Advertisement

அத்தியாயம்—-11

பத்திரிகை செய்தி எல்லாம் கொஞ்சம் அடங்கியதும் …..அகல்யா  தந்தையிடம்….

“ அப்பா அபிய கூட்டிட்டு போகட்டுமா…..?” நாரயணன் இப்போதும்  அதே வீட்டில் தான் குடித்தனம் இருக்கிறார்.

தேவியின் மூலம் ஆயிஷா யார் என்று தெரிந்ததாலும், அகல்யாவே வீட்டின் உரிமையாளரிடம்…. “சர்வேஷ்வருக்கும் என் தங்கைக்கும் திருமணம் முடிந்த உடன்  நான் என் பெற்றோரை அழைத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு சென்று விடுவேன். அது வரை…..” அகல்யாவை முடிக்க விடாது…

“ அதுக்கு என்ன…. எவ்வளவு மாதமானாலும் இருக்கட்டும்.” வாய் எல்லாம் பல் தெரியும் படி  சொன்னவரை பார்த்து தேவிக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் தோன்றியது.

பத்திரிகையில் செய்தி வந்ததும், ஆடிய ஆட்டம் என்ன….?இப்போது அடங்கிய தோற்றம் என்ன….? பணம் ஒரு  மனிதனை எண்ணமாய் மாற்றுகிறது.

இதுவே அகல்யா சினிமாவில் நடிப்பதை அவள் குடும்பம் ஏற்று…..அவளோடு பங்களாவாசியாக மாறி இருந்தால்….இவர்களுக்கு இவ்வளவு கஷ்டம் ஏற்பட்டு இருக்காதோ…..?

குறைந்த பட்சம் இது போல் முகத்துக்கு நேராய் பேசாது இருந்து இருப்பார்களோ…மனிதர்களின்  செயலை பார்த்து இப்படி தான் எண்ண தோன்றுகிறது.

“அப்பா உங்களுக்கும் அம்மாவுக்கும் பாஸ்போர்ட் ரெடி பண்ணிட்டேன்.”

“எ…து…க்கு….?”

“ இருக்கும் வரை நான் உங்க கூட இருக்க ஆசை படுறேன்பா…இங்கு நிம்மதியா இருக்க விட மாட்டாங்க. அதுவும் இல்லாம உங்க ட்ரீட்மென்ட் ,என்னோடது, அங்கயே பார்த்துக்கலாம்.” இவ்வளவு சொல்லியும் தந்தையின் முகத்தில் தெளிவு இல்லாததை பார்த்த அகல்யா…

“ அந்த ப்ரஸ் மீட்டிங் பிறகு யாரை பார்க்கவும் ஒரு  மாதிரி இருக்குப்பா…..அது தான் இந்த நாட்டை விட்டே….” அந்த வார்த்தை நன்றாகவே வேலை செய்தது.

“ம்….” என்று தலையாட்டுயவரை கட்டிக் கொண்டார்.

இருவருக்கு காபி கலந்துக் கொண்டு வந்த மரகதம்….. “ ஆம்பிளைய என்ன அது அப்படி கட்டி பிடிக்கிறது.” பத்து வருடம் முன் எப்படி அகல்யாவை திட்டுவாரோ அப்படியே அச்சி பிசகாமல் திட்டினார்.

என்ன ஒன்று முன் தந்தையின் அருகில் போனால் அவரே நாசுக்காக விலகி விடுவார். இப்போது அவருக்கும் அந்த அணைப்பு தேவையாக இருக்கிறதோ என்னவோ….?விலக்குவது இல்லை.

முதலில் திட்டும் அன்னையின் திட்டுக்கு கோபப்படும் அகல்யா…இந்த திட்டுக்கு மனது சந்தோஷப்பட்டது.

“ அப்பா அபிய என் வீட்டுக்கு கூட்டிட்டு போகட்டுமா….?” திரும்பவும் கேட்டாள்.

“ம்….” தந்தையிடம் அதுக்கும் தலையாட்டலே ….

ஆனால் மரகதம்…. “ தோ பாருடி இன்னும்   முறையா அவங்க பேசல. அதனால அந்த பிள்ளையான்டானை அங்கு கூப்பிட்டுக்காதே…..”

போகும் போது….. “ பொழுதோட அனுப்பி வெச்சிடுடீ….”

முன் எல்லாம் தாயின் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசும் அகல்யா…இப்போது…. “சரிம்மா…சரிம்மா….” கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பார்களே அது போல்.

அகல்யா வீட்டின்  தோட்டத்திலேயே சர்வேஷ்வர் இருப்பதை பார்த்து அபிராமி அகல்யாவை முறைத்து பார்க்க…

அவளோ அவள் பக்கம் திரும்பாது….. “ என்ன சர்வேஷ்  இந்த பக்கம்…..?” எதுவும் தெரியாதது போல் கேட்டவளிடம்…

அவனுமே….. “ இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன் ஆயூ. அதான்  அப்படியே நீ இருந்தா பார்த்துட்டு போகலாம்.” பேச்சு ஆயிஷாவிடம் இருந்தாலும் பார்வை மொத்தமும் அபிராமியிடமே…

“அது என்ன ஆயூ….அசிங்கம்மா இருக்கு. அகல்யான்னு கூப்பிட சொல்லுக்கா……”

“ என்ன ஏன்டி இடையில இழுக்குற…உனக்கு நேரா தானே இருக்கார். அவர் கிட்டயே பேசு.” சொல்லி விட்டு ஆயிஷா உள்ளே சென்று விட்டாள்.

அவளின் பின் செல்ல பார்த்த அபிராமியின் கை பிடித்து தடுத்த சர்வேஷ்வர்  அந்த தொடுகையில் என்ன மாதிரி உணர்கிறான் என்பது அவனுக்கு புரியவில்லை.

பெண் என்பது அவனுக்கு புதியது  கிடையாது.படத்தில் முத்தக்காட்சி நடித்தான் என்றால்….

இரவில் மொத்த காட்சியையும் பார்த்து   எல்லை வரை தொட்டு இருக்கிறான். வர வர பெண்கள் மேல் வந்து விழுந்தால் கூட….

“ இது தானே ….?” அந்த அளவுக்கு சலிப்பு அவன் மனதில் எழுந்தது உண்டு. அந்த சலிப்புக்கு காரணம் வயதாகி விட்டதோ….என்று கூட நினைத்தும்  இருக்கிறான்.

அபிராமியின் கை பற்றலில்  வயது ஆகவில்லையடா….இது தான் உன் வாழ்க்கை என்று  எடுத்து உரைத்தது போல் உணர்ந்தான்.

இது தான் தனக்கு சொந்தமான  தொடுகையில் வரும் உரிமை உணர்வே…..அபியை பார்க்க…

அபியும் அப்போது அவனை தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“ உன் கிட்ட பேசனும் அபி. உங்க வீட்ல ஒத்துக்கல அது தான் அயூ…சாரி சாரி அகல்யா கிட்ட சொன்னேன். ஒரு மணி நேரம் பேச மட்டும் தான். ஒகேவா…..”

“ என்ன பேசுறது. அது தான் கல்யாணம் செய்துக்குறதுக்கு நான் ஒத்துக்கிட்டனே…..” சர்வேஷ்வரிடம் நேர்க் கொண்டு பேசும் வார்த்தை, அது கூட ஒரு நிமிடத்துக்கு மேல் அவன் முகத்தை பார்க்காது  அக்கம் பக்கம் பார்த்து தான் பேசி முடித்தாள்.

“ என்ன பார்த்து பேச பிடிக்கலையா அபி….?”

அந்த பேச்சில்…. “  அய்யோஅப்படி இல்ல.”

“பின் என்ன….என்ன பாக்கவே மாட்டேங்குற….?” ஒன்னும் பேசாது அமைதியாக நிற்கும் அபிராமியின் அருகில் செல்ல…

அவளோ இரண்டு அடி பின் நோக்கி எடுத்து வைத்தாள். “ பிடிக்கலையா…..?” அதற்க்கும் பதில் இல்லை.

“அபி உனக்கு பிடிக்கலேன்னா இந்த கல்யாணம் வேண்டாம். நிறுத்திடலாம்.”

அதற்க்கும்…. “அய்யோ…..”

“ உனக்கு வேறு  வார்த்தையே தெரியாதா…..?  என்னை பிடிச்சி இருக்கா….?பிடிக்கலையா….? எனக்கு சொல்.”

என்னை பார் என்ற போது எல்லாம் நேர்க் கொண்டு பார்க்காதவள்…இப்போது…

“ உங்களுக்கு தான் என்ன பிடிச்சி இருக்கான்னு தெரியல…. அக்காவுக்காக…தான்.”

“ உங்க அக்கா எனக்கு தோழி தான். அதற்க்காக எல்லாம்,  என் வாழ்க்கையின் முக்கிய முடிவை எடுக்க மாட்டேன். எனக்கு பிடிக்காததை  யார் சொன்னாலும் செய்ய மாட்டேன்.”

“ இப்போ சொல்லு உனக்கு என்னை  பிடிச்சி இருக்கா …இல்லையா….?”

“ம்….” திரும்பவும் காத்து தான் வருது என்பது போல் தான் அபிராமியின் பேச்சு இருந்தது.

“ ரொம்ப கஷ்டம்….”

“ என்ன….?என்ன….?” இதற்க்கு மட்டும்  தொடர்மொழியில் பேச…

“அத விடு. உனக்கு என்னை பிடிச்சி இருக்கா…..”

அதற்க்கு எந்த எதிர் வினையும் அவளிடம் இல்லாது போக…  “உனக்கு பிடிக்காது நடக்காது அபி. நானே உன்னை பிடிக்கலேன்னு அகல்யாவிடம் சொல்லிடறேன்.”

“அய்யோ….” எப்போதும் சொல்லும் அந்த அய்யோவோடு அவன் கை பிடிக்க….

அவன் தொடும் போதே அவன் மனதில் பூ பூத்தது என்றால்…அவள் தொடுகையில்….நான் சொல்லவும் வேண்டுமோ…..

மூன்று வருடம் சென்று…

“ஈபில் டவர் பார்க்கனும்.” இப்போது சர்வேஷ்வர் அதிகம் பேசுவது இல்லை. அபிராமி தான்.

“ இன்னும் ட்ராவல் ஜெர்க்கே போகல. இன்னும் இரண்டு நாள் கழிச்சி….கூட்டிட்டு போறேன்டி….”

“ ம் எனக்கு இப்போவே போகனும்.” காலை தரையில் உதைத்து  சொல்ல.

“ ஏன்டி ஏன்டி நிறை மாதபுள்ளத்தாச்சி பெண் போலவா  நடந்துக்குற….?” சின்ன மகளை திட்டிய மரகதம்.

“ அவள சொல்லி குத்தம் இல்ல. எல்லாம் நீங்க கொடுக்குற இடம் மாப்பிள்ளை. இப்போ எதுக்கு அவள இங்கு கூட்டிட்டு வந்திங்க. நான் தான் அடுத்த வாரம் இந்தியா வர்றேன்னு சொன்னேனா…?இல்லையா….?” தன் ஒரு விரலை நீட்டி சர்வேஷ்வரிடம் கேட்க…

“யப்பா…..முதல்ல புள்ள பூச்சி மாதிரி வாய் திறக்காம இருக்குறது. அப்புறம் நம்ம வாய திறக்க விடறது இல்ல.”

“ என்ன மாப்பிள்ளை நான் கேட்டதுக்கு ஒன்னும் சொல்லாமே  தெம்மான்ட மாதிரி இருக்கிங்க…..”

“அபி நான் ஸ்டார். உங்க அம்மா கிட்ட சொல்லு.”

“ ஊருக்கே ராஜான்னாலும் தாய்க்கு  பிள்ளைன்னு தான் சொல்லு அபி.” மரகதம் சர்வேஷ்வரை மாப்பிள்ளையாய்  பார்க்காது மகனாய் தான் பார்த்தார்.

அதனால் தான் அந்த உரிமை பேச்சு. மகனாய் உணர வைத்த பெருமை நம் சர்வேஷ்வருக்கே சேரும்.

திருமணம் முடிந்த  இரண்டாம் நாளே அகல்யா அமெரிக்கா  செல்ல முடிவில் இருந்தாள்.

அதற்க்கு ஏற்றார் போல் அனைத்தும் சர்வேஷ்வர் உதவியுடன் தான் செய்து முடித்தாள். அவள் எதிர் பார்க்காதது சர்வேஷ்வரும் தன்னோடு வருவான் என்பதே…

“ சர்வேஷ் கல்யாணம் முடிஞ்சி இரண்டு நாள் தான் ஆகி இருக்கு. நான் பார்த்துக்குறேன்.”

“ நான் என்ன உனக்கு வர்றேன்னு நினச்சியா….? என் மாமா, மாமிக்காக வர்றேன். ரொம்ப பண்ணாத….” இந்த   திருமணம் அவர்களிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

சொன்னது போல் கூடவே வந்து, அவர்கள் அங்கு செட்டில் செய்து முடித்து இரண்டு வாரம் கழித்தே தன் புதுமனைவியிடம் வந்தான்.

அபிராமியோடு சர்வேஷ் தான் அதிகம் அவர்களிடம் பேசுவது. சர்வேஷ் பற்றி பத்திரிகை செய்தி அது எப்போதும் போல் அது பாட்டுக்கு ஓடிக்  கொண்டு தான் இருக்கிறது.

என்ன ஒன்று முதலில் தந்தை காலையில் சுப்ரபாதம் ஆராம்பிப்பார். நீங்க  எல்லாம் ஒரு கணக்கா என்பது போல் அதை தட்டி விட்டு சென்று விடுவான்.

ஆனால் மனைவி பாடும் சுப்ரபாதத்தை அது போல் தட்டி விட்டு செல்ல முடியாது. “ என்ன இது….?” கோவை சரளா வடிவேல் பார்த்து கேட்பது போலவே கேட்டு வைப்பாள்.

“ இது என்ன புதுசாடா….?” தாய் தந்தை இருந்தும் “அபி…..”  அவள் கன்னம் தொட்டு “உனக்கு அவ ஈடா செல்லம்.”

“ எனக்கு ஈடு இல்லேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்…..?” கடவுளே பேசு பேசுன்னு சொன்னதுக்கு எனக்கு இதுவும் வேண்டும் இன்னுமும் வேண்டும்.” அனைத்தும் மனதில் தான்.

“ பார்த்தா தெரியுதே….”

“பார்த்தே கண்டு பிடிச்சிடுவிங்க….? அந்த அளவுக்கு கரை கண்டு இருக்கிங்க….”

“ தோ பாருடா இது அநியாயம். உன் கழுத்துல தாலி கட்டிய பிறகு,  கூட நடிக்கிறது கழுதையா…? குதிரையான்னு….? கூட தெரியாது நடிச்சிட்டு வந்துடுறேன்.”

“மாமா பார்த்திங்கலா…உங்க மகனை. கழுதையா குதிரையான்னு தெரியாம நடிக்கிறப்பவே….அந்த டூயட் சாங்ல அப்படி ஒரு ஈடு பாடு. அப்போ  நம்ம கல்யாணத்துக்கு முன்ன தெரிஞ்சி நடிச்சிங்கலே…அப்போ…..” இது போல் செய்தி வந்தால் முதல் வேலையாக தன் மருமகளிடம் கொடுத்து விடும் நாகேந்திரன்….

“ அது தாம்மா முதல்ல நான் கேட்பேன்…ஆனா….பாரு பாரு இப்போ கூட அவன் முறைக்கிறான்.”

இவர்களின் விளையாட்டு பேச்சை கேட்டுக் கொண்டு இருந்த சர்வேஷ்வரின் அன்னை….. “ அத நீங்க பேசக்கூடாது. உங்க  மகனாவது கல்யாணம் ஆனவுடனே பொட்டி பாம்பா அடங்கிட்டான். ஆனா நீங்க ஆடுன ஆட்டம் இருக்கே…..”

“சரிடா விடு. அது தான் அதுக்கும் சேர்த்து வெச்சா போல உன் முந்திய பிடிச்சிட்டு சுத்திட்டு இருக்கேனே…..”

“சர்வேஷ் உங்க அப்பா மார்க்கெட் போனத என்ன நாசுக்கா சொல்றாரு பார்த்தியா…..?” ஒவ்வொரு விடியலும் புதுமையை காண்பித்தாள் அபிராமி.

அந்த பேச்சு கூட அவனை வெறுப்பு ஏத்த தானே தவிர…அதில் கடுகளவும் சந்தேகம் இருக்காது.

சர்வேஷ் வீட்டில் முதலில் நல்ல பெண் என்ற பட்சத்தில் தான், அபிராமியை சர்வேஷ்வருக்கு மணம் முடித்து வைத்தது.

அபிராமியின் குணம் வீட்டில் ஒட்டிய பாங்கு, சர்வேஷ்வரின் தந்தை தாயைய் பார்த்துக் கொள்ளும் விதம்….

பெரிய இடத்து பெண் வந்து இருந்தால்…..அதற்க்கு என்று  அகல்யா அபிராமியை அப்படியே அனுப்பி வைக்க வில்லை.

என்ன செய்ய வேண்டுமோ அதை முறையோடு செய்தாள்.  மொத்தத்தில் சர்வேஷ் குடும்பம் அபிராமியால் மகிழ்ந்தது என்றால்…

அகல்யா குடும்பம் சர்வேஷ் நடந்துக் கொண்ட முறையில் அக்குடும்பம் நிறைந்து விட்டது.

இன்னும் சிறிது நாளில் அவர்களின் மகிழ்ச்சியை கூட்ட  வர புது வரவுக்காக அவர்கள் ஆவளோடு காத்திருக்க…..நாம் அதை பார்த்த மகிழ்வோடு விடைபெறுவோம்.

         நிறைவு

             

   

 

Advertisement