Vil 12 1 2487 வில் – 12 காலில் பிறந்தோம் என்றீர்கள்… கடவுளா அது யார் என்றோம் யாம். வள்ளி இரவு வெகு நேரம் கழித்து உறங்கி இருந்தாலும்…. அதிகாலையிலேயே விழித்து விட்டாள். ஆழ்மனதிற்குள் அமிழ்ந்திருந்த, ‘அப்படி அது என்ன விளையாட்டு’ என்ற ஆர்வம் அவளுக்கு அதிகாலை விழிப்பைக் கொடுத்திருந்தது. இவள் குளித்து தயாரகி வெளிக் கூடத்திற்கு வரும் போது தான் தனம் வாசல் தெளித்துக் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். இவளைக் கண்டதும், “வள்ளிமா இன்னைக்கு வெள்ளன எழுந்தாச்சு போல..’’ என்று புன்னகைக்க, அவரை நோக்கி தானும் புன்னகைத்தாள். “ஆமா தனம்மா…! நேத்து ஐயா பத்த வச்ச சஸ்பென்ஸ் பட்டாசு என்னை தூங்கவே விடல. எப்படியும் இன்னைக்கு கிரவுண்ட்ல வெடிக்கும் இல்ல. அதை வேடிக்கைப் பாக்க தான் சீக்கிரம் எழுந்தாச்சு. சரி இங்க எந்த இடத்துல விளையாட்டு போட்டி எல்லாம் நடக்குற மைதானம் இருக்கு.?’’ வள்ளி ஆர்வமாய் வினவ, “இங்க பக்கத்துல தான்தா…ஒரு கல் தொலவு இருக்கும்.. கொஞ்சம் பொறு நான் காபி போடுறேன்… எப்படியும் மதி பய இங்கன வருவான். அவன் கூட சேந்து போவியாம். நீ மட்டும் கிளம்பி இருக்க. இன்னைக்கி போட்டோகார தம்பி உங் கூட வரலையா..?’’ என கேட்டுக் கொண்டே தனம் அம்மா கோலப் பொடியை வெளித் திண்ணையின் ஓரத்தில் வைத்தவர், சமயலறை நோக்கி நடந்தார். அவர் பின்னே ஆட்டுக் குட்டியைப் போல அவரை தொடர்ந்து சென்றவள், “கண்டிப்பா வருவார் தனம்மா. எனக்கு சஸ்பென்ஸ் தாங்கல….! அதான் நான் சீக்கிரம் கிளம்ப போறேன். எப்படியும் ப்ராக்டீஸ் பண்ண இந்நேரம் மைதானத்துல கூடி இருப்பாங்க இல்லையா..?” அவள் வினவ, “ஹும்.. கருக்கல் வெளுக்கும் போதே ஊர்ப் பிள்ளைக மைதானத்துக்கு ஓடிரும்க. அதுவும் விளையாட்டுப் போட்டி வந்தா கேக்கவே வேணாம். அம்புட்டும் அங்கன தான் பழிகிடக்கும். நீ காப்பிய குடித்தா…! நான் தொழுவத்தை போய் எட்டிப் பாக்குதேன். மணிப் பய பால் பீச வந்து இருப்பான்..’’ சொன்னவர், அவள் கைகளில் ஆவி பறக்கும் காபியை திணித்துவிட்டு கொல்லைப் புறம் நோக்கி நடந்துவிட்டார். அதிகாலைக் குளிருக்கு அந்த சூடான பானம் இதமாய் இருக்க, வள்ளி மிடறு மிடறாய் ரசித்து ருசித்து காபியை அருந்திக் கொண்டிருந்தாள். “கடல் கன்னி குளம்பியும் அருந்துமா…? அட! அட! அட! ஆச்சர்யக் குறி..!’’ வெளி வராண்டாவில் கேட்ட குரலில் வள்ளி நிமிர்ந்துப் பார்க்க, மதி இவளை நோக்கி உற்சாகப் புன்னகை புரிந்தான். மதியைக் கண்டதும் வள்ளியின் உதடுகள் இயல்பாய் புன்னகையில் விரிய, “கடல் கன்னி குளிர் மிகுந்த கரைக்கு வந்தால் காப்பி என்ன…? ஸ்க்காட்ச் ஒயின் ரம்… இப்படி எது எல்லாம் உடம்பை சூடேற்றுமோ அத்தனையும் குடிக்கும்..’’ என விளையாட்டாய் பதிலுரைக்க, ஒரு நொடி என்றாலும் மதியின் முகம் அதிர்ச்சியை பிரதிபலித்தது. அவன் அதிர்ச்சியைக் கண்டவள், பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, “நண்பர் கைவசம் ஏதேனும் உற்சாக பானம் இருக்குமோ..? ஆதிகால சோமபானம் என்றாலும் சரி… இல்லை பனை கொடுத்த ‘கள்’ என்றாலும் நன்று. அதுவும் இல்லை என்றால் மீன் பிடிப்பதில் மன்னவன் பெயர் கொண்ட குளு குளு நுரை பானம் என்றாலும் இரட்டிப்பு மகிழ்ச்சி… கிடைக்குமா…? உடல் குளிரில் வெட வெடக்கிறது…’’ அவளின் அடுக்கு மொழி வசனத்தின் மூலம் அவள் தன்னை கிண்டல் செய்வதை உணர்ந்தவன், பெரிதாய் சிரித்துவிட்டு, “தோழர்…! மிக அழகாய் செந்தமிழ் உங்கள் நாவில் ஒட்டிக் கொண்டுவிட்டது போலும். ஆனாலும் நீங்கள் கேட்கும் எதுவும் தற்சமயம் தர இயலாதமைக்கு அடியேன் வருந்துகிறேன். ஏனெனில் எங்கள் ஊரில் அரசின் மதுபானக் கடைகள் ஏதுமில்லை. நாங்கள் பனையில் இருந்து பதநீர் செய்வோமே தவிர பிறரை பதறாக்கும் கள் அல்ல. ஆகவே கடல் கன்னியே என்னை மன்னித்து அருள்வீர்களாக.’’ என்று கை கூப்ப, குலுங்கி சிரித்தவள் “ஷப்பா முடியல தோழர்…! உங்க அளவுக்கு என்னால தமிழ் பேச முடியாது. ஐயம் அவுட் ஆப் கேம்.’’ என சொல்லிவிட்டு, அவள் கைகளை உயர்த்த இருவரின் சிரிப்பொலியும் அந்த கூடத்தை நிறைத்தது. இவர்களின் சிரிப்பொலியில் உறக்கம் கலைந்த ஜேம்ஸ், “யார்டா அது காலங் காத்தால லவுட் ஸ்பீக்கர் ஆன் பண்ண மாதிரி சிரிக்கிறது..’’ என்று எண்ணிக் கொண்டே, தன் உறக்கம் பிரியாத விழிகளை தேய்த்துக் கொண்டே வெளியே வந்தவன், கண்ட காட்சியில் அவன் உறக்கம் அப்படியே கலைந்து போனது. வள்ளி கிளம்பி வெளியே செல்ல ஆயத்தமாய் இருப்பதைக் கண்டதும், தான் தான் தாமதித்து விட்டோமோ எனப் பயந்துப் போனவன், “என்னை எழுப்பி இருக்கலாம் இல்ல மேடம். ஒரு அஞ்சி நிமிஷம் வெயிட் பண்ணுங்க. நான் சீக்கிரம் வந்துடுறேன்.’’ என்றவன், வள்ளியின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் கொல்லைபுறம் நோக்கி ஓடினான். மதி ஜேம்சின் அந்த செயல் கண்டு வேடிக்கையாய் சிரித்தவன், “கடல் கன்னியை கண்டு காதல் கொள்பவர்களை விட பீதி கொள்வோர் எண்ணிக்கை அதிகம் போல..’’ என்று சொல்லி சிரித்தான். மதியை பார்த்து பத்திரம் காட்டியவள், தனம் அம்மா புதிதாய் கறந்த பாலுடன் கொல்லைப் புறத்தில் இருந்து உள்ளே நுழைவதைக் கண்டதும், “தனம்மா உங்க மதி பையன் வந்தாச்சு. அவரோட சேத்து எனக்கும் ஒரு ப்ரெஸ் காபி…’’ என்று அறிவித்தாள். ஜேம்ஸ் சொன்னபடி அவன் ஐந்தே நிமிடங்களில் தயாராகி தன் புகைப்படக் கருவியோடு வெளியே வர, மூவரும் காபியை அருந்தி முடித்ததும், ஊரின் மையத்தில் இருக்கும் மைதானத்தை நோக்கி தங்கள் பயணத்தை தொடங்கினர். பொதுவாய் நடப்பதற்கு அலுத்துக் கொள்ளும் ஜேம்சிற்கு கூட, ஊர் பற்றிய செய்திகளை கேட்டபடி, அடர் மரங்கள் நிறைந்த தெருக்களின் குளுமையில், மிதமான தென்றல் தேகம் தாலாட்ட, கடக்கும் பயணம் பிடித்து தான் போயிற்று. அவர்கள் நடக்க தொடங்கி இரண்டு நிமிடங்கள் கூட முடியவில்லை. அதற்குள் வள்ளி தன் கேள்விக் கணைகளை தொடுக்க தொடங்கி இருந்தாள். “தோழர் வழக்கமாய் ஊர்த் திருவிழானா எல்லா ஊர்லையும் விளையாட்டு போட்டிங்க நடக்கும். லைக் குழந்தைகளுக்கு மியூசிகல் சேர். லெமன் இன் த ஸ்பூன். அப்புறம் பசங்களுக்கு கபடி, வழுக்கு மரம் ஏறுறது, உரிப் பானை உடைக்கிறது. இப்படி நிறைய கேம்ஸ் வைப்பாங்க. ஆனா உங்க ஊர்ல விளையாட்டுப் போட்டியையே ஒரு திருவிழா மாதிரி நடத்துவீங்கன்னு நேத்து ஆனி ஐயா பேசும் போது தெரிஞ்சிகிட்டேன். மத்த ஊர் விளையாட்டுப் போட்டிக்கும் உங்க ஊர் விளையாட்டுப் போட்டிக்கும் என்ன தோழர் வித்தாயசம்…?’’ அவள் அப்படிக் கேட்டதும், மதியின் குரல் வழக்கமான இலகு தன்மையில் இருந்து அழுத்தத்திற்கு மாறி இருந்தது. “தோழர் நீங்கள் சொன்ன அத்தனை விளையாட்டு போட்டிகளும் பொழுதை போக்கவும் மகிழ்ச்சிக்காகவும் கிராமங்களில் நடைபெறும். ஆனால் சிலர் பொழுதையே அதாவது தங்கள் எதிர் காலத்தையே விளையாட்டு என்று தீர்மானித்து இருப்பார்கள். அப்படி தீர்மானித்து இருக்கும் இளைய தலைமுறையை ஊக்குவிக்கவே எங்கள் கிராமத்தில் வருடம் தோறும் விளையாட்டுப் போட்டி திருவிழாவை நாங்கள் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். அதோடு எங்கள் ஊர் என்று மட்டும் இல்லாமல், அக்கம் பக்கத்து ஊர்களில் இருந்தும் வீரர்கள் இங்கு நடைபெறும் போட்டிகளில் வந்து கலந்துக் கொள்வார்கள் தோழர். போட்டியில் வெல்பவர்களுக்கு… பரிசுக் கோப்பைகளோடு மேலும் அவர்கள் அந்த குறிப்பிட்ட விளையாட்டில் மேம்பட பயிற்சியோடு, மாநில, தேசிய போட்டிகளில் பங்கு பெற வழிகாட்டுதல் சேவைகளையும் நாங்கள் வழங்குகிறோம். அதோடு ஒவ்வொரு ஆண்டும், தேசிய அளவில் சாதனை புரிந்த இளம் விளையாட்டு வீரர்களை பரிசளிப்பதற்கு அழைத்து, அவர்கள் மேற்கொண்ட பயிற்சி, விடா முயற்சி மற்றும் தன்னம்பிக்கை வரலாற்றை அவர்கள் மூலமே எங்கள் இளம் தலைமுறையினர் அறியவும் ஏற்பாடு செய்கிறோம். ஒரு நாட்டின் வீரம் போர் முனையில் மட்டும் அல்ல, விளையாட்டு அரங்கிலும் தான் தீர்மானிக்கப்படுகிறது. உலகின் இரண்டாவது அதிக மக்கள் சக்தியை கொண்ட நாம்… ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு தங்கம் வாங்க முடியாமல் திணறும் நிகழ்வுகள் உலக அரங்கில் நமக்கு பெருந்த தலைக் குனிவு அல்லவா…? இதையெல்லாம் யோசித்து தான் நாங்கள் விளையாட்டு போட்டிகளுக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுப்பது. நண்பர் நாம் மைதானத்தை நெருங்கிவிட்டோம்….! ஆரவார சத்தம் இங்கு வரை எதிரொலிக்கிறது இல்லையா..?’’ மதி வள்ளியிடம் கேட்க, வள்ளியும் புன்னகையுடன், ‘ஆம்’ என்பதைப் போல தலை அசைத்தாள். மைதானத்தை சுற்றி சுற்று சுவர் எழும்பி இருக்க, முன் வாசலில் பெரிய இரும்புக் கதவு விரிய திறந்திருந்தது. மைதானத்தின் வாசலில், சிறுவர்கள் சிலர் என்.சி.சி உடையில், ட்ரம்ஸ் வாசித்துக் கொண்டிருக்க, பத்து வயது மாணவ மாணவிகள் சிலர் வந்தவர்களை வரவேற்கும் விதமாக, சிலம்பம் சுற்றிக் கொண்டிருந்தனர். பச்சை, மஞ்சள், சிவப்பு, நீலம் என வித விதமான வண்ணங்களில் உடை அணிந்து இருந்த போட்டியாளர்கள் தம் தம் குழுவினரோடு, கபடி, கோ– கோ, கூடைப்பந்து, கால் பந்து, இறகுப் பந்து போன்ற விளையாட்டுக்களின் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். தனி நபர் விளையாட்டு போட்டிகளான, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு, குண்டு, ஈட்டி போன்றவற்றை எறிதல் போட்டிகளுக்கான பயிற்சியில் சிலர் ஈடுபட்டிருக்க, இன்னும் கொஞ்சம் உள்ளே அவர்கள் நடந்ததும், 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்திற்கான எல்லைகள் குறிக்கப்பட்டிருந்தன. இன்னும் உள்ளே செல்ல, சரியான இலக்கை குறிவைக்க உதவும் பதாகைகள் நின்றுக் கொண்டிருக்க, அதன் கீழே, சில சிறுவர்கள் நின்று வில்வித்தை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். நடந்துக் கொண்டே இருந்த வள்ளி, “இந்த மைதானம் எத்தனை சதுர கிலோ மீட்டர் தோழர்…?’’ என்று கேட்டாள். முன்னால் நடந்துக் கொண்டிருந்த மதி, இந்த முழு மைதானமும் மொத்தம் இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவைக் கொண்டது தோழர். இதற்கு முன் பொட்டல் காடாய் இருந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், எங்கள் பயிற்சிகளுக்கு தேவைப்படுகிறது என்று எங்கள் அமைப்பின் மூலம் சரி செய்தோம். சில தொண்டு நிறுவனங்களின் உதவியால் சுற்று சுவர் அமைக்க முடிந்தது. விளையாட்டு உபகரணங்கள் எல்லாம் விளையாட்டு வீரர்கள் சொந்த பொறுப்பு..’’ மதி சொல்லிக் கொண்டே வர, வள்ளி முனைப்போடு பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர்களை களிப்போடு கண்டபடி மதியை பின் தொடர்ந்தாள். சற்று தொலைவில் நீச்சல் குளம் அமைத்திருக்க, நிறைய வீரர்கள் அங்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.