Advertisement

அந்த சுத்திகரிப்பு தொட்டியை அவள் எட்டிப் பார்க்க மேற்புற அடுக்கில் இருந்த வைக்கோல் மட்டும் அவள் கண்ணனுக்கு காட்சி அளித்தது. அடுத்தடுத்த மூன்று அடுக்குகளில் என்ன இருக்கும் என்பதை அவள் சற்று முன் பார்த்த காணொளி அவளுக்கு காட்டிக் கொடுத்திருந்தது. 

கீழ் அடுக்கில் பெரிய கூழாங்கற்களும்… மூன்றாம் அடுக்கில் சிறிய கூழாங்கற்களும் இரண்டாம் அடுக்கில் மணலும் இருக்கும் என்பதை உணர்ந்தவள், மேலே அசுத்தமாய் விழும் நீர், கீழே பளிங்குப் போல வெளிவருவதை சிரித்து நேரம் மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தாள். 

பிறகு ரோஷன் அவளை அவர்களின் விவசாய நிலத்திற்கு அழைத்து சென்றான். செல்லும் வழியில், “எங்க ஊர்ல யார் வீட்லயும் வெஸ்டர்ன் டாய்லெட் கிடையாது மேம். ஏன்னா ஓவ்வொரு ப்ளஷ்க்கும் டென் டூ பிப்டீன் லிட்டர் வாட்டர் வெஸ்ட் ஆகும். சீ ஒரு நாளைக்கு ஆறு டைம் யூரின் பாஸ் பண்றோம்னு வையுங்க…. ஒரு ஆளுக்கே 90 லிட்டர் வாட்டர் வேஸ்ட் ஆகும். நாலு பேர் இருக்க குடும்பன்னா கிட்ட தட்ட 400 லிட்டர் தண்ணி…. 

சோ… எங்க எல்லார் வீட்லயும் இந்தியன் டாய்லெட் தான் மாக்சிமம் ஐஞ்சி லிட்டர் தண்ணி யூஸ் பண்ணினா போதும் யூரின் போக. 

அதே மாதிரி… எங்க ஊர்ல ரொம்ப ஹெவி கெமிகல் கலந்த சோப்பு சோப்புத்தூள் ஷாம்போ இதெல்லாம் யூஸ் பண்ண மாட்டோம் மேம். தண்ணியில கலக்குற விஷம் மண்ணுக்குள்ள போனா மண்ணும் தானே விசமா ஆகும். 

வேரே விசமா இருந்தா அங்க எப்படி நல்ல உணவுப் பொருளை நாம விளைவிக்க முடியும். எங்க ஊர்ல விளையுற பொருள் முதல்ல எங்க சந்தைக்கு தான் வரும். எங்க மக்களுக்கு போக தான் வெளியூருக்கு நாங்க அனுப்புறது எல்லாம். 

அவர்கள் பேசிக் கொண்டே நடக்கும் பொழுது விவசாய நிலம் வந்து விட, ரோஷன் தன் காலணியை கழட்டி கையில் எடுத்துக் கொண்டான். 

அவனைப் பார்த்தவர்கள் தாங்களும் தங்கள் காலணியை கழட்டி கையில் எடுத்துக் கொண்டு நடந்தார்கள். 

இவர்கள் சென்ற இடம் பருத்திக் காடு. அப்பொழுது தான் விதைத்திருப்பார்கள் போலும். குட்டி குட்டியாய் பசுமை நுனிகாட்டி நின்றது செடி .

சரியாய் செடிகள் மட்டும் நீர்வளம் பெறும்படி, சொட்டு நீர் பாசன குழாய்கள் அமைக்கப்பட்டு இருந்ததை வள்ளி வியந்து பார்த்துக் கொண்டிருக்க, 

ஜேம்ஸ் தன் புகைப்படக் கருவியில் அக்காட்சிகளை சிறை பிடித்துக் கொண்டிருந்தான். 

அடுத்து அவர்கள் இயற்கை வேளாண் உரம் தயாரிக்கும் கூடத்தை அடைந்தனர். 

பசுவின் சிறுநீர் மற்றும் சாணத்தை உபயோகித்து இயற்கை பூச்சிக் கொல்லி மருந்தான பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறையையும், மண் புழுவில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் விதத்தைதையும் நேரில் கண்டு ஆச்சர்யம் கொண்டனர். 

அந்த இயற்கை உரம் தாயரிக்கும் சிறுதொழிலை திறம்பட நடத்திக் கொண்டிருந்த மகளிர் குழுவினர், வள்ளிக் கேட்ட கேள்விகளுக்கு மிகப் பொறுமையாய் பதில் அளித்துக் கொண்டிருக்க, ஜேம்ஸ் வளைத்து வளைத்து அந்த தொழிற் கூடம் செயல்படும் விதத்தை நிழற்படம் எடுத்துக் கொண்டிருந்தான். 

அடுத்து அவர்கள் பயணம் ஏரியை நோக்கி தொடங்கியது. அப்பொழுது தான் வள்ளி எந்த வீதிகளிலும் கழிவு நீர் கால்வாய் ஓடாதிருப்பதைக் கவனித்தாள். வழக்கம் போல அக்கிராமத்தை குறித்து உள்ளத்தில் பெருமிதம் பொங்கியபடி தன் நடையை தொடர்ந்தாள். 

ஏரியை நெருங்க நெருங்க, காற்றின் குளுமை அதிகரிக்க, ஏரி எப்படி அவர்கள் குடி நீர் தேவையையும் பாசன தேவையையும் பூர்த்தி செய்கிறது என்பதை ரோஷன் விளக்கிக் கொண்டே வந்தான். 

அவர்கள் குடிநீர் மாதம் ஒரு முறை நுண்ணுயிர் பரிசோதனைக்கு செல்வதையும், அந்த நீர் குடிப்பதற்கு ஏற்றது தான் என்று பரிசோதனை முடிவு வருவதையும், அங்கிருந்த ஒரு சுவற்றில் ஆவணப்படுத்தி இருந்தார்கள். 

“ஒவ்வொரு வீட்டுக்கும் ரேசன் முறையில தான் குடிநீர் விநியோகம் நடக்கும் மேடம். இரண்டு நாளுக்கு ஒரு முறை நல்ல தண்ணீர் திறந்து விடுவோம். நான்கு ஆட்கள் இருக்க வீடுன்னா ஐந்து குடம் தண்ணீர் மட்டுமே அவர்கள் பிடிக்க அனுமதி. இங்க நல்ல தண்ணீர் குழாய் வசதி தெருவிற்கு மட்டும் தான். வீடுகளுக்கு தனி கனெக்சன் கிடையாது. அதனால குடிப்பதற்க்கு நாங்க சுத்திகரிப்பு பண்ணி அனுப்புற தண்ணியை யாரும் குளிக்கவோ துவைக்கவோ பயன்படுத்த முடியாது.’’

ரோஷன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க, ஒருக் காலத்தில் அவர்கள் வீட்டில் நன்னீரை மட்டுமே மின் மோட்டார் மூலம் தொட்டிகளில் தேக்கி அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தியது குற்ற உணர்ச்சியோடு அவளுக்கு நினைவிற்கு வந்தது. 

ரோஷன் அதற்குள் விவசாய  நிலத்திற்கு எப்படி நீரை பகிர்ந்தளிக்கிறார்கள் என்று விளக்கி முடித்திருந்தான். 

வள்ளி மோன நிலையில் ஆழ்ந்திருந்தாள். ஜேம்ஸ் ஏரிக் கரையில் நின்றுக் கொண்டிருந்த பறவைகளை தன் கருவியின் மூலம் கவனித்துக் கொண்டிருக்க, ரோஷனும் சற்று நேரம் பரந்து விரிந்திருந்த ஏரியில் தன் பார்வையை நிலைக்க விட்டிருந்தான். 

பிறகு ஏதோ நினைவிற்கு வந்தவன் போல, “ நான் லண்டன்ல பிலிம் மேக்கிங் படிச்சிட்டு இருந்தேன். இது எங்க அப்பாவோட பூர்வீக கிராமம். இங்க இப்படி ஒருத்தர் ஊரை மாத்த போராடிட்டு இருக்கார்னு அப்பா மூலம் தெரிஞ்சி நான் பாதியில தான் இவங்களோட வந்து ஜாயின் பண்ணேன். 

இப்போ கூட வாரத்துல ஐஞ்சி நாள் சென்னையில தான் இருக்கேன். பட் வீக் என்ட்ஸ் இந்த ஊரை பாத்து ஓடி வந்துடுவேன். இந்த ஏரிய சுத்தப்படுத்தும் போது டீம்ல நானும் இருந்தேன். அவ்ளோ பேட் ஸ்மெல் அடிக்கும் இந்தப் பக்கம் வந்தாலே. 

ஆனா இப்போ ஒவ்வொருவாட்டி இந்த ஏரியைக் கடந்துப் போகும் போதும்  ரொம்ப பெருமையா இருக்கும். ஜில்லுனு ஏரிக் காத்து முகத்துல வந்து மோதும் போது, வாழ்நாள்ல யாரோ பெரிய அவார்ட் தூக்கி கொடுத்த மாதிரி இருக்கும். எங்க தாத்தாவை ஒரு நாள் சென்னையில இருந்து கூட்டிட்டு வந்தேன் இந்த ஏரியைக் காட்ட. 

மனுஷன் அப்படியே ஸ்டன் ஆயிட்டார். அவர் சின்னப் பையனா இருக்கும் போது இருந்த ஏரிய அப்படியே பாக்குற மாதிரி இருக்குன்னு சொல்லி… எதுவுமே பேசாம அப்படியே இங்க இருக்க கல் பெஞ்சில கொஞ்ச நேரம் உக்காந்து இருந்தார். 

நாங்க கிளம்பும் போது, “நாங்க பாதுகாத்து உங்க தலைமுறைக்கு பத்திரமா கொடுக்க வேண்டிய விசயத்தை நீங்க மீட்டு எங்க தலைமுறைக் கண்ணுல காட்டி இருக்கீங்க. பத்திரமா பாத்துக்கோங்க….உங்களை எல்லாம் நினைச்சா ரொம்ப பெருமையா இருக்குப்பா..’’ அப்படின்னு சொன்னார். 

லண்டன் யூனிவர்சிடியில இருந்து பெஸ்ட் பெர்பாமர் அவார்ட் வாங்கிட்டு வந்தப்ப கூட, எங்க தாத்தா முகத்துல நான் அப்படி ஒரு பூரிப்பை பாத்ததே இல்ல.’’ ரோஷன் ஏதோ கனவுலகத்தில் சஞ்சரிப்பவன் போல சொல்லிக் கொண்டே இருக்க, 

அவன் முன் வந்து நின்றவள், “எனக்கும் தான் ரோசன். இப்படி ஒரு கிராமத்தை பத்தி எழுதுற வாய்ப்பு கிடச்சதை நினச்சி ரொம்ப ரொம்ப சந்தோசமா, பெருமையா, பூரிப்பா இருக்கு.’’ என உணர்வுகள் பொங்கிய கரகரத்த குரலில் சொன்னாள். 

தன் நிலைக்கு மீண்ட ரோஷன்…”ஓகே மேம். நான் ரொம்ப பேசிட்டேன்னு நினைக்கிறேன். சாரி. நாம போலாமா..?’’ என முன்னால் நடக்க, 

“இந்த  ஊர்ல முதல்ல மாற்றம் கொண்டு வர போராடினதா சொன்னீங்க இல்ல… யார் அவர்..?’’ என்று ஆர்வம் தாளாமல் வினவினாள்.  

“ஓ இன்னும் அவர் கூட உங்களுக்கு அறிமுகம் ஆகலையா… இங்க எல்லா மாற்றமும் ஏற்பட முழு முதற் காரணம் அவர் தான். அவரை இங்க எல்லாரும் பொதுவா சின்னவர்னும் ஊர்த் தலைவரை பெரியவர்னும் சொல்லுவாங்க… எங்க டீம் மெம்பர்ஸ் எல்லாம் அவரை செல்லமா ஹீரோன்னு கூப்பிடுவோம்..’’ என்று சொல்ல, “அவரை எப்ப பாக்கலாம் நாங்க..?’’ என அவள் ஆவலாய் விசாரித்தாள்.

“அவர் இன்னும் மூணு நாளைக்கு செம பிசி… நாங்களும் பல முறை அவர்கிட்ட கேட்டு இருக்கோம்… உங்களுக்கு இந்தக் கிராமத்துல மாற்றத்தை ஏற்படுத்தணும்னு எப்படி தோணுச்சின்னு. மனுஷன் சொன்னதே இல்ல. இந்த முறை நீங்க விடாதீங்க மேம் அவரை. பேசி வாங்கிடுங்க மேட்டரை..’’ என சொல்லி பெரிதாய் சிரித்தான். 

“கண்டிப்பா ரோஷன்…’’ என்றவள், கண்களை சுருக்கி, “உங்க ஹீரோக்கு மேரேஜ் ஆயிடுச்சா..?’’ என ரகசிய குரலில் விசாரித்தாள்.

ஏன் கேட்கிறாள் என்று புரிந்த போதும், “அதை ஏன் நீங்க கேக்குறீங்க..?’’ என விசமப் புன்னகையோடு அவளையே திருப்பிக் கேட்டான். 

அவன் பதிலை கொஞ்சமும் கண்டுக்கொள்ளாமல், “ஆகி இருந்தாலும் பாரவாயில்ல…’’ என்று ரோஷனிடம் கண் சிமிட்டியவள், அவர்கள் நடந்துக் கடந்துக் கொண்டிருந்த, ஏரியை நோக்கி திரும்பி, உதட்டில் கைகளைக் குவித்து, “ஐ லவ் யூ ஹீரோ…’’ எனக் கத்திச்  சொன்னாள். 

ரோசன் அவளை பார்த்து வெடித்து சிரிக்க, ஜேம்ஸ் அவளை முறைக்க, அவளுக்கு தெரியாமல் அவளை ரசிக்க வந்திருந்த வில்லனின் காதுகளை அவளின் தேன் குரல் தீண்டிய நேரம், “மீ டூ தில்லு..’’ என அவள் முன் குதித்துவிடலாமா..? என்றுக் கூட ஒரு நொடி அவனுக்கு தோன்றியது. 

முயன்று தன்னை நிலை நிறுத்திக் கொண்டான். 

தொலைவில் புன்னகையும், குறும்பும் நிறைந்த முகத்தோடு அவள் துள்ளல் நடையில் செல்வதை மனதிற்குள் பதித்துக் கொண்டான். 

அணு அணுவாய் என்னில் 

அமிழ்ந்திருக்கும் அலையே..

கடந்த கால கடலை தாண்டி  – என் 

காதல் நனைத்திடு பூவே.

வில் நாண் ஏறும்.   

Advertisement