சூரியனின் ஒளியில் பிரகாசித்துக்கொண்டு இருந்தது அந்தக் கல்யாண மண்டபம். அதன் வெளியே அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் “சத்திய ரஞ்சன் வெட்ஸ் தீபநிலா, ஆதித்யன் வெட்ஸ் சுடர் ஒளி” என்று பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அதன் அருகே குமரன் மற்றும் மூர்த்தி நின்றபடி அனைவரையும் வரவேற்றுக்கொண்டிருந்தனர். உள்ளே சொந்தங்கள் அனைவரும் ஒவ்வொரு வேலை பார்த்தபடி மகிழ்ச்சியின் ஆரவாரத்தில் அந்த மண்டபம் நிரம்பியிருந்தது. மணமகன் அறையில் ஆதிக்கு, வேந்தன் தலைவாரி விட்டபடி “சூப்பரா இருக்கீங்கப்பா” என்று பேசிக்கொண்டிருக்கும்போது ரஞ்சன் அங்கு வந்து வேந்தனின் தலையைக் கலைத்துவிட்டு “நான் எப்படிடா இருக்கேன்?” என்று கேட்க, வேந்தன் ரஞ்சன் தன் தலையைக் கலைத்ததில் முகத்தை உம் என்று வைத்தவாறு “நல்லாவே இல்லை போங்க” என்று முகத்தைத் திருப்ப,
அதற்கு ரஞ்சன் “ சரி இருந்துட்டு போறன் உனக்குப் பிடிக்கலைன்னா என்ன? உன் பெரியம்மாவுக்குப் பிடிச்சா போதாதா?” என்று அவன் கையில் இருந்த சீப்பைப் பிடுங்கி தலை வார, இவர்களைப் பார்த்த ஆதி
“ஏன் ப்ரோ அவனை டென்ஷன் பண்றீங்க?” என்று ரஞ்சனிடம் இருந்து சீப்பைப் பிடுங்கி வேந்தனுக்கு தலை வார, ரஞ்சன் “இங்க மாப்பிள்ளை நானா? இல்லை இவனா? ஏதோ மாப்பிள்ளை மாதிரி வேட்டி சட்டை போட்டு எனக்கே டஃப் கொடுக்கிறான். இதுக்குத்தான் அப்போவே சொன்னேன், இவனுக்கு வேட்டி சட்டை வேணாம்னு. கேட்டீங்களா?” என்று வேந்தனுக்கு தெரியாமல் ஆதியை பார்த்து சிரிக்க ஆதியும் அதற்கு சிரிக்க, வேந்தன் ஆதியை விட்டு கீழே இறங்கி ரஞ்சனைப் பார்த்து ஒழுங்கு காட்டிவிட்டு ஓடிச் சென்றுவிட்டான்.
அவன் சென்றவுடன் ரஞ்சனும் சத்தமாக சிரிக்க இருவரும் கிளம்பினர். இங்கு மணப்பெண் அறையில் புனிதா மற்றும் யசோதா இருவரும் அமர்ந்து தீபா மற்றும் சுடருக்கு மேக்கப் போடுவதைப் பார்த்தபடி இருந்தனர். மேக்கப் செய்ய வந்த பெண்களும் அவர்கள் வேலையை முடித்துவிட்டுச் சென்றனர்.
அழகிய சிலையேன நின்ற இருவரையும் பார்க்க அவர்கள் இரு கண்கள் போதவில்லை. புனிதா இருவருக்கும் நெட்டி முறித்து “என் கண்ணே பட்டு டும் போல” என்று சொல்ல யசோதாவோ அவள் கண்ணில் இருந்த மையை எடுத்து இருவருக்கும் காதுக்குப் பின் திருஷ்டி பொட்டு வைத்தபடி “ஆப் தோனோ சுந்தர் லக் ரகி ஹே” என்று கண்கலங்க. அதைக் கேட்ட சுடர் “இவங்க வேற ஆவுனா கோச கோசன்னு கொஞ்சம் அந்த சப் டைடிலை யாரவது ஆன் பண்ணுங்களேன் ” என்று கிண்டல் செய்த சுடரின் காதைத் திருகியபடி யசோதா “வாலுக்காரப் பொண்ணு சுடர் நீ என்னையே கிண்டல் பண்ற” அதற்கு சுடர் “அச்சோ அத்தை என் காதை விடுங்க. நீங்க இழுக்கிற இழுல என் காது மட்டும் ஒரு இன்ச் பெருசாயிடும் போல. அப்புறம் மாப்பிள்ளை திகைச்சு நின்னுடப் போறாரு” என்று சுடர் சொன்னதைக் கேட்டு காதை விட்ட யசோதா புனிதாவிடம் திரும்பி “இந்தப் பொண்ணைப் பாருங்க அண்ணி” என்று கம்ப்ளைன்ட் செய்ய இவர்கள் இருவரையும் பார்த்துச் சிரித்த தீபா “அத்தை சித்தி இங்க வந்து நின்னு எங்களை ப்ளஸ் பண்ணுங்க” என்று ஆசிர்வாதம் இருவரும் பெற்றுக்கொண்டனர்.
பின் தீபா புனிதாவிடம் திரும்பி, “போய் குமரன் மாமாவை கூட்டிட்டு வாங்க சித்தி” எனச் சொல்ல, அதைக் கேட்ட யசோதா ஜெர்க் ஆகி, “அப்போ நான் வெளியில இருக்கேன்” என்று நகரப் போக, அவரைப் பிடித்த சுடர், “ஏன் எங்க மாமா வந்தாலே எஸ்கேப் ஆகிடுறீங்க? என்ன கதை?” என்று விசாரிக்க. அதற்கு யசோதா, “நான் எதுவும் பண்ணாமலே உங்க மாமா என்ன முறைச்சி முறைச்சி பார்க்கிறார். ஏன் தான் தெரியல” என்று முந்தானையைத் திருகியபடி பேச.
அதற்கு சுடர், “அது எங்க மாமாவுக்குக் கொஞ்சம் அக்கா பாசம் அதிகம். அதான் உங்க அண்ணா மேல இருந்த கோபத்தை உங்க கிட்ட முறைச்சுக் காட்டுறாங்க” என்று இவர்கள் பேசிக்கொண்டு இருக்க, ஐயர் “பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ” என்று சொல்லிவிட, இருவரையும் அழைத்துச் சென்றனர்.
உறவுகள் சூழ அனைவரும் வாழ்த்த, இரு ஜோடிகளின் வாழ்க்கையும் இனிதாகத் தொடங்கியது. பத்து வருடம் கழித்து லக்னோவில் கோடைக்கால விடுமுறைக்கு சுடர் மற்றும் தீபா இருவரும் அங்கு வந்திருந்தனர். அந்தப் பெரிய வீடு சுற்றிப் பசுமையாக மரம் செடி என்று அந்த இரவிலும் விளக்குகள் உதவியுடன் மிக அழகாக இருந்தது.
அந்த தோட்டத்தில் போடப்பட்டு இருந்த பெஞ்சில் குமரனுடன் அவன் அருகில் பதினைந்து வயது நிரம்பிய நம் வேந்தனும் அவன் அருகில் ஒன்பது வயது ஆன அவன் தங்கை அதித்ராவும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க அப்போது அங்கு பைக் வரும் சத்தம் கேட்டு யார் என்று திரும்பி பார்க்க, ரஞ்சன் மற்றும் தீபா தான் வந்திருந்தனர்.
இவர்களை பார்த்து விட்டு அங்கு சென்ற தீபா “ என்ன மாமா இருட்டில என்ன பண்ணிட்டு இருக்கீங்க “ என்று கேட்க அதற்கு அதித்ரா முந்தி கொண்டு “ இவ்வளவு லைட் எரியுது அப்பவும் இருட்டுன்னு சொல்றீங்க பெரியம்மா கண்ணு போச்சா “ என்று சிரிக்க அதை கேட்டு அவள் கன்னம் கிள்ளிய தீபா “ எங்கடி என் தங்கச்சி நீ மட்டும் தனியா இருக்க அதிசயமாக இருக்கு “
“உங்க தங்கச்சி என்ன கழட்டி விட்டுட்டு உள்ள அத்தை கூட விளையாடிட்டு இருக்காங்க “ என்று இவள் சொன்னதை கேட்டு அங்கு வந்த சுடர் “ என்னது விளையாடிட்டு இருக்கேனா நான் சமைக்கிறது பார்த்தா விளையாடுற மாதிரி இருக்கா “ என்று திட்டியவாறு தீபாவின் ஏழு வயதான தேன்நிலா -வையும் அழைத்து வர அவள் அங்கு நிற்கும் தன் தந்தையைப் பார்த்து ஓடி சென்று கட்டிக்கோண்டாள். ரஞ்சனும் அவளை தூக்கி ஒரு சுற்று சுற்றி இறக்கி விட்டு “ என்ன அப்பாவை மிஸ் பண்ணியா செல்லம் “ என்று கேட்டதற்கு அழகாக அவள் தலை அசைக்க அதை பார்த்த சுடர் “ அவ தான் உங்களை மிஸ் பண்ணிருக்கா போல உங்களைப் பார்த்தா நீங்க அவள மிஸ் பண்ண ஃபீலே இல்லையே கேஸ்னு பசங்களை விட்டுட்டு ஜாலியா ரவுண்ட் போயிட்டு வந்த மாதிரில இருக்கு “ என்று சுடர் கேட்டதும் அதித்ரா “ எல்லாரையும் உன்ன மாதிரியே நினைப்பியா அம்மா நீ தான் எங்களை விட்டுட்டு ஸ்கூல் போறேன்னு அப்பா கூட ரவுண்ட் போயிடுவ உன்ன மாதிரியே எல்லாரும் இருப்பாங்களா “ என்று சொல்லி விட்டு வீட்டுக்குள் ஓடி சென்று விட்டாள்.
சுடர் குமரனைப் பார்த்து “பாருங்க மாமா இப்போவே எவ்வளவு வாய் பேசுறான்னு “ அதற்கு தீபா “ ஆமா அப்படியே அம்மா மாதிரியே இருக்கா “ என்று சிரித்தபடி உள்ளே செல்ல சுடர் “ ஏ நிலா… “ என்று சிணுங்கியபடி பின்னேயே சென்றாள்.
இவர்களைத் தொடர்ந்து அனைவரும் உள்ளே செல்ல அங்கே ஆதி டிவியில் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக்கொண்டு இருக்க அதை பார்த்து ரஞ்சனும் அவனுடன் சேர்ந்து கொண்டான். அப்போது சமையல் அறையில் இருந்து ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு “ தீபா நீயும் வந்துட்டியா அப்ப நல்லதா போச்சு இங்க வாயே இதை சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லு “ என்று யசோதா தீபாவை அழைக்க அங்கே நின்ற சுடர் தீபாவிற்கு கண்ணைக் காட்டி “ வேண்டாம் என்று தலை ஆட்ட “ அதை புரிந்து கொண்ட தீபா உஷாராக
“ அது என்னது அத்தை “ என்று கேட்டபடி குமரன் அருகில் அமர்ந்தாள். யசோதாவும் அவள் அருகில் வந்து “ ஷாகி டாட்க்கா தீபா இங்க இது ரொம்ப ஃபேமஸ் தெரியுமா “ என்று அவள் இடம் நீட்ட அதற்கு அவள் “ ஃபர்ஸ்ட் டைம் பண்ணிருக்கீங்க அத்தை அப்போ மோறைபடி மாமாக்கு தான தரணும் மாமாக்கு ஃபர்ஸ்ட் கொடுங்க “ என்று எழுந்து சென்றுவிட்டாள் தீபா.
இதைக் கவனித்த குமரன் “ இன்னைக்காவது நல்ல சாப்பாடு சாப்பிடலாம்னு நினைச்சேன் அது பொறுக்காதே இவங்களுக்கு “ என்று மனதில் நொந்தவாறு “ என்ன யசோம்மா “ என்று சிரிக்க, யசோதா அவன் அருகே அமர்ந்து “ இந்தாங்க இந்த ஸ்வீட் நானே கஷ்டப்பட்டு செஞ்சேன் நல்லா இருக்கான்னு டேஸ்ட் பண்ணி சொல்லுங்க “ என்று ஸ்பூனை அவன் வாய் அருகே எடுத்துச் செல்ல குமரன் “ இல்ல யசோம்மா டாக்டர் சுகர் கம்மி பண்ணுங்கன்னு சொல்லிருக்கார்லம்மா சோ வேனா “ என்று மறுக்க அதற்கு யசோதா
“உங்களுக்கு தான் சுகர் இல்லையே அப்புறம் என்ன?“
“வரும் முன் காப்பது நல்லது இல்லையா யசோ?“ அதைக் கேட்டு யசோதா முகம் வாட, அது பொறுக்காத குமரன் யசோதாவிடம் இருந்து கிண்ணத்தை வாங்கி, “இதோ நம்ம ரஞ்சன், ஆதி இருக்கும் போது நீ ஏன் ஃபில் பண்ற?“ என்று இருவரும் என்ன என்று உணரும் முன் அதை வாய்க்குள் திணித்துவிட, ஆதி முகம் எழுக் கோணலாக மாறி, “என்னது இது இப்படி கசக்குது?“ என்று எழுந்து பாத்ரூமுக்குச் சென்றுவிட்டான், ரஞ்சன் அதைக் கஷ்டப்பட்டு முழுங்கிவிட்டு, “நீங்க கிச்சன் கிட்ட போகாம இருக்குறது தான் இங்க இருக்க எல்லாருக்கும் நல்லதுன்னு நினைக்கிறேன்“ என்று சொல்லி கிட்சனுக்கு சென்று சக்கரை எடுத்து வாயில் போட்டு கொண்டான்.
அதை கேட்டு யசோதா முகம் வாட, அதைத் தாங்காத குமரன், “யசோம்மா, இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணலாமா?“ என்று சமாதானம் படுத்த, தீபாவும், “நான் இங்க இருக்கிற ஒரு வாரத்தில் உங்களுக்கு சமைக்கச் சொல்லித் தரேன் அண்ணி. டோன்ட் வொரி!“ என்று சமாதானம் செய்ய, அப்போது அங்கு வந்த அதித்ரா, “யசோம்மா, குழலி எங்கே?“ என்று கேட்டதும் தான் யசோதாவுக்கு தன் மகள் நினைவே வந்தது, “அவ உங்க கூட இல்லையா?“ என்று வீட்டை சுற்றிப் பார்க்க, தீபாவும், “ஆமா, இந்தக் கிருஷ்ணாவையும் ஆளைக் காணோம்!“ என்று தேட, அங்கு வந்த ஆதி, “கிருஷ், ஏதோ கிச்சன்ல இருந்து எடுத்துட்டு மாடிக்குப் போனானே, அவன் இன்னும் கீழ வரலையா என்ன?“ என்று சொல்லிவிட்டு அதித்ரா மற்றும் வேந்தனுடன் அமர்ந்து கொள்ள,
தீபா, “இவனுக்கு இங்க வந்தா இதே வேலையா போயிருச்சு!“ என்று திட்டியபடி மாடி ஏற, அவளுடன் சேர்ந்து சுடர் மற்றும் யசோதாவும் சென்றனர். அங்கு மாடியில் ஒன்பது வயது கிருஷ்ணா, ஏழு வயது நிரம்பிய குழலிக்கு உணவு ஊட்டிவிட்டபடி கதை பேசிக்கொண்டு இருக்க, இவர்களைப் பார்த்த தீபா, “கிருஷ்ணா…” என்று அவன் காதை திருகியபடி, “வீட்டில நான் தான் உனக்கே ஊட்டி விடணும். நீ அவளுக்கு ஊட்டி விடுறியாடா?“
அதற்கு கிருஷ்ணன் கத்தியபடி, “ காதை விடு ம்மா …நானா உங்களை ஊட்டிவிடச் சொன்னேன்? உங்க வேலை முடியணும்னு எனக்கு வேகமா ஊட்டிவிட்டுட்டு போங்கம்மா.” “டேய் நான் ஊட்டிவிடணும் தானேடா நீ பொறுமையா சாப்பிடுவ. இப்போ என்னன்னா மாத்தி சொல்றியா?” என்று இருவரும் பதிலுக்குப் பதில் பேச, யசோதா, “எப்ப பாரு அப்பா தான் இவளுக்கு ஊட்டிவிடணும். நான் ஊட்டிவிட்டா கூட சாப்பிட மாட்டா. ஆனா இன்னைக்கு பாத்தா முழுக்க அவ அப்பா கிட்டயே வரல்லை. இந்தக் கிருஷ்ணா வந்தாலே போதும் இவளுக்கு அம்மா அப்பான்னு எல்லாரையும் மறந்துடுவா.” அதைக் கேட்ட குழலி, “ அம்மா …கிருஷ் எப்பவாவது தானே வர்றான் ம்மா . அவன் வரும்போது மட்டும் அவன் ஊட்டிவிடட்டுமே. ஏன் எல்லாரும் அவனை அதுக்கு போய்த் திட்டுறிங்க?” என்று சப்போர்ட் செய்ய, இதைப் பார்த்து இருபக்கமும் மறுப்பாகத் தலை அசைத்த சுடர், “ஏன் நாம இன்னைக்கு நைட் மாடியில சாப்பிடக்கூடாது? கிளைமேட் வேற சூப்பரா இருக்கு” அதைக் கேட்ட தீபாவும், “ஆமா கிளைமேட் நல்ல தான் இருக்கு , இங்கேயே சாப்பிடலாம்” என்று கிருஷ்ணாவிடம் திரும்பி, “நாங்க வரும் வரை வெயிட் பண்ணுங்க, சாப்பிட்டு முடிச்சிடாதிங்க ” என்று அனைவரையும் அழைத்து வர மூவரும் சென்றனர்.
இவர்கள் ஓடிச் செல்வதைப் பார்த்துக் குழலியும் கிருஷ்ணாவும் சிரித்தபடி அந்த வானத்து நட்சத்திரங்களைப் பார்த்து, “எவ்வளவு இருட்டாக வானம் இருந்தாலும் இந்த நட்சத்திரங்கள் அதை வெளிச்சமா ஆக்கிடுதுல்ல?” என்று கிருஷ்ணா குழலியைப் பார்த்துச் சிரிக்க, அவளும் பதிலுக்கு, “ஆமா, அப்படியே நம்ம வாழ்க்கை மாதிரி” என்று இருவரும் சிரித்தபடி மாறி மாறி பார்த்துக் கொண்டனர்.
வாழ்வில் விடியல் இல்லாத இரவுகள் பல இருந்தாலும் ஒரு நாள் விடியல் வந்தே தீரும் என்ற நம்பிக்கையுடன் விடியலை தேடி முற்றும்.