்தப்பட்டு ஜன்னல்களில் சொருகப்பட்டிருந்த அணையாடைகளை வெறும் கைகளில் எடுத்து குப்பைத் தொட்டியில் சேகரித்துக் கொண்டிருந்தார். 

“அலமேலு….” என வள்ளி அலறிய அலறலில், அலமேலு, “என்னமா…’’ என பயந்த விழிகளோடு திரும்பினார். 

வள்ளி கண்களில் உக்கிரத்தோடு, “இது எத்தனை நாளா நடக்குது..’’ என கேட்க, 

அலமேலு பயந்த முகத்துடன், “எதை அம்மா கேக்குறீங்க..? நான் தப்பு எதுவும் செய்யலீங்களே..?’’ என்று உயிரைக் கண்களில்  தேக்கி வினவினாள். 

தப்பு எதுவும் செய்யாமல் பயந்த வாழ்வை வாழும் அவளை எண்ணி வள்ளிக்கு கழிவிரக்கம் பொங்கியது. “த்ச்சு..’’ என்று சலித்தவள், தன் வழமையான தலை குலுக்கலுக்கு பிறகு, 

“நீ ஏன் கையில நாப்கினை எடுத்துட்டு இருக்க. இது எத்தனை நாளா  நடக்குது..’’ என்று பொறுமையை இழுத்து பிடித்தபடி கேட்க, 

“அது வந்துமா…’’ என அலமேலு இழுக்க தொடங்கினாள். பின்னே கழிவறையை காலை, மாலை மட்டும் சுத்தம் செய்ய இங்கே அவளுக்கு கொடுக்கும் ஊதியம், அவளைப் பொறுத்தவரை மிக அதிகம். ஏதாவது பிரச்சனையாகி இங்கிருந்து வெளியேற நேர்ந்தால், தன் ஒரே மகனை அவள் எப்படி படிக்க வைப்பாள். ஐந்து வருடங்களுக்கு முன்பே கணவனை வேறு விபத்தில் பறி கொடுத்து இருந்தாள். 

அலமேலுவின் தயக்கம் வள்ளியின் கோபத்தை விசிறி விட, “அலமேலு.. பதில் சொல்லப் போறியா இல்லையா..?’’ என கர்ஜித்தாள். 

அவளின் கோபம் கண்டு மிரண்ட அலமேலு, “நான் வேலைக்கு வந்த மூணு மாசமாவே இப்படித் தான்மா… இந்த பாத்ரூமுன்னு இல்லீங்கம்மா…. கீழ இருக்க ரெண்டு புளோர் பாத்ரூம்லையும் இப்படி தானுங்கம்மா இருக்கும். நான் தான் தினம் சுத்தப்படுத்தி கழுவி விட்டுப் போவேனுங்க..’’ 

வள்ளிக்கு அப்பொழுது தான் நிலவரம் புரிந்தது. அவர்களின் இந்த அலுவலக கட்டிடம் புதிது. மேலும் பழைய அலுவலகத்தில் ஒரே ஒரே பெண்கள் கழிவறை மட்டுமே இருக்கும். அனைவரும் கீழ் தளத்தில் இருக்கும் அந்த கழிவறையை மட்டுமே பயன்படுத்த நேரும். 

அதோடு அங்கே எப்பொழுதும் அணையாடைகளும், உபயோகப்படுத்திய அணையாடைகளை சுகாதாரமாய் அப்புறப்படுத்த தேவையான வசதிகளும் இருந்தன. 

ஆனால் இங்கே அவை எல்லாம் இல்லாதிருப்பதை வள்ளி கவனத்தில் கொண்டாள். அப்படி வசதிகள் இல்லையெனில் இல்லை என்பதை அலுவலக மேல் அதிகாரிக்கு தெரியப்படுத்தி அந்த வசதிகளைப் பெறமால், கொஞ்சமும் சிந்திக்காமல் இப்படி பொறுப்பற்ற முறையில் அலட்சியாமாய் தங்கள் உடலின் கழிவுப் பொருள் சேகரிப்பானை அவர்கள் வீசி சென்றிருந்த விதம் அவளை வருத்தம் கொள்ள வைத்தது. 

அலமேலுவை இரக்கத்துடன் பார்த்தவள், “இதை எல்லாம் நீங்க…. உங்களுக்கு சம்பளம் தர அதிகாரிகிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல..’’ எனக் கேட்க, 

“ஐயோ குடி கெட்டது போங்க. வேலை செய்ய சுணங்குறேன்னு அவரு என்ன வேலைய விட்டு தூக்கிட்டா..’’ என அலமேலு அப்பாவியாய் வினவவும் உண்மையில் வள்ளிக்கு அவளின் அன்றாட வாழ்விற்கான போராட்டத்தை எண்ணி நெஞ்சம் வேதனையில் ஆழ்ந்தது. 

அவளைப் பார்த்து நம்பிக்கையாய் புன்னகைத்தவள், “முதல்ல கையை கழுவிட்டு நம்ம எடிட்டர் ரூமுக்கு வாங்க. நான் முன்னாடி போறேன்..’’ என்றவள் அங்கிருந்து விரைவாய் வெளியேற, அலமேலு பயந்த படியே கை கழுவ சென்றாள். 

வேலைக்கு சேர்ந்த முதல் நாள் அலமேலு அவரைப் பார்த்தது. அப்பொழுதே அவள் பயம் கொள்ளும் படி தான் மனிதர் பேசினார். உள்ளுக்குள் நடுங்கிய படியே அலமேலு இரண்டாம் தளத்தில் இருந்த அவர் அறை நோக்கி நடந்தாள். 

அலமேலு அனுமதி பெற்று உள்ளே நுழையும் போதே, அங்கு பணி புரியும் அத்தனை பெண்களும் அங்க குழுமி இருந்தனர். அந்த அறையில் இருந்த நாற்காலிகள் போதாமல் சிலர் நின்றுக் கொண்டிருந்தனர். 

அலமேலு தயங்கி தயங்கி உள்ளே வர, வள்ளி, “அலமேலு முன்னாடி வா..’’ என அவளை திடமாய் அழைத்தாள். அலமேலு பயத்தோடு யார் கண்களையும் நேரே சந்திக்காமல், குனிந்த தலை நிமிராமல் வள்ளியின் அருகில் சென்று நின்றாள். 

இதற்கு மேல் என்னால் பொறுமையாய் இருக்க முடியாது என்பதைப் போல, ஜோதி மணி, “இப்ப எதுக்கு என் ரூமுக்கு எல்லா பீமேல் ஸ்டாப்ஸ்சையும் வர சொன்ன… இனிமேயாவது சொல்லுமா..? யூ ஆர் கில்லிங் அவர் ப்ரீசியஸ் வொர்க் டைம். உனக்கு புரியுதா இல்லையா..?’’ என கோபப்பட்டார். 

வள்ளியோ கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், “சார் முதல்ல நம்ம பீமேல் ஸ்டாப் எல்லாரையும் அலமேலுக்கிட்ட சாரி கேக்க சொல்லுங்க..” என நிதானமாய் சொன்னாள்.

பல பெண்கள்… “வாட்… வொய்… நாங்க என்ன தப்பு செஞ்சோம்… ஷி ஈஸ் ரிடிகுலஸ்…’’ என்று ஆள் ஆளுக்கு முணுமுணுக்க, அந்த இடமே ஒரே நிமிடத்தில் சந்தைக்கடையாய் மாறிப் போனது. 

ஜோதியின் கொஞ்ச நஞ்ச பொறுமையும் காற்றில் கரைய, “ஆர் யூ மேட் வள்ளி. நம்ம ஸ்டாப்சை எதுக்கு பாத்ரூம் கழுவுற ஆயாகிட்ட மனிப்பு கேக்க சொல்லிட்டு இருக்க…?’’ எனக் கோபமாய் வினவ,

வள்ளி அவரை விட ஆத்திரம் தேங்கிய குரலில் “ஏன்னா இவங்க யூஸ் பண்ண நாப்கின்ஸ்லாம் இந்த பாத்ரூம் கழுவுற ஆயம்மா தான் வெறும் கையில தினம் தூக்கிப் போட்டு நம்ம இடத்தை சுத்தப்படுத்திட்டு இருக்காங்க. அதான்…’’ 

வள்ளி அப்படி சொல்லியதும், அங்க குண்டூசி விழுந்தாலும் கேட்கும் அளவிற்கு நிசப்பதம் நிலவியது. சில பெண்கள் தங்கள் தலையை குனிந்துக் கொள்ள, ஜோதியோ கன்றிவிட்ட முகத்துடன், “வாட்..?’’ என அதிர்ச்சியாய் கேட்டுக் கொண்டிருந்தார். 

“எஸ் சார்… நம்ம ஓல்ட் பில்டிங்ல  பீமேல் ரெஸ்ட் ரூம்ல காயின் போட்ட நாப்கின் வர மெசினும்.. அதே சமயம் யூஸ் பண்ண நாப்கின்ஸ் பர்ன் பண்ற மிசினும் இருந்தது. ஆனா நியூ ஆபிஸ்ல ப்ளோருக்கு ப்ளோர் பீமேல் ரெஸ்ட் ரூம் இருக்குறதால… அந்த மெசினை எங்கயும் செட் பண்ணாம விட்டாங்க..

இங்க ஜென்ஸ் கோ வொர்கரா இருக்குறதால அவங்க முன்னாடி யூசுடு நாப்கின்ஸ் டிஸ்போஸ் பண்ண பேப்பர்லாம் கைல எடுத்துட்டு போக வெட்கப்பட்டுக்கிட்டு இவங்க பாட்டுக்கு ஜன்னல் திட்டுல எல்லாம் நாப்கின்சை அப்படியே வீசிட்டு வந்து இருக்காங்க. 

பாத்ரூமை கிளீன் பண்ணாலும் இவங்களும் மனுசங்க தானே சார். அவங்க அவங்க ஓன் பாடி வேஸ்டே நம்மால டாலரேட் பண்ண முடியிறது இல்ல… அப்படி இருக்கும் போது… அடுத்தவங்க… ச்சே..என்னால சொல்லவே முடியல. 

இத்தனை நாளா இந்த விஷயம் என் கண்ணுல படல. அதோட அப்படி தப்பே பண்ணாதவங்க இந்த கேங்ல இருந்தாலும்… 

இப்படி யாரோ பண்ற தப்பை கண்டுக்காம போன எல்லாரும் குற்றவாளிங்க தன். சோ எல்லாரும் அலமேலுக்கிட்ட மன்னிப்பு கேட்டு தான் ஆகணும். 

நாம எல்லாரும் படிச்சவங்க தானே சார். அதுலயும் பிரஸ் பீப்பில்ஸ். மக்களுக்கு நல்ல விசயத்தை சொல்லித் தர வேண்டிய நாமளே இப்படி இருந்தா…? எனக்கு ரொம்ப வேதனையாவும், அசிங்கமாவும் இருக்கு சார்…இந்தப் பொண்ணு அந்தக் குப்பையை எல்லாம் வெறும் கையில சுத்தம் பண்றா. அதால தனக்கு வியாதி வரும் அப்படிங்கிற அடிப்படை அறிவு கூட அவளுக்கு கிடையாது. 

அவளுக்கு வேண்டியது எல்லாம் காலேஜ் படிக்கிற தன்னோட பையன் மூணு வேலையும் நல்லா சாப்பிடனும். கிழியாத ட்ரெஸ் போட்டுட்டு போகணும். அவ்ளோ தான்…இந்த வேலையை செஞ்சி முடிச்ச கையோட தான் சார் அவ சாப்பிடவும் உக்காருறா… ’’

வள்ளி பேசிய பேச்சில் அலமேலுவின் கண்களில் நீர் வடிய ஜோதி மணி வேகமாய் எழுந்து நின்றார். “நாம தினம் மதர் தெரசாவையும் காந்தியையும் எங்க எங்கையோ தேடிட்டு இருக்கோம். ஆனா நீங்க எல்லாம் எங்க பக்கத்துல தாமா இருக்கீங்க. இவங்க எல்லார் சார்பா நான் உன்கிட்ட மனிப்பு கேட்டுகிறேன்மா….’’ என கை கூப்பி மன்னிப்பை வேண்ட, மற்ற பெண்கள் அனைவரும் எழுந்து நின்று, “சாரி அலமேலு..’’ என்று ஒரே குரலில் தங்கள் மன்னிப்பை பதிவு செய்தனர். 

அதோடு இன்னும் சில பெண்கள் நெருங்கி நின்று அவள் தோளில் கை வைத்து அவளுக்கு ஆறுதல் சொல்ல முனையவும், 

“பிரண்ட்ஸ்… மன்னிப்பு படலம் எல்லாம் போதும்… வேகமா நம்ம ஆபிஸ் பாய போய் கிளவ் வாங்கிட்டு வர சொல்லுங்க… நம்ம பாத்ரூம்ல நாம போட்ட குப்பைய நாம எல்லாரும் சேந்து அஞ்சே நிமிஷத்துல கிளீன் பண்றோம்..’’ என உற்சாகமாய் பேசினாள். 

சில பெண்கள் முகம் சுழித்து பின் வாங்கினாலும் சில பெண்கள், “எஸ்..’’ என்ற ஆரவாரத்தோடு முன் வந்தனர். 

அலமேலுவோ, “ஐயோ… நீங்க போய் அதெல்லாம் எடுத்துக்கிட்டு… அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்மா…’’ என்று சொல்ல, வள்ளியோ, 

“மூச்….. உன் சுய மரியாதை உனக்கும் ரொம்ப முக்கியம் வள்ளி…. டாய்லெட் பிரஷ் வச்சி…. ஸ்டிக் வச்சி இப்படி கைப்படமா கிளீன் பண்ணத்தான் உன்ன வேலைக்கு எடுத்து இருக்காங்க. புரிஞ்சதா…? இப்படி அடிமை வேலை பாக்க இல்ல. இனி ஒரு டைம் இப்படி நடந்தா நீயே போல்ட்டா வந்து கம்ப்ளைன்ட் கொடுக்கணும். நானா கண்டுபிடிச்சேன்… உன்ன தான் வேலையை விட்டு தூக்க சொல்வேன்..’’ என உண்மையாக மிரட்ட, அலமேலு அதற்கு மேல் வாதம் செய்யாமல் பின் வாங்கினாள். 

உதவி பையன் வாங்கி வந்து கொடுத்த கையுறைகளை எடுத்துக் கொண்டு பெண்கள் அணி வெளியே புறப்பட, சில மூத்த பெண்கள் ஏதேதோ தங்களுக்குள் முணகியபடி அங்கிருந்து வெளியேறினர்.

ஜோதி வழக்கம் போல, வள்ளியை பாரதியின் அக்னி குஞ்சோ இவள் என வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். 

அதே நேரம் தங்கள் ஊரின் பெண்கள் மேல் நிலைப் பள்ளியின் கழிவறையில், வில்லனின், ‘இணைந்த கரம்’ குழுவினர் அணையாடைகளை எரிக்கும் எந்திரத்தைப் பொருத்திக் கொண்டிருந்தனர். 

வில் நாண் ஏறும்.