Advertisement

அத்தியாயம்….5

 விடுதி வெளியில் நின்றுக் கொண்டு இருந்த ஜமுனாவை அதிக நேரம் காத்திருக்க வைக்காது கையில் வாட்சை கட்டிக் கொண்டே வந்த சாயா….

“ என்னப்பா ரொம்ப நேரம் வெயிட் பண்றியா…..?” எப்போதும் போல் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கேட்டாள்.

“ தெரியுதுல லேட் ஆகுதுன்னு…கொஞ்சம் சீக்கிரம் எழுந்து கிளம்புவதுக்கு என்ன…..?” இந்த ஒரு மாதம் படிக்கும் பாடத்தை அன்றும் படித்து  காட்டினாள் ஜமுனா…

“ நாளையில் இருந்து சீக்கிரம்  எழ பாக்குறேன் ஜமூ…..”அவளும் ஒரு மாதமாக சொன்னதையே சொன்னாள்.

மாயா… ஜமுனா B.E படிக்கும் போது,  சென்னையில் விடுதியில் தங்கி படித்த பெங்களூர் பெண். ஜமுனாவுக்கு  கேம்பசில் வேலை கிடைத்தது போலவே  அவளுக்கும்  அவள் சொந்த ஊரான   பெங்களுரிலேயே  கிடைத்தது.

மாயாவின் காதலன் சென்னையில் இருக்கும் போது…அவளுக்கு அங்கு இருப்பு கொள்ளுமா…….? இடம் மாற்றம் கேட்டு வாங்கியதோடு….இதோ  ஜமுனாவின் உதவியோடு சென்னையில் செட்டில் ஆகி மாதம் ஒன்றானது.

ஜமுனா அன்று பாலாஜியிடம் விடுதி பற்றி  விசாரித்து அவள் தோழியிடம்  சொல்ல….மாயா சென்னை வந்து விடுதியை பார்த்ததில் பிடித்து விட… இதோ இங்கு வந்தும் விட்டாள்.

காலையில் ஜமுனா மாயாவுடன் செல்பவள்..மாலை தனியாக தான் வருவாள். மாயாவின் காதலன்   விஷ்வா கிண்டி ரயில் நிலையத்தில் காத்திருக்க,  அவனையும் அவளையும் ஒரு பார்வை பார்த்து விட்டு  வந்து விடுவாள். பாலாஜிக்கும் இவை  அனைத்தும் தெரியும்.

பிரண்ட லவ் பண்ணலாம்…இவ பண்ணக்கூடாதா….? மனதில் நினைத்ததை  ஜமுனாவிடம் கேட்கவில்லை.  இதை மட்டும் இல்லை அதற்க்கு அடுத்து வேறு எந்த பேச்சு வார்த்தையையும் ஜமுனாவிடம் வைத்துக் கொள்ள வில்லை என்பதை விட….பேசவே  முயலவில்லை என்பது தான் உண்மை.

ஜமுனாவும் ஒருவன் தன்னிடம் காதல் சொன்னான் என்பதை மறந்தவளாய் விடுதி வாயில்  காத்திருப்பதும்…. மாயாவுடன் பணிக்கு செல்வதும்….மாலையில்  தனியாக வருவதும்…

இன்னும் தண்ணீர் பஞ்சம் தீராத தொட்டு, மூன்று நாளைக்கு ஒரு நாள் என்பதை தாண்டி,  நான்கு நாட்களுக்கு ஒரு  நாள் தண்ணீர் வர…அதை பிடித்து வைப்பதும்,  என்று எந்த தங்கு தடையும் இன்றி  ஜமூனாவின்  வாழ்க்கை சென்றது.

 இதை எல்லாம் பார்த்த நம் முருகேசனுக்கு தான் தலையை  பிடித்துக் கொண்டான். என்னடா…இது….?  நம்ம முதலாளியே வலிய வந்து அந்த பொண்ண பத்தி விசாரித்தார்…

அதுக்கு அப்புறம்…அந்த பொண்ணே ஒரு நாள் இவர தேடி வந்துச்சி….என்ன பேசுனாங்கன்னு தெரியல…ஒரு வாரம் பின் ஜமுனா தோழி இங்கு வந்து தங்குச்சி….தோ போது வருதுங்க….நம்ம முதலாளியும் தினம் தினம்….அவர் ஆபிஸ் ரூமில் இருந்து  அந்த பொண்ண பாக்குறதோட சரி… இவை அனைத்தும்  மனதில் தான் நினைக்க தான் முடியும். முதலாளியிடம்  கேட்கவா முடியும்…..?  சரி நமக்கு எதுக்கு வம்பு….பொண்ணு பாஸ் ஆயிடுச்சி…மேல என்ன படிக்க வைக்கலாம் . அத  பத்தி யோசிக்கலாம்… தன் குடும்பத்தை பற்றி யோசிக்க ஆராம்பித்தார்

அப்போது பாலாஜியும் தன் குடும்பம் அமைப்பதை பற்றி தான் யோசித்துக் கொண்டு இருந்தான். எப்போது  ஜமுனா அவள் அம்மா திருமணம் ஆகவில்லை என்று சொன்னாளோ…பின் அதை பற்றிய முழுவிவரத்தையும்  விசாரித்து தெரிந்துக் கொண்டான்.

கேட்டு தெரிந்ததில்….தன் காதல் ஏற்பாளா….? சந்தேகம் தான். என்ன செய்வது….? அவள் சொன்ன படி தட்டோடு அவள் வீட்டுக்கு போகலாமா….?  என்று  யோசித்தானே ஒழிய அவளை விட்டு விடலாமா….? அந்த எண்ணம் சிறிதும் அவனுக்கு வரவில்லை.

அன்று  விஷ்வா வராததால்,   மாயா மாலையில் ஜமுனாவுடன் தான்  வந்தாள்.  மாயாவின் முகம் என்னவோ போல் இருக்க…. “ என்ன மாயா ஏதாவது பிரச்சனையா….?”  ஜமுனா கேட்டதுக்கு..

“ம்…ஒன்றும் இல்லை.” என்று வாய் சொன்னாலும் …எதோ உள்ளது என்று  அவள் முகம் சொன்னது.

இன்று விஷ்வா வராதது…மாயாவின் முகம் வாட்டம்..ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது போல்…. “ என்ன கழட்டி விட்டுட்டானா…?.”  விஷ்வாவை சந்தேகப்பட்டு கேட்டாள்.

அவளை முறைத்த மாயா…. “ இப்போ நீ சொன்னதை அவன் என்  கிட்ட கேட்குறான். என்ன என்னை கழட்டி விட பாக்குறியான்னு…..?”

“ ஏன்….?” ஜமுனா ஒற்றை வார்த்தையில்…  ஏன்….? என்று  சாதரணமாக கேள்வி எழுப்பி விட்டாள். ஆனால் மாயாவால் அதற்க்கு உடனே பதில் சொல்ல முடியவில்லை.

மாயாவிடம் இருந்து பதில் வராது போக….” சொல்ல முடியாத விசயமா இருந்தா வேண்டாம். வேறு பேச்சுக்கு போக  ஜமுனாவை பற்றி  மாயாவுக்கு தெரியாத என்ன…..?

ஜமுனா எப்போதும் மற்றவர்களின் அந்தரங்கத்தில் நுழைய மாட்டாள். அவள்  இருக்கும் இடத்தில்,  மற்றவர்களின் அந்தரங்கம்  விவாதிக்க பட்டாலே…அந்த இடத்தை விட்டு சென்று விடுவாள்.

அப்படி பட்டவள் தானே கேட்கிறாள் என்றால்….? அதற்க்கு காரணம் தன் மீது இருக்கும் அக்கறையில் தான் என்று தெரியாதவளா மாயா ….? ஏன் என்றால் அவளுக்கும் ஜமுனாவின் அன்னையை  பற்றி ஒரளவுக்கு தெரியும்.

“ சொல்ல கூடாது எல்லாம்  இல்ல ஜமூ….அது வந்து….. அடுத்த வாரம் பெண் கேட்டு வரேன்னு விஷ்வா  சொல்றான்.”  மாயா அப்படி சொன்னதும்…

ஜமுனா அவள் கைய் பிடித்து குதுகலித்தவளாய்… “ ஏய் இது எவ்வளவு நல்ல விசயம்…இதுக்கு போய் இப்படி சோகமா…நானும் விஷ்வா பத்தி தப்பா நினச்சிட்டேன்.”

தோழியின் திருமண பேச்சி ஆராம்பித்ததில்  சந்தோஷித்தும், விஷ்வாவை பற்றி  தவறாக நினைத்ததுக்கு,  வருந்தியும் பேசியவள்.

“விஷ்வாவே வீட்டுக்கு உடனே வர சொல்ல வேண்டியது தானே….சீக்கிரம் சட்டு புட்டுன்னு கல்யாணத்த பண்ணிக்கோடீ….”

ஜமுனாவுக்கு  நெருங்கிய தோழிகளே ஒரு சிலர் தான். அதில் மாயா தான் ஜமுனாவுக்கு மிக நெருக்கம் எனலாம். அவள் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும்  போது….

“ நான் நம் சீனியர் விஷ்வாவை  விரும்புறேன்  ஜமூ….” என்று  சொன்னதுமே….

அவள் கேட்ட முதல் கேள்வி… “ இது உனக்கு தேவையா…..?” என்பதே….

ஒரு முறைக்கு இரு முறை சொல்லி பார்த்தாள். “ இந்த வயதில்  என்று இல்லை. எந்த வயதிலுமே காதல் வேண்டாம்.” என்று… காதல் மயக்கத்தில் இருந்த மாயா அதை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை.

மற்றவர்களின் விசயத்தில்,  இதற்க்கு மேல் நுழைவது தவறு என்று  புரிந்ததால் அப்படியே விட்டு விட்டாலும், அவ்வபோது ஜமுனாவின் மனதில் விஷ்வா மாயாவை விட்டு விடுவானா….? அப்படி விட்டால் மாயாவின் நிலை…..? இப்படி அடிக்கடி நினைத்துக் கொண்டது உண்டு.

இப்போது அவனே திருமணத்துக்கு அவசரப்படவும்….  “ பண்ணிக்க உனக்கு என்ன கேடு….?”இப்படி   ஜமுனா மாயாவை திட்டியும் விட்டாள்.

“ உனக்கு  எப்படி சொல்றது…. என் வீட்ல இது தெரிஞ்சா ரொம்ப பிரச்சனை ஆயிடும் ஜமூ….”

 “ எது தெரிஞ்சா…..?”

“ என் காதல் விசயம் தெரிஞ்சா…..”

“ இது உனக்கு முன்னவே தெரியும் தானே ….” ஜமுனாவுக்கு  மாயாவின் மனநிலையை பற்றி சத்தியமாக புரியவில்லை.

காதலிக்கிறா…. காதலித்தவனை கல்யாணம் செய்யனுமுன்னா வீட்ல சொல்லி தானே ஆகனும்.  “ இந்த அறிவு காதலிக்கும் போது  எங்கு போனது……?” அதை கேட்டும் விட்டாள்.

“ அப்போ இதை பற்றி எல்லாம் யோசிக்கலடீ….”

“ எதை பத்தி யோசிக்கல….?” ஜமுனா கேட்டதுக்கு…

“ கல்யாணத்தை பற்றி….”

“ காதலுக்கு அடுத்து கல்யாணம் தானே…? எத்தனை வருஷம் காதலிச்சிட்டே இருக்க முடியும்…..? தோ பார் மாயா இந்த பிரச்சனைய நீ பேஸ் பண்ணி தான் ஆகனும். இந்த வீக்  என்டு ஊருக்கு போ… வீட்ல பொறுமையா புரியும்  படி பேசு. எவ்வளவு சீக்கிரம் முடியுமே அவ்வளவு சீக்கிரம் கல்யாணம் செய்துக்குற  வழிய பாரு….”  இந்த உரையாடல் முடியவதற்க்கும்,  ஊரப்பாக்கம் ரயில் நிலையம் வருதற்க்கும் சரியாக இருந்தது.

எப்போதும் போல் அன்றும் பாலாஜி   ஊரப்பாக்கம் விடுதியில்  அந்த நேரத்துக்கு சரியாக தன் அபீஸ் அறையில் இருந்து ஜன்னல் வழியாக  ஜமுனாவை பார்த்த பிறகே தன் வீடு சென்றான்.

வெள்ளிக் கிழமை காலை… “ நான் இன்னிக்கி ஊருக்கு போறேன் ஜமூ….”

“ சந்தோஷம் டீ…வீட்ல பொறுமையா பேசு.”

“ பேசுறேன். ஆனா ஒத்துப்பாங்கலா….? அது தான்டி பயமா இருக்கு ஜமூ”

“ பேசு கண்டிப்பா ஒத்துப்பாங்க. விஷ்வாவுக்கு என்ன குறச்சல் ….? படிச்சி இருக்கார். நல்ல வேலையில் இருக்காரு….பார்க்கவும் நல்லா இருக்கார். கண்டிப்பா ஒத்துப்பாங்க பாறேன்.” என்று சொல்லும் ஜமுனாவை  புரியாது ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றாள் மாயா.

பாவம் அப்போது மாயாவின் அந்த பார்வையின் அர்த்தம் புரியவில்லை. புரிந்த போது….

இரண்டு வாரம் சென்ற பின் கூட மாயா வராததை பார்த்து குழம்பி போனாள் ஜமுனா…மாயாவின் போனும்  அணைத்து வைக்க பட்டு இருந்தது.

 மாயா ஊர் சென்று அடுத்து  வந்த  திங்கட் கிழமையில் ஆபிசுக்கு ஈமெயிலில்  விடுமுறை எடுத்துக் கொள்வதாக செய்தி வந்த்து. இது தான் அவள் அறிந்த விசயம்.

இந்த விஷ்வா வேறு தினம் தினம் கிண்டி ரயில் நிலைத்தில் வந்து…. “  உனக்கு ஏதாவது தெரியுமா….? “ கேட்பது அவனுக்கு அலுக்க வில்லையோ என்னவோ…

ஆனால் இவளுக்கு அவன்  கேட்டு கேட்டு செல்வதை பார்த்து அந்த ரயில் நிலையத்தில் இருப்பவர்கள் தன்னை தவறாய் நினைப்பார்களோ…. ?மாயாவின் கவலையோடு கூடவே  இந்த பயமும் பற்றிக் கொண்டது.

அதுவும் ஒரு நாள் விஷ்வா தன் அருகில் பேசுவதை பாலாஜி பார்ப்பதை பார்த்த அன்று….  “ எனக்கு என்ன தெரியும்…..? நீ தானே அவள லவ் பண்ண…..உன் கிட்ட  இருக்கும் போன் நம்பர் தான் என் கிட்டேயும் இருக்கு. உனக்கு போன்  ஆப்ன்னு  வந்தா….எனக்கு மட்டும் லைன் கிடைத்து விடுமா என்ன……?”  ஜமுனா விஷ்வாவை எடுத்து எறிந்து பேசி விட்டாள்.

அதன் பின் பாவம் விஷ்வா  எதுவும் சொல்லாது செல்வதை பார்த்து…” அய்யோ…..”  என்றானது அவளுக்கு.

விஷ்வா மாயாவின் காதலனாக அறியும் முன்னவே…. தன் கல்லூரியில் சீனியர் என்ற முறையில் தெரியும் தானே….எப்போதும் தன்னை பார்த்து  கண்ணியத்தோடு  கடக்கும் அவன் பார்வை…

இன்று அதில்  தெரிந்த சோகத்தில்….தன்னையே   நொந்தவளாய் சென்றாள்.

பாவம் அப்போது தெரியவில்லை..இன்னும் நோக நிறைய வைத்து விட்டே தன்  தோழி  மாயா ஊர் சென்றுள்ளாள் என்று…

அடுத்த ஒரு வாரமும் இவ்வாறே கடக்க…. சனி…ஞாயிறு விடுமுறை முடிந்து திங்கள் வேலைக்கு  செல்ல வேண்டுமா…..? என்பது போல்  படுக்கை விட்டு எழ மனது இல்லாது கட்டில் மேலேயே உடலை  அப்படியும் ….இப்படியும்…. திரும்பி  படுத்து தன் தூக்கத்தை விரட்டிக் கொண்டு இருந்த  ஜமுனாவின் அறை கதவை…

பொறுமையே இல்லை என்பது போல் தட்டிய சத்ததில்  எழுந்து போய் திறக்க…. கண்ணில் பயத்தோடு   வைதேகி …. “ போலீஸ் வந்து இருக்கு ஜமுனா…அவங்க உன்ன தான் கேட்குறாங்க…”

“ போலீசா…..? எதுக்கு…..?”  போலீஸ் என்றதும், ஜமுனாவுக்கும் மனதில் பயம் தான். ஆனால் ஏற்கனவே பயத்தில் இருக்கும்  அன்னையின் பயத்தை இன்னும் கூட்ட கூடாது… என்று சாதரணமாக கேட்டவளாய்… தன் உடையை சரி படுத்திக் கொண்டு வெளியில் சென்றாள்.

ஆனால்  அப்போது அவள்   நினைத்து பார்க்க வில்லை. இந்த    பிரச்சனை சாதரணமாக முடிய கூடியது இல்லை என்று…

வெளியில் நின்றுக் கொண்டு இருந்த  இன்ஸ்பெக்டர்…. “ நீ தான் ஜமுனாவா…உன்ன ஐய்யா ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வர சொன்னாரு….”

பேச்சில் எந்த மரியாதையும் இல்லை. நீ…வா போ என்று அவர் பேசியது. அதுவும் தங்கள் வீட்டு முன் போலீஸ் நின்றுக் கொண்டு இருப்பதையும்…தன்னிடம் பேசியதையும் அந்த  தெருவே வேடிக்கை பார்ப்பதை பார்த்து,  ஜமுனாவுக்கு அவமானமாக  போய் விட்டது. கூடவே பயமும்.

 திரும்பி தன் அன்னையை பார்க்க..அவர் முகத்திலும் அதே பாவனை தான். அந்த போலீசிடம்….”  எதுக்கு சார்….?”  ஜமுனா மிக தன்மையாக தான்  கேட்டாள்.

“ ஓ..விசயம் சொன்னா தான் வருவீங்கலோ…..? கேட்டுக்கோ…உன் கூட்டுக்காரி மாயா ஒருத்தன்  கூட சுத்துற வரை சுத்திட்டு  ….அவன் கிட்ட   கரக்கும் அளவுக்கு கரந்துட்டு…. அவனை அம்போன்னு விட்டதாலே…அவன் தண்ட வாளத்துல தலைய  கொடுத்துட்டான்.” என்று சொன்னது தான்.

“ என்ன சார் சொல்றிங்க….?”  அந்த போலீஸ் சொன்ன செய்தியில்…கொஞ்ச நேரம் முன்  இருந்த அவமானம்….பயம் மறைந்து போய் அந்த இடத்தில் …அதிர்ச்சி….அதிர்ச்சி மட்டுமே…

ஜமுனாவின் அதிர்ச்சி,  அந்த போலீசுக்கு நடிப்பாய் தெரிந்தது போல்… “ என்னம்மா ஒன்னும் தெரியாது போல கேட்குற….? உன் கூட்டாளி அந்த பையன் கிட்ட கரந்ததுல உனக்கு கொஞ்சம் கூடவா கொடுக்கல….?”

பாவம் ஜமுனாவுக்கு இவர் என்ன சொல்ல நினைக்கிறார்  என்பது கூட புரியாது… “ நீங்க என்ன சொல்ல வர்றிங்க…எனக்கு நிச்சயமா புரியல சார்…”

அழ  கூடாது அழ கூடாது . தைரியமா இருக்கனும் என்று நினைத்தவள். அது முடியாது போய் அவள் பேச்சின் கடைசியில்  கண்ணில் இருந்து மாலை மாலையாக கண்ணீர்  வழிந்தது.

ஜமுனாவின் அந்த கண்ணீருக்கும்,   அந்த போலீஸ் அதிகாரி என்ன சொல்லி இருப்பாரோ….?  “ என்ன விசயம்….?” என்று கேட்டுக் கொண்டே அந்த இடத்துக்கு வந்தான் பாலாஜி.

Advertisement