இதையெல்லாம் எதிர்த்து நான் குரல் கொடுத்தப்ப எனக்கு பக்க பலமா நின்னது எங்க வீட்டம்மா தான். ஏன் அவுக அப்பா சாவுக்கு பதினோரு வருசத்துக்கு முன்னையே தீப்பந்தம் சுமந்து கொல்லி வச்சவ அவ. ஆனா இந்த சமயல்கட்டு விசயத்துல மட்டும் பிடிச்ச பிடிவாதம் மொசக் குட்டி பிடிவாதம் தேன்… ஏன்னா… அது ஒரு நாப்பது வருசத்துக்கு முந்தின ரகசியம்..’’  

சொல்லிவிட்டு அவர் மீண்டும் பொங்கி சிரிக்கத் தொடங்கி விட, தனம் அம்மாவின் முகம் இலட்சையில் சிவந்து விட்டடது. 

“அடக் கருமத்த… மீசை வெளுத்த கிழவன் பேச்சைப் பாரு…’’ என்று தன் கணவனின் வாயடைக்க முயல, வள்ளிக்கும், ஜேம்சிற்கும் அது என்ன அப்படி ஒரு ரகசியம் என்பதை தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் மேலோங்கி விட, அதே ஆர்வத்தை கண்களில் பிரதிபலித்தபடி அவரைப் பார்த்துக் கொண்டிருந்தனர். 

அவரோ, “நாப்பது வருசத்துக்கு முந்தியே எனக்கு மீசை வெளுத்துப் போச்சாக்கும்… அடப் போடி வாயடிக் கிழவி…. வள்ளிமா… நாப்பது வருசத்துக்கு முந்தி… மூணு ஏக்கரா காட்டை பொழுது சாயிரதுக்குள்ள உழவு ஓட்டுன… இளந்தாரிப் பய நானு.

என் உழைப்பை பாத்துல அரசனூர் பெரிய பண்ணை எனக்கு பொண்ணு கொடுத்தாரு. எங்க கல்யாணம் முடிஞ்சி மறு வீடு அழைப்புன்னு இவ வீட்டுக்கு போய் இருந்தோம்… புதுசா கல்யாணம் ஆவுக இல்லையா…. என் கண்ணு நொடிக்கு ஒருக்கா இவ முகம் தேடுது.

ராங்கி அவ அப்பன் ஆயி வூட்டைப் பாத்ததும் என்னைக் கிடப்பில விட்டுட்டு அவ ஜோடி பொண்ணுகளோட, ஆட்டம் போட வயக் காட்டுக்கு ஓடிப் போயிட்டா. ராப் பொழுதும் எல்லோரோடையும் கூடத்துல படுத்துகிட்டு எனக்கு தண்ணி காட்டிட்டு இருந்தா.

நான் யாரு ஓடை மீனையே திசை பாத்து பிடிச்சவன் ஆச்சே. மூணாவது நாள் காலையில அடுப்பங்கரையில நின்னு என் கெழுத்தி மீனு குண்டா குண்டானா இட்டிலி வேக வச்சிட்டு இருந்துச்சி..’’ ஆனி ஐயா இதற்கு மேல் என்ன சொல்லி இருப்பாரோ, அதற்குள் தனம், 

“ஐய… உங்க கதைய நிப்பாட்டுங்க சாமி போதும். பிள்ளைகளுக்கு தின்ன பூரி செரிச்சி இருக்கும். நாளைக்கு காலைல… உங்க பொழப்பு தலைப்ப பக்க வேணாமா… போய் ரெண்டு பேரும் படுங்க போங்க..’’ என இருவரையும் அங்கிருந்து கிளப்ப முயல, 

வள்ளியோ, “வாவ் செம இன்ட்ரஸ்டிங் ஸ்டோரி…ஐயா நீங்க சொல்லுங்க… அப்புறம் என்ன ஆச்சு….’’ என குதூகலமாய் கதை கேட்க தொடங்கிவிட்டாள். 

அடுத்து ஏதோ அடல்ட் ஒன்லி சீன் வரப் போகிறது என எண்ணிய ஜேம்ஸ் தானும் திறந்த வாய் மூடாமல் கதை கேட்டுக் கொண்டிருந்தான்.

“எப்படியோ போங்க எல்லாரும் நான் போறேன் தூங்க..’’ என்று தனம் அங்கிருந்து கிளம்ப முயல, வள்ளி அவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு, 

“கதை முடியிற வரைக்கும் நீங்க எங்கயும் நகர கூடாது. ஆனி ஐயா… ஸ்டார்ட் நீங்க விட்ட இடத்துல இருந்து உங்க கதையை தொடருங்க…’’ என ஆணையிட, 

மென்மையாய் ஒரு முறை புன்னகைத்தவர், “இவ இட்லி சுட்டுகிட்டு இருக்க, நான் சமயல்கட்டுல ஆளுக யாரும் இல்லைங்கிற தெனாவட்டுல, இவளை பயம் காட்ட, பின் பக்கம் நின்னு இவ வாயப் பொத்தி தூக்கிட்டேன். 

இவ யாரோ எவரோன்னு பயந்து ஜான்சி ராணி கணக்கா பின்னங்கால்ல விட்டாலே ஒரு எத்து. ஆத்தி இப்ப அதை நினைக்கும் போது கூட வலிக்குற மாதிரியே இருக்கு. வலியில இவளை தொப்புன்னு கீழ போட்டுட்டு நான் ஐயோ அம்மான்னு அலற…

என் மூஞ்சப் பாத்ததும் இவ வேற பயந்து போயி சமயல்கட்டு கதவு மூலையில போய் ஒண்டிட்டா… ரெண்டே நிமிஷத்துல மொத்த சொந்தமும் சமையல்கட்டு வாசல்ல வந்து குவிஞ்சிட்டாக.

“நீங்க என்ன மாப்பிளை செய்றீக இங்கனன்னு…’’ என் மச்சானுக கேள்வி கேட்க, பதட்டத்துல நானு முன்னாடி இருந்த இட்லி கொப்பறைய இறக்கி, “இட்லி வெந்துடுச்சான்னு… பாக்க வந்தேன்னு..’’ சொல்ல எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சாக. 

எங்க மாமனார் தான் எல்லாரையும் அதட்டிட்டு, “மாப்பிள்ளை பசிச்சா உங்க பொண்டாட்டிய கூப்பிட்டு பரிமாற சொல்லுங்க… அதை விட்டுப் புட்டு… நீங்க ஏன் அடுப்பாங்கரைக்கு எல்லாம் போறீக… மொதல்ல வெளிய வாங்க…’’ அப்படின்னு சொல்லி என்ன வெளிய கூட்டிட்டு போயிட்டார்.

வீட்ல வேலை செஞ்சிட்டு இருந்த வம்பாடி பயலுக, நான் சமையல்கட்டுல நின்னுகிட்டு இருந்ததை வித விதமா ஊருக்குள்ள திரிச்சி விட, 

“ஆனி… பொண்டுக பயலாட்டாம்… பெரிய பண்ணை வீட்ல அடுப்பாங்கரை வேலை செய்யுதானாம் டோய்….’’ அப்படின்னு கதை கட்டி விட்டுட்டாங்க. 

எங்க குடும்பம் வசதியில கொஞ்சம் பின்ன உள்ளவுக தான். இந்த விஷயம் அவுக காதுக்கு போய், மறு வீடு வந்தப் பயல, சமைக்க விட்டு அவமானப்படுத்திட்டாய்ங்கன்னு… எங்க வீட்டு ஆளுக ரெண்டாம் நாளே வேல் கம்போட எம் மாமனார் வீட்டு வாசல்ல வந்து நிக்க, வார்த்தைக்கு வார்த்தை தடிச்சி…. தனத்தை பொறந்த வூட்டு சொந்தம் வேண்டாம்னு சொல்ல சொல்லி எங்க வீட்டுக்கு இழுத்துகிட்டு வந்தாங்க.

அதுக்குப் புறவும் பத்து வருஷம் கல்யாணமாகியும் எங்களுக்கு குழந்தை குட்டி இல்லையா.. ஒரு பங்காளி சண்டையில… என் மச்சான்காரன்… 

‘’மறு வீடு வந்தப்ப நீ இட்லி குண்டானை தூக்கும் போதே உன் பவுசு எங்களுக்கு தெரிஞ்சிப் போச்சுலே நீ ஒரு பொண்டுக பயன்னு. உனக்கு கட்டிக் கொடுத்து என் தங்கச்சி வாழ்கையை நாசம் பண்ணிட்டோமே.’’ அப்படின்னு வார்த்தையை விட, 

இந்த வாட்டி… தனமே முன்ன வந்து ‘’எம் புருஷனை தப்பா பேசின உங்களுக்கு எனக்கும் எந்த ஒட்டு உறவும் இல்ல’’ அப்படின்னு சொல்லிட்டு வந்துட்டா. 

எங்களுக்கு குழந்தைக் குட்டின்னு ஆகி இருந்தா இந்த சம்பவத்தை அவ மறந்து இருப்பாளோ என்னவோ? கடைசி வரை கடவுள் குழந்தை வரத்தை எங்களுக்கு கொடுக்கவே இல்ல.

அதனால இவளும் இன்னைக்கு வரை என்னை சமயல்கட்டுக்குள்ள விடுறதே இல்ல. அது என்னவோ அவுக அப்பா சொல்லிட்டு போன வார்தையில சமயல் பொம்பளை பொறுப்பு அப்படிங்கிறதை மட்டும் இன்னும் கெட்டியா பிடிச்சி தொங்கிட்டு கிடக்கா…’’ சொல்லி முடித்த ஆனி ஐயா வெறுமையாய் சசிரித்தார்.

வள்ளி தான் கரம் பற்றியிருந்த தனத்தின் முகம் பார்த்தாள். முகம் வருத்தத்தில் தொய்ந்திருக்க, கண்களில் கண்ணீர் குளம் கட்டியிருந்தது.

அவள் கைகளில் இருந்து தன் கரத்தை மென்மையாய் விடுவித்துக் கொண்டவர், மெதுவாய், “என்னவோ எந்த ஆம்பளை சமையல்கட்டுக்குள்ள வந்து நின்னாலும், கிணத்துக்குள்ள விழுந்த கல்லு கணக்கா மனசு பழைய நினைப்புக்குள்ள மூழ்கிப் போயிடுது. உன்ன வருத்தியிருந்தா மன்னிச்சிக்கோ வள்ளிமா. என்னையும் மீறி பேசிடுதேன். ஆம்பளை, பொம்பளைன்னு. என்ன செய்ய பொறந்த நேரத்துல இருந்து கேட்டு வளந்த வார்த்தை. பொட்ட பிள்ள அடங்கி இருன்னு. தொட்டில் பழக்கம்… கட்டைப் போற வரைக்கும் விடாது போல..’’ என வருத்தமாய் பேச, 

அவரை மென்மையாய் அணைத்துக் கொண்ட வள்ளி, “அதெல்லாம் நீங்க ஒன்னும் என்ன வருத்தல. நான் வந்தா தான் இந்த ஸ்நாக்ஸ் டப்பாவுக்கு சாப்பாடுன்னு அவனை பத்தி விட்ட இடத்துலயே நீங்க பெரிய சமத்துவவாதி ஆயிட்டீங்க தனம்மா..’’ என்று சொல்ல தனம் கண்களில் தளும்பி இருந்த கண்ணீரோடு புன்னகைத்தார். 

ஆனி ஐயாவோ, சூழலை இலகுவாக்க, “வள்ளிமா எம் பொஞ்சாதி சமையல்கட்டுக்குள்ள தான் என்ன வேலை வாங்குறது இல்ல. மத்தபடி மீதி எல்லா இடத்துலையும் என்னை தினம் பிழிஞ்சி எடுத்துடுவா. அதுவும் எங்க அறையில..’’ 

அவர் அடுத்து என்ன சொல்லி இருப்பாரோ, வள்ளியிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவர், “சின்னப் பிள்ளைக முன்னாடி என்னத்த பேசிக்கிட்டு கிடக்கீக…. ஒழுங்கா வந்துப் படுங்க வாங்க.’’ என அவரை தங்கள் அறைக்குள் இழுத்துச் செல்ல முயன்றார். 

கொஞ்சமும் அசையாமல் அதே இடத்தில் நின்றவர், “எங்க வீட்டு அம்மாக்கு கைகால் அமுக்கி, மூட்டு வலி தைலம் தேய்க்குற சீடனே நாந்தேன்..’’ என சொல்ல, தனம் அழகாய் வெட்கப்பட்டுக் கொண்டு, 

“உங்களை…! எப்படியோ போங்க நான் போறேன் தூங்க..’’ என்று வேகமாய் அந்த இடத்தை விட்டு அகன்றுவிட்டார். 

அவர் ஓட, ஆனி ஐயாவோடு, வள்ளி மற்றும் ஜேம்ஸின் சிரிப்பொலி வீட்டை நிறைத்தது. ஒரு வழியாய் சிரித்து முடித்தவள், 

“சரியா… நாங்க கிச்சனை கிளீன் பண்ணிட்டு தூங்கப் போறோம். நீங்க போய் உங்க சிஷ்யப் பிள்ளை வேலையைப் பாருங்க,’’ என வாஞ்சையாய் சொல்ல, 

“பின்ன… பொண்டாட்டிக்கு சேவை செய்ய கொடுத்து வச்சி இருக்கணும் ஆத்தா. நாளைக்கு ஊர் மைதானத்துல, விளையாட்டுப் போட்டிங்க முன் ஏற்பாடு இருக்கு. ரொம்ப நாளா இந்த அமைப்பை உருவாக்கினவனை பாக்கணும் பாக்கணும்னு சொல்லிட்டு இருந்தீக இல்ல…

பொடியன் அங்கன தான் பழி கிடப்பான். நாளைக்கு முச்சூடும். ஆம்பளைக்கு இணையா பொம்பளைய தூக்கி நிறுத்தனும்னு சொன்ன இல்லத்ததா…. அங்கன போயிப் பாரு… எங்க அரசனூர் வம்சத்தை…. எங்க ஊரு பொம்பளைப் பிள்ளைகளை எங்க தலைக்கு மேல தூக்கி வச்சி இருக்கோம்… நிழல் இல்ல… அவுக பாதம் கூட மண்ணைத் தொடாது.

ஊரு உலகத்துல இருக்க எல்லா விளையாட்டுளையும்…. எல்லா தொழில்லையும் ஆணுக்கு பொண்ணுங்க சரி சமமா நிக்க வந்துட்டாக…. ஆனா நாளைக்கு நீ பாக்கப் போற விளையாட்டுல மொதோ முறை பொண்ணுகளை களம் இறக்கப் போறதே எங்க அரசனூர் தான் வள்ளிமா.

இன்னைக்கு நான் எது சொன்னாலும் அது மிகையா தோணும்… நாளைக்கு நாம உக்காந்து பேசுவோம்…. எப்போ எங்க கிராமத்தை சுத்தி பாத்துட்டு வந்தாலும் உங்க கண்ணுல ஆச்சர்யம் தெரியும். அது நாளைக்கு நூறு மடங்கா தெரியும்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு.

உங்க எழுத்து வேலையை எல்லாம் சீக்கிரம் முடிச்சிட்டு போய் தூங்குங்க வள்ளிமா. நாளைக்கு காலையில ஆறு மணிக்கு எல்லாம் நீங்க வெளிய கிளம்புற மாதிரி இருக்கும்… பிறகு பாப்போம்… வறேன் தம்பி..’’ என்று ஜேம்சிடமும் விடை பெற்றவர் தன்னுடைய அறைக்கு செல்ல, வள்ளி சற்று நேரம் அவர் பேசிய வார்த்தைகளில் அப்படியே கட்டுண்டு நின்றாள். 

ஜேம்ஸ் அங்கிருந்த பாத்திரங்களை துடைத்து வைத்த படி, “இதுவரைக்கும் பொண்ணுங்க விளையாடாத கேம்ஸ் என்னவா இருக்கும் மேம்..?’’ என அவளிடம் கேட்க, 

தொட்டியில் இருந்த மிச்ச பாத்திரங்களை கழுவ வந்தவள், “அதை நாம நாளைக்கு போய் தான் தெரிஞ்சிக்கணும் ஜேம்ஸ்..’’ என்றுவிட்டு தன் பணியை தொடர்ந்தாள். 

பாவம் வள்ளி அறியவில்லை நாளை மைதானத்தில் ஆச்சர்யத்தின் உச்சிப் புள்ளிக்கு தான் தூக்கி வீசப்படப் போகிறோம் என்பதை. 

நள்ளிரவு ஒரு மணிக்கு வில்லனின் கைபேசி மின் அஞ்சல் வந்ததின் அறிகுறியாய் ஒரு முறை சிணுங்க, வேக வேகமாய் இன்றைய கட்டுரையை எடுத்து வாசித்தவன் இதழ்களில் மந்திரப் புன்னகை. 

“இன்றைய மணித்துளிகளை கடிகார நிமிட முள்ளாய் எண்ணிக் கொண்டிருக்கிறேன்… நாளைய விடியலுக்காய்…. மீண்டும் பல சுவாரசிய தகவலோடும் புதிய உறவுகளோடும் நம் அரசனூர் பயணம் தொடரும்.’’ என்று முடித்திருந்தாள். 

வில்லன் தன் அறையில் இருந்த கடிகாரத்தின் நிமிட முள்ளை ரசித்த படி உறங்கிப் போக, நாளை என்ன நடக்கும் என்ற ரகசியம் அறிந்திருந்த காலக் கடிகாரம் வேகமாய் சுழல தொடங்கியது.

வில் நாண் ஏறும்.