Advertisement

அத்தியாயம்….18
குழந்தை மருத்துவமனையில் இருந்து வீடு வருவதற்க்கே ,அதிக நாட்கள் பிடித்து விட்டதால், குழந்தை வீடு வந்த இரண்டாம் நாளே புன்னியாதானத்தை  வைத்து விட்டார்கள்.
அந்த இரண்டு நாட்களுமே பால் கொடுக்கும் நேரத்தை தவிர்த்து  குழந்தை ஷெண்பாவிடமே இருந்தான். ஷெண்பாவின் கையில் குழந்தை இருப்பதை பார்த்து புஷ்பவதிக்கு அவ்வளவு மகிழ்ச்சி….
மதி இந்த வீட்டுக்கு மருமகளாய் வந்தது புஷ்பவதிக்கு அவ்வளவு பிடித்தம் எல்லாம் இல்லை. இன்னும் சொல்ல போனால் வெறுப்பு தான். என் மகளின் வாழ்வை பாழாக்கிய வீட்டில் இருந்தா எனக்கு மருமகள் வர வேண்டும்…..?
அந்த  எரிச்சலில்   தன் கோபத்தை மதியிடம்  அவ்வப் போது காண்பித்தும் இருக்கிறார். மதி குழந்தை உண்டான போது தன் வீட்டு வாரிசை சுமக்கிறாள் என்றதால்  அவளுக்கு பார்த்து பார்த்து செய்தார்.
ஆனால் இப்போது மதியின் இந்த செய்கையால் தன் மருமகளுக்காகவே,  பச்சை உடம்பு காரி என்று அவளுக்கு உண்டான பத்திய சாப்பாட்டை தானே சமைத்து மருமகளை நன்கு பார்த்துக் கொண்டார்.
புன்னியாதானம் அன்று மதிக்கு தலையில் எண்னை வைத்து தானே அவளுக்கு தலைக்கு ஊற்றி….சாம்பிராணி புகை காட்டி  தலை சீவி அழகு படுத்தியவர்…
அவள் முகத்தை சுற்றி நெட்டி முறித்து…. “ என்ன திருஷ்ட்டி…..என்ன திருஷ்ட்டி…..” என்று தன் மருமகளின் அழகை  பார்த்து பூரித்தவர்.
கோசலையிடம்….. “பொழுது சாய்ந்ததும் குழந்தையோடு நம்ம மதியையும்  சுத்தி போடனும். நம்ம உறவு முறையில யாரு இவ்வளவு அழகா இருக்காங்க…..? எல்லா கண்ணும் என்ர மருமக மேல தான் இருக்கும்.” என்று ஸ்பீக்கரே இல்லாமல் அந்த தெரு முழுவதும் கேட்கும் அளவுக்கு மதியின்  காதை பஞ்சர் செய்து விட்டு அடுத்த வேலை பார்க்க சென்று விட்டார்.
அந்த வீட்டு  சத்தம், இப்போது மதிக்கு அநாகரிகமாக தெரியவில்லை. கள்ளம்  கபடம் இல்லாது, நான் என்ன தப்பாவா பேசுறேன்…..? யார் கேட்டா என்ன என்ற ரீதியில் பேசுவது போல் உணர்ந்தாள்.
தன் வீட்டில் தனக்கு  தெரியாது குசு குசு என்று பேசி செய்த செயல் தான் அவளுக்கு தெரியுமே……?
தன் சொல்லுக்கு ஏற்ப,  தன் கண் எதிரில் அவர்கள் இருவரையும் ரத்தம் வழியும் அளவுக்கு அடித்து போட்டு  தான் தன் கணவன் தன்னை மருத்துவமனையில் சேர்த்தது.
அது வரை தான் அவளுக்கு தெரியும். பின் அவர்கள் என்ன ஆனார்கள்….? இருக்கிறார்களா…..? ஒரே அடியா போயிட்டாங்கலா…..? அதை பற்றி விசாரிக்கவில்லை.
தாய் நினைவுக்கு வந்தார்….கூடவே அண்ணன் இறந்த கொஞ்ச நாளில் ….. “ நீயாவது எங்க சொல் பேச்சு கேட்டு…..இருக்கும் வழிய பாரு…..”  அடுத்து அவர் என்ன பேசி இருப்பாரோ…..
தந்தை  வந்து….. “ போய் மத்த வேலைய பாரு…..” என்று  மனைவியை அனுப்பி விட்டு….
தன்னிடம்….. “ நாளையில் இருந்து காலேஜூக்கு போகாதே…..பரிட்சைய நேரா எழுதிடு…..” என்று சொல்லி விட்டு போனவர்…
திரும்பவும் வந்து….. “ சங்கரோடு போயிட்டு வா……” மதிக்கு படிப்பில் அவ்வளவு நாட்டம் இல்லை. அதற்க்கு என்று  அவள் மக்கு எல்லாம் இல்லை. கொஞ்சம் சோம்பேறி….
நினைத்த நேரத்துக்கு எழ வேண்டும்…பிடித்த கதை புக்கை படிக்க வேண்டும்…பிடித்த படம் பார்க்க வேண்டும். பிடித்த உணவை உண்ண வேண்டும்.
அவளுக்கு வாழ்க்கையில் லட்சியம்,  கதையில் வருவது போல் ஒரு நாயகன் வருவான். அவனோடு காதல்  வாழ்க்கை வாழ வேண்டும் அவ்வளவே…
அதனால் தன் தந்தையின் இந்த பேச்சு அவளுக்கு  வருத்ததை தரவில்லை. அண்ணன் இறந்ததால் தனக்கும் எதாவது ஆகி விடுமோ என்று பயப்படுகிறார். அண்ணன் இறப்பு அவளுக்கு வேதனை அளித்தாலும், அண்ணன் கடமையையும் சேர்த்து  நாம் தான் செய்ய வேண்டும்.
நாம் அழுதால் அவர்கள் தாங்க மாட்டார்கள் என்று…அண்ணன் இறந்த துக்கத்தை கூட காட்டாது பெற்றோருக்கு ஆறுதலாய் வேள வேளைக்கு உணவு கொடுத்து அவர்களை கவனித்துக் கொண்டதை, இப்போது நினைத்தால் கூட, அவளுக்கு உடல் முழுவதும் செந்தணலை கொட்டியது போல் எரிந்தது.
அதுவும் அண்ணன் இறப்பு எப்படி என்று அம்மாவுக்கு தெரிந்து இருக்கிறது….அதை நினைத்தால் ஒரு பெற்ற தாயால் எப்படி அதை ஏற்றுக் கொள்ள முடிந்தது.
இப்போது தன்னை கொல்ல பார்த்ததும் அம்மாவுக்கு தெரிந்து இருக்குமா…..? என்று யோசித்தவள்…. பின் யார் எப்படி  போனால் எனக்கு என்ன…..?
என் கணவர் என் குழந்தை என் குடும்பம்… இது போதும்…..அந்த குடும்பத்தோடு ஒன்றி போனவளுக்கு குறுக்கிடாய்….. ஒரு எண்ணம்.
தன் குடும்பத்தை பழி தீர்க்க தானே தன் கணவன் தன்னை மணந்தான். அதுவும் தம்பிக்கு கட்ட நினைத்து…பின் தானே….
யசோதா மீது விருப்பம் இருந்து இருக்குமோ…..? இது வரை தோனாத சந்தேகம் மனதில் வந்து போனது.
அவள்  காது பட கேட்ட வார்த்தை தான். வீரா…யாசோதா திருமணம் சிறுவயதில் இருந்தே பேசியது என்று…
அப்போது எல்லாம் மதி அதை பெரிதாய் எடுத்துக் கொண்டது இல்லை. இன்னும் சொல்ல போனால் அவனுக்கு அவள் தான் பொருத்தமாய்  இருப்பாள் என்று ஏளனமாக கூட எண்ணியும் இருக்கிறாள்.
ஆனால் இன்று….வீரா யசோதாவை விரும்பி இருப்பானோ…..? அந்த சந்தேக விதை மனதில் ஆல மரம் போல் பரவ தொடங்க….
இப்போது பிஷ்பவதி  சொன்ன….அழகு….என்ற வார்த்தையில்…முதலில் விரும்பி இருந்தாலும்…இப்போது என்னை பிடித்து இருக்குமா…..?
கணவன்  தன் மனைவி  தன் மீது காட்டும் காதல் தான் முதல் காதலாய் இருக்க வேண்டும் என்பதும்…. மனைவி கணவன் தன்னிடம்  காட்டும் காதலே கடைசியாக இருக்க வேண்டும் என்று நினைப்பது போல் நம் மதியும் நினைத்தாள்.
கூடத்தில்  மதியை அமர வைத்ததும்…. ஷெண்பாவிடம் இருந்து குழந்தையை  வாங்கி மதியின் மடி மீது அமர வைத்து…ஐய்யரை வைத்து ஏதோ சாங்கியம் செய்துக் கொண்டு இருக்கும் போது…
மதியின் பார்வை  கூடத்தை சுற்றியே வலம் வந்தது.ஆனால் அவள் எதிர் பார்த்தவன் தான்  அவள் கண்ணுக்கு அகப்படவில்லை.
எப்படி அகப்படுவான்……? சரவணா திருமண விருந்து தான் முழுமை படாது பாதியில் நின்று விட்டது.
இன்று தன் குழந்தைக்கு தொட்டில் இட்டு பெயர் சூடும் நாள.  காலையில் ஐய்யரை வைத்து புன்னியாதானம் செய்து குழந்தைக்கு பெயர் இட்டவுடன்…..மதியம் ஆடு அடித்து விருந்து வைப்பது தான் அவன் குடும்ப வழக்கம்…
ஆடு தொட்டி வைத்திருப்பவனின் குடும்பத்தில் ஆட்டு கறிக்கு பஞ்சமாய் ஆகி விடுமா…..? வீரா  ஊரையே விருந்துக்கு அழைத்து பின் கட்டில் அதற்க்கு உண்டான ஏற்பாட்டில் இருந்தான்.
அப்போது சரவணனின் கூட்டாளி வந்து…. தலை சொறிந்த வாறே…. “ அண்ணே…..” என்று இழுத்ததிலேயே எதுக்கு இப்படி வந்து நிற்கிறான் என்று அறிந்த வீரா…
பணத்தை கொடுத்து…. “ இங்க வச்சிக்காதிங்க…. எல்லாம் நம்ம  ஆட்டு தொட்டியில வெச்சிக்குங்க…..” என்று சொன்னவன்…
கூடவே…. “ சரவணனுக்கு ஊத்தி கொடுத்துடாதிங்கடா…”
“ எனக்கும் தெரியாத இன்னிக்கு அவனுக்கு முத ராத்திரின்னு…” அவனுக்கு நடப்பது போல் வளைந்து நெளிந்து சொன்னவனின்  தலையில் கொட்டுயவன்…
“ உன் ஆத்தா கிட்ட சொல்லி,  உனக்கும் கூடிய சீக்கிரம் பொண்ணு பாக்க சொல்றேன்டா….”
இப்போதே பார்த்து கட்டி வைத்தது போல்….. ““போங்கண்ணே….” என்று சொல்லி விட்டு வெக்கபட்டு ஓடி விட்டான்.
“ என்னடா என் வாய பார்த்திட்டு இருக்க….? பிரியாணிய அடி பிடிக்காம கிண்டுல” என்று சொல்லி விட்டு திரும்பியன்  கண்ணில், கறி குழம்புக்கு மிளகாய் தூள் தூவ அது காற்றில் பறந்து பட்டு விட்டது.
அதன் எரிச்சலில் கண் திறக்க முடியாது நீர் வழிய…. “ ஏலே தண்ணி கொண்டாங்கடா…..” கண் எரிச்சலில் எரிந்து விழுந்தான்.
பின் தன் கண் மீது கை படவும் எரிச்சல் எல்லாம் மாயமாக…..அமைதியாக நின்றவனின் கண்ணை  இரு கை அவனின் இமையை திறந்ததும் வென்மையான காற்று அவன் கண்ணில் பட்டு கண்ணீர் வழிய….
அந்த கண்ணீர் வழியவதையும் மீறி,  அவன் கண் முன் கண்டது சாயம் பூசாத  உதடு….. எங்கு அதை பார்த்தால் அனைவரும் முன் ஏதாவது செய்து விடுவோமோ என்று பயந்து… திரும்பவும் கண்ணை மூடிக் கொள்ள…
“ திறந்தா தானே சரியாகும். கண்ணை  திறங்க…” திருமணம் முடிந்து ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில்,  இது போல் உரிமையான பேச்சு அவர்களுக்குள் இருந்தது இல்லை.
வீராவுக்கு பேச ஆசை. ஆனால் வீம்பு….மதிக்கோ வீரா மீது கழுத்தளவு  பகை…. வீரா இத்திருமணத்தை பற்றியோ…தன் காதலை பற்றியோ அவளிடம் சொல்லாது… தன்னுடைய உடல் சார்ந்த தேவைகளை மட்டுமே அவளிடம் தீர்த்துக் கொண்டான்.
மதியும்,  எப்படியும் தன்னை ஆண்டு விடுவான். ஏன் எதிர்த்து உடம்பை புண்ணாக்கி கொள்ள வேண்டும்  என்ற போர்வையில் அவனிடம் விருப்பம் உடனே உடன் பட்டாள்.
பேச்சு … தேவையற்ற  பேச்சு சில சமயங்களில் பிரச்சனையை உண்டாக்கும்  என்றால்…. தேவை இருக்கும் போது பேசாத பேச்சும் பல சமயங்களில் பிரச்சனையை உண்டாக்கும்.
அது போல் தான் மதியிடம் தன்னை விளக்காது இருந்ததால் , மனைவியையும் குழந்தையையும்  இழந்து இருப்பான். மதியும் வீரா குழந்தை குழந்தை என்று பேசும் போது தன் மனதில் இருப்பதை கேட்டு இருந்தால்….. இப்படி உயிருக்கு  போராடி மீண்டு வந்து இருக்கும் சூழ்நிலை வந்து இருக்காது.
இப்படி ஒருவருக்கு ஒருவர் மனம் திறந்து பேசாது….இப்போது வெட்டவெளியில் மனைவி காட்டும் இந்த நெருக்கத்தை அனுபவிக்கவும் முடியாது….அவளை தள்ளி நிறுத்தவும் முடியாது  அவதியுற்றான்.
அதுவும் இன்று அவன் அன்னை  மனைவியின் தலையில் எண்ணை தேய்த்து குளிக்க வைத்ததோடு, சாம்பிராணி புகைகாட்டிய வாசனையோடு மல்லிகை பூ சூடியதால் ….அந்த மலருக்கே உண்டான வாசனை…
இந்த  மூன்று  மணமும் கலந்த வாசனையே,  அவனை போதை ஏற்ற போதுமானதாக இருந்தது. அதோடு அவன் கண்ணுக்கு முன் மதியை மறக்க செய்யும் மதியின் உதட்டையும் மீறி…
முதன் முதலில் அவளை  உற்று பார்க்க தூண்டிய அவளின் மூக்கு….மேலும் அவன் மனதில் என்ன என்ன நினைவுகள் அலை மோதி இருக்குமோ…
அதை அணைப்போடும் வகையாக அந்த இடத்துக்கு வந்த சரவணன்… “ மதனி நீங்க தள்ளுங்க…இப்படி ஊதுனா எல்லாம் சரியாகது.”
தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்ற பழமொழிக்கு ஏற்ப…. கையோடு  கொண்டு வந்த சொம்பு தண்ணிய எடுத்து “ அண்ணே கண்ண திறங்க….”
கஷ்டப்பட்டு கண்னை திறந்து சரவணனை பார்க்க….. “ அண்ணே என்ன அண்ணே கண்ணு இப்படி செவந்து இருக்கு…..?” என்று  சொல்லிக் கொண்டே…
சொம்பில் இருந்த நீரை தன் உள்ளங்கையில் அடக்கி, அதை அவன் விழி திரையில் அடித்து அடித்து… “ இப்போ சரியாயிடுச்சா அண்ணே…இப்போ….” ஒவ்வொரு நீர் அடிக்கும், வீராவை   கேட்டு கேட்டு அடித்து விட்டான்.
வீரா…. “ இப்போ பரவாயில்லை.” என்று சொன்ன பிறகு தான் விட்டான்.
அப்போது கூட…. “ இப்போ கூட கண்ணு செவப்பா தாண்ணே இருக்கு…..” அவன் கண் சிவந்ததுக்கு  உண்டான காரணம் அவனுக்கு தானே தெரியும்.
சரவணன்  மதியை ஒதுக்கி தான் செய்யும் போது கூட, மதி அங்கு இருந்து செல்லாது அவர்கள் இருவரையும் அமைதியாக பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.
முன் எல்லாம் இது போல் அனைவர் முன்னும் நிற்க மாட்டாள். அதுவும் பின் பக்கம்…..அவன் வளர்க்கும் ராஜ பாளைய நாய் சில சமயம் ஆட்டு தொட்டியில் இருக்கும். பல சமயம் வீட்டில் கட்டுவான்.
அவன் கணக்கு என்ன என்று  அவனுக்கு தான் தெரியும். அந்த நாய பார்த்தாலே….அது கத்துவதற்க்கு முன் இவள் சத்தம் போடுவாள்.
வீரா…. “  தேவையில்லாது இனி அங்க அங்க நிக்காதே….” சொல்லி விட…
நம்ம வீம்பு வீராவின் மனைவிக்கு சொல்லவும் வேண்டுமோ…..விஷயம் இல்லாது நிற்பது இல்லை. இன்று கறி வாசனைக்கு அந்த ராஜபாளையமும் அங்கேயே தான் சுத்திக் கொண்டு இருந்தது.
நாயின் பயத்தையும் மீறி அவள் அங்கு நின்றுக் கொண்டு இருப்பதை பார்த்த வீரா…. “ வெக்கையில ஏன் நிக்கிற…..உள்ளர போ…..”
மதியின் உடல் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறது. அந்த கரிசனையில் அதட்டல் போல் சொல்ல நினைத்தாலும், அவனையும் மீறி குரல் மென்மையாகவே ஒலித்தது.
அதற்க்கு மதி என்ன சொல்லி இருப்பாளோ…..  ஷெண்பா கையில் குழந்தையோடு வந்தவள்…. “ குட்டிக்கு பசிக்குது போல மதனி. பால் கொடுத்துட்டு கொடுங்க…….”
இது வரை பார்வையால் மட்டுமே மதியை பின் தொடர்ந்த ஷெண்பாவின் பார்வை…இப்போது எல்லாம்  “மதனி” என்று உரிமையான பேச்சாக மாற ஆராம்பித்தது.

Advertisement