“வாவ்… கனல்ல அரசியலும் இளைய சமூதாயமும் அப்படிங்கிற தொடர் நீங்க எழுதினது தானே. மேம் நான் உங்க கருத்துக்களுக்கும் எழுத்துக்கும் பெரிய ரசிகன்..’’ என ரபீக் உரைக்க,
மகேனோ, “இப்போ கூட கரன்ட்டா… விடியலும் ஒரு கிராமமும் அப்படின்னு ஒரு ரியல் ஆர்டிகிள் எழுதிட்டு இருக்கீங்க இல்லையா…? நான் உங்க பேஸ் புக் பாலோவர் மேம்..’’ என அடக்கமாய் தெரிவிக்க, அவளின் தோழிகளும் அவளை பிரமிப்பாய் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“விக்யான்ற பேர் இதழியல் துறையில இப்போ ரொம்ப பேமஸ்னு தெரியும். பட் அது நீன்னு தெரியாது டீ. உன்னை எங்களோட பிரண்ட்னு சொல்லிக்க ரொம்ப பெருமையா இருக்கு..’’ என ஜுலைகா அவளை கட்டிக் கொள்ள, மற்ற தோழிகளுக்கும் அவளை பெருமைப் பொங்கப் பார்த்தனர்.
ஜுலைகாவின் அரவணைப்பில் இருந்து வெளியே வந்தவள், மகேனைப் பார்த்து, “நான் இப்போ எழுதிட்டு இருக்க கிராமத்துக்கு தான் நீங்க எல்லாரும் வந்து இருக்கீங்க…!’’ என சொல்ல,
மகேன் முகத்தில் அப்படி ஒரு ஆச்சர்யம். அதோடு, “நான் எழுதின பள்ளிக் கூடத்துல வர மதி கதாபாத்திரம் இவர் தான். அறிவியல் ஆசான். உங்களுக்கு அவரோட ஸ்டுடென்ட் நிறைய மேஜிக் காட்டுவாங்க..’’ என சொல்ல, மற்ற ஆண்கள் இருவரும் உத்வேகத்தோடு மதியுடன் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
அடுத்து வள்ளி ஜேம்சையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்க, வில்லன், “சரி சரி நேரம் ஆகுது. எல்லாரும் சீக்கிரம் வாங்க. விளையாட்டுத் திருவிழா பாக்கப் போகணும் இல்லையா..?’’ என அவர்களைக் கிளப்ப, அனைவரும் பேசி சிரித்தபடியே ஆனி ஐயாவின் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.
வீட்டின் வாயிலிலேயே அவர்களை வரவேற்ற தனம் அம்மா, “ஏம்பா இம்புட்டு நாளா கஷ்டப்பட்டு எல்லா வேலையும் செஞ்சிட்டு, நீங்களே திருவிழாவுக்கு தாமசமா போலாமா…? உங்க ஐயா உங்களுக்காக காத்து இருந்து பாத்துட்டு இப்பந்தான் கிளம்புனாங்க. சீக்கிரம் குளிச்சிட்டு எல்லாரும் கிளம்புங்க விரசா..” என்று அவர்களை விரட்ட தொடங்கி இருந்தார்.
வள்ளி தன் தோழிகளை அறிமுகப்படுத்த முயல, “எல்லாம் வில்லன் தம்பி சொன்னுச்சி… நீங்க மொதோ குளிச்சிட்டு சாப்பிட வாங்க… மீதிக் கதையை எல்லாம் ராப் பொழுது முச்சூடும் உக்காந்து பேசுவோம்.’’ என தனம் அம்மா சமையலறை நோக்கி நடக்க, அனைவரும் குளியலறை நோக்கி நடந்தனர்.
காலை உணவை முடித்துக் கொண்டதும், வில்லன் அவர்களுக்கு வாகனம் ஏற்பாடு செய்திருக்க, அனைவரும் அதில் மைதானத்தை அடைந்தனர். கூடவே தனம் அம்மாவும் விளையாட்டுப் போட்டிகளைக் காண வந்தார்.
நேற்று சுற்றி வந்த மைதானம் இது தானா என வள்ளிக்கே ஒரு நொடி சந்தேகம் வந்தது. மைதானம் விளையாட்டு அரங்கமாய் உருமாறி இருந்தது.
ஆங்காங்கே போட்டிகள் நடக்க, சுற்றிலும் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் படி, அடுக்கடுக்காய் மர பலகையில் தற்காலிக இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன.
அதோடு மையமான இடத்தில் உயரமான மேடை அமைக்கப்பட்டிருக்க, அதில் விழாவில் பரிசளிக்க வந்திருந்த நாயகர்கள் அமர்ந்திருந்தனர்.
அவர்களுக்கு முன்னால் ஒரு பந்தம் கொழுந்து விட்டு எரிந்துக் கொண்டிருக்க, சற்று முன்னால் தான் விளையாட்டு போட்டிகள் தொடங்கி இருக்கும் என்பதை அனைவரும் உணர்ந்துக் கொண்டனர்.
வள்ளியின் தோழமைகளோடு, ஜேம்சும் அமர இடம் தேடிக் கொடுத்த வில்லன் கூட்டத்தில் கலந்து விட, மதியும் அவனைத் தொடர்ந்து சென்றுவிட்டான்.
அமர்ந்த இடத்தில் இருந்த படியே மட்டும் புகைப்படம் எடுப்பது தனக்கு சாத்தியப்படாது என்று உணர்ந்த ஜேம்ஸ், தானும் இறங்கி தாழ்வான பகுதிக்கு சென்று விட, வள்ளி அப்பொழுது தான் தெளிவாய் மேடையில் இருந்தவர்களை கவனித்தாள்.
ஊன்றிக் கவனித்ததும், அவளை அறியாமலேயே அவள் இதழ்கள், ‘வாவ்’ என்ற வார்த்தையை முணுமுணுக்க, அவள் அருகில் அமர்ந்திருந்த ரித்தி, “ஏய்… அது பாரா ஒலிம்பிக்ஸ்ல கோல்ட் மெடல் வாங்கின மாரியப்பன் தானே… பக்கத்துல ஒலிம்பிக்ஸ்ல சில்வர் வின் பண்ண பி.வி சிந்து தானே… அந்த தேர்ட் பர்சன் தான் யாருன்னு தெரியல..’’
ரித்தி வள்ளியின் காதுகளில் முணுமுணுக்க, “அவங்க பி.டி உஷா… அவங்களுக்கு பக்கத்துல இருக்குறது… மல்லேஸ்வரி… அவங்க பக்கத்துல இருக்க பெரியவர் ஊர்த் தலைவர் ஆனி ஐயா’’ என்ற வள்ளியின் பதிலைக் கேட்டதும், ரித்தி,
“வாவ்…. இந்த சின்ன கிராமத்துல நடக்குற விளையாட்டு போட்டிக்கு இவ்ளோ பாப்புலர் பர்சன்ஸ் வந்து இருக்குறது பெரிய ஆச்சர்யம் தான் இல்லையா..?’’
ரித்தியின் இந்த பதில் வள்ளிக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கவில்லை. மாறாக ஏமாற்றத்தையே கொடுத்தது.
“இல்ல ரித்து… இந்தியாலா கிரிக்கெட் தவிர வேற எதையுமே விளையாட்டா நம்ம மக்கள் மதிக்கிறது இல்ல. இதே இடத்துல தோனியோ.. கோலியோ… வந்து இப்படி உக்காந்துட முடியுமா..? அந்த மேடையில இருக்குற எல்லாரும் செலிபர்டிஸ் தான். ஆனாலும் என்னைக் கேட்டா அவங்களுக்கான அங்கீகாரத்தை நம்ம மக்கள் இன்னும் முறையா கொடுக்கலைன்னு தான் சொல்லுவேன். உனக்கே அதுல ரெண்டு பேத்தை அடையாளம் தெரியல. சாமனிய மக்களை எப்படி குறை சொல்றது..’’
வள்ளியின் ஆதங்கமான பதிலைக் கேட்ட, ரித்தி, “உன்னோட தாட்ஸ் எல்லாம் இப்போ ரொம்ப வேற மாதிரி இருக்கு வள்ளி. கிரேட். நீ சொல்றதும் உண்மை தான். நாம மாறனும் மொதல்ல. அப்புறம் சமூகம் தன்னைப் போல மாறும்.’’
தோழிகள் பேசிய படி மைதானத்தில் கண் வைத்திருக்க, நீளம் தாண்டுதலில் ஒரு இளைனனின் வெற்றி அறிவிக்கப்பட, அரங்கம் கரகோஷத்தில் அதிர, இவர்களின் கவனம் முற்றிலும் விளையாட்டு போட்டிகளின் மீது திரும்பியது.
முழுதாய் ஆறு மணி நேரம் விளையாட்டு மைதானத்தில் எப்படி கழிந்தது என்றே தெரியாமல் நேரம் ஓடி இருந்தது. இடையில் ஒரு அரை மணி நேரம் விளையாட்டுப் போட்டிகள் உணவு இடைவேளைக்காய் நிறுத்தப்பட்டிருந்தன.
அரங்கிலேயே, சூடானான சுவையான கலைவை சாதம் விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டிருக்க, அனைவரும் அங்கேயே மதிய உணவை உண்டனர்.
அதோடு வித விதமாய் நாவில் எச்சில் ஊறவைக்கும் உள்ளூர் தின்பண்ட வகைகள் இருக்கைக்கு அருகேயே விற்கப்பட, தோழிகள் நால்வரும், தேன்மிட்டாய், அச்சு முறுக்கு, அதிரசம், தேன்குழல், மாங்காய் வத்தல், பனங்கிழங்கு என்று கண்ணில் கண்டதையெல்லாம் வாங்கி வயிற்றுக்குள் தள்ளிக் கொண்டிருந்தனர்.
மகேனும், ரபீக்கும் விளையாட்டு போட்டிகளில் ஆர்வமாகி ஜேம்சுடன் தாழ்வான பகுதிக்கு சென்று, மிக அருகில் நின்று விளையாட்டு போட்டிகளை ரசிக்கத் தொடங்கி இருந்தனர்.
சுமார் மாலை ஐந்து மணி அளவில் விளையாட்டுப் போட்டிகள் முடிவடைய, வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள், போட்டியில் வென்ற, விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
பெண் வீராங்கனைகள் அனைவரும் ஒன்றே போல, சிறப்பு விளையாட்டாய் இறுதியில் நடைபெற்ற, ஜல்லிக்கட்டில் பெண்களும் கலந்துக் கொண்டதை பெருமிதமாய் குறிப்பிட்டு பேச, இறுதியாய் சிறப்புரையாற்ற மாரியப்பன் எழுந்து வந்து நின்றதும் அரங்கமே அமைதியில் ஆழ்ந்தது.
அனைவருக்கும் பொதுவாய் ஒரு வணக்கத்தை தெரிவித்த மாரியப்பன், “இவ்ளோ இளைஞர்கள் இங்க விளையாட்டு போட்டியில ஆர்வமா கலந்துகிறதைப் பாக்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு. உங்களுக்கு பின்னாடி உங்க பெற்றோர்கள் உங்களுக்கு உறுதுணையா நிக்குறதைப் பாக்கும் போது… அடுத்த ஒலிம்பிக்ஸ்ல இங்க இருந்து நாலு பேர் இப்போ நான் நின்னுகிட்டு இருக்க இடத்துக்கு வருவீங்கன்னு ஒரு நம்பிக்கை வருது..’’
மாரியப்பன் இப்படிப் பேசியதும், அரங்கமே கைதட்டலில் அதிர, கையை உயர்த்தி, அரங்கத்தை அமைதிக்கு கொண்டு வந்த மாரியப்பன், “ஒரு விசயத்தை நாம சாதிக்க, பணம், சூழல், உடல்நிலை இப்படி எல்லாத்தையும் விட மனசுல அந்த விஷயம் மேல நமக்கு இருக்க ஆர்வம் தான் முக்கியம். அந்த ஆர்வம் இருந்தா நம்மாள கண்டிப்பா சாதிக்க முடியும். அதுக்கு உதாரணமா நீங்க என்னையே எடுத்துக்கலாம். அப்படி ஒரு ஆர்வத்தை நான் இங்க இருக்க எல்லா இளைஞர்கள் கண்லையும் பாக்குறேன். சோ நீங்க கண்டிப்பா சாதிப்பீங்க…. எல்லாரும் சாதிக்க வாழ்த்துக்கள்..’’ மாரியப்பன் தன் உரையை முடித்துக் கொண்டு திரும்பும் போது, மீண்டும் அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது.
விளையாட்டு திருவிழாவின் நிறைவாக, தமிழகத்தின் பாரம்பரிய நடன, மற்றும் இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க,
சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என்று ஒரு வரிசையில் மாணவர்கள் கலக்கிக் கொண்டிருக்க, மற்றொரு வரிசையில், உறுமிமேளம், பறை, நாதஸ்வரம் போன்ற வாத்தியங்கள் முழங்கிக் கொண்டிருந்தன.
பறை இசைத்தபடியே ஆடும் தப்பாட்டம் அனைவர் கவனத்தையும் ஈர்க்க, வில்லன் வள்ளியின் கண்களில் தெரிந்த ஆர்வத்தைக் கண்டு, “வா… வந்து ஆடு…’’ என அவளை கண்களால் அழைத்தான்.
முதலில் மறுத்த வள்ளி, அவன் மீண்டும் மீண்டும் அழைக்கவே, ஒரு புன்னகையோடு நடனக் கலைஞர்களோடு சென்று இணைந்துக் கொண்டாள்.
அவள் அதிரடியாய் இசையோடு ஆட, அவள் தோழிகள், கூக் குரல் எழுப்பி அவளை உற்சாகப்படுத்த, அடுத்த பத்து நிமிடங்கள் அனைவரின் கவனமும், அடித்து ஆடிக் கொண்டிருந்த வள்ளியின் மீது திரும்பியது.
செயற்கை அலங்கார விளக்குகள் அரங்கத்தில் ஒளி வீச, சுற்றிலும் வெவ்வேறு விதமான இசைகள், அந்த இடத்தை நிறைத்திருக்க, முகத்தில் சிரிப்போடு நடனம் ஆடிக் கொண்டிருந்த வள்ளி, வில்லனின் மனதில் ஆழமான ஓவியமாய் பதிந்து போனாள்.
ஒரு வழியாய் ஆட்டம் பாட்டம் முடிந்து, ஊர் மக்கள் கலைந்து செல்ல, வில்லனும், ஆனி ஐயாவும், வந்திருந்த விளையாட்டு விருந்தினர்களை,வழி அனுப்பி வைத்துவிட்டு வீட்டிற்கு வரும் போது நேரம் இரவு ஒன்பதை நெருங்கி இருந்தது.
ஆனி ஐயாவின் வீட்டில் பசியாறி முடித்திருந்த வள்ளியின் தோழிகள் ஊர்க் கிளம்ப தயாராய் இருந்தனர்.
அவர்களை மதுரை பேருந்து நிலையத்தில் விட்டு வர வில்லன் ஸ்கார்பியோ வண்டியை எடுக்க, வள்ளி, “நானும் வறேன்…’’ என்று அவர்களோடு இணைத்துக் கொண்டாள்.
மதுரையில் இருந்து, அவரவர் ஊர் செல்ல, பேருந்து ஏற்றி விட்டதும், அனைவரும் ஒன்றே போல, வள்ளியை கட்டி அணைத்து, “எப்பவும் இதே மாதிரி சந்தோசமா இருக்கணும்..!’’ என்று வாழ்த்தி விடை பெற்றனர்.
அதுவும் ரித்தி இறுதியாய் கிளம்பும் முன், “எப்பவும் நடந்ததையே மனசுல வச்சிட்டு தொங்கிட்டு இருக்காத வள்ளி… லைப் ஹேஸ் டூ மூவ் ஆன்… இந்த நிமிஷம் மட்டும் தான் நமக்கு சொந்தம்… தேவையில்லாத எல்லாத்தையும் தூக்கி சுமந்துட்டு இருக்காத… உன்னோட பர்த்டேவே கொண்டாடி… கொண்டாடி போர் அடிக்குது வள்ளி. நெக்ஸ்ட் இயர் ஜூனியர் வள்ளி பர்த்டேக்கு கூப்பிட்டா தான் நான் ஊருக்கே வருவேன்..ஓகே..’’ எனக் கன்னத்தில் முத்தமிட்டாள்.
சற்றே சிரித்த வள்ளி, “அடியே மொதோ நீ கல்யாணம் பண்ணு. அதுக்கு அப்புறம் எனக்கு அட்வைஸ் பண்ணு.’’ என ரித்தியை கிண்டல் செய்ய,
ரித்தியோ, “எனக்கு வாய்ச்ச நல்லவன் எங்க இருக்கானோ…? வான்… வருவான்… யாருக்கு தெரியும் வள்ளி நான் எல்லாம் என் ஜூனியர் பஸ்ட் இயர் பர்த்டே செலிபரேட் பண்ணிட்டு அதுக்கு அப்புறம் கல்யாணம் பண்ணுவேனோ என்னவோ….?’’ என சிரியாமல் சொல்ல,
வெடித்து சிரித்த வள்ளி, “நீ கண்டிப்பா செய்வடி..’’ என அவள் கன்னம் கிள்ள, ரித்தி கிளம்ப வேண்டிய சென்னைப் பேருந்து வந்து சேர, மீண்டும் ஒரு முறை வள்ளியை கட்டி அணைத்தவள், “சொன்னது எல்லாம் நியாபகம் இருக்கட்டும்..’’ என்று சொல்லியபடியே பேருந்தில் ஏறினாள்.
பேருந்து ஒரு புள்ளியாய் மறையும் வரை, ரித்தி பார்த்துக் கொண்டே இருப்பாள் என்ற நம்பிக்கையில், வள்ளி கையசைத்துக் கொண்டே இருந்தாள்.
வள்ளியும், வில்லனும் மீண்டும் தங்கள் பயணத்தை அரசனூர் நோக்கித் தொடங்க, இரவின் அமைதியில் அந்த தனிமையை இருவரும் மனமுவந்து ரசித்தனர்.
ஒரு வார்த்தைக் கூட இருவரும் அந்த நெடிய பயணத்தில் பேசிக் கொள்ளவில்லை. வள்ளியின் மனம் ஏதோ ஒரு விதத்தில் சற்றே நெகிழ்ந்திருந்தது.
இனி எல்லாமே சுபம் என்று வில்லன் எண்ணிக் கொண்டிருக்க, இவர்கள் வரவிற்காய், ஆனி ஐயாவின் வீட்டு வாசலில், மீசையை முறுக்கியபடி காத்திருந்தார் வள்ளியின் தந்தை மகாலிங்கம்.