Advertisement

வில்லன் சொன்னதைப் போல, அவள் விருப்பத்திற்கு மாறாய் அவளை யாரும் எச்செயலையும் செய்ய வைத்து விட முடியாது. 

அன்று தந்தையைக் கண்டதும், தமக்கையின் வாழ்க்கை கண் முன் விரிய, அத்தோடு, தனக்குப் பிடித்தவன், எப்படி அவருடன் உறவாடலாம் என்ற வஞ்சமும் சேர்ந்துக் கொள்ள, வள்ளி முற்றிலும் தன்னிலை பிறழ்ந்து, சிந்தை இழந்து வார்த்தைகளை சிதறடித்து இருந்தாள். 

நேரம் அவளை அமைதி கொள்ள வைத்தது. நேரம் அவளை சிந்திக்க வைத்தது. மீண்டும் மதியோடு மேற்கொண்ட பயணம் அவளை விக்யாவாய் மாற்றியது.

கண்டு வந்த வளர்ச்சியை கட்டுரையாய் வடிக்கும் போது, ‘இதையெல்லாம் பாத்து தான் நீ செட்டான்னு கேட்ட வள்ளி’ என்று மனசாட்சி இடித்துரைக்கும் போது குற்ற உணர்ச்சியில் குறுகிப் போகும் தருணமும் வாய்த்தது. 

எல்லாவற்றிற்கும் மேலாய், போலியான அன்பு என்று புறம் தள்ளிய தனம் அம்மா, அவளுக்கு தேவையான இடைவெளிக் கொடுத்துவிட்டு, மீண்டும் அதே தெளிந்த அன்போடு பழக முற்பட்ட போது, அந்த குற்ற உணர்ச்சி பெருமடங்காய் பல்கி வளர்ந்தது. 

தன்னுடைய நடத்தைக்கு, ஆனி ஐயாவிடம், தனம் அம்மாவிடமும் மனமார மன்னிப்பை வேண்டியவள், அடுத்த நாள் முதல் கல கல விக்யாவாய் மாறிவிட்டாள். அவளோடு அந்த இல்லமும் கலகலப்பாய் மாறிப் போனதில் வியப்பென்ன இருக்க முடியும். 

வள்ளியின் மனதின் ஏதோ ஒரு மூலை, வில்லனிடம் மன்னிப்பை வேண்டு என்று சதா அவளை நச்சரித்துக் கொண்டே இருக்கும். வள்ளியும் ஒவ்வொரு முறை கட்டுரைப் பகுதியை அனுப்பி வைக்கும் போதும், 

“ஐயம் சோ சாரி…’’ என்ற வார்த்தைகளை எழுதிவிட்டு பின்பு அதை அழித்துவிடுவாள். ஏனோ நடந்தது நடந்தபடியே கடந்து போகட்டும் என்ற மனதின் மற்றொரு குரலுக்கு செவி சாய்ப்பதால் அந்த மன்னிப்பு வில்லனை  சென்று அடையவேயில்லை.  

இந்த நொடி அவன் கண் முன் வந்து நின்றால், அனைத்தையும் புறம் தள்ளிவிட்டு, ஒரு சாதாரண நண்பனாய் அவனிடம் உரையாட முடியும் என்ற நம்பிக்கை வள்ளிக்கு இருந்தது. 

நாளை மறுநாள் அரசனூரை விட்டுக் கிளம்ப வேண்டும். ஏதோ பிறந்து வளர்ந்த மண்ணை விட்டுப் பிரிவதைப் போல ஒரு பிரிவாற்றாமையை இந்த கிராமம் அவளுள் தோற்றுவித்து இருந்தது.

அரசனூர் கிராமத்தைப்பற்றி முழுக் கட்டுரையையும் எழுதி முடித்தாயிற்று. ஆனாலும் என்னவோ தன் எழுத்தில் குறைவதைப் போல அவளுள் ஒரு எண்ணம் ஓடிக் கொண்டே இருந்தது. 

அரசனூரின் முன்னேற்றம் பற்றி மட்டும் வள்ளி தன் எழுத்துக்களில் வார்க்கவில்லை. ஆங்காங்கே இருந்த குறைகளையும் சுட்டிக் காட்ட அவள் தவறவில்லை. 

சமத்துவ தர்மத்தை நோக்கி அவர்கள் செயல்பட்டாலும், அவர்கள் கிராமத்தில் ஜாதி வேறுபாடுகள் முற்றிலும் கலையைப்படவில்லை என்பதை வள்ளி அங்கு வசிக்க நேர்ந்த மூன்றாம் நாளே கண்டுக் கொண்டாள். 

ஜாதி, மத பெருமை பேசி வீண் சச்சரவுகளில் அவர்கள் ஈடுபடுவதில்லையே தவிர, திருமணத்திற்கு வரன் தேடுகையில் தங்கள் இனத்தில் பிறந்த மணமக்களையே தேடினர். 

அதோடு அவரவர் ஜாதிக்கென்று ஏற்படுத்தப்பட்டிருந்த குல தெய்வ கோவில்களில் பிற இனத்தவரை அனுமதிக்க மறுத்தனர். 

சிலமுறை, ஜேம்ஸின் பெயர் கேட்டு, அவன் கிருத்துவன் என அறிந்ததும், அவனுடன் சற்று எட்டி நின்று பழகினார் போல கூட வள்ளிக்கு தோன்றியது. 

தன்னுடைய இந்த ஆதங்கத்தை எல்லாம் வள்ளி, ஆனி ஐயாவிடம் பகிர்ந்துக் கொண்ட போது, அவளைப் பார்த்து நம்பிக்கையாய் முறுவலித்தவர், 

“வள்ளிமா…. இங்க பிறந்த நிமிஷம் மொதோ குழந்தைக்கு தாய்ப் பால் கொடுத்து வளக்குற மாதிரி… நீ இந்த இனம், இந்த மதம், இந்த ஜாதி… அப்படிங்கிற அடையாளத்தை திணிச்சே குழந்தைகளை வளக்குறாங்க. 

அப்படி ஆதியில இருந்து ரத்தத்துல ஊறின ஒரு விசயத்தை உடனே எல்லாம் மாத முடியாது. கொஞ்சம் கொஞ்சமா தான் அவங்களை நம்ம பக்கம் திருப்ப முடியும். 

பத்து வருசத்துக்கு முன்னாடி ஜாதிப் பேரை சொல்லிக்கிட்டு இங்க தினம் ரெண்டு பேர் வெட்டிக்கிட்டு செத்துப் போவான். இப்ப அதை சொன்னா நம்ப முடியுமா உன்னால..?

தன் குழந்தைங்க படிப்பு நல்லா இருக்கணும், நல்ல மருத்துவவசதி வேணும், விவசாயம் பாக்க தண்ணி வேணும், மின்சாரம் தடை இல்லாம கிடைக்கணும்..  இப்படி பல வேணும் வேணும்கிற அடிப்படை வசதிக்கான போராட்டம் தான் எங்க மக்களை ஜாதி, மத பேதம் இல்லாம பொது வெளியில செயல்பட வைக்குது. 

அவங்க வீட்டுக்குள்ளையும் இந்த பொது புத்தி சீக்கிரம் வரும்னு நான் நம்புறேன். அஞ்சி வருசத்துக்கு முந்தி வரைக்கும் பிள்ளைங்க ஜாதி விட்டு ஜாதி காதலிச்சா ஆணவக் கொலை தான் நடக்கும். 

இப்போ ஊர் பொது பஞ்சாயத்தை கூட்டி…. பெத்தவங்ககிட்ட இருந்து விடுதலைப் பத்திரம் வாங்கிக் கொடுத்துட்டு… அதுக்கு அப்புறம் அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்குறோம். 

பெத்தவங்க சொத்து சுகம் வேணாம்னு திடமா நிக்குற சில பிள்ளைங்களால அப்படி சில கல்யாணமும் நம்ம ஊர்ல நடந்துட்டு இருக்கு.

ஏதோ எங்களால முடிஞ்ச அளவு உயிரிழப்பு இல்லமா பாத்துகிறோம். ஆனா மனசு காயப்படுறதை தடுக்க முடியுதா என்ன..?

பெத்தவங்களே பிள்ளைகளுக்கு மண்ணை வாரி இறைச்சி சாபம் கொடுக்குறதைப் பாக்கும் போது… என்னத்த சொல்ல…? போமா. இன்னும் கொஞ்ச காலத்துல, இந்த நிலைமை மாறினா சந்தோசந்தேன்.’’ 

ஆதீத வருத்ததோடு அவர் தன் மனதை வெளியிட்ட பிறகு, அப்படி ஒரு மாற்றம் சீக்கிரம் நிகழ்ந்தால் நல்லது என்ற எண்ணம் வள்ளியின் நெஞ்சத்தில் வலுப் பெற்றது. 

“மேம்….’’ தன் அறை வாயிலில் கேட்ட குரலில், வள்ளி பழைய நினைவுகளில் இருந்து மீண்டவலாய் வாயிலைப் பார்த்தாள். 

அங்கு ஜேம்ஸ் நின்றுக் கொண்டிருந்தான். கைகளில் அவன் இங்கு வரும் போது கொண்டு வந்த பெரிய பெரிய பயணப் பொதிகள். 

“மேம்… இன்னும் டூ டேஸ்ல நாம ஊருக்கு கிளம்பனும் இல்ல. என் திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ண ஆரம்பிச்சிட்டேன். என்னோட கேமரா ஆங்கிள் டூல்ஸ் எல்லாம் உங்க ரூம்ல இருக்கு. எடுத்துக்கவா..?’’ 

ஜேம்ஸ் பணிவாய் அனுமதி வேண்டி நிற்க, வள்ளியோ இயந்திரமாய் தலை அசைத்து அவனை உள்ளே அனுமதித்தாள். 

நாளை மறுநாள் இங்கிருந்து கிளம்ப வேண்டும். ஏனோ அந்த எண்ணம் அதனை உவப்பானதாய் இல்லை. 

தன் பாட்டில் நீண்டிருந்த கம்பிகளை குறுக்கி தன் பயணப் பையில் அடைத்தபடி ஜேம்ஸ், வள்ளியின் மனநிலைப் புரியாமல், 

“மேம்… இந்த கிராமத்தை ரொம்ப மிஸ் பண்ணப் போறேன் மேம். முக்கியமா தனம் அம்மா சமையலை. நீங்க வந்தாலும் வாராட்டியும் இயர்லி ஒன்ஸ் நான் இங்க ஒரு விசிட் போடலாம்னு இருக்கேன் மேம். 

இந்த நிமிஷம் இந்த கிராமத்துல மாற்றத்தை ஏற்படுத்தி நாம இங்க வந்து தங்க காரணமா இருந்த வில்லன் சாருக்கு ஒரு ராயல் சல்யூட் கொடுத்தே ஆகணும்.’’

ஜேம்ஸின் கடைசி வார்த்தைகள் வள்ளியின் முகத்தில் குளுமையான பனி நீரை வாரி இறைத்ததைப் போல, சட்டென அவள் மனதில் ஒரு மின்னலை தோற்றுவித்தது.  

ஜேம்ஸ் தன் போக்கில் எதையோ பேசிக் கொண்டிருக்க, “ஜேம்ஸ் எனக்கு அவசரமா ஒரு வேலை இருக்கு. நான் வெளிய கிளம்புறேன்.’’ என்றவள் அவன் பதிலும் காத்திருக்காமல், கையில் அகப்பட்ட தன் பர்சை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினாள். 

ஆனி ஐயாவின் எதிரே சென்று நின்றவள், “ஐயா இப்ப வில்லன் எங்க இருப்பார்..?’’ என பதட்டமாய் வினவ, அவரோ என்னவோ ஏதோ என பயந்து, 

“இந்நேரம் தம்பி மீன் பண்ணையில தான்மா இருக்கும்…ஏன்மா..?’’ அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாது,

“எனக்கு உடனே அங்கப் போகணும். எனக்கு ஏதாச்சும் வண்டி ஏற்பாடு பண்ணிக் கொடுக்க முடியுமா..?’’ 

வள்ளி ஆனி ஐயாவிடம் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, வள்ளி எங்கே அத்தனை அவசரமாய் கிளம்புகிறாள் என்று காண அவள் பின்னோடே வந்திருந்தான் ஜேம்ஸ். 

அவனைக் கண்டதும், சற்றே முறுவலித்த ஆனி ஐயா, “நம்ம காரு இருக்கு தாயி… நீயே ஓட்டிட்டு போனாலும் சரி… இல்ல ஜேம்ஸ் தம்பிய கூட கூட்டிட்டு போனாலும் சரிதேன். வழி நீங்களா விசாரிச்சி போயிடுவீகளா..? இல்ல வழி காட்ட ஆள் அனுப்பவா..?’’ 

அவர் அப்படிக் கேட்டதும், “இல்லைங்க ஐயா…. எனக்கு வழி இன்னும் நியாபகம் இருக்கு. நீங்க வண்டிக் கொடுத்தா போதும். நான் ஜேம்ஸ் கூட போய்ட்டு வந்திடுறேன்..’’ 

அவளின் பதிலில் திருப்தியுற்றவர், “சரி தாயி உள் அறையில சாவி இருக்கும் போய் எடுத்துக்க. பாத்து பத்திரமா போயிட்டு வாங்க..’’ என்றவர் மீண்டும் தான் பார்த்துக் கொண்டிருந்த கணக்கு புத்தகத்தில் மூழ்க, ஜேம்ஸ் உள்ளே சென்று சாவியைக் கொணர்ந்தான். 

அவர்களின் பயணம் வேடன் புதூரில் அமைந்திருந்த ஜிகுனு மீன் பண்ணையை நோக்கித் தொடங்க, வள்ளியின் சிந்தைக்குள் ஆயிரம் கேள்விகள். 

அதில் ஒற்றைக் கேள்விக்கேனும் செவ்வாய் திறப்பானோ வில்லன்..?

தீயினால் சுட்டப் புண் 

உள்ளாறும் – ஆருமோ 

அவள் நாவினால் 

சுட்ட வடு. 

Advertisement