ஜேம்ஸோ, அங்கிருந்த ஒவ்வொருக் காட்சியையும் விடாது தன் புகைப்படக் கருவியில் பதித்தபடியே நடந்துக் கொண்டிருந்தான்

அங்கே பலவிதமான விளையாட்டுப் போட்டிகளின் பயிற்சியைக் கண்டிருந்தாலும், வள்ளிக்கு அந்த புது விதமான பெண்கள் விளையாட்டுப் போட்டியை காண பேராவல் எழுந்தது

அவள் அதைப் பற்றி மதியிடம் கேட்க, “கொஞ்சம் பொறுங்க தோழர். நாம அங்க தான் போயிட்டு இருக்கோம்..’’ 

அவர்கள் நடந்துக் கொண்டு இருக்கும் பொழுதே, மைதானத்தை இரண்டாய் பிரிப்பதைப் போல, பெரிதாய் தட்டி அமைத்து இருந்தார்கள். உள் நுழைய சிறு இடைவெளி மட்டும் திறந்து மூடும் கதவைப் போல அமைக்கப்பட்டிருந்தது

அந்த தடுப்பிற்குள் நுழைந்தவள், அங்க கண்ட காட்சியில் வழி தவறி வேறு எங்கேனும் வந்துவிட்டோமோ என பயந்தே போனாள்.

அங்கே பட்டி ஒன்று அமைக்கப்பட்டிருக்க, அதில் இருபதுக்கும் மேற்பட்ட வித விதமான காளை மாடுகள், கூரான கொம்போடும், பெரிய திமில்களோடும் தங்களுக்கு முன் இருந்த வைக்கோற் புல்லை மேய்ந்தபடி இருந்தன

மதி அவர்களை சற்றே மேடை போல அமைக்கப்பட்டிருந்த பகுதிக்கும் அழைத்து சென்றான். அந்த மேடையில் இருந்து பார்த்தால், நீண்ட வரிசையாக இருபுறம் தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்க, ஒரு புறம் குறுகிய வழியும், மறுபுறம் நீண்ட ஓடு பாதையும் அமைக்கப்பட்டிருந்தது

வள்ளி அதிர்ச்சியோடு, “ஜல்லிக் காட்டா….?” என மதியை நோக்கி பார்க்க, மதி சிரித்தபடி, “பெண்கள் களம் காணும் ஜல்லிக் கட்டு..’’ என சொல்ல, வள்ளி வியப்பின் உச்சிக்கே சென்றாள்

ஜேம்ஸ் கூட புகைப்படம் எடுப்பதை நிறுத்திவிட்டு அதிர்ந்து போய் அந்த இடத்தை பார்த்துக் கொண்டிருந்தான்

அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, மஞ்சள் நிறத்தில் உடை அணிந்த பெண்கள் அணி ஒருபுறமும், சிவப்பு நிறத்தில் உடை அணிந்த ஆண்கள் அணி ஒருபுறமும் தட்டியின் இருபுறமும் வந்து நின்றனர்

அவர்கள் பாதி உடலை மறைக்கும் படி ஒரு உடைக் கவசமும், தலையில், ஹெல்மெட் போன்ற தலைக் கவசமும் அணிந்து இருந்தனர்

அதில் ஆண் பெண் வித்யாசத்தை அவர்கள் கால்களைக் கண்டே அறிய முடிந்தது. அவர்கள் வரிசையில் நின்றதும், ஒலிப்பெருக்கியில் கம்பீர ஆண் குரல் ஒன்று ஒலித்தது

டியர் ஸ்டூடெண்ட்ஸ்உங்க எல்லாருக்கும் கேம் ரூல் நல்லா நியாபகம் இருக்கும்னு நம்புறேன். இருந்தாலும் இன்னும் ஒரு முறை உங்களுக்கு நியாபகப்படுத்துறேன்

இந்த கேம் நம்ம ரீஜினல் கேம். நம்ம இனத்தோட அடையாளம். இந்த கேமோட மோடிவ் பழைய காலத்துல வேற விதமா இருந்தது. இடைக் காலத்துல வேற விதமா மாறுச்சி

இப்போ ஜல்லிக்கட்டு தடைக்கு அப்புறம் எல்லா இளைஞர்களும் போராடி மீட்டு வந்து இருக்க இந்த விளையாட்டோட மோடிவ் இப்ப கண்டிப்பா வேறையா இருக்கு

முதல்ல இது ஒரு விளையாட்டு மட்டும் தான். இதுல மனுஷ உயிரிழப்பையும், மாடுகள் துன்பப்படுத்தப்படுறதையும் நாம கண்டிப்பாய் தவிர்க்கணும். அதே சமயம் ஆயிரமாயிரம் வருசமா நம்ம பண்பாட்டை உலகத்துக்கு எடுத்துக் காட்ற இந்த விளையாட்டை நாம நிறுத்தவும் கூடாது

கேம் ரூல் சொல்றேன்னு நான் என்ன என்னவோ சொல்லிட்டு இருக்கேன் சாரி. பட்டிகுள்ள ஒரு ஒரு காளையா அனுப்புவோம்

காளையை ஒரு நேரத்துல ஒருத்தர் தான் அடக்க முயற்சி பண்ணனும். முதல்ல கைவச்சவர் பிடியை விட்டதுக்கு அப்புறம் தான் அடுத்தவர் தொடணும்

காளை பட்டியை விட்டு தாண்டுற வரை மட்டும் தான் உங்களுக்கு நேரம். காளையோட கொம்பு, இல்லனா திமிலை பிடிச்சி முழுசா ஒரு நிமிஷம் தாக்கு பிடிக்கணும்.

கொம்பு, திமில் தவிர வேற எங்கயும் மாட்டை அடிக்கவோ, தட்டவோ கூடாது

உங்க உடம்பை இல்ல மனசை திடப்படுத்துற விளையாட்டு. சீறி வர காளைங்க முன்னாடி தைரியமா நிக்க முடிஞ்சாலே வாழ்கையில எவ்வளவு பிரச்சனை வந்தாலும் துணிஞ்சி போராடலாம்

போட்டி இன்னும் அஞ்சி நிமிஷத்துல துவங்கப் போறதாலவீரர்களை தாயரா இருக்கும் படி கேட்குறேன்அடுத்த அறிவிப்பை அண்ணன் செந்தமிழ்தாசன் தொடர்வார்..’’ என்று அந்தக் குரல் முடிவடைந்தது

அடுத்து யாரோ ஒலிபெருக்கியில், “பட்டிக்குள்ள முதலாவதா…. பத்து வாடி வாசல் கண்ட, பெரிய மருது அண்ணன் காளை காங்கேயம் வகையறா கொடிய கருப்பன் வரான். தில்லு உள்ள மக்க வந்து திமிலை தொடுங்க..’’ 

அவர் பேசிக் கொண்டிருக்கும் போதேபாய்ந்தோடும் மின்னல் போல இரண்டே எட்டுக்களில் காளை அகன்ற பாதையை நோக்கி தாவி இருந்தது

பெரும்பாலும் காளைகள் தப்பி செல்லும் முறைகே பழக்கப்படுத்தப்பட்டிருக்கும். வெகு சிலவே பட்டியில் நின்று போராடும்

அடுத்து செம்மறி வகையில் வந்த வெட்டுப் புலி காளை பாய்ந்து வர பெண்கள் அணியில் இருந்த துணிச்சல்காரி ஒருத்தி துணிந்து அதன் திமிலில் ஒரு நிமிடம் தொங்கிக் கொண்டே பட்டியின் இறுதிவரை பயணிக்க, மேடையின் அருகில் ஒரே ஆரவாரம்

அவள் வென்றதாய் அறிவிப்பு வரவும், பெண்கள் அணி அவளை தோளுக்கு மேல் தூக்கிக் கொண்டாடியது. அடுத்தடுத்து வந்த காளைகளை அங்கிருந்த பெண்களும், ஆண்களும் அடக்க, ஆடுகளம் பயங்கர சுவரசியமாகியது.  

இறுதியாய், “அடுத்து வட்டக்கரியன் வகையறா சுடலை பட்டிக்கு வாரான்..’’ அந்த அறிவிப்பு வந்த அடுத்த நொடி, அந்த இடம் முழுவதும் முழு அமைதிக்கு மாறியது

இதுவரை உற்சாகமாய் இருந்த வீரர்கள் ஒழுங்கு முறைக்கு வந்தனர். இதுவரை துள்ளிக் குதித்து ஓடிய காளைகளைப் போல அல்லாமல், வட்டக் கரியன் நிதானமாய் அடியெடுத்து வைத்து பட்டிக்குள் வந்தான்

அடியெடுத்து வைத்தால் பூமி அதிர்ந்து அதனால் தூசு கிளம்பும் அளவிற்கு அதன் கால்கள் பலம் வாய்ந்ததாய் இருந்தது

திமில்கள் ஒவ்வொன்றும் தஞ்சை கோவிலின், நந்தியின் உருவுக்கு இணையாக இருக்க, அதன் கூர்க் கொம்புகள் பார்ப்பவருக்கு பெரும் அச்சத்தை கொடுக்க கூடியதாய் இருந்தது

அதுவரை போட்டியை ரசித்துக் கொண்டிருந்த வள்ளியின் நெஞ்சத்தில் கூட பயம் வந்து அமர்ந்தது

ஜேம்ஸ் தன் புகைப்படக் கருவியில் அதை கண்காணித்த படியே

இது என்ன மேம்…. ஏதோ ப்ரெஸ் மீட்டுக்கு வந்த அரசியல் மாதிரி தெனாவட்டா நிக்குது. யப்பாஎன்னா சைசு. பக்கத்துல போய் நிக்க சொன்னாலேஎனக்கு எல்லாம் அல்லு போயிரும்.’’ 

தன் பாட்டிற்கு புலம்பிக் கொண்டே இருந்தவனின் குரலை கேட்கும் மனநிலையில் அங்கு யாரும் இல்லை. அவர்கள் விழியும், செவியும் தட்டியிலேயே இருந்தது

யார் என்னை தொட முடியும் என்பதைப் போல, கால்களால் மண்ணை இருமுறைக் கீறி விட்டு, கொம்பைக் கொண்டும் மண்ணில் பள்ளம் பறித்தது

மீண்டும் ஒரு முறை நிமிர்ந்து இருபுறமும் ஏதேனும் அசைவு இருக்கிறதா என பார்த்தது. அசைவு தெரிந்தால் அந்த திசையில் ஒரு முட்டு…. இருபுற அணியும் அமைதி காக்கவே, மேலும் கொஞ்ச தூரம் நடந்தது

அதே நொடி, அதன் பின்னால் அசைவு தெரிய சாடாரென அது பின் திரும்பிய நேரம், பெண்கள் அணியின் புறம் இருந்த ஒருத்தி அதன் திமிலைப்பற்றியிருந்தாள்.

அந்த காளையோ அப்பொழுதும் வெளியே ஓட முனையாமல், நின்ற இடத்தில் இருந்தே அதன் முழு உடல்லையும் மேலே தூக்கி, கீழே குதித்தது

அந்த அதிர்வு முழு தூசியைக் கிளப்ப, அப்பொழுதும் அந்தப் பெண் அதன் திமில் மேல் இருந்த தன் பிடியை விடவில்லை

அடுத்து காளை கொம்பை திமில் பக்கம் செலுத்த முயல, அந்தப் பெண்ணோ திமிலில் இருந்து கையை அகற்றாமல் உடலை மட்டும் வளைத்து அதன் வயிற்றின் மேல் தன் தொங்கலை தொடர்ந்தாள்

மூன்றாம் முறை அது குதித்து நிற்கவும், ஒரு நிமிடம் முடிந்ததற்கான அறிவிப்பு வரவும், அந்தப் பெண் அப்படியே காளைக்கு பின்பக்கம் குதித்து நின்று தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டாள்

காளை அடுத்த நொடி வேகமாய் பட்டியை விட்டு வெளியேறி இருந்தது. மிக மிக நுட்பமாய், ஜல்லிக்கட்டுக்கு பயிற்சி கொடுக்கப்படும் காளைகளின் செயல்பாடு இவ்வாறு தான் இருக்கும் என்பதை உணர்த்தி செல்வதைப் போல அந்தக் காளையின் செயல் இருந்தது.

போட்டிக்கான பயிற்சி முடிந்ததாய் அறிவிக்கப் பட, அங்கிருந்தவர்கள் தங்கள் கவச உடையை நீக்கியபடியே பட்டியில் இருந்து வெளியே வந்துக் கொண்டிருந்தனர்

வள்ளிக்கு ஏதோ ஹாலிவுட் படத்தை நேரில் கண்டவளைப் போல, பலவிதமான உணர்சிகளின் தாக்கத்தில் இருந்தாள்

மதி அவளின் தோள் தட்ட, “நிச்சயமா பெண்கள் விளையாடாத விளையாட்டா நான் ஜல்லிக்கட்டி நினச்சி பாக்கவே இல்ல..’’

அவளின் குரலில் இருந்த ஆச்சர்யத்தின் தாக்கத்தில் சற்றே சிரித்தவன்

ஹா ஹா ஹா…. நம்ம ஊர் பொண்ணுங்க ராக்கெட்ல போறதை கூட இப்ப சாதாரண விசயமா தான் பாக்குறாங்க. நீங்க ஏன் எப்பவும் எல்லாத்தையும் ஆச்சர்யமாவும், அதிர்ச்சியாவுமே பாக்குறீங்க தோழர்.’’ என அவளை சாந்தப்படுத்த முயன்றான்

அவளோ, “எனக்கு உடனே உங்க டீம் ஹெட்டை பாக்கணும்..’’ என்றாள்

அதுவரை கலைந்து சென்றுக் கொண்டிருந்த வீரர்களை புகைப்படம் எடுத்துக் கொண்டிருதவன்

ஆமாஆமாமுதல்ல அவரை கண்ணுல காட்டுங்க. இவங்க அவரைப்பத்தி கட்டுரையில எழுதி எழுதி, ஏகப்பட்ட பேன்ஸ் இப்ப அவருக்கு. என்னை பர்சனலா தெரிஞ்சவங்க எல்லாம், அவர் போட்டோ அனுப்ப சொல்லி, ரொம்ப டார்ச்சர் பண்றாங்க…’’ 

 

அவன் அப்படி சொன்னதும் வாய் விட்டு சிரித்த மதி, “ஓஹோ…. எங்க நாயகருக்கு அவ்ளோ ரசிகர்களா. சரி வாங்க போகலாம். இந்நேரம் காளைப் பட்டியில் தான் இருப்பார்.’’ என்று சொன்னவன் முன்னே நடக்க, வள்ளியும் ஜேம்சும் அவனைப் பின் தொடர்ந்தனர்.  

பட்டியில் காளைகளுக்கு தண்ணீர் காட்டிக் கொண்டிருந்தனர். ஆடுகளத்தில் போட்டியாளர்களாய் இருந்த பலர், அங்கு இருப்பதை அவர்கள் உடை எடுத்துக்காட்டிக் கொண்டிருந்தது

உருவத்தில் மிரட்சியூட்டக்கூடிய காளையை சர்வ சாதாரணமாய் பெண்கள் அதன் கழுத்துப் பகுதியில் தடவிக் கொடுத்தபடியே, அதனோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்