இதெல்லாம் அவர்கள் வளர்ப்பு காளைகள் என்பதை வள்ளி அவர்களின் செயல்கள் மூலம் உணர்ந்துக் கொண்டாள்.
அவர்கள் இன்னும் கொஞ்சம் உள்ளே செல்ல, இவர்களுக்கு முதுகு காட்டியபடி வட்டக்கரியன் காளையின் முன் ஒருவன் நின்றுக் கொண்டிருந்தான்.
அவன் கரங்கள் ஆதுரமாய் காளையின் தலையை நீவிக் கொண்டிருக்க, அவனுக்கு பக்கத்தில் இருந்த ஒருவன் காளைக்கு தண்ணீர் காட்டிக் கொண்டிருந்தான்.
அந்தக் காளையை அங்க கண்டதும், ஜேம்சும், வள்ளியும் ஆனி அடித்தார் போன்று அதே இடத்தில், அசையாமல் நின்றுக் கொண்டிருந்தனர் அச்சத்தில்.
மதி இயல்பாய் அவர்களுக்கு முதுகுகாட்டி நின்றுக் கொண்டிருந்தவனின் அருகில் சென்றவன், “சகா… உங்களைக் காண கனல் பத்திரிக்கை நிருபர்கள் வந்துள்ளனர்.’’ என அறிவித்தான்.
அத்தனை நேரம் அவர்களுக்கு முதுகுகாட்டி நின்றுக் கொண்டிருந்தவன், மெதுவாய் இவர்கள் புறம் திரும்பினான்.
திரும்பியவனின் முகத்தை கண்ட வள்ளி, “இவனா…?’’ என்று பேச்சு வரமால் அப்படியே நிற்க, ஜேம்சிற்கு ஒருமுறைக் கண்ட அவன் அவ்வளவாக நினைவில் இல்லை.
ஆனாலும், சற்றே நெருங்கி, அவனை நோக்கி, கரம் நீட்டியவன், “சார் ஐயம் ஜேம்ஸ். கனல் போட்டோகிராபர். உங்களை எங்கையோ பாத்த மாதிரி இருக்கு. ஆனா எங்கன்னு சரியா நியாபகம் இல்லை.’’ அவன் நெற்றியை நீவிக் கொண்டு யோசித்துக் கொண்டிருந்தான்.
மெலிதாய் புன்னகைத்தவன், “இவங்க…?’’ என வள்ளியை காட்டி வினவ, அப்பொழுதும் வள்ளி ஏதோ ஆழ்ந்த யோசனையில் தான் இருந்தாள்.
ஜேம்ஸ் வள்ளியின் முகம் பார்க்க, அவளின் முக பாவத்தில் குழம்பியவன், சற்றே உரத்த குரலில்,
“மேம்..’’ என அழைக்க, சட்டென நிமிர்ந்தவள், உணர்வுகள் தொலைத்த முகத்துடன், இரு கரத்தினையும் கூப்பி,
“நான் வள்ளி… தில்லையாடி வள்ளியம்மை. கனல் நிருபர். உங்க ஊரை பாக்கும் போது, ரொம்ப சந்தோசமா இருக்கு. அதே சமயம் இந்த மாற்றம் ஏற்பட அடித்தளம் போட்ட உங்களை நினச்சி பெருமையாவும் இருக்கு…! உங்களை சந்திச்சதுல ரொம்ப சந்தோசம். ஊரைப்பத்தி உங்ககிட்ட கொஞ்ச நேரம் பேசணும். எங்களுக்கு நேரம் ஒதுக்க முடியுமா சார்…?’’
அவள் பணிவாய் பேசவும், இதழ்க்கடையில் மலர முயன்ற புன்னகையை சிரமப்பட்டு அடக்கியவன், மதியைப் பார்த்து, “இன்னைக்கும் நாளைக்கும் நமக்கு நிறைய வேலை இருக்கு உனக்கே தெரியும் இல்ல. வேணா இவங்களை நீ நம்ம விளையாட்டு திருவிழா முடியிற வரைக்கும் தினம் இங்க கூட்டிட்டு வா.’’ என்றவன்,
வள்ளியைப் பார்த்து, “சாரி மேடம்…! நாம இன்னொரு நாள் பொறுமையா, நிதானமா நிறையப் பேசலாம். இன்னும் ரெண்டு நாள் நாங்கள் புல் பிசி. சாரி.’’ என்று மறுத்தான்.
வள்ளி தலையை மட்டும் ஆட்டி வைத்தாள். உள்ளுக்குள் இருந்த ரோசக்காரி கனன்றுக் கொண்டிருந்தாள்.
மதி அவளின் சுருங்கிவிட்ட முகத்தை பாவமாய் பார்க்க, வள்ளி, “பரவாயில்ல சார். உங்களுக்கு டைம் இருக்கும் போது நாம பேசலாம்.’’ என்றவள் திரும்பி நடக்க தொடங்க, ஜேம்சும், “மறுபடி மீட் பண்ணுவோம் சார்..!’’ என்றுவிட்டு வள்ளியோடு இணைந்துக் கொண்டான்.
ஒரு பத்து எட்டு எடுத்து வைத்தவள், என்ன நினைத்தாலோ, மீண்டும் வில்லனை நோக்கி நடந்தாள்.
“நீங்க எத்தனை நாள் வேணா பேச டைம் எடுத்துக்கோங்க. ஆனா நான் இன்னும் இங்க ரெண்டு நாள் தான் இருப்பேன் மிஸ்டர் வில்லாளன்.’’ எனக் கூர்மையாய் அவன் கண்களைப் பார்த்து, திமிராய் சொல்லிவிட்டு, ஒரு ராணியின் கம்பீரத்தோடு திரும்பி நடக்கத் தொடங்கினாள்.
ஜேம்ஸ் அவளின் அந்த செய்கையில் திகைத்துப் போய் அவளைப் பார்த்தவன், அவள் உச்சரித்த பெயரை உள்வாங்கிய பிறகே, வில்லனை தான் இதற்கு முன் சந்தித்தது அவன் நினைவில் வந்தது.
மூன்று மாதங்களுக்கு முன், ஜீன்ஸ், டீ ஷர்டில் நவ நாகரீக யுவனாய் சந்தித்த ஒருவனை, வெண்ணிற வேட்டி சட்டையில், கிரிதாவுடன் இணைந்த முறுக்கு மீசை ஜேம்சிற்கு யாரோ ஒருவனாய்த் தான் காட்டியது.
ஜேம்ஸ் வேகமாய் நடந்து செல்லும் வள்ளியையும், அப்படி அவள் நடந்து செல்வதை புன்னகை முகமாய் ரசித்துக் கொண்டிருக்கும் வில்லனையும் மாறி மாறிப் பார்த்தவன்,
“என்னடா நடக்குது இங்க..?’’ என்ற கேள்வியோடு வள்ளியை பின் தொடர தொடங்கினான்.
மதியோ இவர்கள் இருவரும் பேசிக் கொண்ட தினுசில் ஏற்கனவே அறிமுகமான சாயல் தெரிய, “சகா… இவர்கள் என்ன இன்னும் இரு தினங்கள் மட்டும் இங்கு தங்கப் போவதாய் சொல்லி செல்கிறார்கள்..?’’ என வினவ,
வில்லனோ சற்றும் அசராமல், “ரெண்டு நாளா…? ஹா ஹா ஹா…. இனிமே இவங்க பர்மனென்ட்டா இங்க தான் தங்கப் போறாங்க மதி.’’ என்று சொல்லிவிட்டு மீண்டும் தன் கவனத்தை காளையிடம் திருப்ப, இம்முறை மதியும், “என்னடா நடக்குது இங்க..?’’ எனக் குழம்பித் தான் போனான்.
ஆனி ஐயா வீட்டை அடைந்த வள்ளி, ஜேம்ஸ் எதிர்பார்த்தார் போன்று, கோபம் ஆத்திரம், ஏமாற்றம் இப்படி எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல், கருமமே கண்ணாக தன் கட்டுரை பணியை தொடங்கி விட, ஜேம்சும் எடுத்த புகைப்படங்களை சீரமைத்துக் கொண்டிருந்தான்.
மாலை ஆனி ஐயாவிடமும், விளையாட்டுப் போட்டிகள் குறித்து உரையாடியவள்,
“என்னவோ ஐயா. ஜல்லிக்கட்டு வீர விளையாட்டா இருந்தாலும் மாறி வர காலத்துல அந்த விளையாட்டு எல்லாம் தேவையான்னு தோணுது.முன்ன வேல்கம்பு, கத்தி, வில், அம்பு இதெல்லாம் வச்சி சண்டை போட்டுட்டு இருந்தாங்க.ஆனா இப்போ நியூகிளியர் பாம், பயோ வெப்பன்னு நம்ம போர் முறை ரொம்ப நூதனமா மாறிடுச்சி… இன்னும் ஜல்லிக்கட்டு எல்லாம் தேவையா..?’’
அவள் அப்படிக் கேட்டதும் அவளை வாஞ்சையோடு பார்த்தவர், “நீ சொல்றது எல்லாம் நூத்துக்கு நூறு உண்மைமா. இதோ என் பொண்டாட்டி கட்டிக்கிட்டு இருக்காலே சேலை. பின் கொசுவ சேலை. அதை உனக்கு கட்டத் தெரியுமா..?’’
அவர் அப்படி கேட்பார் என்று எதிர்பார்க்காத வள்ளி புன்னகையோடு, “எனக்கு சேலையே கட்டத் தெரியாது ஐயா…” என்று பதிலுரைக்க,
அவள் அப்படி சொன்னதும், “சரியாப் போச்சு போ..’’ என்று வெடித்து சிரித்தவர், “நாம எல்லாம் அடிப்படையில மனுசங்களா இருந்தாலும், பேசுற மொழியில, கும்பிடுற சாமியில, பழக்க வழக்கத்துல சின்ன சின்ன குழுவா இருக்கோம்.
தமிழ் மொழி பேசுற நாம தமிழர்கள்ன்னு சொல்லிக்கிறோம். நம்ம மொழியோட இலக்கண இலக்கியம் மட்டும் இல்ல. நம்ம உடை, நம்ம பண்பாடு, கலாச்சாரம்… இது எல்லாமே தமிழன்னா இவன் இப்படிதான்யா அப்படின்னு நம்ம மேல ஒரு அடையாளத்தை கொடுக்கும்.
அதுக்காக உன்னை நான் தினம் புடவை கட்ட சொல்லலை தாயி. உனக்கு இசைவான உடையை நீ போட்டுக்குற அதே சமயம், நம்ம புடவையை பத்தியும் தெரிஞ்சிக்கலாம் தப்பில்ல. அந்தக் காலத்துல பெண்களுக்கு எல்லா விதத்திலும் இலகுவான உடையா புடவை இருந்துச்சி. அது ஒரு பெரிய விஷயம். அதை இன்னொரு நாள் பேசுவோம்.
என்ன தான் போர் முறைகள் நீ சொன்ன படி மாறி இருந்தாலும், வெறும் கையில சீறி வர காளை முன்னாடி நிக்குறவனை இந்த உலகம் கொஞ்சம் பயமாத் தான் பாக்கும்.
ஜல்லிக்கட்டு தடை எல்லாம் தாண்டி தொடங்ம் போது, வில்லன் பய நிறைய பொண்ணுங்க காளையை அடக்க பிரியப்படுதாகன்னு என் முன்னாடி வந்து நின்னான்.
அது என்ன காலம் காலமா காளையை ஆம்பளைங்க மட்டும் அடக்கி,அவங்க வீரத்தை பிரதாநிக்கனுமா…? நம்ம பொண்ணுங்க என்ன ஆம்பளைகளுக்கு இளப்பமா..?
நானும் சரி தான் பாத்து செய்டா சாமின்னு சொன்னேன்.
பய பாதுகாப்பு உடை கொண்டு வந்தான். நிறைய பயிற்சி கொடுத்தான். இப்ப எங்க பொண்ணுங்க பயலுகளுக்கு இணையா மாடு பிடிக்குதாக. பாக்கும் போதே அம்புட்டு சந்தோசமா இருக்கு தாயி.
ஆணுக்கு பெண் இங்கு இளைப்பில்லை காண் என கும்மியடி…. நம்ம முண்டாசுக் கவி சொல்லிட்டு போயிட்டாரு.
ஆனா அப்படி ஒரு நாள் நம்ம மண்ணுல வரும் போது தான் உண்மையான விடுதலையை நோக்கி நம்ம சமூகம் நகரும். சரித்தா ரொம்ப நேரமா உன் நேரத்தை இன்னைக்கி பிடிச்சிட்டேன்.
கிழவி மூட்டை பிடிச்சிக்கிட்டு உக்காந்து கிடப்பா. போய் தைலம் தேய்க்கணும். நீயும் போய் உன்னோட கட்டுரை வேலையை பாரும்மா…’’ என்றவர் தங்கள் அறை நோக்கி நடக்க, அவரை கனிவுடன் வள்ளி பார்த்துக் கொண்டிருந்தாள்.
கட்டுரையை அன்று அனுப்பும் பொழுது தான், வள்ளி அதை கவனித்தாள். இருவரின் முதல் எழுத்தோடு ஏதோ ஒரு தேதி வருடத்தை வைத்து அவனுடைய மின் அஞ்சல் முகவரியை உருவாக்கி இருந்தான்.
வள்ளி சற்றே ஆழ்ந்து சிந்தித்துப் பார்கையில், அது தங்கள் திருமண நாள் என்பது அவளுக்கு நினைவிற்கு வந்தது.
அதோடு இதழோரம் ஒரு விரக்கதிப் புன்னகை. அதே நாளில் தான் அவள் அக்கா குடும்பம் வயிற்றில் இருந்த சிசு உள்பட மொத்தமாய் அழிக்கப்பட்டது.
தலையை உலுக்கி அந்த நினைவுகளை விரட்டினாள்.
கட்டுரையை அனுப்பி முடித்தவள், தொடர்ந்த அதிர்ச்சிகள் அலுப்பை தர, படுக்கையில் விழுந்த இரண்டாம் நிமிடம் உறக்கத்தில் ஆழ்ந்தாள்.
அந்தோ பரிதாபம்….அன்று அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு கொடுத்து வைக்கவில்லை போலும்.
நள்ளிரவு பிறக்க, பத்து நிமிடங்கள் இருக்கும் பொழுது, மூன்று முக மூடி அணிந்த உருவங்கள், குண்டுக்கட்டாய், அவள் திமிர திமிர, அவள் வாய் திறக்க வழியின்றி செய்து, அவளை எங்கோ கடத்திக் கொண்டு சென்றனர்.