வில் – 19

‘ஜாதிகள்’ என்ற வழக்கொழித்து  

‘சமத்துவம்’ என்ற நீதி படைப்போம்.

வில்லன் தன்னை விட்டால் போதுமென அங்கிருந்து ஓடிவிட, வள்ளி மீன் பண்ணையில் இருந்து கிளம்ப அத்தனை அவசரம் காட்டவில்லை. 

ஜேம்ஸ் “போலாமா… மேடம்..’’ என இரண்டு மூன்று முறை அவளிடம் கேட்டும், வள்ளி அவனுக்கு பதில் சொல்லாமல், பண்ணைக்குள் நடந்த படி யாரையோ கண்களால் தேடிக் கொண்டிருந்தாள். 

ஜேம்சுக்கு அவள் யாரை தேடுகிறாள் எனப் புரியாவிட்டாலும், தானும் அவள் பின்னோடு அலைந்துக் கொண்டிருந்தான். 

நீண்ட சிமென்ட் தொட்டியை குனிந்து கழுவிக் கொண்டிருந்த வரதனைக் கண்டதும், வள்ளியின் விழிகள் பளிச்சிட அவரை நோக்கி நடந்தாள். ஜேம்சுக்கு வள்ளியின் நோக்கம் புரியாவிட்டாலும் தானும் அவளை தொடர்ந்து சென்றுக் கொண்டிருந்தான். 

வரதனை நெருங்கிய வள்ளி, “தாத்தா… எப்படி இருக்கீங்க..?’’ என உற்சாகமாய் நலம் விசாரிக்க, நிமிர்ந்து பார்த்த வரதன் தாத்தா, கண்களில் ஆச்சர்யம் மின்ன, 

“ஆயி… நீங்க எப்ப வந்தீக. வில்லன் தம்பி வெளிய கிளம்பி இருக்குமே இந்நேரம். இன்னைக்கு அவுக தம்பிக்கு பொண்ணு பாத்து உறுதி செய்ய தேனீ வரை போகணும்னு சொல்லிக்கிட்டு கிடந்துச்சே தம்பி. நீங்க வாரதைப் பத்தி தம்பிக்கு தகவல் சொன்னீங்களா இல்லையா..?’’ 

அவர் தொடர்ந்து கேள்விக் கேட்டுக் கொண்டே இருக்க, “தாத்தா… அதெல்லாம் உங்க தொம்பியை பாத்துட்டு தான் வறேன். அப்படியே உங்களை பாத்துட்டு போலாம்னு வந்தேன்.’’ என்றவள் எதிரே இருந்த திட்டில் அமர்ந்தாள். 

அருகில் இருந்த தொட்டி நீரில் கைகளை கழுவிக் கொண்டவர், “தாயி சாப்டீங்களா..? இந்த தம்பி யாரு..?’’ என வினவ, தனக்கு பின்னால் நின்றுக் கொண்டிருந்த ஜேம்சை திரும்பிப் பார்த்து புன்னகைத்தவள், “என் கூட வேலை செய்யிறவர். பேரு ஜேம்ஸ்.’’ என ஜேம்சை அவருக்கு அறிமுகப்படுத்தி வைக்க,   

“ரொம்ப சந்தோசம் தாயி… நம்ம தென்னை மரம் காச்சி இருக்கு… ரெண்டு இளநி சீவியாறேன்..கொஞ்சம் பொறுங்க’’ என்றவர், “அடேய் பழனி…..!’’ என்று யாருக்கோ குரல் கொடுத்தபடி அங்கிருந்து விலகி சென்றார். 

ஜேம்ஸ் தனக்கு அருகில் காலியாய் இருந்த திட்டில் அமர்ந்த படி, “இந்த தாத்தா யாரு மேடம்…. உங்களுக்கு தெரிஞ்சவரா..?’’ என வினவ, அவனை திரும்பி பார்த்தவள், 

“எஸ் ஜேம்ஸ்… வில்லன் கூட பர்ஸ்ட் டைம் பண்ணைக்கு வரும் போது…. அவர் அறிமுகப்படுத்தி வச்சாரு. ரொம்ப நல்ல மனுசன்… அவரை பாத்து ஊருக்குப் போறதை சொல்லிட்டு போகணும்னு தோணுச்சி… அதான் தேடி வந்தேன்.’’ என பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வரதன் தாத்தா இரண்டு பெரிய இளநீரை சுமந்தபடி, அவர்களை நோக்கி வந்திருந்தார். 

தேன் போல் இனித்த இளநீரை இருவரும் சுவைத்து முடித்ததும், எழுந்து நின்றவள், தன் கைப்பையை திறந்து, சிறிய ஐபாட் ஒன்றை எடுத்தாள். 

அதை வரதன் தாத்தாவின் கைகளில் கொடுத்தவள், “தாத்தா… இந்த குட்டி ரேடியோல உங்க சரோஜா தேவி.. எம்.ஜி.ஆர்.. ரெண்டு பேரும் ஜோடியா நடிச்ச எல்லா படத்தோட பாட்டும் இருக்கு. ஓய்வா இருக்குற நேரத்துல போட்டு கேளுங்க. உங்களுக்கு கொடுக்குறதுக்காக ரொம்ப முன்னாடி வாங்கி வச்சேன். இப்ப தான் கொடுக்க டைம் கிடைச்சது..’’ என்றவள், அதை எப்படி இயக்குவது என அவருக்கு சொல்லிக் கொடுக்க, அதை கற்றுக் கொண்டவரின் விழிகளில் நீர் திரள். 

“அச்சோ என்ன ஐயா இது…’’ வள்ளி பதறிப் போய் வினவ, தன் தோளில் இருந்த துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டவர், 

“எனக்கும் எம் பொஞ்சாதிக்கும் ஆறு பசங்க சாமி. பேரப் பிள்ளைங்க மட்டும் எட்டு பேர் இருக்காக. எல்லாரும் வசதியா டவுன்ல இருக்காக. யாரும் வந்து இந்த கிழவன் கிழவியை எட்டிப் பாக்குறது கூட இல்ல சாமி. மொதோ முறை… என் அம்மாவுக்கும், கிழவிக்கும் அப்புறம் எனக்குன்னு ஒரு பொருள் வாங்கி கொடுத்த மகராசி நீ தான் சாமி. ரொம்ப சந்தோசம் தாயி..’’ அவர் நெகிழ்ந்து போய் பேசியதில் வள்ளியின் விழிகளிலும் நீர் திரண்டு விட்டது.

‘இந்த உலகம் மொத்தமும் எதிர்பார்ப்பது, பகிர்தலும், பகிர்வித்தலுமாய் துளி அன்பை தான் போல’ என மனதிற்குள் எண்ணிக் கொண்டவள்  தன்னை முயன்று சமன்படுத்திக் கொண்டு,  

“அதெப்படி தாத்தா… நானும் வில்லனும் இருக்கும் போது நீங்க எப்படி இப்படி  சொல்லலாம். அடுத்தவாட்டி உங்களை பாக்க வரும் போது… நான் உங்களுக்கு சரோஜாதேவி சோப்புடப்பா வாங்கிட்டு வறேன் சரியா..!’’ வள்ளி கண்சிமிட்டி சொல்ல, கண்களில் துளிர்த்த நீரோடு, வரதன் தாத்தா வெட்கப் புன்னகைப் பூத்தார். 

அந்த காட்சி காண்பதற்கு பேரழகாய் இருந்தது. “போ தாயி….என்ன வச்சி பகடி பேசிக்கிட்டு..’’ என்று அவர் மீண்டும் வெட்கப்பட, வள்ளி பொங்கி சிரித்தாள். அதுவரை வெறும் பார்வையாளனாய் இருந்த ஜேம்ஸ் கூட சற்றே முறுவலிக்க அந்த சூழலே வெகு ரசனையாய் இருந்தது. 

“சரி தாத்தா… நான் ஊருக்கு கிளம்புறேன். நேரம் கிடைக்கும் போது கண்டிப்பா உங்களை பாக்க வருவேன்.’’ என்றுவிட்டு அவரோடு சில சுயமி புகைப்படங்களை எடுத்து முடித்தவள், ஜேம்சோடு மீண்டும் தன் பயணத்தை துவக்கினாள். 

ஏனோ முதியவரின் கண்களில் இருந்த, பிள்ளைப் பாசம் அவளின் அடி நெஞ்சம் வரை தாக்கியிருந்தது. 

“அவங்களுக்கு என்ன…?’’ என இதுவரை கல்லாய் இருந்த மனது, முதியவரின் கண்ணீரில், “தன் தாயும் தனக்காய் இப்படித் தான் ஏங்கிக் கொண்டு இருப்பாளோ..?” என்ற ஒற்றை எண்ணத்தில் கற்பூரமாய் கரையத் தொடங்கி இருந்தது. 

ஏதேதோ எண்ணியபடியே பயணித்துக் கொண்டு வந்தவள், திடுமென ஜேம்சை நோக்கி, 

“ஜேம்ஸ் மதுரையில இருந்து திருச்சி எத்தனை கிலோ மீட்டர். ஈசி ரீச் பஸ்ஸா… இல்ல ட்ரைன்னா..?’’ 

வள்ளி அப்படிக் கேட்டதும், திடீரென திருச்சியைப் பற்றி ஏன் கேட்கிறாள் என விளங்காவிட்டாலும், 

“நேசனல் ஹைவேஸ்ல போனா வெறும் 132 கிலோ மீட்டர்ஸ் தான் மேடம். கார் எடுத்துட்டு போனா ஒன்றரை மணி நேரத்துக்குள்ள போயிடலாம்.’’ ஜேம்ஸ் அப்படி சொன்னதும், 

“ஓ… அப்ப ஓகே. அடுத்து வர பெட்ரோல் பங்க்ல கார் டேங்க் பில் பண்ணிக்கோங்க. எனக்கு உடனே திருச்சி போகணும். நான் ஆனி ஐயாவுக்கு போன் போட்டு சொல்லிடுறேன்.’’  என வள்ளி பதில் கொடுத்தாள். 

“என்ன மேடம் திடீர்னு திருச்சிக்கு டூர். அங்க ஆத்துல மண்ணு அள்றதுக்கு எதிரா மக்கள் போராடிட்டு இருக்காங்களாமே. அதை எதுவும் ஸ்பெஷல் கவரேஜ் எடுக்கப் போறோமா..? ஏன்னா… நீங்க காரணம் காரியம் இல்லாம எங்கயும் நகர மாட்டீங்களே..!’’ ஜேம்ஸின் விடை அறிந்து கொள்ளும் ஆவல் வள்ளியின் உதடுகளில் இள முறுவலை மலர செய்தது. 

“இது அபிசியல் விசிட் இல்ல ஜேம்ஸ். பர்சனல் விசிட். திருச்சி நான் பிறந்து வளர்ந்த ஊர். என்னவோ ரொம்ப நாளைக்கு அப்புறம் அம்மாவை பாக்கணும்னு தோணுச்சு. அதான் உடனே கிளம்பிட்டேன். ‘’ 

அவள் அப்படி சொன்னதும் ஜேம்ஸ் வண்டியை உடனடியாய் நிறுத்த, அந்த அதிர்வு ஏற்படுத்திய குலுங்கலில், இருவருமே முன்னால் சாய்ந்து மீண்டும் இருக்கையில் நிலை கொண்டனர். 

வள்ளி ஜேம்சை கேள்வியாய் பார்க்க, ஜேம்ஸோ அதிர்ந்து போய் அவளைப் பார்த்தவன், “மேம்… அப்போ சென்னையில… ஒரு கண்ணு தெரியாத அம்மா உங்க கூட இருக்காங்கலே… அவங்க…?’’ 

அவன் அதிர்ச்சி ஏனோ வள்ளிக்கு சிரிப்பையே தோற்றுவித்தது. “ஜேம்ஸ் வண்டியை எடுங்க. திருச்சி போக இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கு. இதுவரைக்கும் நான் யாரு..? நான் யாருன்னு..? இல்லாத மூளையை கசக்கி விடை கண்டுபிடிக்க முயற்சி செஞ்சிட்டு இருப்பீங்க இல்ல.

இன்னைக்கு நானே என்னோட கதையை ஆதியோட அந்தமா உங்களுக்கு புட்டு புட்டு வைக்குறேன். ட்ரைவ் பண்ற உங்களுக்கும் போர் அடிக்காது. ட்ராவல் பண்ற எனக்கும் போர் அடிக்காது. எப்படி என்னோட ஐடியா..?’’ 

வள்ளி இலகுவாய் வினவ, ஜேம்ஸ் தலை அசைத்து அவளின் ஆலோசனையை வரவேற்றான். 

அதற்குள் ஒரு எரிபொருள் நிறுவனம் குறுக்கிட, வண்டியில் எரிபொருளை நிரப்பி முடித்ததும் அவர்கள் பயணம் தொடங்கியது. 

சாளரத்தின் வழியே நுழைந்து உறவாடும் தென்றல் ரசித்தபடி, வெளி உலகில் பார்வையை பதித்து இருந்த வள்ளி, மென் குரலில் தன் கடந்த கால கதையை ஜேம்சிடம் பகிர தொடங்கினாள். 

திருச்சி மலைக்கோட்டை பார்வைக்கு தென்படும் போது வள்ளியின் கதை நிறைவுற, ஜேம்சிடம் எந்த பதிலும் இல்லை எனவும், அவனை திரும்பி பார்த்தவள், அவன் முகம் கலங்கி இருப்பதைக் கண்டு, லேசாய் முறுவலித்து அவனை நம்பிக்கையாய் பார்த்தாள்.  

“என் கதை எப்படி இருந்துச்சி ஜேம்ஸ்… நிறைய ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ்சோட சூப்பரா இருந்துச்சா..?’’ 

வள்ளியின் கேள்விக்கு ஜேம்சால் உடனே பதில்சொல்ல முடியவில்லை. கரகரத்த தொண்டையை சற்றே சரிபடுத்திக் கொண்டவன், 

“உங்க லைப்ல இவ்ளோ நடந்து இருக்கு. நீங்க எப்படி மேடம் சாதரணமா சிரிச்சிட்டு இருக்கீங்க. நீங்க உண்மையிலேயே ரொம்ப கிரேட் மேடம். நான் வேற உங்க நிலமை புரியாம உங்க பின்னாடி சுத்தி உங்களுக்கு தொல்லைக் கொடுத்திட்டேன். ரொம்ப சாரி மேடம்.’’ 

அவன் தன்மையாய் மன்னிப்பை வேண்ட, “நீங்க என்ன தப்பு செஞ்சீங்க ஜேம்ஸ். சொல்லப் போனா எல்லாரும் ஒதுங்கிப் போன என் பின்னாடி… எனக்கு தெரிஞ்சி தைரியமா சுத்தின ஒரே மனுஷன் நீங்க தான். 

ஏன்னா ஆம்பளைங்க என்ன தான் பொது வெளியில பெண் சுதந்திரம்… சமஉரிமைன்னு கருத்து பேசினாலும்… அவங்களுக்கு எல்லாம் குடும்பம் நடந்த ஒரு குடும்ப குத்து விளக்கு தானே தேவைப்படுது. 

போராட்ட குணம் உள்ள பொண்ணுங்களுக்கு பேஸ் புக்ல வேணா ஆயிரம் லைக்ஸ் கமண்ட்ஸ் கிடைக்கலாம். ஆனா மேட்ரி மோனியல்ல ஒரு லைக் என்ன…. வியூ கூட கிடைக்காது. நம்ம சமூகத்தோட நிலைமை அது தான்.

நான் ஒரு அதிரடி ஆளுன்னு தெரிஞ்சும் சும்மா என் பின்னாடி சுத்திட்டு இருப்பீங்க இல்ல. உங்களோட அந்த தைரியம் உண்மையா எனக்கு ரொம்ப பிடிச்சது. 

ரொம்ப ஓபனா ஒரு உண்மையை சொல்லவா..? உங்க மேல லவ் வரல… ஆனா ஒரு பிடித்தம் இருந்துச்சி. வில்லன் மறுபடி என் லைப்ல வராம இருந்து இருந்தா, உங்களை கல்யாணம் பண்ணி இருப்பேனா தெரியல. ஏன்னா எனக்கு பெருசா கல்யாணம் மேல எல்லாம் நம்பிக்கை இல்ல. லிவிங் டுகதர் மாதிரி என் லைப்பை என்னோட பீலிங்சை உங்களோட ஷேர் பண்ணிட்டு இருந்து இருப்பேன்.’’ அவள் அப்படி சொல்லவும், 

“இப்படி தைரியமா பேச கூட உங்களால தான் மேடம் முடியும். நானும் ரொம்ப ஓபனா ஒரு உண்மையை சொல்லவா..?

நான் என்ன தான் உங்க பின்னாடி சுத்திட்டு இருந்தாலும் மனசுக்குள்ள ஒரு பயம் ஓடிட்டே இருக்கும். இந்த பொண்ணு செம பயர். நீ ஒரு வாழை மட்டை. உனக்கெல்லாம் செட் ஆகாதுடான்னு. 

என்னதான் புரட்சி பேசுற உங்க பின்னாடி சுத்தி வந்தாலும் நான் ரொம்ப சாதாரண மனுஷன் தான் மேம். நாம பேசி பழகினதுக்கு அப்புறம் நீங்க கல்யாணத்துக்கு மறுப்பு சொல்லி இருந்தா கண்டிப்பா நம்ம ரிலேசன்ஷிப் ப்ரேக் அப் ஆகி இருக்கும். 

இப்ப கூட உங்களை யாராச்சும் சைட் அடிச்சா… லைட்டா ஸ்டமக் பர்ன் ஆகத் தான் செய்யுது. அப்படி பர்ன் ஆகும் போது எல்லாம் அடிக்கடி ஐஸ்கிரீம் சாப்பிட்டா சரியாயிடும்னு நினைக்கிறேன் அதுவும் உங்க செலவுல… நீங்க என்ன சொல்றீங்க..?’’ என அவளிடமே கருத்துக் கேட்க, 

இத்தனை நாளாய் ஜேம்சிற்கு நம்பிக்கை கொடுத்துவிட்டு, ஏமாற்றி விட்டோமோ என்ற உணர்வில் இருந்தவள் மனம் விட்டு சிரித்தாள். 

“ஓசி ஐஸ்கிரீமுக்கு அடி போடுறதைப் பாரு…. நீங்க சரியான ஸ்நாக்ஸ் டப்பா ஜேம்ஸ்..’’ என சொல்லிவிட்டு, மீண்டும் சிரிக்க, 

“மேம் எது நடந்தாலும் நமக்கு சோறு முக்கியம்… அதோ அங்க பாருங்க பெரிய ஐஸ்கிரீம் லேன்ட் இருக்கு. எனக்கு வண்டி ஓட்டி செம டயர்டா இருக்கு. சோ… நாம ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டு அப்புறம் நீங்க போக வேண்டிய இடத்துக்கு போகலாம்..’’ என சொல்ல வள்ளியும், 

“வேண்டாம்னு சொன்னா என்ன இங்கயே இறக்கிவிட்டு போனாலும் போயிடுவீங்க. வாங்க போகலாம்..’’ என மலர்வுடனே சொல்ல, இருவரும் அந்த பனிக்கூழ் உலகில் சிறிது நேர்த்தை கழித்துவிட்டு மீண்டும் தங்கள் பயணத்தை துவக்கினர். 

வள்ளி சில ஆண்டுகளில் மாற்றம் பெற்றுவிட்ட, வீதிகளை விழி விரிய பார்த்துக் கொண்டே, தன் வீட்டிற்கு செல்லும் வழிதனை ஜேம்சிற்கு விளம்பிய படி பயணித்துக் கொண்டிருந்தாள். 

வீட்டின் முன்னால், தலை முழுக்க ஆரஞ்சு நிற பூக்களை கொத்து கொத்தாய் தாங்கி நின்ற கொன்றை மரத்தைக் கண்டதும், நெஞ்சு கூட்டிற்குள் ஏதோ ஒரு வித உணர்வு வந்து அடைத்தது.  

“இதோ இந்த பச்சைக் கலர் கேட் வீடு தான். இங்கயே முன்னாடி நிறுத்துங்க.’’ என உரைக்க, ஜேம்ஸ் வண்டியை ஓரமாய் நிறுத்தினான். 

பள்ளி விட்டு வீடு திரும்பிய சிறுமியாய் குதூகலத்துடன், பச்சை நிற இரும்புக் கதவுகளை திறந்ததும், அவள் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது, பிறந்த நாள் பரிசாய், தந்தை அவளுக்கு அளித்த, டாபர்மேன் வகை டாமி முதல் ஆளாய் ஓடி வந்து உற்சாகத்தில் அவளை கீழே தள்ளி அவள் முகம் முழுக்க நக்கி விளையாட தொடங்கியது. 

“ஏய் டாமி…. கீப் கொய்ட்….’’ அவள் டாமியை அடக்க முயல, அது தன் இதனை ஆண்டுகளுக்கான அன்பின் ஏக்கத்தை அவளிடம் காட்டிக் கொண்டிருந்தது. 

எல்லாம் ஜேம்ஸ் கதவை திறந்துக் கொண்டு உள்ளே வரும் வரை மட்டுமே. ஜேம்ஸ் வாசல் படியில் கால் வைத்ததும், மோப்ப சக்தியால் அன்னியர் வருவதை உணர்ந்துக் கொண்ட டாமி, வள்ளியை விட்டுவிட்டு, ஜேம்சை பார்த்து முறைத்துக் கொண்டு குரைக்க தொடங்கியது. 

நாயின் உயரத்தைக் கண்டு பீதிக்கு உள்ளான ஜேம்ஸ், வெளி சுவற்றோடு பல்லி போல ஒட்டி நிற்க, எழுந்து நின்றவள், டாமியின் கழுத்தில் இருந்த பட்டையை கையில் பிடித்து இழுத்து, 

“டாமி…. டோன்ட் சவுட்…. என்னோட பிரண்ட் அவரு….’’ என டாமியை அதட்ட, அடுத்த நொடி அது அமைதியின் சிகரமாய், மீண்டும் வள்ளியிடம் விளையாட தொடங்கிவிட்டது. 

ஆனால் நாய் குரைத்த ஒலியில் வீட்டின் உரிமையாளர் வாசலுக்கு வந்திருந்தார்.    

வாயிலில் தந்தையை கண்டதும் வள்ளியின் முகம் நொடியில் உணர்வுகளை தொலைத்து நிர்மலமாகியது. 

வள்ளி அவரை யாரோ போல பார்க்க, அவரோ வள்ளிக்கு பின்னால் நின்றுக் கொண்டிருந்த ஜேம்சை, எடை போடும் பார்வை பார்த்து வைத்தார். 

ஜேம்ஸோ வழிதவறிய ஆட்டுக் குட்டியாய் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான். 

உன் அணுவின் அணுவாய் இருந்தாலும்..

உன் விதையின் விருட்சமாய் இருந்தாலும் 

உன் உயிரின் நகலாய் பிறந்தாலும்…

உணர்வால் எதிர் துருவம் நாமே.

வில் நாண் ஏறும்.