Advertisement

அத்தியாயம்….2

“S.V  சார் நீங்க காதலித்த பெண்ணை நீங்க கல்யாணம் செய்துக்க உங்க அப்பா மறுக்கிறார். நீங்க  அந்த பெண்ணை தான் கல்யாணம் செய்துப்பேன்னு திட்ட வட்டமா சொல்றிங்க. இன்னிக்கி நீங்க பேச வேண்டிய டையலாக் …”

“நியாபகத்தில் இருக்கு.”

“என்ன S.V  சார் குரல்ல சுரத்தே காணும். அந்த கிசு கிசுவை  பத்தி இன்னுமா நினச்சிட்டு இருக்கிங்க…..?” வம்பு வளர்க்க அந்த இயக்குனர்  பேச….

“ உங்கல பத்தி வந்த கிசு கிசுவையா….?நான் எந்த பத்தியே மைண்ட் பண்ண மாட்டேன்.” அவனை வம்பு இழுக்க நினைத்தால், இவன் நம்மையே வம்புல மாட்டி விட்டுடுவான் போலவே….

“இல்ல குரல் ஒரு மாதிரி இருந்துதேன்னு கேட்டேன் சார்.” பம்மியவனிடம்….

“ பிடித்த பெண்ணை கல்யாணம் செய்துக்க இன்னும் அப்பா, அம்மான்னு,  காரணம் சொல்லிட்டு…..கொஞ்சம் மாத்தி யோசிக்க மாட்டிங்கலா….அதே பழைய டையலாக்.”  

“தமிழர்களின்  மைனசே இந்த சென்டிமென்ட் தானே…..அத வெச்சி படம் எடுத்தா தான் சார் ஓடும்.  போட்ட பணத்த எடுக்க வேண்டாமா…..?” சர்வேஷ்வர்க்கு அதில் உடன் பாடு இல்லாததால், சில மாற்றங்கள் செய்தே அந்த காட்சியை நடித்துக் கொடுத்தான்.

சர்வேஷ்வர் கிளம்பும் சமயம்…..இயக்குனர் வந்து….

“ சார் நம்ம அடுத்த படம்.”

“அது தான் சொன்னனே….கதை பிடிச்சி இருக்கு. என் மனேஜர்  டேட் கொடுப்பாருன்னு…”

“ அடுத்த வாரமே ஆராம்பிக்கலாமுன்னு.”

“ஓ…. அடுத்த வாரம் சிங்கப்பூரில் ஹூட்டிங் இருக்கு.”  என்று இழுத்தவனிடம்…

“ அதற்க்கு அடுத்த வாரம் சார்.”

யோசித்து விட்டு…. “ ஏற்கனவே கொடுத்த படத்துல நடிக்கும் ஹீரோயினுக்கு  ஸ்கீன் அலர்ஜின்னு படப்பிடிப்பு தள்ளி வெச்சி இருக்கிறதா…….” என்று இழுத்தவன்,…

.“எதுக்கும் மனேஜர் கிட்ட கேட்டுக்குங்க…..”   சொல்லி விட்டு கிளம்பியவன்…

என்ன நினைத்தானோ திரும்ப…. “ எனக்கு அம்மாவா  யார் நடிக்கிறாங்க…..?”

“நம்ம ஆயிஷா மேடம் தான் சார்.” நம்ம என்ற வார்த்தையில் நையாண்டி இருந்ததோ….

அதை ஒதுக்கியவனாய்  காரில் செல்லும் போது….கைய்பேசியில் ஆயிஷாவை  அழைத்தவன்…

“ எனக்கு அம்மாவா ஆயிட்ட போல….”

“வேறு வழி…..?” அவள் குரலில் தெரிந்த விரக்தியில்…

“ஆயூ அவ்வளவு  கஷ்டமா இருந்தா வேண்டாம். யாரு உன்ன வற்புறுத்த போறா….?”

“ ஆறு மாசமா சும்மா தான் இருக்கேன் சர்வேஷ். அதான்….அவர் சொன்னது போல எனக்கு கணமான பாத்திரம் தான். என்ன ஒன்னு  இதுல நடிச்சிட்டா…இது வரை ஜோடியா நடிச்சவங்களுக்கு எல்லாம் அம்மாவா கூப்பிடுவாங்க. ஏதோ ஒன்னு நான் போகும் வரை  இந்த பில்ட்டுல நான் பிஸியா இருக்கனும்.”

இப்போது எல்லாம் இது போல் தான் இவள் பேச்சி இருக்கு. என்ன காரணம் மனது நினைத்தாலும்

வாய் தன்னால்…..“ இந்த பில்ட்டு தான் வேனும்முன்னா நீயே ஒரு படம் எடேன். நானே நடிச்சி கொடுக்குறேன்.” சர்வேஷ் இப்படி சொன்னதும்,

“நான் என்ன செஞ்சேன்  உனக்கு….?நான் இத்தன வருஷம் சம்பாதித்தது எல்லாம்  மொத்தமா போறதுக்கு வழி சொல்ற . வயசு போயிடுச்சி….இனி இருக்குறத சேப் பண்ணனும் சர்வேஷ்.”

“ஏய்…நான் எல்லாத்தையும் போடுன்னு சொல்லலே…. உன் ப்யூச்சருக்கு எடுத்து வெச்சிட்டு  கம்மி பட்ஜெட்ல எடு.”

“அந்த அளவுக்கு எல்லாம் இல்ல சர்வேஷ்….”

“யாரு கிட்ட கத விடுற…..மூனு வருஷமா  தான் சின்ன ரோல்ல நடிக்கிற. அதுக்கு முன்னாடி நாயகியா நீ எத்தனை லகரத்துல சம்பளம் வாங்குனேன்னு எனக்கு தெரியும்.”

அந்த பக்கம் மவுனமே…. “ஆயூ…ஆயூ….” இரு முறை அழைத்ததும்,

“லைனில் தான் இருக்கே சர்வேஷ். எனக்கு மட்டுமுன்னா….நீ சொன்னது போல செய்யலாம்.”

“ நீ சொல்றது எனக்கு புரியல ஆயிஷா….”

“ என் சொத்தை மூன்று  பேரு ப்யூச்சருக்கு பிரிக்கனும் சர்வேஷ்.”

“ ஓ….”

“ எனக்கு  தெரியும் சர்வேஷ். நான் சொல்லாம நீயா  எதையும் கேக்க மாட்டேன்னு. கொஞ்ச நாளா ரொம்ப பாராம இருக்குடா….

யாரு கிட்ட இறக்கி வைக்கிறது தெரியல. மனசுல வெச்சி வெச்சி வெடிச்சுடுமோ…..பயமா இருக்குடா…..” மனது சரியில்லாத போது தான் ஆயிஷா சர்வேஷ்வரை பேச்சுக்கு பேச்சு டா போட்டு பேசுவாள்.

“ஆயிஷா ப்ரியா தானே இருக்கே…..?”

“ நான் என்ன உன்ன போல டாப் ஹீரோவா….?சும்மா வீட்டுல வெட்டியா தான் இருக்கேன்.”

“ எனக்கு ஹூட்டிங் முடிஞ்சுடுச்சி….நான் அங்கு வர்றேன்.” என்றவனுக்கு எந்த பதிலும் சொல்லாது அலைபேசியை அணைத்தாள்.

கதவை திறந்த ஆயிஷாவின் வீட்டு வேலையாள் சர்வேஷ்வரை பார்த்ததும்…” அம்மா அவங்க ரூமில இருக்காங்க அய்யா….” வேலையாள்  சொல்லி முடிப்பதற்க்குள் சர்வேஷ்வர் மாடி செல்வதற்க்கு பாதி படிக்கட்டை ஏறி இருந்தான்.

ஆயிஷாவின் அறை முன் கதவை தட்ட….. “ வா சர்வேஷ்….” உள்நுழைந்தவனுக்கு ஆயிஷா முன் இருந்த மது பாட்டிலை பார்த்து…

“ என்ன காலையிலேயே தீர்த்தம்.” அன்று அவனுக்கு விடியாற்காலை படப்பிடிப்பு. அவன்  இன்று நடித்துக் கொடுக்க வேண்டியது சிறுபகுதி தான்.

எட்டு மணிக்குள் தான் நடிக்க வேண்டியதை நடித்து கொடுத்து விட்டு, இங்கு வர எட்டு முப்பது தான் ஆகியிருந்தது.

இப்போது எல்லாம் எந்நேரமும் மது அருந்துகிறாளோ..? சர்வேஷ்வர் .யோசனையில் அவள் முன் அமர…

ஆயிஷாவோ அவன் சொன்ன  தீர்த்தம் என்ற அந்த வார்த்தை, பத்துவருடம் முந்தைய தன் வாழ்க்கையை படம் போல்  கண் முன் விரிந்தது. விளைவு…

“ நீ சொன்னது ஒரு வகையில் சரி தான் சர்வேஷ். ஒரு காலத்துல காலையில தீர்த்தம் குடிச்சா   தான், என் அம்மா காபியே கண்ணுல காட்டுவா….”

ஆயிஷா சொன்னதுக்கு எந்த பேச்சும் பேசாது சர்வேஷ்வர்  அமைதியாக அவள் முகத்தை பார்த்திருந்தான்.

கொஞ்ச நாளாய் ஆயிஷா அதிகப்படியான  டிஸ்ட்டப்பில் இருக்கிறாள். அது சர்வேஷ்வருக்கு தெரிந்த விஷயம். அதற்க்கு காரணம் படவாய்ப்பு இல்லை என்று அவன் நினைத்து இருக்க, அது மட்டும் காரணம் இலையோ … இன்றைய அவளின்  கைய்பேசி பேச்சு…அவனை இவ்வாறு எண்ண வைத்தது.

இப்படியே விட்டால் உடல் நிலையை கெடுத்துக் கொள்வாள் என்று தான் அவளை தேடி வந்தது.

சர்வேஷ்வர்  தன் பேச்சுக்கு எந்த எதிர் வினையும் காட்டாது இருப்பதை பார்த்து….

“ என்ன சர்வேஷ்வர் உனக்கு அம்மா இருக்காங்கலா….?அப்படின்னு கேட்பேன்னு பார்த்தா….”

“ அம்மா இருக்கிறது என்ன அவ்வளவு பெரிய அதிசயமா…..? எல்லோருக்கும் தான் அம்மா இருக்காங்க. அடுத்து என்ன அத சொல்லு…..”

அவளின் மனகணத்தை போக்கவே சர்வேஷ்வர்  அப்படி இயல்பாய் பேசினான்.

“ உன் கிட்ட எனக்கு பிடிச்சதே இது தான்டா….” அவன் தொடையை தட்டி சொல்ல…

“எனக்கு உன் கிட்ட பிடிக்காததே…சொல்றத சீக்கிரம் சொல்லி முடிக்கிறது இல்ல.”

“ என் ஊர் ஆற்காடு….” அதை சொல்லும் போதே ஆயிஷாவின் முகத்தில் அப்படி ஒரு பெருமை.

“ என் தோப்பனார்…..” அம்மா என்ற வார்த்தைக்கு, எதுவும் சொல்லாதவன். அவளின் தோப்பனார் என்ற அழைப்பில்…

“ தோப்பனார்…..” கேட்டு ஆயிஷாவை கூர்ந்து பார்த்தான்.

“ அம்மா எப்படி அதிசயம் இலையோ…. அதே போல் தான் அப்பாவும் அதிசயம் இல்லை சர்வேஷ்.”

“ம்….” சொல்லு என்பது போல் சைகை செய்ய….

“ காலையில் ஸ்தானம் பண்ணிட்டு  அடுத்த தெருவில் இருக்க பெருமாள சேவீச்சிட்டு, அங்கு கொடுக்குற தீர்த்தம் பல்லுல பட்ட பிறகு தான் வேறு எதுவும் சாப்பிடுவார்.

என் தங்கையும் தோப்பனார் கை பிடிச்சிட்டு, அவர் கூட நூல் புடிச்சாப் போல போவா…..அம்மா ஸ்தானம் செய்யாம சமைய கட்டு பக்கம்   போக மாட்டா…. எந்த வேல செய்துட்டு இருந்தாலும், வாய் ஏதாவது ஒரு ஸ்லோகத்த சொல்லிட்டு இருக்கும்.

என் தோப்பனார் கண்டிப்பானவர் தான். ஆனா பொம்மனாட்டிகள் படிச்சிட்டு வேலைக்கு போகனும். அப்போ தான் ஆவாளுக்கு வெளி உலகம் தெரியும். எங்க குடும்பத்துல பன்னிரெண்டாவது  படிச்ச உடனே புக்காத்துக்கு அனுப்பிடுவா…

ஆனா என் தோப்பனார் என் கையில புக்கு கொடுத்து காலேஜிக்கு   படிக்க அனுப்பினாரு

என் வீட்டுல  பிறந்ததில் இருந்தே ரொம்ப கட்டுப்பாடு. சின்ன வயசுலேயே தொங்க தொங்க பாவடை கட்டனும்.  பெரியவள் ஆன உடனே தாவணி. வெளிவாசலுக்கு போக கூடாது. வெளிஆம்பிள கிட்ட பேசக்கூடாது.

காலையில் ஸ்தானம் செய்துட்டு  தெய்வத்த சேவிக்காம சாப்பிட எதுவும் அம்மா கொடுக்க மாட்டா. இது என் தங்கைக்கு ஒத்து போயிடுச்சி…  அவ ஆத்துல எது சொன்னாலும் கேட்டுப்பா…

எனக்கு ஏதோ சிறையில் இருக்குற மாதிரி ஒரு உணர்வு. காலேஜ் லைப் எனக்கு விடுதலை கிடச்சா மாதிரி  நினச்சேன். என் முதல் படத்துல நான் எப்படி இருந்தேன்னு உனக்கே தெரியுமே…

காலேஜ் முழுவதும் என்னை கொண்டாடினாங்க. காலேஜ் குயின் நான் தான். காலேஜ் பசங்க எல்லாம் என் பின்னாடி. அத   ரொம்ப பெருமையா உணர்ந்தேன்.

அசோக் எனக்கு சீனியர். பெரிய இடத்து பையன். பாக்க ஹான்சமா இருப்பான். காலேஜ் பொண்ணுங்க எல்லாம் அவனை பார்க்க.  அவன் என்னை பார்த்தான். ஆறுமாசம் சுத்தாத இடம் இல்ல. விளைவு மூனு மாசம்.”

சர்வேஷ்…. “அயிஷா …”

“அகல்யா….என் பெயர் அகல்யா. எங்க காலேஜ் பங்கஷனுக்கு நம்ம முதல் பட இயக்குனர் என்ன பார்த்து  என் படத்துல நடிக்கிறியான்னு கேட்டாரு….” உடனே சம்மதமுன்னு தலையாட்டிட்டேன்.

வயித்துல இருக்கிறது என்ன செய்யிறது. அசோக்  அவன் குழந்தை, காதல் ,கத்திரிக்காயின்னு, ஏதாவது சொல்வானோ….?பயந்திட்டு இருந்தா….பயப்புள்ள அபார்ஷனுக்கு அப்பாயின்மென்ட்  பிக்ஸ் பண்ணிட்டு வருது. அப்புறம் என்ன…..? ஹூ….” அவள் பேச்சில் எந்த குற்றவுணர்வும் இல்லை.

பொம்மானாட்டிக்கு தெரியாததா அம்மா கண்டு பிடிச்சிட்டா…..சத்தம், அழுமை, சண்டை ..

எதுக்கும் அசராம நின்னேன்.  அம்மா வெளக்கு மாத்து எடுத்துட்டு அடிக்க வரும் போது தான்,  உடம்புல எங்கும் மார்க் விழ கூடாதுன்னு தடுத்து …

இனி இங்கு  இருக்க மாட்டேன். சினிமாவுல நடிக்க போறேன்னு  வீட்ல சொல்லிட்டு தான் வந்தேன். உடம்பு கொஞ்சம் தேறிட்ட பிறகு சொல்லலாமுன்னு  நினச்சேன். அம்மா சாதுர்யத்தால அது முன்னவே நடந்தது.

இயக்குனர் கெஸ்ட் ஹவுஸ்சுல  இரண்டு வாரம் ஜாகை. அவர் சும்மா வெச்சி இருப்பாரா….முதல் படம்  உன்னோட சூப்பர் ஹீட்…உன் நட்பு அதுக்கு அப்புறம் என் வாழ்க்கையில் நடந்தது தான் உனக்கு தெரியுமே…..”

அனைத்தும் பொறுமையாக கேட்டுக் கொண்டு இருந்த சர்வேஷ்வர்…. “ உனக்கு நடந்தது தெரியும். உன் வீட்டுல என்ன நடந்தது…..?”

தான் செய்ததை எந்த வித குற்றவுணர்வும் இல்லாது சொல்கிறாள். அப்போ சமீபகாலமாய் டிப்ரெஷனில் இருக்கிறாள் என்றால், அங்கு தான் ஏதோ பிரச்சனை என்ற யூகத்தில் கேட்டான்.

“ நான் செஞ்சது நல்லதோ கெட்டதோ, அது என்னோடு. …. இது தான் என்  எண்ணம் சர்வேஷ். என் தோப்பனார் எனக்கு எள்ளும் ,தண்ணியும், தெளிச்சி தலை முழுகினாலும் ஊருஜனம் முழுவில்லை போல… அபிராமி.”

சர்வேஷ்வரின் கேள்வியான முகபாவனையில்…. “ என் தங்கை அபிராமி. என்னோட ஆறுவயசு சின்னவ. அப்போவே ரொம்ப சமத்து.

அக்க மனுஷா எல்லாம் அபிராமிய காலேஜ் எல்லாம் அனுப்பாதிங்க. முன்னேறு போனது  போல தான் பின்னேறும் போகும். சீக்கிரம் கல்யாணம் செஞ்சி அனுப்பிடுங்கன்னு சொல்ல.

அப்பாவும் என் தங்கை  பன்னிரெண்டாவது முடிச்ச கைய்யோட  மாப்பிள்ளை பார்த்து இருக்கா…”

“ என்ன மடத்தனம்  ஆயூ இது. அந்த சின்ன வயசுல கல்யாணமா….?”

“ இல்ல மாப்பிள்ளை பார்த்தா ஏதும் கூடல.”

“பரவாயில்ல….” சந்தோஷ பட்டவனை வேதனையுடம் பார்த்த ஆயிஷா….

“ முடிஞ்சி இருந்தா  நான் இப்படி வேதனை பட்டு இருக்க தேவையில்ல சர்வேஷ்.”

“ என்ன சொல்ற ஆயிஷா….?”

“ ம் வந்த மாப்பிள்ளைங்க எல்லாம் என்ன காரணம் காட்டி மறுத்துட்டாங்க.”

“ அக்கா நடிகைன்னா தங்கச்சிய கல்யாணம் செய்துக்க மாட்டாங்கலா…..? சுத்த பைத்தியக்காரதனமால்ல இருக்கு,”

“ சர்வேஷ் நீ இது வரை பழகிய வட்டம் எல்லாம் வேறு வட்டம். மத்திய வர்க்கம் ஒன்னு இருக்கு …மனசுல ஆயிரம் ஆசை இருக்கும்.

அதை வெளியில் கூட காட்டமாட்டாங்க. வீதியில அழகான பையன்   போனா பார்ப்பாங்க. மத்தவங்க பாக்காத மாதிரி பார்ப்பாங்க. ஏன்னா அது மத்தவங்க பார்த்தா அந்த பொண்ணா…..?அப்படி தான் பேசுவாங்க. மனசுக்கும், அறிவுக்கும் இடையே அல்லாடிட்டு …..

கல்யாணம் செஞ்சிட்டு  இவ அக்கா மாதிரி போயிட்டா எங்க குடும்ப மானம். இத சொல்லி அவ கல்யாணம் தடைப்பட… அது அப்பாவ ரொம்ப பாதிச்சிட்டுச்சி. விளைவு ஐந்து வருஷம் முன் ஸ்டோக்.”

“நீ போய் பாக்கலையா….?இப்போ தான் உன் உதவி அவங்களுக்கு தேவை ஆயிஷா….”

“ மத்தியதர்க்கத்தோட  இன்னொரு குணம் ரோஷம். என்  கிட்ட எந்த உதவியும் வாங்கிக்க மாட்டாங்க.

அப்போ  எதுக்கு சொத்து அவங்களுக்கு கொடுக்குறத பத்தி  யோசிக்கிறேன்னு நினைக்கிறியா…..?”

சர்வேஷ் அதே தான் நினைத்தான். ஆனால் கேட்கவில்லை. அவள் மனதில் இருப்பதை கொட்டினால், மனப்பாரம் குறைந்தால் போதும். இதுவே தான் அவன் எண்ணமாய் இருந்தது.

“அபிராமி. பாவம் சர்வேஷ் அவள். யாராவது  ஈஷிட்டு நின்னாவே அவளுக்கு பிடிக்காது. பஸ்சுல படிக்கட்டுல தொங்கிட்டு….” இவ்வளவு நேரமும் தங்கு தடையின் பேசிக் கொண்டு இருந்தவள் தங்கை பற்றிய பேச்சை அவளாள் சாதரணமாக பேச முடியவில்லை.

 

 

 

Advertisement