விடியல் 39

ரஞ்சன் அங்கு அவளை எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் அவளை அப்படி எதிர்பார்க்கவில்லை. அவளைக் கண்டு மயங்கித்தான் போனான் ஒரு நிமிடம். பின் தன் தங்கையின் குரலிலே சுயம் பெற்று, “ஆ.. தேவி அம்மா இந்த ஆரத்தையும் போட சொன்னாங்க“ என்று வாய் மட்டுமே பதில் சொன்னது. கண்ணோ அவளையே பார்க்க, அதைப் பார்த்த தேவி, “அண்ணா இவங்க மனோவோட சிஸ்டர்ஸ் சுடர், நிலா“ என்று அறிமுகப்படுத்தினாள். நம்ம ரஞ்சனோ சுடரைக் காற்றில் விட்டு, நிலாவை மட்டும் ஒரு முறை தனக்குள் சொல்லிப் பார்த்துக்கொண்டான். பின் ஆரத்தைத் தன் தங்கையிடம் கொடுத்துவிட்டு, நிலாவையே பார்த்து எப்படிப் பேச என ஏதோ சொல்லப் போக, அப்போது நிலா கண்களால் சுற்றி இருப்பவர்களைக் காட்ட, அப்போதுதான் சுற்றி அனைவரையும் பார்த்தான்.

அனைவரும் இவனையே குறு குறுவென்று பார்க்க சுதாரித்த ரஞ்சன் “சரி நான் கிளம்புறேன்“ என்று சென்றுவிட்டான். அவன் சென்றதும் அனைவர் பார்வையும் தீபாவை நோக்கி திரும்ப தீபா வராத போனை எடுத்து “இதோ போன் பேசிவிட்டு வர்றேன் “ என்று சென்றுவிட்டாள். புனிதா இவர்களைப் பார்த்து “இவர்கள் இரண்டு பேருக்கும் முன்னாடியே பழக்கம் இருக்குமோ“ என்று யோசிக்க அப்போது சுடர் “அது எப்படி தெரியாம இருக்கும் சித்தி இரண்டு பேரும் ஒரே டிபார்ட்மென்ட்டில தானே வேலை பாக்குறாங்க“ அதைக் கேட்ட தேவி அதிர்ந்து “என்னது அவுங்க போலீஸா“ என்று கேட்க அதற்கு சுடர்

“போலீஸ் இல்லை அண்ணி என் அக்கா ஃபாரன்சிக் ஆபிசரா வொர்க் பண்றா”

“ ஓ… நான் கூட போலீஸ்னு சொன்னதும் ஷாக் ஆயிட்டேன், இவங்க எப்படின்னு “ அதற்கு சுடர் “ ஏன் என் அக்காக்கு என்ன? அவ போலீஸ்னா ஏன் ஷாக் ஆகுறீங்க “

“தப்பா இல்லை சுடர் அது அவங்க வந்ததுல இருந்து எண்ணி ரெண்டு வார்த்தை தான் பேசிருப்பாங்க, போலீஸ்னா நல்லா பேசணும்ல இவங்க வேற பயந்த சுபாவமா இருக்காங்க அதான் செட் ஆகாதுன்னு சொன்னேன் “ என்று தெளிவாக விளக்க அதை கேட்டு சிரித்த சுடர் மற்றும் புனிதாவை என்ன என்பது போல பார்க்க அதற்கு சுடர் “ எங்க அக்காக்கு தைரியம் ரொம்ப அதிகம் அண்ட் அவ எப்படி பேசுவா தெரியுமா? தப்புனா யார் எவர்னு பார்க்க மாட்டா. அவங்களை பேசியே ஒரு வழி ஆக்கிடுவா “ என்று சர்டிபிகேட் கொடுக்க அதை நம்பாத பார்வை பார்த்த தேவியை பார்த்து

 “ இங்க புது இடம்னு அமைதியா இருக்க போல. மத்தபடி நல்லா பேசுவா. ஏன் சின்ன வயசுல நான் லேட்டா வந்தேன்னு ஒரு சார் என்னை அடிச்சிட்டாரு. அவரை பார்த்த எல்லாருக்கும் பயமும் கூட அன அவருக்கே நீங்க அடிச்சது தப்புன்னு எல்லார் முன்னாடியும் பாடம் நடத்தினா இவ “ என்று அவர்கள் சிறு வயது சாகசத்தை சுடர் தேவியுடன் பேசத் தொடங்க இது எதுவும் தெரியாத தீபா “எப்படியோ அங்க இருந்து தப்பிச்சிட்டோம் “ அப்பாடா என்று நெஞ்சில் கைவைத்து திரும்ப அங்கே அவள் முன் ரஞ்சன் அதுவும் அருகில் அவள் கண்களை உற்றுப் பார்த்தபடி நின்று கொண்டு இருந்தான்.

அவனைப் தீடீர் என்று  பார்த்ததும் பயந்து இரண்டு அடி பின்னால் நகர்ந்தாள் தீபா. அவள் நகர்ந்த பின்தான் ரஞ்சனுக்குப் புரிந்தது இவன் தீபாவுக்கு மிக அருகில் சென்றது. அதன்பின் ரஞ்சன் நன்றாக இடைவெளி விட்டு “ஹலோ… நீங்கதானே அன்னைக்கு நான் ரோட்டில் ஹெல்ப் பண்ண பொண்ணு?” அதற்கு தீபா ஆம் என்பதுபோல தலை ஆட்ட “ம்ம்ம் ஆமா உங்களுக்கு தீபான்னு…” என்று ஏதோ சொல்ல வர தீபா அந்தப் பெயரைக் கேட்டு தன் கண்கள் விரியப் பார்க்க அதற்குள் அங்கு வந்த அவள் பெரியம்மா அதவது  மனோவின் அம்மா “நிலா இங்க என்ன தனியா நிற்குற?” என்று அவள் அருகே செல்ல பின்தான் அவள் அருகே நிற்கும் ரஞ்சனைப் பார்த்து “ஓ.. உங்க கூடதான் பேசிட்டு இருக்காளா? நானும் யாரோன்னு வந்தேன். இவ நம்ம மனோவோட தங்கச்சிப்பா, பேரு நிலா. சரி, கொஞ்சம் வேலை இருக்கு. கல்யாணம் முடிந்து பொறுமையாக பேசுவோம்” என்று அங்கு இருக்கும் யாரையும் பேச விடாமல் தீபாவை கையோடு இழுத்துச் சென்றுவிட்டார்.

தீபா மனதில் தன் பெரியம்மாவுக்கு பல நன்றிகள் சொல்லியபடி அவருடன் சென்றாள். பெரியம்மாவுடன் செல்லும்போது ரஞ்சனை திரும்பிப் பார்க்க அவனும் அவளைத்தான் பார்த்தான். அவன் பார்ப்பதைப் பார்த்ததும் தன் கண்களைச் சுருக்கி அவனை பார்த்துவிட்டுத் பார்த்த வேகத்தில் திரும்பிக்கொண்டாள் தீபா. அவள் செய்ததைப் பார்த்துச் சிரித்த ரஞ்சன் “தீபா சொன்னதும் அவ ஏன் அவ்ளோ ஷாக் ஆகணும்? ஒருவேளை நம்ம தீபாவும் இவங்களும் ரிலேட்டிவா இருக்குமோ? அப்போ ஏன் தீபா வரலை? ஒருவேளை எனிமி ஃபேமிலியா இருக்குமோ? அதான் அவங்களை கூப்பிடலையோ?” என்று மண்டையைப் போட்டுக் குழப்பிப் பின் அவனே “ரொம்ப யோசிச்சுக் கன்பியூஸ் ஆகாம அவ கிட்டயே போய்க் கேட்டுருவோம்” என்று ஒரு முடிவுக்கு வந்து தீபாவை இல்லை நிலாவைத் தேடிச் சென்றான்.

தீபாவை கூட்டிச் சென்ற மானோவின் அம்மா “என் தங்கம் எம்புட்டு அழகா இருக்க என் கண்ணே பட்டுறோம் போல.  இப்போ நீ என்ன பன்றனா இப்படி ஏன் கூட நின்னு வரவங்களுக்கு ஒரு வணக்கத்தைப் போடுவியா. பயப்படாத எல்லாம் நம்ம சொந்தம் தான். ஆமா, எங்கே இந்த சுடர்? ஆமா, அவ எங்க இங்க இருப்பா? என் தங்கச்சி முந்தானையைத் தான் பிடிச்சிட்டு புனிதா சித்தினு சுத்திட்டு இருப்பா. எனக்கு என் நிலா தங்கம் போதும். நீ தான் என் பொண்ணு. இந்தப் பெரியம்மாவைத் தேடி வந்திருக்க பாரு“ என்று தீபாவை பேச விடாமல் அவரே பேச, தீபா மனதில் “மனோ நீ ரொம்ப பாவம்டா. எப்படி தான் இந்தப் பெரியம்மாவைச் சமாளிக்கிறாயோ“ என்று யோசித்து முடிக்கும் முன் மனோ அங்கு வந்து நின்றான். தீபாவை பார்த்த மனோ “என் கூட வா நிலா, ஒரு ஹெல்ப் பண்ணணும்“ என்று அவன் அம்மா என்ன எதுக்கு எனக் கேள்வி கேட்டுகொண்டே போக அதை எதையும் கண்டுக்காமல் , “5 மினிட்ஸ்மா“ என்று கூட்டிச் சென்று விட்டான். தீபாவை ஒரு ஓரமாக கூட்டிச் சென்று “ஒரு ஹெல்ப் தீபா உன் அண்ணி நான் கால் பண்ண எடுக்க மாட்டிக்கிறா. நீ என்ன பண்ற?“ என்று தீபாவின் மொபைல் வாங்கி அவன் நம்பரைக் கொடுத்து விட்டு “நேரா பொண்ணு ரூமுக்கு போ. நான் எதார்த்தமா கால் பண்ற மாதிரி பண்றேன். நீ போனை எடுத்து பேசுற மாதிரி உன் அண்ணி கிட்ட போனை குடு“ என்று பிளான் போட, மனோ சொன்ன பிளானைக் கேட்ட தீபா மனோவை மேலும் கீழும் பார்த்து விட்டு தன் தலையை இருபக்கமும் அசைத்தபடி சென்றாள். தீபா சென்று சிறிது நேரம் கழித்து மனோ அவன் போனை எடுத்து தீபாவிற்கு அழைக்கப் போக, அதற்குள் புனிதா சித்தி போன் செய்திருந்தார்.

 “என்ன சித்தி கால் பண்றாங்க “ என்று போனை எடுத்து காதில் வைக்க “ என்னடா ஏதோ பேசணும்னு சொன்னியா தீபா சொன்னா “

“அது சித்தி உங்க கிட்ட இல்லை “

“அப்போ வேற யார் கிட்ட பேசணும் “

“ சித்தி தப்பா சொல்லி அனுப்பிட்டேன் என்ன என்ன அம்மா கூப்பிடுறாங்க நான் அப்புறம் பேசுறேன் “ என்று போனை வைத்துவிட்டான் மனோ. இவர்கள் பேசுவதைப் பார்த்த தீபா வாய்க்குள் சிரித்தபடி இருக்க புனிதா “ என்ன ஏதோ மாத்தி சொல்லிட்டான்னு சொல்றான், இப்போ இருக்கிற பசங்க இருக்காங்களே “ என்று பேச ஆரம்பித்துவிட்டனர்.

தீபா வெளியில் இப்போதைக்கு போகக் கூடாது என்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டாள். இங்கு ரஞ்சனோ நிலாவை மண்டபம் முழுக்கத் தேடி சுற்றி வர அவளை மட்டும் காணவில்லை. மண்டபம் முழுக்கத் தேடி சோர்ந்த ரஞ்சன் மேடை அருகே சென்றான். அப்போதுதான் மனோ மற்றும் தேவியை மேடைக்கு அழைத்து வந்து விழா தொடங்கியது. அங்குதான் தீபாவும் அவள் தங்கையுடன் நின்று கொண்டு இருந்தாள். அவளை பார்த்த ரஞ்சனுக்கு கவனம் முழுக்க தீபா மீதுதான். அவளிடம் எப்படிப் பேச என்று யோசனையுடன் இருந்தான். வேறு யாரிடமும் கேட்கத் தயக்கமாக இருக்க அப்போது பார்த்து தீபா அவள் தங்கையிடம் ஏதோ சொல்லிவிட்டு தனியாகத் தள்ளிச் செல்ல அவள் பின்னே சென்றான் ரஞ்சன். தீபாவோ டவர் கிடைக்காமல் வெளியே செல்லப் போக அங்கே வந்த ரஞ்சன் “நிலா நிலா….” என்று அவளை மறித்து நின்றான். அவனைப் பார்த்த நிலா தடுமாறியபடி அவனை என்ன என்பது போல தன் கையை இறுக்க மூடியபடி நின்றாள்.

 “நிலா நான் தான் அந்த ஹெல்ப் பண்ண போலிஸ் நியாபகம் இருக்கா “ என்று என்ன பேச எப்படி தொடங்க என்று  தெரியாமல் சொன்னதையே சொல்ல

“ம்ம்ம் இருக்கு “ என்று சத்தமாகச் சொல்ல முயன்று அதில் தோற்று சத்தம் இன்றி அவள் உதடுகள் மட்டுமே அசைந்தது. ரஞ்சன் அவள் தலை மேலும் கீழும் அசைவதை மட்டும் வைத்தே அவள் கூற வருவதைக் கணித்தான். இப்படித் தயங்கிப் பேசும் தீபாவை பார்த்து இது வேலைக்காவது நாமா  டேரக்டா கேட்டுருவோம் என்று முடிவெடுத்து

 “ அது உங்களுக்கு தீபான்னு யாரையாவது தெரியுமா “ என்று கேட்கவும் அவளைத் தேடி அவள் பெரியம்மா வரவும் சரியாக இருந்தது. அங்கு வந்த மனோவின் தாய் “ நிலா நீ இங்கதான் இருக்கியா உன்னை எங்கெல்லாம் தேட “ என்று மீண்டும் தோடங்க அப்போது அங்கு இருக்கும் ரஞ்சனை பார்த்து திரும்பி

“தம்பி கல்யாணத்துக்கு வந்திருக்கீங்க, அதுவும் உங்க சொந்த தங்கச்சி வேற. வேலை எதையாவது பார்க்காம இப்படி இவ கூட நின்னு வேலை விஷயமாக பேசணுமா? உங்க போலீஸ் வேலையை அங்க ஸ்டேஷனோட வச்சுக்கோங்க தம்பி இவ  இப்போ மனோ தங்கச்சி மட்டும் தான் அந்த ஏதோ பரன்சிக்கு  சொல்லுவாங்களே சரி ஏதோ ஒன்னு அந்த ஆபிசர் இல்லை  ” என்று பேச, அவர் பேசியதைக் கேட்டு ரஞ்சன் முதலில் புரியாமல் முழித்தான். ஆனால் நிலாவோ தன் பெரியம்மா கையைப் பிடித்து, “பெரியம்மா… வேணாம்” என்று நிறுத்த முயல, அவரோ முழுதாகச் சொல்லி முடிந்தபிறகே நிலா பக்கம் திரும்பி, “என்ன நிலாம்மா…” என்று வேறு கேட்டு வைக்க அவரை  பார்த்து சிரிக்க மட்டும்தான் முடிந்தது. இங்கு இவர் சொல்வதைக் கேட்டு மனதில் கணக்குப் போட்டு, ஒருவேளை தப்பாக இருந்துட்டா என்று உறுதிப்படுத்த மனோ அம்மா பக்கம் திரும்பி, “அத்தை, அப்போ இவங்க பேரு தீபா இல்லையா?”  என்று உறுதி படுத்த கேட்டான்

“என்ன தம்பி இது தெரியாம தான் வேலை பாத்திங்களா? நிலா தீபா இரண்டும் இவ பேருதான். முழுப் பேரு தீப நிலா. நாங்க நிலான்னு  தான் கூப்பிடுவோம்” என்று இலவசமாக முழு தகவலையும் தந்த தன் அத்தையைப் பார்த்து “நீங்கள் சூப்பர் அத்தை” என்று பாராட்ட. இவர்களைப் பார்த்த தீபா, விட்ட பெரியம்மா கிட்ட குடும்ப ஹிஸ்டரியையே வாங்கிடுவான் போல என்று எண்ணி, அவள் இயல்பு மீறி “பெரியம்மா, வாங்க! அங்கே பெரியப்பா கூப்பிடுறாங்க உங்களை” என்று சந்தோஷமாக நைட் பார்ட்டியைப் பற்றி பேசிக்கொண்டிருந்த தன் பெரியப்பாவைப் போட்டுக்கொடுத்துவிட்டு, தீபாவும் நகரப் போக, ரஞ்சன் அவள் கைகளைப் பிடித்தபடி “தீப்ஸ், இது நீயா? சத்தியமாக நம்ப முடியவில்லை. நீ இவ்வளவு சைலன்ட்டாவா? என்னைக் கில்லேன். ஒருவேளை கனவா?” என்று அவனே அவனைக் கிள்ளிப் பின் “ஆ… வலிக்குது அப்போ நிஜம்தான் போலயே. இது தெரியாம கில்ட்டியா வேற ஃபில் பண்ணிட்டு இருந்திருக்கேன். நல்லவேளை இப்பவாவது தெரிஞ்சிச்சே ” என்று தீபாவை பார்க்க, அவள் ரஞ்சனின் கையில் இருந்து அவள் கையை உருவ முயல, அதைப் பார்த்து ரஞ்சன் அதிர்ந்தபடி அவன் வாயில் கை வைத்து “இதுவே நம்ம மாஸ்க் தீபான்னா பேசியே என்னைப் பொலந்துருப்பா. இப்படி அமைதியோ அமைதி, அமைதிக்கெல்லாம் அமைதினு இருந்துருப்பா”  என்று பேச, அதைக் கேட்டு தீபா அவள் கண்களாலேயே கையை எடுக்கும்படி முறைக்க, அதைப் பார்த்து தன்னைப்போல் கையை எடுத்தான் ரஞ்சன்.

தீபா ரஞ்சனைப் பார்த்து முறைத்தபடி செல்ல, “ஏ… உருட்டு தீப்ஸ் செம்மையா இருக்கு!” என்று கத்திச் சொல்ல, அதைக் கேட்டுத் திரும்பிய தீபா அவள் கைகளால் ஒற்றை விரலை நீட்டி மிரட்டியபடி சென்று சுடர் அருகே நின்றுகொண்டாள். மண்டபம் உள்ளே வந்த ரஞ்சன் அங்கு டீஜே மேஷப் சாங் போட்டுக்கொண்டு இருந்த இரண்டு பையன்களிடம் சென்று, “தம்பிங்களா!” என்று ஒருவன் மேல் கை போட. அவன் என்ன என்பது போலப் பார்க்க, சிறிது நேரம் கழித்து மேஷப் சாங் பதிலாக, “கண்ண கண்ண உருட்டி உருட்டி என்ன மிரட்டினா நான் என்ன சிறுபிள்ளையா ….” என்று பாடல் ஒலிக்க, அதைக் கேட்ட தீபா புருவம் சுருக்கி யோசித்து பின் ஏதோ தோன்ற அந்தப் பாட்டு போட்ட இடத்தைப் பார்க்க, அங்கு ரஞ்சன் பாட்டு போடும் பையனின் தோளில் கை போட்டபடி தீபாவை பார்த்து அவன் கண்களை உருட்டிக் காட்ட, அவனைப் பார்த்த தீபா முகம் சுருக்கிப் பின் தன் முகத்தைத் தோளில் இடித்தபடி திரும்பிக்கொண்டாள். இப்படி இங்கே அனைவரும் இருக்க, அங்கு ஒருவன் சுடர் லெஹங்கா அணிந்து குமரனுடன் எடுத்த புகைப்படத்தைப் போனில் ஏக்கத்துடன் பார்த்தபடி இருந்தான். அவன் வேற யாரு, நம்ம பிரின்சிபால் ஆதியே தான்.