விடியல் 34

குழலி சந்தனம் ஆட்டோவில் வந்து இறங்கி வேக வேகமாகச் சென்று தன் பர்சை எடுத்து வந்து மீண்டும் ஏறிச் செல்வதைக் கீழ் வீட்டு ஓனர் அம்மா பார்த்துவிட்டு அங்கிருந்து படம் பார்த்துக்கொண்டிருக்கும் நளினியிடம் “ஏண்டீ இந்தக் குழலிப் பொண்ணு இந்நேரம் வேலையிலே  இல்லாம இவன் கூட ஆட்டோல போது?“ அதற்கு நளினி தன் அம்மாவை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்துப் பின் “உனக்குத் தெரியாதா ம்மா? இந்த அக்கா அடிக்கடி இந்த அண்ணா வண்டியில்தான் போகும். நானே நிறைய வாட்டி ஸ்கூல் போகும்போது பார்த்திருக்கேன்.“ இதைக் கேட்டு ஆர்வத்துடன் நளினி அருகில் அமர்ந்து

 “அப்படியா? நீயே பார்த்தியா? நான் கூட இந்தப் பொண்ணு அவங்க அம்மா மாதிரி இல்லைன்னு நினைச்சேன். ஆனா கடைசில இவளும் நூலைப் போல சேலை, தாயைப் போல பிள்ளைன்னு காட்டிட்டா  பாத்தியா.“ இதைக் கேட்ட நளினி “என்னம்மா சொல்ற? குழலி அம்மாவுக்கு என்ன?“

“அதுவாடி, அது இந்தக் குழலி அம்மா இருக்காளே, அவளும் இப்ப இவ வந்திருக்காளே அதே போலத்தான், வந்து நின்னா. என்ன ஒரு வித்தியாசம்னா இவ புருஷன் வெளியூர் போயிருக்கிறான் சொன்னா. ஆனா இவ அப்பன் இவ அம்மாவைக் கொடுமைப்படுத்தினானு வந்து நின்னா. வந்தவள் இங்கேயே அவ அம்மா கூட முதல வேலை பார்த்துட்டுத்தான் இருந்தாள். ஆனா வந்து மூனு மாசம் கழிச்சி  எதிர் வீட்டு டிரைவரோட ஓடி போய்ட்டா. அவ பெத்த பிள்ளைங்களையும் விட்டு போய்டா பத்து வருஷம் கழித்துச் சொத்துக்காக ஒரு பிள்ளையோட திரும்பி வந்தா. அப்பவும் இவங்களைச் சேர்த்துக்கில.“ என்று கதை சொல்லி முடிக்க இதைக் கேட்ட நளினி

“உண்மையாவா ம்மா? அப்போ அவங்க அம்மா இப்போ வேற ஹஸ்பண்டோட அங்கதான் இருக்காங்கள?“

“ஆமாம், அங்கதான் இருக்கா. ஏன் இந்தக் குழலிக்குக் கூட அவதான் கல்யாணம் பண்ணி வைச்சா  சண்ட  போட்டு, ஆனா ஒன்னுடி அம்மாவும் பொண்ணும் கடைசியில ஒரே மாதிரி டிரைவரைத்தான் பி்டிச்சிருக்காங்க. இந்தச் சந்தனத்துக்கு வேற கல்யாணம் ஆகிப் பொண்டாட்டியும் செத்துப் போயிட்டா, குழந்தையும் இல்லை. அம்மா மட்டும்தான் சொந்த வீடு நல்லாதான் பிடிச்சிருக்கா ஆள.“ என்றபடி எழுந்து வெளியே சென்றார்.

இவை அனைத்தையும் கேட்டு முடித்த நளினி, “இது நமக்கு முன்னாடியே தெரியாம போயிருச்சே, சரி இப்போதைக்கு அம்மா கிட்ட சொன்ன பொய்யை மட்டும் மெயின்டென் பண்ணுவோம்” என்றபடி மீண்டும் படம் பார்த்தாள்.

இங்கே நளினி அம்மா அதற்குள் அந்தத் தெருவுக்கே இந்த விஷயத்தைப் பரப்பிவிட, இது ஒரு நாளில் பக்கத்துத் தெருவரை சென்று அவள் குடும்பத்தையும் வந்து அடைய, அவர்கள் அனைவரும் இதுபற்றிக் கலந்து பேசி ஒரு முடிவுக்கும் வந்தனர். அதுதான் குழலிக்கு இரண்டாவது திருமணம் செய்து வைப்பது என்று. இதைப்பற்றிப் புனிதாவிற்கு முதலில் தெரியாது, ஆனால் தெரியவரும்போது அனைத்தும் கைமீறிச் சென்றிருந்தது. இங்கு இதுபற்றி அறியாமல் குழலி, தீபா மற்றும் சுடரை அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரியில் இருந்து வீடு வந்தார்கள். வீடு வந்த குழலிக்கு முதலில் இவை பற்றி ஒன்றும் தெரியவில்லை. இரண்டு நாட்கள் கழித்தே இவளைப் பற்றிப் பேசப்படும் புரளி இவள் காதில் விழ, என்ன செய்யவென்று தெரியாமல் கலங்கிப் போனாள்.

 பின் தன் மனதைத் தேற்றி, தன் கணவன் மாதவனை நினைத்துக்கொண்டு “சீக்கிரமா வந்துடுங்க, என்னால உங்களப் பார்க்காம இன்னும் எத்தனை நாள் சமாளிக்க முடியும்னு தெரியல” என்று மாதவனுடன் மானசீகமாகப் பேசியபடி அனைத்தையும் கடந்து வந்தாள். மேலும் இருநாள் கழிய ஒரு சாயங்கால வேளை சுடர் தீபாவை பார்க்குக்கு விளையாட அழைக்க, தீபாவோ “நான் வரல, தலைவலிக்குது, போடி” என்று கூறிவிட, சுடர் அதற்கு “சரியான வீட்டுக் கோழி நீ, எங்கேயும் வரதா? இங்கேயே இரு” என்று சொல்லிச் சென்றாள்.

செல்லும் சுடரைப் பார்த்துவிட்டு, பின் வீட்டு வாசலில் நாற்காலி ஒன்றைப் போட்டு அமர்ந்தபடி கதைப் புத்தகம் ஒன்றை எடுத்துப் படித்துக்கொண்டு இருந்தாள். அப்போது மாடிக்குத் துணியை எடுக்க அங்கு வந்த நளினி, தீபா படிப்பதைப் பார்த்துவிட்டு “இவ ஒருத்தி எப்ப பாரு எதையாவது படிச்சிட்டே இருப்பா. இவ படிக்கிறதைப் பார்த்துதானே எங்க அம்மா என்ன நொய் நொய்னு டார்ச்சர் பண்றாங்க. இவளை ஏதாவது பண்ணணுமே” என்று யோசித்து அவள் முன் வந்து நின்றாள்.

தீபா  அவள் முன் வந்து நிற்கும் நளினியை என்ன என்பதுபோல பார்க்க நளினி பதிலுக்கு ஒரு நக்கலான சிரிப்புடன் “என்ன நான் கேள்விப்பட்டது உண்மையா தீபா?“ அதற்கு தீபா தன் கையில் இருந்த புத்தகத்தை மூடியபடி “என்ன கேள்விப்பட்ட?”

 “அது உனக்கு புது அப்பா வரப்போறாருன்னு.” அதை கேட்டு அதிர்ந்த தீபா

 “என்ன உளறுற, லூசு மாதிரி?” என்று கோபத்துடன் தன் நாற்காலியை விட்டு எழுந்து கேட்டாள்.

 “ம்ம்ம், நானா இத சொன்னேன்? உளற எல்லாரும் பேசுறதைத்தான் உண்மையான்னு கேட்க வந்தேன்.”

 “எல்லாரும் பேசுறாங்களா? என்ன எல்லாரும் பேசுறாங்க?”

 “ஏன் உனக்குத் தெரியாது, அது உங்க பாட்டி மாதிரி உங்க அம்மாவும் இரண்டாவது கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போயிட போறாங்கனு.” என்று சொன்னதுதான் தாமதம், தீபா “ஏய், என்னடி பேசுகிறாய்? மூஞ்சை உடைச்சிடுவேன். எங்க அம்மா பத்தி தப்பா பேசினீன்னா!” என்று அடிக்க வந்துவிட்டாள். பின் கடைசி நிமிடம் தன் கண்களை மூடித் திறந்து மூச்சை இழுத்துவிட,

நளினி “இதோ பாரு தீபா, எல்லாரும் பேசுறதைத்தான் சொன்னேன். தேவையில்லாமல் என்கிட்ட சண்டை போடாம உங்க அம்மா கிட்டயே கேளு. உங்க அம்மா ஓட அம்மா ஓடிப் போனது மாதிரி நீங்களும் போவீங்களான்னு?” என்று இவள் கேட்கவும் குழலி அங்கே வந்து “நளினி…” என்று கத்தவும் சரியாக இருந்தது. அங்கு குழலியை எதிர்பார்க்காத நளினி விட்டால் போதும் என்று ஓடிவிட்டாள்.

குழலியோ தீபாவையே ஒரு நிமிடம் பார்க்க, தீபா “அம்மா அது நளினி சொன்னது “ என ஏதோ சொல்ல வருமுன் குழலி “தீபா போதும் ரூம்குள்ள போ “ என்று அழுத்தமாகக் கூற தீபாவும் குழலி முகத்தில் தெரிந்த கோபத்தில் உள்ளே சென்றுவிட்டாள். விளையாடி முடித்து வீடு வந்த சுடர் வீட்டின் அமைதியில் “என்ன அம்மா இன்னும் வரலையா என்ன “என்று உள்ளே நுழைய அங்கே குழலி எதையோ சமைத்துக் கொண்டு இருக்க அதை பார்த்தபடி தீபா நின்று கொண்டு இருந்தாள். இதை பார்த்த சுடர் “ஏதோ சரியில்லையே” என்று தீபாவை சுரண்டி “ என்னடி அம்மா கூட சண்ட போட்டியா அம்மா அமைதியா வேலை பார்த்துட்டு இருக்காங்க “ என்று பொறுமையாக தீபா காதில் பேச திரும்பிய தீபா அவள் வாயில் கை வைத்து அமைதியாக இருக்கும்படி சைகை செய்துவிட்டு” அப்புறமா சொல்றேன்” என்று மீண்டும் குழலியையே பார்க்க. குழலியோ சமைத்து முடித்துவிட்டு இருவரையும் உண்ண வைத்துவிட்டு அவள் உண்ணாமல் இருவருடனும் படுத்துக் கொண்டாள். எப்போதெல்லாம் குழலிக்கு அவள் கணவன் ஞாபகம் அதிகம் ஆகிறதோ அப்போதெல்லாம் அவள் இரவு உணவு உண்ணமாட்டாள். அதனால் சுடரும் தீபாவும் அமைதியாகிவிட்டார்கள் மறுநாள் குழலி சரியாகிவிடுவாள் என்று எண்ணி. மறுநாள் குழலிக்கு விடுமுறை எப்போதும் விடுமுறை என்றால் காலை முதல் இரவு வரை தன் மகள்களுடன் ஏதாவது வம்பு செய்து கொண்டோ இல்லை வெளியில் அழைத்துச் செல்வதை பழக்கமாக வைத்திருப்பவள் அன்று மிக அமைதியாக இருக்க குழம்பிய சுடர் தீபாவை அழைத்துக்கொண்டு பார்க்குக்குச் சென்று யாரும் இல்லாத இடத்தில் வைத்து “ என்னதான் ஆச்சு அம்மா ஏன் இப்படி இருக்காங்க “ என்று சுடர் கேட்க அதற்கு தீபா நேற்று நளினியுடன் நடந்தவற்றையும் அதை குழலி கேட்டதையும் சொல்ல அதை கேட்டு கோபம் கொண்ட சுடர் “அந்த குட்ட வாத்தை இன்னைக்கு அடிச்சு அவ மண்டையை உடைக்கல “ என்று கல்லை தேடிய சுடரை அமைதிப்படுத்தி “இப்ப அவ முக்கியம் இல்லடி நம்ம அம்மா தான் முக்கியம் நான் நேத்துல இருந்து பேச ட்ரை பண்றேன் ஆனா பேச மாட்டிக்கிறாங்க” என்று சோகமாக பேச உடனே சுடர் “நான் போய் குமரன் மாமாவை கூட்டி வாரேன் அவங்களை வச்சு பேசி அம்மாவை சரி பண்ணிடலாம் “ என்று ஒரு முடிவுக்கு வர தீபா “சரி நீ மாமாவை போய் கூப்பிட்டு வா நான் போய் அம்மாக்கு குக் பண்ண ஹெல்ப் பண்ற மாதிரி அவங்களை கூல் பண்ண ட்ரை பண்ற “ என்று இருவரும் பிரிந்து போக.

தீபா நேராக வீட்டிற்குச் சென்றாள் அங்கே மாடிப்படி அருகே நிறைந்து இருக்கும் காலணிகளைப் பார்த்துவிட்டு “வீட்டுக்கு கெஸ்ட் நிறையப் பேர் வந்திருக்காங்க போல” என்று எண்ணியபடி மேலே செல்ல அங்கே இவள் வீட்டு வாசல் அருகே செல்லச் செல்ல நளினியின் அம்மா பேச்சுச் சத்தம் கேட்க உடனே தீபா “இவங்க இங்க என்ன பண்றாங்க?” என்றபடி அங்கேயே நின்று அவர்கள் பேசுவதைக் கேட்கத் தொடங்கினாள். அப்போது நளினி அம்மா “இதோ பாருங்க, இவள் புருஷன் வர மாதிரி தெரியல. அதுக்குன்னு குழலியைத் தப்பு சொல்லல. பாவம், அவ என்ன பண்ணுவா? 36 வயதுதான் ஆகுது அவளுக்கு. ஆசை இருக்கும்ல? அந்தச் சந்தனம் பையனும் நல்லவன்தான். பேசாம நீங்களே மரியாதையாகப் பேசி கல்யாணம் பண்ணி வச்சிருக்க. இரண்டு வருஷமா வராதவனா இப்போ வரப்போறான்? இரண்டும் பொம்பளப் பிள்ளைய வேற பெத்துவச்சிருக்கா. இவ விஷயம் எல்லாருக்கும் தெரியுறதுக்கு முன்னாடி நீங்களே பேசி முடிச்சிருங்க”

அதைக் கேட்டு கண்கள் சிவக்க நின்ற குழலி அங்கு வந்து அமர்ந்திருந்த தன் சொந்தங்களைப் பார்க்க அவர்கள் யாரும் ஒரு வார்த்தை பேசவில்லை. இங்கு இவளுக்காகப் பேச ஒருவரும் இல்லை என்பதை புரிந்தது அதை நினைத்து வருந்தும் போதும் “உனக்காக எப்போதும் நான் இருப்பேன்” என்று கூறும் கணவன் நினைவே வந்தது.

அதை நினைத்து தன் வருத்தத்தை மறைத்து பேசத் தொடங்கினாள். “நான் சொன்னேனா?, உங்ககிட்ட வந்து எனக்குக் கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேட்டேனா. தேவையில்லாம பேசாதீங்க!” என்று கோபத்தை மட்டுமே காட்டிப் பேச,

அதற்கு நளினி அம்மா, “உங்க அம்மா மாதிரிதான் நீயும் பேசுற. உங்க அம்மாவும் இப்படித்தான் முதல்ல சொன்னாங்களாம். அப்புறமா உன்னையும் உன் தம்பியையும் விட்டு போயிட்டா. நீயும் அப்படித்தான் ஒருவேளை யோசிக்கிறாயோ? ரெண்டு பொண்ணை வச்சிட்டு சந்தோஷமா சந்தனம் கூட இருக்க முடியாதுன்னு இப்போ நாடகம் ஆடுறீயோ?” என்று வாய் கூசாமல் பேச, அதைக் கேட்ட தீபா கண்கள் கலங்க, அவள் வீட்டுக் கதவின் மீது கைவைக்க அது திறந்துகொண்டது. அங்கு தீபாவை எதிர்பார்க்காத அனைவரும் என்ன பேசவென்று பார்க்க, குழலி தீபா நின்ற கோலத்திலேயே அவள் அனைத்தையும் கேட்டுவிட்டாள் என்று உறுதியாகி விட்டது. அதை கண்ட குழலி இவ்வளவு நாள் தான் சேர்த்து வைத்த தைரியம் அவளை விட்டுப் போய்விட்டது. அதன் விளைவு மறுநாள் குழலி தான் வாழ்ந்த வாழ்க்கை போதும், அதிலிருந்து ஓய்வு எடுக்க முடிவு எடுத்து தன் கணவனின் காதல் வாழ்க்கையின் நினைவோடு ஒரு கனவுப் பயணம், முடிவில்லாப் பயணம் அதை நோக்கித் திரும்பி வர முடியாத தூரம் சென்றிருந்தால்.