வள்ளி அடுத்த நாள் கண் விழிக்கையில் நேரம் காலை ஒன்பதை நெருங்கி இருந்தது. படுக்கையில் சோம்பலாய் உருண்ட படி கடிகாரத்தில் நேரத்தை கண்டவள் அடித்து, பிடித்து எழுந்து அமர்ந்தாள்.
“ச்சே நாளைல இருந்து அலராம் வச்சிட்டு தான் தூங்கனும்..’’ என மனதிற்குள் முடிவெடுத்துக் கொண்டவள், வேக வேகமாய் மாற்றுடைகளை எடுத்துக் கொண்டு குளியலறை நோக்கி கிட்ட தட்ட ஓடினாள்.
கொல்லைப் புறத்தில் துணிகளை காய வைத்துக் கொண்டிருந்த தனம், “அம்மாடி எழுந்துட்டியா கண்ணு. பல் விளக்கிட்டு வாத்தா காபித் தண்ணி குடிச்சிட்டு அப்புறம் போய் குளிப்பியாம்..’’ என அன்பாய் விளிக்க,
“இல்லமா நேரம் ஆச்சு…. நான் குளிச்சிட்டு வந்துடுறேன். இன்னைக்கும் நாங்க வெளிய போற மாதிரி இருக்கும் போல இருக்கு.’’ என்று சொல்லிவிட்டு அவர் பதிலுக்காய் காத்திருக்காமல் குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.
அவள் தயாராகி வெளியே வரும் போது, ஜேம்ஸ் உணவுக் கூடத்தில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தான்.
இவளைக் கண்டதும், “மேம் வாங்க வாங்க….. தனம் அம்மா இன்னைக்கு ஆப்பமும் தேங்காய்ப் பாலும் செஞ்சி இருக்காங்க… மெத்து மெத்துன்னு ஆப்பம்… சூப்பரா இருக்கு..’’ என சப்புக் கொட்டிக் கொண்டே, பாத்திரத்தில் இருந்த தேங்காய்ப் பாலை டம்ளரில் ஊற்றி குடித்துக் கொண்டிருந்தான்.
அவனையும் அவன் வயிற்றையும் மாறி மாறிப் பார்த்தவள், “ஜேம்ஸ்… இங்க வரும் போது எக்ஸ்ட்ரா லார்ஜ்ல இருந்த உங்க தொப்பை இப்ப டபுள் எக்சல் ரேஞ்சுக்கு பெருசாயிடுச்சி. இப்படியே போனா… உங்க எல்லா பேன்ட்டையும் நீங்க எடைக்கு தான் போட வேண்டி வரும்’’ என சொல்லிக் கொண்டே அவன் எதிரே அமர்ந்தாள்.
அவள் அப்படி சொன்னதும் முகத்தை சுருக்கியவன், “போங்க மேம்…. சாப்பிடும் போது அதையும் இதையும் சொல்லிக்கிட்டு….’’ என்றவன் கையில் இருந்த டம்ளரோடு தோட்டத்து பக்கம் நடக்க, “கோவத்துல கூட டம்ளரை தூக்கிட்டுப் போகுது பார்…’’ என எண்ணி வள்ளி மனதிற்குள் சிரித்துக் கொண்டாள்.
இவள் வரவை உணர்ந்த தனம் சூடான ஆப்பத்தை இலையில் பரிமாற, ஜேம்சை கிண்டல் அடித்த வள்ளி முழுதாய் ஆறு ஆப்பங்களை விழுங்கி ஏப்பம் விட்டாள். இன்னும் கூட இரண்டை உள்ளே தள்ளி இருப்பாள்,
அதற்குள் ஜேம்ஸ் வந்து, “மேம் ரோஷன் வந்துட்டார். உங்களுக்காக ஹால்ல வைட் பண்ணிட்டு இருக்கார்.’’ என பணி பற்றி நினைவூட்ட, வள்ளி அதோடு தன் உணவை முடித்துக் கொண்டாள்.
தனம் தான், “என்ன பிள்ளையோ… காலையில காபித் தண்ணிக் கூட குடிக்கல. சின்ன சின்ன ஆப்பம் இன்னும் ரெண்டு வச்சுக்கத்தா…?’’ என பிடிவாதமாய் நின்றுக் கொண்டிருந்தார்.
“போதும்மா கொஞ்ச நேரம் கழிச்சி வேணா தேங்காய்ப் பால் குடிக்கிறேன். கொஞ்சமா எடுத்து வையுங்க..’’ என்று விட்டு உணவு மேஜையில் இருந்து எழுந்துக் கொண்டாள்.
வள்ளி கூடத்திற்கு வரும் போது யாரோ ஒரு புதியவனும், ஆனி ஐயாவும் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
புதியவன் வள்ளிக்கு முதுகு காட்டி அமர்ந்திருக்க, இவளை நோக்கி அமர்ந்திருந்த ஆனி ஐயா, “இதோ நம்ம வள்ளிப் பாப்பா வந்துட்டாங்க தம்பி…. நீங்க பேசுங்க… நான் நேத்தையப் போல.. வள்ளியம்மாகிட்ட… இராப்பொழுது பேசிக்கிறேன். குழந்தைக ரொம்ப நேரமா காத்துக் கிடக்குதுக..’’ என்றபடி எழுந்துக் கொண்டார்.
ஆனி ஐயா இவள் வரவு பற்றி அறிவிக்கவும் இவள் புறம் திரும்பியவன், இவள் அருகில் நெருங்கவும் எழுந்து நின்று, “ஹாய் மேம். ஐயம் ரோஷன். ரோஷன் ரித்விக். நீங்க வள்ளி… தில்லையாடி வள்ளியம்மை ஆம் ஐ கரெக்ட்..’’ என முறுவலோடு கேட்க,
நீட்டியிருந்த அவன் கரம் பற்றி குலுக்கியபடி, “எஸ்….’’ என்றவள் அவன் தனக்கு அளித்த முறுவலை உதடுகளில் தேக்கி அவனுக்கே திருப்பிக் கொடுத்தாள்.
ரோஷனின் கண்களில் இளம் பெண்ணை அறிமுகம் செய்துக் கொள்ளும் எவ்வித ரசனையும் இல்லை. நிமிர்ந்த உடலும், நேர் கொண்ட பார்வையுமாய் அப்படியே மதிக்கு எதிர்ப்பதமாய் இருந்தான்.
அவள் கண்களால் ஜேம்சை தேட, “அவர்கிட்ட ஒரு பென்-ட்ரைவ் கொடுத்து அதுல இருக்க போட்டோஸ் எல்லாம் அனலைஸ் பண்ண சொல்லி இருக்கேன் மேம். கடைசியா எந்த பிளேஸ் சூஸ் பன்றாரோ அந்த இடத்துல போட்டோ சூட் வச்சிக்கலாம்..’’ என்றவன், அவளை எதிரே அமர சொல்லிவிட்டு தன் மடிக் கணினியை உயிர்ப்பித்தான்.
“நான் பேசி பேசி மொக்கைப் போடுறதை விட…. நீங்க இந்த டாக்குமெண்டரிய பாத்தீங்கன்னா எங்க ஊரோட வாட்டர் அண்ட் அக்ரிகல்ச்சர் மேனேஜ்மென்ட் பத்தி உங்களுக்கு ஈசியா புரியும்னு நம்புறேன்.’’ என்றுவிட்டு ஒரு காணொளியை உயிர்ப்பித்து மடிக் கணினியை அவள் புறம் திருப்பி வைத்தான்.
ரோஷனை ஒரு முறை நிமிர்ந்து பார்த்துவிட்டு, வள்ளி தன் பார்வையை, மடிக் கணினியின் திரை நோக்கி திருப்பினாள்.
அதில் கருப்பு வெள்ளைப் புகைப்படமாய் அவர்கள் ஊரின் ஏரி காட்சியாய் விரிய, பின்னணியில் ஏதோ ஒரு மந்திரக் குரல்,
“எங்கள் ஊரின் ஏரியின் புகைப்படம் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு..” என கதை சொல்ல தொடங்கியது.
அரசனூருக்குள்… வந்த அன்று பார்த்த ஏரி அது தான் என்றால்… நிச்சயம் வள்ளியால் தன் கண்களைத் தானே நம்ப முடியவில்லை.
ஏன் எனில் கரைகளில் புதர்கள் மண்டிப் போய், நீர் முழுக்க ஆகாயத் தாமரை படர்ந்திருக்க, ஆங்காங்கே குப்பைக் கூளங்களோடு மிக மோசமாய் சிதைந்து போய் இருந்தது.
தற்சமயம் உள்ள ஏரிக்கும் பழைய ஏரிக்கும் எளிதாய் நூறு வித்யாசங்கள் கண்டு பிடிக்கலாம் போல இருந்தது.
அதோடு ஊரில் இருந்த சில பல சிதிலமான கிணறுகள்…. ஊரை சுற்றி ஓடிக் கொண்டிருந்த கழிவு நீர் வாய்க்கால்கள்…
என்று பல விதங்களில் முன்பிருந்த நிலையை கருப்பு வெள்ளை காட்சியாய்க் காட்டிக் கொண்டிருந்த காணொளி… திடும் என…அனிமேசன் முறைக்கு தாவியது.
முறையான நீர் மேலாண்மை என்றால் என்ன…? என்ற தலைப்பின் விவாதப் புள்ளியில்.
நீர் சமநிலைப் பேணுதல்… என்று தொடங்கி..
ஊரின் ஏரி குளங்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்… அதற்கு முறையான பரமாரிப்பு எப்படி இருக்க வேண்டும். பொதுக் கிணறு பராமரிப்பு மற்றும் கையாளும் முறை… விவசாயத்திற்கு நீரை எப்படி சிக்கனமாய் உபயோகிக்க வேண்டும். வீடுகளில் தண்ணீர் மேலாண்மை எவ்வாறு இருக்க வேண்டும். உபயோகப்படுத்தப்பட்ட நீரை சுத்திகரித்தல் எவ்வாறு..? இப்படி நிறைய விளக்கி விட்டு..
இப்பொழுது எங்கள் கிரமாம் என்று காணொளி… வண்ண மயத்திற்கு மீண்டது.
அதில் அவள் வரும் போது கண்ட ஏரி அதே தூய்மையோடும், கம்பீரத்தோடும் மரங்கள் சூழ அழகாய் பரந்து விரிந்து இருந்தது.
இதற்கு முன் பாழுங் கிணறாய் இருந்தவைகள் எல்லாம், சுற்று சுவர் எழுப்பப்பட்டு மேற்புறம் முழுதாய் மரக் கதவுகள் கொண்டு மூடப்பட்டு, நீர் பெற பக்கவாட்டில் குழாய்கள் இணைக்கப் பெற்று, அதோடு மின்சார மோட்டார் வசதிகளும் செய்யப் பெற்று இருந்தன.
விவசாய நிலத்தில் சொட்டு நீர் பாசன முறைக்கு நிலங்களில் குழாய்கள் பதிக்கப்பட்டு இருக்க, வீட்டின் கழிவு நீர் சாதாரண தேக்குதல் வடிகட்டுதல் முறைப்படி சுத்தம் செய்யப்பட்டு, தோட்ட செடிகளுக்கோ வேறு பிற தேவைகளுக்கோ பயன்படுத்தப்பட்டது.
பசுமை பூத்த வயல் வெளிகளோடு, காட்சி நிறைவுற, வள்ளி தன்னையும் அறியாமல் எழுந்து நின்று தன் கைகள் வலிக்கும் அளவிற்கு வேக வேகமாய் கை தட்டினாள்.
அவளின் செய்கையை சிறு முறுவலோடு பார்த்துக் கொண்டிருந்தான் ரோசன். கூட்டத்தில் கேட்ட கரவொலியில், ஜேம்ஸ் தன் அறையில் இருந்து வெளியே வந்திருந்தான்.
“ரோசன் ப்ளீஸ்… எனக்கு இந்த ப்ளேசஸ் எல்லாம் உடனே பாக்கணும்..குவிக்..’’ என்றபடி எழுந்து நிற்க, ஜேம்ஸ் தன் புகைப்படக் கருவியை எடுத்துக் கொண்டு, தானும் கிளம்ப தயாரானான்.
பொறுமையாய் எழுந்து நின்ற ரோஷன், “மேம்…. இங்க நம்ம ஊர் தலைவர் வீட்ல கூட நீர் மேலாண்மை திட்டம் செயல் பாட்டுல தான் இருக்கு. முதல்ல இந்த வீட்டை சுத்திப் பாருங்க.’’ என அறிவிக்க, வள்ளி அரக்க பறக்க கொல்லைப் புறம் நோக்கி நடந்தாள்.
இவளைக் கண்டதும், “தேங்காய்ப் பாலு குடிக்கிறியாத்தா…?’’ எனக் கேட்ட தனத்தின் குரலுக்கு பதில் சொல்லக் கூட அவள் நிற்கவில்லை.
அங்க கொல்லைப் புறத்தில் பெரிய தொட்டி…அதில் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீர் வந்து சேர அதில் அமைக்கப்பட்டிருந்த கீழ்க் குழாயின் மூலம் பளிங்கு நிற தண்ணீர்… தோட்டத்திற்குள் பாய்ந்துக் கொண்டிருந்தது.