ரஞ்சன், குமரன், சுடர் மூவரும் டாக்டர் முன் அவர் தீபாவின் உடல் நிலையை பற்றி தவறாக எதுவும் சொல்லிவிடக் கூடாது என்ற வேண்டுதலுடன் அவரைப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர். டாக்டர் மூவரையும் ஒரு முறை பார்த்துவிட்டுப் பேசத் தொடங்கினார். “தீபா மூனு வருசமா என் கிட்ட ட்ரீட்மென்ட்க்கு வராங்க. ஆனா இந்த மூனு வருசத்தில அவங்க இவர் பெயரைத் தவிர வேறு யார் பெயரையும் ஒரு தடவை கூட சொன்னது இல்லை” என்று ரஞ்சனைப் பார்த்துக் கை காட்டியபடி, “இவர் பெயரைக் கூடத் தெரியாம வாய் தவறிச் சொன்னது தான். அண்ட் அவங்க பார்க்கிற வேலையோ, அட்ரஸோ எதுவுமே க்ளியரா கொடுத்தது இல்லை.”
“அவளைப் பற்றி உங்க கிட்ட நான் வந்து சொல்லிருவேன்னுதான் இப்படிப் பண்ணா. நானும் மூனு வருசமா அவ கிட்ட எப்படி எப்படியோ பேசிப் பார்த்தும் அவ கேட்கல.”
“அப்படி எங்க கிட்ட இருந்து மறைக்கிற அளவு அவளுக்கு என்ன பிரச்சனை?” என்று சுடர் பயந்தபடி கேட்க.
டாக்டர் தீபாவிற்கு நடந்த அனைத்தையும் சொல்லி முடித்து “ தீபாவோட அப்பா அவளை விட்டுப் போனது அப்புறம் அவங்க அம்மா சூசைட் இதுலயே ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸில இருந்த அதுவும் இல்லாம தீபாவை அவ பக்கத்து வீட்டுப் பெண்ணு நளினி மென்டலா மூனு வருசம் டார்ச்சர் பண்ணியிருக்கா. நீ யார் கிட்டயும் பேசக் கூடாதுன்னு. அதோட அவ ஃபிரண்ட்ஸ் மூலமா கண்காணிச்சிட்டே இருந்திருக்காங்க. அதுலதான் அவங்களோட ஸ்ட்ரெஸ் டிப்ரஷன் எல்லாம் சேர்ந்து சோசியல் அன்க்ஸைட்டி டிஸ்ஆர்டரா மாறியிருக்கு. அதோட அவங்க தங்கச்சி வாழ்க்கை இப்படி ஆனதுக்கு அவங்களும் காரணம்னு கில்ட், அம்மா இல்லாம மாமா படுற கஷ்டம்னு எல்லாம் பார்த்த தீபா, அவுங்க படுற கஷ்டத்தை உங்க கிட்ட சொல்லாம மறைச்சிருந்திருக்காங்க. அது மட்டும் இல்லாம எங்க நளினி நம்மளை மிரட்டுற மாதிரி சுடரையும் ஏதாவது பண்ணிருவாளோன்னு பயம் எல்லாம் சேர்ந்து அவங்க எடுத்த முடிவுதான் தனியா வீடு எடுத்து தங்குறது. ஆனா அந்த முடிவுதான் அவங்களோட டிஸ்ஆர்டரை அதிகம் படுத்தி ஒரு ஸ்டேஜில் அவங்க அம்மா மாதிரி சூசைட் பண்ண ட்ரை பண்ண வச்சிருக்கு “ அதைக் கேட்டு மூவரும் பயந்து டாக்டரைப் பார்த்து ஒரே சமயத்தில் “டாக்டர் “ என்று சொல்லியிருந்தன.
“பதறாதீங்க சுசைட்க்கு டேப்லெட்டை வாங்கி சாப்பிட போகும் போது சுடர் குமரன் சுடர் குழந்தை நியாபகம் வந்து வாழணும்னு ஆசை வந்திருக்கு. ஒரு குடும்பமா வாழணும்னு வந்த ஆசையில தான் எங்க கிட்ட வந்தா இப்ப வரை அவ பயத்துல இருந்து வெளி வர முயர்ச்சி பண்ணிட்டு இருக்கா ”
“தீபா பயப்படுற ஒரு விஷயம்னா அது அவளோட தங்கச்சி பத்தி எங்க நளினிக்குத் தெரிஞ்சி அவ எல்லார் கிட்டேயும் தன்னுடைய அம்மாவைப் பத்தி தவறா சொன்ன மாதிரி சொல்லிவிடுவாளோன்னு நினைக்கிறாங்க. எங்க தன்னுடைய தங்கச்சியும் அம்மா செஞ்ச தவறைச் பண்ணி தன்னை விட்டுப் போய்டுவாளோன்னு பயப்படுறாங்க. அதை நீங்க இல்லை அப்படி நான் பண்ண மாட்டேன்னு புரிய வைக்கனும். உங்க அம்மா மாதிரி நீங்க இல்லைன்னு தீபாவுக்கு நீங்க காட்டனும். நளினி வந்தாலும் உங்களை ஒன்றும் செய்ய முடியாதுன்னு நீங்க புரிய வைக்கணும்.“
“அவளுக்குப் புரிய வைக்க நான் என்ன செய்யனும் டாக்டர்?“
“நீங்க பழைய சுடரா மாறனும்.“
“இல்லை, எனக்குப் புரியல்லை. என்ன சொல்ல வரிங்க டாக்டர்?“
“நீங்க செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவிச்சது போதும் சுடர். அம்மா அப்பா இல்லாத ஒரு பெண்ணை மிஸ்யூஸ் பண்ண அவன் தான் பயந்து வாழனும் நீங்க இல்லை. ஒன்று புரிஞ்சிகோங்க சுடர். நீங்களும் இதுல ஒரு விக்டிம் தான். நீங்கள் தப்பு செய்யல்லைன்னு நீங்க முதல்ல நம்புங்க. அந்தக் கில்ட்டுல இருந்து வெளியே வந்து பழைய சுடரா சந்தோஷமாக இருங்க. அதைப் பார்த்தாலே போதும் உங்க அக்கா பழையபடி ஆகிவிடுவாங்க.“ இதைக் கேட்டு கண்கலங்கியபடி சரி என்று தலையை ஆட்டினாள் சுடர்.
இவை அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த குமரன் உடைந்து நெருங்கி ஒரு அழுத்தத்துடன் அமர்ந்திருப்பதைப் பார்த்த டாக்டர் “குமரன்” என்று அழைக்க, தலைகுனிந்திருந்த குமரன் நிமிர்ந்து டாக்டரைப் பார்த்தான். அவனைப் பார்த்து சிரித்த முகமாக டாக்டர்,
“தீபா அவளைப் பற்றிச் சொல்லும்போது நான் நேரில பார்க்கணும்னு நினைச்சது உங்களைத்தான்” என்றார்.
அதைக் கேட்டு புருவம் சுருக்கி குழம்பிய முகத்துடன் குமரன் பார்க்க, டாக்டர்
“அம்மா அப்பா இல்லாத டீன்ஏஜ் வயசு இரண்டு பெண்கள இந்த உலகம் எப்படி நடத்தும், எப்படிப் பார்க்கும் எனக்குத் தெரியும். சொந்தக்காரங்களே பொண்ணுன்னு பயந்து தள்ளிப் போற காலம் இது. அனா நீங்க கல்யாணம் பண்ணிக்காம தன் அக்கா பொண்ணுங்களை தன்னோட அக்கா இடத்திலிருந்து பார்த்துக்குறது இருக்கே, சூப்பர் குமரன், நீங்க!” என்று சொன்னதைக் கேட்டு ஒரு கசந்த சிரிப்புடன்
“நான் இவங்களை நல்லா பார்த்திருந்தேன்னா, இவங்க ஏன் இப்போ இந்த நிலைமையில இருக்கப் போறாங்க? எங்க அக்கா என்மேல் வச்ச நம்பிக்கைக்கு தகுதியில்லாதவன் டாக்டர் நான் ” என்று தலை குனிய,
“குமரன், நீங்க சுடர், தீபாவுக்கு மாமா மட்டும்தான். உங்களால எப்பவும் அவங்க அப்பா அம்மா இடத்தை ஃபில் பண்ண முடியாது. அண்ட் உங்க அக்கா வச்ச நம்பிக்கைக்கு முழு தகுதியானவங்க நீங்க மட்டும்தான். நீங்க இல்லைன்னா தீபா இப்படி நல்லா படிச்சு ஒரு நல்ல பொசிஷன்ல இருந்திருக்க மாட்டா. அண்ட் சுடரும் தன் பையனோட ஒரு சேஃபான ஒரு இடத்துல பயம் இல்லாம இருந்திருக்க மாட்டா. எல்லா தப்பையும் உங்க மேல போடாதீங்க. உங்களால முடிஞ்சதை நீங்க பண்ணியிருக்கீங்க. இனிமேலும் பண்ணப் போறீங்க” என்று சிரித்தபடி பேசியவரைப் பார்த்து சுடர் “தீபாவை நாங்க எப்போ கூட்டிட்டுப் போலாம் டாகடர்?” என்று கேட்க
“அது இப்போதைக்கு முடியாது. முதல்ல அவங்க ஆபீஸ்ல அந்த ரூமரை பரப்பியது நளினி இல்லைனு ப்ரூவ் பண்ணுங்க. அது ப்ரூவ் ஆகுற வரை தீபா அவங்களை அவங்களே காயப்படுத்திக்க வாய்ப்பு அதிகம். சோ, அது வரை அவங்க இங்கதான் இருந்து தான் ஆகணும்.“
அதைக் கேட்டு என்ன செய்ய என்று முழித்த குமரன் சுடரைப் பார்த்து ரஞ்சன், “அதை நான் பார்த்துக்கறன். நீங்க பயப்படாம தீபாவை ஃபர்ஸ்ட் நல்லா பாருங்க“ என்று முகத்தைச் சாந்தமாக வைத்தபடி சொல்ல, அதற்குக் குமரன் ரஞ்சனிடம், “தேங்க் யூ சார்“ என்று நன்றி கூற. அதற்கு ஒரு சின்ன தலை அசைப்பு கொடுத்துவிட்டு டாக்டரிடம் திரும்பி,
“நான் உங்ககிட்ட தனியா பேசணும் டாக்டர்“ என்று ரஞ்சன் டாக்டரைப் பார்த்தான். அதற்கு டாக்டரும், “சரி, நீங்க போய் தீபாவை பாருங்க“ என்று இருவரையும் போக சொல்ல , ரஞ்சனைத் திரும்பி திரும்பி பார்த்தபடி குமரன் வெளியே சென்றான்.
வெளியே சென்ற குமரன் சுடரிடம், “சுடர், இவர் நம்ம மனோ மச்சான் தானே? இவர் இங்க என்ன பண்றாரு? தீபா மயங்கி விழுந்தது எப்படி இவருக்குத் தெரியும்?“ என்று கேட்க, அதற்கு சுடர், “உங்களுக்கு யார் சொன்னா தீபா மயங்கி விழுந்ததை? அது நம்ம புனிதா சொன்னா.“
“புனிதா சித்திக்கு எப்படி தெரியும் மாமா?“
“அது தெரியலையேம்மா.“
“அப்போ இங்க வந்து என்ன தான் பண்ணீங்க மாமா?“
“அது தீபா பத்தி யோசிச்சி இருந்ததுல இது எதுவும் கேட்கல “ என்று பேசியபடி ரூம் வாசலுக்கு வர அங்கு கார்த்திக் பேந்த பேந்த முழித்தபடி இருக்க அவனைப் பார்த்த குமரன்
“ தம்பி நீங்க யாரு அப்ப இருந்து இங்க தான் இருக்கீங்க கேட்க மறந்துட்டேன் “ என்று கார்த்திக்கை பார்த்து கேட்க அதற்கு அவன்
“ நான் தீபா மேம் ஜூனியர் நான் தான் மேமை அட்மிட் பண்ண சாருக்கு சொன்னதும் நான் தான் இப்போ மேம் எப்படி இருக்காங்க எந்தப் பிரச்சனையும் இல்லையே “என்று வேகமாக பேசயவனை பார்த்து குமரன்
“தீபா நல்லா தான் இருக்கா இப்போ அது இருக்கட்டும் தீபா மயங்கி விழுந்ததுக்கு நீங்க ஏன் அந்த சாருக்கு கால் பண்ணீங்க “
“அதுவா உங்களுக்குத் தெரியாது சாரும் மேமும் ரொம்பக் க்ளோஸ் “ என்று அவர்களைப் பற்றி மேலோட்டமாக சொல்லிக்கொண்டு இருக்கும்போது அங்கு வந்தான் ரஞ்சன்.
அவனைப் பார்த்து மூவரும் அமைதியாக அதை எதுவும் கவனிக்க நேரமின்றி கார்த்திக்கிடம் வந்து “ கார்த்திக் நீங்க என் கூட வாங்க ஒரு வேலை இருக்கு “ என்று சொல்லியவன் பின் சுடர் குமரனிடம் திரும்பி “ நான் வரவரை தீபாவை பத்திரமா பார்த்துக்கொங்க அண்ட் என் கிட்ட புனிதா அத்தை நம்பர் தான் இருக்கு உங்க நம்பரையும் தாங்க எமர்ஜென்சிக்கு யூஸ் ஆகும் “ என்று இருவர் நம்பரையும் வாங்கிவிட்டு கார்த்திக்கை அழைத்துச் சென்றுவிட்டான். ரஞ்சனைப் பார்த்த குமரன் “ என்னம்மா நடக்குது இங்க “
“ என்ன நடந்தாலும் எல்லாம் நன்மைக்குன்னு நினைச்சுக்கோங்க மாமா இப்பவாவது அக்காவ பத்தி தெரிய வந்துச்சே அதுவே போதும் இப்போதைக்கு அக்காவை இல்லை நிலாவை சந்தோஷமா பார்த்துக்கணும் “ என்று குமரனை அழைத்துச் சென்றுவிட்டாள்.
கார்த்திக்கை வெளியே அழைத்துச் சென்ற ரஞ்சன், தீபா ஆபிஸில் அந்தப் பெண்கள் பேசியதைச் சொல்லி, “இந்த ரூமர் பத்தி உங்களுக்குத் தெரியுமா கார்த்திக்?”
“ம்ம்ம் தெரியும் சார். நேத்துதான் எனக்குத் தெரிஞ்சவுங்க சொன்னாங்க. அதைப்பத்தி மேம் கிட்ட பேசணும்னு தான் வந்த. ஆனா அதுக்குள்ள இப்படி ஆகிருச்சி ” என்று வருத்தப்பட்ட கார்த்திக்கின் தோளில் கை போட்டபடி,
“இப்படி ரூமர் யார் ஸ்பிரெட் பண்ணியிருப்பான்னு சந்தேகம் ஏதாவது இருக்கா கார்த்திக்?” அதற்குச் சிறிது நேரம் யோசித்த கார்த்திக், பின் நினைவு வந்தவனாக,
“பாலா சார் மேலதான் எனக்குச் சந்தேகமாக இருக்கு சார். அதான் அந்த மர்டர் கேஸுக்கு எங்க கூட வந்தவர்.”
“ஏன் அவர் மேல மட்டும் சந்தேகம்ன்னு சொல்றீங்க கார்த்திக்?”
“அது நான் இங்க ஜாயின் பண்ண புதுசில எல்லாரும் மேம் பத்தி கேட்டா ஸ்ட்ரிக்ட்ன்னு மட்டும் தான் சொல்லுவாங்க. ஆனா இந்த சார் மட்டும் தான் மேம் மோசமானவங்க, உன்னை வேலையை விட்டுத் தூக்கிடுவாங்க, நீ அவங்க சொல்றபடி நடக்கலைன்னான்னு நிறைய சொன்னாங்க. ஆனா நான் எதையும் கேட்காம மேம் கிட்ட பேசுவேன். அதுகூட அவருக்குப் பிடிக்காது. என்கிட்ட வந்து மேம் கூட பேசாதன்னு சொல்லுவாரு. ஆனா மேம் ரொம்ப நல்லவங்க. கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆனா நல்லா ஹெல்ப் பண்ணுவாங்க. இதை எல்லாம் பாத்து தான் ஏன் இந்த பாலா சார் இப்படி மாத்தி மேம் பத்தி தப்பு தப்பா சொல்றாங்கன்னு தோனும்.” என்று கார்த்திக் சொன்னதை கேட்ட ரஞ்சன்
“அப்போ அவர் வேணும்னு தீபா பத்தி உன்கிட்ட பேசியிருக்காரு” என்று ஏதோ யோசித்துவிட்டு கார்த்திக்கை வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்றான்.