குழலி இந்த டைரி எழுதக் காரணமே உனக்காகத்தான். என்னைப் பற்றி எதுவும் தெரியாமலே என்னை லவ் பண்ணும் குழலிக்கு நான் யார், நான் உன்னை எப்படி எல்லாம் லவ் பண்ணேன் அப்படின்றதைச் சொல்லத்தான் இந்த டைரி. இந்த டைரியை எப்போ உன்கிட்ட தரப்போறேன்னு தெரியலை. ஆனா இதை படிச்சிட்டு என்னை வெறுத்துறாத குழலி என்று அந்த டைரியின் முதல் பக்கத்தில் எழுதி இருந்தது, அதன் கீழ் குழலி மற்றும் மாதவனின் கல்யாணப் புகைப்படமும் ஒட்டி இருந்தது. இதைக் குரல் நடுங்கப் படித்த தீபாவால் அடுத்த பக்கம் திருப்பக் கைகள் நடுங்கின. அதைப் பார்த்த ரஞ்சன் தீபாவிடம் இருந்து அந்த டைரியை வாங்கி அனைவருக்கும் சத்தமாகப் படித்துக் காட்டினான். அதைப் படிக்கப் படிக்க சுடரும் யசோதா அருகில் வந்து நின்று கொண்டாள். ரஞ்சன் அடுத்த பக்கம் திருப்பிப் படிக்கத் தொடங்கினான்.
அன்புள்ள குழலிக்கு,
எங்க வீட்டில நான் தான் ஃபர்ஸ்ட் பையன். எங்க அப்பா நார்த் இந்தியாவ சேர்ந்தவங்க, அம்மா தமிழ். ரெண்டு பேருக்கும் லவ் மேரேஜ் தான். அவங்களைப் பார்த்துத்தான் லவ் பண்ணக் கத்துக்கிட்டேன். எங்க ஃபேமிலி ஒரு டாக்டர் ஃபேமிலி. லக்நவ்வில் ஒரு ஹாஸ்பிட்டல் வச்சிருக்கும். எனக்கு அப்புறம் ஒரு தம்பி, அப்புறம் ஒரு தங்கச்சி.
என் 12 வயசில் தங்கச்சி பிறந்ததும் எங்க அம்மா இறந்துட்டாங்க. அப்புறம் நான் தான் அவளை வளர்த்தேன். அம்மா போயிட்ட பிறகு எங்க அப்பா ஹாஸ்பிட்டல்லயே ரொம்ப நேரம் இருக்க ஆரம்பிச்சிட்டாங்க. தம்பியும் அமைதியாகிட்டான். சோ நானும் என் தங்கச்சின்னு தான் வாழ்ந்தேன். அப்பாவுக்கு நான் டாக்டரா ஆகணும்னு ஆசை. ஆனா எனக்கு அதுல இன்ட்ரஸ்ட் இல்லை. எனக்கு தமிழ் லிட்டரேச்சர் படிக்கணும்னு ஆசை. அம்மா இருந்த வரை தமிழ் கவிதை, கதைன்னு சொல்லுவாங்க. அம்மா போயிட்ட பிறகு நான் என் தங்கச்சிக்கு தமிழ் சொல்லித் தரப் போய் எனக்கு அது மேல ஒரு ஈர்ப்பு ஆனா அதை அப்பா புரிஞ்சிக்கல.
ஒன்னு படிச்சா டாக்டர் க்கு படிக்கனும் இல்லன பிசினஸ் பத்தி படிச்சி ஹாஸ்பிட்டலை பாத்துக்கனும்னு சொன்னாங்க. வேற வழி இல்லாமல் தான் பிசினஸ் பத்தி படிச்சி முடிச்சேன். அப்பா உடனே ஆஸ்பிட்டல் பொறுப்பை தூக்கித் தந்துடாங்க, அப்போதான் ஒன்னு யோசித்தேன். ஒருமுறை அந்த பொறுப்புக்குள் போய்ட்டால் வெளிவர முடியாது என்று அப்பா கிட்ட ஒரு டூ மந்த் பர்மிஷன் கேட்டேன், தமிழ்நாடு முழுக்க சுத்திப் பார்க்க. அப்பாவும் ஓகே சொல்லிட்டாங்க. நான் ரொம்ப ஹாப்பி.
அன்புள்ள குழலி,
ஒரு மாதம் முழுக்க தமிழ்நாடு நல்லா சுத்திப் பார்த்தேன். அப்படியே டிராவல் பண்ணி நான் வந்த இடம் தான் கன்னியாகுமரி, என் தேவதையை முதன்முதலாக பார்த்த இடம். கன்னியாகுமரி பீச், மாலை 5:30 மணி. சூரிய அஸ்தமனத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். அப்போது என் முன்னாடி கொஞ்சம் பசங்க ஓடி விளையாடிட்டு இருந்தாங்க . அதில்தான் என் தேவதையைப் பார்த்தேன்.
முதலில் உன் முடிதான் என்னைப் பார்க்க வைத்தது. எங்க அம்மாவுக்கு இருந்த மாதிரி நீளமா இருந்தது. அந்த முடிக்கு சொந்தக்காரி யாருன்னு பார்க்க உன் முகத்தைப் பார்த்தேன். அழகா சிரிச்சிட்டு பசங்க கூட விளையாடிட்டு இருந்த அப்போ எனக்கு ஒரு கவிதை தோனிச்சி. அது என் முதல் கவிதையும் கூட.
பிஞ்சு கால்களால் தங்க மணலில் ஓடும் என் தேவதையே, என் உயிரை உன் கால் அருகே வைத்து நிற்கின்றேன். அதை மிதித்தாவது சென்றுவிடேன் நான் உயிர் வாழ்ந்து விடுவேன்.
இந்தக் கவிதையை யோசித்தபடி உன்னைத்தான் ரொம்ப நேரம் பார்த்திட்டுருந்தேன். நீ விளையாடி முடிச்சி உன் தம்பிக்கு சாப்பாடு ஊட்டி விட்டு டிரஸ் மாற்றி நல்லா பார்த்து கிட்ட . கொஞ்ச நேரத்துல இருட்டத் தொடங்கினதும் நீங்க கிளம்பினீங்க. நீ அங்க இருந்து போகிற வரை கண் இமைக்காம பார்த்துக்கொண்டே இருந்தேன். அப்படியே உங்க பின்னாடியே நடந்து வெளிய வந்தேன். எல்லாரும் ஒரு வேன்ல ஏறினீங்க. அப்போ என்ன யோசிச்சேன்னு எனக்கு சத்தியமா தெரியல. அந்த நம்பரை நோட் பண்ணி வச்சுக்கிட்டேன். எனக்கே நான் பண்றது தப்புன்னு புரிஞ்சது. ஆனா என்னால என்னையே கண்ட்ரோல் பண்ண முடியல. அதோட விளைவு மறுநாள் உன்னை தேடி நீ இருக்கிற இடம் வந்தேன்.
அன்புள்ள குழலி,
உன்னைப் பத்தி தேடி வந்து விசாரிச்சேன். உன் பேர் குழலின்னு சொன்னாங்க. அப்போ என் மனசுல தோணினது இது தான் நீ இந்த ‘கிருஷ்ணா ஓட குழலி’ன்னு. அப்புறம் மேலும் உன்னைப் பத்தி முழுசா விசாரிச்சேன். அப்போதான் உன் அம்மா அப்பா பத்தி தெரிஞ்சது. எனக்கு அவங்க மேல ரொம்ப கோபம். அப்போதான் ஒரு முடிவு எடுத்தேன். உனக்கு அம்மா அப்பா எல்லாம் நான் தான்னு முடிவு எடுத்த நிமிஷம் எங்க அப்பா முன்னாடி தான் போய் நின்னேன்.
அன்புள்ள குழலி,
எங்க அப்பா கிட்ட நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன்னு சொன்னேன். அதைக்கேட்டு எங்க அப்பா கோபமா எழுந்து போயிட்டாங்க. நான் யாரை லவ் பண்றேன், எங்க பார்த்தேன் எதுவும் கேட்கல. எனக்கு அப்போ ஒன்னும் புரியல. எங்க அப்பா லவ் மேரேஜ் தான். சோ நம்ம லவ்வுக்கு ஒத்துப்பாங்கன்னு தான் நினைச்சேன். ஆனா அங்க நடந்ததே வேற. நான் திருப்பி அப்பா கிட்ட பேசலாம்னு போனேன். அங்க அப்பா என் தம்பி கூட ஏதோ பேசிட்டு இருந்தாங்க. முகத்தை கோபமா வச்சிட்டு நான் என்னதான் அப்படி பேசுறாங்கன்னு கிட்ட போய் கேட்டேன். அவங்க பேசினதைக் கேட்டு என் அப்பா தம்பியா இவங்கன்னு என்ன நினைக்க வச்சிட்டாங்க. என் தம்பி சொல்றான், “அந்தப் பொண்ணு யாருன்னு கேளுங்கப்பா. நம்ம அவனுக்குத் தெரியாம அந்தப் பொண்ணை ஆள் வச்சுப் போட்டுடலாம். அந்தப் பொண்ணு இல்லைன்னா அவன் நீங்க சொல்ற பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிப்பான்னு.” அவன் பேசினதைக் கேட்டு ஒரு நிமிஷம் எனக்கு என்ன பண்ணத் தெரியல. அப்புறம் நான் அங்கிருந்து அவங்களுக்குத் தெரியாம என் ரூம் போயிட்டேன். அங்கிருந்து ரொம்ப யோசித்தேன். உன்னைப் பத்தி அப்பா கிட்ட சொல்லாததுக்கு சந்தோஷம் பட்டேன். நீ இல்லாம வாழ முடியுமான்னு யோசித்தேன். நீ நினைக்கலாம், எப்படி பார்த்த கொஞ்ச நேரத்துல லவ்ன்னு. நானும் அதைத்தான் யோசித்தேன். உன்னை மறந்துடுவேன்னு நினைத்தேன். சோ, உன்னைப் பத்தி மேல எதுவும் பேசல. எங்க ஹாஸ்பிட்டல பார்த்துக்கிட்டேன். ஆறு மாசம் உன்னை மறக்க முயற்சி பண்ணி அதுல தோத்து உன் நினைவிலேயே வாழ ஆரம்பித்தேன். ஒரு வருஷம் ஆச்சு. எங்க அப்பா ஒரு பணக்காரப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கச் சொன்னாங்க. உன் நினைவோடு வாழ்ந்துட்டு இருக்க என்னால எப்படி இன்னொரு பொண்ணை ஏத்துக்க முடியும் சொல்லு குழலி. அதான் நான் வேலை பார்த்த ஒன் இயர் சம்பளத்தை மட்டும் எடுத்துட்டு உன்னைத் தேடி வந்துட்டேன். எந்தத் தைரியத்துல வந்தேன்னு தெரியல. இங்க வந்து உங்க தெருவிலேயே வீடு பார்த்து நீ வேலை பார்க்குற எக்ஸ்போர்ட் கம்பெனியிலயே ப்ராடக்ட் வாங்கி பிசினஸ் ஆரம்பிச்சு எல்லாம் ஓகே ஆகிட்ட அப்பறம் உன் கிட்ட பேச வந்தேன். நீ முகத்தைக்கூட பார்க்கல அப்படியே திரும்பி கூட பாக்கம போய்ட அப்போலாம் எவ்வளவு ஃபீல் பண்ணேன் தெரியுமா.
அன்புள்ள குழலி,
ஒரு வருடம் என் பேரு என் ஊரு எல்லாம் மாற்றி உன் பின்னாடி வந்தா நீ வீட்டில பார்க்குற மாப்பிள்ளையை தான் கல்யாணம் பண்ணிப்பன்னு உன் தோழி கூட பேசுன கேட்கும் போது யாரோ என் தலையிலயே கல்லை போட்ட மாதிரி இருந்துச்சு. அப்புறம் ரொம்ப யோசிச்சி தான் உங்க அம்மா கிட்ட பேச ஆரம்பிச்சேன். அவங்களுக்கு உதவி எல்லாம் பண்ணி காக்கா பிடிச்சி கடைசியில உன்னை பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொன்னேன். அவங்களும் அவங்க கணவருக்கு வேலை வாங்கித் தரச் சொன்னாங்க. நானும் செஞ்சேன். உன்னை கல்யாணமே பண்ணி வச்சிட்டாங்க. என் வாழ்க்கையிலேயே நான் ரொம்ப சந்தோஷமா இருந்த நாளும் அதுதான். ரொம்ப பயந்த நாளும் அதுதான் நம்ம கல்யாண நாள் . எங்க நான் அப்பா அம்மான்னு கூட்டிட்டு வந்தவங்க சொதப்பிடுவாங்களோன்னு பயந்து பயந்து இருந்தது இருக்கே இப்போ நினைச்சா கூட எப்படி சமாளிச்சனோ.
அன்புள்ள குழலி,
நான் முதல்ல நினைச்சது நான் கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்னு. ஆனால அது இல்லை. நீ கிடைக்க தான் நான் கொடுத்து வச்சிருக்கணும்னு இப்போ நினைக்க வச்சிட்ட குழலி. உன் கூட வாழ்ந்த ஒவ்வொரு நிமிஷமும் எங்க கணவோன்னு நினைக்குற அளவு சந்தோஷமா வாழ்ந்தேன் அப்படி இது கனவவே இருந்தாலும் இது கலையாம இருக்க வேண்டிக்கிறேன்.
அன்புள்ள குழலி,
நம்ம வாழ்க்கையை ஸ்டார்ட் பண்ணும் போது எனக்குள்ள ஒரு முள் குத்திக்கிட்டே இருந்துச்சு. இப்படி பொய்யா உன் கூட வாழ்றேனேன்னு. ஆனா என் மனைவி புத்திசாலின்னு நிறுப்பிச்சிட்டா. மூணு மாதத்திலேயே என் அம்மா அப்பா அவங்க இல்லை. நான் உன்கிட்ட எதையோ மறைக்கிறேன்னு கண்டுபிடிச்சிட்ட. அப்படித் தெரிஞ்சும் நீ என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்கல குழலி. ஏன் கேட்கல குழலி? அப்படி நீ கேட்டிருந்தாலும் சொல்லியிருக்க மாட்டேன் தான். எங்க என் குடும்பத்தை பார்க்கணும்னு அவுங்க கிட்ட கூட்டிட்டு போயிடுவியோன்னு பயம். அவுங்க உன்ன எதாவது பண்ணிரு வாங்களோன்னு பயம் அதனால தான் நான் என்ன பத்தி எதுவும் சொல்லல.
அன்புள்ள குழலி,
தீபா பிறந்து மூனு மாதம் ஆகுது. என் குழலி ரொம்ப சந்தோஷமாக இருக்கிறா. ஆனா நம்மால் இனிமேல் இங்கு இருக்க முடியாது. என் அப்பா என்னைத் தேடி இங்கு வராங்க. இத எப்படி உன் கிட்ட சொல்லி உன்னை கூட்டிட்டுப் போக?
அன்புள்ள குழலி,
நான் கஷ்டப்படுற மாதிரி எதுவுமே பண்ண மாட்டியா? குழலி, நான் கூப்பிட்டதும் ஏன் எதுக்குன்னு எதுவும் கேட்காம என் கூட வந்துட்டா என் குழலி.
அன்புள்ள குழலி,
ரொம்ப வருஷம் ஆச்சி நான் இந்த டைரியை எழுதி. இதை எழுத எனக்கு நேரமும் கிடைக்கல்லை எனக்கு நியபகமும் இல்லை. உன் கூட வாழ்ந்த இத்தனை வருட வாழ்க்கை என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. நமக்குன்னு இரண்டு குழந்தை, எனக்காக நீ, உனக்காக நான். இதில வேறு எதுவும் என் நினைவுக்கு வரல்லை. அதான் இதை எழுதாமலேயே வைத்திருந்தேன். ஆனா இப்பொ இதில கடைசியா ஒன்னு எழுத போறேன் .
நான் என் அப்பாவைப் பார்க்கப் போறேன். அவருக்கு நல்ல வயது ஆகி இருக்கும் நினைக்கிறேன். சோ, கோபம் கம்மி ஆகி இருக்கும். நான் போய் நம்மைப் பற்றிச் சொல்லி எங்களை இதற்குமேல் தேடாதீங்கன்னு சொல்லப் போறேன். இந்தக் கிராமத்தில நாம சந்தோஷமா வாழ்ந்திடலாம். ஆனா நம்ம போண்ணுங்க அவங்க நல்லா படிச்சி பெரிய ஆளா ஆக வேணும். அதற்கு நாம இங்கிருந்து போக வேணும். அதான் என் அப்பா பார்த்துப் பேசி உன்னை, நம்ம பொண்ணுங்கள நான் வாழ்ந்த வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகப்போறேன். நான் ராஜா மாதிரி வளர்ந்த வீட்டில என் பொண்களும் ராணி மாதிரி வாழணும். அதை நான் பார்க்கணும். அதான் போறேன். அங்கு போய்ப் பேசிட்டுத் திரும்பி இங்கு வந்து இந்த டைரியை உன்கிட்ட கொடுத்து என்னை கல்யாணம் பண்ணிக்கிறாயான்னு கேட்கப்போறேன் மாதவன்னா இல்லாம மாதவ் கிருஷ்ணாவ. நீ என்னை ஏத்துப்பியா குழலி? என்று அந்த டைரி முடிந்து இருந்தது.
அதை படித்துவிட்டு ரஞ்சன் மூட போக அதை தடுத்த யசோதா அந்த டைரியின் கடைசி பக்கத்து கொஞ்சம் முன் பக்கம் ஒன்றை எடுத்து காட்ட அதில்
அன்புள்ள கணவனுக்கு,
நான் முதல்ல இந்த டைரியைப் பார்த்துக் கோபப்பட்டேன் தான். ஆனா அந்தக் கோபத்தை என்னால பிடிச்சி தான் வைக்க முடியல்லை. எனக்கே எனக்காக எல்லாத்தையும் விட்டிட்டு இங்க வந்து கஷ்டப்படும் உங்கமேல எப்படி கோபப்பட முடியும்? எனக்கு நீங்க மாதவனாக இருந்தாலும் சரி, மாதவ் கிருஷ்ணாவாக இருந்தாலும் சரி, உங்களைப் பிடிக்கும். எனக்காக எல்லாத்தையும் பார்த்துப் பார்த்துப் பண்ணும் என் கணவரை ரொம்பப் பிடிக்கும். எவ்வளவுன்னா எனக்குப் பிடிக்காத அம்மா சொன்ன உங்களை எனக்குப் பிடித்த காரணத்துக்காகக் கல்யாணம் பண்ணும் அளவு பிடிக்கும். என் பின்னால சுத்துன ஒரு வருடமும் வேறு பெண்ணைப் பார்க்காம, என்னைத் டார்ச்சரும் பண்ணாம, நான் சொன்ன காரணத்துக்காக என்னைப் பெண் கேட்டு வந்த என் கணவரைப் ரொம்ப பிடிக்கும். சரி நானும் பார்க்கிறேன், எப்போ தான் இந்த டைரியை என் கிட்ட தருறீங்கன்னு . நான் எழுதி வைச்சிருக்கத எப்போ தான் பார்க்கறீங்கன்னு பார்க்குறேன். இப்படிக்கு உங்கள் அன்பு குழலி.