விடிந்தும் விடியாத பனி விழும் காலைப் பொழுது ஒவ்வொரு வீட்டிலும் மெதுமெதுவாக சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. அந்தச் சத்தத்தோடு ரேடியோவில் “தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல… திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நினைப்புல” என்று ஓடிய பாடலுக்கு ஏற்ப வீசிய தென்றலை ரசித்தபடி பால்கனியில் காப்பி குடித்துக்கொண்டிருந்தாள் திபநிலா. தீபா முகத்தில் எப்போதும் இருக்கும் சோகம் இன்று இல்லை; மாறாகப் புன்னகையே இருந்தது. கடந்த இரு நாட்களாக அவள் வாழ்வில் நடப்பதெல்லாம் நல்லது மட்டுமே. அவளிடம் எப்போதும் இருக்கும் தனிமை இப்போதெல்லாம் அவளை விட்டு தூரம் சென்றிருந்தது. இதை நினைத்தபடியே காப்பி குடித்து முடிக்க, போனில் மெசேஜ் வந்த சத்தம் கேட்டு எடுத்துப் பார்த்தாள். ரஞ்சன் தான் மெசேஜ் செய்திருந்தான். “ஹாப்பி மார்னிங் என் சண்டக்கோழி” என்று அனுப்பியிருந்தான். அதைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது அடுத்த மெசேஜ் வந்தது. “குட் மார்னிங் மெசேஜ் பார்த்தா ரீப்ளை பண்றது இல்லையா?” என்று ஒரு சோகமான இமோஜியோடு அனுப்பியிருந்தான். அதைப் பார்த்த தீபா பதிலுக்கு “வர்ஸ்ட் மார்னிங்” என்றும் அதனுடன் ஒரு குத்தும் இமேஜையும் சேர்த்து அனுப்பிவிட்டு வேலைக்கு ரெடியாகச் சென்றாள்.
வேலைக்கு எப்போதும் போல தன் ஸ்கூட்டியில் சென்றாள். அங்கு ஆபிஸை அடைந்ததும் வண்டியை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு மாஸ்க்கை எடுத்து அணிந்தாள். இப்போதெல்லாம் மாஸ்க் அணிவதைக் குறைத்திருந்தாள். வேலை பார்க்கும் இடத்தில் மட்டுமே மாஸ்க் அணிவாள். அவ்வாறு மாஸ்க்குடன் உள்ளே சென்று எப்போதும் போல வேலையைப் பார்க்க அவள் இடத்தில் அமரும்போதுதான் லேப்பில் ரிப்போர்ட் ஒன்று வாங்க வேண்டியது நினைவுக்கு வந்தது உடனே எழுந்து லேப்க்குச் செல்ல மின்தூக்கியிடம் நின்றுகொண்டிருந்தாள்.
அங்கு மின் தூக்கி அருகில் இரு பெண்கள் இவள் வந்ததை கவனிக்காமல் பேசிக்கொண்டு இருந்தனர். அதை முதலில் கவனிக்காத தீபா, ரஞ்சன் என்று அவர்கள் பேசவும் என்ன என்று கவனித்தாள்.
“ஆனா அந்த பொண்ணு இப்படி இருக்கும்னு நினைக்கலடி, பார்க்க அமைதியா இருந்துட்டு என்ன வேலை பார்க்குது பாரு.”
“ஆமா, நான் கூட முதல்ல நம்பல. அப்புறம் நானே கண்ணால பார்த்தேன். அப்புறம் எப்படி நம்பாம இருக்க?”
“நீ நேரில பார்த்தாயா? எப்போ, எங்கே பார்த்த?” “நேத்து மதியம் இந்த கேண்டீன்ல தான் பார்த்தன் அந்த கார்த்திக் எதையோ சொல்றதும், அதை கேட்டு இந்த தீபா சிரிக்கிறதும்னு. ச்சீ, என்ன பொண்ணோ!”
“இங்க நடக்குற கண்டராவி தெரியாம இந்த ரஞ்சன் சார் வேற அடிக்கடி வந்து இவ கூட பேசிட்டு போறாரு. பாவம் டி அவரு.”
“ஆமா, ஆமா. ஆனா அவள் எப்படி ஒரே டைம்ல ரெண்டு பேரையும் மெயின்டெயின் பண்றாளோ”
“அதுக்கு கூட வேற திரமைல இருக்கணும்டி“ என்று அந்த இரு பெண்களும் பேசுவதைப் பார்த்து உறைந்து போனாள் தீபா. அதற்கு மேல் அவர்கள் பேசும் எதுவும் அவள் காதில் விழாமல் போனது. அதற்கு பதில் காதில் “உங்க அம்மாவை திட்டப் போறாங்க. உன் தங்கச்சியையும் உங்க அம்மா போன இடத்துக்கு அனுப்பிவிடுவார்கள்” என்று யாரோ திரும்பத் திரும்ப அதையே காதில் சொல்ல, காதைக் கைகளால் மூடியபடி அங்கிருந்து வெளியே ஓடி வந்தாள்.
வெளியே வந்து மூச்சு வாங்க தன் முகத்தில் மாஸ்க் இருப்பதை உறுதிப்படுத்திவிட்டு அவளுக்கு அவளே “ஒன்னும் இல்லை, ஒன்னும் ஆகாது நிலா“ என்று பேசியபடி நிமிர்ந்து பார்க்க அங்கே கார்த்திக் “ஹாய் தீபா மேம்“ என்று சிரித்தபடி தீபா அருகே வர, அவனைப் பார்த்த தீபா சுற்றி சுற்றிப் பார்க்க அங்கு இருக்கும் அனைவரும் இவளையே பார்ப்பது போலத் ஒரு தோன்றம், அதை பார்த்து பின்னோக்கி நடந்தபடி “கிட்ட வராத போ“ என்று கத்த முயன்றும் வார்த்தை எதுவும் வரவில்லை. தொண்டுகுழியில் சிக்கியது போல தொண்டை வலித்தது எவ்வளவு முயன்றும் பேச முடியவில்லை.
கழுத்தைப் பிடித்தபடி பின்னோக்கி நகர்ந்தபடி கலங்கிய கண்களுடன் கார்த்திக்கைப் பார்க்க அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் தீபா அவனைப் பயந்து பார்க்கிறாள் என்று. “மேம் என்ன ஆச்சு மேம்?“ என்று அவன் அருகே செல்ல, வேகமாகப் பின்னோக்கிச் சென்று சுற்றி சுற்றிப் பார்க்க அனைவரும் அவளை நோக்கி வந்து “எல்லாருக்கும் உன்னைப் பத்தி தெரிஞ்சிருச்சி, எல்லாறும் உன்னை விட மாட்டாங்க “ என்று பேசும் குரல் மட்டும் சுற்றிலும் கேட்டது. இதைக் கேட்டு கண்களில் இருந்து கண்ணீர் வர, காதுகளை இறுக்க மூடியபடி வாய்விட்டு கத்த முயன்றாள். ஆம், அவளால் முயல மட்டுமே முடிந்தது. அந்த சத்தம் அதிகமாக அதிகமாக, அதைக் கேட்க முடியாமல் மடங்கி தரையில் அமர்ந்து கண்களையும் காதுகளையும் இறுக்க மூடிக்கொண்டாள்.
தீபா மடங்கிக் கீழே அமரவும் வேகமாக கார்த்திக் வந்து அவளைத் தூக்கத் தோள்களைத் தொட அவள் உடல் ஒரு முறை குலுங்கி அப்படியே கீழே விழுந்தாள். கீழே மயங்கிய தீபாவை பார்த்துப் பயந்து கார்த்திக் தண்ணீர் தெளித்துக் கன்னத்தைத் தட்டி பார்க்க அவள் எழுந்திருக்கவில்லை.
பின் வேகமாக ஆட்டோவில் அருகில் இருக்கும் ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டான். பின் கார்த்திக்கு யாரை அழைக்க என்று ஒன்றும் தெரியவில்லை. பின் ரஞ்சனின் நினைவு வர ரஞ்சனுக்கு வேகமாக அழைத்தான். ரஞ்சன் அப்போதுதான் பைக்கில் எங்கோ சென்று கொண்டிருந்தான். அப்போது பார்த்துத் தொடர்ந்து போன் கால் வர ஒரு ஓரமாய் வண்டியை நிறுத்தி போனை எடுத்துப் பேசினான். “ஹலோ யாரு?”
“சார் நான் கார்த்திக், தீபா மேம்மோட ஜூனியர்.” “அ சொல்லுங்க கார்த்திக், என்ன ஆச்சு?”
“சார், தீபா மேம் மயங்கி விழுந்துட்டாங்க. என்ன எழுப்பியும் அவுங்க எழுந்திரிக்கல அதனால பக்கத்துல இருக்கிற ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணிருக்கோம் சார். கொஞ்சம் வர்றீங்களா?” இதை பதறிய நெஞ்சைக் கண்களை மூடித் திறந்து அமைதிப்படுத்திவிட்டு, “என்ன ஆஸ்பத்திரி?” என்று கேட்டுவிட்டு அடுத்த 10 நிமிடத்தில் அங்கு இருந்தான். வேகமாக தீபாவின் அறையைக் கேட்டுவிட்டு அங்கே சென்று பார்த்தால், அங்கு வெளியே கார்த்திக் பதட்டத்துடன் நின்றிருந்தான். கார்த்திக்கிடம் சென்று, “என்ன ஆச்சு கார்த்திக் தீபாவுக்கு?” என்று பதற்றத்தை மறைக்க முடியாமல் கேட்டான்
“என்னன்னு தெரியல சார் நான் அப்போதான் ஆபீஸ் வந்தேன். மேம் வெளிய நின்னுட்டு இருந்தாங்க. திடீர்னு கழுத்த பிடிச்சிட்டு மயங்கி விழுந்துட்டாங்க“ அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே டாக்டர் வந்தார். வந்தவர் “இங்க பேசன்ட் கூட வந்தவங்க” என்றதும் இருவருமாகச் செல்ல, “ஏதோ பார்த்து பயந்து மயங்கியிருக்காங்க. மத்தபடி நோ இஸ்யூ. இப்போ கண்ணை முழிச்சிருவாங்க. நீங்க போய் பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு டாக்டர் சென்றதும் இருவரும் தீபாவை பார்க்க ரூமுக்குள் சென்றனர், அப்போதுதான் தீபா பொறுமையாகக் கண்கள் திறந்து பார்த்தாள். அவள் முன் ரஞ்சன் மற்றும் கார்த்திக் வந்து நிற்க, இருவரையும் பார்த்த தீபா முதலில் பயந்து சுற்றிச் சுற்றிப் பார்த்தபடி எழுந்தவள், அவள் முகத்தை மறைத்து அவள் கைகளை ஆட்டி இருவரையும் வெளியே போகச் சொல்லி ஏதோ பேச முயல்வதும், அது முடியாமல் போக அவள் கழுத்தை பிடித்து அழுதபடி சுற்றிச் சுற்றிப் பார்பதுமாக இருக்க, இவள் இப்படி செய்வதைப் பார்த்த ரஞ்சன் பயந்து போனவனாக
“தீபா, தீபா! ஒண்ணும் இல்ல. இங்க என்ன பாரு என்னம்மா பண்ற? யாரை தேடுற? யாரும் இல்ல. நாங்க மட்டும்தான் இருக்கோம் பாரு” என்று பேசியபடி கார்த்திக்கிடம் “போய் டாக்டரை கூட்டிட்டு வா” என்று சொல்லிவிட்டு அவள் அருகே செல்ல, கைகளை ஆட்டி “வராதே” என்று செய்கையில் சொல்லி அருகில் இருந்த ஊசியை எடுத்து பிரித்து அவள் முகத்தில் குத்தப் போக, அதற்குள் அவள் கைகளைப் பிடித்து தடுத்த ரஞ்சன்
“தீபா, தீபா! அதைக் கீழே போடு, தீபா, தீபா!” என்று கத்தியபடி அவளிடம் இருந்து அதை பிடுங்கி வீசி எறிந்தான். அதற்குள் அங்கு வந்து இதைப் பார்த்த டாக்டர் வேக வேகமாக ஒரு ஊசியை எடுத்துப் போடப் போக, தீபா யாரையும் அவள் அருகில் வர விடவில்லை. பின் ரஞ்சன் அவளை இறுக்க பிடித்துக் கொள்ள டாக்டர் ஊசியை போட்டார்.
அதைப்போட்டு சில நொடிகளில் மயக்கம் அடைந்தாள் தீபா. அங்கு இருந்த டாக்டர் கார்த்திக் மற்றும் ரஞ்சனிடம்
“இவங்க டிரிட்மெண்ட் ஏதாவது எடுத்துட்டு இருந்தாங்கள முன்னாடி?” அதைக் கேட்டு ரஞ்சன் கார்த்திக்கிடம் “தீபா பேக் எங்க?” என்று கேட்க அதற்கு அவன் “வெளியே இருக்கு சார்” என்றதும் வேகமாகச் சென்று அதிலிருந்து ஒரு மாத்திரை டப்பாவை எடுத்து வந்து டாக்டரிடம் கொடுத்து
“இது என்ன டேப்லட்னு பாருங்க டாக்டர்” என்று கொடுக்க. அதை வாங்கிப் பார்த்த டாக்டர் “மென்டல் ப்ராப்ளம்ஸ் ஃபேஸ் பண்றவங்க எடுத்துக்கிற டேப்லட். அப்போ இவங்க சைக்கியாட்ரிக் ட்ரீட்மெண்ட் போயுடுருப்பாங்கன்னு நினைக்கிறேன். நீங்க அந்த டாக்டர் யாருன்னு பார்த்து அங்கே கூட்டிட்டு போயிடுங்க. அதுதான் பெஸ்ட். அவங்களுக்குத்தான் இவங்களைப் பற்றி நல்லா தெரிஞ்சிருக்கும். ஏன்னா இவங்க திருப்பி முழிச்சு இதே மாதிரி பிஹேவ் பண்ண வாய்ப்பு இருக்கு. சோ அங்கே போறதுதான் பெஸ்ட்” என்று சொன்ன டாக்டரிடம் “எப்போ திருப்பி முழிப்பாங்க?” என்று ரஞ்சன் கேட்க அதற்கு “அது 3 டு 4 ஹவர்ஸ் ஆகும்” என்று சொல்லிவிட்டு டாக்டர் செல்ல உடனே ரஞ்சன் தன் போனை எடுத்து அவனிடம் இருந்த புனிதா நம்பருக்கு அழைத்து நடந்ததை சுருக்கமாகச் சொல்லி
“தீபா பார்க்கிற டாக்டர் பேர் சொல்லுங்க அத்தை” என்று கேட்க அவர் ஒன்றும் புரியாமல் கலங்கிய குரலில் “நீ சொல்லிதான் அவளுக்கு இப்படி பிரச்சனை இருக்குன்னே தெரியும் ப்பா ” என்று உடைந்த குரலில் பேசவும்
“சரி அத்தை அப்போ அவ வீட்டுக்குப் போய் நான் தேடிப் பார்க்கிறேன்” என்று போனை வைத்துவிட்டு கார்த்திக்கிடம் தான் வரும் வரை தீபாவை பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அவன் பைக்கில் தீபா வீட்டை நோக்கிச் சென்றான்.
அங்கு புனிதா அஸ்பத்திரி பெயர் கேட்பதற்குள்ளே ரஞ்சன் போனை வைத்துவிட முதலில் திகைத்து நின்றவள் பின் சுதாரித்து ரஞ்சனுக்கு கால் செய்ய அவன் போனை எடுக்கவில்லை. பின் குமரனுக்கு அழைத்து நடந்ததைச் சொல்லி
“இப்போ ரஞ்சன் தம்பி வருவான். வேகமா வீட்டுக்கு போய் தீபா அறையில டாக்டர் ரசீது ஏதாவது இருக்குதா பாரு”
என்று பதற்றத்துடன் கூற, அதைக் கேட்ட குமரனுக்கு வேர்த்து விறுவிறுத்து, திக்கித் திணறியபடி “தீபா தீபா வந்து எங்க கூட இல்லை. தனியாக வீடு எடுத்து இருக்கிறா” என்று குமரன் சொன்னதைக் கேட்டு “என்ன சொல்றா குமரா? தீபா ஏன் தனியா இருக்கிறா? உங்க கூட இல்லாம?”
“அது புனிதா, அவள் தான் ஆஸ்டல்ல இருந்து தனியா போய்ட்டா.”
“என்ன? ஆஸ்டல்ல இருந்தாளா?”
“அது புனிதா…” என்று குமரன் தயங்க. “டேய்! இப்ப தீபா இருக்கிற வீட்டு அட்ரஸ் சொல்லு. அதுவாவது தெரியுமா? இல்லை அதுவும் தெரியாதா?”
“ஏன் புனிதா இப்படி பேசுறா? தீபா வீடு உன் வீட்டில இருந்து பக்கம் தான் வரும். வாட்சாப்பில அட்ரஸ் அனுப்பி வைக்கிறேன்” என்றதும் சரி என்று புனிதா வைத்துவிட, குமரனும் ஆபிஸில் அனுமதி கேட்டுவிட்டு சுடருக்கு வாய்ஸ் மெசேஜ் ஒன்றைப் போட்டுவிட்டு தீபா வீட்டை நோக்கிச் சென்றான்.
ரஞ்சன் வேகமாக தீபாவின் வீட்டுக்குச் சென்று தீபாவின் பையிலிருந்து எடுத்து வந்த சாவியின் உதவியுடன் வீட்டைத் திறந்து வீட்டைப் பார்த்தவன் ஒரு நிமிடம் அப்படியே நின்றுவிட்டான் வீடு இருந்த நிலையைக் கண்டு. வீட்டில் சொல்லிக்கொள்ளும் வகையில் ஒன்றும் இல்லை நான்கு நாற்காலிகள் ஒரு மேசை தவிர அங்கு எதுவும் இல்லை ஏன் ஒரு போட்டோவே இல்ல கடிகாரமோ என்று சுவரில் எதுவும் மாட்டப்படவில்லை. இதை எல்லாம் பார்த்தபடி உள்ளே நுழைந்தான். அங்கு பால்கனி வழியாக காற்று வீச அங்கே திரும்பிப் பார்த்தான். அங்கு மட்டும் சில பூந்தொட்டிகள், ஒரு நாற்காலி, புத்தகம் படிக்க ஒரு சிறிய மேசை இருந்தது. இதையெல்லாம் பார்த்தபடி “தீபா, எப்படி இவ்வளவு நாள் இந்த வீட்டில் தனியாக இருந்த?” என்று வாய் விட்டு சொல்லிக்கொண்டான்.
அப்போது வாசலில் இருந்து சத்தம் கேட்க திரும்பிப் பார்த்தான். அங்கு புனிதா மற்றும் பாக்கியா நின்றுகொண்டிருந்தனர். இருவருமே வீட்டின் நிலையைப் பார்த்து அதிர்ந்துதான் போனார்கள். இவர்களைப் பார்த்து சுதாரித்த ரஞ்சன், “டைம் இல்லை. தீபா முழிக்குறதுக்குள்ள நாம டாக்டர் பெயரை கண்டுபிடிக்கனும்” என்று தேடத் தொடங்கினான். அவர்களுக்கு சிரமம் வைக்க அங்கு நிறைய பொருட்களும் இல்லை. சீக்கிரமாகவே ஃபைலைக் கண்டுபிடித்தனர். சரியாக அப்போதுதான் குமரனும் அங்கு வந்தான். ஏற்கனவே நொறுங்கிப் போய் வந்த குமரன் அந்த வீட்டின் நிலையைப் பார்த்து இன்னும் நொறுங்கிப் போனான். இதை எதையும் கவனிக்கும் நிலையில் ரஞ்சனும் அங்கு இல்லை. அவன் வேகமாக மருத்துவமனை சென்று தீபாவை டிஸ்சார்ஜ் செய்து அவள் ஏற்கனவே சென்ற சைக்காட்ரிக்ஸ் மருத்துவரிடம் கூட்டிக்கொண்டு சென்றான்.