Advertisement

அத்தியாயம்….10

கோசலை மதியை  அருகில் போய் அலங்கரிக்கவில்லை. ஆனால் புது  வெண் பட்டு சேலை எடுத்து கொடுத்து…..

“ இத கட்டிக்க கண்ணு…” அருகில் இருந்து…

“ அதை செய்….” “ இதை செய்….” சொல்லிக் கொண்டே இருந்தார். முகம் வெளிறி போய் அவர்கள் சொன்னதை மெல்ல செய்தாள்.

எவ்வளவு நேரம் கடத்த முடியுமோ….அவ்வளவு நேரத்தை செலவிட்டு தன் அலங்காரத்தை செய்து முடித்தாள். என்ன தான் நேரம் கடத்தினாலும், காய்ச்சல்  வருவேனா என்று இருந்தது.

நேரம் கடத்தியதுக்கு ஒரு வகையில்  பலன் கிட்டியது. நேரம் எடுத்து அலங்கரித்ததில் தேவதை போல் ஜொலித்தாள்.

இவ்வளவு நேரமும் தூரம் இருந்த கோசலை மதி அலங்கரித்து முடித்து பார்த்ததில் ஆசையோடு அருகில் வந்து….

“ எங்க இனத்திலேயே  இவ்வளவு அழகு யாரும் இல்ல…..குழந்தை  உன்ன போலவே பெத்து கொடு கண்ணு….” கன்னம் வழித்து நெட்டி முறித்து சொன்னவரின் பேச்சை கேட்க கேட்க  மதிக்கு அடி வயிறு கலங்கி போயிற்று…

நெற்றியில் வியர்வை மின்ன இருப்பவளை பார்த்து….. “ என்னடா பயமா இருக்கா…..? எல்லோருக்கும் அப்படி தான் கண்னு இருக்கும். போக போக பிடிச்சி போயிடும்.”

“என்னது போக போகவா…..” அய்யோ இவங்க கொஞ்சம் பேசாம இருந்தாலாவது பரவாயில்ல போலவே….அப்படி நினைக்க தோன்றியது கோசலையின் பேச்சு…

கோசலை பேச்சில்… “எங்க இனத்தில் இது போல் அழகு இல்ல. உன்னை போல பெத்து கொடு….”

அதுக்கு தான் தூக்கிட்டு  வந்து கட்டிக்கினாங்கலா….? அவங்க தம்பிக்கு கட்டி வைக்க பாத்தாங்க…..அப்பா அவன அடிச்சு போட்டதுல,  அவங்கலே கட்டிக்கிட்டாங்க….அதுவும் முறை பொண்ணு வீட்ல இருக்கும் போது… அப்படி என்ன அழகோடு சந்ததி வரனும் என்று….கோசலை பேச்சில் இதை தான் புரிந்துக் கொண்டாள் மதி….

ஒரு முறை அனைத்தும் சரியாக இருக்கிறதா….என்று பார்த்து ….. “ வா….கண்ணு.” என்றதும்…

முகத்தை ஒரு  மாதிரியாக வைத்துக் கொண்டு ….தன் ஒரு விரகை காட்ட…

“ என்ன கண்ணு முதல்ல அதை போயிட்டு வரக்கூடாதா….? சரி சரி…போ….”  அவர்கள் வீட்டில் கழிப்பறை பொறத்தால் உள்ளதால் துணைக்கு போனவர்…

கொஞ்சம் தூரம் நின்றுக் கொண்டு…. “வெரசா வா கண்ணு.  நல்ல நேரம் தான்டிட போகுது.” அந்த இருட்டான பகுதியை விட , கோசலை சொன்ன நல்ல நேரம் தான், மதிக்கு அதிக  பயத்தை கொடுத்தது.

நாள் சென்று அந்த நாய்க்கு பயந்து தப்பிக்காமல் போனது தவறோ….? எப்படி இருந்தாலும் தன் அப்பா வந்து காப்பாற்றுவார் என்று நம்பியதை விட நாம் ஏதாவது செய்து இருக்கலாமோ….

இது போல் தெரிந்து இருந்தால்…வீரப்பாண்டி சொன்ன வேட்டை நாய் இரண்டுக்கும் பயந்து இருக்க மாட்டாள். இது போல் சடங்கு பத்தி அந்த வீட்டில் பேசாததால்…கொஞ்சம் மெத்தனமாக இருந்து விட்டாள்.

இப்போது தப்பிக்க முடியுமா….?அந்த வேட்டை நாய் எங்கு இருக்கும். அவன் சொன்ன நாள் பார்த்தது…. அதன் பிறகு பார்க்கவே இல்லையே…..

“ என்னடா இன்னுமா முடியல….?”

“தோ…..” எப்போதும் கோசலையம்மா  என்ற அழைப்பு கூட தூரம் போனது.

அந்த இரவு நேரத்திலும் வியர்வையில் குளித்தது போல் வந்தவளை பார்த்து, கோசலைக்கே பாவமாக தான் இருந்தது.

ஆனால் இதை தவிர்க்க முடியாதே…. ஒவ்வொரு பெண்ணும் கடந்து வர வேண்டிய விஷயம் தானே….

அவர் நினைத்தது போல் ஒவ்வொரு பெண்ணும்  கடந்து வர வேண்டிய பாதை தான். ஆனால் அந்த பெண்கள் எல்லாம் பெற்றவர்கள் பார்த்து வைத்த  மாப்பிள்ளை.

இல்லை தான் விருப்பபட்டு மணந்தவனாக இருப்பார்கள். இப்படி தன் அடுத்த  சந்ததி அழகாய் பிறக்க வேண்டும் என்று தூக்கி வந்து மணந்து இருக்க மாட்டார்கள். (அவளை பொறுத்த வரை,  இந்த திருமணத்துக்கு காரணமாக இதை தான் நினைத்தாள்.)

மதியின் முகத்தில் உள்ள வியர்வையை  தன் முந்திக் கொண்டு துடைத்த கோசலை….

“ என்னடா கண்ணு அப்படி வெக்கையா கூட இல்லையே…ஏன் இப்படி வியர்த்துக் கொட்டுது….?” காரணம் தெரிந்தே கேட்டதால் அவள் பதிலை எதிர் பாராது…

“ வாடா…மதினி இரண்டு தடவ எட்டி பார்த்துட்டு போனாங்க.”  என்று சொல்லிக் கொண்டே அவள் கை பிடித்து அழைத்து செல்ல பார்த்தவரின் பின் செல்லாது…

“ கோசலையம்மா காச்சல் வராப்பல  இருக்கு….” தன் அக்குலில் வைத்த வெங்காயத்தால் உடலில் சூடு  ஏறவில்லை என்றாலும்…குரலில் சோர்வை காட்டி சொன்னாள்.

அவள் கழுத்து பகுதியை தொட்டு பார்த்து விட்டு….. “ இல்லையேடா கண்ணு வா…வெரசா….”

இப்போது கோசலைக்கு புரிந்து விட்டது. இவள் ஏதேதோ பேசி நேரம் கடத்த பார்க்கிறாள் என்று…. கோசலையை பொறுத்த வரை வீரப்பாண்டி பொஞ்சாதி மதி….அவனுக்கு மனைவியா வாழ கடமை பட்டவள். மனைவி என்றால் குழந்தை பெத்து கொடுக்கும் பொறுப்பும் இருக்கு தானே…. அதை நினைத்து தான் இவ்வளவு பேச்சும்…

மதியை பிடித்து இருக்கிறது…அதில் சந்தேகம் இல்லை. ஆனால் தன் அண்ணன் மகனை காட்டிலும் இல்லை.

அவனுக்கு மனைவியாகியதால் தானே நமக்கு இவள் உறவு…. அந்த கிராமத்து பெண்மணியின் எண்ண போக்கு இதுவாக தான் இருந்தது.

கோசலையின்  கையை உதறி விட்டு…. “ இல்ல எனக்கு உள்காச்சலா இருக்கு….”  

அந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து மதியிடம்  அன்பாக மட்டுமே பேசி வந்த கோசலை, முதல் முறையாக….

“ என்ன மதி இது….? நல்ல நேரம் கடக்குதுன்னு சொல்லிட்டு இருக்கேன். மதனியும் இரண்டு தடவ எட்டி பார்த்துட்டு போனாங்கன்னு  சொல்றேன்….

நீ நேரம் கடத்த என்ன என்னவோ சாக்கு சொல்லிட்டு இருக்க….என்ன நினச்சிட்டு  இருக்க உன் மனசுல….? ஏன் எங்க அப்பூக்கு பொஞ்சாதியா வாழ என்ன கசக்குது உனக்கு….?

என் ராசா நடந்து போனா ஊருக்குள்ள  ஆளான பொண்ணுங்க கண்ணு எல்லாம் என் அப்பூ  மேல தான் இருக்கும்….நீ எந்த காலத்தில் செய்த பூஜையோ…ராசா மாதிரி புருஷன் கிடச்சி இருக்கான்.

அதை இதன்னு நினச்சிட்டு இருக்காம, ஒழுங்கா கால காலத்துல எங்க கையில ஒரு குழந்தைய  பெத்து கொடுக்க பாரு….”

இப்போதும் அவர்  பேசிய பேச்சில் குழந்தையை பற்றியே இருந்தது. ஷெண்பாவுக்கு இப்படி ஆனதால்…. சீக்கிரத்தில் இந்த வீட்டில் தொட்டில் ஆடினால்  நல்லா இருக்கும்.

அதோடு வீரப்பாண்டி சொன்ன வார்த்தையும் பலிக்கும். வீரப்பாண்டிக்கு பிள்ளை   இவ தானே பெத்து கொடுக்கனும். அனைத்தும் சேர்ந்து கோசலையை இவ்வாறு பேச வைத்தது.

கோசலையே திட்டியதால் அடுத்து மதி எந்த சாக்கும் போக்கும் சொல்லாது வீட்டுக்குள் நுழைந்தாள்.

புஷ்பவதி சொன்ன….. “ அடுப்பாங்கட்டுல வெள்ளி சொம்புல பால் வெச்சி இருக்கோம் அதை எடுத்துட்டு போ…..” மாமியார் சொன்னதையும் தட்டாது அதை எடுத்துக் கொண்டு வீரப்பாண்டியின் அறையில் நுழைந்தாள். அவன் அறையில் உள்ள ஜன்னல்  பின் கட்டு பார்ப்பது போல் இருக்கும்….

தன் கட்டிலே அவனுக்கு அன்னியமாய் தெரிய….ஜன்னல் புரம்   வந்து நின்று இயற்க்கையை ரசித்ததோடு, மதி செய்த கூத்து அனைத்தையும்  பார்த்திருந்தான்.

அவள் தன் அறைக்கு  நுழைந்தும் திரும்பி பாராது, அவள் என்ன தான் செய்கிறாள் என்று பார்க்கலாம் என்று இருக்க…

அவளோ அவன் தன்னை பார்க்காது  எதையாவது பார்த்து தொலைக்கட்டும் என்ற ரீதியில், அங்கு இருந்த முக்காலியில் பாலை ஓசைப்படாது வைத்து விட்டு….கட்டிலை பார்த்தவள்….

அதன் அலங்காரத்தில்  “ம்ம்….. இங்கே வேண்டாம்.” என்று  அவளே முடிவு எடுத்தவளாய், கதவு ஓரத்தில் சுத்தி வைத்திருந்த பாயைய் கட்டிலின் மறு கோடியில்   விரித்து போட்டு படுத்து விட்டாள். இதை அனைத்தும் ஒரு சிறு ஓசையும் எழுப்பாது செய்து முடித்து விட்டாள்.

“அப்பாடா….” குறுக்கு சாய்த்து  (படுத்தல்.) விட்ட அவளின் நிம்மதி சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை.

அந்த இரவு வெளிச்சத்தில் தன் முன் நீண்டு ஒரு உருவத்தின்  நிழல் படிவதும் …அந்த நிழல் சிறிது சிறிதாக தன் மேல் விழுவதையும் பார்த்து, பயந்து எழுந்து அமர்ந்துக் கொண்டாள்.

தன் முன் கை கட்டி நின்றுக் கொண்டு இருந்தவனை, கழுத்து வலிக்க  நிமிர்ந்து பார்க்க வேண்டிய அளவுக்கு மிக அருகில் நின்று இருந்தான் வீரப்பாண்டியன்.

சட்டென்று அவன் பார்வையில்  எழுந்தாளா…? இல்லை கழுத்து வலியில் எழுந்தாளா….?அது அவளுக்கே வெளிச்சம். மொத்ததில் எழுந்து நின்று விட்டாள்.

பயத்தோடு தன்னை பார்த்தவளை முக்காலி மேல் மதி வைத்த பால் சொம்பை காட்டி…..  “ஆத்தாவும், அத்தையும் அதை அங்கனவா வைக்க சொன்னாங்க….?”

“ இல்லை….” என்று தலையாட்டியவளிடம்…

“ அப்போ அங்க ஏன் வெச்ச….?” என்ற கேள்விக்கு….

“அப்போ எங்கன வைக்கனும்….?” கேட்டாளே ஒரு கேள்வி….

“ என்ன தாலி பத்தி  தெரியாதது போல…முத ராத்திரி பத்தியும் தெரியாதா….? இல்லையே தெரியாதது போல இல்லையே….  தெரிஞ்ச தொட்டு தானே இங்கன வர கூடாதுன்னு, ஆயிரெத்தெட்டு திருட்டுத்தனம் பண்ணிட்டு இருந்த….”

“இல்ல இல்ல….” பலமாக தலையாட்டி மதி தன் மறுப்பை தெரிவித்தாள்.

“ நான் சொன்னதுக்கு  எதுக்கு இல்லேன்னு சொல்ற…..? முதல் ராத்திரி தெரியும்ன்னு சொன்னனே…அதுக்கா….? இல்ல நீ எந்த திருட்டு தனமும்   செய்யலேன்னு சொல்றியா….?”

ஏற்கனவே பயந்து நடுங்கிக் கொண்டு இருந்த மதியை, பேசி பேசியே  அவளை மயக்க நிலைக்கு கொண்டு செல்ல கங்கணம் கட்டியது போல் பேசிக் கொண்டே  போனான்.

அதற்க்கும்….”  இல்ல இல்ல….” என்ற மறுப்பே அவளிடம்…

“ தோ பாரு எனக்கு இத பத்தி  ஒன்னும் தெரியாது. நான் அறியா பொண்ணு…சின்ன பாப்பா…. அது போல நடிச்சி என்ன ஏமாத்தலாமுன்னு பாக்காத….நீ எப்படி பட்டவன்னு எனக்கு நல்லா தெரியும்.”

“ என்னை பத்தி என்ன…எப்படி தெரியும்….?” என்று கேட்காது …அதற்க்கும் தலையாட்டி வைத்தாள்.

“ என்ன நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன்…நீ பாட்டுக்கு தலையாட்டிட்டு இருக்க….என்ன இப்படியே  தலையாட்டி இன்ன நாளை கடத்திடலாமுன்னு பாக்குறியா…..?

நீ  அதுக்கு தான் திட்டம் போட்டு இருக்க…ஆனா நான் ஏமாற  தயாரா இல்ல… ஏற்கனவே இந்த சடங்க வைக்க நாள் கடத்தினதுல…. பொம்பள மேல் கைய் வைக்கிறேன்னு சொல்லி தப்பிச்ச அந்த பொட்டப்  பய என்னை பத்தி……” அதற்க்கு மேல் அவன் சொன்னட் சொல்லாது…..

“இன்னும் குழந்தை  பொறப்பு தள்ளி போனா அதையும் ஒரு விமர்சனமா பண்ணிடுவான் உன் அப்பன்….” வயதுக்கு கூட மரியாதை தராது … இன்று தங்களுடைய முதல் இரவு.

வாழ்க்கையில் மறக்க முடியாத இரவு. புது பெண் ஏற்கனவே இந்த உறவை  பற்றிய பயத்தில் இருப்பாள். அதுவும் இவர்களின் இந்த திருமணத்தால் அவளுக்கு பயத்தோடு, கோபமும் கலந்து இருக்கும் என்று நினைத்தும் பாராது…

தன் தங்கைக்கு  நியாயம் செய்வதாய் நினைத்து தன் மனதுக்கு இனியவளின் மனதை தன் பேச்சால் கொல்லாது கொன்றான்.

ஆம்   வீரப்பாண்டியனின் மனதுக்கு இனியவள்  தான் ஸ்ரீமதி….

வீரப்பாண்டி பேச்சில் பயந்து…அதுவும் அவன் அத்தை போல் அவனும் குழந்தை பற்றி பேசவும்….தான் நினைத்தது தான் சரி…. மனதில் அருவெறுத்தாலும்…அதை முகத்தில் காட்டாது…

இது கோபத்தையும், தன்  அருவெறுப்பையும் காட்டும் நேரம் கிடையாது.அவன் சொன்னது போல் சாமர்த்தியமாய் செயல் பட்டால் தான்…இதில் இருந்து தப்பிக்க  முடியும்.

ஆம்…. இந்த வாழ்வை வாழ அவள் விரும்பவில்லை. கோசலையை பிடித்து தான் இருந்தது. அவரிடம் பேசியதில் அவள் எந்த  பாசாங்கும் அவள் காட்டவில்லை.

ஆனால் இந்த வேலை பழகுவது போல் இக்குடும்பத்தில்  ஒன்ற தான் நான் நினைக்கிறேன்…..அனைவரும் பார்க்கும் படி  தனக்கு பழக்கமில்லாத வேலை எல்லாம் செய்து முடித்து விட்டு…

புஷ்பவதி திட்டினால்…. “ இனி நான் இங்கன தானே இருக்க போறேன்..பைய  பைய கத்துக்குறேன்.” சாமர்த்தியமாய் அத்தை என்ற அழைப்பை தவிர்த்தாள். புஷ்பவதியும் அந்த அழைப்புக்கு ஏங்கி கிடக்காததால்…. அதை பெரியதாய் எடுத்துக் கொள்ளவில்லை.

தன்  வீட்டில் இருப்பவர்கள் எப்படியாவது ஏதாவது செய்து இங்கு இருந்து தன்னை அழைத்து சென்று விடுவார்கள். அது வரை நாம் சாதரணமாக இருக்கலாம்….

அவர்கள் சொன்னதை செய்ததுக்கு இது ஒரு காரணம் என்றால்…மற்றொரு காரணம். பயம்….அவர்கள் தோற்றத்தை பார்த்தே… அவளுக்கு  ஒரு வித பயம் ஏற்பட்டு விட்டது.

அப்படி இருந்தும்  முதல் நாளிலேயே ….தன் பயத்தையும் மீறி பேசியதில் தான் வாங்கி  கட்டி கொண்டாளே…அதனால் பயத்திலும் கொஞ்சம் அடக்கி வாசித்தாள் எனலாம்….

அவள் எதிர் பாராதது  இந்த சடங்கு …எதிர் பார்த்து இருக்க வேண்டுமோ….தன் குடும்ப மீது இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையால் முதலில் தப்பிக்க நினைத்தவள்…..பின் வீரப்பாண்டி சொன்ன  வீரப்பாளைய நாய் பயத்தில் பொறுக்கலாம், நம்ம அப்பா எப்படியாவது நம்ம அழச்சிட்டு போயிடுவாரு….நம்பிக்கையில் இருந்தாள்.

பாவம் இப்போது  இந்நேரத்தில் சங்கரனிடம்…. “ இனி அவ நம் வீட்டுக்கு வேண்டாம்….” இன வெறியில்  மகனை கொன்றது போதாது என்று மகளையும் கொல்ல திட்டம் தீட்டினார்.

“ நீங்க சொன்னா சரியா தான் இருக்கும் மாமா….” சங்கரன்  ஒத்து ஊதினான்.

வீரப்பாண்டி, மதிக்கு,   இன்று நடக்கும் சடங்கை பற்றி  ஊருக்கே தெரியும் போது, மதியை பற்றிய செய்தி அறிய தன் ஆளை ஒருத்தனை வீரப்பாண்டி தோட்டத்தில் வேலைக்கு அனுப்பி இருக்கும்,  சங்கரனுக்கு தெரியாது போகுமா…..?

தெரிய வேண்டும் என்று  தானே புஷ்பவதியும், அப்படி  ஊருக்கே கேட்கும் படி சத்தம் போட்டு பேசியது.

தன் தகப்பன் தன்னை  கொல்ல திட்டம் தீட்டுவது தெரியாது…இவனிடம் கொஞ்சம் நைச்சியமாய் பேசி   தங்களுக்குள் ஏதும் நடக்காது நாட்களை கடத்தி விட்டால் போதும்….குறைந்த பட்சம் இன்றாவது  கடத்தியாக வேண்டிய சூழ்நிலையில் இருந்ததால்….

“ இதெல்லாம் நம்ம ஒருவருக்கு ஒருவர் தெரிஞ்சி அப்புறம் வெச்சிக்கலாமே….ஏன்னா  உங்கள பத்தி எனக்கு தெரியாது….என்ன பத்தி உங்களுக்கு தெரியாது.” கட்டிலின் அலங்காரத்தை காட்டி சொன்னாள்.

இவ்வளவு பெரிய வார்த்தைகள் தொடர்ந்தார் போல் பேசிய பிறகு , அவளை  நினைத்து அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. பரவாயில்ல தைரியமா அவனிடம் பேசி விட்டோமே…அதுவும்  திக்கல் இல்லாது. அவளுக்கு அவளே சபாஷ் போட்டு கொண்டாள்.

பாவம் இவ்வளவு பேசிய அவள், ஒரு வார்த்தை கூட அவன் முகத்தை பார்த்து பேசாது அனைத்தையும் தரையை பார்த்தே பேசி முடித்து விட்டாள்.

பேசிய பிறகாவது…அவன் முகத்தை  பார்த்து இருந்தால் தெரிந்து இருக்கும், அவன் முகத்தில் வந்து போன நக்கல்…நைய்யான்டி….

 

Advertisement