வில் – 21

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.

ஜாதிகள் பார்ப்பின் – மனிதமே இல்லை.  

தாய் பதம் சொல்ல சொல்ல அடுப்பில் கேரட் அல்வாவை கிண்டிக் கொண்டிருந்தாள் வள்ளி. அது வள்ளியின் தாயிற்கு மிக பிடித்த இனிப்பு.

மலர் சமையலறை வாயிலில்… சாய்ந்து கொள்ளும் வசதி கொண்ட இருக்கை ஒன்றில் அமர்ந்தபடி, மகளுக்கு செய்முறையை விளக்கி கொண்டிருந்தார். 

வள்ளி மாற்றுடை எதுவும் கொண்டுவராததால், அவளுடைய அறையில் அடுக்கு கூட கலையாமல் அப்படியே இருந்த அவள் பழைய மிடி வகை உடை ஒன்றை எடுத்து அணிந்திருந்தாள். 

முடி மொத்தமும், நூதன கொண்டையாய் முடங்கி இருக்க, முன் உச்சியில் விடுபட்ட நீண்ட கற்றை ஒன்று நெற்றி சுட்டியாய் பிறை நெற்றியை அலங்கரித்துக் கொண்டிருந்தது. 

“கேரட் வெந்த வாசம் வந்துடுச்சி.. இப்ப ஏலக்காய் விதையோட சக்கரை மிக்சியில போட்டு பவுடர் பண்ண இல்ல… அந்த பவுடரை கொஞ்ச கொஞ்சமா சேத்து கிளறு..’’ 

தாய் சொல்லியபடி, மிக்சியின் சிறிய ஜாரை வள்ளி கையில் எடுக்கும் பொழுது, “எப்படி இருக்கீங்க அத்தை…?’’ என்ற வில்லனின் அழுத்தமான குரல் வள்ளியின் செவிகளை தீண்டியது. 

உடல் எங்கும் ஏதோ ஒரு வகை மின்னல் பாய, சடாரென உடலில் தோன்றும் நடுக்கத்தை சமாளிக்க, கையில் இருந்த ஜாரின் கைப்பிடியில் அழுத்தத்தை அதிகப்படுத்தினாள் வள்ளி. 

மறந்தும் வில்லனின் புறம் திரும்பவில்லை. நேற்று இரவு அவனிடம் பேசிய வார்த்தைகளின் தாக்கம் அவளை அசையாது கட்டி வைத்திருந்தது. 

“வாங்க மாப்பிள்ளை… வாங்க…’’ என மலர் அவனை வரவேற்ப்பதும், “ஐயோ அத்தை மொதோ நீங்க உக்காருங்க. என்னைப் பாத்ததும் எழுந்து நிக்கனுமா…?” என வில்லன் கடிந்து கொள்வதும், வள்ளிக்கு துல்லியமாய் கேட்க, வள்ளி அதிகரித்த இதய துடிப்போடு அமைதியாய் நின்றுக் கொண்டிருந்தாள். 

வள்ளியை நோக்கி திரும்பிய மலர், “வள்ளி… மாப்பிள்ளைக்கு தண்ணிக் கொண்டு வாம்மா..’’ என்றவர், வில்லனைப் பார்த்து, 

“வெளியே ஹால்ல உக்காருங்க மாப்பிள்ளை…!’’ என உபசரிக்க, வரவேற்பறையில் இருந்த இருக்கை ஒன்றை சமையலறை வாசல் வரை இழுத்து வந்தவன், 

“இங்க உக்காரலாம் இல்லையா அத்தை..?’’ எனக் கேட்க, மலரோ பதறிப் போய், “என்ன மாப்பிள்ளை… இப்படி கேட்டுட்டீங்க…? இது உங்க வீடு நீங்க எங்க வேணா உக்காருங்க…” என பதில் கொடுத்தார். 

எரிந்துக் கொண்டிருந்த அடுப்பின் வேகத்தைக் குறைத்தவள், குனிந்த தலை நிமிராமல், பெரிய சொம்பில் நீரைக் கொண்டு வந்து வில்லனுக்கு கொடுத்தாள். 

அவளை நிமிர்ந்தும் பாராது சொம்பை கைநீட்டிப் பெற்றுக் கொண்டவன், மலரிடம் தொடர்ந்து அவர் உடல் நலம் பற்றி விசாரிக்கத் தொடங்கி விட, அதுவரை உள்ளுக்குள் காற்றுக் குமிழியாய் பொங்கிப் பெருகிக் கொண்டிருந்த ஏதோ ஒன்று ‘பட்’ என உடைந்து சிதறியதைப் போல மனதை ஏமாற்றம் ஆக்கிரமித்தது.

மீண்டும் சமயலறையில் தன் கிளறல் பணியை அவள் தொடங்கிவிட, மலரிடம் பேசிக் கொண்டிருந்தவன் மறந்தும் அவள் புறம் பார்வையை திருப்பவில்லை. 

வில்லன் தன்னை பார்க்கிறானா என அறிய வள்ளி தான் அவனை நொடிக்கு ஒரு முறை ஓர விழிப் பார்வையால் அளந்துக் கொண்டிருந்தாள். 

பத்து நிமிடத்தில் ஏமாற்றம், கோபமாய் உருமாற, ‘போடா’ என மனதிற்குள் முணகிக் கொண்டவள், அதன் பிறகு தன் கவனத்தை முழுமையாய் சமையலில் திருப்பினாள். 

உருக்கிய நெய்யில் முந்திரி பாதாம் துருவலை வதக்கி, கேரட் அல்வா கலவையில் ஊற்றி, பாதார்த்ததை நிறைவு செய்ததும், வள்ளி சமையலறை வாயிலைப் பார்க்க, அங்கே அவள் தாய் மட்டும், புத்தகம் ஒன்றை படித்தபடி அமர்ந்திருந்தார். 

வள்ளி, “மா..’’ என அழைக்க, புத்தகத்திலிருந்து பார்வையை திருப்பியவர், அவளைப் பார்த்து முறுவலித்து விட்டு, “கேரட் அல்வா அல்வாவா இருக்கா இல்ல கேரட் பாயாசமா இருக்கா..?’’ என வினவ, 

“மா..’’ என காலை உதைத்து சிணுங்கியவள், “சூடு ஆறட்டும்… நீங்க சாப்பிட்டு பாத்து சொல்லுங்க..’’ என சொல்ல, 

நெடு நாட்களுக்குப் பிறகு சிறுபிள்ளையாய் சிணுங்கும் மகளைக் கண்டவரின் நெஞ்சம் பூரிப்பில் நெகிழ்ந்தாலும், வெளியே மேலும் கிண்டலாய் சிரித்துவிட்டு, 

“பாயாசமா இருந்தாக் கூட பரவாயில்ல வள்ளி.. பசையா இல்லமா இருந்தா சரி.. எதுக்கும் உங்க அப்பாவை முதல்ல சாப்பிட சொல்லிட்டு… அப்புறம் தான் நான் சாப்பிடனும்…’’ என விளையாட்டாய் சொல்ல வள்ளியின் முகம் நொடியில் சுருங்கிவிட்டது. 

“அம்மா நான் உங்களுக்கு மட்டும் தான் செஞ்சேன். உங்க வீட்டுக்காரருக்கு எல்லாம் இல்ல. உங்களுக்கு சாப்பிட பிடிக்காட்டி… விட்ருங்க. நான் அதை ஏதாச்சும் பண்ணிக்கிறேன்.’’ 

வள்ளியின் குரலில் வெளிப்பட்ட பிடிவாதத்தில், கோபத்தில் மலரின் முகம் கவலைக்கு மாறியது. 

தாயிடம் அப்படியே ஒட்டிக் கொள்ள முடிந்த வள்ளியால் தந்தையிடம் முகம் கொடுத்துக் கூட பேச முடிவதில்லை. ஏனோ அவளுக்கு அவர் முகத்தைக் காணும் போது எல்லாம் இறந்து போன தன் அக்காளின் முகம் கண் முன் தோன்றுவதைப் தவிர்க்க முடிவதில்லை.    

ஆகையால் வள்ளி நேரடியாய் அவள் தந்தையிடம் பேசுவதே இல்லை. அவர் மேல் இருந்த கோபம் வடியும் என்ற நம்பிக்கையும் அவளுக்கு இல்லை. 

உடனுக்குடன் அனைத்தும் நேராகாது என்றுணர்ந்த மலர், “சரி… சரி மூஞ்சை தூக்கி வச்சிக்காதே… பாக்க சகிக்கல… நானே நீ செஞ்ச பசையை முழுசா சாப்பிடுறேன்… சரியா. உனக்கு கூட மிச்சம் வைக்க மாட்டேன்..’’ என சொல்ல வள்ளியின் முகத்தில் கீற்றாய் புன்னகை மலர்ந்தது.

“ம்…இப்போ தான் நீங்க குட் கேர்ள்.’’ என அவள் தன் அன்னையின் கன்னம் கொஞ்சி விளையாட, 

“கழுத வலிக்குது. சரி சரி… வில்லன் தம்பி மாடித் தோட்டத்தை பாத்துட்டு வரேன்னு மொட்டை மாடிக்குப் போனார். இன்னும் காணல. தம்பிக்கு கொஞ்சம் மோர் எடுத்துட்டுப் போய்க் கொடு வள்ளி. 

அப்படியே தம்பிக் கூட கொஞ்ச நேரம் பேசிட்டு வா. உங்க அப்பாகிட்ட மூஞ்சை தூக்கிட்டு அலையிற மாதிரி அவர்கிட்ட எதுவும் செஞ்சிடாத. தம்பி மாதிரி ஒருத்தர் நம்ம குடும்பத்துக்கு மருமகனா வர நாம கொடுத்து வச்சி இருக்கணும் வள்ளி.’’ 

மலரின் குரலில் இருந்த நெகிழ்ச்சியில் இருந்தே தாய் அவனை எத்தனை  மதிக்கிறார் என்பதை உணர்ந்துக் கொண்டவள், வெடித்துக் கிளம்ப முயன்ற உணர்வுகளை முயன்று அடக்கிக் கொண்டு,“ம்..’’ என்ற ஒற்றை வார்த்தையை விடையாய் கொடுத்தாள். 

குளிர்சாதனப் பெட்டியில் இருந்த மோரை ஒரு கண்ணாடி டம்ளரில் எடுத்துக் கொண்டவள், நகர மறுத்த கால்களை, சிரமப்பட்டு மொட்டை மாடியை நோக்கி நகர்த்தினாள். 

எத்துனை மெதுவாய் நடந்தும் இறுதியில், மூன்றாம் மாடி வந்தே விட, வில்லனின் முதுகுப்புறம் வள்ளியின் கண்களில் தென்பட்டது. 

அவனை நெருங்கி நின்றதும், “மோர்..’’ என டம்ளரை முகத்திற்கு நேராய் தூக்கிப் பிடிக்க, தொட்டி செடிகளுக்கு உரமிட்டுக் கொண்டிருந்தவன், நிமிர்ந்து அவளை ஆழ்ந்துப் பார்த்தான். 

அந்தப் பார்வையின் அழுத்தத்தில், வள்ளிக்கு மீண்டும் நடுக்கம் வரும் போல இருக்க, இம்முறை கைகளில் இருந்த டம்ளரை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். 

நேராய் நிமிர்ந்து நின்றவன், “இன்னும் கொஞ்சம் அழுத்திப் பிடிச்சா… கிளாஸ் உன் கைலையே உடைஞ்சிரும் வள்ளி… அதை முதல்ல திட்டுல வை..’’ என உத்தரவிட, 

ஆசிரியருக்குப் பணியும் மழலையாய் வள்ளி, அவன் சொன்னதைப் போல டம்ளரை திட்டி வைத்துவிட்டு வந்து நின்றாள். 

அவன் பார்வையை சந்திக்காமல் அவள் தலைக் குனிந்து நிற்க, “வள்ளி… நிமிந்து என்னைப் பாரு..’’ அவனின் கடினமான குரலில் வள்ளி அவனை வேகமாய் நிமிர்ந்து பார்த்தாள். 

உணர்வுகள் தொலைத்த முகத்தோடு, “நேத்து நைட்… போன்ல என்கிட்ட கேட்ட விஷயம் இன்னும் அப்படியே தான் இருக்கா..? எந்த மாற்றமும் இல்லையே..?’’ எனக் கூர்மையாய் கேட்க, 

வெளிப்படையான பேச்சில் சற்றே அவள் முகம் சிவந்த போதும், அவனை உறுதியாய் பார்த்தவள், எந்த மாற்றமும் இல்லை என்பதைப் போல தலை அசைக்க, 

“அப்போ சரி..’’ என்றவன் அவன் சட்டைப் பையில் இருந்து, ஒரு சிறிய நகைப் பெட்டியை வெளியே எடுத்து அருகில் இருந்த திட்டில் வைத்தான். 

வள்ளி அது என்னவோ என்பதைப் போல பார்க்க, அவள் கண்களுக்குள் ஆழ்ந்துப் பார்த்தவன், 

“நீ கழட்டிக் கொடுத்துட்டுப் போன தாலி தான் அதுல இருக்கு. நீ ஆசைப்பட்ட மாதிரி உனக்கு குழந்தை வேணும்னா, அதை எடுத்து உன் கழுத்துல போட்டுக்கோ.’’ என்றவன் அவள் என்ன செய்யப் போகிறாள் என்பதை அறிய, கைகளைக் கட்டியபடி அவளை கூர்மையாய் பார்த்தபடி நின்றான். 

வள்ளி சற்று நேரம் தயங்கி நின்றாலும், ஒரு முடிவிற்கு வந்தவளாய், அந்த சிறிய நகைப் பெட்டியை எடுக்க கைகளை நீட்டி இருந்தாள். 

அடுத்த நொடி என்ன நடந்தது என்றே தெளிவாய் அவளுக்கு புரியவில்லை. காதில் ‘நொய்’ என்ற சத்தத்தோடு, உலகமே வேகமாய் சுழலுவதைப் போன்ற உணர்வைத் தர, எரிந்த இடது கன்னத்தை உள்ளங் கைகளில் தாங்கியவள், நடந்த நிகழ்வை ஏற்க முடியாமல், வில்லனை திகைப்பாய் பார்த்தாள். 

ரௌத்திரமாய் அவள் முன் நின்றுக் கொண்டிருந்தவன், “அப்போ உங்க அம்மா நம்புற மாதிரியே, நீயும் நம்புற அவங்க செத்துடுவாங்கன்னு. அவங்களை சந்தோசமா அனுப்பி வைக்க குழந்தை வேற கேக்குற. 

உன்னை எல்லாம் ரொம்ப பெரிய போராளின்னு நினைச்சிட்டு இருந்தேன் வள்ளி. உனக்கு கூட தோணலை இல்ல அவங்களுக்கு வந்து இருக்க வியாதியை எதிர்த்து நின்னு போராடி ஜெயிக்கணும்னு. 

நீ கூட உணர்வுக்கு அடிமையாகி… உன்னோட சுயத்தை இழப்பேன்னு கொஞ்சம் கூட நினைக்கல. அப்போ நீயும் எல்லாரையும் மாதிரி தானா…? யார் எப்படி போன எனக்கு என்ன என் வீடு நல்லா இருக்கணும். அப்படி தானே…?

உங்க அம்மாவை பாத்தியா. எப்படி உருக்குலஞ்சி போய் இருக்காங்கன்னு. அதுக்கு காரணம் வெறும் வியாதின்னு மட்டும் நினைக்குரியா…? கண்டிப்பா இல்ல. 

அந்த வியாதி மேல அவங்களுக்கு இருக்க பயம். உங்க அம்மா கோவில், பண்டிகைன்னு வெளிய போய் வந்து எத்தனை வருஷம் ஆகுது தெரியுமா..?

உங்க வீடு.. வீட்டை விட்டா ஹாஸ்பிடல். இந்த ரெண்டு இடத்தையும் தாண்டி அவங்க வேற எங்கயும் போறது இல்ல. ஏன் தெரியுமா..?

அவங்களுக்கு நடந்த ஆப்ரேசன்ல ஒருபக்க மார்பை எடுத்து இருக்காங்க. உங்க அம்மா தன்னோட பெண்மையின் அடையாளமா அந்த மார்பை தான் மதிக்கிறாங்க. 

அந்த அடையாளம் இல்லாம அவங்களுக்கு தன்னை வெளிய காட்டிக்க பிரியம் இல்லை. இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்னு நினைக்காதே. 

உங்க அம்மா ஆபரேசனுக்கு மொதோ நாள்ல இருந்து எங்க அம்மா தான் அவங்க கூட துணைக்கு இருந்தாங்க. 

ஆபரேசனுக்கு மொதோ நாள்… உங்க அம்மா தன்னோட இடது மார்பை கைல பிடிச்சிட்டு… ரொம்ப நேரம் அழுதுட்டு இருந்தாங்களாம். 

‘பொண்ணா பொறந்துட்டு… இழக்கக் கூடாததை எல்லாம்… இழக்கப் போறேனே அண்ணி… நடக்கப் போற ஆப்ரேசன்ல நான் செத்துப் போயிட்டா கூட நல்லா இருக்குமே. இனி இந்த உடம்போட நான் எப்படி வெளிய நடமாடப் போறேன்.’ அப்படின்னு புலம்பிட்டே இருந்தாங்களாம்.  

ஆபரேசனுக்கு அப்புறம் அவங்க சொன்ன மாதிரியே, வெளிப் போக்கு வரத்தை முழுசா நிறுத்திட்டாங்க. 

ஆறு மாசத்துக்கு முன்னாடி.. உங்க அப்பா ஜெயில்ல இருந்து வெளிய வரும்போது கூட… அவங்களை சந்திக்க ரொம்ப கூச்சப்பட்டாங்க. 

அன்னைக்கு உங்க அப்பா.. உங்க அம்மா கையைப் பிடிச்சிட்டு அழுததை நீ பாத்து இருக்கணும் வள்ளி. உங்க அம்மா கொஞ்ச நாளா புது மனுசங்க யாரையும் சந்திக்கிறதே இல்ல. ஏன் அவங்க அறையை விட்டுக் கூட வெளிய வரதே இல்ல. 

ட்ரீட்மென்ட்க்கு கூட ஒழுங்கா ஒத்துழைக்கிறது இல்ல. அவங்க இழந்தது அவங்க உடம்புல ஒரு உறுப்பை. ஆனா என்னவோ தான் ஒரு பெண் அப்படிங்கிறத்துக்கான அடையாளத்தை தான் இழந்துட்டதா, எப்பவும் மறுகிகிட்டே இருக்காங்க. 

‘கனல்’ விக்யா இந்நேரம் இங்க இருந்து இருந்தா… இதெல்லாம் அவங்களுக்கு புரிய வச்சி இருப்பா. வெளி உலகத்தை அவங்க அம்மாவுக்கு காட்டி இருப்பா. மோசமான விளிம்பு நிலை மனிதர்கள் கூட உயிர் வாழ எப்படி போராடிட்டு இருக்காங்கன்னு அவங்க அம்மாவுக்கு உணர்த்தி இருப்பா. 

‘கேன்சர்’ அப்படிங்கிறதும் சாதாரண வியாதி தான்னு சொல்லி அதை எதிர்த்து நின்னு போராட அவங்க அம்மாவோட ஆன்ம பலத்தை அதிகப்படுத்தி இருப்பா. பெண்ணோட அடையாளம் அவளோட ‘பால்’ உறுப்புகள் இல்லை… அவளோட ‘தாய்மை’ உணர்வுன்னு புரியவச்சி இருப்பா.    

பெரியாரோட கொள்கைகள் மேல உனக்கு பிடிப்பு அதிகம்னு எனக்கு தெரியும் வள்ளி. ‘தாலியை’ நீ ஒரு அடிமை சின்னமா தான் நினைப்பேன்னு உன்னோட எழுத்துகள் எனக்கு சொல்லி இருக்கு. 

வாழ்க்கையோட எந்த நிலையிலையும் கொள்கைப் பிடிப்பு முக்கியம். இன்னைக்கு உங்க அம்மாவை சந்தோசப்படுத்த தாலியை கையில எடுக்குற…. உன் கொள்கைக்கு விரோதமா. 

நாளைக்கே இந்த வாழ்க்கை இன்னும் மோசமான நிலமையில உன்ன கொண்டு வந்து நிறுத்தலாம். அப்போ இன்னும் எந்த கொள்கையை எல்லாம் மாத்திக்குவ..? 

இப்படி வாழ்க்கையோட ஒவ்வொரு சூழ்நிலையிலையும் மாறிட்டே இருந்தேன்னா உனக்கான அடையாளம் காணமா கரைஞ்சி போயிரும். 

‘விக்யா’ வெறும் பேர் இல்ல. உன்னோட அடையாளம். தொலைக்கிறது சுலபம். தேடுறது கஷ்டம். தொலைக்கமாட்டேன்னு நம்புறேன். இப்ப கூட உன்ன அடிச்சது என்னோட ஆம்பளைத் திமிரை காட்ட இல்ல. 

என்னோட ‘விக்யாவை’ முழுசா அழிக்க துடிக்குற வள்ளி மேல இருந்த கோபத்தை கட்டுப்படுத்த வழி தெரியாம உன்கிட்ட காட்டிட்டேன்.எப்போ விக்யாவா உன்னால தெளிவா சிந்திக்க முடியுதோ… அப்போ நான் கொடுத்த அறையை எனக்கே திருப்பிக் கொடுத்துடு.’’ என்றவன் அங்கிருந்து விறுவிறுவென வெளியேற, வள்ளி விலகி செல்லும் அவனையே பார்த்தபடி நின்றிருந்தாள். 

கார் மேகம் சூழ 

காரிருளில் கிடந்ததென் பூமி. 

காற்றாய் நீயும் – மூடிய 

கார்மேகம் விக்க,  

வெளியில் வருமோ..

வெளிச்சமும் தருமோ – என் 

வானின் பகுத்தறிவு சூரியன்.