விடியல் 32

புனிதா குழலியின் சித்தி மகள். குழலி, குமரன், புனிதா மூவருமே ஒன்றாகத்தான் வளர்ந்தனர். இவர்கள் குடும்பத்தில் புனிதா தான் இளையவள். அதுமட்டுமல்ல, அனைவரின் செல்லமும் கூட. குழலி குமரன் வீட்டில் தங்கியிருந்த பொழுதுதான் அவளுக்குத் திருமணம் நடந்து அவள் புகுந்த வீட்டிற்குச் சென்றிருந்தாள். இருந்தும் அடிக்கடி வந்து குழலிக்கு உறுதுணையாகவே இருந்தாள். குழலி இழப்பில் குமரன் அனைவர் மீதும் கோபம் கொண்ட போதும் புனிதாவை வெறுக்கவில்லை. அவளும் தீபா மற்றும் சுடரை அடிக்கடி பார்த்தும் போனில் பேசியும் அவர்களைத் தேற்றியிருந்தாள்.

பின் குமரன் சுடர் தீபாவுடன் வேறு வீடு செல்லும் போது புனிதாவிடம் மட்டும் வாட்சாப் வாய்ஸ் நோட்டில் அனைத்தையும் கூறி பின் “எனக்கு பயமா இருக்கு புனிதா, உங்க கூட இருந்த எங்க சுடரையும் என் அக்காக்கு பண்ண மாதிரி பண்ணிருவீங்களோனு, அதனால நாங்க இங்க இருந்து போறோம் இந்த சொத்துக்கு பங்கு கேட்டும் வர மாட்டோம். நான் கட்டின வீட கூட அவங்க பெரிய பொண்ணுக்கே கொடுத்துர சொல்லு எனக்கு எதுவும் வேண்டாம் “ என்று அனுப்பி இருந்தான். இதை கேட்டு புனிதா உடைந்து போய் குமரனை தேடி செல்ல நினைக்க அவள் உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை. திருமணம் ஆகி அந்த வருடமே அவள் கர்ப்பமாகியிருந்தாள். அதனால் அவள் கணவர் வீட்டு ஆட்களும் விடவில்லை. பின் புனிதா தன் தாய் வீட்டு சொந்தங்களை வைத்து எங்கெங்கோ தேட அவன் சென்ற இடம் தெரியவில்லை. அவன் வேலை பார்த்த கம்பெனியில் இருந்து அவன் நின்று ஒரு வருடம் ஆகிவிட்டது என்று தெரியவந்தது. அது கூட இங்கு இருக்கும் யாருக்கும் தெரியவில்லை. அனைவரும் சுடரை நினைத்தே பயந்து இருந்தனர். இன்று வரை எல்லோரும் குமரன், தீபா, சுடர் இவர்களுக்காக தான் காத்து இருக்கிறார்கள்.

அன்று மதியம் தன் தாய் வீட்டுக்குச் செல்ல அனைத்து உடைகளையும் எடுத்து அடுக்கி வைத்துக்கொண்டிருந்தாள் புனிதா. அப்போது அவள் கணவன் வந்து எதிர் வீட்டில் திருட்டு நடந்திருப்பதையும் இப்போது சில பேர் வந்து பார்த்துக்கொண்டிருப்பதையும் கூற, அதைக் கேட்டு எட்டிப் பார்க்க வெளியே வந்தாள் புனிதா.

அப்போது தீபா முகத்தைத் தண்ணீரில் கழுவுவதைப் பார்த்து, எங்கோ அவளைப் பார்த்த மாதிரி இருக்க அந்த முகத்தை உற்றுப் பார்த்தாள் புனிதா. அப்போதுதான் கார்த்திக்கும் தீபாவை பெயர் சொல்லி அழைக்க புனிதா கண்கள் கலங்க அங்கிருந்து வேகமாக வந்து “நிலாம்மா..” என்று குரல் நடுங்க அழைத்திருந்தாள். புனிதாவின் குரல் கேட்டுத் திரும்பிய தீபா முதலில் அதிர்ந்து பின் மகிழ்ந்து அவள் கண்கள் கலங்கி புனிதாவைப் பார்த்து “சித்தி….” என்று அழைத்ததுதான் தாமதம் தீபாவை அணைத்து அழுதிருந்தார் புனிதா.

இவர்கள் பாசப் பயிரைப் பார்த்த கார்த்தி இருக்கவா இல்ல போகவா என்பது போல இருக்க, அவனைப் பார்த்த பின்னரே தீபா சுயநினைவு வந்து “சித்தி ஒரு நிமிஷம் “ என்று தன் முகத்தை முகக்கவசம் கொண்டு மறைத்து, பின் “சித்தி நான் இப்போ இங்க வேலையா வந்திருக்கேன். இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு  எல்லாம் முடிச்சிட்டு  நான் வந்து பேசுறேன் சித்தி “ என்று கூற, இதைக் கேட்ட புனிதா உடனே அவள் கைகளை நீட்ட, தீபா என்ன என்பது போலப் பார்க்க. அதற்கு புனிதா “உன் மொபைல் அப்புறம் நீ போட்டிருக்க ஐடி கொடுடி “ எனக் கேட்க, இதைக் கேட்டுச் சிரித்த தீபா “ரொம்ப அறிவாளியா ஆகிடீங்க சித்தி “ என்றபடி புனிதாவிடம் அவள் கேட்டதைக் கொடுத்துவிட்டு, கார்த்திக் உடன் உள்ளே சென்று மீதம் இருக்கும் பொறுப்பையும் முடித்து அதை ஆபீஸில் ஒப்படைத்துவிடச் சொல்லிவிட்டு, புனிதா முன் அவள் வீட்டில் அமர்ந்திருந்தாள்.

தீபாவை பார்த்த புனிதா “சுடர் எப்படி இருக்கா?“ என்றுதான் முதலில் கேட்டாள். தீபாவும் அவர்கள் வீட்டை விட்டுச் சென்ற நாளிலிருந்து இன்றுவரை நடந்ததை ஒப்பித்துவிட்டாள். இதைக் கேட்டு புனிதா கண்கலங்கி, “உன் மாமா ஒரு கிறுக்கன். தனியா போய் இவ்வளவு கஷ்டம் பட்டிருக்கான்“ என்று பேசியவாறு தன் புடவை முந்தானையால் கண்களைத் துடைத்தபடி எழுந்து

 “வா தீபா போகலாம் “என்று கூற தீபா எங்கே என்பது போல பார்க்க “ என்ன பாக்குற உன் மாமாவலாம் பாக்க வரல என் சுடர் பிள்ளைய பாக்க வரேன் என் அக்கா பிள்ளைங்கள என்ன விட்டு பிரிச்ச உன் மாமாவ மண்ணிக்க மாட்டேன் “என்று நிற்கும் தன் சித்தியை பார்த்து சிரித்தாள்  தீபா .

அதன் பின் புனிதா அவள் கணவனையும் அவள் மகனையும் “நீங்க எங்க அம்மா வீட்டுக்குப் போங்க நான் அப்பறமா   வரேன்” என்று கூறி தீபாவை உண்ண வைத்து பின் அவளுடனே அவள் ஸ்கூட்டியில் செல்ல, செல்லும்போது புனிதா “ஏன் நிலா இந்த மாஸ்க்கைப் போட்டுக்கொண்டே இருக்க?”

“அது எனக்கு டஸ்ட் அலர்ஜி சித்தி அதான்“ என்று ஒருவாறாகச் சமாளித்து வைத்தாள். செல்லும் வழியில் ஆங்காங்கே வண்டியை நிறுத்தி சுடர், தீபா, வேந்தனுக்கு என்று விதவிதமாகப் பண்டங்களைத் தீபா போதும் போதும் என்று சொல்லியும் வாங்கிக் குவிக்க, பின் குமரனைத் திட்டியபடியே அவனுக்குப் பிடித்த காளான் சமோசா என்று சிறு ஹோட்டலையே வாங்கிச் சென்றாள் புனிதா.

இங்கு கேக்குடன் வீடு வந்த சுடர், வேந்தன் இருவரும் வந்து முகம் கழுவி உடை மாற்றி, வேக வேகமாக அவர்களுக்குப் பிடித்த கேக்கை உண்ணப் போக, காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு சுடர் எழுந்து செல்ல, வேந்தன் இதுதான் சாக்கு என்று சுடர் கேக்கையும் உண்ணத் தொடங்கினான். கதவைத் திறந்த சுடர் தன் சித்தியைப் பார்த்த மகிழ்ச்சியில் “சித்தி ..”என்று கட்டிப் பிடித்து அழுது தீர்த்துவிட்டாள். பின் சித்தியை உள்ளே அழைத்து அமர வைத்தாள். சோபாவில் அமர்ந்த புனிதா “எங்க உன் பையன் வேந்தன்?” என்றதும் சுடர் கண்கள் கலங்குவதைப் பார்த்த புனிதா அதட்டி மகிழனைச் சிவப்பு வண்ண வார்த்தைகளால் திட்டி, அடுத்த எலெக்‌ஷனில் அவனுக்கு ஓட்டுப் போடக் கூடாது என்று சபதம் வரை எடுத்துவிட, இதைப் பார்த்து சிரித்த சுடர் வேந்தனை அழைத்தாள்.

வேந்தனும் புனிதாவை, புனிதாம்மா என்று ஒட்டிக்கொள்ள புனிதா அவனை கீழேயே விடவில்லை. வாங்கிவந்த அனைத்தையும் வேந்தனுக்கு ஊட்டிவிட்டு சுடர் தீபா இருவரையும் அருகில் அமர்த்திக்கொண்டு பேசிக்கொண்டே இருந்தாள். இரவு எட்டு மணிப்போல குமரன் வந்தான். வந்தவன் புனிதாவை பார்த்து புனிதாம்மா என்று அழைக்க புனிதா முகத்தைத் திருப்பியபடி பேசாமல் போக குமரனும் பின்னாலேயே சென்று மன்னிப்பு கேட்டு சில திட்டுக்களையும் வாங்கிக் கொண்டான். புனிதா குமரனைப் பார்த்து “என்ன இருந்தாலும் நான் உன்கூட பிறந்தவ இல்லைனு தானே என்னை விட்டுப் போன?” என்று கேட்க இதை கேட்டு பதறிய குமரன் “புனிதா புரிஞ்சிக்கோ, குழலிக்கு அங்க என்ன ஆச்சுன்னு தெரியும் தானே? அதே மாதிரி சுடரையும் விடச் சொல்றியா?”

“நீதான் புரிஞ்சிக்காம பேசுற. அங்க நம்ம வீட்டுல இருந்து ஒருத்தரும் குழலியை ஒரு வார்த்தை தப்பா பேசல. எல்லாம் அந்த ஓனர் அம்மா தான் பேசுனா.”

 “சரி நீங்க தப்பா பேசல அதே சமயம் அவளுக்கு ஆதரவாவும் பேசல தானே” என்று கேட்க அதை கேட்டு தலை குனிந்த புனிதா “அது அது குழலி வாழ்க்கை” என்று மென்று முழுங்க அவளை உற்று பார்த்த குமரன் “என்ன மறைக்கிற புனிதா? சொல்லு” என அதட்டவும் புனிதா சுற்றி இவர்களையே பார்த்துக் கொண்டு இருக்கும் சுடர், தீபாவை ஒரு முறை பார்த்து விட்டு குமரனை பார்த்து “கோபப்படாம கேளு குமரா” என்று ஒரு நிமிடம் கண்களை மூடி திறந்து “குழலிக்கு அந்த ஆட்டோக்கார அண்ணனையே இரண்டாவதா கல்யாணம் பண்ணி வச்சிரலாம்-னு நினைச்சி தான் இவங்க யாரும் எதுவும் பேசல” இதை கேட்டு தீபா அவள் இடத்தை விட்டு தன்னையறியாமல் எழுந்து நின்றாள். அவள் எழுந்த வேகத்தை பார்த்த புனிதா அவள் கைகளை பிடித்து “முழுசா கேளுமா” என்று அவளை அருகே அமர்த்தி அவளை தன் மீது சாய்த்துக் கொண்டு பேசத் தொடங்கினாள் புனிதா.

புனிதா மீது சாய்ந்து இருந்த தீபா தன் கண்களை இறுக மூடிக்கொண்டு இதை எதையும் கேட்டும் கேட்காத நிலையில் அப்படியே புனிதா மீது மயங்கி சரிந்து இருந்தாள். இதை உணராது அங்கு புனிதா பேசியபடியே இருந்தாள். இங்கு தீபாவோ காலச் சுழலில் சிக்கி பின்னோக்கி சென்று தன் கண்களை திறந்தாள். அங்கே அருகில் ஒரு பக்கம் தன் தந்தை மாதவன் படுத்து இருக்க மறு பக்கம் சுடர் அவள் அருகே குழலி என்று மாடியில் படுத்தபடி வானத்தை பார்த்து சிரித்துப் பேசிக் கொண்டு இருந்தனர்.

அப்போது மாதவன் தீபாவை திரும்பிப் பார்த்து “என் தங்கப் பொண்ணு, நீங்க பெருசாகி என்னவா ஆகப் போறீங்க?” அதற்கு 10 வயது நிரம்பிய தீபா தன் கைகளை ஆட்டியபடி “நான் பெரிய டாக்டர் ஆகி அம்மா பேர்ல ஆஸ்பத்திரி கட்டப் போறேன்” இதைக் கேட்டு மாதவன் “என் தங்கம்” என்று அவள் நெற்றியில் முத்தம் வைத்து பின் சுடரிடம் “இந்த தங்கம் என்னவாக ஆகப் போறாங்க?” என்று கேட்க அதற்கு சுடர் கன்னத்தில் கை வைத்து யோசித்து பின் “நான் டீச்சரா ஆகப் போறேன்” என்று சொல்ல அதைக் கேட்டு குழலி “ஏன்டி டீச்சராகப் போறன்னு சொல்ற?”

“ஏன்னா அப்போதான் லீவு நிறைய தருவாங்க, லீவில அம்மா அப்பா நான் எல்லாம் சேர்ந்து பீச் போலாம்” இதைக் கேட்ட தீபா “நானு என்ன சேர்க்கல பாரு” என்று சுடரை உலுக்க “நீதான் டாக்டர் ஆச்சே, உனக்கு லீவு கிடையாது, நாங்க மட்டும்தான் போவோம்” அதைக் கேட்ட தீபா மாதவனைப் பார்த்து “நானும் வருவேன்னு சொல்லுங்கப்பா இந்த சுடர் கிட்ட” என்று சொல்ல இதைப் பார்த்துக் குழலியும் மாதவனும் சிரித்தபடி அந்த வானில் இருக்கும் விண்மீன்களை ரசித்துக்கொண்டு இருந்தனர். குழலி மற்றும் மாதவன் என்னும் அழகிய தேன்கூடு சீக்கிரமாகக் கலைந்து போகப் போவது தெரியாமல்.