Advertisement

அத்தியாயம்….14

யசோதாவின்  அருகில் சென்ற மது  திரும்பவும் சுற்றியும், முற்றியும், பார்த்தாள். இவ  என்ன எப்போ பாரு பார்வைய சுழல விட்டுட்டே இருக்கா….. யோசனையுடம் யசோதா மதுவின் முகத்தை பார்த்தாள்.

மதுவை அக்கா என்று அழைக்க வேண்டும் என்று வீட்டில் சொன்னாலும்,  அது என்னவோ அப்படி கூப்பிட முடியவில்லை. ஒரு சமயம் கூப்பிட்டு இருக்கிறாள் தான். ஆனால் அதை  உள்ளார்ந்து கூப்பிடவில்லை.

வயதில் யசோதாவோடு மதி சிறியவள் என்பதாலா….இல்லை வேறு  காரணமா அது அவளுக்கே தெரியவில்லை. ஆனால் மனதில் அவளை பற்றி நினைப்பது அவள் இவள் என்று தான்.

யசோதா மதியிடம் அதிகம்  பேசியது இல்லை. ஆனால் அவளை பற்றிய எப்போதும் யோசித்துக்  கொண்டே இருப்பாள். அவள் எதிரில் தோன்றாவிட்டாலும், மதியை நினைத்து ஒரு சில முறை பாவம். பெரியவர்கள் செய்த தவறுக்கு இவளை பலியாக்கி விட்டார்களே….

முதலில் அவள் வேலை பழகிய விதத்திலேயே தெரிந்து விட்டது. அவள் பிறந்த வீட்டில் எப்படி  சொகுசாய் வாழ்ந்து இருப்பாள் என்று….

பின் அவளே இந்த வாழ்வு பலியா…. ?என்  பெரிய மச்சானை கட்டிக்க கொடுத்து இல்ல வெச்சி இருக்கனும். அவள் நினைப்பின் முடிவில் ஒரு பெரும் மூச்சும் வரும். இப்படி அவள் கட்டிக்க முடியவில்லையே என்று வீரா, கட்டிக் கொள்ளும் சரவணன், இவர்களை  பற்றி நினைத்ததை விட மதியை பற்றிய ஆராய்ச்சி தான் யசோதாவின் மனதில் அதிகம்.

எப்போதும் ஓடும் யோசனையுடன், மதியையே பார்த்துக் கொண்டு  இருந்த யசோதாவை சரவணன் யோசனையுடன் பார்த்திருந்தான்.

இவ ஏன் மதனிய இப்படி முறச்சி முறச்சி பாக்குறா…..ஆம் சரவணன் மதியை பார்ப்பது அவனுக்கு முறைப்பது போல் தான் இருந்தது.  மனதில் இருந்ததை தன் மனைவியிடம் கேட்டுக் விட்டான்.

“ என்னத்துக்கு மதனிய முறைக்கிற…..?” அவன் சொன்னதை சரியாக கவனிக்காததால்…. அவனை பார்த்து …. “என்ன மச்சான் சொன்னிங்க…..?”

“ என்னத்துக்கு மதனிய முறச்சிட்டு இருக்க…..?” இப்போது அவன் குரலில் கோபம் எட்டி பார்த்தது. நான் என்ன சொல்றேன்னு கூட கவனிக்காத அளவுக்கு மதனிய பத்தி என்ன யோசனை…..? இதுவே அவன் கோபத்துக்கு காரணம்.

யசோதாவுக்கு  வீராவிடம் இருக்கும் பயம் ,மரியாதை ,சரவணனிடம் இல்லை. சிறிய வயதில்   ஷெண்பா இவனோடு எல்லாம் விளையாடி இருக்கிறான். அதனால் அவனோடு சாதரணமாகவே பேசுவாள்.

அந்த பழக்கத்தில் அவனை பார்த்த வாறே…. “  நான் சாதரணமா பார்ப்பது கூட அது முறைக்கிறாப்பல தான் தெரியும்.” அவள் சொல்வது உண்மை தான் போல் இருந்தது இப்போதைய  பார்வை கூட….

ஆமாம் போலவே ஏன் என்று இப்போது சரவணன் அவளை உற்று பார்த்தான்…. அதற்க்கு உண்டான காரணம் தெரிந்து விட்டது.

“ முண்டங்கன்னி….” மனதில் நினைப்பதாக  நினைத்து சத்தமாக சொல்லி விட்டான் போல்…இப்போது யசோதா உண்மையாகவே அவனை முறைத்தாள்.

“ யப்பா…..” நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும் விஜய் போல் சொல்லி பார்வையை அந்த பக்கம் நகர்த்தியவனின் பார்வையில்….பாவம் போல் பார்த்துக் கொண்டு இருந்த  மதி தெரிய….

“சே அவங்கள கூட்டிட்டு வந்துட்டு,  இப்படி நாம பாட்டுக்கு பேசிட்டு இருந்துட்டேமே….” வருந்தியவன்….

“ அண்ணி உட்காரிங்கலா…..?” கேட்டுக் கொண்டே எங்கே  உட்கார ஏதுவாக கல்லு ஏதாவது தென்படுகிறதா….பார்த்தான். அப்படி ஒன்றும் கண்ணுக்கு அகப்படாது போனது.

அது தான் வந்த பெருசு எல்லாம் ஆளுக்கு ஒரு கல்லு மேல உட்கார்ந்து இருக்காங்கலே….அப்புறம் எப்படி அவனுக்கு கிடைக்கும்…..?

“ என்ன அரியணை கிடைக்கலையா மச்சான்…..?” பேச்சில் தெனவெட்டும், பார்வையில் குறும்பும் மின்ன கேட்ட யசோதாவின்  பேச்சிலும், பார்வையிலும், மதனியை மறந்தவனாய் தன் மனைவியின் முகத்தையே பழைய நினைவோடு பார்த்திருந்தான்.

சிறுவயதில் யசோதாவிடம் வம்பு வளர்ப்பது தான் சரவணனின் முழுநேர வேலையே….. யசோதாவும் ஷெண்பாவோடு  சரவணனோடு தான் மல்லுக் கட்டிக் கொண்டு நிற்பாள்.

யசோதா வயதுக்கு வந்த பிறகு நிலமை அப்படியே தலைகீழானது. சரவணன் எப்போதும் போல் விளையாட  “யசோதா….வாடி….” என்று கூப்பிடுகையில்….

பஷ்பவதி…. “ அது என்ன மதனியா வரப் போறவளை  மட்டு மரியாதை இல்லாம கூப்பிடுறது…..” அந்த அதட்டலில் யசோதாவிடம் இருந்து ஒதுங்கி போனான்.

அது போல் தான் யசோதாவும் முன் போல் பேசாது ஒதுக்கம் காண்பிக்க…..” என்ன….? என்றால்….” என்ன…..?” என்ற ரீதியில் இவர்கள் பேச்சு நின்றது.

யசோதாவின் இந்த குறும்பு பேச்சு சரவணனை எங்கேயோ  இழுத்து செல்ல தான் பார்த்தது. ஆனால் அதற்க்குள் வீராவிடம் இருந்து  தொலைபேசி அழைப்பில்….

“ என்ன அண்ணா….ஆ  என் கிட்ட தான் இருக்காங்க….ஆத்தா ஏதோ சடங்குன்னு நிக்க வெச்சி இருக்காங்க…..” வீரா  கேட்டதுக்கு பதில் அளித்தவனின் முகம் மாறுவதை மதி கண்டு கொண்டாளோ…இல்லையோ யசோதா கவனித்து. அவன்  தொலைபேசியை அணைத்ததும்….

“ என்ன மச்சான் ஏதாவது பிரச்சனையா……?” கேட்டவளுக்கு பதில் அளிக்காது…  மதியிடம் எப்போதும் ஒதுங்கி போகும் சரவணன்….

அவள் மேல் உடம் படுவது கூட தெரியாது நெருங்கி நின்றுக் கொண்டவன்….யசோதாவிடம்….” நீ மதனிக்கு அந்த பக்கம்  நில்லு….” என்றதோடு…

அங்கே அங்கே நின்று அரட்டை அடித்துக் கொண்டு இருந்த இளந்தாரிகளை…

“ஏலே….இங்கன வாலே….” அழைத்ததோடு அவர்களின் காதில் ஏதோ  ஒத…. அவர்களின் முகத்திலும் பதட்டம்…

பாவம் நம் மதி தான் என்ன நடக்குது என்று தெரியாது  நாடகம் போல் பார்த்திருந்தாள். ஆனால் யசோதாவுக்கு விளங்கி விட்டது…அந்த வீணா போனவங்க ஏதோ செய்ய போறானுங்க…

“மச்சான் சீக்கிரம் போயிடலாம்…..” மதியை சுற்றி  சரவணன் பின் பக்கம் நிமிண்டிக் கேட்டவளின் கை தொடுகையில் தான் இவங்க என்ன இப்படி அடைக்காக்கும் கோழி போல் ஒரசிக்கிட்டு இருக்காங்க என்று சரவணனை விட்டு கொஞ்சம் தள்ளி போக பார்த்தாள்.

ஆனால் அதற்க்கு யசோதா  விடாது…. “ மச்சின என்பது மவன்   போல தான்.” என்ற சொல்லோடு இன்னும் நெருக்கி விட்டதோடு  திரும்பவும் சரவணனை பார்த்து….

“ போயிடலாமே….”  அது என்னவோ யசோதாவுக்கு சரவணன் மேல் அன்பு, பாசம், இருக்கிறது. இந்த பாதுகாப்பு எது என்றாலும் அவன் பார்த்துக் கொள்வான்  என்ற நம்பிக்கையை சரவணன் யசோதவுக்கு தராது போய் விட்டான்.

அதுவும்  மதியின் திருமணம் அன்று நடந்த  நிகழ்வு. அது சரவணன் முன் தானே நடந்தது. அந்த எடுப்பட்டவனின் கை என் மீது  படவில்லை. ஆனால் அவன் பேசிய பேச்சு….கை பட்டு இருந்தால் கூட கழுவி விட்டு போய் இருப்பாள். ஆனால் அந்த வார்த்தை அதை  இன்று நினைத்தால் கூட அவளுக்கு ஒரு கூடை நெருப்பை தலை மேல் கொட்டியது போல் இருந்தது.

அன்று மட்டும் என் பெரிய மச்சான் இருந்து இருந்தால்….இப்போது கூட அவளின் எண்ணம் இதுவே…. அந்த நினைவில்  இங்கு இருந்து போய் விட வேண்டும் என்று நினைத்து தான் சரவணை அவசரப்படுத்தினாள்.

சரவணன் சொன்ன….. “ அண்ணா இங்கு வரார்.” என்ற சொல்லில் …. “ யப்பா….” என்ற ஆசுவாசமும்….. “ பிரச்சனை பெரியதோ…..” என்று பயமும் ஒருங்கே வந்தது.

பயப்பார்வை பார்த்த மனைவியை  தேற்றும் பொருட்டு….. “ பயப்படாதே…..”  என்று தேற்றியவனிடம்….

“ பெரிய மச்சான் வந்துட்டா…பரவாயில்லையா இருக்கும்….” என்ற  மனைவியின் அந்த ஒத்த வார்த்தையில் அவளை அடிப்பட்ட பார்வை பார்த்தான்.

அவன் மனைவியாலோ…. வீரா  வருவதற்க்குள் அன்று போல் ஏதும்  நடந்து விட கூடாதே என்று அவன் வரும் வழியை பார்த்து நிற்க…

நம் மதியோ….இத்தனை நேரம் இருந்த சோர்வு எல்லாம் பறந்தோட, இவர்களை சுவாரசியத்தோடு வேடிக்கை பார்க்க ஆராம்பித்தவள்.

போக போக அவர்களின் பேச்சில்…. “ இவங்க நம்ம வீட்டு ஆளுங்களுக்கு பயப்படுறாங்கலோ…..?  ஒரு வேள அப்பா இங்க வந்துட்டு இருக்காரோ….? இருக்கும் இருக்கும்.

இவங்க எங்கே என்ன வெளியில் கூட்டிட்டு போனாங்க…. மாத பரிசோதனைக்கு மருத்துவமனை…அதுவும் வீராவோடு…. எப்படி என் வீட்டு ஆளுங்க என்ன கூட்டிட்டு போவாங்க…

இன்னிக்கி நான் இங்க வருவேன்னு தெரிஞ்சி ஏதோ ப்ளான் போட்டுட்டாங்க போல…..மனதில் மகிழ்ச்சி பொங்க….ஒரு பக்கம் இல்லாது அனைத்து பக்கமும்  பார்த்து நின்று இருந்தாள் தன் வீட்டு ஆளுங்க வரவுக்காக….

இங்கு வீராவோ சாலை சரியில்லாத அந்த பகுதியில் கூட அவன் ஜூப்பை விரைந்து ஓட்டினான். அவன் வண்டி பின் தொடர்ந்து நான்கு வண்டிகள்  வந்தது. அதில் பொதி மூட்டை அடைத்து வைப்பது போல் அடைத்துக் கொண்டு ஆட்கள். பின் வந்த வண்டிக்கும் வீரா ஜூப்புக்கும் இடைவெளி இருந்துக் கொண்டே இருந்தது.

பின் வண்டியில்  இருந்தவர்கள் ஓட்டுனரிடம்…” வெரசா  போலே…பாரு அண்னே வண்டி தூரமா போயிடுச்சி…..” அவன் பேச்சுக்கு என்ன வண்டியில் ஆக்சிலேட்டரை எவ்வளவு அழுத்தியும் வீரா வண்டியின் அருகில் செல்ல முடியவில்லை.

வண்டி ஓட்டிக் கொண்டு இருந்த வீராவின் நினைவு முழுவதும் சற்று முன் கங்காதரன் வீட்டில் தாம் அமர்த்தி வைத்தவன்  சொன்ன செய்தியிலேயே நிலைத்து நின்றது.

சமையல்காரன் சமைத்த  வைத்த உணவை ருசி பார்த்துக் கொண்டு  இருந்த வீராவின் அருகில் அவன் ஓடி வரும் போதே…இவன்  மனதில் ஏதோ தவறாய் நடக்க போகிறதோ…இல்லை அதற்க்கு மேல் அதை பற்றி  நினையாவது….

சுத்தி  இருப்பவர்களிடம் இருந்து ஒதுங்கி….. “ என்ன….?”

“ அண்ணே மூணு நாளா அந்த கங்காதரன் வூட்டுல   மேல ரூமு போடுறான்னு தானே சொன்னேன்…”

“ஆமா அதுக்கு என்னடா…..?”

“வந்து இருக்க பசங்க   கொத்துனாரோ மேஸ்த்திரியோ இல்லேண்ணே….அம்புட்டு பேரும் வடநாட்டு காரனுங்க….”

“ கூலி குறைவுன்னு இப்போ அவனுங்கல தானேடா வேலைக்கு வைக்கிறோம்.”

“அய்யோ இது வேற விஷயமுன்ன….கட்டுவேல பாக்குறவங்க கையில மம்மூட்டி, கடப்பார தானே இருக்கும். ஆனா இவனுங்க கையில இந்தே பெரிசு வீச்சி அறுவா வெச்சி இருக்கானுங்க அண்ணே….” இப்படி சொன்னவனின் சட்டையை பிடித்த் வீரா…

“ இத ஏன்டா முன்னவே சொல்லலே….”

“ நானே கொஞ்ச நேரம் முன்ன  தானே பாத்தேன். என்னடா இன்னிக்கு கீழூ இருந்து செங்கல  மேல ஏத்தலையேன்னு டீ கொண்டு போவாப்பல போனா….அங்க கங்காதரன் அந்த சங்கரன்  அவனுங்க இணையா உட்கார்ந்து பேசிட்டு இருக்குறத பார்த்துட்டு, அவனுங்க பேசுறத கேட்குறதுக்கு  நான் அப்படி மறைவா உட்கார்த்துட்டேன்.”

நேராக விஷயத்து வராம என்ன இவன் இப்படி சுத்திவலச்சி பேசுறான் என்ற எரிச்சலில்…. “ என்ன விசயமுன்னு  சட்டு புட்டுன்னு சொல்லுலே ….” வீராவின் அதட்டலில் தான் சொல்ல வேண்டியதை கட கட வென்று ஒப்பு விக்க ஆராம்பித்து விட்டான்.

“வீட்ல விருந்து கவனிக்க முதல்ல  நீங்க வந்துடுவிங்கன்னு கணக்கு போட்டு  கண்ணால நடக்கும் இடத்துல அந்த கங்காதரன்  அவன் ஆட்கள நிக்க வெச்சி இருக்கான் அண்ணா…..” அவன் பேச்சில்…

“ நான்  சுத்தியும் பார்த்துட்டு தானே வந்தேன். அப்படி யாரும் என் கண்ணுக்கு அகப்படலையே…..” சந்தேகத்துடன் தன் முகவாயை தடவிய வாறு வீரப்பாண்டி கேட்டான்.

இருவரின் பெயரை சொல்லி . “ அவனுங்க கங்காதரன் ஆட்கள் அண்ணே…..” அப்படி சொன்னதும்  அடுத்த பேச்சு கேட்காது….

சரவணனை அழைத்து……” மதனிய உன் கூடவே வெச்சிக்கோ…. ஆ நீயே கூட்டிட்டு வா…பார்த்து.”   தன் தம்பியிடம் கட்டளையிட்டு தானும் போக பார்த்தவனை கை பிடித்து தடுத்து…

“ அண்ணே அவனுங்க அங்க  என்ன என்ன நடக்குதுன்னு சொல்வாங்க…அவ்வளவு தான். அவனுங்க கிட்ட ஆயுதம் எதுவும் இல்லண்ணே கவலை படாதிங்க…..” அவன் பேச்சில் கொஞ்சம் ஆசுவாசம் ஆனான்.

ஆனால் ஆந்த ஆசுவாசம் கொஞ்ச நிமிடம் கூட நீடிக்கவில்லை.  “ அவனுங்க எப்போ தோதுன்னு சொன்ன பிறகு தான் இந்த வடநாட்டு பசங்க போவாங்க….ஆனா அவனுங்க கிட்ட பெரிய பெரிய கத்தி வெச்சி இருக்கானுங்க அண்ணே…..” அதை கேட்டதும் ..

“மடையா அப்போ ஏன் இங்க வந்த….போன்லியே சொல்லி இருக்கலாம்ல….”  இப்போ அங்க என்ன நடக்குதோ என்ற பதட்டத்தில் திட்டி விட்டு திரும்பவும் சரவணனை அழைத்து…

“ நீ கிளம்பாதே நான் அங்கு வர்றேன்.” என்று சொன்னதோடு என்ன விவரம் என்று  சுருக்கமாக வீரப்பாண்டி சொன்னதும் தான், மதினியின் அருகில் போய் நின்று யசோதாவையும் பாதுகாப்புக்கு அந்த பக்கம் நிற்க வைத்தது.

நிறைமாத  கர்பிணி அதை நினைக்க நினைக்க ஜூப்பின் வேகத்தை கூட்டியவனுக்கு….முன்  மூன்று கார் நிற்பதை பார்த்து சட்டென்று தன் ஜூப்பை நிறுத்தி விட்டு…

கீழ் இறக்கிய வேஸ்ட்டிடை மடித்து கட்டிய வாறே… அந்த வண்டியின் அருகில் போகும்  போதே…

கை பிசைந்து நின்றுக் கொண்டு இருந்த யசோதாவை பார்த்து பதை பதைத்து போய் விட்டது. நேரம்  கடந்து விட்டதோ என்று…

“ யசோ மதி எங்கே…..?” பயத்துடனும் பதட்டத்துடனும் நின்றுக் கொண்டு இருந்த யசோதா வீரப்பாண்டியனை பார்த்ததும்…..

தன் கையை காட்டு பகுதிக்குள் காட்டி…. “ அந்த பக்கம் தான் ஓடுனாங்க….” கண்ணில் நீர் வழிய என்ன ஆகுமோ என்ற பயத்துடன் அவள் பேசிய பேச்சில்….

“ஒ…டுனா…ளா….?” யசோதா கை காட்டிய பக்கம் கண் மண் தெரியாது தலைதெறிக்க வீராப்பாண்டி ஓடினான்.  

Advertisement