Advertisement

அத்தியாயம்….16

மாதந்திர பரிசோதனை செய்த மருத்துவமனையிலேயே தான் மதியை அழைத்து வந்திருந்தான் வீரப்பாண்டியன். உடல் முழுவதும் முள் தைத்ததில் அங்கு அங்கு லேசாக ரத்தக்கசிவில் பாதி மயக்கத்தில் இருந்த மதியை கையில் தூக்கிக் கொண்டு, இதோ சேர்த்து மூன்று மணி நேரம் கடந்து விட்டது.

மகிழ்ச்சியாக வீட்டில் விருந்து உபசரிப்பில் இருக்கும் குடும்ப உறுப்பினர் அனைவரும்,  மருத்துவமனையில் கவலை தோய்ந்த முகத்தில் ஆளுக்கு ஒரு பக்கத்தில் அமர்ந்து இருந்தனர்.

“யாருக்கு யாரிடம் ஆறுதல் சொல்வது…..? ஆறுதல் தேடுவது…..? ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.

புஷ்பவதிக்கு என் வீட்டுக்கு கல்யாணத்துல சந்தோஷமா இருக்க ராசியே இல்லையே…வீரப்பாண்டியன் கல்யாணத்துலேயும்…சரவணனை மருத்துவமனையில் சேக்குறப்பல ஆயிடுச்சி…

இப்போ இதோ அவன் கல்யாணத்துலேயே அவன் வந்து இங்க படுத்துட்டான்.  ஒரு பக்கம் மகனை நினைத்து கவலைப்பட்டவர்…

மறுபக்கம் மருமகளை நினைத்தும் கவலையாக இருந்தது.குழந்தை பிறப்பதற்க்கு இன்னும் ஒரு மாதம் இருக்கு…. கூட்டிட்டு போய் இவ்வளவு நேரம் ஆகியும்  இன்னும் யாரும் வந்து ஒரு தகவலும் சொல்லலையே….

வீரா அவன் வாழ்க்கையில், இது போல் ஒரு நாள் வரும் என்று அவன் கனவிலும் நினைத்ததும் இல்லை. தன்னை மறந்த நிலையில் கையில் தலை வைத்து அமர்ந்து இருந்தவன் அருகில் சென்ற யசோதா…

“ பெரிய மச்சான்  கவலை படாதிங்க….?குழந்தைக்கு ஒன்னும் ஆகாது.” அந்த வார்த்தையில் யசோதாவின் முகத்தை  வேதனையுடன் பார்த்தவன்…பின் ஒன்றும் சொல்லாது மறுபடியும் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.

அப்போது சரவணனை பார்த்த மருத்துவர் வருவதை பார்த்து யசோதா அவர் அருகில் ஓடவும் தான்…வீராவுக்கு தம்பியின் நினைப்பு வந்தது..

“அய்யோ அவன் எப்படி இருக்கான்…..? இவ்வளவு சுயநலக்காரனா நான் எப்போ மாறினேன்.” தன்னை கடிந்துக்  கொண்டே அவனும் யசோதாவின் பின் சென்றான்.

இவர்கள் கேட்பதற்க்கு முன்னவே….. “ தையல் போட்டு இருக்கோம். கொஞ்சம் காயம் ஆழமா தான் இருக்கு.” என்று அந்த மருத்துவர் சொன்னதும்… பதட்டத்துடன் மருத்துவரை பார்க்கவும்….

“ பயப்பட வேண்டாம்  கைய காப்பத்திட்டோம். ஆனா இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சி வந்து இருந்தா நிலமை கொஞ்சம் மோசமா  தான் ஆகியிருக்கும்.” என்று தன் கடமை முடிந்தது என்று அவர் சென்று விட்டார்.

வீராவுக்கு  மருத்துவர் சொன்ன…. “ கொஞ்சம் நேரம் சென்று வந்து இருந்தாலும்…” அந்த   வார்த்தையில் அவன் மனம் வந்து நின்றதும்….

“ மன்னிச்சிக்க யசோ…..” யசோதா புரியாது அவனை பார்த்தவள்…

“ எதுக்கு பெரிய மச்சான்…..?”

“இல்ல என் மனைவிய காப்பத்த போய்  தானே அவனுக்கு இந்த நிலை. அதுவும் இல்லாம கல்யாண அன்னிக்கே….இப்படி…..” திரும்பவும் யசோதாவிடம் மன்னிப்பை வேண்டியவனிடம்….

“ உங்க பொஞ்சாதி அவருக்கு யாரு மச்சான்….?” வீரா பதில் சொல்ல வேண்டும் எல்லாம்  யசோதா அவனிடம் கேள்வி கேட்கவில்லை.

தொடர்ந்தார் போல் அவளே…. “ உங்க பொஞ்சாதி அவருக்கு மதனி. மதனின்னா இன்னொரு அம்மா போல…இத நான் சொல்லலே….உங்க தம்பியாரே  அவரு மதனி கிட்ட சொன்னது. ஆ பொறவு குழந்தை அது நம்ம வூட்டு குழந்தை மச்சான்.

அந்த குழந்தைய நம்ம வூடு எவ்வளவு ஆர்வமா எதிர் பாக்குது.  அதுவும் நம்ம ஷெண்பா….மதி வயித்தையே எவ்வளவு ஆர்வமா பாக்குறா….தெரியும்லே….”

ஆம் ஷெண்பா மதியின் வயிற்றை ஆர்வமும் …ஏக்கமுமாய் பார்ப்பதை,  மதி மட்டும் அல்லாது குடும்ப உறுப்பினர் அனைவருமே பார்த்திருந்தனர். அக்குழந்தை அந்த வீட்டுக்கு எவ்வளவு முக்கியம் என்று சொன்ன யசோதா…..

“ இனி ஒரு தடவை மன்னிப்பு எல்லாம் சொல்லக்கூடாது. அது நம்ம வீட்டு குழந்தை….அதுவும் இல்லாம சின்ன மச்சானுக்கு ஒன்னும் ஆகாது.” முதலில் அவ்வளவு ஆவேசமாக பேசிய யசோதா சரவணனை பற்றி பேசும் போது குரல் உடைந்து கண்ணில் கண்ணீர்  வழிய…

“ எனக்கு அவங்கல  இவ்வளவு பிடிக்குமுன்னு, எனக்கே இப்போ தான் தெரியுது….” கண்ணீரை துடித்துக் கொண்டே   பேசியவளின் தோளை ஆறுதலாக பற்றியவனின் தோள் சாய்ந்தாள்.

கோசலையும், புஷ்பவதியும் இவர்களை பார்த்தார்களே  ஒழிய அருகில் வந்து என்ன என்று கேட்கவில்லை. முதலில் அவர்கள்  முகத்தில் தெரிந்த பதட்டமும், பின் தெளிந்த அவர்கள் முகமும், ஏதோ ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாய் இருக்கிறார்களே என்ற நிம்மதி  போதும் என்று இருந்து விட்டனர்.

இருவரும் ஒன்றும் பேசாது ஒருவரின் அருகில் மற்றொருவர் ஆறுதல் தேடினாலும்,  மூன்று மணி நேரத்துக்கு முன் நடந்த சம்பவம் இருவருக்கும் கண் முன் படம் போல் ஓடியது.

யசோதா சொன்ன மதி ஓடினாள் என்பதிலேயே நெஞ்சம் பதற ஒரு நிமிடம் யசோதாவை பார்த்தவன், அவனும் யசோதா காட்டிய பாதையில் விரைய…யசோதாவும் அவனை   பின் தொடர்ந்தாள்.

சிறிது தூரம் கூட சென்று இருக்க மாட்டார்கள். அங்கு சரவணனையும், இவர்களின் ஆட்களையும் அந்த வடநாட்டவர்கள் காயம் செய்து  கொண்டு இருந்தார்கள்.

சரவணனுடம் சென்றவர்கள், அந்த ஆட்களின் கொல்லும்  முயற்ச்சியில் தங்களை காத்துக் கொண்டு மட்டுமே இருக்கும் சூழ்நிலையில் இருந்தனர்.

வீராவின் ஆட்கள் வீரமானவர்கள் தான். பிரச்சனை என்று  வந்தால், கை தான் முதலில் பேசும். ஆனால் கொலை செய்ய அவர்கள் கூலிப்படை இல்லையே….அவர்களுக்கு  குடும்பம் ஒன்று இருக்கிறதே… கொலை கேசு என்று அலைந்தால் மனைவி குழந்தைகளின் நிலை…

இதை நினைத்து அவர்களின் தாக்குதலை சமாளிப்பது மட்டுமே செய்துக் கொண்டு இருந்தனர். ஆனால் அவர்களின் குறிக்கோள், அவர்களின் கழுத்தை பதம் பார்ப்பதிலேயே இருந்தது.

இந்த சூழ்நிலையை பார்த்த வீரா சரவணனை தாக்கிக் கொண்டு இருந்தவனின் கழுத்தில் , அங்கு விழுந்து கிடந்த அறுவாளை  கொண்டு இறக்கியவன் அதை எடுக்காது….

“இன்னோ   கொஞ்ச நான் அழுத்தத்தை கூட்டினா….அவ்வளவு தான்.  இப்போ உன் பேச்சு மட்டும் தான் போய் இருக்கு…..” அடுத்து பேசாது அவன் பிடித்த அறுவாளின் பிடி அழுத்தும் முன் சரவணனை அடித்துக் கொண்டு இருப்பவன் மட்டும் அல்லாது மற்ற அனைவரும் தாக்குதலை விடுத்து வீரனையே பார்த்திருந்தார்கள்.

தன் ஆட்கள் அனைவரையும் சுட்டி காட்டி…. “ இவனுங்க வீரம் இல்லாம உங்க கிட்ட அடிவாங்கல….வீரத்தோடு குடும்பமும் இருக்கிறதால தான். தோ இப்படி ரத்தம் வழிய நின்னுட்டு இருக்காங்க…. ஆனா நான் அப்படி இல்ல…..தெரியாம போட தெரியும்.”

வீராவின் பேச்சில் அவர்கள் விழிப்பதை பார்த்து….. “ என்ன புரியலையா….” சுற்றி இருக்கும் இடத்தை சுட்டி காட்டி…

“ இது எல்லாம் என் இடம்…அதோ தெரியுதே…அது மயானம் போட்டதோடு கொலுத்திட்டு போயிட்டே இருப்பேன். உங்கல யாரும் தேட  மாட்டாங்க…

ஏன்னா நீங்க  உண்மையான பெயர்… முகவரியில… இங்க வந்து இருக்க மாட்டிங்கன்னு தெரியும்.  உங்கல கூட்டிட்டு வந்தவனும் எதுவும் சொல்ல முடியாது. என்ன ஒழுங்கு மரியாதையா போயிடுறிங்கலா….?இல்ல என் நிலத்துக்கு உரம் ஆகுறிங்கலா….?எப்படி வசதி…..” இவ்வளவு சொன்ன பிறகும்  அங்கு இருக்க அவர்கள் முட்டாள்கள் இல்லையே….அடித்து பிடித்து ஓடி விட்டனர்.

ரத்தம் ஒழுகும் கைய்யோடு…. “ அண்ணே…மதனி….” அவனின் நிலை பார்த்து…

“ நீ….” அடுத்து அவன் பேசி முடிப்பதற்க்குள்….. யசோதா…. “ அவர நான்  பாத்துக்குறேன் மச்சான். நீங்க மதிய பாருங்க….”

பின் சிறிது அடிப்பட்ட ஆட்கள்….பாதை சாலை வரை கைப்பிடித்து அழைத்து இதோ மருத்துவமனையில் சேர்த்து விட்டனர்.

யசோதாவின் நினைவடுக்கு இதோடு நின்று விட்டது. ஆனால் வீராவின் நினைவடுக்கில் அவன் பார்த்த காட்சியில்…

வீரா சரவணனை கொஞ்ச தூரத்திலேயே பார்த்து விட்டான். மதி….கொஞ்சம் என்ன அதிக தொலைவு ஓடியும் மதியை காணவில்லை. அவன்  நினைவில் அய்யோ….

“இந்த நிலையில் இவ்வளவு தூரம் அவளாள் எப்படி ஓடி வந்து இருக்க முடியும்…..” கவலைக் கொண்டவனின் மனது….அடுத்த சிறிது நேரத்துக்கு எல்லாம் அவன் கண்டது….

மதியின் …. “ என் குழந்தைக்கு  மட்டும் ஏதாவது ஆச்சி… என் புருஷன் உங்க இறப்பை  ரொம்ப கொடுரமா ஆக்கிடுவாரு….வேண்டாம்….வேண்டாம்….”

இத்தனை பேச்சிலும்,  மதி தன் தந்தையை அப்பா என்று கூப்பிடவில்லை. ஜாதி வெறியில் தன் அண்ணனை கொன்றான் என்று  எப்போது அவன் வாயில் இருந்து வந்ததோ…

அப்போதே மனதிலும்,  அவன் இவன் என்று தான் அவளுக்கு எண்ண தோன்றியது. முட்கள் பின் பக்கம் முழுவதும்  குத்தினாலும்….அந்த வலியிலும் தன் விரல் நீட்டி….சங்கரன் ..கங்காதரனை பார்த்து மிரட்டினாள்.

அவள் நீட்டிய விரல் பற்றிய சங்கரன்….இழுத்து நிற்க வைக்க…. “சீ என்ன தொடாதே….”

“ தொடக்கூடாதா….? அப்போ சரி…..” திரும்பவும் அந்த முள்பொதர்  மீதே விழ வைத்தவன்…. “ அவனோடு படுத்தல….அதுக்கு இந்த முள் மீது படு அது தான் உனக்கு தண்டனை…..”

அவளை பார்த்து அவன் சிரித்த கோணல் சிரிப்பில் தான்….அவனின் எண்ணம் புரிந்து. எந்த மாதிரி வீட்டில்…எந்த மாதிரி சூழ்நிலையில் நான் இருந்து இருக்கிறேன்.

மதி என்பது என் பெயரில் மட்டும் தானா…..அண்ணன் எப்படி இறந்தான் என்பது தெரியவில்லை. அப்பா ஆணவப்படுகொலை செய்யும் அளவுக்கு கொடுரமானவன்….ஷெண்பா அவள் பார்த்த பார்வை…

அவள் என்னை பார்த்து என்ன நினைத்து இருப்பாள். தன் வாழ்க்கை இழந்ததுக்கு காரணமானவனின் மகள் என்றா…..? இல்லை தன் காதல் கணவனின் தங்கை என்றா……?”

“ என்ன பஞ்சு மெத்தையில படுத்து இருப்பது போல படுதுட்டு இருக்க……?” சங்கரனின் எகாத்தால கேள்வியில் ஷெண்பாவின் நியாபகத்தை அந்த சமயத்தில் கலைத்தெரிந்தவள்.

எப்படியாவது தன் குழந்தை பொருட்டாவது தப்பித்து ஆகவேண்டும் என்று எழ கைய் ஊன்றும் போது முள்  குத்தவும்….

“ நான் உதவி செய்யட்டா…..?” தன்  முன் நீண்டிருந்த கையை அருவெறுத்து பார்த்தவளை…

“ இந்த நிலையிலும் உனக்கு அவ்வளவு கொழுப்பா…..?” என்று சொல்லிக் கொண்டே  சங்கரன் அவள் தலை முடியை கொத்தாக பற்றி எழுப்பினான்.

இவை அனைத்தும் வீரா  மதியை அந்த பகுதியில் கடைசியில் இருக்கும் பகுதியில் பார்த்தான். அவனோ இந்த பகுதி ஆராம்பிக்கும் நிலையில் இருந்தான்.

மதியை சங்கரன் எழுப்பியது. பின் தள்ளியது . திரும்பவும் அவள் முடியை பற்றியது.இவை அனைத்தும்  பார்த்தானே ஒழிய… அவர்களின் பேச்சு அவன் காதில் விழவில்லை. மதியை அடைய என்ன தான் வீரா விரைந்து ஓடினாலும் இச்சம்பவம் நடந்து முடிந்திருந்தது.

சங்கரன் பிடியில் இருந்த அவள் முடியை விடுவிக்க முயன்ற வீராவை பார்த்தே சங்கரன் பிடி தன்னால் நழுவியது.வீராவை பார்த்த கங்காதரனும் தன் ஆட்களை தேடினான். யாரும் இல்லாததை பார்த்து இருவரும் ஓட ஆராம்பித்தனர்.

வீராவோ அவர்களை  பின் தொடராது தன் மனைவி அருகில் சென்று…. “ உனக்கு ஒன்றும் இல்லையே….?” கைய் அவள் மேனியை தழுவியது என்றால்…கண் அவள் மேடிட்ட வயிற்று பகுதியில் நிலை குத்தி நின்றது.

அவள் மேனியில் இருந்த காயத்தில்….. அவளை தூக்க பார்த்தவனுக்கு தோதாக நிற்காது….. “ அவனுங்கல கொன்னுட்டு என்னை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போங்க…..”

“யாரை…..?” என்று வாயில் கேட்கவில்லை. அவன் பார்வை புரிந்து…..

“ கங்காதரனையும்…அந்த சங்கர் நாயையும்…..” அவனுங்கல கொல்லுன்னு மதி சொன்னதும், வீரா  அது சங்கரனோடு வேறு ஒருத்தனோ எறு தான் நினைத்தானே ஒழிய… தன் தந்தையை கொல்ல சொல்வாள் என்று அவன் நினைத்தும் பார்க்கவில்லை.

ஆனால் அதை பற்றி எல்லாம்  ஆராய அவனுக்கு இப்போது நேரம் இல்லை…. “ அவனுங்க எங்க போயிட போறாங்க… முதல்ல இப்போ ஹாஸ்பிட்டலுக்கு போகலாம….வா….” திரும்பவும் தூக்க முயன்றவனிடம்….

“ என் கண் முன்னாடி அவனுங்கல அடிச்சா தான். இது உங்க குழந்தை…..” வீரா அதற்க்கு அடுத்து மதியிடம் பேச்சு வார்த்தையில்  ஈடுபடவில்லை.

அவர்கள் மெதுவாக ஓடினார்களா…இல்லை வீரா அவ்வளவு விரைந்து ஓடினான…..வீரா மதியின் முன்  அவர்களை நிற்க வைத்து விட்டான்.

“ என் கிட்ட பேசுனியே….இப்போ பேசுங்கடா…..” தன் தந்தையையும், சங்கரனையும் பார்த்து  மூச்சு வாங்க பேசியவளின் நிலை பார்த்து… அவளை பேச விடாது அவள் கேட்டதை செய்து முடித்து அவளை பார்க்கும் வேளயில் அவள் அரை மயக்க நிலைக்கு சென்று இருந்தாள்.

“ மூக்கீ…..” ஓடி போய் அவளை  தூக்கும் போது அதை தடுக்கும் நிலையை அவள் கடந்திருந்தாள். தான் நிறுத்தி வைத்த  ஜீப்பில் அவளை படுக்க கைத்து தன் கையை பார்த்தவனுக்கு…

கொழ கொழ என்று இருப்பதை பார்த்து, அது என்ன என்று  தெரியாத அளவுக்கு அவன் சிறு வயது இல்லையே…

மனதை கல்லாகி இதோ மருத்துவமனையில் சேர்த்து விட்டான். வீரா தான் உணர்ந்து புரிந்துக் கொண்டதை, இன்னும் ஒருவருக்கும்  சொல்லவில்லை. குழந்தை பெற இன்னும் ஒரு மாதம் இருக்கும் சூழ்நிலையில் பன்னீர் குடம் உடைந்து விட்டால் அடுத்து மருத்துவர் செய்யும் முயற்ச்சி என்னவாய் இருக்கும்…..?

குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தையில்  ஆரோக்கியம்….. கவலையில் மூழ்கி இருந்தவனை…..மதியியை பரிசோத்தித்த  மருத்துவர் வந்து அவன் நினைத்தது போலவே….

“ தண்ணி எல்லாம் வெளியில் வந்துடுச்சி….குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமமா இருக்கு…எவ்வளவு சீக்கிரம் முடியுமோ குழந்தைய வெளியில எடுத்துடனும்.” அந்த பெண் மருத்துவர் சொல்லி முடித்து ,தன் அருகில் இருக்கும்  செவிலியரை பார்த்தார்.

அவர் வீராவின் முன் அறுவை சிகிச்சைக்கு முன் செயல் படுத்த வேண்டிய விதிமுறை படி படிவ விண்ணப்பத்தை அவனிடம் நீட்டி….

“ இதில் கைய்யெழுத்து போடுங்க……” கை நடுங்க  கைய்யெப்பம் இட்டவனுக்கோ… இன்னும் எவ்வளவு நேரம் எனக்கு இந்த நரக வேதனை….

அவனின் வேதனையை கூட்டும் வகையில் அறுவை சிகிச்சை முடித்த மருத்துவர்….  வீராவின் குடும்பத்தினரிடம்…. “ குழந்தை வெயிட் ரொம்ப குறைவா இருக்கான். “

என்ன குழந்தை என்று  கேட்காமலேயே ஆண் குழந்தை என்று  புரிந்துக் கொண்டவர்கள். புஷ்பவதி….” குழந்தைக்கு வேறு எந்த பிரச்சனையும் இல்லைங்கலே…..” குழந்தையின் ஆரோக்கியம் பற்றிய பயத்தில்  அவர் கேட்டார் என்றால்…

“ அவளுக்கு…..” மருத்துவரின் முகத்தை பார்த்து  பதட்டத்துடன் வீரா கேட்க…

மருத்துவர்….புஷ்பவதிக்கு…. “ குழந்தை மருத்துவரை வர வழச்சி பார்த்துட்டோம் குழந்தைக்கு ஒன்னும் இல்ல….கொஞ்ச நாள் அம்மா வயிற்றில் இருக்கும்  சூழ்நிலை ஏற்படுத்த இங்பெட்டில் வைத்திருப்போம் அவ்வளவு தான்.” என்று சொன்னவர்..

வீராவை பார்த்து….” அவங்களுக்கு ரத்தம் ரொம்ப  லாஸ் ஆயிடுச்சி….ரெண்டு யூனிட் ஏத்துறோம். அது ஒன்னும் பிரச்சனை இல்ல.”

அப்போ எது பிரச்சனை என்பது போல் மருத்துவரை பார்த்தான் வீரப்பாண்டியன். ….. “ பி.பி ரொம்ப லோவா ஆயிடுச்சி….அதுக்கு ட்ரீப்சுல இஞ்சக்க்ஷன் போட்டு ஏத்திட்டு இருக்கோம். பார்க்கலாம்.” வந்த வேலை முடிந்தது என்பது போல் மருத்துவர் சென்று விட்டார்.

Advertisement